அஞ்சலி




திங்கட்கிழமை. முற்பகல் மணி பதினொன்று. சென்னை அசோக் நகர் ஏழாவது நிழற்சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த பேர்ல் பப்ளிகேஷன்ஸ் அலுவலகம். . நிர்வாக இயக்குநரின் அறையின் முன்னால்
காத்திருப்போர் நாற்காலி ஒன்றில் வாட்டசாட்டமான இளைஞன் ராஜேஷ் அமர்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து அந்த அறையிலிருந்து வெளியே வந்த ஒல்லியான இளைஞன் ‘மேடம் ஒங்கள வர சொல்றாங்க ‘ என்றான். ராஜேஷ் அந்த அறைக்குள் சென்றான். அங்கே நிர்வாக இயக்குநர் ஆசனத்தில் கோட் அணிந்திருந்த ஓர் இளம்பெண் அமர்ந்து இருந்தாள் . இவனைப் பார்த்து முகம் மலர்ந்தாள் .
“நீயாப்பா … ராஜேஷ்ன்னா நம்ம கூட படிச்ச ராஜேஷா இருக்கும்னு நான் நெனக்கல வாட் எ சர்ப்பரைஸ் … காலேஜ்ல பார்த்தது .. உட்காரு .. “
“தேங்க்ஸ் சுஜாதா மேம் ” என்றபடியே அவளுக்கு எதிரில் உள்ள நாற்காலியில் ராஜேஷ் அமர்ந்தான்.
சுஜாதா பேசினாள் – ” நீ நம்ம ஆளுங்க வாட்ஸ் அப் க்ரூப்ல எல்லாம் இல்லையே … “
“நான் யார்கூடயும் தொடர்பில் இல்ல யாரும் என் கூட தொடர்பில் இல்ல ” என்று சிரித்தான் ராஜேஷ். . இருவரின் உரையாடல் :
“ஒங்க மேனேஜர் சிவா மூலம் ஒங்க கிட்ட டைம் வாங்கி இருந்தேன் மேம் “
“என்ன மேம் மேம்னு சொல்றே சரி .. கரெக்ட்டா மேட்டருக்கு வந்துட்டியா .. சங்கீதா சேகர் கதைகளை புத்தகமாக எங்க பப்ளிகேஷன்ல வெளியிடணுங்கறதுதானே உன்னோட கோரிக்கை ? “
“ஆமாம் மேம் … ஒங்க பேனர்ல வந்தா நல்லா இருக்கும் … “
“நீ வேர்ட் பைலா அனுப்பி இருந்த ஸ்டோரிஸ் எல்லாம் சிவா சார் அனுப்பினாரு ஒரு கிளான்ஸ் பார்த்தேன். பேர்ல் பப்ளிகேஷன்ஸ் ல வரணும் னு பல பேர் எங்களுக்கு சிபாரிசோட வராங்க .. ஆனா நாங்க ரொம்ப சொந்த பந்தமா இருக்கிறவங்க புத்தகத்தை மட்டும் அவங்கள புரோமோட் பண்ணனும்னு போடறோம்… “
“இவங்களும் சொந்தம் தான் மேம் “
“ஒன்னோட சொந்தம் எப்படி எங்க சொந்தம் ஆவாங்க ? “
“எனக்கு அத்தை … ஒங்களுக்கு சித்தி .. சின்னம்மா ஒங்க அப்பாவோட ரெண்டாவது … “
“ஷட் அப்.. நான்சென்ஸ் கூட படிச்ச ஆளுன்னு ஒன்ன உட்கார வெச்சு பேசினது தப்பா போச்சு ” எழுந்து நின்றாள்.
ராஜேஷும் எழுந்து நின்று பேசினான்.
“கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடி கேளுங்க ..எங்க அத்தை சங்கீதா சேகர்ங்கற பேர்ல எழுதினாங்க .. சேகர்ங்கறது ஒங்க அப்பா ராஜசேகர் ங்கறதிலிருந்து … நீங்க உடனே கோபப்படறதை பார்த்தா ஒங்க அப்பா ஒங்க யாருக்கும் தெரியாம தான் எங்க அத்தையோட குடும்பம் நடத்தி இருக்காரு போல … எங்க அத்தை போனப்ப அவர் மூணாவது மனுசன் மாதிரி வந்து அஞ்சு நிமிஷம் நின்னுட்டு போயிட்டாரு .. எங்க அத்தைக்கு நாங்க இருந்தோம் … நான் , என் மனைவி , என் தம்பி எல்லோரும் சேர்ந்து தான் அவங்க இருக்கும் போது பார்த்துகிட்டோம். போனப்புறம் செய்ய வேண்டியதை முறையா செஞ்சோம். ஒங்க பேனர்ல அவங்க புக்ஸ் வெளிவரணும்னு அவங்களோட நீண்ட நாள் ஆசை. அதை நீங்க நிறைவேத்தி வெச்சா அதுவே நீங்க அவங்களுக்கு செய்யற சிறப்பான அஞ்சலியா இருக்கும் அவங்க ஆத்மா சாந்தி அடையும் .. யோசிங்க .. ஒங்க அப்பா கிட்டயும் பேசுங்க ..இது நடக்காதுன்னாலும் பரவாயில்லை .. எனக்கு நோ ன்னு மெசேஜ் அனுப்புங்க .. நான் பார்த்துக்கறேன். எங்க அத்தையோட ரைட்டிங்ஸ ஜனங்க கிட்ட எப்படி கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும் . தேங்க்ஸ் பார் யுவர் டைம் …”
கூறி விட்டு அவளைப் பார்க்காமல் அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் ராஜேஷ்.
– அத்தை மடி மெத்தையடி, சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பு.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |