அந்த பெரும் மழையில் நனைந்த காதல் காலம்





இன்றைய எதிர்பாராத பெரும் மழையில் நனைந்துக் கொண்டே நான் வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்… இந்த நேரத்தில் எந்த பேருந்தும் வராதது வேறு பெரும் சோர்வாக உணர்ந்தேன்..வண்டியை பழுது பார்க்க விட்டதால் இந்த சோதனையில் மாட்டிக் கொண்டேன்… பேருந்து வரும் வழியை தான் காணோம்.. பெரும் மழையோ மேலும் மேலும் என்னை சாரலாக பேருந்து நிறுத்தத்தில் பதம் பார்த்து அழகு பார்த்தது மட்டுமல்லாமல் பெரும் காற்றும் சேர்ந்துக் கொண்டு என்னை மேலும் சோதனைக்குள்ளாக்கியது..
என் கையில் இருந்த குடையை மேலும் இறுக பிடித்துக் கொண்டு பேருந்து வரும் திசையில் கவனம் செலுத்தினேன்… இந்த மழை நின்று விட்டால் நன்றாக இருக்கும்… இந்த மழை அந்த மழை நாளில் அவளோடு நான் சந்தித்து இதே குடைக்குள் எங்கள் பேரன்பை பெரும் மௌனத்தோடு பகிர்ந்து கொண்ட நாளை, சந்திப்பை மேலும் மேலும் ஞாபகப்படுத்தி என்னை காயப்படுத்திக் கொண்டு இருந்ததை இங்கே பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளோ அல்லது இந்த பேருந்து நிழற்குடையோ அல்லது இதோ எனை நனைத்து பதம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த பெரும் மழையோ ஞாபகம் வைத்துக் கொண்டு இருந்தால் தானே இந்த பெரும் காயத்தில் இருந்து நான் தப்பிக்க இயலும் என்று நினைக்கும் போதே என் கையில் இருந்த குடை அப்போது அடித்த பெரும் காற்றில் களவாடிப் போனதில் நான் திகைத்து நின்றேன் சற்றே…அந்த ஒரு நொடி தான் தாமதித்தேன்…
அந்த குடையை கைப்பற்ற நான் சாலையை கடந்து செல்ல முனைந்தபோது சில பல வாகனங்கள் நான் சாலையை கடந்து செல்ல நீட்டும் கையை உதாசீனப்படுத்தி வேகமாக கடந்து சென்றதில் என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்து அந்த மழையில் கரைந்து காணாமல் போனது… நான் சற்று நிதானித்து கடந்து சென்று அந்த குடையை காணாமல் சற்று திகைத்து நின்றேன்…
அங்கே ஒரு பெண் அந்த குடையை எடுத்து மடக்கிக் கொண்டு எனக்கு எதிர்புறமாக திரும்பி நின்றுக் கொண்டு எவருடனோ பேசிக் கொண்டு இருந்தாள் சற்றே அந்த குடையை திருப்பி திருப்பி பார்த்தபடி…
நான் வேகமாக ஓடி அந்த குடையை அவள் கையில் இருந்து சற்றும் பொதுவெளி என்று வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் பறித்துக் கொண்டு அவளை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து மீண்டும் அதிர்ந்து நின்றேன்..
இவள் இவள் என்று யோசிக்கும் போதே அவளும் சற்றே அதிர்ந்து என்னை பார்த்தாள்…
நீங்கள் நீங்கள் என்று யோசித்து கிருஷ்ணா என்று வாய் விட்டு சொல்லி என் அருகில் மிகவும் நெருக்கமாக வந்தாள்..அதே வாசம் எப்படி மறக்க முடியும் இந்த வாசத்தை என்று நினைத்து ஆம் நான் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு பெரும் பிரயத்தனப்பட்டு நகர முயன்றேன்…
அவளோ சற்று நில்லுங்கள் என்றாள்.
ஏன் என்றேன் புரிந்தும் புரியாமல் நான் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டாள்…
தெரியும்..நீ யார் என்று தெரியும்..இந்த குடை உன் அருகில் வந்து இல்லை என்றால் நீ எப்படி என்னை ஞாபகம் வைத்து இருப்பாய்..நீ மறந்தாலும் நானும் இந்த குடையும் மறக்க மாட்டோம், அன்றொரு நாள் இதே பெரும் மழைக் காலத்தில் இதே குடை சாட்சியாக நாம் பகிர்ந்து கொண்ட பெரும் நேசத்தின் பகிர்வை…நமது பெரும் காதலின் சின்னமாக என்னோடு மழைக்காலம் தவறாமல் பயணிக்கும் இந்த குடையின் பெரும் நேசத்தையும் நான் தொலைத்து விடக் கூடாது என்று தான் இதன் பின்னே ஓடி வந்தேன்…வேறு எதுவும் நான் உன்னை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை..
இந்த பத்து பதினைந்து வருட பெரும் கால இடைவெளியில் என் பெரும் காதலின் துயரத்தை அடிக்கடி அசைப்போடுவதற்காகவே பல நேரங்களில் இந்த பெரும் மழை பெய்கிறது என்று நினைத்துக் கொள்வேன்…
மற்ற படி வேறெதுவும் பெரிதாக பாதித்து விடாதபடி என் அன்றாட நிகழ்வுகளை வகுத்து கொண்டு எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்வை நகர்த்தி செல்கிறேன்.. சரி நான் செல்கிறேன் என்று திரும்பிய என்னை பார்த்து அவ்வளவு தானா என்று அவள் கேட்ட குரலின் விசும்பலில் நான் சற்றே நெகிழ்ந்து திரும்பி பார்க்க தான் நினைத்தேன்..
ஆனால் இனி எதுவும் ஆகி விடப் போவதில்லை… அவள் ஞாபகமாக என்னோடு பயணிக்கும் குடையின் நழுவுதலையே என்னால் ஜீரணிக்க முடியாத போது இவள் தற்போது பயணிக்கும் கதையை கேட்டு அந்த பெரும் துயரத்தின் வெப்பத்தை தணிக்க இன்னும் எத்தனை நீண்ட பெரும் மழை பெய்ய வேண்டுமோ என்று நினைத்தேன்..
அப்படியே அந்த பெரும் மழை பெய்தாலும் என்னுள் கனன்று சுழன்று என்னை பதம் பார்த்துக் கொண்டு இருக்கும் அக்னியின் ஜூவாலையை அணைக்க முடியுமா என்ன என்று நினைத்துக் கொண்டே அவ்வளவு தான் என்று சற்று விறைப்போடு சொல்லி விட்டு வேகமாக அந்த குடையை விரித்து சாலையை கடந்து செல்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டும் நிறுத்த முடியாமல் என் கண்களில் இருந்து கடகடவென்று வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல் நான் எனது பேருந்து நிற்கும் நிழற்குடையை தஞ்சம் அடையவும் அங்கே வெகுநேரமாகியும் அவரது பேருந்து வராமல் காத்திருந்த பயணி ஒருவர் என்னை பார்த்து என்ன சார் குடை கிடைத்து விட்டதா என்று சிரித்துக்கொண்டே கேட்டார்..
நானும் சற்றே சிரமப்பட்டு சிரித்து ஆமாம் சார் கிடைத்து விட்டது ஆனால் வேறொரு துயரம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொல்ல நினைத்து குடை கிடைத்ததை மட்டும் சொல்லி விட்டு நான் அந்த குடையை மடக்கி எனது பைக்குள் வைக்க முயன்ற போது அவள் அந்த குடையை பிடித்த அந்த இடத்தின் வெப்பத்தை மட்டும் உணர்ந்தேன்.
இந்த குளிர் நிறைந்த பொழுதிலும்…இதோ நான் பயணிக்க காத்திருக்கும் பேருந்து வரவும் நான் அதில் ஏறிய போது நான் எப்போதும் விரும்பும் சன்னலோர இருக்கை வெகு நாட்களுக்கு பிறகு இன்று மிகவும் இயல்பாக கிடைத்ததில் மனதிற்குள் நான் சிரித்துக் கொண்டேன் ..
எதுவுமே இங்கே நாம் விரும்பும் நேரத்தில் கிடைக்காமல் என்றோவொரு நாள் கிடைத்து ஒன்று பெரும் துயரப்படுத்தும் அல்லது பெரும் மகிழ்வை தரும் ..
இந்த இரண்டிற்கும் நடுவில் நாம் பயணிக்கும் இந்த வாழ்வின் பயணமும் பேருந்து பயணமும் ஏறத்தாழ ஒன்று தானோ என்று நினைத்து… சன்னல் வழியாக வேடிக்கை பார்க்கும் போது அங்கே இரு பறவைகள் சிறகை நனைத்த மழைத்துளியை நழுவ விட்டுக் கொண்டே காற்றில் அதன் காதலை பறி கொடுத்து விடக் கூடாது என்று சிறகை விரித்து ஒன்றோடொன்று உரசி பயணிக்கும் அழகை ரசிக்க தொடங்கும் போது மேகங்கள் விலகி அந்த அந்திமாலை சூரியன் மெல்ல மெல்ல ஒளியை இலேசாக உமிழ்ந்து தன் இன்றைய பணியை முடித்த திருப்தியில் மேற்கு திசையில் மறைய துவங்கவும் நான் எனது நிறுத்தம் இறங்கவும் சரியாக இருந்தது…