அழிந்த கோயில்
கதையாசிரியர்: எஸ்.டி.சுந்தரம்
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை நாடகம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 55
(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழிப்போக்கன்:- “எழுநிலை மாடம் மாளிகைச் செல்வமும் விழுந்துயிரில்லா வீண் காடானது! செழித்தழ கோவியம் சேரும் இக்கோயில் அழிந்ததும் ஏனோ? ஆதியம் ஜோதியே!’
என்ன விந்தை! எழிலும் ஏற்றமும் சூழ்ந்து கவியொலி வீசி நிற்கவேண்டிய இப்பெரும் கோயில், உருக்குலைந்து சின்னாபின்ன மாகிச் சீரழிந்து அழிவுற்றிருக்கிறதே! கலையின்பம் அறியாத காதகரின் செயலா.?
மனைவி : வானவீதியில் வெள்ளிய பேரொளி
வாரிச் சிதறிடும் வைரமாம் தாரகை
மோனப் பாதையில் மூச்சு விடாமல்
மோகனம் காட்டி மூடுது பார்வை
குருடன் : ஐயா! ஏழைகள் – நாதியற்ற பறவைகள். ஏதாவது பிச்சைபோடக் கூடாதா..?
மனைவி : அம்மா! பார்வையில்லாத மனிதர், பசியோடிருக்கிறார்.
ஒரு குரல்: போடா! தடிப்பயலே! ஏதாவது வேலைபார்த்து வயிறு வளர்க்கிறதுதானே ! உடம்பைப் பார் உருளை மாதிரி.
மனைவி : ஐயா! கொடுக்காவிட்டால் கோபிப்பானேன்?
மறுகுரல் : ஓ- ஐயாவுக்கு பரிஞ்சு அம்மா பேசுறாங்களா?
குருடன் : தேவி! அவரிடம் பேசாதே! விதியின் எதிரொலி வா…! செல்வோம்…
வேண்டிய மாமழை பொழியும் மேகம்
வேண்டாக் கோபம் கொள்ளுவ தில்லை
மாண்டிடும் மாந்தர் மாயப்பூமியில்
மாசெனும் வலைதனைப் பின்னுதல் வீணே!
ஒரு குரல் : தேவலோடா ஆளு-பெரிய தீர்க்கதரிசிமாதிரி தத்துவ பாட்டாப் பாடித் தள்ளுறாண்டா… (சிரிக்கிறான்.)
மனைவி : ஒருபிடி அவல் கூடக் கிடைக்க வில்லையே! இந்தப் பாழும் துன்ப வாழ்வில் கண்ட அநுபவம் போதாதா?
குருடன் : துன்பத்தின் எல்லை என்னவென்று தெரியுமா?
மனைவி : இன்பம் என்று நீங்கள் சொல்லலாம்…. ஐயோ! இனி இந்தத் துயரத் தீயைச் சகிக்கமுடியாது.
குருடன் : பைத்தியமே! நாம் வளர்த்த வினைப்பயிரில் கதிரை தானே அறுவடை செய்கிறோம். வா…..! நமது வாழ்வின் முற்பகுதி அகந்தையும், இன்பமும் பூசப்பட்ட மாளிகையாயிருந்தது. பிற்பகுதி அவலமும், எளிமையும் தோய்ந்த சிறு குடிசையாயிருக்கிறது. வா…! வா…!
“காரிருள் நீங்கக் கதிர் மதிக் கோலங்கள்
காட்டிடும் கருணைப் பொருளே ஈங்கே,
மனைவி : பேரிருள் நீங்கிப் பொறுமையில் நேயம்
பூண்டிட மாந்தர் பயில்வதும் என்றோ?
(இடியொலி முழங்குதல்)
மனைவி : இருள் எங்கும் சூழ்கிறது. சீக்கிரம் அந்தப் பாழடைந்த மண்டபத்திற்காவது சென்று ஒதுங்குவோம் வாருங்கள். மழையும் இடியும் கொட்டும்போல் இருக்கிறது.
குருடன் : வினையின் விளையாட்டு, பயங்கர உருவெடுத்துள்ளது ஆனாலும் என்ன! நம்மை அது இதற்குமேல் பயமுறுத்த முடியாது. ஆண்டவா.!செவ்! பசித்துயரை நீ இன்றிரவு எவ்வாறு சகிப்பாய்
மனைவி : அதைச் சகிக்கவேண்டிய அவசியமில்லையே!
குருடன் : வேறு வழி!
மனைவி : நமது வாழ்வின் சீர்குலைவுக்கே காரணமாயிருந்த அக்கோயிலின் பாழடைந்த குளத்திலே விழுந்துவிடலாம்.
குருடன் : அது மிகச் சுலபமான காரியம் இந்த முடிவைத் தேடுவோமாயின், நாம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தத் துன்பத்தை அநுபவித்து வந்ததின் இலட்சியம் வீணாகிப் போகும். தற்கொலை ! ஆம்! அதை எண்ணும்போதே அனந்தக் கண்ணீர் பெருகுகின்றது. சில வினாடிகளில் நமதுயிர் தத்தளித்து ஒடுங்கி ஓடிப்போகும். ‘மாலை வானத்திலே மருண்டு பறந்து மறையும் கறும் பறவைபோல்’ நமது ஜீவனும், சப்தமே போடாமல் எங்கோ ஓடி எல்லையற்ற பெருவெளியில் காற்றோடு கலந்துவிடும். ஆகா….! பின்னர் இன்பதுன்பம் என்ற இரண்டும் நமக்கில்லை. ஆம்! அதுவே நமது இறுதி இன்பம். ஆனால்…
மனைவி : ஆனால் என்னும் சந்தேகமே வேண்டாம். இனி யோசனைக்கே இடமில்லை-ம்-வாருங்கள். எட்டிய வரையில் யாரையும் காணவில்லை. இதோ மின்னல் ஒளி நமது மரணப்பாதையைத் தெளிவாக்கிச் சிரிக்கிறது.
(இடியொலி)
வழிப்போக்கன் :
‘இன்பச் சோலையில் இனிமை மிகுந்தால்
துன்பச் சேற்றினில் தூய்மையும் விழுமாம்,
அன்புளம் சாகும், ஆறுதல் ஏகும்,
என்பவர் மேலோர் ஏக்கமும் வேண்டாம்’
குருடன் : யாரது? ஆறுதல் கலந்த அமுதமொழிகளை அள்ளித் தெளிக்கிறார்கள்?
மனைவி : ம்-போதும்..! அவற்றை எல்லாம் சிந்திக்க இதுநேரமல்ல வாருங்கள்.. வாருங்கள்..! போய்விடுவோம்.
வழிப்போக்கன் : யாரது ஓடுவது? மனித சஞ்சாரமற்ற இவ்விடத்தில் நள்ளிரவில் ஒளிந்து ஓடும் நீங்கள் யார்? நில்லுங்கள்- விடமாட்டேன் நில்லுங்கள்.
மனைவி : ஐயா! எங்களை விட்டுவிடுங்கள்.
குருடன் : எங்களைத் தயவு செய்து தடைசெய்யவேண்டாம்.
வழிப்போக்கன் : பொறுமை கொள்ளுங்கள்.
குருடன் : பொறுமையா? அதன் சிகரத்தில்தான் நாங்கள் உலவி வந்தோம். ஆனால் வறுமைப் புயல் எங்களைத் தள்ளிப் பகடையாடிவிட்டது.
வழிப்போக்கன் : நீங்கள் யார்?
குருடன் : நாங்கள் தள்ளாடும் உயிரற்ற ஜீவன்கள்.
வழிப்போக்கன் : மனமுறிந்து பேசவேண்டாம். நீங்கள் குறை நீங்கலாம். உலகம் மிகப்பெரிது
குருடன் : எங்கள் துயரமும் அமைப்போல்தான். காலம் என்னும் காட்டாற்றில் கண்ணற்ற நானும், என் மனைவியும் விரைவில் மறையவேண்டிய மாயக்குமிழிகள்.
வழிப்போக்கன் : காலவேகம் நிலையற்றது.
“காலமும் காட்சியும் கலைந்திடும் கனவாம்
ஞாலமும் வாழ்வும் நில்லா அலையாம்.
காலையும் மாலையும் காரிருள்போலவும்
வேலை சூழும். உலகியல் மாறும்.”
நீங்கள் தற்கொலை செய்துகொண்டு மடியவேண்டாம். நீங்கள் மிகவும் களைத்துக் காணப்படுகிறீர்களே! இதோ! இந்த உணவை முதலில் நீங்கள் உண்ணுங்கள். பிறகு பேசலாம்.
வழிப்போக்கன் : (சிறிது நேரம் சென்றபின்) பசி தீர்ந்ததா? வயிறு நிறைந்ததா?
குருடன் : துடித்த உயிர் தெளிவு பெற்றது சுவாமி!
மனைவி : சுவாமி! பாவ ஜென்மங்களாகிய எம்முன் பரிசுத்த வடிவாய் நிற்கும் தாங்கள் யார்?
வழிப்போக்கன் : நான் யார்? ஒரு நாடோடி! ‘அழிந்து சிதைந்து மங்கலமிழந்த பத்தினிபோல்’ இடிந்த கோபுரத்தோடு காட்சிதரும் அழிந்த கோயிலின் வரலாற்றை அறிந்து செல்லலாம் என இப்பாழ் மண்டபத்திலே தங்கினேன்.
(இருவரும் பெருமூச்சு விடுகிறார்கள்)
வழிப்போக்கன் : தாங்கள் குமுறுவானேன். இந்தப் பளிங்கு மணிக் கோயில் பாழடைந்த விபரம் உங்களுக்கு தெரியுமா?
மனைவி : சுவாமி! அழிந்த இக்கோயிலின் சரித்திரத்தை அழகான சித்திரங்களாக வரைந்திருக்கிறார்கள்.
வழிப்போக்கன் : அப்படியா! அச்சித்திரங்கள் எங்கமைந்துள்ளன? மனைவி : அக்கோயிலின் மேற்புறத்துள்ள குகையில்.
வழிப்போக்கன் : சரி அங்கு சென்று அவைகளைக் கண்டுவருகிறேன். குருடன்: சுவாமி! வேண்டாம்! அந்தப் பயங்கரக் குகையில் பந்தமின்றி நுழைய முடியாது.
வழிப்போக்கன் : என்னிடம் பந்தமிருக்கிறது. கொளுத்திக் கொள்ளுகிறேன்.
குருடன் : அங்கு பேய்களின் நடமாட்டம் அதிகமாயிருக்கும் சுவாமி! நள்ளிரவு நெருங்கிவிட்டது.
வழிப்போக்கன் : பேய்களா? நடமாடுகின்றனவா?
குருடன் : சுவாமி! போகாதீர்கள். வேண்டாம்… வேண்டாம்… நானே கூறுகிறேன். நில்லுங்கள்.
வழிப்போக்கன் : இல்லை. வருகிறேன். சில வினாடிகள்… ஆகா! அழகின் பூரணத்தில் உதித்த அற்புதச் சித்திரங்கள். யாரது..? இவ்வுருவம் யாருடையது…? சிற்பி செவ்வண்ணன் சிற்பக் கூடமா ஆ…! இதென்ன..!
செல்வி : என்ன செய்கிறீர்கள். இப்படி.. தூக்கமின்றியே உடம்பைத் துரும்பாக்கி கொள்ளுகின்றீர்களே! உணவருந்த வாருங்கள்!
சிற்பி : பேசாதே! செல்வி! என் கருத்தைக் கலைக்காதே! உணவு எனக்கு வேண்டாம். நீ போ..
செல்வி : எப்பொழுது பார்த்தாலும் கல்லைக்கட்டி அழுவது என்னதான் இன்பமோ?
சிற்பி : பெண்ணே! பேசி என்பொழுதை விழுங்காதே! எனதன்னை கருணைவாரிதி! கலைவாணியின் உருவை எண்ணப்படி செய்து முடிக்கும் வகை உணவு கொள்ளேன். கலையுள்ளம் அற்றவள் நீ.
செல்வி : ஆமாம்! கலை, வாழ்க்கையின் தற்கொலை! இவ்வளவு கஷ்டப்பட்டு யாருக்காகவோ கலையை வளர்க்கிறீர்கள்.
சிற்பி : என்ன கூறினாய்? பேதையே! யாருக்காகவோ? மனித சமுதாயத்தின் நலத்திற்காக! எனதரும் நாட்டின் உயர்வுக்காக! கலைவாணி என் பொருட்டு உவந்தளித்த சிற்றுளியின் ஆற்றல் உலகம் அறிந்து கொள்வதற்காக! என் வாழ்வின் கனவும் அரசரால் நனவாக்கப்பட்டது.
செல்வி : பளிங்குக் கோயில் கட்ட அரசர் சம்மதித்து விட்டாரா?
சிற்பி : ஆகா! சம்மதமா? நாளையே அஸ்திவார விழா! இரண்டே மாதங்கள். இரண்டாயிரம் ஆட்களை வரவழைத்து விட்டேன். இதோ பார்! என் தாய் கலைவாணியின் திருவுருவம் என்னுடன் கண்திறந்து பேசுகிறாள். அகா! இத் தெய்வச் சிலையை அமைத்து வணங்கவே அந்தப் பளிங்குமணி ஆலயம். அதைக் கட்டி முடித்ததும் என் வாழ்வின் இலட்சியம் முற்றுப் பெறும். அம்மா! கலைவாணி! உலகின்தாயே சாந்தி சூழும் விழிகளினால் எனையாட்கொண்ட அம்மையே! எவ்வாறு வாழ்த்துவேன். ஒளிப்பிழம்பே! அமுத தாரகையே! ஒங்கார ராணியே! அழகுக் கலையே! அற்புத மணியே!
“அமுத மென்மொழி யிதழ்-அம்மா-அம்மா
அமுத மென்மொழி யிதழ்-அம்மா
ஆரண மெல்லாம் ஆய்ந்திடும் தாயே!
பூரணமோங்கிப் பொலியுமென் தாயே!
சிந்தனையெல்லாம் சீர்மையைப்பாட
எந்தனைச் செய்தாய் ஏகாம்பரியே!
வந்தனை கூறி வாழ்த்தினேன் தாயே!
அந்தியின் மாலைச் சுந்தரி நீயே!’
சிற்பி : செல்வி ! ஏன் அழுகை?
செல்வி : அழுகையல்ல ! ஆனந்த பாஷ்யம் ! உங்கள் இன்பத்தின் லட்சியத்தை இதுவரை நான் அறியாமல் போய்விட்டேனே!
சிற்பி : இனி என்றுமே இன்பம் நீ பகற்கனவு என்று எள்ளிநகை யாடிய எனது இலட்சியம் இன்பக் காட்சியின் பெட்டகமாகிவிடும். விரைவில் இக்கலைத் தெய்வத்தை பிரதிஷ்டை செய்துவிட்டு நாம் பொதிகைமலைச் சாரலுக்குச் சென்று விடுவோம்.
அரசன் : ஆகா! அழகான ஆலயம்! யாரது? மந்திரி! வாருங்கள் என்ன விஷயம்?
மந்திரி : அரசே! ஆலயம் முடிந்துவிட்டது, அதில் தங்கள் உருவம் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும் என்பதே நாட்டின் விருப்பம். அரசன் : சிற்பி அரும்பாடுபட்டுச் செதுக்கியுள்ள கலைவாணியின் சிலை…
மந்திரி : கலைமகளுக்குக் கோயிலா? அவசியமில்லை. அது இப்பொழுதிருக்கும் ஆலயத்திலேயே வைக்கப்படலாம். எதிரிநாட்டு வேந்தனுக்குக்கூட கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆதலின் இக்கோயிலில் நியாயமாக இருக்கவேண்டியது தங்கள் சிலை தான்.
அரசன் : அரசனுக்குக் கோயில் இருப்பதும் நல்லதே! சரி அவ்வாறே செய்துவிடும்.
சிற்பி : என்ன! அரசனது சிலையா எனது பளிங்குக் கோயிலில் இடம்பெறவேண்டும். ஆ! மந்திரி-ஜாக்கிரதை! மண்டையை என் சிற்றுளியால் செதுக்குமுன் ஓடிவிடும். கலைவாணி இருக்கவேண்டிய இடத்தில் காவலன் உருவம்.
மந்திரி : அரச ஆணை இது.
சிற்பி : முடியாது. கலைஞன் விருப்பம் இது.
மந்திரி : சிற்பி! ஜாக்கிரதையாகப் பேசு!
சிற்பி : மந்திரி!
மந்திரி : நான் பார்க்கிறேன்.
சிற்பி : (தனக்குள்) நானும் பாக்கிறேன். (மெதுவாக)இன்றிரவே பிரதிஷ்டைசெய்து விடுகிறேன்.
மந்திரி : ஆ! …அடே!.. யாரது? அச் சிலையை அகற்றுங்கள் சுக்கு நூறாக உடைத்தெரியுங்கள். உம்… அந்த இடத்திலே இந்த அரச விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள். ஆம் – கர்வங்கொண்டவன் தான்! பைத்தியக்கார சிற்பி! அன்று எனது உருவச் சிலையைச் செதுக்கித் தர மறுத்தான். என்னை அலட்சியம் செய்த அப்பழியை இன்று முடித்துக் கொண்டேன். இனி அவன் அழிவு திண்ணம்.
சிற்பி : ஆ! என் கலைவாணியின் சிலை எங்கே? அம்மா! உன் திருமேனி சிதைக்கப்படுவதா? ஆகா..! மந்திரியின் மாயப்பழியா இது. அடா.! மாயப் பைசாசமே! இதுவா உன் செயல்! அகந்தையின் காத்தானே! அரச ஆணையின் உருவில் உனது சேஷ்டையைச் செய்து முடித்தாயா?
வேந்தே! இதற்காகவா முதுகெலும்பு முறிய என்னருமைச் சிலையைச் செய்தேன்? எத்தனை நாட்கள் பட்டினி! எவ்வளவு துயரம்! இரத்தமெல்லாம் ஆவியாக்கினேன். அடா! கலை அறியாத கசடனே கல்லுக்கும் சிலைக்குமுள்ள வித்தியாசத்தை நீ என்ன கண்டாய்! உங்கள் பழி முடிந்தது. பிடிவாதம் வென்றது. இதோ கலைஞன் மனம் உடைந்தது. ஏ கோயிலே! என் கலைவாணியில்லாத நீ ஏன் பல்லிளிக்கின்றாய்! இடிந்துபோ அழிந்துபோ! அரசே! பூண்டற்றுப்போ! ஏ நகரே அழிந்து போ!
வழிப்போக்கன் : ஆ..! அம்மா ! சகிக்க முடியவில்லை.
குருடன் : யாரது ? ஏன்.?
வழிப்போக்கன் : ஆம்! பேய்கள்தான்!
குருடன் : அதுதான் ! சிற்பி செவ்வண்ணனின் ஜீவனின் நிழல்,
வழிப்போக்கன் : பாதகம்! வேந்தனா? அவன் அவனைக் கண்டால்?
குருடன் : என்ன சொன்னீர்கள்?
வழிப்போக்கன் : கலைஞனைத் தன்னகங்காரத்தால் வீழ்த்திய அச்சண்டாளனை..?
குருடன் : இஷ்டப்படி இன்றே தண்டியுங்கள். நானே அந்த அரசன். சிற்பியின் சாபம் பொய்யல்ல! இக்கோயிலை அழித்தவன் நான்தான்.
வழிப்போக்கன் : ஆ! என்ன ! நீயா!
குருடன் : ஆம் சுவாமி!
– முல்லை – 7, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.