ஆற்றங்கரையும் அரசமரமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 1,125 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரங்கள் அடர்ந்த ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டின் இடையே ஓர் ஆறு ஓடிக் கொண் டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒரு பெரிய அரசமரம் நின்றது. 

ஆற்றிலிருந்து தொலைவில் நின்ற மரங்களுக் கெல்லாம், மழை பெய்யும்போதுதான் ஏராளமான தண்ணீர் கிடைக்கும். மற்றக் காலங்களில் அவை தரையில் மிக ஆழத்திற்குத் தங்கள் வேரை நீட்டி அங்குள்ள ஈரத்தைத்தான் இழுத்துக் கொள்ள வேண்டும். ஆற்றங்கரையில் இருந்த அரச மரத்திற்கோ ஆண்டு முழுவதும் தண்ணீருக்குக் குறைவில்லை. வண்டல் கலந்து வந்த தண்ணீரின் உரம் அரச மரத்திற்கு நல்ல வலிவும் பொலிவும் கொடுத்தது. அரச மரம் அகன்று பெருத்து வானுறவோங்கித் தலை நிமிர்ந்து பூரிப்போடு நின்றது. 

அரச மரம் மற்ற மரங்களைப் பார்த்து, ‘”நான் உங்களுக்கெல்லாம் தலைவன் !” என்று கூறியது. 

மற்ற மரங்கள் பேசாதிருந்தன. ஆற்றின் வளத் தால் அதிக நலம் பெற்ற அரச மரம் அகங்காரத் தோடு பேசுவதை அவற்றால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. ஆகவேதான் அவை பேசாமல் நின்றன. 

ஒரு நாள் எங்கோ தொலைவில் உள்ள ஒரு மலையில் மழை பொழிந்தது. தொடர்ந்து பெரு மழை பெய்தபடியால் ஆறு பெருக்கெடுத்தது. வெள்ளம் பெருகி ஓடிவரும் ஆறு, தன் வேகத்தால் வழி நெடுகிலும் கரையை அரித்துக்கொண்டு வந்தது. அரசமரம் இருந்த இடமும் அரிப்பெடுத்துக் கரைந்துவிட்டது. மண் கரையக் கரைய அரச மரம் வேரூன்றி நிற்க முடியவில்லை. அப்படியே ஆற்றுக் குள் சாய்ந்தது. வெள்ளம் அரசமரத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. 

“ஆற்றங்கரை வாழ்வு அவ்வளவுதான்!” என்று சொல்லி மற்ற மரங்கள் அரச மரத்திற்காகப் பரிதாபப்பட்டன. 

கருத்துரை :- ஆற்றங்கரை மரம் நிலைத்து நிற்க முடியாது. அதுபோல அரசியல் செல்வாக்கும் நிலையானதல்ல. 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *