அணையாத தீபம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 79 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதாணி இட்ட விரல்களால் ஸ்நானம் செய்த கூந்தலை ஆற்றிக் கொண்டே, மைதிலி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். தாய்மைப் பேற்றை அடைந்திருப்பதால் அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. தந்தத்தில் கடைந்தெடுத்தமாதிரி அவன் கைகள் உருண்டு திரண்டு இருந்தன. அக் கைகளில் நிறையக் கண்ணாடி வளையல்களைப் போட்டிருந்தாள் மைதிலி, வளைகாப்புக்கென்று அவள் கணவன் தில்லியிலிருந்து நல்ல மாதிரியான வளையல்கள் வாங்கி அனுப்பி யிருந்தான். நீல நிறத்தில் மெல்லிய கைத்தறிப் புடவை ஒன்றை உடுத்தி வெள்ளை நிறத்தில் சோலி போட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி, புடவையின் நீல வண்ணம் அவளது சிவந்த கன்னங்களில் நிழல் அடித்தது.

சமையலறையிவிருந்து பார்வதி அம்மாள் – மைதிலியின் தாய் – ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கை எடுத்துக் கொண்டு ஊஞ்சல் அருகில் வந்து நின்றாள். மைதிலியின் அழகைப் பார்த்து அவள் ஆச்சரியம் அடைந்தாள். அவள் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவிக்கொண்டே பார்வதி யோசித்தாள்.

‘இப்படி ஒரு அழகு வந்து உடலை மூடிக் கொண்டிருக்கிறதே! இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே!’ என்று அவள் மிகவும் கவலைப்பட்டாள்.

“நிற்கிறாயே அம்மா! உட்காரேன்!” என்று மைதிலி தாயைப் பார்த்துச் சொல்லி விட்டு, அவள் அமரச் சற்று நகர்ந்தும் உட்கார்ந்து கொண்டாள்.

பார்வதி அம்மாள் உட்கார்ந்து கொண்டாள். பிறகு மகளின் பக்கம் திரும்பி, “உன் புருஷனிடமிருந்து கடிதம் ஏதாவது வந்ததா அம்மா? சீமந்தத்துக்கு நாள் பார்த்தாயிற்று என்று உன்னுடைய அப்பா சொன்னாரே?” என்று கேட்டாள்.

“வந்தது. ஒரு வாரம் லீவில் கிளம்பி வருவதாக எழுதி இருக்கிறார், சீமந்தச் செலவு முழுதும் அவருடையதாக இருக்க வேண்டுமாம். இது அவர்கள் வீட்டுச் செலவுதானே? எனக்கு மாமியார், மாமனார் இல்லாத காரணத்தால் நீங்கள் எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செய்கிறீர்கள்” என்று சொன்னாள் மைதிலி.

“யார் செய்தால் என்ன? நல்லபடியாக முடியவேண்டியது ஒன்றுதானே முக்கியம்? உன்னைக் கையும் குழந்தையுமாக மறுபடியும் உன் புருஷனிடத்தில் சேர்த்து விட்டால் போதும்” என்றாள் பார்வதி.

அவள் கண்களில் கண்ணீர் துளித்திருந்தது. அது ஆனந்தக் கண்ணீரா, அல்லது சோகம் கண்ணீரா என்பது பார்வதிக்கே புரியவில்லை.

மகள் சிரித்தாள்.

“மாப்பிள்ளை கொடுக்கும் பணத்தைப் பேசாமல் வாங்கிக் கொள், அம்மா! திருப்பி நீ அதை எனக்குத்தானே தரப் போகிறாய்?” என்றாள் மைதிலி.

மைதிலி அவர்களுக்கு ஒரே மகள். சீருக்கும், சிறப்புக்கும் குறைவுண்டா?

வெளியே போயிருந்த தகப்பனர் வந்தார்; மகள் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து கொண்டார். கையிலிருந்த மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார்.

“இவ்வளவு எதற்கு அப்பா? திகட்டிப் போகிறதே! எங்கள் தில்லியில் கிடைக்கிற மாதிரி தான் இங்கே கான்பூரிலும் கிடைக்கிறது. வேறே புது மாதிரியாக ஒன்றையும் காணோமே!” என்று சொல்லிக் கொண்டே மிட்டாய்களைச் சாப்பிட்டாள் மைதிலி.

“கண்டதை யெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துப் பிள்ளைத்தாய்ச்சியின் உடம்பைக் கெடுக்கிறீர்களே!” என்று பார்வதி கோபித்துக் கொண்டாள்.

தில்லியிலிருந்து ராமச்சந்திரன் சீமந்தத்துக்கு முன்பாகவே வந்து விட்டான். அவன் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் கூடத்தில் நின்று கொண்டிருந்த மைதிலியைப் பார்த்துப் பிரமித்துப் போனான். தில்லியில் மைதிலி இருந்தபோது மசக்கைத் தொந்தரவினால் இளைத்துப் போயிருந்தாள். அதற்கு மாறாக இப்பொழுது கொழுகொழுவென்று பருத்து, உடலில் வனப்பு மேலிட அவள் நின்றபோது அவன் மனத்தில் சந்தோஷம் பொங்கிப் பெருகியது.

சாப்பாட்டுக்கு அப்புறம் மாடியில் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்கள். பட்டுப்போன்ற அவளது கரங்களைத் தொட்டு அதில் அணித்திருந்த வளையல்களைப் பார்த்தான் ராமச்சந்திரன். விரல்களில் இட்டிருந்த மருதாணிச் சிவப்பும் கண்ணாடி வளையல்களின் பல வர்ணங்களும் அந்த மென் கரங்களுக்கு அப்படி ஒரு அழகை அளித்தன.

“ஹும்.. அப்புறம் என்ன விஷயம் ? இது தான் வளைகாப்பு வளையல்களா? பேஷாக இருக்கிறதே? நான் அனுப்பிய வளையல்கள் எங்கே மைதிலி?” என்று கேட்டான் அவன்.

மைதிலி தன்னுடைய மற்றெரு கரத்தைத் தூக்கி அவன் ஆசையுடன் அனுப்பிய வளையல்களைக் காண்பித்தாள்.

“சரி! உனக்குச் சீமந்தத்துக்கு என்ன வாங்கி வந்திருக்கிறேன் தெரியுமா?” என்று கேட்டான் ராமச்சந்திரன்.

“ஆமாம்! எனக்குத் தெரியாதாக்கும்! தூத் பேடாவும் ஹல்வாவும் வாங்கி வந்திருப்பீர்கள்!” என்றாள் மைதிலி.

அவன் எழுத்து அறைக்குள் சென்று பெட்டியைத் திறந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்தான். அதனுள் அழகிய பட்டுப் புடவை ஒன்று இருந்தது. ஆகாச வர்ணத்தில் ஜரிகையில் நக்ஷத்திரங்கள் போட்ட அந்தப் புடவை நிலவொளியில் ‘தக தக’ வென்று மின்னியது.

”அடேயப்பா! என்ன விலை?” என்று கேட்டாள் மைதிலி மகிழ்ச்சி பொங்க.

“நூற்றைம்பது ரூபாய்!…”

இப்படி, கணவனும் பெற்றோரும் அன்பைச் சொரித்து வந்தார்கள் மைதிலியின் பேரில்.

சீமந்தம் விமரிசையாக நடந்தது. மாலையில் மைதிலியை மனையில் உட்காரவைத்துப் பாடினார்கள். அவள் கணவன் அன்புடன் வாங்கி வந்த நீலப் புடவையை உடுத்திக் கொண்டு அவள் உட்கார்த்திருந்த காட்சி தெய்வலோக மங்கையொருத்தி அலங்கிருதையாக வீற்றிருப்பது போல இருந்தது. மஞ்சன் குங்குமத்துக்கு வந்திருந்த பெண்களே, “அப்பா! என்ன அழகு! இப்படியும் ஒரு பெண்ணுக்கு அழகு வருமா? நல்லபடியாகப் பெற்றுப் பிழைக்க வேண்டுமே!” என்று பேசிக் கொண்டார்கள்.

மைதிலியின் தாய் பார்வதிக்கு மட்டும் மனத்துள் ‘சுரீர்’ என்று ஏதோ வேதனை செய்து கொண்டிருந்தது. ராமச்சந்திரன் சீமந்தம் ஆனபிறகு இரண்டு தினங்களில் ஊருக்குப் புறப்பட்டான். மனைவிக்கு அவரை விட்டுப் பிரியவே மனமில்லை.

“மனசிலே ஏதோ சங்கடம் செய்கிறது. லீவு போட்டு விட்டுப் பிரசவத்தின் போது என்னுடனேயே வந்து தங்கி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள் மைதிலி. அவளுடைய சுந்தர வதனத்தில் துக்கம் பரவியிருந்தது. கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டு ராமச்சந்திரனின் கரங்களை நனைத்தன. அவன் கைகளை எடுத்துக் கண்களை மூடிக் கொண்டு விசித்தாள் மைதிலி.

“பிரசவம் என்றால் பயப்பட வேண்டிய காலம் எல்லாம் போய் விட்டது. நம் பாட்டிகள் காலத்தைப் போல இந்தக் காலத்தில் பிரசவத்தில் கோளாறுகள் ஏற்பட்டு, ஆபத்தில் முடிவதில்லை, தைரியமாக இரு” என்று தேற்றினான் ராமச்சந்திரன்.

எல்லோரும் தெய்வத்தை நம்பியிருந்தார்கள். நான் தவறாமல் நல்ல வைத்தியரிடம் உடம்பைக் காண்பித்து ஜாக்கிரதையுடன் தான் மைதிலி இருந்து வந்தாள்.


தெய்வத்தின் சித்தம் வேறாக இருந்தது. அவள் வழக்கமாக உடம்பைக் காண்பித்து வரும் வைத்தியர் ஊருக்குப் போய்விட்டார். அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் மைதிலிக்கு உடம்பு சரியில்லை, அவசரத்துக்கென்று புது வைத்தியரைத் தேடிப் போனர்கள். அந்த வைத்திய’ விடுதியில் சேர்த்து, விடுதியின் லேடி டாக்டர் குலாப் வந்து பார்க்க நேரமாகி விட்டது. அதற்குள் காலன் அவசரப்பட்டு வந்து விட்டான். பிரசவித்து இரண்டு மணி நேரத்துக்கெல்லாம், உடம்பெல்லாம் நீலமாக விஷம் பரவி அண்மையில் நின்று தவிக்கும் பெற்றோரையும் தங்கச் சிலைபோல் அப்பொழுதுதான் உலகத்துக்கு வந்திருக்கும் பச்சிளங் குழந்தையையும் தவிக்க விட்டு மைதிலி கண்ணை மூடிவிட்டாள்.

அவள் தாய்மை அடைந்து பிறந்தகம் வந்ததிலிருந்து மனத்திலே வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த பார்வதி அம்மாள் எரிமலை வெடிப்பது போல் துக்கத்தால் குமுறினாள். கல்லினும் கடினமாக அவள் தந்தை அசையாமல் உட்கார்ந்து விட்டார். தில்லியிலிருந்து விமானத்தில் பறந்து வந்த கணவன் தலை உடைந்து போகிற மாதிரி துக்கத்தினால் அலறினான்.

அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் அது அவ்வளவு உறுதிப்பட்டு இருந்தது என்பது அவனுடைய எல்லை கடந்த துயரைப் பார்த்தே அறிந்துகொள்ள முடிந்தது.

‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று ஒவ்வொருவருடைய மனமும் தீர்ப்புச் சொல்லி விட்டது போல் அவரவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள்.

டாக்டர் குலாப் ஒரு ஆள் மூலம் தன்னுடைய விடுதியில் குழந்தை – அவர்களுடைய பேத்தி – இருப்பதாக அறிவித்தாள்.

“குழந்தையா அது? என் வயிற்றில் நெருப்பை அள்ளிப் போட்ட எமன்” என்றாள் பாட்டி பார்வதியம்மாள்.

“இருபது வயது வளர்த்த மகளே நொடியில் போய் விட்டாள். இதுதான் தங்கப் போகிறதாக்கும்” என்றார் தாத்தா.

“என் மைதிலியை என்னிடமிருந்து பிரித்த சனியன். அது எக்கேடு கெட்டாவது தொலையட்டும்” என்று கூறிவிட்டு ராமச்சந்திரன் விரக்தியுடன் தில்லிக்குப் போய் விட்டான்.

உலகத்திலே அனுப்பப்படும் ஜீவனைக் காப்பாற்ற சர்வாந்தர்யாமியாக ஒருவன் இருக்கிறான் என்பதை மனித அறிவு மறந்துவிடுகிறது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட அந்தச் சிசுவை வளர்க்க விஷ்ணுகரே என்கிற மராட்டியர் ஒருவரும் அவர் மனைவி கிரிஜா பாயும் முன் வந்தார்கள். முதலில் டாக்டர் குலாப் ஆட்சேபணை செய்தாள். குழந்தையின் சொந்தக்காரர்கள் வந்து கேட்டால் அவர்களிடம் குழந்தையை ஒப்புவித்துவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். குழந்தையின் சொந்தக்காரரின் விலாசம் வேறு கிரிஜா பாயிடம் கொடுத்தாள்.

குழந்தை வேண்டும் என்று தவமிருந்த கிரிஜாபாய்க்குக் குழந்தை கிடைக்கவே, குருடனுக்குக் கண் கிடைத்த மாதிரி இருந்தது.

விஷ்ணுகரே கண்யமான மனிதர், குழந்தையின் தாத்தாவைத் தேடிப் போய்க் குழத்தை தம்மிடம் இருப்பதாகக் கூறினார். அளவுக்கு மீறிய துயரத்தை அளித்த ஆண்டவன் அதை மறக்க ஒரு சிசுவைக் கொடுத்திருப்பதை அறிந்து குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டினார்.

மகளின் பிரியால் சித்தம் சரியில்லாமல் இருந்த பார்வதியம்மாள் ஒரேயடியாக மறுத்தாள். அவள் மனத்தில் சூன்யம் குடி கொண்டு விட்டது.

அது பாலைவனமாகிவிட்டது. பாலைவனத்தில் நீர் தெளித்த மாதிரி கரேயின் வார்த்தைகள் எடுபடாமல் போயின. இனி, பசுவான் ஒருவனால் தான் பாலைவனத்தைப் பசுஞ் சோலையாக மாற்ற முடியும் என்று தீர்மானித்துக் கரே வீடு திரும்பினார். குழந்தை பிறந்தவுடன் எல்லோராலும் திரஸ்கரிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டதால் அதற்குச் ‘சகுந்தலா’ என்று பெயர் வைத்தார்; தாமே கண்வராகவும் மாறினார் கரே.

பார்வதி தம்பதிகள் கான்பூருக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டுத் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார்கள். இனி யாருக்காக மைதிலியின் தகப்பனார் உத்தியோகம் பார்க்க வேண்டும்? எல்லாம்தான் முடிந்து விட்டதே!


காலத்துக்குத்தான் எவ்வளவு வேகம்! மைதிலியின் பெற்றோர் கான்பூரை விட்டுக் கிளம்பும்பொழுது கார்த்திகை மாதம். அதற்குள் தைப்பொங்கல் வந்து சித்திரை வருஷப் பிறப்பும் ஆகிவிட்டது. பண்டிகைகளும் பருவங்களும் மாறி மாறி வந்து போயின. இலை உதிர்ந்து காய்ந்த கம்பாய் நின்ற மரம் தளிர் விட்டுப் பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பழங்களைச் சிந்தின. ஓயாமல் ஒழியாமல் இயற்கை தன் வேலையைச் செய்து கொண்டே போயிற்று. பார்வதி அம்மாளுக்கும் அவள் கணவருக்கும் உலக வாழ்க்கை முதலில் சூன்யமாகத்தான் இருந்தது. காய்த்த மரத்தைப் போல, பிறகு படிப்படியாக மனத்தில் ஆசைகளும் விருப்பங்களும் எழ ஆரம்பித்தன. பதினைத்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு மனத்தில் சுட்ட புண் ஆறித்தானே போயிருக்கும்!

ஆம்! மைதிலி இறந்து போய்ப் பதினைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் பதினைத்து வருஷ காலத்தில் சில சமயங்களில் கான்பூரில் கரேயின் குடும்பத்தில் விட்டு வந்த தங்கள் பேத்தியை நினைத்துப் பேசிக் கொண்டார்கள். ஒரு மாதம் கூட நிரம்பாத குழந்தையை விட்டு வந்தவர்கள் சாவகாசமாகக் குழந்தைக்கு நான்கைத்து வருஷங்கள் கழிந்த பிறகு மனச்சங்கடம் ஆறி அதைப்பற்றி நினைத்தார்கள். எழுதி விசாரிக்கலாமா என்றும் யோசித்தார்கள். கான்பூரிலிருந்து தஞ்சைக்கு வந்திருந்த தென்னிந்தியக் குடும்பத்தினர் ஒருவரைச் சந்தித்து விசாரித்தும் பார்த்தார்கள்.

“கரேயா! அவரை எங்கோ சிம்லாவுக்கு மாற்றி விட்டார்களாமே! அவர் ஊரை விட்டுப் போய் இரண்டு வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டதே!” என்று அவர்கள் தகவல் தெரிவித்த பிறகு, இருவருடைய ஆசையும் நசித்து விட்டது. “நம் வயிற்றில் பிறந்தது ஒன்றுதான், அதுதான் போய் விட்டதே!” என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள்.

அங்கே தில்லியில் ராமச்சந்திரன் மறுமணம் செய்து கொள்ளவேயில்லை. பெயருக்கேற்ப ஏகபத்தினி விரதனாகவே யிருந்து விட்டான். மைதிலியின் உருவம் அவன் மனத்தில் பதித்து போயிருந்தது. புறத்தில் அவன் வேருெருத்தியை மணந்து போலி வாழ்க்கை வாழ ஆசைப்படவில்லை. ஆனால், அவன் மனத்துள் அவன் மைதிலிக்கு ஏதோ தீங்கு இழைத்து விட்டதாகவே கருதினான். இறந்தவளின் ஆத்மா சாந்தியடைந்திருக்குமா என்று ஏங்கினான். மனைவியின் உயிரற்ற உடலுக்கருகில் டாக்டர் குலாபின் வீட்டில் ‘வீல் வீல்’ என்று அழுது கொண்டிருந்த சிசுவின் முகம் அவனுக்கு இலேசாக நினைவு வரும். அந்தக் குழந்தை, ஒரு வேளை அதுவும் போய் விட்டதோ என்னமோ என்று நினைத்துக் கொண்டான். மனைவி ஒருத்தியால் தான் கணவனின் வாழ்க்கை பூர்த்தியடைகிறது என்று நம்பி வந்த அவனுடைய உள்ளத்தில் ஆட்டம் கண்டது.

நாற்பது வயதுக்கு மேல் குழந்தைகளின் பேச்சும் இன்சொல்லும் மனைவியின் அன்பை விட ஆறுதலளிக்க முடியும் என்று நினைத்த போது, அவனுடைய உள்ளம் தன் ஒரே குழந்தைக்காக ஏங்கியது.

விஷ்ணு கரேயின் குடும்பத்தில் தான் எத்தகைய மலர்ச்சி? ஒரு மகவுக்காகத் தவமிருந்த கிரிஜாபாய்க்கு சகுந்தலா கிடைந்த பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.


அன்று கார்த்திகைத் திருநாள், தஞ்சையில் இருந்த பார்வதி அம்மான் இரண்டு அகல் விளக்குகளைக் கொண்டு வந்து வாசல் பிறையில் வைத்து விட்டு உள்ளே போகத் திரும்பினாள். திண்ணையில் உட்கார்த்திருந்த அவள் கணவர் அவளை அழைத்தார்.

“இன்னும் நாலு விளக்குகள் ஏற்றி வைக்கக் கூடாதா?” என்று கேட்டார் அவர்.

“வைக்க வேண்டியதுதான்! என் குடும்ப விளக்கை அணைத்த கடவுளுக்கு நாலு என்ன, லக்ஷ்தீபம் கூட ஏற்றத்தான் வேண்டும்!” என்றாள் பார்வதி அம்மாள். சுருங்கிய அவள் கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி வழிந்தது.

“பொது உருண்டை வேண்டுமென்று அடம் பிடித்தீர்கள். பிடித்து வைத்திருக்கிறேன். தின்னுங்கள். பேரனும் பேத்தியும் குதி போட வேண்டிய வீட்டில் கிழம்தானே துள்ளி விளையாட வேண்டும்!”

கிழவர் அழவில்லை, கோபித்துக் கொள்ளவு மில்லை. சிரித்தார்.

“மூடமே! நம் குடும்ப விளக்கை பகவான் அணைக்க வில்லை. ஒரு பொறி நெருப்பி லிருந்து லக்ஷ தீபங்களை ஏற்றுவது போல, ஒரு சிறு பொறியை – குழந்தையை – நம க்கு க் கொடுத்தான். நாம்தான் அதை அணையாமல் பாதுகாக்கத் தவறிவிட்டோம்!” என்றார்.

பார்வதி அம்மாள் பிரமை பிடித்தவன் போல் நின்றாள். பிறகு, “வருகிறீர்களா?” என்று கேட்டாள்.

“எங்கே?” என்று கேட்டார் கிழவர்.

“ஒவ்வொரு தலமாகச் சென்று கடவுளின் – சன்னிதியில் விளக்கேற்றி வைப்போம். குழந்தை எங்கேயாவது உயிரோடு இருந்தால் பூரண ஆயுளுடன் வாழட்டும், அந்தப் புண்ணியத்தையாவது செய்வோம்” என்றாள்.

அடுத்த நாளே இரண்டு பேருமாகத் தல யாத்திரை கிளம்பி விட்டார்கள்.

தில்லி, ஜனதா எக்ஸ்பிரஸில் ராமச்சந்திரன் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்; “வாழ்க்கையே கசந்து விட்டது சார்! தலயாத்திரை போகிறேன்” என்று.


ராமேஸ்வரத்தில் மூன்று கடல்களும் கலக்கின்றன. பார்வதி அம்மாளும், கிழவரும் தலைப்பைச் சேர்த்து முடிந்துகொண்டு கடலில் இறங்கி ஸ்தானம் செய்தார்கள்.

ராமச்சந்திரன் கடலில் குளித்துக் கரை ஏறியவன் பல வருஷங்களுக்கு அப்புறம் தன் மாமியார் மாமனாரைச் சமுத்திரக் கரையில் கண்டான். கிழவருக்கு அடையாளம் புரிந்து கொள்ளவே தாமதமாயிற்று.

“நம்ப மாப்பிள்ளை!” என்றாள் பார்வதி.

“இன்னும் யார் வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார் அவர்.

“நான்தான் மாமா, மைதிலிக்கு அப்புறம். நான் தனிமரம்!”…என்றான் ராமச்சந்திரன் உணர்ச்சி பொங்கும் குரலில்.

மூவரும் ஒன்றாக ராமநாதசுவாமி ஆலயத்துக்குச் சென்றார்கள். சன்னிதியில் கூட்டம் அதிகம் இல்லை. ஒருபுறம் இம்மூவரும் நின்றிருந்தார்கள். மற்றொருபுறம் ஒரு வட இந்தியக் குடும்பத்தினர் நின்றிருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் நின்றிருந்த இளம் பெண் ஒருத்தியைக் கவனித்தான் ராமச்சந்திரன். பதினைந்து வயது நிரம்பிய அந்தப் பெண்ணின் முகம், அப்படியே மைதிலியைப் போல் இருந்தது. அவன் இருபது வருஷங்களுக்கு முன்பு மணவறையில் முதன் முதலில் சந்தித்த மைதிலியின் முகத்தை அது நினைவு படுத்தியது.

மூலஸ்தானத்தில் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. ராமச்சந்திரன் வியப்போடு அந்தப் பெண்னையே பார்த்தான். மருமகன் அப்படி வியப்புடன் எதைக் கவனிக்கிறான் என்று மாமியார் கவனித்தாள்.

மனைவி, ஸ்ரீராமநாதனைத் தரிசனம் செய்யாமல் எதைப் பார்க்கிறாள் என்று கிழவர் திரும்பிப் பார்த்தார். சுருள் சுருளான கேசமும் கோதுமை வண்ண உடலும் கொண்ட அந்தப் பெண் இவர்கள் மூவரும் தன்னையே பார்ப்பதைக் கண்டு பயந்து, தன் தாயின் பின் பக்கம் சென்று மறைந்து நின்றாள்.

தீபாராதனை முடிந்ததும் பிராகாரத்தில் கிழவர் அந்த வட இந்தியக் குடும்பத் தலைவரிடம் கேட்டார்.

“ஏன், ஸார்! நீங்கள் கான்பூரில் இருந்திருக்கிறீர்களா?”

”ஆமாம் : இருந்திருக்கிறேன். அந்த இடத்தை விட்டுப் பதினாறு வருஷங்கள் ஆயிற்று! – ஏன்?” என்று கேட்டார் அவர்.

“நீங்கள்… நீங்கள்… விஷ்ணுகரே தானே?” என்றார் கிழவர் நாக்குழற.

“ஆமாம்! நான்தான் அது. ஏன்?” என்று ஒன்றும் புரியாமல் விழித்தார் விஷ்ணுகரே.

சகுந்தலா கிடைத்த பிறகு அவர் ஒரு முறை அவர்கள் வீட்டுக்குச் சென்று குழந்தையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அங்கே அன்பு வறண்டு சூன்யமாகி விட்டதைப் பார்த்து, அவர்களைப் பற்றி அவர் அடியோடு மறந்து போனார். ‘குழந்தை தங்களுடையதே’ என்று உள்ளம் நிறைந்து அவளை வளர்த்தார்கள். அவர்களுடைய அன்பின் தூய்மையைக் கண்டு, இறைவன் அவர்களுக்கு, மேலும் மக்கட் செல்வத்தை அருளினார். பிறகு சகுந்தலாவின் தாத்தாவையும் பாட்டியையும், அப்பாவையும் கரே அனேகமாக மறந்து போய் விட்டார்.

“நான்தான் அந்தக் குழந்தையின் தாத்தா சார்! எங்கள் மகளின் குழந்தைதானே சார் அவள்?” என்று உள்ளமும் உடலும் பத்றக் கிழவர் கரேயைப் பார்த்துக் கேட்டார்.

கரே ஒரு கணம் திகைத்து நின்றார். கிரிஜா பாய் தன் அகன்ற விழிகளினால் இந்த அதிசயத்தைப் பார்த்து நின்றாள்.

“பார்வதி! பார்வதி! நம்ப பேத்திதான் இவள், ராமச்சந்திரா! உன் மகள் தானப்பா இவள்! அம்மா! குழந்தை இப்படி வா! உன்னைப் பார்க்கலாம்!” என்று சகுந்தலாவை அழைத்தார் அவர்.

அங்கேதான் பகவான் ராமநாதன் அன்பின் தரத்தை உணர்த்தினான். அவன் நேராகப் பிரத்யட்சமாகும் யுகம் இது அல்ல அல்லவா?

சகுந்தலா திகைத்து விழித்தாள், பேந்தப் பேந்த விழித்தபடி கண்களில் நீர் தளும்பக் கிரிஜாபாயின் உடலோடு சேர்த்து ஒட்டிக் கொண்டு விட்டாள்.

“அம்மா! அவர்கள் யார்? என்னை அவர்களுடன் அனுப்பி விடாதே…” என்றாள் சகுந்தலா மராத்தியில்.

கிரிஜாபாய் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டாள். அந்த அணைப்புக்கு ஈடாக ஜகன் மாதா பார்வதி தேவியின் அன்பு அணைப்பைத்தான் சொல்ல முடியும். உயிரினங்கள் யாவையும் ஆதரிக்கும் அன்பல்லவா அது?

பார்வதி இரண்டடி முன்னால் வந்தவள். இந்தக்காட்சியைக் கண்டு பேச முடியாமல் திகைத்து நின்று விட்டாள். சகுந்தலா கிரிஜா பாயை விட்டு ஒரு அடிகூட முன்னால் நகர வில்லை. “அம்மா!” என்றாள் சகுந்தலா. அவள் முகத்தில் ஏற்பட்ட சோகத்தைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள்.

மூன்று கடல்களும் கலக்கும் சேதுக்கரையில் மணற்பரப்பில் இந்த மூன்று குடும்பங்களும் சந்தித்தன. உட்கார்த்திருந்த ராமச்சத்திரன், பார்வதியிடம் கிழவர் சொன்னார்:

“பிறந்தவுடன் அவளை அநாதையாக்கிய நாம் அவளுக்கு எப்படி உறவினர்கள் ஆவோம்? நீதான் அவளுக்கு எப்படித் தகப்பன் ஆவாய்? நிராதரவாக விடப்பட்ட அந்தச் சிசுவை அள்ளி அணைத்து வளர்க்கத் தவறிய நீ ‘பாட்டி’ என்று உறவு கொண்டாடுவது தர்மமல்ல. குழந்தை அவர்களுடனேயே இருக்கட்டும். அவர்களுடைய அன்புக்கு எதிரில் நம்முடைய ஆசாபாசங்கள் எல்லாம் துச்சமாகி விட்டன” என்றார்.

சேதுக்கரையை அடுத்த ரஸ்தாவில் மாட்டு வண்டியில் கரேயின் குடும்பத்தினர் ரயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். கிரிஜா பாயின் அன்புக் கரங்கள் சருந்தலாவை அணைத்துப் பிடித்திருந்தன.

– கல்கி, 1957-05-19.

சரோஜா ராமமூர்த்தி சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *