அரசியல் பிரியாணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 14,063 
 
 

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி (வாக்குறுதிகள்) – 5 கிலோ: நைச்சியமானது, சுவை மிக்கது, தேர்தலின்போது மட்டும் காணப்படுவது.
  • மாட்டுக் கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி) – 3 கிலோ: ஜாதிய அடையாளமாக முன்னெடுக்கப்படும் புரட்சிகர இறைச்சி.
  • ஆட்டுக்கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) – 1 கிலோ: மாட்டுக்கறியுடன் கலப்படம் செய்யப்படுவது.
  • வெங்காயம் (பொது மக்கள்) – 1/4 கிலோ: பல உள்ளடுக்குகள் கொண்டது, உரித்துக்கொண்டே இருந்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவது, கண்ணீர் வரவழைக்கக் கூடியது.
  • தக்காளி (கட்சித் தொண்டர்கள்) – 1/2 கிலோ: கொழ கொழவென்று எந்த அழுக்கையும் தாங்கிக் கொள்ளும் குணம் கொண்டது. எளிதில் நசுக்கிப் பிழியலாம்.
  • பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) – 10 எண்ணிக்கை: காரம் ஏற்றக் கூடியது. தேர்தலுக்குத் தேர்தல் இதன் வீரியம் மாறும்.
  • இஞ்சி, பூண்டு விழுது (ஊழல்) – 200 கிராம்: அரசியல் பிரியாணியின் மூலதனம்.
  • பிரியாணி மசாலா (கட்சிக் கொள்கைகள்) – 100 கிராம்: அரசியல் பிரியாணியின் உயிர்நாடி. சிறுபான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும், பெரும்பான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும் பயன்படுத்தப்படுவது.
  • பட்டை, கிராம்பு (இன – மத – ஜாதிய வாதம்) – 50 கிராம்: சிறிது எனினும் காரம் மிக்கது. மெலிதான வாசனையும், வன் உணர்ச்சியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டது.
  • எண்ணெய் (பதவி) – 40 மில்லி: அரசியல்வாதிகளின் சகல கொழுப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது.
  • நெய் (மாய்மாலப் பேச்சுகள்) – 80 கிராம்: நெஞ்சை உருக்கும் விதமான உறவு ரீதி அழைப்பு, பேச்சுகள் மூலம் மக்களை மயக்குவதும் மந்த புத்தி ஆக்குவதும்.
  • கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) – தலா 1 கட்டு: நாற்றத்தை மறைக்கப் பயன்படும் வாசனைப் பொருட்கள்.
  • உப்பு (கூட்டணிக் கட்சிகள்) – தேவையான அளவு: இது இருந்தால்தான் பிரியாணி மட்டுமன்றி எந்த அரசியல் சமையலும் ருசிக்கும்.

செய்முறை:

  1. முதலில் வெங்காயத்தை (பொது மக்கள்) வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவ்வப்போது நெய் (மாய்மாலப் பேச்சுகள்) சேர்க்கவும்.
  2. பிறகு இஞ்சி – பூண்டு விழுதை (ஊழல்) கொட்டி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். ஊழல் நாற்றம் வெளியில் தெரியாத அளவுக்கு மசாலா சேர்த்துக் கிளறவும்.
  3. தக்காளி (கட்சித் தொண்டர்கள்), பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) சேர்த்து வதக்கவும். தக்காளி மசிவது நாக்கில் எச்சில் ஊற வைக்கவும், மிளகாயின் கார நெடி மூக்கைத் துளைக்கவும் வேண்டும்.
  4. பின்பு மாட்டுக்கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி), ஆட்டுக் கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) ஆகியவற்றைக் கொட்டிக் கலந்து வேகவைக்கவும்.
  5. அரிசியை (வாக்குறுதிகள்) தனியாக வேக வைத்து எடுக்கவும். வதக்கிய மசாலாவில் அதை இட்டு, தேவையான அளவு உப்பு (கூட்டணிக் கட்சிகள்) சேர்த்து நன்றாகக் கிண்டவும்.
  6. குறைந்த தீயில் வைத்து தம் போடவும். மேலே கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) தூவி அலங்கரிக்கவும்.

சுவையான அரசியல் பிரியாணி தயார்.

உண்பதற்கு முன் விருந்தாளிகளுக்கு மட்ட ரக குவாட்டரை (ஆபாசப் பேச்சாளர் – பேச்சாளினிகளின் சாக்கடைப் பேச்சுகள்) குடிக்கக் கொடுக்கவும்.

இந்த பிரியாணியை சாப்பிட்டு மயங்குபவர்கள் போடும் ஓட்டில், ஆட்டு மந்தை முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கும்.

– நடுகல் இணைய இதழ், மே 2025.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *