வாழ்க்கை என்பது…
கதையாசிரியர்: டி.என்.இமாஜான்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 366
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோப்புத்துறை அழகிய கிராமம். ஊரின் பெயருக்கேற்றாற் போலவே தோப்பும், நீர் நிலைகளும் நிறைந்திருந்தது. அந்த ஊருக்குத்தான் எனது கம்பெனியிலிருந்து மாற்றலாக்கி இருந்தார்கள்,
நகர வாழ்க்கையிலேயே வாழ்ந்தவன். இப்போது தான் முதன் முதலாக நீண்ட நாட்களுக்கு கிராம வாழ்க்கையை தொடங்கப் போகிறேன்!
இனி என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சென்னை புதுக் கல்லூரியில் எனது பி.எஸ்.ஸி டிகிரியை முடித்தேன். வயதான பெற்றோர்கள் உண்டு. நான் எந்த ஊருக்கு வேலை மாற்றலாகிப் போனாலும் அவர்களும் என் கூடவே வந்து விடுவார்கள். நான் ஒரே பிள்ளை. எனது சந்தோஷத்துக்காகவே தான் அவர்கள் வாழ்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இன்னும் நான் தனிக்கட்டை தான்.
எங்களது உறவினர்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே உறவிழந்தவர்கள் ஆனார்கள்.
எனக்கு வேலை மாற்றலுடன் இந்த ஊர் கிளைக்கு பதவி உயர்வாக மானேஜர் போஸ்ட்டும் கிடைத்திருந்தது. இந்த ஊரில் ஒரு வாடகை வீடு பார்த்து, எனது பெற்றோரையும் கொண்டு வந்து தங்கச் செய்தேன்.
இனி எனது கம்பெனி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அது ஒரு தோல் ஏற்றுமதி தொழிற்சாலை. பல பேர் வேலை பார்க்கும் இந்தக் கம்பெனியில் நான் ஒரு மானேஜராக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
இங்கு வேலை பார்ப்பவர்களில் ஒவ்வொருத்தரும் ஒரு ரகம். அதில் ஒரு முதியவர் என்னை மிகவும் கவர்ந்தார். இந்த வயதிலும் வேலையில் அவர் காட்டும் ஆர்வம், சுறுசுறுப்பு, நேர்மை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தினமும் அவருக்கு அவரது வயதுக்கு வந்த பெண் தான் மதியச் சாப்பாடு கொண்டு வந்து தருவாள்.
அவள் பார்த்தவுடனேயே யாரையும் வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருந்தாள். நிமிராத நடை. பேசும் லாவகம். அனைத்தும் எனக்குப் பிடித்துப் போயிருந்தது.
நான் தினமும் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பேன். அவளது நடவடிக்கைகளை அணு அணுவாக அணுவாக ரசித்துக் கொண்டிருப்பேன்.
அவள் எப்போதாவது ஒப்புக்காக என்னை ஒரு பார்வை பார்த்து வைப்பாள். நாளாக நாளாக அவள் மேல் எனக்கு இலேசான காதல் அரும்பியிருந்தது. அவளுக்கு என் மேல் எதுவும் அரும்பியிருக்காது என்பதுவும் எனக்குத் தெரியும்.
நாட்கள் உருண்டு கொண்டே வாரங்களைத் தொட்டு அதுவும் சில மாதங்களாகிப் போனது.
ஒரு நாள் எனது கம்பெனியில் வேலை பார்க்கும் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்து தனது மகளுக்குத் திருமணம் எனவும், நான் அவசியம் வரவேண்டுமென்றும் பணித்தார்.
அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பது எனக்கு அப்போது தான் தெரிய வந்தது. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களுக்கும் மேல் இருந்தது.
திருமணம் நிச்சயமான பிறகும் அவள் தனது தந்தைக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து கொண்டிருந்தாள். நான் இப்போதெல்லாம் அவளை ஓரக்கண்ணால் கூட பார்ப்பதில்லை.
இன்னும் சில நாட்களில் இன்னொருத்தனின் மனைவியாகப் போகிறவள் என்ற குறுகுறுப்பு என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.
திருமணம் அவர் வீட்டிலேயே நடக்க இருப்பதாகவும் மாப்பிள்ளை வெளியூர்க்காரர் எனவும் அந்த முதியவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
திருமண நாளும் வந்தது. எனது பெற்றோரையும் அழைத்துக் கொண்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமண வீட்டில் அந்த பெரியவர் என்னையும் என் பெற்றோரையும் அன்பாக வரவேற்று உபசரித்தார்.
நீண்ட நேரம் நான் அங்கு காத்திருந்தேன். மாப்பிள்ளை வீட்டார் வந்த பாடில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பெண் வீட்டில் அனைவரும் பதட்டமாய் இருந்தனர்.
இன்னும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை காரில் வந்துகொண்டிருந்த போது பஸ்ஸில் மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டும் வந்தது.
அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். சிலர் பெண் வீட்டிலேயே அழ ஆரம்பித்துவிட்டனர். அந்த முதியவருக்கு அந்தச் செய்தி கேட்டதுமே மூர்ச்சையாகி கீழே விழ நேரிட்டது. மணப் பெண்ணின் தாய் ஒப்பாரி ஓலமிட்டாள். இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மிகவும் மனசு சங்கடமானது.
‘எல்லாம் இந்தச் சனியனோட ராசி, இப்படி ஆகிப் போச்சு!’ மணப் பெண்ணின் உறவினர்களில் ஒருத்தி திட்டிக் கொண்டிருந்தாள்.
இன்னும் பலரும் பலவாறாக அந்த மணப்பெண்ணையே திட்டிக் கொண்டிருந்தனர்.
முகூர்த்த நேரம் முடிவதற்குள், நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைத்து, உடனேயே என் பெற்றோரிடம் அந்தக் கல்யாணப் பந்தலிலேயே சம்மதமும் வாங்கி விட்டேன்.
கல்யாணப் பந்தலிலேயே இதை அனைவரிடமும் அறிவித்தேன். அனைவரும் என்னை ஆச்சரியங் கலந்த முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்ணின் தகப்பனாரும் இதற்கு சம்மதித்தார். உறவினர்களும் சம்மதித்தனர். அவளும் தலையை ஆட்டிவிட்டாள்.
சரியான முகூர்த்த நேரத்தில் அவளது கழுத்தில் தாலி கட்டினேன். அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.
‘எனக்கு அப்போதே தெரியும். அவளுடைய நல்ல குணத்துக்கும், பண்புக்கும், ஒரு நல்ல படிச்ச, அழகான கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை கிடைப்பான்னு! அதிர்ஷ்டக்காரி, கொடுத்து வெச்சவள்!’ ஒருத்தி சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது!
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
அகம் + தை = அகந்தை
மா.வீ.தியாகராசன்
September 9, 2026
பந்தபாசம்
நீர்வை பொன்னையன்
September 9, 2026
காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
காஞ்சி.தங்கமணி
September 9, 2026