விருந்து
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனகுவுக்கு வயிறு புகைந்தது. காலையில் குடித்த வெறுந் தேத்தண்ணி. தேயிலையின் கசப்பு நுனிநாக்கில் ஊறலெடுத்தது. காறி உமிழ்ந்தவன்; மடியிலிருந்த சீவலை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டான். வெற்றிலை சருகாயிருந்தது. அதையும் சுண்ணாம்பு தடவாமலே போட்டுக் கொண்டான். பீடி பற்ற வேண்டும் போலிருந்தது. ‘கையிலை காசில்லாமல் பீடியும் வெத்திலையும் தான்…’ அலுத்துக் கொண்டவன், வீதியில் இறங்கி நடந்தான்.
பவானி ரீச்சரின் ஞாபகம் வந்தது. சின்னச் சின்ன வேலை பூச்செடிகளுக்கு நீர்வார்ப்பது, மண் அணைப்பது, பசளை இடுவது, சடைத்து வளர்ந்துவிட்ட வாழை நிரைகளைச் சீர் செய்வது என்று ஏதாவது அவவிடம் எப்பொழுதும் இருக்கும். கூலி விசயத்திலும் அவ தாராளம்.
கேற்றைத் திறந்தவன், “ரீச்சர்..” என்று குரல் கொடுத்தான். ஆள் சிலமனில்லை. அவ வளர்க்கும் பெட்டை நாய்தான் குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தது. பக்கத்து வீடு பார்த்துத் திரும்பியவனுக்கு, “ரீச்சரில்லை கோயிலுக்கு..” என்று பதில் வந்தது.
‘மாஸ்ரரும் ரியூசனுக்குப் போயிருப்பார்…’ என்று நினைத்தவன், மீளவும் வீதியில் இறங்கி நடந்தான்.
‘எத்தனை நாட்களாகி விட்டன. ஆற அமர இருந்து, வயிறாரச் சாப்பிட்டு… அவள் பெட்டை தனம் பாவம்… கருவுயிர்த்து ஆறுமாசம்… தலைச்சன் பிள்ளை… அது சவலையாகி விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு… அவளுக்கு மட்டுமா… எனக்கு..?’ மனதில் திரண்டு குமையும் நினைவுகள்.
“கனகு, ஒரு நிமிஷம் மோனை!”
பரமசிவத்தாரின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது. “உந்த வேம்பிலை ஏறி இரண்டலக்கு வேப்பம் பூ தட்டி விடணை…. அவள் கடைக்குட்டி வடகம் வேணுமெண்டு ஆசைப்படுறாள்…”
அவர் நயிச்சியமாய்ப் பேசுவதில் இருந்து, அவரிடம் தம்பிடி கூடப்பெயராது என்பது தெரிந்தும், கேட்ட வாய்க்குத் தட்டேலுமே.. என நினைத்தவனாய், வேம்பில் ஏறி, அவர் சுட்டிக் காட்டிய கொம்புகளைத் தட்டிவிட்டுக் கீழே இறங்கி, அவர் நிற்பதையே பொருட்படுத்தாமல் வெளியே நடந்தான்.
இரவு, தீட்டுப்பச்சைக் குறுநலில் தனம் உப்புக் கஞ்சி காச்சினாள்.
‘அவள் பாவம் குடிக்கட்டும்.. என இவன் இருந்தபொழுது, அவள் கஞ்சியை வார்த்து இவன் முன்னால் வைத்தாள்.
“குடியுங்க… எத்தனை நாள்தான் கால்வயிறும் அரை வயிறுமாய்க் கிடக்கேலும்..”
அவளது குரலில் இழைந்த துயரம் இவனைக் கலங்க வைத்தது.
பதில் ஏதும் தராமல் மௌனமாய் எழுந்தவன், பானையை பதில் ஏ. எடுத்துப் பார்த்தான். சிறிதளவு கஞ்சிதான் அதில் மீதமிருந்தது. மீளவும் வந்து, அவள் அருகாக உட்கார்ந்து கொண்டவன், விநயம் ததும்ப, “நீ முதலிலை குடியம்மா..” என்றான்
அவள் இரண்டு வாய் குடித்து விட்டு, பானையில் இருந்ததையும் வார்த்து இவனுக்குத் தந்தாள். குடித்ததாய்ப் பாவனை பண்ணியவன், திரும்பவும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் அவளை உபசரித்து; அவனாகவே இரண்டுவாய் அவளுக்கு ஊட்டவும் செய்தான். அவள் சற்று உணர்ச்சி வசப்பட்டவளாய், அன்பு ததும்ப, விழிகளை அலர்த்தி அவனையே பார்த்திருந்தாள். அந்தக் கண்களின் ஒளிஅவ ஒளி அவனைத் தொட்டது.
“என்னம்மா…. என்ன வேணும்…?” குழைந்தவன், அவளது தழையும் கூந்தலை வருடியபடி, அவளை ஆரத்தழுவி, அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அவனது உள்ளில் ஏதோ உருகிக் கரைவதான உணர்வு. ‘இவள்.. இந்தப் பெட்டையில்லை என்றால்… நொந்து சீரழிஞ்சு போன இந்த வாழ்க்கையில்…. என்ன மிஞ்சும்… உயிர்ப்பும் ஈரமுமாய் இருப்பவள் இவளல்லவா..!”
தனலட்சுமியை அவன் கண்டு உறவு கொண்டதே ஒரு தனிக்கதை.
“சித்தங்கேணிப் பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்காலை, சடைத்துக் கிடககும் பனங்கூடலை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதையிலை நடந்தால் என்ரை குடிசை வரும்…” தவராசா அப்படித்தான் குறிப்புச் சொன்னான்.
“கையிலை மடியிலை ஏதென் முடக்கமெண்டா வீட்டுப்பக்கம் வாவன்… தில்லையற்றை புண்ணியத்திலை நானிப்ப நல்லா இருக்கிறன்..”
“அவன்ரை சொல்லை நம்பி வெளிக்கிட்டாச்சு. வீட்டிலை அவன் இருக்க வேணுமே…! இல்லையெண்டா வெளியிலை தலை காட்டேலாத கிரிசை கேடாய்த்தான் போயிடும்..’
நான்கு நாட்களுக்கு முன்னர், தம்பிராசா வாத்தியார், “அரைத் தூக்கு விறகு கொண்டு வந்து போடுமோனை.” என்று நூற்றி எண்பது ரூபாய் இவனிடம் தந்தார். அதை, ஏதோ அவசரத்துக்குமாறியதால் அவரது முகத்தில் முழிக்க முடியாமவது இவனுக்கு.
‘அந்த விறகை எடுத்துப்போட்டு விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேணும்..’ மனசு கள்ளப்பட்டதான தவிப்பு அவனுக்கு.
‘இவ்வளவு தொகைக்குத் தவராசாவை நம்பிப் போறது சரியா..’ அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
‘மானங் கெட்ட பிழைப்பு..’ என்று மாஸ்ரர் சொல்லி விடக் கூடாதே என்ற பயமும் கவலையும் வேறு அவனை அலைக்கழித்தது.
‘சுன்னாகச் சந்தையிலை தவராசாவை எதேச்சையாகச் சந்தித்தது கூட இந்தச் சிக்கலிலை இருந்து விடுபடத்தானா?’
இருட்டில் இருந்தவனுக்கு வெளிச்சம் காட்டின மாதிரி – ஒரு சந்திப்பு அதென இவன் நினைத்துக் கொண்டான்.
தவராசா சொன்னது போல, பனங் கூடலின் உள்ளாக அந்த ஒற்றையடிப்பாதை முடிவடையும் இடத்தில் அவனது குடிசை இருந்தது.
குடிசை சற்று விசாலமானது. பனை ஓலையால் வேய்ந்தது. புதிதாக, புனிதமாக பர்ணசாலை மாதிரி இருந்தது.
இவன் தயக்கத்துடன் குரல் கொடுத்தான். கூச்சம் குரலில் இழைந்தது.
அதிக உயரமில்லாத, ஒடிந்து விழக்கூடிய இதத்துடன், ஒரு இளைய பெண் – ஒளிரும் தாமிர நிறத்தில், சிறிய மெல்லிய மூக்கும், குழந்தைத்தனம் கசியும் கன்னங்களும், பெரிய கனவு காணும் கண்களுமாக இவனது குரலுக்குப் பதில் தந்தபடி வந்தாள்:
“ஆரது… ஆரைப்பார்க்க வேணும்…?” தடைகளேதுமற்ற சரளம். ஒருகணம் மௌனியாக அவளையே பார்த்தபடி அவன் நின்றான்.
“நீங்கள் கனகுதானே… அண்ணன்ரை..” பேசும்போது அவளது கண்களில் சுடர்த்த ஒளியும், இதமும், கபடற்ற தன்மையும் அந்தப் பனிபடர்ந்த இளங்காலைப் பொழுதில் அவனைப் பரவசம் கொள்ள வைத்தன.
“நீங்கள்..?” என்று தடுமாறியவனைப் பார்த்து “தனலட்சுமி” என்று பதில் தந்தாள்.
மீளவும் குழம்பியவனைப் புரிந்து கொண்டவளாய், தனது வலது கரத்தால் நெற்றியையும் இடது கரத்தால் மோவாயையும் மறைத்த படி நின்றாள்.
அவன், அவளை அடையாளம் கண்டு, ஆச்சரியம் தாளாமல், “எட எங்கடை தவராசான்ரை தங்கச்சி..” என்றான்.
“க்கூம்..” என்று மிழற்றியவள், தொடர்ந்து கலீர் எனச் சிரிக்கவும் செய்தாள்.
அவளது குறும்புத்தனத்தில் திழைத்து நின்றவனை உபசரித்து, குடிசையின் முன்பாக முக்காலி ஒன்றை எடுத்துப்போட்டு உட்கார வைத்தாள்.
“அண்ணை வந்திடும்… இருங்க…” என்றவள், புயலின் வேகத்துடன் வெட்டித்திரும்பி, குடிசையினுள் புகுந்து கொண்டாள்.
திடீரென இருட்டில் விட்டது போலிருந்தது அவனுக்கு. அவனைச் சூழ இருந்த ஒளியும், தூய்மையும், இளமையின் மொட மொடப்பும் அவள் கூடவே போய் விட்டதான உணர்வு அவனுள் விரவியது. முன்பின் உணராத அனுபவமாய் அது அவனுக்குத் தோன்றியது.
ஒருசில நிமிடங்கள் கழித்து, வெளியே வந்தவளது கையில் அலுமினியத்தட்டு. அதில், சுடச் சுடப் பால் அப்பம். மறுகையில் அவன் கை அலம்புவதற்கான நீர்.
“என்ன இது..” என விழித்தவனை,
“அட சும்மா சாப்பிடுங்க.” என்றவள், சட்டென ஒரு பார்வை பார்த்தாள். அதில் இழைந்த, லேசான கண்டிப்பு அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பெற்றவர்களை மிக இளமையிலேயே பறிகொடுத்து, சித்தப்பாவின் தயவில் ஆளான அவனுக்கு, இது மிகவும் பிடித்தமாய் இருந்தது. இப்படி, இந்த அளவுக்குத் தானும்அவனை அக்கறையுடன், கடிந்து கொண்ட பிறிதொரு சந்தர்ப்பத்தை அவனால் ஞாபகம் கொள்ள முடியவில்லை.
‘மனசை அப்படியே ஒளிப்பேதுமில்லாமல் கொட்டிக்காட்டும் இவள், அச்சொட்டாய்த் தவராசா மாதிரித்தான்’ என நினைத்துக் கொண்டான்.
அவன் அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது தவராசா வந்தான்.
“என்ன… பாலப்பமா…? தனத்தின் கை பட்டாலே தனி ருசி..” என்று சிலாகித்தவன்; சிரித்தபடி கனகு வந்த விஷயத்தை விசாரித்தான்.
கனகு தனத்தைப் பார்த்தான்.
“என்னடா.. அவளென்ரை தங்கச்சி. உன்ரை என்ரை எண்டு ஒளிப்பு மறைப்பு ஏதுமில்லை எங்களிட்.ை. சொல்லு..”
கனகு வந்த விபரம் கூறினான்.
“இதுதானே… சரி பார்க்கலாம்… மத்தியானமிருந்து சாப்பிட்டிட்டுப்போ”
இவனால் அதைத் தட்டமுடியவில்லை. அன்று, அந்த வீட்டில் மதியம்வரை இருந்து, தங்கையினதும் அண்ணனினதும் உபசரணையில் திழைத்தான்.
கிழக்குக்கால் உசரியில் இறக்கிய கள்ளும், கோழிக்கறியும் புழுங்கலரிசிச் சோறும் சாப்பிட்ட பின்னர், ஒரு சிறு தூக்கம் வேறு போட்டு விட்டு, இவன் புறப்பட்டபோது, இவனது கைக்குள் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டைப் பொத்தியபடி வைத்தான் தவராசா.
“என்னடா இது… எனக்கு இருநூறு போதும்..” “சரி…சரி உனக்கு ஆகும்போது தா…”
தவராசாவிடம் விடை பெற்ற பொழுது கனகு தனத்தைப் பார்த்தான். அவளது விழிகள் படபடப்புடன் ஏதோ சொல்லிய மாதிரி இருந்தது. எல்லாம் ஒரு கணம்தான். அடுத்தகணம் அவள் விழிகளைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடிக்கு உதடுகளை இறுகக் கடித்தவாறு நின்றாள். அவளை இன்னொரு முறை உற்றுப்பார்த்துவிட்டு இவன் திரும்பி நடந்தான்.
தவராசா அவனைப் பனங்கூடல் எல்லை வரை வந்து விடை தந்தான்.
அதன் பின்னர், வாரத்தில் இரண்டு தரமாவது சித்தங்கேணிப்பக்கம் கனகு போய் வரத்தவறவில்லை. அவனால் தனத்தைப் பார்க்காமல் இருப்பதென்பது இயலாமலே போய் விட்டது. ஒரு சமயம் இவன் போனபொழுது தவராசா இருக்கவில்லை. தனம் தனியாக இருந்தாள். அவள் முன்பாக வந்ததும் ஒருவகைக் கூச்சமும், இன்னது என்று சொல்ல முடியாத படபடப்பும் இவனுள் திகைந்தது. இவன் உள் ஒடுங்கி, ஒதுக்கம் கொண்டது, தனத்துக்குச் சிரிப்பூட்டியது.
குலுங்கி, கலீர் எனச் சிரித்தவள் – அவனது கரங்களைப் பற்றியபடிக்கு “வாருங்கள் நான் ஒண்டும் உங்களை விழுங்கி விட மாட்டன்…” என்றாள்.
அவளது கண்களில் அப்பொழுது ஒளிர்ந்த குளுமை, நிதானம், உதடுகளில் அவிழ்ந்த இனிய இளநகை, எல்லாமே அவனைப் பைத்தியமாக்கின. ‘ஒருமுறை… ஒரே ஒரு முறை அவளை முத்தமிட லாமா…’ என நினைத்தவன். பின்னர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
நல்ல பிள்ளை என்ற பிம்பம் காப்பாற்றப்பட்டதில் அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. அன்று பல மணிநேரம் இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். சின்னச் சின்னப் பேச்சுக்கள், சீண்டல்கள், சிணுங்கல்கள், ஆனாலும் அவர்களிடையே குமிழிட்ட காதலை வெளியிட இருவருமே தயக்கம் கொண்டதாகவே தோன்றியது. ‘துணிந்த பெட்டை’ என இவன் நினைத்த தனமும், இது விஷயத்தில் மௌனம் சாதித்தது, அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிரிய மனமில்லாமலே பேசிக் கொண்டிருந்தவர்கள், நீண்ட நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து எழுந்து கொண்டார்கள்.
“மீண்டும் இந்தப் பக்கம் எப்ப..?”
அவளது கண்கள் கேட்பது போல அவனுக்குத் தோன்றியது. விழிகளுக்கு விடை தேடி அவன் தடுமாறியபொழுது, அவள் திடீரென அவனை நெருங்கி வந்து, அவனது கழுத்தில் தனது கரங்களை வளையமாகத் தவழவிட்டு, அவனது முகத்தைத் தனது முகத்துக்கு நேராக இழுத்து வைத்துக் கொண்டு, அவனது உதடுகளில் மென்மையாக, மிக மென்மையாக முத்தமிட்டாள்.
‘தனது காதலை, இவ்வளவு சுலபமாக தயக்கமேதுமில்லாத துணிவுடன், தன்னால் அவளைப் போல உணர்த்தியிருக்கமுடியுமா; நினைத்த பொழுது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவளை நிமிர்ந்து பார்ப்பதற்கே கூச்சப்பட்டவனாய் மெல்லிய தலையசைப்பில் விடைபெற்றுக் கொண்டான்.
கனகுவுக்கும் தனத்துக்கும் இடையே முகிழ்த்த அந்த ஆழ்ந்த காதலைத் தவராசா உணர்ந்து கொள்ளவே செய்தான். அது பற்றிய அவனது அபிப்பிராயத்தை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னதாக காய்ச்சல் எனப்படுத்தவன், பிறகு எழுந்திருக்கவே இல்லை. அறிவிழந்த நிலையிலேயே அவனது ஆவி பிரிந்து விட்டது.
ஏதோ புது விதமான மூளைக்காய்ச்சல் என மருத்துவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.
அவனது பிரிவால் தனமும் இவனும் இடிந்து போனார்கள். தனிமைப்பட்ட உணர்வால் தவிப்புக் கொண்டனர். உரிமையுடன், இவன்தான் கொள்ளிக்குடம் காவி, அவனது சிதைக்குக் கொள்ளி போட்டான்.
அநாதரவாகி விட்ட தனத்தை, ஊரோடு அழைத்து வருவதைத் தவிர கனகுவுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. கொண்டலடிப்பக்கம் வந்தவன், வைரவர் மேல் சகல பாரத்தையும் போட்டுவிட்டு, ‘கையிலை மடியிலை’ இருந்ததையெல்லாம் போட்டு, அரைப் பவுணில் தாலி செய்து, அவளது கழுத்தில் கட்டினான். பவுணில் மெல்லியதாகக் கொடி செய்ய விரும்பிய பொழுதும் அவனால் முடியவில்லை. ‘மஞ்சள் கயிறே மங்களமானது. இப்போதைக்கு இது போதும்…’ எனத் தனம் கூறியது இவனுக்கு ஆறுதல் தருவதாயிருந்தது.
தவராசா இல்லை என்றான பின்னர், சித்தங்கேணிப்பக்கம் சொத்து சுகம் என்று இவன் அலையவில்லை. தில்லையரும் கனடாச் சுவாத்தியம் ஒத்து வராமல் வந்துவிட்டதாக தகவல். அதை அறிந்த இவன், ஊரோடு இருந்து பிழைப்பதே உத்தமம் என நினைத்துக் கொண்டான்.
தனம் ஆதுரமாக, இனிமை தருபவளாக ஒளிரும் உண்மையாக இருந்ததே அவனுக்கு போதும் போதுமென்ற நிறைவைத் தந்தது. அவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் விட்டு விலகியதுடன், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மேலும் நெருக்கம் கொள்ளவும் இந்த உறவு அவர்களுக்குப் பெரிதும் உதவியது.
“ஆரது கனகுவா.. இஞ்சைவாரும்… இந்த நொங்கு காச்சியிலும்.. மாலைதீவிலும் ஏதாவது ‘முத்தல் கித்தல்’ கிடக்கா பாரும்…”.
மதியம் ஒரு மணிவரை அலைந்து திரிந்த அவனுக்கு, கூலி என ஏதோ குதிர்வது போல இருந்தது.
மணியத்தாரின் மனைவி கனகம் கூப்பிட்டாள். கரும் பூதம் மாதிரி நின்றவளுடைய கண்களில் மட்டும் ஒரு இனிமையான ஒளி, லேசான கருணையும், இதமும் அதில் இணைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
தென்னை மரத்திலேறி முற்றலாகப் பார்த்துக் காய்களைப் பறித்துப் போட்டான். பதினைந்து காய்கள் தேறின. இரண்டு காய்களை, தனது கூலியாக எடுத்தவனை, “இல்லைக் கனகு, ஒரு காயைக் கொண்டு போ…” என்று தடுத்த மணியத்தார், அவனது கையில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றையும் வைக்கத் தவறவில்லை.
அவனால் அதைத் தட்ட முடியவில்லை.
‘ஏன் இந்தத் தயக்கம்… தடுமாற்றம். நியாயத்துக்குக் கூட தலை நிமிராமல், முரண்டு பண்ணாமல் அடங்கிப் போகிற ஒடுக்கம்… இந்தத் தேங்காயும் ஐந்து ரூபாயும் எந்த மூலைக்கு, உக்கிரமாய்க் கனலும் உதரக் கொதியை இது அடக்குமா…?”
தன்னில் தானே கழிவிரக்கம் கொண்டவனாய் – மனமும் உடலும் சோர நடந்தவன், தன்னை மறந்த நிலையில் வீட்டுப் பக்கம் வந்து விட்டதை உணர்ந்தான்.
அடுக்களையில் ஏதோ புகைவது தெரிந்தது.
‘தனம் என்ன செய்கிறாள். சமைப்பதற்கு ஒரு மணி அரிசிதானும் வீட்டில் இல்லையே..! அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“தனம்!” என்று குரல் கொடுத்தான்.
தனம் அகமும் முகமும் மலர வெளியே வந்து, “என்ன” என்றாள்.
பேசும்போது கண்களைச் சுரித்து ஒரு பார்வை பார்த்தாள். இதழ் உடையாமல் சிரித்தாள். அதில் இழைந்த கனிவு இவனது களைப்பை எல்லாம் தூர விலக்கியது.
“என்ன சமையலம்மா..?”
“விருந்து”
“விருந்தோ..?”
“ஓம்… ஓம்… மொட்டைக்கறுப்பன் புழுங்கலிலை சோறு… வெந்தயக் குழம்பு… கறி முருங்கையிலை வறுவல்…”
“அடி சக்கை… அலடின்ரை அதிசய லாம்பு ஏதாவது கிடைச்சதா..?”
“ம்… அது மாதிரித்தான்… வாருங்களன் சொல்லிறன்..”
இவன் கைகால் அலம்பிவிட்டு அடுப்படியுள் நுழைந்தான்.
“கமலாக்கா, பவானி ரீச்சர் வீட்டை மா இடிக்கப் போனாவா… நீயும் வாவன் எண்டு கேட்டா. நான் தட்டேல்லை. கூடப் போனன். வேலை கொஞ்சம் கடுமைதான்.. பத்துக் கொத்தரிசி இடிச்சு வறுக்க வேணும்… இருபது ரூபாய் கூலி… நான் காசு வேண்டாம் அரிசி இருந்தாத் தாருங்க ரீச்சர் எண்டன். அவ நல்ல மாதிரி. முகம் கோணாமல் இரண்டரைப் பேணி அரிசி தந்தா. வெறுவயித்தில போன எனக்குப் பாண்கூட வாங்கித் தந்தா… எனக்குத்தான் தொண்டைக் குழியாலை இறங்கேல்லை. எல்லாம் உங்கடை நினைப்புத்தானப்பா…” அவளது கண்களில் கண்ணீர்.
“விசரி என்ன இது..” என்று பதைத்தவன், எழுந்து சென்று அவளது கண்களை ஆதரவாகத் துடைத்துவிட்டான்.
அவள் மிருதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதில் காதல் ததும்பி வழிந்தது.
“உலையிலை அரிசி வேகுது.. வெந்தயக் குழம்பும் கூட்டியாச்சு… அடுப்பிலை வைச்சு இறக்கினதும் சாப்பிடலாம். கொஞ்சம் பொறுங்க… என்றவள், முருங்கை இலையை இவனது பக்கமாக எடுத்துப் போட்டாள்.
“அசல் இலை… கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டுப் பொன் வறுவலா வறுக்க வேணும்…”
அவனது பேச்சுக்கு தலையசைப்பில் இவள் சரி சொன்னாள்.
அப்பொழுது படலை அடியில் ஏதோ அரவம் கேட்டது.
“தனம்… பிள்ளைதனம்”. கனகு வெளியே வந்து பார்த்தான்.
“தங்கச்சிஅம்மா..”
“அட அவவே..! எத்தனை நாளைக்குப்பிறகு வருகுது மனிசி… வரச் சொல்லுங்க…”
தனம் வெளியே வந்து வரவேற்றாள்.
சிறிய உருவம் வெய்யிலில் உலர்ந்து வற்றலாகி விட்ட உடல். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறங்காட்டும் துவைத்து உலர்த்திய சேலை கட்டியிருந்தாள். முகம் சிறிது வீங்கி, இரத்த சோகையின் அறிகுறிகள் காட்டின. நெற்றி நிறைந்த விபூதி. அள்ளி முடித்த நீர் சொட்டும் கூந்தலில் வெள்ளலரிப் புஷ்பம்.
தனத்தைக் கண்ட மாத்திரத்தில், தங்கச்சி அம்மாவின் கண்கள் மலர்ந்து சிரித்தன. கிழவி, இரண்டு எட்டு வேகமாக எடுத்து வைத்து வந்தாள். இவளது கரங்களை வாஞ்சையுடன் பற்றியபடிக்கு:
“அப்பன்… அந்தப் பாலன். முருகன்ரை விபூதி பிரசாதம் பிள்ளை. பூசணை…. தம்பிக்கும் கொடும்… நல்லூரானிட்டைப் போயிற்று உங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தன்..’
இவள் பிரசாதத்தை வாங்கிப் பூசிக்கொண்டாள். கனகுவுக்கும் பூசிவிட்டாள்.
“அப்பு, உன்ரை கைராசியாக்கும்… நீ போன கிழமை தந்த ஐஞ்சு ரூபாயைத் தொட்டு, மணியத்தாற்ரை மனிசி… சிவம் பெண்டி… முதலாளியார் பெண்சாதி எண்டு எனக்கு நாப்பது ஐம்பது கிடைச்சதப்பு… இப்ப முந்திப்போல ஓடி ஆடி வேலை செய்யமுடியுதே… இல்லை ராசா… எல்லாம் அந்த அப்பையனை நம்பித்தான் நடக்குது.”
“அட இன்னொண்டு தம்பி… உன்ரை பேரிலைதான் இம்முறை திருப்பணிச் சீட்டை எடுத்தனான்.” அவள் மடியிலிருந்து திருப்பணித்துண்டை எடுத்து, இவனது பக்கமாக நீட்டினாள். அதில் மு. கனகசுந்தரம், திருப்பணி ரூபா ஐம்பது என்றிருந்தது.
ஆச்சி ஒரு தனிரகம். ஐந்து, பத்தென்று யார் கொடுத்தாலும் தனது எளிமையான உணவு மற்றும் தேவைகள் போக சிலவேளைகளில் கோயில் பிரசாதமே அவளுக்குப் போதுமானதாய் விடும் – மீதிப்பணத்தைச் சேமித்து, தனக்கு உதவுபவர்கள் பெயரில் திருப்பணித் துண்டு எடுத்து விடுவாள். இம்முறை கனகுவின் பெயருக்கு எடுத்திருந்தாள்.
ஆச்சியின் அன்பு கனகுவையும் தனத்தையும் உருகவைத்தது. இருவரும் அவளை உணர்ச்சி பொங்கப் பார்த்தனர்.
“இப்படி உள்ள வாருங்க ஆச்சி..” என்று பலகை ஒன்றை எடுத்துப் போட்டாள் தனம். தங்கச்சிஅம்மா வந்து, போட்ட பலகையில் உட்கார்ந்து கொண்டாள்.
கனகு கிணற்றடிப்பக்கம் போனான். அவன் குளித்து விட்டு வந்த பொழுது உணவு தயாராகி இருந்தது.
மூன்று இலைகளில் உணவைத் தனம் பரிமாறிய பொழுது, கனகு அவளது காதைக் கடித்தான்:
“சோறு போதுமா…?”
“எல்லாம் போதும். பேசாமல் இருங்க..” அவள் பதிலுக்கு முணுமுணுத்தாள்.
அன்று மிகுந்த பசியுடன் இருந்த இருவரது உணவை, மூவர் பகிர்ந்து கொண்டார்கள். அதுவும் எதுவித மனத்தடைகளுமின்றி. தனம், தனக்குச் சற்றுக் குறைத்துக் கொண்டதாகவே கனகுவிற்கு தோன்றியது.
கன குவின் மன உளைச்சலைப் புரிந்து கொண்டவளாய், அவள்: “எல்லாம் இரவுபார்த்துக் கொள்ளலாம்…” என்று மெதுவாகச் சொன்னாள்.
கனகுவிற்கு அது திருப்தியாக இருந்தது.
சாப்பிட்டபடியே கிழவி சளசளத்துக் கொண்டிருந்தது.
“தங்கச்சிக்கு இப்ப ஆறு மாசமே. வயிறு சிறப்பமாயிருக்கு… அந்த முருகன்… அந்தப் பாலன்தான் தங்கச்சியின்ரை வயித்திலை வந்து பிறக்கப் போறார்… பிள்ளை ஒண்டு சொல்லிறன் கேளும்… நான் அந்தப் பாலனிட்டை எதைக் கேட்டுக் கும்பிடுறது… எல்லாரும் கேட்டால் அந்தக் குழந்தையாலை என்ன செய்யமுடியும் சொல்லுமன்… அண்டைக்கு மாம்பழத் திருவிழா… இந்த மாம்பழத்துக்குத்தானே எங்கடை பாலன் உலகத்தையே சுத்தினவர். அது அவருக்குக் கிடைக்காமல் போகிட்டுதெண்ட துக்கத்திலை எனக்குத் தொண்டையே அடைச்சுப் போட்டுது பிள்ளை.. நான் அண்டைக்கு மாம்பழம் குடுத்து அவருக்கு அர்ச்சனை செய்த பிறகுதான், மனசே ஆறுதல் பட்டதனை…”
கதை கேட்டபடிக்கு, தனம் வெத்திலைப் பெட்டியை எடுத்து கிழவிக்கு முன்பாக நகர்த்தினாள்.
“ஏது வெத்திலை…” கனகு கேட்டான்.
“மாமா கடையிலை வாங்கினது…”
கனகுவுக்கு வாய் ஊறலெடுத்தது. அவனும் வெற்றிலை போட்டுக் கொண்டான். நிதானமாக வெற்றிலை போட்ட கிழவி, எழுந்து கொண்டாள்.
கனகுவும் தனமும் கூடவே எழுந்து, படலைவரை வந்து, கிழவியை வழியனுப்பினார்கள்.
கிழவி போவதையே பார்த்தபடி நின்றவர்கள், திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து, மௌனமாக சிரித்துக் கொண்டார்கள்.
அந்தச் சிரிப்பில் கவலைகள் கரைந்த ஒரு இதம் இருந்தது.
– கலைமுகம், 1981,
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
                ![]()  | 
                                க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... | 
 கதையாசிரியர்: 
 கதைத்தொகுப்பு: 
                                    
 கதைப்பதிவு: July 12, 2025
 பார்வையிட்டோர்: 730  
                                    
                    