அஸ்திவாரங்கள்

சந்திரனுக்குக் கோபமாய் வந்தது.
’ஒருகண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்புதான் இந்த அப்பாவுக்கு. அண்ணன் ரவீந்திரனுக்காக வெண்ணையாய் உருகுகிறார். எல்லாம் பணம் பண்ணும் வேலை.. அமெரிக்காவில் இருக்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான் ரவீந்திரன். என்னை மாதிரி டவுனில் ரெடிமேட் துணிக்கடை வைத்துப் பிழைப்பை நடத்துபவனா என்ன?’
சந்திரன் மனதுக்குள் பொறுமினான்.
சந்திரன் பிறந்த சில மாதங்களில் இளம்பிள்ளை வாத நோய் தாக்கி அவனுக்கு ஒரு கால் ஊனமாகி விட்டது.. அதனால் அவனுக்குப் பத்தாவதுக்கு மேல் படிக்க விருப்பம் வரவில்லை, படிப்பும் வரவில்லை. அடிக்கடி காதர்பாட்சா தையல் கடையில் போய் அமர்ந்து கொள்வான் அவருக்கும் பிறவியில் கால் ஊனம், ஆனால் ஒரு காலால் தையல் மெஷினை அவர் ஓட்டித்தைப்பதைப் பார்த்து தையல் கலையில் ஆர்வம் வந்தது.
பிள்ளைகளின் விருப்பம் எதற்கும் தடை சொல்லமாட்டார் அவன் அப்பா ரங்கநாதன்.
சந்திரனுக்கு நான்கு வயதிருக்கும் போதே அவர் மனவி புற்றுநோயில் இறந்துவிட்டதால் குழந்தைகள் இருவரையும் அவர்கள் விருப்பப்படிதான் வளர்த்தார். ரவிந்திரன் படித்து சம்பாதிக்க அமெரிக்கா போனான். சந்திரன் டவுனில் ரெடிமேட் கடை வைத்து நடத்துகிறான். கடையை ஒட்டிய தெருவில் வாடகை வீட்டில் குடியிருக்கிறான்.
அவனுக்கும் அவன் மனைவி சுதாவிற்கும் கடையில் கிடைக்கும் வருமானம் பெரிய அளவில் இல்லை என்றாலும் போதுமானதாகத் தான் இருக்கிறது.
ரங்கநாதனும் ’கிராமத்து வீட்டில் அம்மாவின் நினைவாக நான் இருக்கிறேன்’ என்று சொல்லி விட்டார்.
வெங்கடேசபேட்டைக்கும் திருச்சி டவுனுக்கும் ஐந்து கிலோமீட்டர் தொலைவு தான் என்பதால் சந்திரனும் அப்பாவைப் பார்க்க வார இறுதி நாளில் மனைவியுடன் கிராமத்துக்கு வந்து போவான். இப்போது பெரியவன் ரவீந்திரன் அமெரிக்காவிலிருந்து மனைவி ராதிகா மற்றும் குழந்தை வருணுடன் கிராமத்துக்கு வந்து அப்பாவுடன் ஒரு வாரம் தங்கப் போகிறானாம்.
”கல்யாணமாகி அஞ்சு வருஷதுக்குப் பிறகு இப்போ தான் இந்தியாக்குவரான் உன் அண்ணன். உன் கல்யாணத்தின் போது கொரானா வந்து அதுக்கு அவனால் வர முடியல. குழந்தை வருணுக்கு கிராமத்து பாத்ரூம்லாம் பிடிக்குமோ என்னவோ அதான் இடிச்சி மாத்திக்கட்டிட்டு இருக்கேன் சந்திரா…” என்றார் பெருமையாக.
”அம்மாடி சுதா…ரவிக்கு கீரை பிடிக்கும் உன் வீடு வந்தா அதைப் பண்ணும்மா..”
“சரி மாமா”என்றாள் சுதா.
