கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 219 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கோமள பவன்’ வாசலில் இதுவரையில் எத்தனையோ பிச்சைக் காரர்கள் நின்றிருக்கின்றனர். ஆனால், இப்பொழுதுதான் அந்தத் தொழிலுக்குப் போட்டி அதிகமாய் விட்டதே! 

கருப்பாயி நிற்கும் அந்த ஏகபோகத் தொழிலிடத்திற்கு யார் போட்டியாக வந்தாலும், அவர்கள் மூன்று நாள்கள்கூட அங்கே சேர்ந்தாற்போல காலந்தள்ள மாட்டார்கள். 

செல்லாயியும் இப்போது அங்கே வர வேண்டியதாகிவிட்டது. அவள் மட்டும் வரவில்லை. தோளிலே குழந்தையைச் சாய்த்துக் கொண்டு வந்திருந்தாள். 

“ஐயா… இரண்டு ஜீவனுங்க. இந்தப் பசலைக்குப் பால் வார்க்கவாவது ஏதாச்சும் போடுங்கய்யா” – செல்லாயி உருக்கமாக வேண்டுவாள். அதைக் கேட்டுக் கருப்பாயி முறைத்துப் பார்ப்பாள். 

‘சவம் எங்கிருந்தோ வந்திடிச்சே’ என்று முதல் நாளே அவளுடைய முணுமுணுப்புத் தொடங்கிவிட்டது. எத்தனையோ பேர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெற்றிலையை எடுத்துச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு வருகிறார்கள். எல்லாருமா தர்மக்காசை வீசி எறிகிறார்கள்? ஒரு கப் காப்பியோ அல்லது வெறும் போண்டா மட்டுமோ சாப்பிட்டு விட்டு மீதி விழும் அரையணாவைக் காலியான பையில் போட்டுக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து வரும் சிலர் காதில்தான், “ஐயா! ஏழைக்கு எதானாச்சும் தர்மம் போடுங்க” என்ற குரல் கேட்கும். பையிலே சட்டென்று கையைப் போட்டு அரையணாவை வீசி விட்டு நடப்பார்கள். 

இப்பொழுது அங்கே இரண்டு குரல்கள் சேர்ந்து ஒலித்தன: “ஐயா! ஏழைக்கு எதனாச்சும் தர்மம் போடுங்க.” 

“தர்மப் பிரபுகளே! இரண்டு ஜீவன் பிழைக்கணுங்க… பச்சைக் குழந்தைக்குப் பாலாவது வாங்கிக் கொடுக்கணுங்க; எதனாச்சும் தர்மம் போடுங்க.” 

இப்பொழுது கருப்பாயி, எதிராளி தர்மம் போடுகிறானா இல்லையா என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. செல்லாயியின் குரலைக் கேட்டதும், “ஏய் சவமே… எங்கிருந்தடி நீ வந்தே என் பிழைப்பைக் கெடுக்க? காலையிலிருந்து செல்லாத் துட்டும் கிடைக்கவில்லை” என்று சீறுவாள். 

செல்லாயி திரும்பிப் பார்ப்பாள். அவள் இதுவரை இம்மாதிரி வசவுச் சொற்களை எங்கும் கேட்டதில்லை. அத்துடன் இந்தப் பிச்சைக்காரி யிடமா சுடுசொல் கேட்க வேண்டும்? உம்… இங்கும் தொழில் போட்டி! 

முதல் இரண்டு நாள்கள் செல்லாயி பதிலே பேசவில்லை. ஆகவே, கருப்பாயியின் உக்கிரமான வார்த்தை வீச்சுகள் பலமாகத் தொடங்கி விட்டன. தான் வாங்கப் போகும்போது போட்டிப் போட்டுக் கொண்டு கருப்பாயி தன் தகரக் குவளையை நீட்டிச் சுடுசொற்களைக் கக்கியவாறு தனக்கு வரும் அரையணாக் காசையும் கெடுக்க முயலும்போது செல்லாயியின் கண்களில் அவளை அறியாமலே நீர் ததும்பும். 

பிச்சை எடுக்கவா அவள் பிறந்தாள்? அந்தக் குழந்தையையும் இடுப்பில் சரியாக வைத்துக் கொண்டு தெருவிலே புரளும் அந்தக் கந்தலையும் சரி செய்து கொண்டு எதிர்த்தாற் போலிருந்த திண்ணையில் போய்ப் படுத்து விடுவாள். அந்தத் திண்ணை ஒன்றுதான் இப்பொழுது அவளுக்கு ஆறுதலான இடம். 

அருகே கிடக்கும் அந்த இரண்டரை வயதுக் குழந்தையைப் பார்க்கும்போது அவளுடைய எண்ணங்கள் எங்கெங்கோ விரியும். அது அவள் குழந்தையா? இல்லை… அவள் குழந்தை இருந்து இந்த நிலைக்கும் வர வேண்டுமா? சீச்சீ… இது என்ன பிழைப்பு! மறுபக்கம் திரும்பிப் படுப்பாள். 


செல்லாயி பிச்சை எடுப்பதற்காகச் சென்னைப் பட்டணத்துக்கு வரவில்லை. அவளும், அவள் கணவன் சடையப்பனும் கௌரவமாகத் தான் கிராமத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். 

அவன் மண்வெட்டி கொட்டியும் நிலங்களுக்கு எருக்கொட்டியும் சில்லறை வேலை செய்தும் பிழைத்து வந்தனர். செல்லாயியும் சளைக்க வில்லை. கீரைத் தோட்டம் போட்டிருந்தாள். தளதளவென்று வளரும் கீரையைப் பறித்து எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு பக்கத்து ஊரின் தெரு வழியே விற்கப் போனால் சிறிது நேரத்துக்குள்ளாகவே காசு அவளிடம் குலுங்க ஆரம்பித்துவிடும். 

சடையப்பனுக்கு வேலை இல்லா நாள்களில், அந்தக் கீரைதான் தெய்வம்போல் அரை வயிற்றுக்கு உணவைத் தேடிப் போடும். 

இப்படிக் கௌரவமாகக் குடும்பம் நடத்தி வந்த அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், வானம் சில வருஷங்களாகப் பொய்த்துவிடவே, அரை வயிற்றைக் கழுவிக் ‘காமா சோமா’ என்று வாழ்க்கையை ஓட்டி வந்த அவர்களைக் கஷ்ட காலம் பிடித்துக் கொண்டது. 

கிணற்றில் தண்ணீர் இல்லாமல் என்ன விளைவிக்கிறது நிலத்தில்? பலர் நிலத்தை அப்படியே போட்டு விட்டுப் பட்டணத்தைப் பார்க்கக் கிளம்பினர். பெரிய பெரிய பண்ணைக்காரர்கள் பாடே திண்டாட்டமாக இருக்கும்போது சடையப்பன்மட்டும் அதற்குவிலக்கா?செல்லாயியிக்கும் கீரைப் பாத்தி போட முடியவில்லை. அந்த வட்டாரங்களிலே எந்தக் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. 

அந்த ஊரில் பண வசதியுள்ளவர்களே குடம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும்போது, இவள்கீரைப் பாத்திக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்? 

தினசரி குடிக்கத் தண்ணீர் வேண்டுமே; செல்லாயி எங்கெங்கோ அலைந்து திரிந்து குடம் தண்ணீர் கொண்டு வருவாள். ஒருநாள் அந்தத் தண்ணீர் சாப்பிட்டதனாலோ என்னவோ, செல்லாயியிக்கும் குழந்தைக்கும் நோய் கண்டது. ஒரு வாரம் விடாமல் அடித்த ஜுரம் குழந்தையை அவர்களிடமிருந்து பிரிந்து விட்டது. சாப்பாடு இல்லாதது கூட முக்கியமாகத் தோன்றவில்லை செல்லாயியிக்கு; குழந்தையைக் கடவுள் எடுத்துக் கொண்டதுதான் பெரும் துயரமாகப்பட்டது. 

அதனால் அந்த ஊரிலேயே இருக்கச் செல்லாயிக்குப் பிடிக்கவில்லை. அவளும் அவளுடைய கணவனுமாக, யாரோ தெரிந்தவர்களது யோசனைப்படி பட்டணத்துக்குக் கிளம்பிச் சென்றனர். பட்டணத்தில் வேலை என்ன குவிந்தாகிடக்கிறது? இரண்டு நாள்கள் அலைந்து திரிந்த சடையப்பன் வாடிய முகத்துடன் வந்ததுதான் பலன். 

அங்கே ஒருநாள் கழிப்பது ஒரு யுகம் கழிப்பது போல இருந்தது. காலிலே ரொம்ப காலமாகப் போடப்பட்டிருந்த கெட்டிக் காப்பையும் விற்றாகி விட்டது. 

திரும்பவும்கிராமத்துக்கே போய் எப்படியாவது பிழைக்க வழி தேடிக் கொள்ளலாமா என்று சடையப்பனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இரண்டு பேரும் போவதென்றால் அதற்குப் பணமில்லை. அதனால் செல்லாயியை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டுச் சடையப்பன் மட்டும் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். 

நாள்கள், வாரம் எல்லாம் எப்படியோ கெக்கலி கொட்டிக் கொண்டு கடந்து சென்றன. செல்லாயியால் ஒரு விநாடிகூடப் பட்டணத்தில் எந்தத் தொழிலும் செய்யாமல் தள்ள முடியாது போலிருந்தது. ஆனால், ஏதாவது வேலை கிடைத்தால்தானே? வேலை தேடிக் கொண்டு வந்தவள் ஒரு பிளாட்பாரக் கூட்டத்தை வந்தடைந்தாள். அங்கே ஒரு கிழவன் இவளைப் பிரியமுடன் வரவேற்றான். 

“எதனாச்சும் வேலை செய்ய வழி செய்யுங்க பெரியவரே” என்று கேட்ட, அவள் முகத்தைப் பார்த்து கடகடவென்று சிரித்தான் அந்தக் கிழவன். 

கிழவன் ஒரு தொழிலதிபன். அவனிடம் அண்டிப் பிழைப்பவர்கள் ஒரு டஜனுக்கு மேலிருந்தனர். எப்படிப் பிச்சை எடுப்பது என்பதை எல்லாருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியதுதான் அவன் வேலை. 

குருட்டுப் பிச்சைக்காரன் போல் ஒருவனும், அவனுக்கு வழிகாட்ட ஒரு பெண்ணும் – இப்படியாக ஜோடி சேர்த்து விடுவான். எல்லாரும் இரவு எட்டு மணிக்குத் தங்கள் ‘தலைமைக் காரியாலயத்தை அடைவர். அவரவர்கள் தங்கள் வாடகையைக் கிழவனிடம் செலுத்தி விடுவர். அதிகமாக இருந்தாலும் அவனிடமே கொடுத்து வைப்பர். 

அந்த முகாமில் ஒருநாள் இருந்து பார்த்த பின்தான் செல்லாயிக்கு விவரம் புரிந்தது. 

“குருடனுக்குத் துணையாக நடிக்கிறாயா? கர்ப்பமுற்றவள் போல் நடிப்பவளுக்குத் துணையாக நடிக்கிறாயா? எப்படி நடிக்கிறாய்?’ என்று கேட்டான் கிழவன். 

செல்லாயியிக்குத் துக்கம் பொங்கி வந்தது. கண்களில் நீர் மல்க ஒன்றும் பேசாமல் நின்றாள். 

“அம்மா! இப்படி இருந்தால் பிழைக்க முடியாது. இங்கே கௌரவத்தைப் பார்த்தால் நடக்காது. கடைசியாகக் கேட்கிறேன்… இந்தக் குழந்தைக்குத் தாய்போல் இருக்கிறாயா?” – கிழவன் சற்று அதட்டலாகவே கேட்டான். 

செல்லாயி திரும்பிப் பார்த்தாள். அருகே பரட்டைத் தலையுடன் குழந்தை ஒன்று உட்கார்ந்திருந்தது. அவள் தலைமட்டும் என்ன? அதுவும் சிக்குப் பிடித்து பேன் பிடித்து விகாரமாகத்தான் இருந்தது. 

“இந்தக் குழந்தையைத் தூக்கிக்கணும். ‘சாமி… தர்மவான்களே! பச்சைக் குழந்தை. பாலுக்காகவாவது எதனாச்சும் போடுங்கய்யா!’ என்று கேட்கணும்” என்று சொல்லிக் கொடுத்தான் கிழவன். 

செல்லாயி பார்த்தாள். அவள் செல்வனும் இருந்தால் இந்த நிலைமைதானோ? இதே வார்த்தையைக் கூறித்தான் பிச்சை எடுக்க வேண்டுமோ? இதை என்னும்போது அவளுக்குத்துக்கம் தொண்டையை அடைத்தது. விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். 

கிழவன் விசித்திரமான செல்லாயியைப் பார்த்து மனசுக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். ‘இது எங்கே இந்தத் தொழிலில் நீடித்திருக்கப் போகிறது?’ என்று அவன் ஒருவேளை முணுமுணுத்துக் கொண்டானோ எனவோ? 

செல்லாயி குழய இடுப்பில் சுமந்து கொண்டு அந்த ஹோட்டல் வாசலுக்கு வந்து சேர்ந்தாள். தனக்கு முன்னமேயே அங்கு ஒருத்தி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் முதலில் அவள் தயங்கினாலும், ‘இது என்ன பிச்சை எடுப்பதுதானே? யார் எடுத்தாலென்ன? இதில் போட்டி ஏது?’ என்றுதான் எண்ணினாள். ஆனால், கருப்பாயியின் சுடு வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தைத் தைத்தன. 

இந்த நினைவுகளோடு திண்ணையில் படுத்திருந்தவள் அப்படியோ தூங்கி விட்டாள். அருகே இருந்த குழந்தை – வாடகைக் குழந்தை – அழ ஆரம்பித்தபோதுதான் திடுக்கிட்டு விழித்தாள். மாலை ஆறு மணியாகிவிட்டது. அவள் தொழில் மும்முரமாக நடக்கும் நேரம். அன்று காலையிலிருந்து காலணா வருமானமில்லை. பசியோ காதை அடைத்தது. 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு தள்ளாடியவாறு ஹோட்டல் வாசலை நோக்கி நடந்தாள். 

“சாமி… தர்மபிரபு! குழந்தைக்கேனும் பால் வாங்கிக் கொடுக்கிறேன். ஓர் அரையணா கொடுங்க. தர்மப் பிரபோ…’ அவள் குரலில் சோகம் பளிச்சிட்டது. இப்பொழுது உண்மையைத்தான் சொன்னாள். 

அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் அழுகைக் குரல் செல்லாயியின் உள்ளத்தில் வேதனையைத் தூண்டிவிட்டது. 

கருப்பாயியிக்கோ ‘நல்லா வந்தாள் இவள்… குழந்தையையும் எடுத்துக் கொண்டு! நல்ல வேஷம் போடுகிறாள்!” என்று தோன்றியது. 

சிவக்கச் சிவக்க வெற்றிலையைத் திணித்துக் குதப்பிக் கொண்டு ‘ஹோஹோ’ என்று பேசிக் கொண்டே ஹோட்டலிலிருந்து இறங்கினது ஒரு கோஷ்டி. 

“சாமி… ஏதாச்சும் தர்மம் போடுங்க சாமி!” 

“ஐயா புண்ணியவான்களே! காலணாப் போடுங்க ஐயா!” 

“சாமி… இந்தக் குழந்தை முகம் பார்த்துத் தர்மம் போடுங்க சாமி!” இரண்டு பேரும் சேர்ந்து அந்தக் கோஷ்டியைத் துளைத்து விட்டார்கள். 

அந்தக் கோஷ்டியில் சில்க் சொக்காய் போட்டிருந்த ஒருவன் தன் பிளாஸ்டிக்பர்ஸைத்திறந்து ஓர் அரையாணாவை எடுத்துச்செல்லாயியின் குவளையில் ‘டங்’ என்று போட்டுவிட்டு, ‘இரண்டு பேரும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிப் போனான். 

செல்லாயி குவளையைப் பார்த்தாள். அரையணா நாணயம். அருகே இருந்த வெற்றிலை, பாக்குக் கடைக்கு ஓடிப் போய் இரண்டு காலணாவாக மாற்றிக் கொண்டு வந்து கருப்பாயியிடம் ஒரு காலணா நீட்டினாள். 

கருப்பாயியிக்கு மகா ஆத்திரம் வந்தது. இந்தப் பிச்சைக்காரச் சவத்திடமிருந்தா நான் வாங்கிக் கொள்ள வேணும் என்று கோபம் கோபமாக வந்தது. செல்லாயி காலணாவை நீட்டியவுடன் கருப்பாயி நாய் போல் ‘வள்’ளென்று விழுந்தாள். 

“ஏண்டி பொய் சொல்கிறாய்? அந்த ஆள் கட்டை இரண்டணா அல்லவா போட்டார்! காலணாவை நீட்டுகிறாயே… அதற்குள்ளே என்னை ஏய்க்கப் பார்க்கிறாயே!” 

செல்லாயி திடுக்கிட்டாள். “அவர் அரையணாத்தான் போட்டார். காலணாவை இதோ வைத்திருக்கிறேன். இதோ அந்தக் காலணா குவளையிலே இருக்கிறது பாரு!” என்றாள் செல்லாயி. அபாண்டத் தால் அவளுடைய உள்ளம் சிலிர்த்தது. 

“ஆமாம்… உன்கிட்டே கொடுத்ததைத் திருடிகிட்டே… பெரிய திருடியாச்சே நீ!” என்று கருப்பாயி வசையம்பு தொடுத்து விட்டாள். 

செல்லாயியினால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவளும் பதிலுக்குப் பேசினாள். 

இவள் பேச, அவள் பேச கடைசியில் சண்டை வலுத்தது. 

கருப்பாயி ஆத்திரத்தாலும் அன்று முழுவதும் ஒன்றும் கிடைக்காத ஏமாற்றத்தாலும் அவள் மீது பாய்ந்தாள். 

செல்லாயியிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இருவரும் அடித்துக் கொண்டனர். கூச்சல் அதிகமாகவே, ஹோட்டலிலிருந்து வேலைக்காரன் ஒரு செம்புத் தண்ணீரைக் கொண்டு வந்து அவர்கள் மீது கொட்டி அதட்டினான். பின்னர்தான் அந்த யுத்தம் நின்றது. 

செல்லாயியின் கந்தல் ஆடை இன்னும் சர்வ கந்தலாகி விட்டது. இரவல் குழந்தையின் அழுகை அதிகமாயிருந்தது. கையிலுள்ள தகரம் ஒரு மூலையில் நசுங்கிக் கிடந்தது. 

அதிலே இருந்த இரண்டு காலணாக்களும் தெருவில் ஓரத்தில் சாக்கடையில் கிடந்தன. 

செல்லாயியின் உள்ளம் உடைந்துவிட்டது. முகத்திலும் கையிலும் கீறப்பட்டுள்ள இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அவள் தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். 

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்கணவன்சீக்கிரம் வருகிறேன் என்று போய் இரண்டு, மூன்று மாசம் ஆகியிருக்கலாம். ஐயோ… அவர் ஏன் வரவில்லை? மறந்தே போய்விட்டாரா? அவள் மனம் இதை நினைக்கும்போது துடியாகத் துடித்தது. 

வழி நெடுக யோசனையில் ஆழ்ந்தவாறு நடந்து கொண்டிருந்த அவள், குழந்தையை கிழவனிடம் கொடுத்துவிட்டு நடந்தாவது ஊரைப் பார்க்கப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டாள். 

இனி, இந்த பாழும் பட்டணத்தில் இருந்து என்ன பயன்? 

இருப்பிடத்தை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டிருந்தது. பிச்சைக்காரக் கோஷ்டியும், மற்றும் பலரும் அங்கு நிறைந்திருந்தனர். குழந்தையைக் கிழவன் அருகில் உட்கார வைத்து விட்டு செல்லாயி ‘ஓ’வென்று அழுதுவிட்டாள். 

“தாத்தா! எனக்கு இந்தப் பொழைப்பு வேண்டாம். நான் ஊரைப் பார்க்கப் போகிறேன்!” என்று கதறினாள். 

ஆனால், கிழவன் செல்லாயியின் பேச்சைக் கேட்டு பச்சாதாபப் படுவது போகக் குலுங்க குலுங்கச் சிரித்தான். 

“ஏ புள்ளே! இனி ஏங்கிட்ட ஒண்ணும் சொல்லாதே. அதோ அவன் கிட்டே சொல்லிக்கோ” என்று கூறினான். 

இது வேறு வம்பா என்று எண்ணித் திரும்பிப் பார்த்த அவள் ஒரு கணம் திடுக்கிட்டாள். திகைத்தாள். தலையே சுற்றிவிடும் போன்ற உணர்ச்சி! ஏதோ பெரிய வேதனைப் பாரம் இறங்கிவிட்டது போன்ற நிலை! 

சடையப்பன் – செல்லாயியின் கணவன் கிழவன் பின்புறம் உட்கார்ந்திருந்தான். 


செல்லாயியிடம் சொல்லிவிட்டுக் கிராமத்தை நோக்கிப் போன சடையப்பனுக்கு அங்கே ஒரு பெரிய ஆபத்து காத்திருந்தது. அவன் தனக்குத் தெரிந்த ஒருவனது குடிசையில் தங்கியிருக்கையில், அவனது சிநேகிதனை அவனுடைய விரோதிகள் சிலர் பழைய விரோதத்தால் தாக்க வந்தனர். 

சடையப்பனும் அவன் நண்பனுமாகச் சேர்ந்து எதிர்த்தவர்களைச் சமாளிக்கும்படி ஏற்பட்டது. அந்தச் சண்டையின் போது எதிர்க்கட்சியாளரில் ஒருவனுக்குப் பலத்த அடி விழவே, அவர்கள் மறுநாள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டனர். 

சடையப்பன்தான் எதிர்க்கட்சியில் ஒருவனைப் பலமாக அடித்தான் என்பது எதிர்க்கட்சியாரின் புகார். சடையப்பன் ஒரு பாவமும் அறியாதவன். இளகிய மனத்தினன். 

இப்படி நேரும் என்று அவன் நினைக்கவே இல்லை. பட்டணத்தில் மனைவியின் கதி என்னவோ என்று நினைக்கும்போது அவனுக்கு அழுகையே வந்து விட்டது. நல்லவேளையாக ஒன்று மோசமாக நேரவில்லை. 

மூன்று மாத காலம் வழக்கு நடந்தது. கடைசியில் சடையப்பன் மீது குற்றமில்லை என்று முடிவாகிவிட்டது. சடையப்பனின் நல்ல காலம் அவன் விடுதலையடைந்தான். 


விடுதலையடைந்தவுடன், நண்பனிடம் கூறிவிட்டுச் சடையப்பன் பட்டணத்துக்கு ஓடோடி வந்தான். செல்லாயியைக் காணவில்லை. எப்படியோ விசாரித்துக் கொண்டு பிச்சைக்காரர்களின் வாத்தியாரான கிழவனிடம் வந்து சேர்ந்தான். 

செல்லாயி கோவென்று கதறி அவன் கால்களைக் கட்டிக் கொண்டாள். அதைக் கண்ட வாடகைக் குழந்தையும் தன் அழுகையை நிறுத்தி விட்டது. 

செல்லாயி அரையணாவால் ஏற்பட்ட வினையை விம்மி விம்மிச் சொல்லும்போது சடையப்பனுக்கு வருத்தம் உண்டாகவில்லை. நளனுக்கும், தமயந்திக்கும் நேர்ந்ததை விடவா இது பெரிய கஷ்டம் என்று சடையப்பன் நினைத்துக் கொண்டான் போலும்! 

“செல்லி, வா! அந்தக் கருப்பாயியைப் போய்ப் பார்ப்போம்” என்று கூப்பிட்டான். 

“வேண்டாம்… எல்லாம் இல்லாத கொடுமைதான் அவளுக்கு ஆத்திரம் உண்டாகக் காரணம்” என்றாள் செல்லாயி. 

“இல்லை, செல்லி! வா, அப்படியே ஊருக்குப் போகணும்…” என்று அவன் சொல்லவே, செல்லாயி சம்மதித்தாள். 

அதே ஹோட்டல் வாசலில் கருப்பாயி உட்கார்ந்திருந்தாள். 

செல்லாயி யாரோ ஓர் ஆண்பிள்ளையை அழைத்துக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் கருப்பாயி பயந்தாலும் தைரியமாக “வந்துட்டியா… எந்த ஆள் என்னை என்ன செய்வாள்?” என்று கேட்டவாறு எழுந்து நின்றாள். 

‘பயப்படாதே! இந்தா எடுத்துக் கொள்! உனக்கு வேண்டியது அரையணாத்தானே? இந்தா ஓரணாவாக எடுத்துக் கொள்” என்று கூறி அவளுடைய தகரக் குவளையில் இரண்டு அரையணாக்களைப் போட்டான் சடையப்பன். 

செல்லாயியிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. 

சடையப்பனும், செல்லாயியும் திரும்பவும் ஊருக்குப் போவதற்காக ரயில்வேஸ்டேஷனை அடைந்தபொழுது, அந்த வாடகைக்குழந்தையின் அழுகையும், அரையணாச் சம்பவமும் செல்லாயியின் நினைவை விட்டுச் சிறிதும் அகலவே இல்லை. 

– 1951

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *