உன்னை ஒன்று கேட்பேன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 9,980 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறிதுயிலில் அயர்ந்துபோய் இருந்தவனுக்குச் சிற்றெறும்பு கடித்துவிட்ட மாதிரி என் உள்மனம், போய் எங்கோ ஆழங்காண முடியாத அதலபாதாளத்தில் தள்ளிவிட்ட மாதிரி அதிர்ச்சியை அளித்தன அவர் கூறிய வார்த்தைகள். என் விடா முயற்சியையும் முன்னேற்றத்யுைம் பாராட்டி என் முதுகில் தட்டிக் கொடுத்தவர், எங்கள் காதலை ஊக்குவிக்கும் பாணியில் மறைமுகமாகப் பேசியவர், எனது பழைய வரலாற்றை மட்டும் சாந்தாவுக்குச் சொல்ல வேண்டாம் என்றால் என்ன அர்த்தமாம். எனக்கு ஏதோ புரிகிற மாதிரியும் அதே நேரம் ஒன்றுமே புரியாத மாதிரியும் ஒரே மயக்கமாய்…….. 

அவர் அப்படிக் கூறிக்கொண்டு என் விழிகளை ஊடுருவி நோக்கினார். என் உள்ளத்தைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தாரோ! எனக்கு என்ன பதில். சொல்வதென்றே புலப்படவில்லை. “சரி. பார்க்கலாம் “ என்ற வார்த்தையை அரை குறையாக மென்று விழுங்கிக் கொண்டவன் தொடர்ந்து “அட நேரம் போனதே தெரியவில்லையே” என்று வியப்புக்காட்டியபடி அவசரம் காண்பித்தேன். எப்படியாயினும் அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டால் போதும் போல் இருந்தது எனக்கு. 

சரி தம்பி போயிட்டு வாங்கோ. அடிக்கடி வீட்டுக்கு வந்து போங்கோ என்று சொல்லியபடி திடீர்க் காற்றினால் சாய்ந்துபோன ஒரு மல்லிகைக் கொடியை நிமிர்த்த முயன்று கொண்டிருந்தார். நான் மீண்டும் வரவேற்பறையில் பிரவேசித்த போது சாந்தாவை அங்கே காணவில்லை. அவளிடம் சொல்லிவிட்டுச் செல்வதற்காகச் சிறிது நேரம் காத்துக்கொண்டு இருக்க வேண்டியிருந்தது. ஏனோ என் மனம் நிலையின்றித் தவித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் பின் ஆடும் மயிலாய் ஒல்கி ஒசிந்து நடை பயிலும் அவள் நடையில் அவ்வளவு தளர்ச்சி ஏனோ! ஆயிரம் நிலவின் அழகுப் பொலிவுடன் அருள்வடியும் அவளின் திருமுகம் இருள் சூழ்ந்த மேகமாய், ஏதோ சொல்லத் துடிப்பிருந்தும் சொல்லமுடியாமல் தவிக்கும் இதழ்கள். ஏக்கம் ததும்பும் இரு
விழிகள்…… இவளுக்கு என்ன நேர்ந்து விட்டது! 

எனக்கு இருந்த மனோநிலையில் அவளோடு ஒன்றும் பேச என் மனம் இசையவில்லை. அங்கு நிலவிய சூழ்நிலையும் அதற்குச் சாதகமானதல்ல தான். *நான் போய் வருகிறேன் சாந்தா” என்று கூறியபடி வாசலண்டை சென்று என் சையிக்கிளை எடுத்தேன். என்னைப் பின்தொடர்ந்து வாசல் வரை வந்தவள் “தயவு செய்து மாலையில் சந்தியுங்கள்” என்றாள் மெதுவாக. 

“எங்கே!” என்ற அர்த்தம் தொனிக்க நான் புருவத்தை நெரித்தேன். 

“வேறு எங்கோ அங்கே தான். கடற்கரையில்” என்ற கருத்து விளங்க தலையைச் சாய்த்து கண்களை ஒருக்களித்து, கைகளை அசைத்துச் சைகை காட்டினாள். அதுவே ஒரு தனிக் கவர்ச்சி தான். 

சைக்கிளில் ஏறி அமர்ந்த நான் ஏதோ உத்வேகத்தில் சைக்கிள் பெடலை உன்னி மிதித்தேன். வேகமாய் சுழலும் சக்கரங்களோடு போட்டியிட்டுக் கொண்டு என் சிந்தனைச் சக்கரம் சுழலத் தொடங்கியது. 

சாந்தாவின் அப்பா அப்படியோர் எறி குண்டைத் தூக்கிப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கத் தேவையில்லை தான். எனது பழைய வரலாறு சாந்தாவுக்குத் தெரிந்தால் எங்கள் தூய காதலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணினாரோ? அப்படியென்றால் சாந்தா என்னைக் காதலிப்பது…? எனது அழகில் மயங்கியா? எனது திறமையில் மயங்கியா? அவள் என்னை உளமாரக் காதலிப்பதாக இருந்தால் எனது பழைய வரலாறு எப்படிக் காதலுக்குத் தடையாகும்? 

நான் ஓர் ஏழையாகப் பிறந்து கூலிக்காறனாக வளர்ந்தவன். வாழ்க்கைப் பாதையில் முன்னேற எத்தனையோ மேடு பள்ளங்களைத் தாண்டி வெற்றிபெற வேண்டியிருந்தது. உண்மையில் மனமார என் திறமையைப் பராட்டுவதாக இருந்தால் அந்த மகிழ்ச்சியை மகளுடன் பகிர்ந்து கொள்ளலாமே! மகளிடம் சொல்லாதே என்றால் நான் ஏழையாக இருந்த விவரம், கூலிக்காரனாக இருந்த சங்கதியைச் சாந்தா விரும்பமாட்டாள் என்று நினைக்கிறாரா அல்லது அந்த விவரங்கள் வெளியில் தெரிந்தால் தங்கள் அந்தஸ்திற்கு இழுக்கு என்று எண்ணினாரா? 

உனது முயற்சியை பாராட்டுவாள். விடா முயற்சியும் திடசித்தமும் நிரம்பிய திறமைசாலி தான் என் காதலன் எனச் சாந்தா மகிழ்வாள் என்று சொல்ல வேண்டியவர் ஏன் இப்படித் தவிர்க்க வேண்டும்? இரகசியமாக என்ன அழைத்துச் சென்று, அவளுக்கு சொல்லவேண்டாம் என்று மன்றாட்டமாய்ப் புத்தி சொல்லும் அளவிற்கு எனது முன்னைய நிலை அருவருப்பானதா? அப்படியானால் என் சாந்தா கூடப் போலி வேஷக்காரி தானா? இருக்க முடியுமா? ஐயோ! என்னால் நம்பமுடியவில்லையே! 

என் அழுக்குத் துணிக்குச் சவர்காரம் தந்துதவி, பரீட்சைக்குப் பணம் கட்ட உதவிய அந்த அடுத்த வீட்டு அக்காவும் ஒரு பல்கலைக்கழக பட்டதாரிதான். சாந்தாவும்.. சீ.. அந்த அக்கா எங்கே? சாந்தா எங்கே? எனது பழைய வரலாறு அவள் மனதை மாற்றிவிடுமாமே! 

நீ படித்து பட்டம் பெற்று உன்னுடைய பெற்றோரை நல்ல முறையில் காப்பாற்றவேண்டும் என்று அந்த அக்கா புத்திமதி சொல்ல… நானோ! பெற்றவள் கடன்பட்டு உள்ள நகைகளை விற்றும் என்னைப் படிப்பித்துப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப் பட்டபாடு. காலம் கனவாக கனவே நினைவாக நினைவே வாழ்வாக வாழ்வே சுமையாக என் அன்னை காலத்தை தள்ளிவிட்டாள். அவளின் நெஞ்சச் சுமையை இறக்க வேண்டிய புனித காரியம் என்னுடையது. நானோ…? 

பல்கலைக் கழகப் படிப்பு ஓர் எல்லையைத் தொடும் முன்னர் காதல் என்னும் சாகரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டு அவதிப்பட்டுக் கொண்டு, அதுவும் போலி கௌரவமும் வெளிவேஷமும் கொண்ட இந்தக் குடும்பத்தில் மாட்டி… சே..சே..! 

நான் கூலிக்காரனாக வளர்ந்து வந்ததை ஏற்க மறுக்கும் மனப்பாங்குடையவளாக இருந்தால் என் ஏழைப் பெற்றோரைக் கடைசிவரையில் வைத்துக் காப்பாற்றத் துணைநிற்பாள் என்பது மட்டும் என்ன நிச்சயம்? என் பெற்றோரை மாமா மாமி என்று அழைக்கக்கூட அவளுக்கு கூச்சமாக இருக்குமோ என்னவோ! 

சாந்தாவின் தந்தையோ இலகுவில் ஒரு மாப்பிள்ளை கிடைத்து விட்டானே என்று திருப்திப்படலாம். ஆனால் எனக்கு… 

இன்றே அவளிடம் என் பழைய வரலாற்றைச் சொல்லப் போகிறேன். அவளைக் கண்டு அம்மா! தாயே! நான் பாலும் பழமும் உண்டு பஞ்சணையில் உறங்கிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்து இந்த நிலைக்கு வரவில்லை. வாழ்க்கையில் பெரிதும் நொந்து போனவன். காலையில் பட்டினியுடன் பாடசாலைக்குச் சென்ற நாட்களும் அளுக்கு உடையுடன் மற்றவருக்கு ஓர் அருவருப்பின் சின்னமாய் உலவிய நாட்களும் அனந்தம். ஆனால் வாழ்க்கையில் வீசிய வறுமைப் புயலுக்கு நாணலாக வளைந்து கொடுத்து இந் நிலைக்கு வந்தேன். என் பழைய வரலாறும் என் வாழ்க்கை முறையும் உன் கௌரவத்துக்குப் பங்கம் விளைவிக்குமானால் நம் காதல் இன்றுடன் முடிந்து போகட்டும் என்பேன். 

உண்மையாகவே சாந்தா நம் காதலை நிராகரித்து விடுவாளோ! சீ.. ஒரு போதும் நம்பமாட்டேன். ஐயோ என் மூளை குழம்பித் தவிக்குதே! என் இதயக் கூட்டினில் சிறை பிடித்து வைத்திருந்த சாந்தா என்னும் காதல் சிட்டு எங்கோ தூரத்தில்… தொடு தூரத்திற்கப்பால் பறந்து போவது போல… இது வெறும் கனவு தானே… நிஜமாக இருந்து விடக்கூடாதே.. 

வெள்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டியில் உள்ள அவனது இருப்பிடம் இரண்டு மைல் தூரம் தான் என்றாலும் ஏதோ இரு நூறு மைல்களைத் தாண்டிவிட்ட மாதிரி உடம்பல்லாம் ஓரே அசதி. மன உலைச்சலுடன் உடல் அசதியையும் கொண்டு வருமோ! 

சைக்கிளைச் சுவரோடு சாத்திவிட்டு அறையில் போய்ப் படுக்கையில் விழுந்த நான் ஏதோ இனம் புரியாத வேதனையில் சிக்குண்டு புரண்டு புரண்டு படுத்தேன். உறக்கம் வரவுமில்லை. நித்திரைக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட திரிசங்கு நிலையில்.. ஏதோ கனவாய்க் கண்டு கையை வேகமாக… நல்ல வேளை! அருகில் மேசை மேல் இருந்த ‘ரதி-மன்மதன் சிலை கீழே விழாமல் கையேந்தலாய்ப் பிடித்துக் கொண்டேனோ சிலை மயிரிழையில் தப்பியதோ! 

நிமிர்ந்து மணிக் கூண்டைப் பார்த்தேன். நான்கு மணி! எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தேன். 

வழக்கமாகச் சாந்தாவும் நானும் சந்திக்கும் அந்தத் தோணிக்கருகில் அமர்ந்து கொண்டேன். மஞ்சள் பூசி, நீலக்கடலில் குளிக்க ஆயத்தம் செய்யும் ஆதவனும், நீலப் பட்டுப் புடைவையில் ஊர்ந்து திரியும் வண்ணாத்திப் பூச்சியாய் அங்கும் இங்கும் பொட்டுப் பொட்டாய்த் தோன்றும் தோணிகளும் இன்னும் பிறவும் என் உள்ளத்தைக் கவரவில்லை. எல்லாம் ஒரே மாயை என்ற ஏதோ விரக்தி தான் மனத்தில் மேலோங்கி நின்றது. 

அதோ! தூரத்தில் அந்தக் கடலை விற்கும் பையனுக்குப் பின்னால் அவள்-சாந்தா தான் வருகிறாள். வரட்டும் என்ன செய்கிறாள் பார்க்கலாம். நான் அவளைக் காணாதது போல் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். என் ஆட்காட்டி விரலோ வெண் மணலில் ஏதோ அர்த்தமில்லாமல் கிறுக்கிக் கொண்டிருந்தது. 

பின்னால் ஒரு மெல்லிய கனைப்புச் சத்தம், ஆ..அ..அ..அது என் சாந்தாவுடையது தான். என்ன செய்கிறாள் என்று தான் பார்ப்போமே. நான் கேட்காதது போல் உட்காரந்திருக்கிறேன். ஏன்தான் என் மனம் இப்படி முரண்டு பிடிக்கிறதோ! 

“ஸ்ரீ” என்று கனிவாய் மொழிந்தபடி என் கண்களைப் பின்னாலிருந்து பொத்துகிறாள். 

“யார் அது?” என்றபடி கைகளைப் பற்றி விடுகிறேன். 

“வேறு யார் இப்படி உங்கள் கண்களைப் பொத்துவார்கள்.?” என்றவளின் விழிகள் என்னமாய்க் கலங்கிவிட்டன. அப்பப்பா! பெண்களுடன் பேசும் போது எவ்வளவு விழிப்பும் முன்னெச்சரிக்யையும் வேண்டியிருக்கிறது.! 

“என்ன ஸ்ரீ இப்படிப் பலமான யோசனை: கப்பல் கவிழ்ந்துவிட்ட மாதிரி?” 

கப்பல் கவிழவில்லை. சுக்குத்தான் திசை மாறிவிட்டது என்றேன் விட்டுக்கொடுக்காமல். 

“ஏன் ஸ்ரீ புதிர் போடுகிறீர்கள்? உள்ளதைச் சொல்லாமல் உண்மை அன்பு இருக்குமிடத்தில் ஒளிவு மறைவு ஏன் ஸ்ரீ?” 

“சாந்தா உன்னை ஒன்று கேட்பேன். மறைக்காமல் பதில் சொல்வாயா!” 

“உங்களுக்கு மறைப்பேனா? கேளுங்கள் ஸ்ரீ.” 

“சாந்தா நீ உண்மையிலேயே என்னைக் காதலிக்கிறாயா?” 

“ஏன் இந்த சந்தேகம்?” 

“சாந்தா, நீ செல்வத்தில் பிறந்து, செல்வத்தில் வளர்ந்து செல்வத்தில் மிதப்பவள். நானோ… ஏதோ இளமை வேகத்தில் காதல் வலையில் சிக்கிக் கருத்தால் இணைந்தோமே தவிர, நம் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்தோமா..?” 

“ஸ்ரீ! நீங்கள் என்னவெல்லாமோ மனதில் வைத்து குமைந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏழையாகப் பிறந்ததும், கூலிக்காரனாக் எங்கள் வீட்டிலேயே வேலை செய்ததும்..” 

“சாந்தா!” 

“ஆம் ஸ்ரீ அடுத்த வீட்டு அக்காவின் உதவியால் முன்னுக்கு வந்ததும் எல்லாம் தான் முன்கூட்டியே அறிவேன். உங்கள் விடாமுயற்சியையும் அயராத உழைப்பையும் திடசித்தத்தையும் அந்த அக்கா வாயிலாகக் கேட்க கேட்க என் கருத்தை உங்கள் வசம் இழந்துவிட்டேன். உங்கள் வாழ்விலும் தாழ்விலும் நான் நிழலாய்த் தொடர்ந்து துணை நிற்பேன். கலவரம் வேண்டாம்.” 

“அப்பொழுது நீங்கள் அப்பாவுடன் பூந்தோட்டத்தில் உலவியபோழுது நான் அந்தப் பக்கம் சென்றேன். அப்பா உங்களுடன் பேசிக்கொண்டிருந்ததைச் செடி மறைவில் நின்றபடி கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். உங்களை அடையாளம் கண்டுகொண்டதும் எங்கே நம் காதலைத் துண்டித்துவிடும் படி உங்களை வேண்டப் போகிறாரோ என்று பயந்தேன். அவர் உங்களை விரும்புகிறார். உங்கள் பழைய வரலாறு என் மனதை மாற்றிவிடும் என்று எண்ணிவிட்டார். என்னைப்பற்றி அப்பா புரிந்து கொண்டது அவ்வளவுதான். பாவம் அப்பா!” 

“சாந்தாவுக்குச் சொல்லதே!” என்று அப்பா உங்களுக்குச் சொன்னதும் உங்கள் முகம் மாறியதை அப்போதே அவதானித்தேன். அப்பொழுது உங்களுடன் பேச அவகாசமில்லாமல் போய்விட்டது. உங்களைக்கண்டு என் உள்ளக் கிடக்கையைப் பேசும் வரையில் என்னளவு தவித்துப்போனேன் நான். ஸ்ரீ! உங்கள் இலட்சிய வாழ்க்கையில் நான் ஒரு போதும் இடைஞ்சலாய் இருக்கமாட்டேன். என்னைக் கைவிட மாட்டீர்களே!” என்றவள் என் மார்பில் முகம் புதைத்தபடி விம்மினாள். 

கீழ் வானத்தில் தாரகைத் தோழிகள் புடைசூழ வெண்ணிலவுப் பெண்ணரசி வீதிவலம் வரத்தொடங்கிவிட்டாள். 

– தினகரன், மாசி 1970.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *