ஆலமரமும் நாணலும்




(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆற்றங் கரை அதனில் அழகான ஆலமரம்
நாற்புறமும் விழுதாகி நன்றாய்ப் பரந்ததுவே
ஓங்கி வளர்ந்திருந்தே ஒன்றாய்த் தழைத்திடவே
பாங்கில்சென் றோரெல்லாம் பண்பாய்ப் புகழ்ந்தாரே
அங்கே நாணல் புல்லும் அருமையாய்ச் செழித் தோங்கி
மங்காச் சிறப்போடு மாண்பாய் வளர்ந்தனவே
வெள்ளம் பெருகிவந்தால் வெள்ளம் ஓடும்வழியே
மெள்ள வளைந்துவிடும் மெள்ள நிமிர்ந்துவிடும்
காற்று வீசும்போது கடுகித் தலைசாய்க்கும்
காற்று வீசிநின்றால் கடுகித் தலைநிமிரும்.
ஆல மரம் அதனை ஆற்ற இகழ்ந்துபேசி,
“ஞால மெலா மிகழ நாணித் தோற்றாயே.
சீச்சீ எனைப்பாராய் சிறப்பாய்நிற் கின்றே”னென்
றேச்சும் பலகூறி ஏமாப் புடன் இருக்க
நாணல் இதைக்கேட்டும் நாணாமல் இருந்துவர
கோணல் பெருங்காற்றுக் கொடுமையாய் ஒருமாலை
சுழன்று சுழன்றடித்துச் சுற்றிலும் வீசியதே
சுழன்றே பல மரங்கள் சுற்றிலும் வீழ்ந்தனவே.
வளையாத ஆலமரம் வளைந்து அலைந்தலைந்து கிளைகள் ஓடிந்துவிழக் கீழ்வேரும் அற்றுவிட முறிந்து விழுந்ததுவே முன்போல நாணல்களோ சிறிது வளைந்திருந்து சிறப்பாய் நிமிர்ந்தனவே.
அடக்கம் அமரராக்கும் ஆன்றோர் பழமொழியாம் அடக்கம் உடையவரே அழியாது வாழ்ந்திடுவார்.
– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.