சந்திரனுக்கு கோபம் வர இதெல்லாம்தான் காரணம்.
அமெரிக்காப் பையன் குடும்பத்துடன் வருகிறான் என்றதும் அப்பா ஆளே மாறிவிட்டாரே..ஹ்ம்ம்.. அவன் முன்னாடி நான் ஏழை. கால்வேற நொண்டி.
பொறுமினான்.
ரவீந்திரன் குடும்பத்துடன் கிராமத்துக்கு வந்து விட்டான். சந்திரன் கடையில் வேலை என்று வேண்டுமென்றே கிராமத்துக்குப் போகவில்லை…சுதா மட்டும் போய் விட்டு வரும் போது கை நிறைய செண்ட்பாட்டில்களுடனும் பாதாம் பருப்பு , நாகரீககைப்பை ஒன்றுடனும் வந்தாள்.
இரண்டொரு நாளில் ரவீந்திரன் மனைவி மகனுடன் இவன் வீட்டிற்கு சில மணி நேரங்கள் வந்த போது
“சந்த்ரா…பிசினஸ் எப்டிடா இருக்கு? ஏதும் ஹெல்ப் வேணும்னா சொல்லுடா” என்றான்.
“ஒரு ஹெல்ப்பும் வேண்டாம்” என்றான் சந்திரன். அதற்காக சுதா கூட கோபித்துக் கொண்டாள், ”ஏங்க உங்கண்ணன் கிட்ட அப்டி முகத்திலடிச்ச மாதிரி பேசறீங்க? அண்ணி கூட எனக்கு என்ன வேணூம் வீட்டுக்கு மைக்ரோ வேவ் வேணுமான்னெல்லாம் கேட்டாங்க..” என்றாள்.
“சுதா நீ ஒரு அசடு உனக்கு வெளுத்ததெல்லாம் பாலு…என் அப்பாவைப் பார்த்தியா? மூத்தவன் வந்ததுல எப்படிக் குதிக்கிறாரு பாரு.. எல்லாம் பணம்டி பணம்.” மனசுக்குள் புகைந்துகொண்டான்.
ஆயிற்று ரவீந்திரன் அமெரிக்கா திரும்பிப் போக இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது. எல்லாருமாக சிதம்பரம் அருகே அவர்களின் குலதெய்வக் கோயிலுக்கு போகக் கிளம்பினார்கள்.
சந்திரனும் வேண்டா வெறுப்பாகத்தான் கிளம்பினான். ரவீந்திரன் பெரிய காராக பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். வருண் எல்லோருக்கும் விளையாட்டு காண்பித்துக் கொண்டிருக்க குதூகலப் பயணத்தில்
‘உம்’மென்று இருந்தது சந்திரன் மட்டும்தான். காரணம் கூடப்பிறந்த தாழ்வு மனப்பான்மை. எரிகிற அடுப்பில் எண்ணை ஊற்றுகிற மாதிரி சுதா வேறு, “என்னங்க… உங்க அண்ணன் அமெரிக்காவுக்கு அப்பாவை அழைச்சிட்டுப் போகப் போறாராமே? ராதிகா அண்ணி சொன்னாங்க..” என்று முதல் நாள் சொல்லியதில் சந்திரனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அப்பா இது பற்றி தன்னிடம் சொல்லவே இல்லை என்னும் எரிச்சல் மிகுந்தது.
குலதெய்வக் கோயில் வழிபாடுகள் முடிந்ததும் ரவீந்திரனுடன் ராதிகா சுதா வருண் மூவரும் கோயிலை ஒட்டிய வாய்க்காலில் கால் நனைத்தபடி உட்கார்ந்து விட்டார்கள்.
ரங்கநாதன் கோயில் பூசாரியோடு பேசியபடி எங்கோ போய் விட்டார், சந்திரனுக்கு யாரோடும் பேசப்பிடிக்கவில்லை, காலாற தோப்பு பக்கம் நடந்தான்.
அங்கே மோட்டார் பம்பு செட் கல்மேடை மீது ரங்கநாதனும் பூசாரியும் உட்கார்ந்திருந்தனர், அவர்களைப் பார்க்கப்பிடிக்காமல் வேறு பக்கம் நடக்கத் திரும்பியவனை பூசாரியின் பேச்சு தடுத்து நிறுத்தியது.
”பெரிய மகனோட சீமைக்குப் போகப் போறீங்களாமே ஐயா? ரவி என்கிட்ட ரொம்ப சந்தோஷமா சொன்னாரு .” என்று பூசாரி கேட்டார்.
ரங்கநாதன் சட்டென இதற்கு பதில் சொல்லவில்லை..மகிழ்ச்சியில் அப்பா திக்குமுக்காடுகிறார் என குதர்க்கமாய் சந்திரன் நினைத்த போது அவர் வழக்கமான தனது கணீர்க் குரலில் பேச ஆரம்பித்தார், ”மாயாண்டி! நீ கோயில் பூசாரி மட்டுமில்ல. என் ஆப்த நண்பனும் கூட. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.. ரவீந்திரன் ஆசையாய்தான் கூப்பிடறான், மருமகளும் குணத்தில் தங்கம்.. ரவி நிறையப் படிச்சவன் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா சந்திரனுக்கு அப்படி இல்ல. அவன் தொழில் கொரானா நேரம் ரொம்ப மோசமானது. அப்போ அவனுக்குத் தெரியாமலேயே மறைமுக உதவிகள் சில செய்தேன். டெக்ஸ்டைல் பிசினசுல சம்பந்தப்பட்ட ஆட்கள் வடக்கில் இருக்கறவங்களூடன் பேசி பையனின் ஷாப் மேற்கொண்டு நடத்த உதவுங்கன்னு கேட்டுக்கிட்டேன்.. குடும்பம் என்கிற வீட்டுக்கு அஸ்திவாரமாய் இருக்கறது பெத்தவங்க தானே…? நாமதானே தாங்கி நிக்கணும்! இப்போவும் அவனுக்கு பக்கபலமா நான் எப்பவும் அவன் கூடவே இருக்கணும்.. குழந்தை மனசு அவனுக்கு.. முணுக்குனு கோபம் வந்து வந்து போகும்..மருமக சுதா வேற இப்போ முழுகாம மூணு மாசமா இருக்கா..அப்பா அம்மா இல்லாத பொண்ணூ..அவளுக்கு ப்ரசவ நேரம் உதவிக்கு நான் இருக்கணும்.. இதையெல்லாம் விட்டு மூத்தவன்கூட அமெரிக்கா போவேனா சொல்லு… பாஸ்போர்ட் விசா எல்லாம் போன தடவை வந்தப்பவே ரவி செய்து கொடுத்துத் தான் போனான். இப்போ ஆசையாய்த்தான் அழைக்கிறான். அதனால அவன் மனசு நோக வேண்டாம்னு உடனே மறுக்கலையே தவிர இன்னிக்கு கோயில் வழிபாடு முடிஞ்சதும் காரில் என் முடிவை சொல்லிடணும்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்…”
ரங்கநாதன் பேசி முடித்ததும் சந்திரன் நீர் தளும்பிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல அவர் அருகில் நடந்து போய் நின்றான்.
சட்டென நிமிர்ந்த ரங்கநாதன், ”அடடே சந்திரா! என்னப்பா புது ஊரு.. வழி தவறி இந்தப்பக்கம் நடந்து வந்துட்டியா! அப்பா நான் இருக்கேன். கவலைப்படாதே… எனக்கு தெரிஞ்ச வழிதான்..வா…போகலாம்ப்பா” என அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டார். அந்தக்கரத்தை இறுகப்பற்றிக் கொண்டான் சந்திரன்.