விலை
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 97
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கிலைட்டி ஸியாமினி சோமநாதர்.” வழக் காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுகிறாங்க. வாய்க் குள்ள நுழயாட்டிலும் வடிவானபேர். என்ர பேர் பாக்கியம். சிவபாக்கியம், தவபாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இரிக்கிம் எண்டு சிலவேள யோசிப் பன். மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்கிள்ள, வெத்திலத் தோட்டத் துக்கிள்ள கள்ளமொளிச்ச எனக்கு இந்தப் பேரு காணாதா?
‘‘வயது?’’. பேர்போன அப்புக்காத்தரய்யா கூட்டுக்க நிக்கிற, எடுப்பாச் சோடிச்சி வந்திருக்கிற அம்மாவைக் கேக்கிறார். இம்பிட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி.
“வருகிற மாசியில் முப்பத்தொரு வயது முடியும். -நேற்றுத்தான் சமஞ்ச பொடிச்சியாட்டம் இருக்கி. அதுக்கு இத்தின வயசா?
அப்புக்காத்தர்களும் பொரக்கிலாசிகளும் கேக்கிற- கேள்வியளுக்கு ஆருக்கு பதில் தெரியும்? யப்பான்காரன் இந்தப் பக்கத்தில குண்டு போட்ட வருசந்தான் நான் புறந்தனானாம். என்ர அம்மைக்கு இது ஒண்டும் தெரியா. அது வெறும் கிணாந்தி. அப்பனுக்கு ஒண்டும் நினைப்பில்ல. அவரு படிச்சவரு இளயாம்பி கடைக்குப் பேப்பர் படிக்கிற கேக்கப் போவார். அந்தத் தரும் ராசா கதயெல்லாத்தயும் நெஞ்சில வைச்சி ருக்கிற மனுஷனுக்கு இதுகள் தெரியா. ஆனா, விதான யார் மெய்யாக் கனக்கப்படிச்ச ஆள்தான். ஊரில் உள்ள எல்லார்ற புறப்பு வளப்பெல்லாம் அப்பிடியே சொல்லுவார். தோம்பர் அறளபுடிச்ச கிழவன்.
“காதல் திருமணந்தானே?”-இப்பிடிக் குறுக்கால கேப்பாங்க எண்டு அன்னம்மா மச்சாள் சொன்னாள். காசி வாங்கிப் பேசிற அப்புக்காத்தரல்லுவா? சும்மா உடுவாரா?
”ஓம்.”-கூச்சப்படாமல், வெக்கப் படாமல் ஒத்துக் கொள்ளுறாள். போனகிழம அந்தத் தேத்தாதீவுப் பள்ளியில படிக்கிற ஆரோக்கியம்-சமஞ்சு இப்ப மூண்டு மாசம் தானாம்-ஆரோடயோ ஓடீட்டாளாம். இதுகும் எந்த பள்ளியில் படிக்கேக்கிள்ள ஓடிப் போச்சுதோ? விதானயார்ட மோதாவிலதான் என்னப் புளியந்தீவு மாப்புளை கணபதிக்குக் கட்டிக்குடுத்த. முன்னும் பின் னும் இவரத் தெரியவும் மாட்டுது. ஒரு நாள் எங்கட ஊருக்கு விதானயார்தான் கூட்டிக்கு வந்தார். அப்ப அப்பன் உசிரோட இரிக்கி. இவர் ஆள் நல்ல சிவல யும்; களிக்குத்தி மாதிரி. சோக்கான உடுப்புத்தான். அப்பன் ஒருநாளும் சேட்டுப் போடமாட்டுது,
”என்னைப் பார்த்துச் சொல்லும்”-அப்புக்காத்தர் உறுக்கிறார்.
அண்டைக்கு இவர் வெச்ச கண்வாங்காமல் என்னப் பார்க்கிறார். என்ன எல்லாச் சனங்களும் கொத்துக்க இரிக்கிற மாம்பழமெண்டுதான் சொல்லுவாங்க. புளியந்தீவில ஓடாவி வேல செய்து நல்லாச் சம்பாரிக் கிறாரெண்டும் விதானயார் சொன்னார். எல்லாருக்கும் புடிச்சிப் போச்சு. எனக்கும் புடிச்சிட்டு.
முத்தவெளிப் பக்கமாக இருக்கிற வாக மரத்தடியில் வந்து குந்துறன் என்ர மகள் என்ர அம்மையோட சண்டைக்கு நிக்கி. அது என்னத்தக் கொட்டித் தள்ளுது. கடலக் கொட்டை கேட்டு அது புடிக்கிற சண்டயப் பாக்க ஒண்ணா. ஒரு காசிக்கு வேண்டிக் குடுக்கிறன். அம்மையும் நானும் ஒரு வாய்க்கி வெத்தில போடுறம். வெத்தில போட்டால் என்ர வாய் எப்பவும் சிவக்கும். வாய்சிவத்தால் புருஷன் சீவன வச்சுப் பிரியமா இருக்குமாம்.
எங்கட ஊடு, வெட்டுக்காட்டுத் துண்டில, புதிசாக் கட்டின பெரிய ஊட்டுகளுக்குக்கிட்டத்தான் இரிக்கி. ஆனா, அயலட்டையில கூப்பிட்ட குரலுக்குஉதவியில்ல. என்ர இவருக்கு ஓடாவி வேல வசுக் கொம்பனியில் தான். இண்டைக்கு வெள்ளிக்கிழம. தாவரிப்பு வழக்குகள வெள்ளிக்கிழமயளில ஆன் கூப்பிடுறாங்க. இவர் நாயித்துக் கிழமயிலதான் வீட்டில நிப்பார். கொஞ்சம் பூசீட்டா அடுப்படிய விட்டு உசும்ப மாட்டுது மனுஷன். சனியில ஒரு தியால வேலை தான். அண்டைக்குத் தவறணப் பக்கம் போச்சுது எண்டால் கருக்கலுக்க ஆன் வரும். எழுவான் பக்கம் இந்தாள் போனாலே எனக்கி நெஞ்சுக்க இடிஆன். அவர் வேலக் கிப் போணா, மகளத் தூக்கிக் கொண்டு காணிக்கை மாதா கொயிலடிக்கு வந்து கறியப் புளிய வாங்கிற னான். ஓடியாடிச் சமச்சுட்டா பொடிச்சிர முஸ்பாத்தி யில் இரிக்கிலாம். மாங்காட்டில் இரிக்கேக்கில பக்கத்து ஊட்டிலயெல்லாம் போய்க்கதப்பன். இஞ்ச அயலட்ட யில பேச்சுத்துணை இல்லாம வாய் புளிச்சுப்போகும். அம்மை இஞ்ச ஆசை அருமயா வந்தா உண்டு. ஆனா, அதுவும் வந்து ரெண்டு மூண்டு நாள் தங்கினா இவர்ற முகம் கறுத்துப் போகும். நான் என்னத்தக் கண்டன். களுதாவளயான்ர புண்ணியத்திலதான் அந்த நோனாக்கா வந்து சேந்தாளெண்டு முதலில நினச்சன்.
இவர் சாட்சி ஊட்டியில நிண்டு விதானயாரோட பேசுறார். பாவியப்போல நிக்கி. உடம்பும் இளச்சுப் போச்சு. ஆனா இந்த மனுஷன் எனக்குச் செய்த வேலய நினைச்சுப் பாத்தா…வில்லியம் வாஸ் கொஞ்சம் கிழவன்தான். வஸ் கொம்பனியிலஆன் அவருக்கும் ஓடாவி வேல. தல பஞ்சுப் பொட்டிதான்.ஏதோ பேச்சில தன்ர பொஞ்சாதிய இஞ்ச கூட்டிக்கு வந்து இருக்கிற துக்கு வீடில்ல எண்டு சொன்னதாம். மனுஷியும் நல்லது, தனக்குத் தெரியுமெண்டு இவர் சொன்னார். எனக்குப் பாவம் போல இருந்துது. இவரே நாங்க இருக்கிற வெட்டயில ஒரு குடில் போட்டுக் குடுத்திட் டார். சண்டாளி, அவள் இப்பிடிப் புருஷன் கொள்ளி எண்டு நான் எப்பிடிக் கண்டன்? மாங்காட்டில இருக்கே கிள்ள களுவாஞ்சிக்குடி வக்கர்ற பொஞ்சாதிய எனக்குத் தெரியும். வதுளைச் சிங்களத்தி. தமிழ் பேசிற கிளி போலதான். ஆனா, இந்தத் தட்டுவாணி கூட என்ன வடிவாத் தமிழில கொட்டுது.
”டியே புள்ள! வழக்குக் கூப்பிட்டாலும், நீ இஞ்ச நிக்கிறாய்?” என்ர அம்மை சும்மா இருக்கா. எப்பவும் அவசரந்தான்.
பொம்பிள வழக்காளியள் நிக்கிற பக்கம் போறன்.
அப்புக்காத்தரய்யா நல்லாத்தான் கழத்துறார்.
“உம் புருஷன் வேலைக்காரியுடன் தொடர்பு கோண்டதை நீர்நேரில் கண்ணால் பார்த்திருக்கிறீரா?”
“இல்லை. தானும் என் கணவரும் தொடுப் பென்று வேலைக்காரியே என்னிடம் சொன்னாள்.”
எதிரே எதிரியா நிக்கிற துரை பாவம். பெரிய உத்தியோகமாக்கும். மிரிச்ச இடத்துப் புல்லுக் கூடச் சாகாது.
“ஏன் உன் வேலைக்காரி உன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கக்கூடாது?”
என்ர மச்சாள் அன்னம்மா சொன்னது மெய்தான். அவளுக்குக் கோடு- கச்சேரி எல்லாம் ஏறிப் பழக்கம். ரெண்டு தரமல்ல தாவரிப்பு வழக்குப் பேசியிரிக்காள். உடுப்பில பாத்தாப் படிச்ச மனுஷியப் போல இருக்கி. மெய்யாப் பேய் மனுஷிதான். தன்ர புருஷன் வேலக்காரியோட தொடுப்பெண்டால், அவள ஊட்டவுட்டு விரசிப் போட்டுப் புருஷனோட இருக்கிறத விட்டு. இதுக்கெல்லாம் கோடேறிச் சங்கை குறயிறதா?
இந்தக் கண்மாணிக்கத்தான நான் ஒருநாளும் நினைக்கல்ல, வாஸின்ர பொஞ்சாதியோட இவர் தொடுப்பெண்டு. ரெண்டு பேரும் சரசமா சளசண்டியாப் பேசுங்கள். அந்த மனுஷியுமோ இவருக்கு மூப்பு. நீண்டன் பல்லும், குரங்காட்டம்.
இவரத் தம்பி எண்டு கூப்பிடும். கன்னத்து மசிர்கூட ஐஞ்சாறு நரச்சுப்போச்சு. போயும் போயும் அவ ளோட… நான் கறிபுளி வேண்ட காணிக்க மாதா கொயி லடிக்குப் போனா, வேரூண்டி நின்றிடுவன். அவள் தான் தாண்டவன்வெளியாள் கனகம்மா வந்தாளெண் டால் கேக்குவா வேணும்? நல்லவள். ஊர்க்கதயெல் லாம் வரும். நான் காணிக்கமாதா கொயிலடிக்குப் போகேக்கிள்ள இவர் வஸ் கொம்பனிக்கு முன்னால இரிக்கிற தெயிலக்கடையில ஆன் நிப்பார். இந்தாளுக் குத தெயிலைப் பைத்தியமும்.
அண்டைக்கு வரக்கிள்ள மகளும் பிரளி எடுத்துட் டாள். பொட்டிக்காரனிட்ட மலிவாச் சள்ளமீன் கோருவ கிடைச்சுது. சந்தியடிக்குப் போகாம சட்டுப் பிட்டென்று திரும்பீட்டன்.
பக்கூசுக்கதவு ஒள்ளம் கெழுஞ் சிரிந்துது. கோழிகிழி வீட்டுக்குள்ள போய் எடுத்துவெச்ச கூப்பன் அரிசியக் குடிக்கெண்டுஆன் நினச்சன். ‘சூ எண்டு விரசிக் கொண்டு உள்ளுக்க பாஞ்சு போனா எனக்கி நெஞ்சுக்க உலக்கயால இடிச்சபோலான் இருந்து.நான் இவரோட படுத்துத்தான் இந்தப் பொடிச்சியம் பெத்தனான். புருஷனோட படுக்க என்ன வெட்கம்? ஆனா, இந்தக் கிழட்டுக் கூதி பட்டப் பகலில உரிஞ்சி போட்டு என்ற புருஷனோட… அவளுக்குத்தான் அமர் எண்டால், இந் தக் கண் அவிஞ்சு போவானுக்கி என்ன மதி ? எனக்குச் சரியாத்தான் பத்தி வந்திச்சு. எனக்கிக் கோவம் வந்து தெண்டால் அடக்கேலா. அப்பன் சாகிறவரைக்கிம் என்னக் கோவக்காரி எண்டுதான் கூப்பிடும். வந்த விசரில பொடிச்சிய மூலையிலபோட்டுட்டு,வாருவக்கட்டு எடுத்து நோனாக்கு நல்லாக் குடுத்தன். இது ஒரு ரோஷம் கெட்ட மனுஷன். டியே. மாங்காட்டில் குளத்துச் செல்வன் மீனக் கண்ட உன்னக் கூட்டிக்கு வந்து, நேரந்தியாலம் தப்பாமல் தீனிபோட்டகொழுப்பா? பறவேசை ! இண்டைக்கி இப்பவே கொம்மையிட்டப் போயிடு” எண்டு ஊரெடுக்கக் கத்தினான் பாவி. இவர் வாயத் துறந்தால் புடயன் பாம்பு வாயத் துறந்தாப் போலான்.
இழவெடுத்த கோட்டடிக்கு வந்தால் தூங்க வேணும். அன்னம்மா நாலும் அறிஞ்சவள். விளக்கத்துக்கு எடுத்த அந்த வழக்குத்தான் நடக்குது. என்ன கணகாட்டில் நான் பட்டிட்டன்டாப்பா.
ஒரு சுதியில் பேசீட்டுப் போறார். மறுகாச் சரியாப் போயிடு மெண்டு ஆன் நான் சமச்சுக் கிமச்சு வெச்சன். பொழுதுபட்டு ராவாப் போச்சுது. ராக்கண் முழிப்புத் தானாக்கும் பொடிச்சியோட ராக்கண் முழிச்சது போக, இப்ப இந்த மனுஷனின்ர மதத்துக்கு. ராவுபோல நல்லாக் குடிச்சிட்டு வந்தார். மனுஷன் குடிக்கிற ஆன்; வெறிக்கிற ஆன். குடிச்சால் இப்பிடியா தலைகால் தெரியாம நிதானம் போயிடும்? இந்தச் சோக்கில அந்தச் சிங்கள் நோனாவயும் கூட்டிக்கு வந்தார். அவளும் குடிச்சிருக்கவேணும். இல்லாட்டி சட்டைக்கு மேலால காட்டிக்கொண்டு வருவாளா? மொங்கு மொங் கெண்டு கட்டயில போறகையால அடிச்சான் பாவி. ராத்திரி இவர் அவளக் கட்டிப் புடிச்சுக் கொண்டு படுக்க, நானும் பொடிச்சியும் அடுப்படியில் படுத்துக் கொடுகீட்டுக் கிடந்தம். இந்த மனுஷன் என்ன மாடா? ராவெல்லாம் பொடிச்சி ஊரெடுக்கக் கத்தினது காதில் உழேல்லையர? அந்த ஆள் கொள்ளி வந்தாப் புறகு எனக்கென்ன வேலை? நான் மாங்காட்டுக்குப் போயிட் டன். அப்பன் செத்துப் போனாலும், அம்மை உடவா போறா?
மாணிக்கனுக்கு நெடுகயும் என்னில ஒருகண்தான். போகக்கிள்ள வரக்கிள்ள குறுக்கறுத்துப் பாப்பான்.
இப்பிடித்தான். பூமணி- அவளான் புதுக்குடியிருப்பானுக்கி வாழ்க்கப்பட்ட பூமணி- புருஷனோட கோவிச்சுக் கொண்டு வந்து மாங்காட்டில இரிந்தாள். மறுகா என்ன புதினமெண்டா வைரனுக்கி வாழ்க்கப் பட்டு, அவனுக்கும் ஒரு புள்ள பெத்தாள். ஊர்தேச மடிச்சி சொந்தப் புருஷன் திரும்பிவந்து கூப்பிடக்கிள்ள அவன்ர புதுக்காசில மயங்கி, இவனவிட்டு அவனோட ஓடீட்டாள். இதென்ன சீர்கெட்ட வாழ்க்கை? ஒவ்வொரு புருஷனுக்கி ஒவ்வொரு புள்ளயப் பெத்தா சீவிக்கிற?
“உன் கணவன் யோக்யமானவன். அன்புத் தந்தையாகவும் ஆசைக் கணவனாகவும் வாழ்ந்திருக் கிறார். மீண்டும் ஒரு தடவை ஏன் அவருடன் வாழ்ந்து பார்க்கக் கூடாது?’ -நீதவான் நல்ல மனுஷன். அப்பனப்போல புத்தி சொல்லுறார்.
“நான் மாட்டேன். எனக்கு அவர் இனி வேண்டாம்.”மனுஷி ஒத்தக் காலில நிக்கி.
“அப்படியானால் தாபரிப்புத் தொகையை அடுத்த தவணையில் நிர்ணயிக்கிறேன். அடுத்த தவணை”
“மகேஸ்வரி காசுபதி… மகேஸ்வரி காசுபதி.”
என்ர வழக்கை எப்ப எடுக்கப் போறாங்களோ? நான், அம்மையும் பொடிச்சியும் குந்தியிரிக்கிற இடத் துக்கு வாறன். சோனகர்ற பள்ளி வாசலுக்குக்கிட்ட கூட்டமாயிரிக்கி. கந்தூரிக்கி வந்த கூட்டமாக்கும். இது வும் ஒரு கூட்டமா? மாமாங்கத் தான்ட தீத்தக்கரைக்கி “சே சே எண்டுதான் சனம். அண்டைக்கி என்னக் கும்பிடவும் உடல்ல. ஆளுக்கி நல்ல தண்ணி. குடிச்சா இப்பிடித்தான். வீண் கணகாட்டு ஏன் எண்டு யோசிச்சி திரும்பினன். வரக்கிள்ள என்ன நடுறோட்டில் நிப் பாட்டீட்டுப் போய்த் தவறணயிலும் குடிச்சிட்டு வந்துது.
இடஞ்சல் வந்து மூண்டு நாலு நாள்… கொயிலுக்கிப் போறதுக்காக முழுகினனான். பொடிச்சியப் பெத்தபுறகு வந்த முதல் இடஞ்சல். கலங்கலாப் பட்டுக் கொண்டே இருந்துது. சொன்னாக் கேக்கிதா மனுஷன்? ஒரு கட்டு மட்டு இல்லயா? நெடுக நெடுக எண்டால் நான் ஒண்டுக் கிம் ஒள்ளப்பமும் மறுக்கிறல்ல. அண்டைக்கி இடுப்பே அடிச்சிப்போட்ட போல ஆன். பாவாடையெல்லாம் ஒரே துவால. வெத்திலத் துப்பல மிரிச்சுட்டன். புல்லில மிரிச்சுத் துடைக்கிறன்.
கைகால் இரிக்கி புழச்சுத் தின்னலாம் எண்டு நினச்சன். என்ர சின்னம்மைக்காரி கோட்டமுனையில இரிக்கிற மில்லிலா ஆன் வேல. அண்டைக்கு மத்தி யானம் வயித்துக்க எக்கச்சக்கம். காட்டுக்குப் போய் இரிந்திட்டு, தோட்டப் புட்டிக்கிப் பக்கத்தில் இரிக்கிற மடுவுக்கிள்ள அடிக்கழுவலா மெண்டு எட்டிப்பாத்தா, அங்க என்ர சின்னம்மையும் பொம்புளக் கந்தன் சிவலைப் போடியும்… தூ, கோழி மிதிற போல…மறுகா சின்னம்மையோட கதபேச்சில்ல. ஒரு மாசம் மில்லில வேல பாத்திட்டு ஓடியந்த கிட்டிணன்ர தங்கைக்காரி சொன்னது சரிதான். மில்லில் வேலசெய்யிறவள் ஆர் ஆன் யோக்கியம்? பொழுது கிறிகீட்டால் காசிக்கிக் கடப்புத் தூக்கிறவளுகள்தான். நான் இனி எப்பிடிப் போனாலும், இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிற ஆர்? பொழுதுக்கு – ஒரு தியாலத்துக்குத் தேவை யெண்டா ஒம்ப புருஷனும் பிடிக்கலாம். ஆனா, சாகு மட்டும் பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு.. மனிஷன்ர சீவியம் சொல்லிக்கிடக்கா? விதானயார் லேசான ஆளில்ல. அவர் ஆனே தாவரிப்பு வழக்கு வைக்கப் புத்தி சொன்னவர். ‘இவங்களைச் சும்மா விடப்படா. ஒரு பொடிச்சியக் கடசி மட்டும் காப்பாத் துறன் எண்டு சொல்லிக் கட்டுறது. அவளுக்கு ஒரு புள்ளயக் குடுத்திட்டு இன்னொருத்தியோட ஓடுற.
உனக்கில்லாட்டியும், அந்தப் பொடிச்சியின்ர தாவரிப் புக்கு அப்பன் ஏதாச்சும் குடுக்கவலுவா வேணும்? பேசாம நான் சொல்லுற கணக்காத் தாவரிப்பு வழக்கு வை. அப்பான் அந்தச் சிங்களப் பலகாரத்தின்ர இனிப்பில போனவன் திருந்துவான்’ எண்டு விதான யார் விடாப்புடியாச் சொன்னார். இண்டைக்குத்தான் வழக்க விசாரணைக்கு எடுப்பாங்களாம். நசமத்துப் போனவங்கள் எப்ப எடுப்பாங்களோ?
இப்பவும் நான் குமரப் போலான் இரிக்கன். செட்டிபாளயத்து மாணிக்கனப் பாத்துச் சிரிச்சாப் போதும், அவன் என்ன ஓடாவி வேலயா? சொந்தப் பூமி வைச்சி வெள்ளாம செய்யிறவன். ராசாத்தியப் போலதான் என்ன வைச்சிருப்பான். அவண்ட மனத ஆர் கண்ட ? செல்லன்ர அக்கை தாலியறுத்து மூண்டு வரிஷம். இப்ப புள்ள பெத்து இரிக்கிறாள். இந்த ஆம்புளயன்ற குணம் இதுதான், ஒண்டோட அடங்கி றல்ல. நான் எப்பவும் அலுப்புச் சலுப்புச் சொல்லிற தில்ல. எந்த வெறியில வந்து உடம்ப முறிச்சாலும் உடுவன். இவர் சொல்லுறபடி எல்லாம் ஆடுவன். இதுக்குத்தானே ஒரு பொம்புளய ஒரு ஆம்புள இச்சம் பட்டு எடுக்கிற எண்டு நினப்பன். ஆனா கடசியில் அந்தச் சிங்களத்திதான் இனிச்சாள்.
“பாக்கியம்!’ எண்டு விதானயார் என்ர பொரக் கிலாசிக்கிக் கிட்ட வந்து நிண்டு கூப்பிடுறார். அவருக் குப் புறகுக்கு இவரும் நிக்கார். பொரக்கிலாசி ஐயா வுக்கு அம்மை தன்ர தோட்ட ஈடுவெச்சுத்தான் காசி குடுத்தவ. நாயம் தெரிஞ்ச மனுஷனாம்.
”கணபதி உன்னைத் திருப்பி ஏத்துக் கொள்ளு றானாம். இனிக் கைவிட மாட்டானாம்…”
“அந்தச் சிங்களத்தியோட என்னயும் ரெண்டு மாடா வெச்சுச் சாய்க்கப் போறாரா?”
இப்பன் வாய் துறக்கிறார். நான் வெட்டுக்காட்டில இரிந்து போய் ஒரு வருஷம் இரிக்கிம். இரண்டு தவணைக்கி வந்து முகத்த நிமிந்து பாக்கல்ல. இண்டைக்கி ஆன் தூரத்தில நிக்கேக்கிள்ள பாத்தன். இப்ப பாக்க இரக்கமாக் கிடக்கி
“என்ர கிளியான்ர அரிமை தெரியாம நஞ்சு நினச் சுட்டன். அந்தத் தட்டுவாணியின்ர மயக்கம் தெளிஞ் சிட்டு. இனி அவள் ஒண்ணா. அவளோட நான் பெரிய கணகாட்டுப் பட்டுட்டன். அவளுக்கு சவுக்காரத்திக்கும் பவுடரிக்கும் என்னால உழைக்கேலா. உன்ர இந்த தாவரிப்பு வழக்கு நோட்டீஸ் வந்த அடுத்த நாளே அவள் ஏறாவூர் தங்கவேலனோட ஓடீட்டாள். இப்ப அந்தப் புருஷனக்கொள்ளி காளவாச்சேனயில் இரிக்காளாம்”.
அம்மையும் பொடிச்சியெத் தூக்கிக் கொண்டு நாங்க பேசிற இடத்திக்கி வறாவு-
வழக்குப் பேசின இம்புட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி தன்ர பொரக்கிலாசியோட பேசிக் கொண்டிரிக் ரிக்காள்.
‘’கசாது அழிக்கக்கூடாது. அவர்ற சம்பளத்திற்கு இருநூறு ரூபாவாவது தாபரிப்புக் கிடைக்கும். அதை வைச்சுக்கொண்டு நான் சோக்குப் பண்ணுவன்.
“அது உங்கள் இஷ்டம். வாங்கின பணத்துக்கு நான் வழக்குப் பேசுகிறேன்.”
அதுக்கிடையில என்ர பொடிச்சி அப்பனில இறாஞ்சித் தாவுது.
“அவரும் கண்ண மூடீட்டார். இனி ஒரிக்காலும் என்ர மகளக் கைவிட மாட்டனெண்டு களுதாவளயான்ர கொயிலில கப்பூரம் அடிச்சுச் சத்தியம் பண்ணித் தந்தாத் தான் என்ர மகள் மருமகனோட அனுப்புவன். என்ர தோட்டயும் ஈடெடுத்துத் தரவேணும்” எண்டு அம்மை விதானயாரிட்டச் சொல்லுது.
“என்ன கணபதி?”
இவர் தலயாட்டுறார்.
”சத்தியமா?”
“சத்தியமா களுதாவளைப் புள்ளயாரறியச் சத்தியம். என்ற புள்ளயறியச் சத்தியம்”
“இவ்வளவு காலமும் இல்லாத இரக்கம் இப்பான் மகளில் புறந்திரிக்கி” எண்டு நான் முகத்தச் சுழிக்கிறன்.
“அப்ப வழக்கு?”
“சமாதானமாகப் போறனெண்டு பாக்கியம் கோட்டில் சொன்னாப் போதும்.”
பொடிச்சி -கள்ளப் பொட்ட அவர் வாங்கிக்குடுத்த கடலக் கொட்டயக் கொறிக்கிறாள். அம்மை பாவம். வெத்திலயச் சப்புது.
”அக்கினேஸ் செபஸ்தியான் பிள்ளை.” – அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுக்குறாங்க.
மச்சாள் சொன்னது சரி ஆன் என்ர வழக்க எப்பான் எடுக்கப் போறாங்களோ? வெட்டுக் காட்டுக்குனே? நடந்தும் போயிடலாம்.
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 3, 2026
