அமராவதியின் ஆறாம் பிரசவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,719 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆனத்தோட்டத்தை சுற்றிலும் உயர்ந்து நிற்கும் மலைகளுக்கு இடையில், பள்ளத்தில் விரிந்துக் கிடக்கும் டபள் சைட் லயன்கள் இருளில் உறைந்திருந்தன. தொங்கல் காம்பராவில் மட்டும் மெல்லிய மினுக்கு வெளிச்சம் ஒளியூட்டிக் கொண்டிருந்தது. மெல்லியதாய் எழுந்திருக்கும் அமராவதியின் விம்மலுடன் கலந்து, பன்னீரின் குறட்டையும் கோடியை எட்டியிருந்தது. 

அடி வயிற்றில் இருந்து எழுந்திருந்த விம்மல் உதடுகளை நடுக்கி, துடிக்கச் செய்திருந்தது. உள்ளுக்குள்ளேயே மறுவி மறுவி குடைந்துக் கொண்டிருந்த பயம் மெதுமெதுவாய் வெளிவரத் தொடங்கியிருந்தது. அமராவதியினுள் குழப்பம் கும்மியடித்துக் கொண்டிருந்தது. 

து எப்படி? சாத்தியமாகும். பிரமையாய் இருக்குமோ? பிரமையாய் இருந்தால் எப்படி உடல் இப்படியான அறிகுறிகளை காட்டுகின்றன என்றெல்லாம் குழம்பினாலும் பின்னர் ஏதோவொரு நம்பிக்கையில் மனசு சமாதானம் அடைந்தது. ஆனால் அமைதி மட்டும் கிடைக்கவில்லை. 

சந்தேகத்துக்கு இடமில்லாமல் உடம்பு காட்டும் அறிகுறிகள் அவளின் பயத்தின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கியிருந்தது. 

இருளில் கவிழ்ந்திருந்த லயம் முழுமையாய் தூக்கத்தில் தொலைந்திருந்தப்போதும் தொங்கல் காம்பராவில் அமராவதி மட்டும் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

அப்போது வானில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் மறைந்து வானம் இன்னும் இருண்டுக்கொண்டிருந்தது. 

லயம் அமராவதியின் மனசைப் போலவே இருண்டுக் கிடந்தது. சில வருடங்களாகவே துாக்கமின்றி தொலையும் இரவுகள் அவளது காயங்களை இன்னும் இன்னும் கீறி வடுவாக்கியிருந்தது. 

பன்னீரும் தன் பங்குக்கு அக்காயங்களை கீறி ஆழமாக்குவது வழமை. 

எல்லா நாட்களுமே முழு போதையில் வீட்டுக்கு வருவதால் அவனுடன் மனம் விட்டுப் பேசி பல வருடங்கள் ஆயிற்று. அப்படியே பேச நினைத்தாலும் அதை காது கொடுத்து கேட்பதற்கு அவன் தயாரில்லை. காலையில் இருந்து மாடாய் மலையில் நின்று உழைப்பான். ஆனால் எதையும் மிச்சப்படுத்துவதில்லை. போதை உள்ளுக்குள் ஏறி விட்டால் மனுஷனாய் இருக்க மாட்டான். வார்த்தைகளும் தடம் புரண்டு விடும். 

அமராவதியைக் காயப்படுத்துவதில் பன்னீரின் வார்த்தைகளுக்கு இருக்கும் வீரியம் வேரொன்றுக்கும் கிடையாது. 

இப்படித்தான் இன்றும் காலையிலேயே மலைக்கு வந்து வார்த்தைகளால் வதைத்து விட்டான். அது முள்ளாய் கிடந்து உள்ளத்தை தைத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை பேருக்கு மத்தியில் நாக்கு மேல் பல்லைப் போட்டு கூசாமல் அபாண்டமாய் பழி சுமத்தி பேசியது உள்ளத்தை கிழித்து காயப்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்ல குற்றவாளி கணக்காய் நிற்க வைத்து கேள்வி கேட்டதும், ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்ததும் பெருத்த அவமானமாக இருந்தது. 

“எதுனாலும் வீட்டுல போயி பேசிக்கலாம் போங்க ஆளுங்க எல்லாரும் பாக்குறாங்க” என்று கூனி குறுகி நின்றவளை, 

“என்னாடி புதுசா ஆளுங்கப் பாக்குறாங்க? ஊரு சிரிச்ச ஓங் கதத்தான் எல்லாருக்கும் தெரியுமே” 

“என்ன என்னாப் பொட்டப்பயனு நெனச்சியா?” 

‘ஊரு ஒலகத்துல ஒன்ன போல பொம்பளய நான் பாத்ததே கெடையாது. ஊரு மேஞ்ச சிறுக்கி” 

“இன்னைக்கு ஒன்ன உண்டு இல்லனு பண்ணுறேன் பாரு” 

“ஒனக்கு நான் ஒருத்தன் பத்தலனுதானே இப்பிடி ஊரு மேயிற?” என்று வாய்க் கூசாமல் வார்த்தைகளை அள்ளி வீசினான் பன்னீர். 

“இங்க பாருயா மருவாதயா பேசு இல்லனா மானங்கெட்டு போயிருவ சொல்லிப்புட்டேன்” 

“இப்ப என்னா நடந்துரிச்சுனு இப்பிடி எகிறி குதிக்கிற? ஊரே வேடிக்கை பாக்குதுய்யா பேசாம வீட்டுக்கு போ” 

“ஒனக்குத்தான் ஈன மானம் ஒன்னுமில்லயே என்னயும் அப்பிடியே நெனச்சியா?” என்று அமராவதியும் மல்லுக்கு நின்றாள். 

“பாக்கட்டும்டி பாக்கட்டும் நல்லா பாக்கட்டும் அப்பத்தான் ஓன் லெச்சணம் ஊரு ஒலகத்துக்கு தெரியும். பெரிய பத்தினி வேஷம் போடுவியே இப்ப ஒன்னோட குட்டு எல்லாம் தெரிஞ்சிப் போச்சி பாத்தியா?” என்று குரலை உயர்த்தினான் பன்னீர். 

“ஐயோ கடவுளே மானம் போவுதே நாளைக்கு நான் எப்பிடி இந்த ரோட்டுல நடக்குறது?” என்று தலையில் அடித்துக் கொண்டு அமராவதி அழத் தொடங்கினாள். 

“அட நீ கூட மானத்த பத்தி பேசுவியா இத்தன பொம்பளைக ஒழுங்காத்தானே வேலய பாக்குறாளுக ஒனக்கு மட்டும் என்னாடி தனியா இங்க வேல? கண்டாக்கு கொஞ்சம் செவப்பா இருந்தா நாயி மாதிரி அவென் பின்னுக்கே சுத்துவியா?” 

“இப்ப போயி வயித்துல வாங்கிட்ட இல்ல? நீ நாசமாத்தான் போவ எனக்கு துரோகம் பண்ணிட்டு நல்லாவே இருக்க மாட்டடி தோட்டத்துல உள்ள கண்டாக்கு பயலுகளுக்கு எல்லாம் ஓம் மேலத்தானே கண்னா இருக்கு என்னாத்தான் செய்யிறது சொல்லுப் பாப்பம்? இங்க பாருடி ஒன்னு மட்டும் நல்லா நெனவுல வச்சிக்க நான் நெனச்சா சுண்டி விட்டு ஆயிரம் பொம்பள எடுப்பேன் ஆனா ஒனக்கு இருக்கும் நாயி புத்தி எனக்கில்ல” 

“மதம் புடிச்சவ மதம் புடிச்சவ ஒன்ன சொல்லி குத்தமில்லடி ஒங்க ஆயி அப்பனோட வளப்பு அப்பிடி நீயெல்லாம் ஆயிசுக்கும் திருந்த மாட்ட இன்னைக்கு வீட்டுக்கு வா சூடு போடுறேன்” 

“தோலு கொஞ்சம் செகப்பா இருந்தாலே பொம்பள புத்தி நாயி புத்தினு சொன்னது நெசமாத்தான் இருக்கும் போல” என்று கூறிக் கொண்டே நெத்திக் காண் வழியே பித்துப் பிடித்தவன் போல இறங்கி ஓடினான் பன்னீர். 

அழுகையும் ஆத்திரமும் பொங்கி எழ இனியும் அங்கிருப்பது அழகில்லை என்பதால் அழுது புலம்பிக் கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தவள்தான் இரண்டு நாட்களாய் மலைப் பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. 

அழுது அழுது ஓய்ந்தாலும் மீண்டும் மீண்டும் அவ்வார்த்தை அம்புகள் அவளை வதைக்கத்தான் செய்தது. 

ஒவ்வொரு இரவும் அமருக்கு ரணமானவை என்றாலும் காலையில் வார்த்தைகளாலும் செயல்களாலும் எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி விட்டு இரவில் மட்டும் குலையும் அவனுடன் சேர்ந்து நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்திருந்தப் போதும் அவளால் புரிந்துக் கொள்ளமுடியாத ஜீவன் பன்னீர். போதையில் வந்தால் ஒவ்வொரு நாளும் அவனுடன் படுத்தாக வேண்டும் கொஞ்சம் நிதானமிருந்தாலும் எரிந்து விழுவான். போதையோடு சேர்ந்து ஊரவர் ஊற்றி நிரப்பும் அபாண்ட வார்த்தைகளும் அன்றைய நாள் அடிக்கும் உதைக்கும் அத்திவாரமாய் அமைந்துவிடும். 

நாளுக்கு நாள் வாழ்க்கை நரகமாகிக் கொண்டே இருந்தது. வாழ்க்கை பிடிப்பற்று ஒவ்வொரு நாளும் மரண வேதனையைப் தந்துக் கொண்டிருந்தது. இப்போது உளவாளியைப் போல அவளுக்கு பின்னே சென்று வேவு பார்ப்பதே பன்னீருக்கு வேலையாகியிருந்தது. மலைக்குப் போனாலும் மடுவத்துக்கு வந்தாலும் அமராவதிக்கு தெரியாமல் அவளை பின்தொடர்வான். 

அவனின் வார்த்தைகளுக்கு பயந்து தோட்டத்தில் கங்காணியும் கண்டாக்கும் அவளுக்கு வேலை சொல்வதும் இல்லை பழைய மலையிலேயே அவளுக்கு நிரை ஒதுக்குவதால் பன்னீருக்கு இன்னும் சந்தேகம் எழுந்திருந்தது. ஒதுக்கு மலையில் அவள் தனிமைப்படுத்தப்படுவதை அவன் விரும்பவில்லை. அதனால் பன்னீர் ஒழுங்காக வேலைக்கும் செல்வதில்லை. அங்கும் இங்கும் ஒழிந்திருந்து அவளை நோட்டமிடுவதையே வேலையாக செய்துக் கொண்டிருந்தான். 

அப்படி காணில், தேரியில் ஒழிந்திருந்து, நோட்டமிடும் போது தப்பித் தவறி கங்காணியிடமோ,கண்டாக்கிடமோ கொஞ்சம் சிரித்துக் கதைத்து விட்டால் போதும் இடத்தை பொருட்படுத்தாமல் வார்த்தைகளை வாரி இரைத்து அசிங்கப்படுத்தி விடுவான். இப்படித்தான் நேற்று நாட்டுக்கு சென்று மூக்கு முட்டக் கள்ளைக் குடித்துவிட்டு வந்து சிறிசேன கண்டாக்கையும் அமராவதியையும் சேர்த்து வைத்து அசிங்க அசிங்கமாய் பேசி லயத்தையே சிரிக்கடித்து விட்டான். எத்தனையோ முறை அவள் இப்படியாக அவமானப்பட்டிருக்கிறாள் என்றாலும் பிள்ளைகளுக்காய் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வாள். 

இப்படித்தான் அமராவதி ஐந்தாவது குழந்தைக்கு தயாராகியிருந்தப்போது 

“என்னா அமரு திரும்பவும் ரெடியாயிட்டப் போல வருசம் போயி வருசம் வர தவறுதோ இல்லையோ நீ தவற மாட்டேன்கிற என்னா?” “ஒனக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாது இப்பவே நாய் படாத பாடு படுற இதுல இன்னோரு புள்ளய பெத்துக்கிட்டு சீரழியப் போறியா?” 

“ஒழுங்கு மருவாதயா இந்த முற சரி ஒப்புரேசன் பண்ணிக்க போன புள்ளைக்கே பண்ணிக்கனு தலபாடா அடிச்சிக்கிட்டேன் கேட்டியா? இப்ப வயித்த தள்ளிக்கிட்டு வந்து நிக்க ஒனக்கு வெக்கமா இல்லயா? பன்னீருப் புத்தி ஒனக்கு நல்லாத் தெரியும் தானே மொரட்டுப்பய, கோவக்காரன்கூட பொறந்த பொறப்பையே சந்தேகப்படுவான். இப்பிடியே அடி ஓதனு எத்தன நாளைக்குதாண்டி மாரடிப்ப? இதுக்கு மேல ஒனக்கு ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல யோசிச்சி செஞ்சுக்க” என்று வெல்பெயார் நோனா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதுக்குள்ளேயே நிற்கிறது. ஆனால் எத்தனையோ வலிகளுக்கு பின்னரும் கூட நாளுக்கு நாள் வளரும் வயிறு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அவளுக்கு தந்துக் கொண்டிருந்தது. 

காலம் வெகுவாய் ஓடியடைந்திருந்தது. 

அமராவதி அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததோடு இனியும் பன்னீருக்கு பிள்ளைகளை பெற்று சீரழிக்க கூடாது என்ற வைராக்கியத்தை வைரமாய் வளர்த்திருந்தாள் அப்போது சதா அடியும் உதையும் வாங்கிய உடலும் மனசும் கூட இன்னொரு பிள்ளையைப் பெற முடியாத படிக்கு தளர்ந்துப் போயிருந்தது. 

காலம் எவ்வளவோ மாறியிருந்தப் போதும் பன்னீரு மட்டும் மாறவே இல்லை. அன்றும் பழைய மலையில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டம் ஒடித்துக் கொண்டிருந்த அமராவதி ரெட்டைப் பாலத்துக்கு கீழே ஒதுக்கிப் போட்டிருந்த துண்டில் கண்டாக்கோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு பொங்கி விட்டான். மறுகணமே பித்துப் பிடித்தவன் போல நிரையை பிரித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்தவன் சிறிசேன கண்டாக்கின் சட்டையை பிடித்து உழுக்கி சரமாரியாகத் தாக்கிவிட்டான் ஆத்திரத்தில் கண்டாக்கு மீது கையை வைத்துவிட்டிருந்ததால் சிறிசேன கண்டாக்கின் மண்டை பிளந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்துக் கொண்டிருந்தது. அப்போது தோட்டமே பன்னீருக்கு எதிராக திரும்பி இருந்தது. அது மட்டுமல்ல கண்டாக்கின் கமே சொந்தங்கள் வேறு கத்தி கம்புகளோடு தோட்டத்தை முற்றுகையிட்டிருந்தனர். இத்தனை குழப்பங்களை ஏற்படுத்தி விட்டு பதினான்கு நாட்களை பொலிஸ்சிலும் கழித்து திரும்பியிருந்தான் பன்னீர். அத்தோடு அமராவதிக்கும் வேலை நிறுத்தப்பட்டிருந்தது. 

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் தான் அமருக்கு அடுத்த அடி விழுந்தது. 

இரவு வேறு நீண்டு அவளின் பயத்தின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கியிருந்தது. இதைப்பற்றி யாரிடம் பேசுவது, எப்படி பேசுவது? சொன்னாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள், இதை கேள்விப்பட்டால் பன்னீரு… என்றெல்லாம் மனசு அல்லாடி உடல் வெடவெடத்து வியர்வை அரும்பியிருந்தது. 

ஆனால் வயிறு மட்டும் நாளுக்கு நாள் மீண்டும் வளரத் தொடங்கியிருந்தது. இனி பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று உள்ளுக்குள் வளர்த்திருந்த வைராக்கியம் உடைந்து தவிடு பொடியாகியிருந்தது. வெறும் வாயையே சுவைத்து மென்றுக் கொண்டிருக்கும் பன்னீருக்கு இந்த விடயம் தெரிந்தால் சொல்லவும் வேண்டுமா? வெறும் வாயில் கொட்டிய அவலாய் மென்றுத் தீர்த்து துப்பி விடுவானே என்று அதிகமாய் பயந்தாள். அப்போதெல்லாம் அப்பாவி கண்டாக்கு சிறிசேனவின் முகம் மனக்கண்ணில் தோன்றித் தோன்றி மறைந்தது. 

மனசுக்குள் பலவிதமான போராட்டங்கள் கிடந்து மருண்டன. 

அதனால் இதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டாள். கர்பத்தை அழிப்பதற்கு அவளுக்கு தெரிந்த கைவைத்தியங்கள் எல்லாவற்றையும் செய்து பார்த்தாள் பலனில்லை. வயிறு மெதுமெதுவாய் வெளிவரத் தொடங்கியிருந்தது. தன்னையும் சிறிசேன கண்டாக்கையும் சேர்த்து வைத்து,பன்னீர் பேசிய வார்த்தைகள் ஈட்டியாய் இதயத்தை கிழிக்கவே பன்னீரை நினைத்து பயந்தாள். தனியனாய் மலைமேடுகளில் சுற்றித்திரியும் போதெல்லாம் யாருமே தன்னை பின் தொடராத போதும் அடிக்கடி ஒரு பீதியோடு திரும்பி பார்த்து மிரண்டுப் போவாள். அப்போதெல்லாம் பன்னீரின் கோரமுகம் மனக்கண்ணில் அசுரத்தனமாய் கைகொட்டி சிரிப்பது போல ஓர் உணர்வுத் தோன்றும். 

அப்போதைக்கு வயிறை மறைத்துவிட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி அல்லாடியதால் வயிறை மறைப்பதற்கு இடுப்புக்கட்டி படங்குதான் துணைபுரிந்தது. இடுப்புகட்டி படங்கைப் போட்டு வயிற்றை நன்றாக சுற்றி இறுக்கமாய் கட்டிக்கொண்டு மலையில் சகஜமாக வந்துலாவத் தொடங்கியிருந்தாள் யாரும் தன்னை பார்த்து சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நின்றாள். 

எப்போதும் ஆசுவாசமாய் மூச்செடுக்கக் கூட முடியாமல் இறுக்கி கட்டப்பட்டிருந்த வயிறு ஊதி முடியாமல் போகும் போதெல்லாம் இறுக்கி கட்டிய படங்கை தளர்த்தி, விறகு காடுகளில் யாருக்கும் தெரியாமல் ஆசுவாசப்படுவாள். அப்போதெல்லாம் தேம்பித் தேம்பி அழுவாள். தன் இரத்தமும் சதையும் தன்னாலே வதைக்கப்படும் வன்மம் அவள் பிறப்பை அசிங்கப்படுத்தி இருந்ததால் அடிவயிற்றில் இரண்டு கைகளையும் பொருத்தி மானசீகமாய் மன்னிப்பு கேட்டழுவாள். அப்போது உள்ளுக்குள் பிரவாகம் எடுக்கும் ஈரம் பன்னீரை நினைத்த மாத்திரத்தில் வரண்டு காய்ந்துப் போகும். 

அந்திவரை விறகு காடுகளில் சுற்றித் திரிந்து விட்டு இலேசாய் இருள் கவிழும் போதே வீடு வந்து சேர்வதால் அதிகமான குழப்பங்களில் இருந்து தப்பித்திருந்தாள். பொது இடங்களில் இருந்தெல்லாம் விலகி நிற்கும் அமர் கொஞ்ச காலமாக தனக்கென ஒரு புதிய உலகத்தை சிருஸ்டித்திருந்தாள். 

மறுநாள் விடாது கொட்டிக் கொண்டிருந்த துாறல் உடல் அசதிக்கு இன்னும் தெம்பூட்டியப் போதும் மலைக்கு போவதற்கு பரபரப்பாய் தயாராகிக் கொண்டிருந்த அமராவதி தலையை வாரிக் கொண்டே கண்ணாடியில் தன் முகத்தை நிறுத்தியப் போதுதான் உணர்ந்தாள் முகம் பழையப் பொலிவை இழந்து வெளிறியிருந்தது. உடல் அடிக்கடி சோர்ந்துப் போவதோடு, இருந்தாற் போல தலை கிறுகிறுத்து கண்கள் நீலம் பூத்து இருண்டு அவளுக்கான பயத்தை அதிகப்படுத்தியிருந்தது. கடந்த சில நாட்களாய் கை, காலில் உள்ள பச்சை நரம்புகள் நீலம் பூத்து புடைத்து நிற்பது அவளுள் ஆயிரம் கேள்விகளை விட்டுச் சென்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கூடையை மாட்டிக் கொண்டு மழைத்தூறலுக்கிடையில் தேவதையாய் பயணித்திருந்தாள். 

வனத்து துண்டில் பெண்கள் நிரை பிடித்து கொழுத்து எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுதான் படியேறிய கலைப்போடு தன் நிரைக்குள் நுழைந்தாள். காற்று சீறி சீறி அடித்துக் கொண்டிருந்தது. நாலைந்து தேயிலைகள்தான் கொழுந்தைப் பறித்து கூடையில் போட்டிருப்பாள் குளிரில் கைகள் விறைத்துக் கொண்டன செயலற்று விறைத்துப் போயிருக்கும் கைகளை நீவிக் கொண்டே விம்மிய அமர் அண்ணாந்து வானத்தை வெறித்துப் பார்க்கிறாள் வானம் இன்னும் இருண்டுக் கொண்டிருந்தது. அப்போது உடலுக்குள் பெரிய பிரளயமே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. 

கண்கள் இருண்டுக் கொண்டு வரவே தேயிலை வாதைப்பிடித்துக் கொண்டு வயிற்றை பிசைந்துக் வலிக்கு ஒத்தடமிட்டுக் கொண்டிருந்தவளை 

“ஏம்புள்ள அமரு இப்பிடி மசமசனு நின்னா ஒங்கப்பனா வந்து பேரு போடுவான்? வேலய பாப்பியா சும்மா இப்பிடி நின்னு உசிர எடுப்பியா? புள்ளதாச்சி பொம்பளைகளே விறுவிறுனு பிச்சிகிட்டுப் போறாங்க நீ என்னமோ தடவிக்கிட்டு நிக்குற” என்று கங்காணி கர்ஜிக்கவும் கொழுந்தைப் பறித்து கூடையில் போட்டு விட்டு அடுத்த தேயிலைக்கு செல்ல முனைந்தப் போதுதான் கால்கள் எடுத்தடி வைக்க முடியாதபடி மறத்துப் போயிருந்தது புரிந்தது. கால்களை அசைக்கவே முடியவில்லை.இடுப்புக்கு கீழ் முழுமையாய் மறத்துப் போயிருந்தது. 

மழை இப்போது சோவெனப் பெய்யத் தொடங்கியிருந்தது. 

அப்படியே நிரைக்குள் சப்பளித்து உட்கார்ந்து படங்கை விலக்கியப் போது காலில் அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சி உப்பியிருந்தன அவற்றை உப்பு பொட்டலத்தை கொண்டு வலித்து தள்ளி விட்டு தூணாய் மறத்திருக்கும் காலை நீவி விடத் தொடங்கினாள். ஆனால் பலனில்லை இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் நின்றுப் போனது போல செயலற்றுப் போகவே எழுந்து நிரைக்கு வெளியில் வருவதற்கு முயன்றாள். அப்போது இறுக்கிப் பிடித்திருந்த தேயிலைவாதுகள் ஒடிந்து சரியவே அப்படியே சரிக்கி கொண்டு வந்து உயர்ந்த வங்கிப்பகுதியில் இருந்து கீழே கருத்த ரோட்டில் விழுந்த வலி, தாளாமல் அமராவதி இட்ட கூச்சல் மலையை ஒரு உழுக்கு உழுக்கி ஸ்தம்பிக்கச் செய்தது. 

அப்போது இத்தனை நேரம் சீறி சீறி பெய்துக் கொண்டிருந்த மழை ஓய்ந்து வானம் வெளுத்திருந்தது. 

தேயிலை வாதுகள் அமராவதியின் உடலில் ஏற்படுத்தியிருந்த சிறாய்ப்புகளில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. யாருமே எதிர்பாராத நேரத்தில் அமர் ரத்த வெள்ளத்தில் தேயிலைக்குள் இருந்து வந்து வீழ்ந்த அகோர காட்சி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. 

அரைப் பிணமாய் கிடந்த அமராவதியை தோட்டம் ஆஸ்பத்திரிக்கு அள்ளி எடுத்துச் சென்றிருந்தது. 

நா கூசாமல் பலதையும் பேசி அடங்கிய தோட்டம் சில மாதங்களுக்கு முன்னமே மரணித்திருந்தவளை அன்றுதான் மரணித்து விட்டதாக தன் அறியாமையால் பேசிக் கொண்டிருந்தது. 

– மலைநாட்டு எழுத்தாளர் மன்ற சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை (தாய் வீடு) 

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *