கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 1,338 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து வளவுக் குள் நிறுத்திய நல்லான் மெல்ல நிமிர்ந்துபார்த்தான். அவன் குடிசை இருளில் அமிழ்ந்திக் கிடந்தது. தெரு விளக்கின் பிரகாசமான ஒளி, அடர்ந்து வளர்ந்திருந்த வடலிப்பனைகளுக்கூடாக அந்தப் பிராந்தியமெங்கும் மின்னற்கீறுகளாக மினுமினுத்தது. நேரம் எட்டோ, ஒன்பதோ என்று அவனால் மட்டுப்பிடிக்க முடிய வில்லை. சகதொழிலாளிகள் தொகை அதிகமில்லாத திட்டுப்பூமி அது. நகரசுத்தித் தொழிலாளிகள் வதிவ தற்கென்றே ஒதுக்கப்பட்ட அந்தப் பகுதியில் அங் கொன்றும், இங்கொன்றுமாகச் சரியாக ஆறு குடிசை கள் காட்சியளித்தன. அவற்றில் நல்லானுடையதும் ஒன்று. குடிசைக்குள் நுழைய நல்லானுக்கு மனம் வர வில்லை. அன்று முழுவதும் அவன் ஒரே பட்டினி. பசி யின் கோரம் அணு, அணுவாக அவனை வாட்டிக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலில் வண்டியில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்திற்கும் தாக்குப்பிடித்துக்கொண்டு தார்மெழுகிய வீதியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை வலம்வந்த களைப்பு அவனை இப்பொழுது முற்றாகக் கௌவிக்கொண்டது. இவ்வளவு அசதிக்கும் மருந்து எங்கே என்பது அவ னுக்குத் தெரியும். ஆனால், நேரம் என்னவோ எக்கச் சக்கமாகிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றியது. என்றாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத் தியானம் வாங்கிவைத்த மசாலைவடைகள் இரண்டும் கட்டைக்களிசான் பைக்குள் கிடந்து கனத்தன. இடுப் பில் சுற்றியிருந்த கிழிந்த துவாயை அவிழ்த்துத் தலை யில் சுற்றியபடி நல்லான் இருள் மண்டிக்கிடந்த ஒழுங்கையைத் தாண்டிப் பிரதான வீதியில் மிதந்து வேகமாக நடந்துகொண்டிருந்தான். 

யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து ஏறக்குறைய ஏழு மைல் தொலைவிலுள்ளது அவன் தொழில் செய்யு மிடம். அதனைக் கிராமமென்றோ, பட்டினமென்றோ கூறிவிட முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அது கம்பீரமாக மிளிருகிறது. யாழ்ப்பாணத் திற்கே மதிப்பளிக்கும் இரு பெரிய பெண்கள் சாலைகளும், வேதக்கோவிலும், ஒரு மைல் தூரத்தில் பிரபலமான சந்தையும், அதற்கு எதிர்ப்புறமாக சில நூறு யார்கள் தொலைவில் பிரசவ மருத்துவமனையும் பட மாளிகையுமாகப் பட்டின நாகரிகத்தை எட்டிப் பிடித் துக்கொண்டிருக்கிறது. என்றாலும் கிராமச்சங்கப் பிர தேசம் என்ற முத்திரை மட்டும் அந்தப் பகுதியை விட்டகலமறுக்கிறது. ஏனோ ? நல்லான் பிரதான வீதியை விட்டிறங்கிச் செம்மண் செறிந்த குறுக் கொழுங்கையில் நடந்துகொண்டிருக்கிறான். தூரத்தில் ‘அரிக்கன் இலாந்தர் மினுமினுக்கிறது. இரண்டெட்டு எட்டிவைத்தால் கள்ளுக்கொட்டில், மனதின் நினைவூறல் கள் தம்பித்து நாவூற ஆரம்பிக்கிறது அவனுக்கு! 

கள்ளுக்கொட்டிலில் நிசப்தம் கொடிகட்டிப் பறக் கிறது. ‘என்ன இன்றைக்கு இவ்வளவு நேரமானது? நிசப்தத்தை விரட்டிக்கொண்டு ஒலிக்கும் வினாவுக்குரி யவன் கள்ளுக்கொட்டிற்காரன்; கறுத்தான்! 

”என்னண்ணை செய்வது? நேரத்துக்கு வரவேண்டு மென்றுதான் நானும் ‘முக்கிமுக்கி ‘ இழுத்தேன். இப் போதுதான் முடிந்தது!” 

“நேரத்துக்குப் பிந்தினால் வைத்துக்கொண்டிருக்க ஏலாது. இன்றைக்கென்னவோ உனது அதிட்டம் கொஞ்சம் கிடக்கிறது.” கறுத்தான் கொட்டில் மூலை யில் இருந்த முட்டியை எடுத்துக் கொண்டுவர நல்லா னும் ஒதுக்குப்புற ஓரத்தில் செருகியிருந்த பிளாவை எடுத்துக் கொண்டுவந்து நீட்டினான். ‘சளசௗ’ வென்ற சப்தத்துடன் சற்று அதிகமாகப் புளித்துவிட்ட கள்ளு, பிளாவில் விழுந்து நுரைத்தது. 

மத்தியானம் வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்த மசாலை வடைகளைக் கடித்துக்கொண்டே கள் குடிக்க ஆரம்பித்தான் நல்லான். அந்தக் கள்ளும் வடையும் தேவாமிர்தமாகச் சுவைத்தன. 

“இன்னுங் கொஞ்சம் ஊற்றண்ணை!” குரலில் போதை தொனித்தது! 

“மூன்று போத்தல் குடித்துவிட்டாய். இனிப் போதும் நல்லான். இங்கேயும் மண்டிதான் கிடக் கிறது. நீயும் தாங்கமாட்டாய். நாளைக்கு வா பார்ப்போம்!” 

கறுத்தான் குரலில் அனுதாபம் இழையோடியது. ‘அந்தப் புளித்த கள்ளில் அரைப் போத்தல் விட்டாற் போதும், இந்தக்காலத்து வாலிபர்கள் பிடித்துப் போட்ட இறாலைப்போலச் சுருளத் தொடங்கிவிடுவார் கள். ஆனால், நகரசுத்தித் தொழிலாளியான நல்லான் மூன்று முழுப்போத்தல் விட்டும் உசும்பாமலிருக்கிறான். ஆளைப்பார்த்தால் காற்றுக்குப் பறந்துவிடுவான் போலி ருக்கிறது! என்ன தைரியம்?” அவன் தனக்குள் வியந்துகொண்டான். என்றாலும் மனதுக்குள் ஒரு பயம்! கொஞ்சம் அதிகமானாலும் பாவம், எங்கே விழுந்தெழும்பி மண்டையை உடைத்துக்கொள்கிறானோ, என்ற இரக்க உணர்ச்சி கறுத்தானைப் பேசவைத்தது! அவனும் இடக்குப் பண்ணவில்லை. 

“சரி, நான் நாளைக்கு வருகிறேனண்ணை!” தள்ளா டியபடியே எழுந்து நடந்தான் நல்லான். அவனிருந்த இடத்தில் கிடந்த ‘சில்லறையை’ எடுத்துக்கொண்டு இலாந்தரையும் தூக்கிக்கொண்டு கொட்டிலுக்குள் போய்ப் படுத்துக்கொண்டான் கறுத்தான். அவன் ஒண்டிக்கட்டை. சகலமும் அவனுக்கு அந்தக் கள்ளுக் கொட்டிலே! 

கோடை வெயிலின் அனல் அளைந்த காற்று மெல்ல வீசுகிறது. நல்லானுக்கு நிதானம் வழுக்கப்பார்க்கிறது. அந்தரத்தில் நடப்பவனைப்போல, கால்கள் நிலத்திற் பாவமறுக்கின்றனவா? எப்படியோ அடி சறுக்காமல் வரத்தான் அவனும் முயற்சிக்கிறான். அந்த இருள் ஒழுங்கையில் பிரதான வீதியை விட்டிறங்கிச் சொறி நாய்களின் கோரக் குரைப்புக்களுக்கு மசியாமல் நடந்துவந்து, சற்று மேற்குப் பக்கமாகத் திரும்பித் தனது குடிசையடிக்கு வந்துவிட்டான் நல்லான். நேரம் சாமமோ, என்னவோ அதையார் கண்டது? இருளில் அவன் குடிசை கோரமான அந்தகாரத்தில் குடியிருக் கும் சடாமுனியைப்போலக் குந்தி இருக்கிறது. அவன் அவளை எழுப்ப முயற்சிக்கிறான்! 

“சின்னி, சின்னி….!” 

“கொஞ்சம் பொறுங்கள். விளக்கைக் கொளுத்தி விட்டு வருகிறேன்.” 

குப்பிவிளக்கைக் கொளுத்தி வைத்துவிட்டுத் தட் டிப்படலையை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்தாள் சின்னி. ”இவ்வளவு நேரமாக எங்கே போய்த் திரிந்து விட்டு வருகிறாய்? எவ்வளவு நேரமென்று நானும் கண்ணை விழித்துக்கொண்டு இருக்கிறது!” அவள் அவன் கையைப்பற்றி உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்! 

சட்டி நிரம்பிய சாதத்தையும், சுன்னாகச் சந்தை யில் வாங்கிய பிஞ்சு மிளகாயையும் சேர்த்துச் சுவைக் கத் தொடங்கினான் நல்லான். அவள் அவன் சாப்பிடு கிற நேர்த்தியை இமை வெட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தாள். 

அவளுக்கு வாளிப்பான உடல். எண்ணெயில் முழுகிய கருங்கல்லுப் போன்ற ‘மளமளப்’பும் உறுதியும் அதில் திரண்டிருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நல்லான் அவளைக் கைப்பிடித்தான். கிராமச் சங்கப் பரிபாலனத்தில் வேலைக்குச் சேரமுன்பே நல்லானுக்கு அவளில் ஒரு கண். வேலையில் சிரத்தையின்றி ஊர்சுற்றித் திரிந்த அவனைப் பொறுப்புள்ளவனாக்கியது அவள் காதல்! முன்பெல்லாம் நல்லான் வேலைக்கு ஒழுங்காகப் போவதேயில்லை. ஊர்சுற்றிய நேரம் போக, விருப்பமான சமயத்தில் தனது நண்பர்களின் தொழிலுக்கு உதவுவான். அவர்கள் தருகிற தயவில் காலத்தைப் போக்குவான். ஆனால், சின்னியின் காதலுக்கு ஆளான பின்பு சுயமாகச் சம்பாதிப்பதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான். கிராமச் சங்கப் பரிபாலனத்திற்குட்பட்ட நகரசுத்தித் தொழிலாளர் குழுவில் இடம் பிடித்துக்கொண்டான். நல்லா னுக்குச் சின்னியைத் தவிர வேறு ஆளில்லை உறவு கொண்டாடுவதற்கு. உறவினர் என்ற சொல்லுக்கும் அவனுக்கும் வெகுதூரம்! சின்னியின் தகப்பன் கிழ வனுக்கு மகள்மீது மிகவும் ஆத்திரம். உற்றார்,உறவி னர் ஆருமில்லாத நல்லானைக் கலியாணம் பண்ணிக் கொண்டாளே என்ற துக்கம். ஆனால், சின்னிக்கு நல்லான் மீது உயிர். கொஞ்சம் அவன் முகம் கறுத்தால் அவள் உயிர் அணுக்கள் எல்லாம் கறுக்கும்! எண்ணக் குதிர்களை ஒதுக்கிவிட்டு, ‘சாப்பிட்ட வாயை அலம்பிவிட்டுப் படுக்கையிற் சாய்ந்தான் நல்லான். அவனருகில் அவள், குப்பிவிளக்கைக் கையாலணைத்து விட்டு அணைந்தாள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. அவள் அவனிடம் இன்னும் நெருங்கிப் படுத்தாள். பெண்மை, ஆண்மையின் இணைவுக்குத் தன்னைத் தயாராக்கிக்கொண்டது. அவன் கரங்கள் அவள் உடலைப் பற்றி இறுக்கமாக அழுத்திப் பின்னிக் கொள்ளச் செய்தன. அங்கே மூடிக்கிடந்த விழிகள் நான்கு. இன்பம் அணு, அணுவாக அவர்கள் உடல்க ளெங்கும் மூட்டமிட்டுக் ‘கத,கதத்து மோகக்கோட்ட மமைத்து வெற்றி கொண்டாடியது. 

சிருட்டியின் இரகசியம் அவர்களுக்கு விளங்கியதோ, என்னவோ! ஆனால், அது அவர்களுக்கு எட்டாததாகவில்லை. பகலிற்றான் இன்பம், ஒளியிற்றான் இன்பம் என்று யார் சொன்னது? இருளுக்குள் இன்பம், மன இருளுக்குள் இன்பம் என்பதை அவர்கள் அனுபவித்தே விட்டார்கள்! 

சாமக்கோழி உரத்த குரலெடுத்துக் கூவியது. அவர் கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நெகிழ்ந்த ஆடைகள், தளர்ந்த உடல்கள், வாழ்வு என்பதே இதுதானா? 

ஏழைகளுக்குப் பகல் துன்பமா? இரவு இன்ப பதில் தருவார் யார்? ஒளிபிறக்கும் உதயகாலத்தைக் காண அவர்கள் ஏன் அஞ்சுகின்றனர்? 

காலம் ஏன் அவர்களைக் கவனிக்கப்போகிறது! நீண்ட இரவு தன் கடையாமத்தைச் சுருக்கிக்கொண் டது. வைகறைப்பொழுது தலைகாட்டத் தொடங்கியது. பறவைகள் விழித்துக்கொண்டன. எல்லாச் சீவராசி களும் விழித்துக்கொண்டன. மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது. சின்னி கண்விழித்தாள்! 

விடிந்தால் தீபாவளி. அவள் மனதில் எத்தனையோ எண்ணங்கள் ! கலியாணத்தின் பின்னர் ஏற்பட்ட பணமுடைக்குப் பலியாகாமல் அந்த இரண்டு சீவன் களும் கஞ்சி குடிப்பதற்காக நல்லான் அவளது ஒரே பொக்கிஷமான கழுத்துச் சங்கிலியை யாழ்ப்பாணத் துப் பெரியண்ணன் செட்டியார் கடையில் அடகு வைத்திருந்தான். போன தீபாவளியின்போதே சின் னிக்கு மனது ‘குறுகுறு’த்தாலும் வாயைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். ‘எப்படியும் மச்சான் அதை மீட்டுத் தருவான்’ என்ற நம்பிக்கை அவளுக்கு! ‘அடகு வைத்ததைத்தான் மீட்கவில்லை, வட்டிக்காசை யாவது கொடுத்திருக்கிறேன். எப்படியும் அடுத்த தீபாவளிக்குச் சங்கிலியை மீட்டுத்தருவேன்” என்று நல்லான் வேறு தைரியஞ்சொல்லியிருந்தான் “அது தான் இராத்திரியும் மச்சான் நேரஞ்செல்ல வந்தவர். பட்டினம் போய் வந்தவராக்கும்” எதற்கும் எழுந்தவுடனே கேட்டுக்கொள்ளலாம்!” 

தனக்குத் தானே நம்பிக்கையூட்டிக்கொண்டாள் சின்னி. காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் கிடுகுத்தட்டியின் நீக்கல்களுக் கூடாக அந்தக் குடிசை முழுவதும் வியாபித்துக்கொண்டிருந்தன. சின்னி எழுந்து அடுப்பை மூட்டித் தேநீர் தயாரித்தாள். நல்லான் இன்னும் எழுந்திருக்கவில்லை. 

“மச்சான், மச்சான்…….!” 

அவள் குரலில் வார்த்தைகளில் அடங்கித் தீராத பாசமும் பரிவும் குழைந்து நின்றன. 

“நேரம் மத்தியானமாகப்போகிறது. நல்ல நாளிலேயா இப்படிக் கிடந்து புரள்வது……?” 

நல்லான் எழவேயில்லை. தேநீர்ச் சிரட்டையுடன் படுக்கையடிக்கு வந்தாள். மண்டியிட்டு அவன் பக்கத்திலமர்ந்தாள். ஒரு கையில் தேநீர்ச்சிரட்டையை வைத்துக்கொண்டு, மறுகையால் அவன் தோள்மூட் டைப் பற்றி உசுப்பினாள். அவன் அசையவேயில்லை. சற்றுப் பலமாக ஆட்டி அசைத்துப் பார்த்தாள். அவள் நெஞ்சு வெடித்துவிடுவது போல அடித்துக்கொண்டது. 

‘மச்சான் ……….!’ அவள் அலறினாள். 

‘பீளை’ தள்ளிய கண்களும், ‘ஓ’வெனத் திறந்த வாயுமாக உணர்வற்று ஒருபக்கமாக ‘ஒருக்களித்து’க் கிடந்த அந்த உருவத்தைக் கட்டித் தழுவிக்கொண்டு, கதறினாள். 

அவளால் நம்பவே முடியவில்லை. அதற்குள்ளாகவா இந்தக் கோரமான சாவு, சித்திக்க வேண்டும்! 

செத்துக்கிடந்த நல்லான்தலையைத் தூக்கி, நிமிர்த்தி, நெஞ்சோடு நெஞ்சாக அணைக்கப் போனவள், அவன் தலைமாட்டில் கண்டுகொண்டாள், அவன் சாவின் இரகசியத்தை! முப்பது பத்து ரூபாய் நோட்டுக்கள்! நகரசுத்தித் தொழில் செய்கிற நல்லானுக்குச் சுளையாக முந்நூறுரூபா எப்படிக் கிடைத்திருக்கும்? திருடவோ, கொள்ளையடிக்கவோ, அவன் அதிமூளை சாலியல்லவே! 

இரண்டு வருடங்கள் அவன் உயிரின் உயிராய் விளங்கிய அவளுக்கா தெரியாது; அவனியல்புகள்? 

“ஐயோ, மச்சான்….! இந்தப்பாவியின் சங்கிலியை மீட்கப் பட்டினி கிடந்து உயிரை எமனிடம் அடகு வைத்தாயே..! என் இராசாவே எத்தனை நாளிதற்காய்ப் பசி கிடந்தாயோ…!” 

உலகத்துத் துயரமெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிரதிபலித்து நின்றது அவள் ஒப்பாரியில், ஒப்பாரியா அது ? உடம்பின் ஒவ்வோரணுவும் நைந்து பெருக்கும் உதிரக்கண்ணீரன்றோ அது! 

பாவம்! உழைத்து, உழைத்து, இளைத்தும் உரிய ஊதியமின்றி உழலும் அந்த மனிதப் பிராணிகளுக்கு இம்முறை ‘தீபாவளி’ கொண்டாடவும் முடியவில்லை. 

அந்த ஆறு குடிசைகளும் ஒரு குடிசையாகி அந்தத் தீபாவளித் திருநாளில் அழுதுவடிந்துகொண்டிருந்தன; நல்லான் என்ற அந்த நல்லமனிதனின் சாவுக்காக!

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *