அமெரிக்கா அத்துப்படி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 13,547 
 
 

(எழுத்து நடையில் சென்ற நூற்றாண்டு வாடை கடை பிடிக்கப் படுகிறது.)

ஸ்ரீமான் கருணாகரன் சென்னை அடையார் பக்கம் ஆட்டோவிலிருந்து இறங்கினார். அவர் கையில் ஒரு துண்டுத்தாள், அதில் ஒரு தெரு பெயர்.  சுற்றுமுற்றும் பார்த்தவருக்கு வழி தெரியாமல் போகவே, நடுத்தெருவுக்கு வந்துவிட்டோமே என்ற கவலையில் திரு திருவென்று முழித்துக்கொண்டு நின்றார்.   பெரும்பாலோருக்கு அவரவர் பழக்கங்களை மாற்றிக்கொள்வது கடினம். ஸ்ரீமான் கருணாகரனுக்கு திரு திருவென்று முழிப்பது பழக்கம். சற்று தள்ளிப் போய் நின்று வழி கேட்க யாரை அணுகலாம் என்ற யோசனையில் ஈடுபட்டார். தான் வந்த ஆட்டோ ஆசாமியைக் கேட்டபோது ‘தெரியாது’ என்று தலையை ஆட்டிவிட்டு, சவாரிக்கான பணத்தை வாங்கிக் கொண்டு, சட்டென்று வண்டியை டகா டகா சத்தத்துடன் ஓட்டிப் போயிட்டான்.

சிறிது நடந்தபின், ஆசுவாசத்துடன் அவர் பார்த்த காட்சி அவருக்கு ஒரு தெம்பு தந்தது. ஒரு வீட்டின் வெளியே மடக்கு நாற்கலியில் ஒருவர் – அவருக்கு சஷ்டியப்தபூர்த்தி ஆகியிருக்கும் – உட்கார்ந்து தமிழ் தினசரியைப் படிப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். ‘ஓசி தினசரிதானே, படிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று அவர், தெருவில் நடமாடும் ஜனங்கள் மேல் அதிக கவனம் வைத்தார்.

அவரை நெருங்கி, ‘நீங்க இங்கே செக்யூரிட்டியா’? என்று ஸ்ரீமான் கருணாகரன் வினவ, திடுக்கிட்ட ஸ்ரீமான் கோதண்டம் எழுந்து, மடக்கு நாற்காலியை மடக்கி எடுத்துக் கொண்டு நின்று, ஸ்ரீமான் கருணாகரனை முறைத்துப் பார்த்தார். சின்ன பார்வை யுத்தம் முடிந்ததும், ‘நான் பிளாட் பி-4 ல் இருப்பவன்.  கொஞ்சம் காத்து வாங்க பேப்பர் படிக்க இங்கே உட்கார்ந்தேன்…செக்யூரிட்டி இல்லை…நீங்க யாரு? என்ன வேணும்?’ குரலில் கோபம் பாதி, ஆர்வம் மீதி.

‘மன்னிக்கணும்…தப்பா நினைச்சுட்டேன்…இன்னிக்கி பேப்பரில் என்ன விசேஷம்?’  வந்த வேலையை மறந்து, ஸ்ரீமான் கருணாகரன் அக்கப்போரில் இறங்கினார்.  அக்கப்போர் இவரது இன்னொரு பழக்கம்.

‘நீங்களே பேப்பர் வாங்கி படிச்சுக்கலாமே…’ என்று சொன்னதோடு நிறுத்தாமல், தன்னுடைய ஞானத்தைக் காட்ட மேலும், ‘எல்லாம் அமெரிக்க செய்திதான்’ என்று சொன்னார் ஸ்ரீமான் கோதண்டம்.

“அப்படியா?  அமெரிக்காவில் என்னாவாம்?” ஸ்ரீமான் கருணாகரன்.  பாவம், அப்பாவி…கேக்கக் கூடாத நபரிடம் கேள்வியைக் கேட்டதுக்கு உடனே ஸ்ரீமான் கோதண்டம் அளித்த தண்டனை கொஞ்சம் ஓவர் – 

“அங்கே நியூ ஜெர்ஸின்னு ஒரு பெரிய மாநிலம்.  ஐம்பதுல ஒண்ணு. அது நியூ யார்க் பக்கத்துல இருக்கு. அங்கதான் சுந்தர் இருக்கான்.” ஸ்ரீமான் கோதண்டம் ‘கல் தோன்றிக்கும்’ முன் ஆரம்பித்தார். அடுத்து ‘சுந்தர் யாரு?’ என்று ஸ்ரீமான் கருணாகரன் கேட்பார் என்று தூண்டில் போட்டு எதிபார்த்து நின்றவருக்கு ஏமாற்றம். மாட்டிக்கொண்ட ஸ்ரீமான் கருணாகரன் எப்பவும்போல் திரு திரு முழியுடன் நின்றார்.

“சுந்தர், எடிசன் அப்படிங்கிற சின்ன ஊர்ல இருக்கான். எடிசன் ரொம்ப பேமஸ். அங்கதான் தோசை விக்கற குட்டி குட்டி கடைகள் நிறைய இருக்கு.  சுந்தர் நம்ம பி-3 பிளாட்டுல இருக்க மாமியோட தம்பியோட பேரப்பிள்ளை. சாப்ட்வேர் கம்பெனியிலெ வேலை.  இன்னும் கல்யாணம் ஆகலை. நியூ யார்க் லேருந்து, ஐ-95 – அதான் ஹைவே இருக்கே – அதுல தெற்கே போய் ஒரு எக்ஸிட் எடுத்துண்டு, டோல் குடுத்துட்டு, சுமார் ஏழு மைல் மேற்கே போனா டக்குனு எடிசன் வந்துடும்…” விளக்கினார் ஸ்ரீமான் கோதண்டம்.

“நீங்க எடிசன் போயிருக்கீங்களா?” ஸ்ரீமான் கருணாகரன்.

“அமெரிக்காவே போனதில்லையே…அப்பறம்தானே எடிசன்?  போகணும்னுதான்…ஆனா சந்தர்ப்பமே கிடைக்கல…சுந்தர்கூட இங்கே வரச்செல்லாம் ‘நீங்க நியூ ஜெர்ஸிக்கு ஒரு தரம் வாங்களேன்னு’ ஆசையா கேப்பான்.  தாசில் பண்ண ஆசை அப்படின்னு சொல்வாளே…அது மாதிரி ஆயிடுத்து.” ஸ்ரீமான் கோதண்டம் வருத்தமுடன் முடித்தார். ‘இப்போ கழுதை மேய்கிறீங்களா..?’  ஸ்ரீமான் கோதண்டம் கையில் பேப்பர் இருந்தாலும், இப்படி கேட்க ஸ்ரீமான் கருணாகரனுக்கு தைர்யம் இல்லை. 

“பாவம்.  போகட்டும், விடுங்கோ.  இப்ப அடையாறுக்கு வருவோம். இந்த தாள்லே இருக்க 7 வது கிராஸ் தெருவுக்கு எப்படி வழின்னு சொல்லுங்க…”  ஸ்ரீமான் கருணாகரன்.

“அடடா…வழி தெரியாதே…”. கையை விரித்தார் ஸ்ரீமான் கோதண்டம்.

“உங்களுக்கு அமெரிக்காவே அத்துப்படி மாதிரி அளந்தீங்க…ஆனா, உள்ளூர்லே பக்கத்துலேயே இருக்கற தெருவுக்கு வழி சொல்லமுடியிலயே…”

ஸ்ரீமான் கருணாகரன் புறப்பட்டார்.  இப்போது திரு திருவென்று முழித்துக் கொண்டு நின்றது ஸ்ரீமான் கோதண்டம்தான். இவருக்கும் திரு திருவென்று முழிக்கும் பழக்கம் தொத்திக் கொள்ளாமலிருந்தால் சரி. 

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *