நெறி
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 83
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்

நீர் வளமும் நிலவளனுங் கொண்டு நாலரணுமணி செய்யும் மாஞ்சோலைச் சிற்றூரிலிரு மரபுஞ் சிறப் புறவமைந்த தமிழ்ப் பெருங்குடியிற் பிறந்து, ஓங்கு புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்குஞ் சான்றாண்மை மிக்கக் குணக்குன்றென முருகவேளனார் வாழும் பெற்றியரெனப் போற்றுதல் மிகைப்படு கூற்றின்வாய்ப் படுவதாக அமையமாட்டாது. என்னையெனில், அவர் அறம் மரீ இய ஒழுக்கத்தையும் அருள் தழீஇய நெஞ்சத் தையும் பெற்றதினாலென்க. அன்றியும், இல்லறமும் நல்லற மாண்புடன் அமைந்தது. கற்புநெறி பிறழாத அவர்தம் இல்லக்கிழத்தி இருள் அழிக்கும் குத்துவிளக் கன்ன மனையறமாம்பும் தகைமையள். நிறைவிற் சிறப் புற்ற அவர்தம் செம்மை சேருள்ளத்தைக் கயவர கத்தி னழுக்காறு போன்ற குறையொன்று மண்டி ஊறுசெய்து வருதலை அவரறிவார். அஃதென்னை யெனில், தென்னவன் மொழியாம் செந்தமிழின் தீஞ்சுவை தனிற்றிளைத்துப் பாவியற்றுந் திறமைமிகு ஆற்றல் பெற்று உயர்கம்பனையும் விஞ்சுஞ் செந்நாப்பாவலனாக இலக்கியப் பணியியற்றுதலை வாழ்க்கையின் குறிக் கோளாக மேற்கொண்டு கற்றோரும் மற்றோரும் போற்றும் பீடுடைய விழுமிய வாழ்க்கையை நெறிப் படுத்திப் பயிலுதல் வேண்டுமென்னும் பெருவிருப்பிற் கொவ்வாது அவர்தம் ஊழ் அமைத்ததனாலென்க. பண்டிதர்ப்பட்டம் பெறுவான் வேண்டிக் கற்றாரா யினுந் தேர்விற்குத் தோற்றினாரல்லர். ஏனோ வெனின், அதற்கிடையிற் பொருளீட்டற் றேவைகள் பிடர்பிடித்துந்தினதாலென்க கலம்வழி வந்து நம் நாடு கொண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயர்தம் மொழி கற்றோர் பெரும் பொருளீட்டிப் பெருவாழ்வு வாழ் தலைக் கண்ணுற்றும் அழுக்காறு கொள்ளாது, மாவடிப் பள்ளியிற்றமிழ் கற்பிக்குந் தொழிலை மேற் கொள்வா ராயினர். பசிநோக்காது கண்துஞ்சாது கடமையையே கண்ணாக இயற்றும் பெற்றியர். கற்பிக்கு மோரை யொழிய மற்றையப் போழ்துகளிற் பாவின்பத்திற் றுய்த் தலைத் தலைக்கொள்ளலானார். இல்லக்கிழத்தியின் இல்லப் பணிகளிலுங் கைகொடுத்துதவு மியல்பினராயி னும், அவற்றிற்குத் தக்க நெறிகளைக் கற்பியா நின்றார், வைகறையிற் றுயிலெழுந்து முன்றிலின் கண் சேர்ந்த கூழங்களை அகற்றுதல் அவர் தம் உடற்பயிற்சியா யமைந்தது. இறை மாட்சியாரின் மிகு கொடையிற் காலூன்றி நின்ற கூட்டுறவுப்பண்ட கூடத்திற்கு இல்லாளின் இனிய வேண்டுதலை நிறை வேற்றுவான் வேண்டிச் செல்வதுமுண்டு. திங்களிறுதி யிலுழைப்பீட்டத்தை இல்லக்கிழத்தியிடம் முழுமையாக ஒப்படைத்தலைக் கடமைகளிற்றலையானதாகக் கொண் டொழுகுபவர். இல்லத்தேரை இல்லாளின் துணை கொண்டு செவ்வனே செலுத்தினாரென்க. அவரை நாம் கையில் நூலுடன் வீட்டுத் திண்ணையிற் காண் போமாயின் அவர் இலக்கியச் சுவையிற்றிளைத்தின் புறுகின்றாரெனக் கொள்ளுதல் தகும். அவர் கற்பான் புகுவனயாவும் இலக்கிய நூல்களேயாம். பறம்பு மலையையுங் கொடையாக வழங்கிப் பாரி மாண்டுவிட அங்கவை சங்கவை பட்ட இடரை நேரிற் கண்டவர் களின் முன்னோர்களே மாஞ்சோலைச் சிற்றூரிற் குடி யேறினார்களென்னும் வரலாற்றுண்மையை ஆலடி மூருகன் கோயிற்செப்பேடு உறுதிப்படுத்துகின்றது. பொருட் பெறுதியறிந்து செலவு செய்யும் மாஞ்சோலைப் பண்பிற்கு முருகவேளனார் பிறழாதவர். இல் லாள்வழி நிற்றல் வேண்டிக் கூட்டுறவுப் பண்ட கூடத் திற்குச் செல்லும் வழியிற் பாணர் நின்று ஆற்றுப் படுத்தாது விடினுந் தென்னவன் நூற்பண்ணை யெனு மேடு கொள் கடையில் ஒரு நாழிகை போழ்து தங்கிச் செல்லுதல் அவர்தம் பெரு வழக்கா யமையும், நூற் பண்ணையில் முருகவேளனார் தணிகை செய்யுங் காலை யாதேனுமொரு நூலில் அவர் தம் விழிகள் நிலைத்துவிட்ட தெனின் வினைகொளற் றொடங்கி விட்டதெனப் பொருள்கொளல் பொருந்துவதாயமை யும். பிற்றை, பண்டகூடத்திற்கொள்ளும் பொருள் களின் இனமும் எடையுங் குறைவுறும். கையிலுள்ள நூலைக் கொண்ட இவ்வினையினை இல்லக்கிழத்தியும் அறிவாள். அப்போழ்து அவளிடந் தோலோதோலெனப் பொருதும் மறம் பிறக்கும் நாவின் கோடையிடி ஒலித்து மடிந்து இணக்கந் தோன்ற பனி அரும்பிப் பைதல் கொள் மாலையாகிவிடும். இவ்வெகுளலை அவர் புன் றொழிலென எண்ணினும், மாஞ்சோலைக் குடிகள் இதனை அகத்திணை மருவிய இன்ப நிகழ்ச்சியாகக் களிப்பர். களிப்பேனோவெனில், ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடிமுயங்கப்பெறின் என்னும் வள்ளுவர் வாய்மொழி பயின்றதினாலென்க. இஃதிவ் வாது நிற்க, முருகவேளனார் இயற்றிய பாக்கள் சில திங்களேடுகளில் வெளிவருதலு முண்டு. அற்றை ஞான்று அவர் வாழ்வது இஞ்ஞாலத் திலில்லை. தைத் திங்கட் கடைநாளில் வந்துள்ள இற்றை ஞான்று அடிசிற்கினியவளின் இன்மொழியை நிறை நிறை வேற்று வான் வேண்டி அவர் கூட்டுறவுப் பண்டகூடத்திற்குப் புறப்படலாயினர். பொங்கல் விழாவிற் பொருள் பெரிதுஞ் செலவாயிற்றென்றும், தலையாய பண்டங்கள் கொள்ளவே பொருளுண்டென்றும், தென்னவன் நூற் பண்ணைப் பக்கல் மறந்துஞ் செல்லல் வேண்டா மென்றும் பலவாறு ஆற்றுப்படுத்திக் கையிருப்புக் கொடுத்துக் கொழுநனை அவரில்லக்கிழத்தி போக்கி வைத்தனள். இல்லா ளியம்பிய இன்சொற்களைத் தலைமேற் கொண்டியற்றும் உறுதியுடன் வந்தாரா யினும் பழக்கப்பண்பினாற் றென்னவன் நூற்பண்ணை மருங்கிற்றங்கலானார். நூல்விற்போன் முறுவலித்து நல்லுரை கூறி வரவேற்று அவர்தம் பாவென்று பொறிக்கப்பட்டிருக்குந் திங்களேட்டினைக் காட் வானாயினன். கருப்பஞ்சாற்றிடத்திற் பனஞ்சாறும் நன்றெனத் தெளிந்து எண்ணித் துணிந்து அவ்வேட் டினை வாங்கித் தமது பாவிற் றிலைத்தின்புறத் தொடங்கினார். அவ்வோரை பிறிதொரு பாவாணரும் ஆண்டு வந்துற்றனர். உரையாடலின்போது தாம் பெரிதுவந்து சுவைக்கும் பாக்களை யாத்த பாவாணரே அவரென யறிந்த முருகவேளனார் மகிழ்ச்சிக் கடலை மாந்தலானார். முழுமுதலிறையை நேரிற் கண்டவனாக மருளும் முருகவேளனாரைத் தமது புதிய பாக்கோவை ஏடொன்றைப் பெற்றுச் சுவையெய்துமாறு பாவாணர் ஆற்றுப்படுத்த விழைந்தனர். கழகப் பருவப் புரவலர்த் தகைமையர் அருகிவரும் இற்றை ஞான்று முருகவேள னார் போன்றோரின் இலக்கியப் பற்றின்கண்பற்றியே புதிய இலக்கியங்கள் வளம்பெறு கின்றதெனவும் பாவாணர் நயம்படவுரைத்தார். நெஞ்சமிளகச் செஞ் பாவாணரின் பாக்கோவைப் படியொன்றினை சொற் வாங்கிய முருகவேளனார் தாம் பாவலராகவும் புரவல ராகவும் உயர்ந்து நிற்பதை நினைந்தின் புற்றனர். பிற்றை, கூட்டுறவுப் பண்டகூடத்திற்குச் செல்லாமலே இல்லம் மீண்டமை பொருளின் மையாலென்க. அற்றை ஞான்று வீட்டின் அடுக்களையிற் இற்புலி படுத் துறங்குங் காட்சியை நெஞ்சுருகப் பாடத் தாம் சத்தி முற்றத்துப் பாவலராக யில்லையேயென்ற குறை எழ ஆறில்லையென்பதை யறிக. ஏனோ வெனில், முருக வேளனார் திளைத்தின் புற்றுக்கொண்டிருக்கும் ஞாலம் இல்லக்கிழத்தியின் கோடையிடிக் குரல்களுங் கேட்காத பாவாணர் மட்டு முய்த்துணரும் வேறொரு ஞாலமென் பதினாலென்க.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஸ்கைலேப்
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
October 3, 2026
வாசமில்லா மலரிது; வசந்தத்தை தேடுது…
ராமன் செல்வராஜ்
October 3, 2026
புகழ்
ஸ்ரீ.தாமோதரன்
October 3, 2026
