அம்மாவின் பிறந்த நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 7,844 
 
 

பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் மார்கழிமாதம் 31ம் திகதி இரவு.

மார்கழி மாதத்தின் கடைசி நாள். நாளைக்கு புத்தாண்டு பிறப்பதால் லண்டன் மாநகர் மிகவும் கல கலப்பாக இருக்கிறது. வெளியில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. குளிரால்; உடம்பு சிலிர்க்கிறது. ஆனாலும் இன்று லண்டன் தெருக்கள் திமு திமு என்றிருக்கும்; பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு பக்கத்தில் பாய்ந்தோடும் தேம்ஸ்நதியில் பிரமாண்டமான படகுகளில் நடத்தப் படும் வாணவேடிக்கையுடன் பல்லாயிரம் மக்கள் நாளைய புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்பார்கள்.

சாந்தி–அகிலன் தம்பதி;கள் தங்கள்; மூத்தமகன் மாது இளைய மகன் கண்ணனுடனும் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் செல்ல நாயான விஷ்ணு சாப்பாட்டு மேசைக்கு அருகில் நிம்மதியாப் படுத்திருக்கிறது. மகன்கள் வீட்டிலிருக்கும்போது அவர்களை விட்டு ஒரு நிமிடமும் பிரியாத அவர்களின் அன்பு நாய் விஷ்ணு.

புத்தாண்டு விழாவைக் கொண்டாட அவர்கள் இருவரும் தங்கள் சினேகிதர்களுடன் வெளியில் செல்வதாச் சொல்லியிருந்தார்கள்.

‘’மாலை உணவு நல்லா இருந்தது. நன்றியம்மா’ என்று இருவரும் சொன்னார்கள்.

‘நாளைக்குப் புத்தாண்டு காலையுணவாக விசேடமாக என்ன செய்யப் போகிறீர்கள் அம்மா?’ இளைய மகன் கண்ணன் மலர்ந்த முகத்துடன் அம்மாவைக் கேட்டான்.

நாளைக்குப் புத்தாண்டின் புதிய வரவு மட்டுமல்ல சாந்தியின் பிந்ததினமுமாகும்.

‘உங்களுக்கு என்ன விருப்பமோ அதை நான் செய்யப் போகிறேன்’ என்று சொன்னாள் தாய். அவர்களுக்கு என்ன விருப்பம் என்று ஒரு தாய்க்குத் தெரியாவிட்டால் யாருக்கு தெரியும்?

மகன்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன்,

‘அம்மா, நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்ததாக இருந்தோம். ஆனால் எங்களுக்கு முன் நீங்கள் எழும்பி விடுவீர்கள் என்பதால்-‘ மாது சொல்ல வந்தததை முடிக்க முதல் சாந்தி கேட்டாள்

‘அய்யய்யோ என்ன பண்ண போறீங்க’

‘நாங்கள் உங்களுக்குக் காலையுணவு செய்து அதை உங்கள் கட்டிலுக்கு கொண்டு வந்து தரப்போகிறோம்.’ என்றார்கள். அதாவது பிரித்தானியாவில். அன்புள்ள தாய் தகப்பனுக்கு சில குழந்தைகள். ‘பிரேக்ஃபாஸ்ட் இன் பெட்’ என்று காலைச் சாப்பாட்டைப் பெற்றோரின் படுக்கையறைக்குக் கொண்டு சென்று கொடுப்பது அவர்களின் அன்பைக் காட்டுவதின் அடையாளமாகும்

அது மாதிரித்தான் கணவன் மனைவிக்கு காலை உணவு தயாரித்துக் கட்டிலுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதுமாகும்.அகிலனும்; சாந்தியும் வவ;வேறு நேரங்களில் வேலைக்குச் செல்பவர்கள்.அவள் அதிகாலையில் எழுந்து தனது குடும்பத்திற்கான காலையுணவைத் தயாhரிப்பாள். அதற்குக் கைமாறாக அவளுடைய அன்புக் கணவன் சாந்தி; ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழும்பித் தனக்கும் குழந்தைகளுக்கும் விருப்பமான காலையுணவுசெய்வதற்கு நன்றியாக வார விடுமுறைகளில் தன் மனைவிக்கு ‘பிரேக்ஃபாஸ்ட் இன் பெட்’’. செய்து கொடுப்பார்.

சாந்திக்கு அவளின் மகன்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமாவிருந்து. ஏனென்றால் அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது.அதே நேரம் அவர்கள் சொன்ன விடயம் மிகவும் மகிழ்ச்சியாகவிருந்தது.

சாந்தி மட்டுமல்ல தகப்பன் அகிலனும் ஆச்சரியப் பட்டார் ஏனென்றால் பெரும்பாலான இளம் தலைமுறையினர் புத்தாண்டுக்கு முதல்நாள் நடக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் போய் வந்து மத்தியானம்வரைக்கும் தூங்குவார்கள்.

இன்று மாதுவும் கண்ணனும் பாராளுமன்றதிற்கு அருகில் இரவு ஆரம்பமாகும்; புத்தாண்டுப் பெருவிழாவுக்குச் செல்வதாகப் பெற்றோருக்குச் சொல்லியிருக்கிறார்கள் பாராளுமன்றத்தின் பிரமாண்டமான மணிக் கூட்டில் நடு இரவு பன்னிரண்டு மணி அடித்ததும் புத்தாண்டுத் திருவிழாவை அங்கு ஆரவாரித்து மகிழ்வார்கள். அதன் பின் பிரித்தானியாவின் மத்திய புள்ளியான ட்ராவல்கர் சதுரத்திற்கு வந்து சிலமணித்தியாலங்கள் புத்தாண்டு விழாவைக் கொண்டாடுவார்கள். அந்த இடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரும் பிரளயம் மாதிரியிருக்கும்.அந்த நெருக்கடியில் அவதிப் பட்டு; வீடு வந்து சேர எவ்வளவு நேரம் எடுக்குமென்று தெரியாது.

தனது மகன்மார் அப்படி நேரம் கழித்து வீடு வந்து அம்மாவின் பிறந்த தினத்தை வரவேற்க விசேட காலை உணவு சமைக்கப் போகிறார்களா?

தாயும் தகப்பனும் தங்கள் குழந்தைகளை பாசத்துடன் பாத்தார்கள். மகன்கள் சொன்னார்கள்.

‘அம்மா நாளைக்கு புது வருடம் மட்டும் இல்ல உங்க கூட பிறந்த நாளும் வருகிறது. நாங்களிருவரும் உங்களுக்கு,’பிரேக்ஃபாஸ்ட் இன் பெட்’ செய்யப்போகிறோம் புத்தாண்டு விழாவை இரவு ஒரு மணிவரை பார்த்து விட்டு பாதாள ட்ரெயின் எடுத்து விரைவில் வீட்டுக்கு வருவோம்’

சாந்தி தன் கணவரைத் திரும்பிப் பார்த்து ‘இது உங்களோட ஐடியாவா நீங்கள் காலையுணவு செய்வதில் விரும்பம் உள்ளவர். நாளைக்கு என் மகன்;கள் செய்யப் போகிறார்களாம். அவர்கள் வெளியே போய்விட்டு வந்து தூங்க வேண்டாமா’என்று கேட்டாள்.

‘அய்யய்யோ நான் அவர்களுக்குச் சொல்ல இல்ல சாந்தி. நாளைக்கு உன்னுடைய பிறந்த நாள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘அப்பா நீங்கள் அடிக்கடி வாரவிடுமுறைகளில் அம்மாக்குக் காலையுணவு செய்து கொடுக்கறீர்கள். அதுனால நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு அம்மாவின் பிறந்த தினத்தைக் கொண்டாட அம்மாக்குக் காலை உணவு செய்ய போகிறோம்’ என்றார்கள்.

பெற்றோர்களுக்குச் சந்தோசமா இருந்தது. ‘எங்கள் செல்லங்கள் நாளைக்கு அவர்களின் அம்மாவின் பிறந்த தினத்தைக் காலையுணவுடன் கொண்டாடத் தொடங்கப் போகிறார்கள்’ என்று. அப்பா சொன்னார். புத்திரர்கள் மகிழ்வுடன் தாயைப் பார்த்தனர்.;

‘அது சரி நீங்கள் சமைக்க எவ்வளவு நேரம் எடுக்கும். அம்மாவோட சேர்ந்து நானும் சாப்பிட வேண்டும். லேட்டாகிப் போனல் எனக்குப் பசி தாங்காது’ என்று அப்பா வேடிக்கையாகச் சொன்னார்.

அவர்களின் பெரிய மகனுக்கு பதினெட்டு வயது. அவன். மூன்று மாதங்களுக்கு முதல்தான் பல்கலைக்கழகப் படிப்பை ஆரம்பித்தான். இரண்டாவது மகன் கண்ணனுக்குப் பதினைந்து வயது.

இருவரும் வெளியே செல்ல ஆயத்தமானார்கள்..’சீக்கிரமா வந்து விடுவோம்’ என்றார்கள். ‘இன்றைக்கு ட்ரெய்ன் எல்லாம் மிகவும் நெருக்கடியாக இருக்கும். லண்டன் முழுக்க பெரிய பாட்டிகள் நடக்கும். அதனால ஆயிரக்கணக்கானவர்கள் லண்டன் முழுக்க நிறைந்தருப்பார்கள். ஆனாலும் சீக்கிரமா வருவோம்’ என்று சொன்னான் பெரியமகன். அவர்களின் அன்பு நாய் விஷ்ணு கதவடிவரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தது.

‘இன்றைக்கு தாறுமாறாகக் குடித்துவிட்டு கூத்தாடும் மக்கள்தான் லண்டன் முழுக்க இருப்பாங்க. நீங்க கவனமா வந்து சேருங்கப்பா’ என்று மகன்களுக்கு அன்புடன் சொன்னாள் தாய்.

அவர்களிருவரும் இரவு எட்டுமணி அளவில் வீட்டைவிட்டு வெளிய போன பிறகு அகிலன் தனது மகன்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் தனது மனைவி சாந்தியை அன்புடன் பார்த்துக் கொண்டு சொன்னார்.

‘சாந்தி இது இலங்கையல்ல. அங்கு போர் நடந்தபோது நாங்கள் இவர்களின் வயதிற்தான் இருந்தோம். பகலிலும் வெளியே போக எவ்வளவு பயத்துடன் துடித்திருப்போம். ஓரு பக்கம் இனவாத சிங்கள் இராணுவம் அடுத்த பக்கம் தமிழ் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு போய்ப் போர்க் களத்தில் பலிகொடுக்கும் கொலை வெறி பிடித்த நாய்களாகப் பல தமிழ்க் குழுக்கள் என்று எத்தனை துன்பப் பட்டோம். இன்று எங்கள் மகன்களுக்கு லண்டனில் இரவில் போகப் பயமில்லை. அத்துடன் இன்று பல பாதுகாப்புகள் இருக்கும்’ என்றார்.

‘பழைய கதைகளைப் பேசக் கூடாது என்று எத்தனை தடவை சொன்னேன்’ சாந்தி பட படப்பாகச் சொன்னாள். அவள் இலங்கையில் நடந்த போரில் இரு சகோதரர்களை யிழந்தவள்.

அகிலன் தனது மனைவியை ஆறுதல் படுத்தி விட்டுத் தங்கள் பிள்ளைகள் நாளைக்குக் என்ன சமைக்க போகிறார்கள் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் பல்கலைக்கழகம் போகும் முதலாவது மகன் தன்னுடைய சினேகிதர்களுடன் சேர்ந்து சமைக்க பழகுவதாக சொல்லியிருக்கிறான்.

இரண்டாவது மகன் அம்மாக்கு சில வேலைகளில் உதவி செய்வதால். அவனுக்கும் சமையல் செய்ய விருப்பம் ஆனாலும் என்ன சமையல் செய்யப் போகிறார்களோ தெரியாது.

‘அருமையாக பட்டர் போட்டு ரெண்டு டோஸ்ட் வரும். அதோட உனக்கு பிடித்த பெரிய கிளாஸில தேனீர் வரும். நான் நினைக்கிறேன் உனக்குப் பிறந்த நாள் என்ற படியால் உனக்கு விருப்பமான டார்க் சாக்கலட்டும் கரட்  கேக்கும் கட்டாயம் வாங்கி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்று அகிலன் கிண்டலாகச் சொன்னார்.

அதன்பின் அவர்கள் இருவரும் டெலிவிஷனில் உலகில்; பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் புத்தாண்டு விழாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நியுஷீலண்ட் தீவில் ஆரம்பித்து, அவுஸ்திரேலியா ஹொங்காங் இந்தியா அராபிய நகரங்கள் என்ற பல இடங்களில் நடந்த புது வருடக் கோலாகலங்கள் பி.பி.சியில் காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. கடைசியாக லண்டனின் பிரமாண்டமான புத்தாண்டு விழா காட்டப்பட்டது.

இன்று அக்கப் பக்கமெல்லாம் பெரிய ஆரவாரமாக இருக்கும் நித்திரை கொள்வது கஷ்டமா இருக்கும். அவர்களின் அல்ஷேசன் நாய் விஷ்ணுவுக்கும் பட்டாசு வெடிச் சத்தம் பிடிக்காது. இவர்களின் வீட்டையண்டி இருப்பவர்கள் எல்லாரும். ஆங்கிலேயர்கள் அவர்கள் பட்டாசு வெடித்துத் தடபுடலாக புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

அகிலன்-சாந்தி தம்பதிகளின் காலடியில் விஷ்ணு படுத்திருந்தது. தம்பதிகள் தங்கள் மகன்களின் பெயர்சொல்லிப் பேசிக் கொண்டிருக்கும்போது தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தது. ’’விஷ்ணு. அவர்களுக்காக விழித்திராமல் நீ போய் நித்திரை கொள்’’ என்று அகிலன் தங்களின் அன்பான நாயைத் தடவி விட்டார்.

இன்று லண்டன் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து சாதி மத பேதமின்றி ஒருத்தருக்கொருத்தர் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி. மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு காலத்தில் சாந்தியும் கணவரும் அந்த ஒரு காலத்தில் இடங்களுக்கெல்லாம் போய் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு அதெல்லாம் அவர்கள் செய்யவில்லை இன்று குழந்தைகள் அதே அதேமாதிரிக் கொண்டாட்டங்களுக்கு இப்போது செல்கிறார்கள்.

அவர்களின் மகன்கள் சரியாகப் பன்னிரண்டு மணிக்குப் போன் பண்ணி ‘அம்மா ஹேப்பி பர்த்டே. உங்கள் இருவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள். ட்ரெய்ன்ல இப்ப ஏறமுடியாத அளவுக்கு மக்கள் தொகை கடல் மாதிரியிருக்கிறது.எல்லாரும் பெரிய க்யூல நிக்கறாங்க. அதனால நாங்க வர்றது லேட் ஆகும்’’. என்றார்கள்.

‘அய்யோ என்னுடைய செல்லங்களே சரியான பனி அடிக்குது வெளியில பனியில் நடக்கும்போது கவனமாக வாங்கோ’ என்றாள் தாய்.

மகன்கள்; சிரித்துவிட்டு ‘ஓகே அம்மா நாங்கள் ஒன்றும் குடிக்கவில்லை. பனியில் தள்ளாடி விழமாட்டோம்’ என்று சொல்லிவிட்டு டெலிபோனை வைத்தார்கள்.

‘வெள்ளைக்காரப் பையன்கள் காதலிகள் வைத்திருக்கிற வயதில நீ என்ன எங்கட பையன்களைச் சின்னப் பிள்ளைகள் மாதிரி நினைக்கிறாய்’ என்று அகிலன் வேடிக்கையாகச் சொன்னார்.

’படிப்பு முடியும்வரைக்கும் கேர்ள் பிரண்ட் வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்’ என்றாள் சாந்தி.

‘ஓ காதலுக்கு வயது வரம்பு போட்டு விட்டாயா நான் உன்னைச் சுத்தும்பொழுது எனக்கு யூனிவர்சிட்டிக்குப் போற வயதில்ல. அதை மறந்து விட்டாய்போல’ என்று சிரித்தார் அகிலன்.

தம்பதிகள் அதிகாலை ஒரு மணியளவுக்குப் படுக்கைக்குச் சென்றார்கள்.

‘அதிகம் யோசிக்காதே சாந்தி இருவரும் பத்திரமாக வந்து சேர்வார்கள்’ என்று கணவர் சொன்னது அவளின் பயத்தைக் குறைக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அவர் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்மார் எப்போது வருவார்கள் என்ற தவிப்பு அவளின் நித்திரையைக் கலைத்து விட்டது. இரவு இரண்டு மணியைத் தாண்டியநேரம் சாடையாக நித்திரை வந்ததால் சாந்தி தூங்கிவிட்டாள்.

ஏதோ சத்தம் கேட்டு சாந்தி திடுக்கிட்டு எழுந்தாள். அவர்கள் வீட்டு நாய் விஷ்ணு கீழே ஆரவாரமாக குரைப்பது விட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் ஒரு சிறிய நாயின் முனகல் குரலும் கேட்டது. என்ன நடக்கிறது?

அவள் சட்டென்று கீழே வந்தாள். பெரிய மகன் மாது ஒரு அழகிய சிறிய நாயை அணைத்தபடி நின்றிருந்தான்.

‘அம்மா உங்கள் பிறந்த தினத்தன்று உங்களின் நித்திரையைக் குழப்பியதற்கு எங்களை மன்னியுங்கள்’ என்றான் மாது.

‘இந்த நாயின் சொந்தக்காரரைக் கண்டுபிப்பதற்கு நாங்கள் உடனடியாக எதையும் செய்ய வேண்டும்’ என்றான் சின்ன மகன் கண்ணன். சாந்திக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்? அப்போ ஒரு பெரிய மகன் மாது சொன்னான் ‘அம்மா நாங்கள் ஸ்டேசனில இருந்து வீட்டுக்கு வர்ற வழியில இந்த நாய்க்குட்டி தனியாகப் பனியில் நனைந்து நடுங்கி முனகிக் கொண்டிருந்தது. அண்டியுள்ள உள்ள தெருக்களில் பல வீடுகளில்; பெரிய ஆடல் பால்கள் நடக்கின்றன. இந்த சின்ன நாய்க்குட்டி யாரோ வீட்டிலிருந்து வெளியில் வந்து இப்படி தெருவில் அலைந்து எங்களைக் கண்டதும் எங்களுக்குப் பின்னால் ஓடி வந்தது. எங்களுக்கு இந்த நாய் யார் வீட்டுச் செல்லப் பிராணி என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தேhம். நாங்க இரண்டு தெருக்கள் அலைந்து யாரும் தங்கள் நாய்க் குட்டியைத் தேடி வருகிறார்களா என்று பார்த்தோம். குட்டி நாய்க்குப் பனிப் படலத்தில் வந்த வழி மறந்து போயிருக்கலாம் பாவம் நாய்க்குட்டி சிணுங்கிக் கொண்டே எங்களைப் பரிதாபமாகப் பார்த்தது.தூக்கிக் கொண்டு வந்து விட்டோம்’ என்றான்.

அப்போது அப்பாவும் கீழே வந்தார்

‘இப்போது இந்த அழகிய சின்னக் குட்டி நாயைத் தேடி நாய்க் குட்டியின் சொந்தக்காரர்கள் எங்கெல்லாம் திரிவார்களோ’ அகிலனும் துக்கப் பட்டார். அவர்களின் வீட்டு நாய் விஷ்ணு துனது அனபுக்குரிய மாதுவின் அணைப்பிலிருக்கும் அழகிய வெள்ளை நாய்க் குட்டியைப் பார்த்துப் பொறாமையுடன் குலைத்தது.

‘உங்களுக்கு தெரியும்தானே ஆங்கிலேயருக்கு எதை தவற விட்டாலும் தங்கள் அருமையா நாய்க்குட்டி பூனைக்குட்டியைத் தவறவிடுவதில்லை. ஆனாலும் இந்த சின்ன நாய்க்குட்டி எனக்கு பின்னாலே வந்தது. நாங்கள் கவனமாகக் கொண்டு வநதிருக்கிறோம். இப்போது எப்படி இந்த நாயை இதன் சொந்தக்காரர்களிடம் சேர்ப்பது என்தான் பிரச்சினை’ என்றான் மாது..

என்ன இது? என்னை விட ஒரு சின்ன ஒரு நாய்க்குட்டியை இவர்கள் பெரிய விடயமாக அணைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எரிச்சலில் விஷ்ணு முறைத்துப் பார்த்துக் குலைத்தது.

அவர்களின் அல்ஷேஸிஸியன் நாய் விஷ்ணு எழும்பி நின்றால் ஆறடி இரண்டுங்குலம் உயரத்திலிருக்கும். மாதுவின்; அணைப்பிலிருக்;கும் அழகிய வெள்ளை நாய்குட்டி எழும்பி நின்றால் ஒரு அடி உயரத்திற்கும் வராது என்று தெரிந்தது.

அதனால் மாது சின்ன நாய்க் குட்டியை விஷணுவின் கோபத்திற்கு ஆளாகாமல் தன்னுடன் அணைத்துக்கொண்டிருந்தான். அந்த அழகிய வெள்ளை சின்ன நாய்க்குட்டி ஒன்று அல்லது ஒன்றரை வயதுக் குழந்தை அளவில் மாதுவின் அணைப்பில் தன்னைச் சுற்றி நிற்கும் மற்றவர்களைப் பார்த்து தவிப்பது தெரிந்தது.

அந்த வழி தவறிய நாய்க்குட்டியின் கண்களில் புதியவர்களை பார்த்ததில் ஒரு பயம் இருந்தது. ஆனால் மாது மிகவும் அன்பான தடவலுடன் தூக்கி வைத்துக் கொண்டு இருந்ததால் அந்த அணைப்பில் அது நிம்மதியா இருப்பது தெரிந்தது. விஷ்ணு நாய்க் குட்டியைக் கீழே விடாமல் வைத்திருக்கும் மாதுவைப் பார்த்து ‘இந்தக் குட்டி நாயுடன் என்ன பண்ணுகிறாய்’ என்று தோரணையில் தன்னுடைய முனகல் மூலம் அதிர்ப்தியை வெளிப் படுத்தியது.

அப்போதுவும். கண்ணன் சொன்னான். ‘அம்மா அப்பா தயவு செய்து நித்திரைக்குப் போங்கள். அம்மாவுக்கு நாங்கள் காலையணவு செய்ய முதல் இந்த நாய்க் குட்டியின் சொந்தக்காரரைக் கண்டு பிடிக்க ஏதும் செய்ய வேண்டும். நாங்கள் இந்த நேரத்தில். யாரையும் தேடிப் போக முடியாது. ஏனென்றால் பனி கொட்டுகிறது அத்தோட இந்த நாய் வந்தகால் அடையாளம் இருந்த இடமே இப்ப பனியால் மறைந்திருக்கும். அதனால் நாங்கள் இந்த நாயை படமெடுத்து போஸ்டர்ஸ் சில செய்து பக்கத்து தெரு மின்சார கம்பங்களில் ஒட்டிவிட்டு வருவோம்’ என்று சொன்னான்.

‘அது மிகவும் நல்ல திட்டம் கண்ணன்’ என்றான் மாது.

அவர்களின் அம்மா அப்பா இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர். யாருடைய நாய்க் குட்டிக்காகவோ நித்திரையின்றிப் பாடுபடும் தங்கள் மகன்களின் செயல் பெருமையாகவிருந்தது. அவர்களpன் மகன்கள் இருவரும் நாய் பூனை போன்ற மிருகங்களின் மிகவும் பாசம் உள்ளவர்கள். இந்த சின்ன நாய் தனியாகப் பனியில் அலைந்தது அவர்களை வருத்தி இருக்கும் என்று பெற்றோர்களுக்குப் புரிந்தது.

அவர்கள் இந்த நாயைத் துயர் படவிடாமல் தங்களுடன் கொண்டு வந்தது சரியான விடயம் என்று பெற்றோர்கள் சந்தோசப் பட்டார்கள்.

‘இந்த நாய்க் குட்டியைப் பார்த்தால் நீண்ட தூரம் போயிருக்க மாட்டாது என்று தெரிகிறது’ என்று அவர்களின் தந்தை சொன்னார்.

அதன் பிறகு அங்கு யாரும் நித்திரைக்குச் செல்லவில்லை.

மகன்கள் இருவரும் நாய்க் குட்டியைப் படமெடுத்து நாயைத் தொலைத்தவர்கள் வர வேண்டிய இடத்தின் விபரங்களையும் சேர்த்து போஸ்டர் செய்து அதை கொப்பி எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்கள். அப்போது நேரம் காலை ஐந்துமணி.

புதுவருடப் பிறப்பன்று நித்திரை கொள்ளாமல் அலையும் தனது மகன்களைப் பார்த்த அவர்களின் தாய் பரிதாப் பட்டாள்.

ஆனாலும் மாதுவைப்பற்றி அவன் தாய்க்கு தெரியும். தான் எடுத்த வேலையே தயங்காமல் செய்யவும் என்ன பிரச்சனை வந்தாலும், அதை சமாளிக்கவும் தெரிந்தவன். கண்ணன் சில விடயங்களை அலசிப் பார்ப்பதில் கெட்டிக்காரன். இப்போது இருவரும் நாயையும் தூக்கிக்கொண்டு போஸ்டர்களையும் எடுத்துக் கொண்டு அடுத்த தெருக்களுக்கு போய் மின் கம்பங்களிலும் அங்கிருந்த ஒன்றிரண்டு கடைகளின் ஜன்னல்களிலும் அதாவது அந்த வழியால் நடந்து வருபவர்கள் பார்க்கக்கூடிய இடங்களில் ஒட்டிவிட்டு வரும் போது காலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது.

அப்போது அவர்களின் அப்பா சொன்னார் ‘அம்மாவுக்குக் காலைச் சாப்பாடு செய்யத் தேவையில்லை. மிகவும் சோர்ந்து போயிருக்கிறீர்கள் கொஞ்சம் நித்திரைக்குச் செல்லுங்கள்’

‘அப்பா போஸ்டரைப் பார்த்த யாரும் வந்தால் நாங்கள்தானே அவர்களுடன் இந்த நாய்க் குட்டியை எங்கே கண்டோம் என்ற விபரங்களைச் சொல்ல வேண்டும். நாங்கள் இப்போதே அம்மாவுக்குக் காலைச் சாப்பாடு செய்யத் தொடங்குவோம். அதற்கிடையில் யாரும் வருவார்கள்’.

மாது சொல்லிக் கொண்டிருக்கும்போது யாரோ பட படவென்று தட்டினார்கள். விஷ்ணு பெரும் குரலில் குலைத்துக் கொண்டு முன்கதவுப் பக்கம் ஓடியது..

டெலி ஃபோன் பண்ணி விட்டு எங்கள் வீட்டுக்கு வரலாம் என்ற இவர்கள் போஸ்டரில் போட்டு விபரத்தையும் தாண்டிய அவசரம் கதவுத் தட்டலில் வெளிப் பட்டது.

அப்பா ஓடிவந்து கதவைத் திறந்தார். ஒரு அழகிய இளம்பெண் அழுது கொண்டு நின்றாள். அவளுக்குப் பின்னால் அவளின் பெற்றோர்கள் சோகமான முகத்துடன் நின்றிருந்தார்கள.;

அவள் கையில் இவர்கள் ஒட்டிய போஸ்டர் இருந்தது. அந்தப் பெண்ணின் கண்ணீர் பரிதாபமாக இருந்தது. ‘என்னுடைய றோஸி உயிருடன் இருக்கிறாள். என் அருமை நாய்க்குட்டி றோஸி தவறுதலாக எங்கள் வீட்டிலிருந்து வெளி வந்த பனியில் அகப்பட்டபோது எனது றோஸியைக் காப்பாற்றியதற்கு நன்றி’ என்று கண்ணீருடன் சொல்லிய அந்தப் பெண்ணிடம் மாதுவின் அணைப்பிலிருந்து நாய்க்குட்டி தாவியது.

தன்னுடைய சொந்தக்காரியைக் கண்டதும் றோஸி அவளை முத்துமிட்டு முனகியது.. புதிதாக வந்தவர்களைப் பார்த்து விஷ்ணு தனது அதிகாரத்தைக் காட்டும் விதத்தில் சிறிய விதத்தில் குலைத்தது. கண்ணனும் மாதுவும் நாயின் சொந்தக்காரரைக் கண்ட திருப்தியில் புன்னகை முகங்களுடன் நின்றார்கள். இவர்களின் பெற்றோருக்கும் மனிதர்கள் மட்டுமல்லாது மிருகங்களையம் அன்புடன் நடத்தும் தங்கள்; மகன்களில் பெருமையாகவிருந்தது.

‘என்னுடைய உயிரான அழகிய நாயை காப்பாற்றியதற்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி நன்றி நன்றி’ என்றாள் அந்தப் பெண்.

‘இந்த போஸ்டர் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருப்பீர்கள்? இந்த போஸ்டரை கண்டவுடனே எனக்கு இன்னும் அழுகை வந்தது. ஏனென்றால் இவ்வளவு கவனமாக என்னுடைய றோஸியைப் படம் எடுத்து அத்துடன் உங்களுடைய விபரங்களையும் போட்டு போஸ்டர் செய்து அத்துடன் எப்படி இந்த வீட்டுக்கு வருவது என்று வழி சொல்லி எவ்வளவு அழகாகச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு தூரம் மிருகங்களை விரும்புகிறீர்கள் என்ற புரிகிறது’ அவள் விம்மியழுதபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘நீ நிறைய பேசாமல் உன்னுடைய நாயை கொண்டு போ’ என்பது மாதிரி விஷ்ணு அவளைப் பார்த்து குலைத்தது. விஷ்ணுவின் குரல் கோபமாக அல்ல. சீக்கிரமா விஷயத்தை முடித்து விட்டுப் போவேன் என்ற மாதிரி இருந்தது.

அந்தப் பெண் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் தகப்பன் தனது நன்றி கலந்த சிரிப்புடன் தங்கள் நாயைக் காப்பாற்றிய குடும்பத்தைப் பார்த்தபடி சொன்னார். ‘எனது பெயர் ஹரிஸ் பேர்ட்டன். இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கிறோம். இது எனது மனைவி றேச்சல்.அழுது கொண்டிருப்பவள் எனது மகள் ஜெனி. இவள் இந்த நாயில் உயிரையே வைத்திருக்கிறாள்’ அவர் உருக்கமாகச் சொன்னார்.

அகிலன் தனது குடும்பத்தை வந்திருந்தவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

அந்தப் பெண்ணின் தாய் றேச்சல் சாந்தியைப் பார்த்து ‘நீங்கள் இருவரும் கொடுத்து வைத்த தாய் தகப்பன். இப்படி ஒரு அன்பான கருணை உள்ளம் படைத்த இளம் தலைமுறையை இக்காலத்தில் காண்பது அரிது. அதுவும் புத்தாண்டுக்கு முதல் இப்படி தங்கள் நேரத்தை பாராது ஒரு இரவு விழித்திருந்து நாயை காப்பாற்றிய உங்கள் மகன்கள் இருவருக்கும் அவர்களைப் பெற்ற அன்பான பெற்றோர்களான உங்களுக்கும் நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அம்மா. என்னுடைய புத்தாண்டு வாழ்த்து உங்கள் எல்லோருக்கும் உரித்தாகட்டும். எல்லா நலமும் இறைவன் உங்களுக்குத் தரவேண்டும் என்று மனமார இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் இருவரும் மிகவும் உயர்வான குணமுடைய பெற்றோர்கள் என்று எனக்கு தெரிகிறது. இல்லையென்றால் இவர்கள் இவ்வளவு கனிவும் அன்பும் உள்ளவர்களாக வளர்ந்து இருக்க மாட்டார்கள்’ என்றாள் கண்ணீரோடு.

அப்போது தனது அன்பான நாய்க்குட்டியைக் கண்ட பரவசத்திலிருந்த இளம் பெண் ஜெனி மாதுவை உற்றுப் பார்த்துக் கேட்டாள். ’நீ லண்டன் யூனிவர்சிட்டியிற்தானே படிக்கிறாய்’ அவள் குரலில் ஒரு இனம் தெரியாத மகிழ்வு பிரதிபலித்தது.

’ஆமாம்’ என்றான் மாது. அவளுக்கு எப்படித் தெரியும் என்ற அவனின் கேள்வி அவனின் பதிலில் பிரதிபலித்தது.

’நானும் அங்கேயே படிக்கிறேன். சோசியல் சயன்ஸ் டிப்பார்ட்மென்ட். நீ கொம்பியுட்டர் என்ஞினியரிங் செய்வதாகக் கடத்த மாதம் நடந்த மாணவர் கூட்டத்தில் சுற்றாடல் சூழ்நிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றி நீ பேசும்போது சொன்னாய். உனது பேச்சு எனக்குப் பிடித்தது’ என்றாள்.

‘எனது பேச்சைக் கேட்க அன்று வந்ததற்கு நன்றி’’ என்றான் மாதுஅவன் குரலில் மிகவும் மகிழ்வு தெரிந்தது.

’ஓ நீங்கள் சமூக நலம் அத்துடன் பொது அறிவுத்துறை விடயங்களிலும் அக்கறையுள்ளவரா. நல்லது. நீங்களும் உங்கள் சகோதரரும் செய்த உதவிக்கு என்ன கைமாறு செய்வது என்று எனக்கு தெரியவில்லை’ என்றார் ஹரிஸ்.

அதைத் தொடர்ந்து அவர் மனைவி றேச்சல் சொன்னார்.

’இன்றைக்கு புத்தாண்டு. புத்தாண்டு என்றால் உங்களுக்கு தெரியும் ஆங்கிலேயர்களான எங்கள் வீட்டிலும் பார்ட்டி நடந்தது. றோஸி எப்படியோ வெளியில் வந்து விட்டது. நீங்கள் எங்கள் அருமையான நாய்க் குட்டியைக்; காப்பாற்றியவர்கள் கடைசி வரைக்கும் சின்ன பையன்களாக இருக்க முடியாது என்று தான் நினைத்தேன். உங்களைப் பார்த்தால் நீங்கள் இந்தியர் அல்லது சிறிலங்கன் என்று நினைக்கிறேன். நீங்கள் எங்களின் விசேட பானமான ஸம்பேய்ன் எடுப்பீர்களோ தெரியாது. ஸம்பேயின் கொண்டு வந்திருக்கிறேhம். எங்கள் நன்றியைக் காட்ட என்ன கொண்டு வருவது என்பது அவசரத்தில் புரியவில்லை. எங்கள் வீட்டிலிருந்த எங்களுக்குப் பிடித்த டார்க் சொக்லேட்டும் கொண்டு வந்திருக்கிறேன்’.

‘உங்கள் அன்பான பேச்சுக்கும் அன்பளிப்புக்கும் நன்றி. இன்று எங்கள் அம்மாவின் பிறந்த நாள். அம்மாவுக்குப் பிடித்த காலையுணவும் அம்மாக்குப் பிடித்த டார்க் சொக்கலேட்டும் அவரின் பிறந்த நாள் காலையுணவாகச் கொடுக்குப் போகிறோம்’ என்றான் மாது..

‘ஹப்பி பேர்த் டேய் சாந்தி. உங்கள் மகன்கள் செய்த உதவியால் நாங்கள் உங்கள் நண்பர்களாப் பழகுவதை விரும்புகிறோம தயவு செய்து நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடவேண்டும். அதுவும் உங்கள் அம்மாவின் பிறந்த தினத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் ஒன்று கூடியிருக்கிறோம். அதிலும் நாங்கள் இரு தெருக்கள் தாண்டித்தான் இருக்கிறோம். அம்மாவுக்கு நாங்கள் கொண்டு வந்த டார்க் சாக்கலேட் பிடிக்கும் என்று நம்புகிறோம். அத்துடன் தயவு செய்து கூடிய விரைவில் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும்’ என்று றேச்சல் மிகவும் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அகிலனுக்குத் தங்களைச் சுற்றியிருக்கும்; தமிழரைப் பல காரணங்களால் தமிழரே தாழ்வாக நடத்தும் பாரம் பரியம் ஞாபகம் வந்தது. இந்த ஆங்கிலேயர்கள் முன் பின் தெரியாத எங்களின் அன்பை நேசிக்கும் தன்மையை அடையாளம் கண்டு சினேகிதமாக இருக்கு விரும்புவது மனிதத்தின் மகத்துவம் என்று அகிலன் நினைத்தார்.

’உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. ஏங்கள் குழந்தைகளும் ஒரேயிடத்தில் படிக்கிறார்கள். சினேகிதமாயிருப்பது அவர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார் அகிலன்

அதைத் தொடர்ந்து மிகவும் கனிவான குரலில் ஜெனி சாந்திக்குப் பிறந்த தினவாழ்த்துச் சொல்லி விட்டு மாதுவைப் பார்த்துச் சொன்னாள் ’மாது நான் உன்னை விரைவில் எங்கள் யுனிவர்சிட்டியில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’ என்றாள் அவள் முகத்தில் ஒரு அசாதாரண மகிழ்ச்சியிருந்தததை அகிலனும் சாந்தியும் அவதானிக்கத் தவறவில்லை. அவர்களின் குட்டி நாய் வழி தவறியதால் சட்டென்று வந்த புதிய தொடர்புகள் தமிழ்த் தம்பதிகளை நெகிழப் பண்ணியது.

ஜெனியின் குடும்பம், தங்கள் நன்றியை இன்னொரு தரம் சொல்லி விட்டுத் தங்கள் அருமை நாய்க் குட்டி றோஸியுடன் சென்றார்கள். அப்போது மாதுவும் கண்ணனும் சொன்னார்கள்

‘அம்மா இலகுவாக நாங்கள் உங்களுக்கு இன்றைக்குக் காலைச் சாப்பாடு செய்வோம். அத்துடன் உங்களுக்கு பிடித்த டார்க் சாக்லேட்டை வாங்கி வைத்திருக்கிறோம். அவர்களும் தந்திருக்கிறார்கள். மிகவும் நல்ல பிறந்த தினக் காலையுணவாக இருக்கும் ‘என்று சொன்னான்.

அப்போது அம்மா சாந்தி சொன்னாள்.

‘அன்பான எனது எனது மகன்களே நீங்கள் அந்த நாய்க் குட்டியைக் காப்பாற்றிய பெருமையே நீங்கள் தரும் பெரிய பரிசு. அதைத் தொடர்ந்து நடந்த எல்லாம் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. இப்போது காலை ஏழு மணிக்கு மேலாகி விட்டது. ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு பேசாமப் போய் நித்திரை செய்யுங்கோ. நாங்க எங்கள் காலையுணவைப் பார்த்துக் கொள்கிறோம்’.

அப்போது அவர்களின் தந்தை அகிலன் ‘நாங்கள் ஒரு மிகவும் முக்கியமான காலையில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இந்த சிறிய நாய்க்குட்டி வெளியில் வந்தபோது, புத்தாண்டுக்குக் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு ஓடிக்கொண்டிருந்த கார்களில் அடிபட்டு இருக்கலாம். ஆனால் எங்களுடைய மகன்கள் தங்களுடைய தன்னலமற்ற முறையில் தங்களுடைய நித்திரையையும் தியாகம் செய்துவிட்டு மணிக்கணக்காக தெருக்களில் அலைந்து குட்டி நாயின் சொந்தக்காரர்களைத் தேடி இருக்கிறார்கள். அந்த அன்பான ஆங்கிலப் பெண்மணி சொன்னது போல் உங்களுடைய அம்மா என்னுடைய டார்லிங் சாந்தி நீ ஒரு அற்புதமான அம்மா. வாழ்க்கையில் மிக முக்கியமானது அன்புதான் என்பதை உங்கள் மனதில் பதியும்படி வளர்த்திருக்கிறாய். இப்போது நடப்பதைப் பார்க்கும்போது எனக்குக் கண்ணீர் வரும் போலிருந்தது’ என்றார்.

‘உங்களின் அன்பான அறிவுரைகளும் சேர்ந்துதான் அவர்கள்; இருவரையும் நாம் நன்றாக வளர்க்கிறோம்’ என்றாள சாந்தி.

மகன்கள் இருவரும் வந்து தாயையும் தகப்பனையும் அணைத்துக் கொண்டார்கள். அப்போது மாது சொன்னான்.

‘அம்மாவின் பிறந்த தினப் பரிசாக எதைக் கொடுத்தாலும் அது சரியானதாகவிருக்க முடியாது. அதுவும் நாங்கள் செய்யும் காலை உணவு அந்த அம்மாவின் மனமார்ந்த கனிவான நன்றியான வார்த்தைகளுக்கு இணையாகாது. ஆனாலும் அம்மா நாங்கள் ஏதோ செய்யப் போகிறோம். அத்துடன் அந்த அம்மா றேச்சல் கொண்டு வந்த உங்களுக்கு பிடித்த டாக் சொக்கலேட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பா, உங்களுக்கு இன்றைக்கு ஸ்பெஷல் புத்தாண்டு. ஏனென்றால் காலை உணவோடு ஸம்பேயின் சாப்பிடும் பணக்காரர்களில் ஒருவராக நீங்கள் உங்களை நினைத்துக் கொள்ளலாம்’ என்றார்கள்.

அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டார்கள். லண்டன் புத்தாண்டு பட்டாசு வெடியில் தனது மகிழ்ச்சியை அகிலன்-சாந்தி குடும்பத்தினருக்குத் தெரிவித்தது. விஷ்ணுவும் தனது அன்பான முனகலில சாந்திக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துத் தனது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டது.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *