வாணீபுர வணிகன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 757
(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மூன்றாம் அங்கம் | நான்காம் அங்கம் | ஐந்தாம் அங்கம்
முதற் காட்சி
இடம் – வாணீபுரம். நியாயஸ்தலம்.
வாணீபுரத் தரசன், மந்திரிகள் முதலானோருடனும் அநந்தநாதன், பானுசேனன், கிரிஜாநாதன், சோமேஸ்வரன் சாம்பநாதன் முதலானோருடனும் வருகிறான்.
வா.அ. எங்கே, அநந்தநாதர் இங்கு வந்திருக்கின்றாரா?
அ. சித்தம், மகாராஜா, தங்கள் தயவை எதிர்பார்க்கின்றேன்.
வா.அ.ஐயா, உமது விஷயத்தில் எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கின்றது. நீர் இப்பொழுது கருங் கல்லினும் கடினமான சித்தமுடைய, பச்சாதாப மென்பதைக் கனவிலும் கருதாத, கருணை யென்பது நெஞ்சில் கடுகு அளவும் இல்லாத காதகன். கையிற்பட்டு, அவனுக்கு உத்தரவு சொல்ல வேண்டி வந்திருக்கிறது என்பதை அறிவீரல்லவா?
அ. அவனது கடூரமான மார்க்கத்தினின்றும் அவனைச் சாந்தப் படுத்தி, அவன் மனத்தை திருப்பும்பொருட்டு, மஹாராஜா அவர்கள் மிகுந்த கஷ்டம் எடுத்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆயினும் அவனோ ஒரே பிடிவாதமாயிருக்கின்றான்; அவனது மாச்சரியத்தினின்றும் என்னை மீட்டுக்கொள்ள நியாய மார்க்கம் ஒன்றும் காணோம்; ஆகவே, அவனது ஆக்ரிஷத்தையெல்லாம் நான் பொறுக்க வேண்டியது தான்; அவனது கொடுமையையும் கோபத்தையும் சாந்தத்துடன் சகித்துக்கொள்ளச் சித்தமாக யிருக்கின்றேன்.
வா.அ. ஒருவன் போய் அந்தச் சமணனை அழைத்து வாருங்கள் சபைக்கு.
சோ. வாயிலண்டை காத்திருக்கிறான். இதோ வருகிறான். அரசே.
ஷாம்லால் வருகிறான்.
வா.அ. வழி விடுங்கள்; நமது சமூகத்திற்கு நேராக வந்து நிற்கட்டு மவன். ஷாம்லால், கடைசி நிமிஷம்வரையில் இவ்வாறு தீய குண முடையவன்போ லிருந்து, முடிவில் இப்பொழுது உன்னிடம் மேலுக்குத் தோன்றும் ஆச்சரியகரமான கடூர குணத்திலும், அதிக ஆச்சரியமான ஜீவகாருண்யத்தையும் பச்சாத்தாபத்தையும் காட்டப்போகிறா யென்று நானும் நினைக்கின்றேன், மற்றெல்லோரும் அப்படியே நினைக்கின் றனர். அன்றியும் இப்பொழுது நீ கட்டாயமாய்க் கேட்கும் இந்தச் செல்வமிழந்த வர்த்தகனுடைய உடம்பில் ஒரு ராத்தல் மாம்சமாகிய அபராதத்தை, க்ஷமிப்பதுமன்றி, பச்சாத்தாப மென்பதைக் கொஞ்சமேனும் பாராட்டத் தேர்ந்திலாத பிடிவாதமுடைய பாதகரான பாமரர்களுடைய கல்லினும் கடின மனத்தையும், இரும்பை யொத்த ஹிருதயத்தையும் இளகச்செய்து கருணை கூறும்படிச் செய்யத்தக்க, ஒன்றின்மே லொன்றாய்த் தாளமுடியாதபடி தற்காலம் இவருக்கு நேர்ந் திருக்கிற, கோடீஸ்வரனான வர்த்தகனையும் குன்றச் செய்யும் நஷ்டங்களை, பரிவுடைக் கண்களாற் கண்டு, ஜீவதயை மிகுந்தவனாய், அன்புகூர்ந்து, அவர் கொடுக்கவேண்டிய அசலிலேயே அரைப் பங்கு தள்ளிக் கொடுப்பாய் என்றும், நினைக்கின்றோம். உனது பரிவுடைய பதிலை எதிர்பார்க்கிறோம் நாங்கள் எல்லோரும்.
ஷா. என்னுடைய எண்ணத்தை முன்பே சந்நிதானத்திற்கு அறி வித்திருக்கின்றேன். என்னுடைய மதத்தின்மீது ஆணையிட்டு, எப்படியாவது என் பத்திரத்தின்படி எனக்குச் சேர வேண்டிய அபராதத்தைப் பெறுவேன், என்று சத்தியம் செய்திருக்கிறேன். அதைக் கொடுக்கமாட்டேன் என்று நீர் கூறிவிட்டால், அந்தப் பழி உமது செங்கோலையும், ராஜ்யத்தையும் சேரட்டும். மூவாயிரம் பொன்னைப் பெறாது புலால் வீசும் புன்மையான சிறிது மாம்சத்தை ஏன் இச்சிக்கின்றேன் என்று நீர் கேட்பீர்; அதற்கு நான் காரணம் கூறமாட்டேன். அது என் இஷ்டம் என்பேன். போதுமோ பதில்? என் வீட்டில் ஒரு எலி உபத்திரவம் செய்ய. அதை அழிப்பவனுக்குப் பதினாயிரம் போன் தர நான் இச்சை கொண்டால், அதற்கென் சொல்வீர்? என்ன? உமது கேள்விக்குப் பதில் போதுமா? சில மனிதர்களுக்கு, வாயைத் திறந்து கொண்டிருக்கும் வராகத்தைப் பார்க்க வெறுப்புண்டாகும்; சிலருக்கு, குலைக்கும் நாயைக் கண்டால், கோபம் அதிகமாய் மூளும்; சிலருக்கு, துருத்தியைப் பிடித்து ஒருவன் ஊதினால், துடப்பத்தை எடுத்து அடிக்கலாமா என்று தோற்றும்.பிரீதியானது நமது குணாகுணங்களுக்கு எஜமானனாகி, தன் விருப்பு வெறுப்பின்படி, அவைகளை ஆட்டி வைக்கின்றது. இப்பொழுது உமது கேள்விக்கு விடையைக் கேளும்; ‘வாயைத் துறந்துக்கொண்டிருக்கும் வராகத்தைக் கண்டால் உனக்கென்ன? ஒரு குற்றமும் செய்யா நாயைக் கண்டால் உனக்கென்ன? துருத்தியைப் பிடித்து ஒருவன் ஊதினால் உனக்கென்ன?’ என்று நாம் கேட்டால், எப்படி அவர்களெல்லோரும், அதற்குத் தக்க நியாய மொன்றும் எடுத்துரைக்க முடியாது, தங்களுக்கு வெறுப்புண்டாவதினால் அவர்கள் மீது வெறுப்பு கொள்ளும்படியான, விலக்க முடியாத அத்தனை வெட்கத்திற்கு ஆளாகின்றனரோ; அவ்விதமே, வேறு நியாயம் சொல்ல என்னால் ஏலாது; நான் சொல்லவும் போகிறதில்லை. எனக்கு நஷ்டம் வரும்படியாக இவ்வழக்கை அவர்மீது நான் விடாது தொடர்வதற்குக் காரணம் அநந்தநாதர்மீ தெனக் கிருக்கும் துவேஷமே; என் மனத்தில் குடிகொண்டிருக்கும் அவர்மீதுள்ள வெறுப்பே. உமது கேள்விக்குப் பதில் பெற்றீரா?
பா. பச்சாத்தாப மில்லாத பாபியே! உனது குரூரமான கிருத்தியத்தை க்ஷமிப்பதற்குத் தக்க பதில் ஆகாதே இது.
ஷா. உனக்கு நான் பதில் சொல்லி, உன்னைத் திருப்தி செய்ய வேண்டிய நியாய மில்லை.
பா. தங்களுக்கு அன்பில்லாத பொருளை அழிக்கின்றார்களா எல்லா மனிதர்களும்.?
ஷா. தனக்கு அழிக்க மன மில்லாத பொருளை வெறுக்கின்றானா எவனாவது?
பா. முதற் குற்றத்திற்கே ஜன்மத் துவேஷம் பாராட்டலாமா?
ஷா. என்ன! உன்னை ஒரு பாம்பு இரண்டு முறை கடிக்கவிடு வாயோ?
அ. உன்னை வேண்டுகிறேன். அவனிடத்தில் ஏன் வீண் வார்த் தையாடுகிறாய்? அதைவிட, சமுத்திரக்கரையோரம் சென்று சப்திக்கின்ற அலைகளை அடங்கி யிருக்கும்படிச் சொல்ல லாம், தன் குட்டிக்காக தாய் ஆட்டை ஏன் கூவி யழச் செய்கிறாயென்று கோனாயிடம் நியாயம் கேட்கலாம்; பெருங் காற்றினால் மோதப்படும்பொழுது, மலைமீதுள்ள பெரு மரங் களைத் தங்களுடைய உயர்ந்த சிகரங்களைச்சலனப்படவிடாம லும் சப்திக்காமலும் இருக்கும்படி கட்டளை யிடலாம் இதைப்பார்க்கிலும் கடினமான பொருள் உலகத்தில் இல்லை யென்று சொல்லும்படியான, ந்த மாறுபாடியின் மனத்தை இளகச்செய்ய முயல்வதைவிட, வேறு எந்த அசாத்தியமான காரியத்தையும் செய்து முடிக்கலாம். ஆகவே உன்னை வேண்டுகிறேன்; இனி ஒன்றும் கொடுப்பதாக நீ கூறவேண் டாம், வேறு பிரயத்னம் ஒன்றும் செய்யவேண்டாம். ஆலஸ் யம் ஒன்றுமில்லாமல் அதிவிரைவினிலேயே எனக்கு நியா யம் சொல்லப்படட்டும், சமணன் தன் இச்சைப்படி நடத்தட்டும்.
பா.உன்னுடைய மூவாயிரம் பொன்னுக்காக இதோ ஆறாயிரம் பொன் இருக்கிறது.
ஷா. அந்த ஆறாயிரம் பொன்னில் ஒவ்வொரு பொன்னையும் ஆறாக வகுத்து, அந்த ஒவ்வொரு பாகமும், ஒரு பொன்னா யிருந்தாலும், அதை நான் வாங்கிக்கொள்ளமாட்டேன்; என் பத்திரத்தின்படியே நான் பெறுவேன்.
வா.அ.நீ மற்றவர்களிடம் கருணை பாராட்டாவிட்டால் மற்றவர்கள் உன்னிடம் எப்படி கருணை பாராட்டுவார்கள் என்று எண்ணுகின்றாய்?
ஷா. நான் தப்பிதம் ஒன்றும் செய்யாவிட்டால், மற்றவர்களு டைய கருணையை எதிர்பார்த்து அஞ்சுவானேன்? உங்க ளிடத்தில் நீங்கள் விலைக்கு வாங்கிய எத்தனை அடிமைக்கா ரப் பறையர்கள் இருக்கிறார்கள்? அவர்களை உங்களுடைய ஆடுமாடுகள் கழுதைகளைப்போல உங்களுக்கு ஈனமான அடிமைத் தொழில்கள் புரியும்படி செய்கிறீர்கள்; ஏன்? நீங்கள் விலை கொடுத்து வாங்கியபடியால் ; அவர்களை அடி மைத் தனத்தினின்றும் நீக்கிவிடுங்கள்; உங்கள் பெண்டு பிள்ளைகளுக்குக் கலியாணம் செய்துக்கொள்ளுங்கள் ; ஏன் அவர்கள் சுமைகளைத் தூக்கி வியர்க்கவேண்டும்? உங களைப்போலவே அவர்களுக்கும் மிருதுவான மஞ்சங்கள் கொடுத்து, நீங்கள் உண்ணும் ருசியான உணவையே அவர் களுக்கும் கொடுக்கின்றது தானே? என்று நான் சொல்வே னாயின், “அந்த அடிமைகளெல்லாம் எங்கள் சொந்தம் என்று பதில் உரைப்பீர்கள், அதே மாதிரி, நானும் உங்களுக்குப் பதில் சொல்லுகின்றேன். அவரிடமிருந்து நான் ப்பொழுது கேட்கும் அந்த ஒரு ராத்தல் மாம்சம் நான் அதிக விலை கொடுத்து வாங்கியது,அது என்னுடையது; அதை நான் எப்படியும் பெறவேண்டும், அதை எனக்கு நீர் கொடுக்கமாட்டேன் என்றால், உங்கள் நியாயத்தின் பவிஷ்ய மென்ன? இந்த நாட்டு மஹாராஜாவின் நியாய சட்டங்களின் பல னென்ன?- நான் நியாயம் கேட்கின்றேன்; மஹாராஜா எனக்குப் பதில் சொல்லட்டும்; எ எனக்குக் கொடுப்பீரா, மாட்டீரா?
வா.அ. இதைத் தீர்மானிக்கும்படி நான் சொல்லி யனுப்பியிருக்கும், பல்லவராயர் என்னும் நம்முடைய மந்திரி, இன்று இங்கு வராவிட்டால், எனது அதிகாரத்தால், இவ்வழக்கினை விசா ரியாது நிறுத்திவிடுவேன்.
சோ. மஹாராஜா, மதுரையினின்றும் அந்த மந்திரியிடமிருந்து, நிருபங்களுடன் இப்பொழுதுதான் வந்த ஒரு தூதன், வெளியே காத்துக் கொண்டிருக்கிறான்.
வா.அ. அந்த நிருபங்களை வாங்கி வா நம்மிடம்; அந்தத் தூதனை அழை.
பா. அநந்தா! உற்சாகமா யிரு, சொல்வதைக் கேள். இன்னும் தைரியத்தைக் கைவிட வேண்டியதில்லை. எனக்காக நீ ஒரு சொட்டு ரத்தத்தை இழப்பதன்முன் இந்த சமணனுக்கு என்னுடைய எலும்பு, ரத்தம், தசை, தேக முழுவதையும் கொடுக்கின்றேன், அஞ்சாதே.
அ. மந்தை ஆட்டில் மலிந்த ஆடே முதலில் பலி கொடுக்கத் தக்கது, நைந்திருக்கும் பழமே முதலில் பூமியில் வீழ்கின் றது; அதுபோலவே நான் தான் மரிக்கவேண்டும். நீ உயி ருடனிருந்து எனக்குக் கர்மக் கிரியைகளைச் செய்வதைவிட உனக்கு மேன்மையாம் தொழில் என்னுளது?
நீலகேசி ஒரு நியாயவாதியின் குமாஸ்தாவைப்போல ஆண்வேடம் பூண்டு வருகிறாள்.
வா.அ. மதுரையி லிருந்தா வருகின்றாய்? பல்லவராயரிடமிருந்தா வருகிறாய்?
நீ. ஆம், மகாராஜா.பல்லவராயர் தம்மைப் பணிவதாகச்சொல்லச் சொன்னார். [ஒரு நிருபம் கொடுக்கின்றாள்.]
பா.ஏன் அப்பா, உனது கத்தியை அத்தனை ஆவலோடு தீட்டுகின்றாய்?
ஷா. அதோ, வாங்கிய கடனைக் கொடுக்க வகை யில்லாத, அந்த வணிகனிடமிருந்து அபராதத்தை அறுத்து எடுத்துக் கொள்ள
கி. சண்டாளனான சமணனே! அவ்விடத்தில் தீட்டுவதைவிட, கல்லாகிய உன் மனத்தில் தீட்டு, அதிக கூராகும். ஆயினும், எந்த ஆயுதமும், கொலைஞனுடைய கோடாலியுங்கூட, உன் னுடைய கொடிய பொறாமையைப்போல் அவ்வளவு கூருடைத்தாயிராது? என்ன பிரார்த்தனையினாலும் உன் கல்மனங் கரையாதோ?
ஷா. உன் புத்தியைக் கொண்டு நீ செய்யும்படியான பிரார்த்தனை யினால் அது கரையாது.
கி. பிடிவாதக்கார நாயே! நீ பித்தம் பிடித்துச் சாகாயா! நீ உயிருடன் இருப்பதே தர்மத்திற்கு ஒரு நிந்தனையாகும். மிருகங்களுடைய ஆன்மாவானது மனிதர்களுடைய உடலிற் புகுகின்றது என்று சில பெரியோர்கள் கூறுவதை நம்பும்படிச் செய்கிறாய் நீ. போன ஜன்மத்தில் நீ ஒரு தொண்டனாய்ப் பிறந்திருக்கவேண்டும். மனிதர்களைக் கொன்று தின்றதற்காக அதை கழுத்திற் சுருக்கிட்டுக் கொல்ல, குரூரமான அத்னுயிர் தூக்கு மரத்தினின்றும் பறந்தோடி வந்து, பாபிஷ்டி யாகிய உன் தாயார் வயிற்றில் நீ இருந்தபொழுது, உன் உடலிற் பிரவேசித்திருக்கவேண்டும். அதனால், பட்டினியால் வதங்கி பசி வெறி கொண்டு, ரத்தத்தைக் குடிக்கப் பித்தங்கொண்டு திரியும் குரூரமான கோனாயைப் போன்ற குணமுடையவனா யிருக்கிறாய்.
ஷா. நீ இந்த மாதிரி கத்துவதினால், என் பத்திர மென்னமோ ரத்தாகப் போகிற தில்லை; நீ ஏன் வாய் நோக வளவள் வென்று கத்துகிறாய் அப்பனே, உன்புத்தியைப் பத்திரப் படுத்திக் கொள்; இல்லாவிட்டால் சீக்கிரத்தில் பாழாய் விடும். நியாயத்தைப் பெற இங்கு நான் நிற்கின்றேன்.
வா.அ.பல்லவராயர் அனுப்பிய இந்நிருபத்தில், இதனுடன் நியாய சாஸ்திரம் நன்குணர்ந்த அதிபால்யரான வித்வான் ஒருவர் வருவதாக எழுதி யிருக்கின்றது. எங்கே அவர் ?
நீ. அருகாமையிற் காத்திருக்கின்றார், அரசரது உத்தரவைப் பெற்று உள்ளே வர.
வா.அ. சந்தோஷமாய் வரட்டும்.- உங்களில் சிலர் சென்று மரியாதையுடன் நமது சபைக்கு அழைத்து வாருங்கள் அவரை. இதன் மத்தியில், பல்லவராயர் நிருபத்திலெழுதியிருப்பதை சபையார் அறியட்டும்.
நீ: (படிக்கிறான்.)”மஹாராஜா அவர்கள் சந்தத்திற்கு தங்களுடைய கடிதம் வந்து சேர்ந்தது. இச் சமயம் எனக் குத் தேகம் மிகவும் அசௌக்கியமா யிருக்கின்றது. ஆயி னும் உமது கடிதம் வந்து என்னிடம் சேர்ந்த தருணத்தில் ராமநாதபுரத்திலிருந்து என்னைக் காண்பதற்காக வந்த நியாய சாஸ்திரம் நன் குணர்ந்த வித்வா னொருவர்,என் பக்கத்தி லிருந்தார்.அவர் பெயர் பாலதாசர். நான் அவ ருக்கு, வணிகனான அநந்தநாதருக்கும் சமணனுக்கும் உண் டான வழக்கைப்பற்றித் தெரிவித்தேன். நாங்களிருவருமாக அநேக நியாய சாஸ்திரங்களை வாசித்துப் பார்த்தோம். இவ் வழக்கைப்பற்றி என் எண்ணத்தை அவருக்குத் தெரிவித்திருக்கின்றேன். அதை மனத்தில் வகித்து, என்னால் அளவிட்டுக் கூறமுடியாத அவரது கல்வியைக்கொண்டு விர்த்தி செய்து, என் வேண்டுகோளுக் கிரங்கி, எனக்குப் பதிலாக சந்நிதானத்தின் கட்டளையை நிறைவேற்ற சமுகம் வந்து சேர்வார். இவர் வயதிற் சிறியவர். வயதிற் சிறியவராயி னும் இத்தனை புத்தியிற் பெரியவரை நான் இதுவரையிற் கண்டில னாதலால், அவரது இளமையானது அவர் தக்க படி மரியாதையைப் பெறுவதற்கு ஒரு தடங்கலாகாதிருக்க வேண்டுமென்று நான்வேண்டுகிறேன். அவரைச் சந்நிதானத்தின் கிருபைக்குப் பாத்திரனாக அனுப்புகிறேன்; விசார ணையில் அவரது புத்தியின் மேன்மை நன்றாய் வெளிப்படும்.”
வா.அ.கற்றுணர்ந்த பல்லவராயர் எழுதிய கடிதத்தைக் கேட்டீர் களல்லவா?- இதோ, அவரனுப்பிய வித்வான் வருகிறாரென நினைக்கிறேன்.
நியாயவாதியின் உடையில் சரோஜினி வருகிறாள்.
வாரும், வாரும்; வயோதிகரான பல்வவராயரிடமிருந்தாவரு கின்றீர்?
ச. ஆம், மஹாராஜா.
வா.அ. மிகவும் சந்தோஷம். உட்காரும் இவ்விடத்தில். இப்பொழுது இச்சபைக்கு முன்பாக நியாயத்திற்கு வந்திருக்கும் இந்த வழக்கின் விவரமெல்லாம் அறிவீரா?
ச. எல்லா விவரமும் அறிந்திருக்கின்றேன். இங்கே யார் அந்த வணிகர்? யார் அந்தச் சமணன்?
வா. அ. அநந்த நாதரே! – ஷாம்லால்! – இருவரும் முன்பாக வந்து நில்லுங்கள்.
ச. ஐயா, உமது பெயர்தானா ஷாம்லால்?
ஷா. ஷாம்லால் தான் என் பெயர்.
ச. நீர் கொண்டு வந்திருக்கும் வழக்கானது வெகு விந்தையானதே. ஆயினும் வாணீபுரத்து நியாய சட்டத்தின்படி, நீர் செல்லும் மார்க்கம் தவறெனத் தடுப்பதற்கு ஹேது வில்லை. அவரது கைக்குள் அகப்படுக்கொண் டிருக்கிறீரல்லவா நீர்?
அ. ஆம்; அப்படித்தான் அவன் சொல்லுகிறான்.
ச. பத்திரத்தை நீர் ஒப்புக்கொள்ளுகின்றீரா?
அ. ஆம்.
ச. ஆனால் மாறுபாடி கருணை கூறவேண்டும்.
ஷா. எந்தக் கட்டாயத்தின் மீது நான் அப்படிச் செய்யவேண்டும்? அதைக் கொஞ்சம் சொல்லு மெனக்கு.
ச. கசக்கிப் பிழிய ஏலாது, காருண்ய குணம்; வானத்தினின்று மிழியும் இனிய மழைநீரைப்போல் அது வையகத்தின் மீ தானாகப் பெருகுகின்றது. இரண்டு விதத்தில் அது இன் பம் தருவதாகும். அதைக் கொடுப்பவனுக்கும் இன்பத்தை யுண்டுபண்ணுகிறது, பெறுபவனுக்கும் இன்பத்தை யுண்டு பண்ணுகின்றது, அது எவ்வளவு வல்லமைச்சாலி யிடத் திருக்கின்றதோ, அவ்வளவும் அதற்கு மகிமை யாம். மன்ன ருக்கு அவரது மகுடத்தைப்பார்க்கிலும் அதிக அழகைத் தருவதாகும். அவரது செங்கோல் இவ்வுலக ஆட்சியின் திறத்தைக் காட்டும் ; அவரைக் கண்டு எல்லோரும் பயப் படச் செய்கின்ற அவரது பெருமைக்கும் அதிகாரத்திற்கும் அது ஓர் அறிகுறியாகும். காருண்யமோ, இச்செங்கோலின் ஆளுகைக்கு மேலானது. அரசர்களுடைய ஹிருதயமே சிம் மாசனமாக அமர்ந்துளது. ஈசனுக்கே அது இன்றியமை யாக் குணமாம். ஆகவே கருணையோடு தர்மத்தை நடத்தும் இந்நில உலக மன்னரது ஆளுகையானது, ஜகதீசனுடைய ஆளுகையை மிகவும் ஒத்திருக்கும், ஆகவே, ஐயா, சமணனே. நியாயப்படி நடத்தவேண்டுமென்பதே உமது கட்சி யானபோதிலும். யோசியும். சரியான நியாயப்படி நமக்கு விதிப்பதானால், நம்மில் ஒருவனும் நற்கதியடைய மாட்டான். நம்மீது கருணைகூறும்படி ஈசனைக் குறித்துப் பிரார்த்திக்கின் றோம்; அந்தப் பிரார்த்தனையே மற்றவர்களிடம் நாம் கருணை யுடன் நடக்கவேண்டும் என்று நமக்குக் கற்பிக்கின்றது. உமது கட்சியினது நியாயத்தின் கடூரத்தைச் சற்றே தணிக்கும் பொருட்டே, இவ்வளவு தூரம் நான் எடுத்துக் கூறினது. நீர் அப்படித்தான் நடக்கவேண்டு மென்றால், பட்ச பாதமில்லாத வாணீபுரத்து நியாய சட்டத்தின்படி, அதோ நிற்கும் வர்த்தகருக்கு விரோதமாகத் தீர்மானிக்க வேண்டியது தான்.
ஷா. என் கர்மத்திற்கு நான் உத்தரவாதம்! என் பத்திரத்திற் கண்ட அபராதத்தை எனக்குக் கொடுக்கும்படி நியாயம் கேட்கின்றேன்.
ச. வாங்கிய கடனைத் தீர்க்க வகை யில்லையா இவர்க்கு?
பா. இதோ! அவருக்குப் பதிலாக இதோ அத்தொகையை மஹா ராஜாவின் சந்நிதானத்தில் நான் கொடுக்கச் சித்தமா யிருக் கிறேன். இது போதா தாயின், இருமடங்கு கொடுக்கின்றேன். அதுவும் போதாதாயின், அந்தத் தொகைக்குப் பதின் மடங்கு கொடுக்க நான் உடன்படுகின்றேன்; தவறுவேனாயின் என் கைகள், சிரசு, என் ஹிருதயத்தையே, அபராதமாகக் கொடுக்கின்றேன். இதுவும் போதாதென்றால், மூர்க்க குணமானது, சத்தியத்தை அழுத்திடப் பார்ப்பது நன்றாய் விளங்கும். ஆகவே உம்மை நான் மிகவும் வேண்டிக் கொள்ளுகின்றேன்; ஒரு முறை நியாய சட்டத்தை உமது அதிகாரத்திற் குட்படுத்தி சற்றே மாறச் செய்யும்; பெரிய நன்மை செய்வதன் பொருட்டு சிறு பிழையொன் றிழையும்; எப்படியாவது இந்தப் பிசாசின் எண்ணத்தில் கல்லைப் போடும்.
ச. அப்படிச் செய்ய லாகாது. ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கு வாணீபுரத்தில் எவருக்கும் அதிகாரமில்லை. ஒரு முறை இவ்வாறு தவறி நடந்தால், அதுவே ஒரு திருஷ் பாந்தமாகக் குறிக்கப்பட்டு, பிற்பாடு இதைப்போன்ற பல தவறுகள் ராஜாங்கத்தில் நுழைந்திட இடங் கொடுக்குமது; ஆகவே அது கூடாது.
ஷா. ஆஹா! தர்மராஜாவே நியாயம் சொல்ல வந்திருக்கின்றார். ஆம், தர்மராஜா தான். ஐயா! தர்மப் பிரபு,தாம் வயதில் சிறியவராயினும் உம்மை நான் எவ்வளவு மதிக்கின்றேன்!
ச. தயவு செய்து அந்தப் பத்திரத்தைக் காட்டும், நான் சற்றே பார்க்கவேண்டும்.
ஷா. நியாய சாஸ்திரம் நன் குணர்ந்த வித்வானே! இதோ இருக் கின்றது, இதோ இருக்கின்றது.
ச. ஷாம்லால், உமக்குச் சேரவேண்டிய தொகைக்கு மூன்று பங்கு கொடுக்கின்றார்கள்.
ஷா. ஐயோ! நான் சத்தியம் செய்திருக்கின்றேன் ! சத்தியம் செய்திருக்கின்றேன்! எங்கள் கடவுளின் முன்பாகச் சத்தி யம் செய்திருக்கின்றேன்! தப்புப் பிரமாணம் செய்த பாபத் திற்கா உடன்படுவேன் நான்? இந்த வாணீபுரம் முழுவதும் எனக்கு வருவதானாலும் செய்யேன் அங்ஙனம்.
ச. ஏன் இந்தப் பத்திரம் தவணை கடந்துவிட்டது. அதன் நிபந்தனைகளின் பிரகாரம் நியாயமாய் இந்தச் சமணர் இந்த வர்த்தகருடைய மாம்சத்தில் ஒரு ராத்தல், ஹிருதயத்திற் கருகாமையில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.- கொஞ்சம் கருணை புரியும்! உமது பணத்திற்கு மூன்று பங்கு பெற்றுக் கொள்ளும்; இந்தப் பத்திரத்தைக் கிழித் தெரியும்படி எனக்கு உத்திரவு கொடும்.
ஷா.அதில் கண்ட ஏற்பாட்டின்படி அந்தப்பத்திரத்தின் அபரா தம் செலுத்தப்பட்டால், உடனே உத்திரவு கொடுக்கின் றேன். நீரோ தர்ம சாஸ்திரம் நன்றா யறிந்தவராய்க் காணப் படுகிறீர். உமக்கு நியாய சட்டம் தெரியும். சட்டத்திற்குச் சரியான அர்த்தம் கூறியிருக்கின்றீர். எந்த நியாய சட்டத் திற்கு நீர் ஓர் அஸ்திபாரமா யிருக்கின்றீரோ, அந்த நியாய சட்டத்தின்மீதாணைப்படி எனக்குத் தீர்மானம் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளுகிறேன் என்னுடைய உயிரின்மீ தாணைப்படி. எந்த மனிதனுடைய வார்த்தைகளாலும் என் எண்ணத்தினின்றும் என்னை மாற்ற முடியாது என்று சத் யம் செய்கிறேன். பத்திரத்தை விட்டு நான் அணுவளவும் அசையப் போகிறதில்லை.
அ. சீக்கிரத்தில் தீர்மானம் செய்யும்படி மனப் பூர்வமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
ச. ஆனால் இதுதான் தீர்மானம் – அவரது கத்திக் கிரையாக உமது மார்பைச் சித்தப்படுத்தவேண்டியது தான்.
ஷா. தர்மப் பிரபு ! தர்மப் பிரபு! என்ன கல்வியுடைய இளைஞர்!
ச. ஏனெனில் நியாய சட்டத்தின் நிஜமான கருத்திற்கு, இந்தப் பத்திரத்திற் கண்டிருக்கும் அபராதமானது, முற்றிலும் ஒத்ததாகவே யிருக்கின்றது.
ஷா. அது மிகவும் உண்மை ! நிஷ்பக்ஷபாதமான நியாயமுணர்ந்த பிரபுவே! வயதிற் சிறியவராயினும் புத்தி சூட்சுமத்தில் எவ் வளவு பெரியவரா’ யிருக்கின்றீர் !
ச. ஆகையினால் உமது மார்பைச் சித்தம் செய்யும்.
ஷா. ஆம், மார்பை – அப்படித்தான் சொல்கிறது பத்திரமும் – சொல்ல வில்லையா தர்மப் பிரபு? “ஹிருதயத்திற்கு அருகாமையில்” – எழுதியிருக்கும் பதங்கள் அவைகளே.
ச. அப்படித்தா னிருக்கிறது;திராசு சித்தமா யிருக்கின்றதா மாம்சத்தை நிறுக்க?
ஷா. இதோ சித்தமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
ச. ஷாம்லால், உமது செலவில் ஒரு ரண வயித்தியனைப் பக்கத் தில் ஆயத்தமா யிருக்கும்படி செய்யும், அவர் தேகத்தி லுள்ள ரத்தமெல்லாம் இழந்து மரிக்காதிருக்கும்படி அவரது காயத்தைக் கட்ட.
ஷா. பத்திரத்தில் அப்படி ஏதாவது கண்டிருக்கின்றதா?
ச. அப்படி விவரமாய் எழுதியில்லை – இல்லாவிட்டாலு மென்ன? தர்மத்திற்காவது நீர் அவ்வளவு செய்வது நலமாகும்.
ஷா. அதை நான் காணேன்; அவ்வாறு பத்திரத்தில் எழுதவில்லை.
ச. ஐயா, வர்த்தகரே, தாம் ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டிய திருக்கின்றதா?
அ. அதிக மொன்று மில்லை. எல்லாவற்றிற்கும் ஆயத்தமாய்த் துணிந்திருக்கின்றேன் – பானுசேனா, எனக்கு விடை கொடு. நீ நீடூழி காலம் சுகமாய் வாழ்வாயாக! உன்பொருட்டு இந்த ஸ்திதிக்கு வந்தேனென்று வருத்தப்படாதே! ஏனெனில் இவ்விஷயத்தில், சாதாரணமாக மனிதர்களுக்குக் கிடைக் கும் ஸ்திதியினும் மேலான ஸ்திதி, அதிர்ஷ்டவசத்தால் எனக்குக் கிடைத்திருக்கின்றது. உலக வழக்கமோ, இள மையில் சீமான்களா யிருந்தவர்கள், பிறகு தமது செல்வமெல் லாம் இழந்து, முதுமையில் தேக மெலிவடைந்து, வறிஞராய் மனக்கவலையுடன் தமது வாழ் நாட்களைக் கஷ்டத்துடன் கழிக் கச் செய்வதேயாம். அவ்வாறு நெடுநாள் நான் துயர மனுபவிக்காதபடி உடனே விரைவில் என் கவலையையெல்லாம் ஒழிக்கின்றேன். உனது உத்தமியான பத்தினியை நான் விசாரித்ததாகச் சொல். அநந்தநாதன் மடிந்த மார்க்கத்தை அவளுக் குரை. உன்மீது நான் எவ்வளவு அன்புடைய வனாயிருந்தேன் என்று சொல். நான் மடிந்த விதத்தை யுண்மையாய்த் தெரிவி. எல்லாக் கதையும் சொல்லி முடிந்த பின், பானுசேனனுக்கு ஒருகாலத்தில் உண்மையான நண்பன் ஒருவன் இருந்தானா இல்லையா என்பதை அவளே தீர்மானிக்கும்படி கேள். உனது நண்பனை இழக்கவேண்டி வருகின்றதே என்று நீ துக்கப்படாதே. உனது கடனைத் தீர்ப்பதற்காக அவன் துக்கப்படவில்லை. ஏனெனில் இந்தச் சமணன் மாத்திரம் ஆழமாய் வெட்டி எடுப்பானாயின் அந்தக் கடனை யெல்லாம் என் முழு ஹிருதயத்துடன் செலுத்தி விடுவேன்.
பா. அநந்தா! நான் மணந்திருக்கும் மனைவி எனக் கென் னுயிரி னும் இனியாள். ஆயினும் இவ் வுலகமும்,என் னுயிரும், என் உயிருக் குயிரான மனைவியும், எல்லாம் உன் உயிருக் குச் சமானமாக மதிக்கமாட்டேன். அவைகளை யெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு இந்தப் பிசாசுக்கு இழக்கத் துணிவேன், பலி கொடுக்கத் துணிவேன்.
ச. உமது மனைவி உமதருகிலிருந்து நீர் இவ்வாறு கூறுவதைக் கேட்பாளாயின், அதன் பொருட்டு உமக்கு வந்தனம் செய்ய மாட்டாள்.
கி. எனக்கும் ஒரு மனைவி யிருக்கின்றாள். அவள்மீது நான் அதிக காதல்கொண்டிருக்கிறேன் என்று உறுதியாய்க்கூறு வேன்; ஆயினும் இந்தக்ஷணம் அவள் தெய்வலோகத்தி லிருந்து எந்தத் தேவதையையாவது பிரார்தித்து இந்தப் பாபிஷ்டியான சமணன் பாழான மனத்தைத் திருப்பமாட்டாளா என்று கோருகிறேன்.
நா. இந்தக் கோரிக்கையை அவள் முதுகின் பின்னாக நீர் கூறு வது நலமாம். இல்லா இல்லாவிடின் இக்கோரிக்கையானது உமது வீட்டில் கலகத்தினை விளைக்கும்.
ஷா. [ஒரு புறமாக] ஹிந்து மதத்தைச் சார்ந்த கணவர்களின் குணத்தைப் பார் ! பெண்ணொருத்தி யிருக்கிறாள் எனக்கு. இப்படிப்பட்ட ஹிந்து மதஸ்தன் ஒருவன் அவளுக்குப் புரு ஷனாக யிருப்பதைவிட பிணத்தைப்பிடுங்கித் தின்னும் பேயே புருஷனா யிருக்க விரும்புவேன். – வீணில் கால தாமதம் செய்கின்றோம்! – சீக்கிரம் தண்டனை விதிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
ச. அதோ நிற்கும் வர்த்தகருடைய மாம்சத்தில் ஒரு ராத்தல் உம்முடைய தாகும். சந்நிதானத்தில் உமக்கது தீர்மானமாகின்றது, சட்டமானது உமக் கதை யளிக்கின்றது.
ஷா. மகாப் பிரபு! தர்மப் பிரபு!
ச. அந்த மாம்சத்தை அவரது மார்பினின்றும் நீர் வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்; சட்டம் உமக் கதையளிக்கின் றது, சந்நிதானத்திலும் அப்படியே தீர்மான மாகின்றது.
ஷா. கற்றுணர்ந்த தர்மப் பிரபு!- தீர்மானமாகிவிட்டது,-வா- சித்தப்படு.
ச. கொஞ்சம் பொறும். இன்னும் கொஞ்சம் இருக்கிறது இந்தப் பத்திரமானது உமக்கு ஒரு துளி ரத்தத்தையும் கொடுக்கவில்லை. அதில் விவரமாய் எழுதியிருப்பதெல்லாம், ஒரு ராத்தல் மாம்சம்தான். ஆகவே உமது பத்திரத்தின் படி பெற்றுக்கொள்ளும், உமக்குச் சேரவேண்டிய ஒரு ராத்தல் மாம்சத்தை எடுத்துக்கொள்ளும்.ஆயினும் அதை அறுத்தெடுப்பதில் ஒரு ஹிந்துவினுடைய தேகத்தினின் றும் ஒரு துளி ரத்தம் சிந்துவீராயின், உமது நிலம் பொருள் எல்லாம், வாணீபுரத்துச் சட்டத்தின் பிரகாரம் ராஜாங்கத்திற்கு ஜப்தியாகி விடும்.
கி. ஆ! தர்மப் பிரபு! தர்மப் பிரபு! அடே சமணா! கவன மாய்க் கேள் – கற்றுணர்ந்த தர்மப் பிரபு!-
ஷா. அதுவா சட்டம்?
ச. நியாய சட்டத்தை நீரே பாரும்! சட்டத்தின் பிரகாரம் க்கவேண்டுமென்று நீர் நிர்ப்பந்திப்பதால் நீர் விரும்பு வதற் கதிகமாய் சட்டத்தின் பிரகாரம் நியாயம் செலுத்தப் படும், அஞ்சாதீர்.
கி. ஆ! கற்றுணர்ந்த தர்மப் பிரபு !- சமணா, கவனி.- கற்றுணர்ந்த தர்மப் பிரபு!
ஷா. ஆனால் பத்திரத்தின் தொகைக்கு மூன்று பங்கு கொடுங் கள்.- அதை ஒப்புக்கொள்ளுகிறேன். இந்த ஹிந்து பிழைத்துப் போகட்டும்.
பா. இதோ இருக்கின்றது பொன்.
ச. பொறும்!- சமணருக்கு நியாயப் பிரகாரம் நடத்தவேண் டும் – பொறும் – அவசரம் வேண்டாம்.- அந்த அபராத மன்றி வேறொன்றையும் அவர் பெறலாகாது,
கி. அடே சமணா!- தர்மப் பிரபு! கற்றுணர்ந்த தர்மப் பிரபு!
ச. ஆகவே மாம்சத்தை வெட்டியெடுத்துக்கொள்ள ஆயத்தப் படும். ஒரு துளி ரத்தமும் சிந்தக்கூடாது. அன்றியும் சரியாய் ஒரு ராத்தல் மாம்சந்தான் நீர் வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்; குறையவுங் கூடாது; அதிகப்படவுங் கூடாது. ஒரு
ஒரு ராத்தல் மாம்சத்தைவிட, கொஞ்சமே னும், அதிகமாகவோ குறைவாகவோ வெட்டி எடுத்தாலோ அது குண்டுமணியளவில் இருபதி லொரு பங்கு அதிக பளுவாகவோ குறைவாகவோ இருந்தபோதிலும், அல்லது திராசின் முள்ளானது ஒரு மயிரளவு இந்தப் பக்கமாவது அந்தப் பக்கமாவது திரும்பியபோதிலும் – நீர் இறக்கவேண் டியதுதான், உமது சகல சொத்துக்களும் ராஜாங்கத்திற்கு ஜப்தி யாகவேண்டியதுதான்.
கி. ஆஹா! சமணா! தர்மராஜாவே வந்திருக்கிறார் உனக்கு நியாயம் சொல்ல! இரண்டாவது தர்மராஜா ! சமணப் பேயே! அகப்பட்டது உன் குடுமி என் கையில்!
ச. சமணர் ஏன் தாமதிக்கிறார்? உமது அபராதத்தைப் பெற்றுக்கொள்ளும்.
ஷா. எனது அசலைக் கொடுத்துவிடுங்கள். நான் போகின்றேன்.
லா. இதோ சித்தமாய் வை த்திருக்கிறேன் உனக்காக, இதோ இருக்கின்றது.
ச. மஹாராஜாவின் சந்நிதானத்தில் அதை வேண்டாம் என்று மறுத்திருக்கின்றார். ஆகவே அவர் பெறவேண்டியது நியா யப்படி தீர்மானமும், அவரது பத்திரத்தின் அபராதமுமே
கி. ஆம்,ஆம்! தர்மராஜா! நீர் தர்மராஜா என்பதற்குச் சந் தேகமில்லை, இரண்டாவது தர்மராஜா! இந்த மாறுபாடிக்கு யமதர்மராஜாவாக உதித்திருக்கின்றீர்! – அப்பா, சமணனே! அந்தப் பெயரை எனக்குக் கற்பித்ததற்காக உனக்கு நமஸ் காரம் செய்கிறேன்.
ஷா. என்னுடைய அசல் தொகையும் எனக்குக் கிடைக்காதா?
ச. உனக்கு அந்த அபராதம் ஒன்றுதான் கிடைக்கும். வேறொன்றும் கிடைக்காது. அந்த அபராதத்தையும் நான் கூறியவண்ணம் பெறவேண்டும், இல்லாவிடின் உனது உயிர் போம், சம்ணனே.
ஷா.ஆயின் அதை அவனே வைத்துக்கொண்டு நாசமாய்ப் போகட்டும்! வீண்வார்த்தையாட் இனி தாமதியேன் இங்கு.
ச. பொறு! சமணனே ! சட்டத்தின் வலையில் இன்னொரு விஷ யத்தில் சிக்கிக்கொண் டிருக்கிறாய்! அன்னிய னொருவன் வாணீபுரத்துப் பிரஜைகளில் ஒருவனது உயிரைப் போக்க, நேராகவாவது சுற்று மார்க்கத்திலாவது, பிரயத்னம்செய்த தாக அவன்மீது ருசுவானால், எவனது உயிரைப் போக்க, அவன் பிரயத்னப்படுகிறானோ, அவன் அந்த அந்நியனுடைய சொத்துகளில் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், மற்றொருபாதிரா ஜாங்கத்துப் பொக்கிஷத்தைச் சேரவேண்டுமென்றும், அப்படிப்பட்ட குற்றவாளியின் உயிர் வேறெவராலும் காக்கமுடியாதபடி மஹாராஜாவின் தயைக் குட்பட்டிருக்கிறதென்றும், வாணீபுரத்து நியாய சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது, அந்த அபாயமான ஸ்திதியில் நிற்கின்றாய் நீ, என்று நானுனக் குரைக்க வேண்டும், ஏனெனில், நீ கபடமார்க்கத்திலும், நேராகவும், பிரதிவாதியின் உயிரைப் போக்கப் பிரயதனப்பட்டதாக சந் தேக மற ருசுவாயிருக்கிறது. ஆகவே நான் முன்பு எடுத்துக் கூறிய தண்டனைக்குள்ளா யிருக்கிறாய். ஆதலால், உடனே மஹாராஜாவின் பாதத்தில் விழுந்து கருணை கூறும்படி கேள்.
கி. நீ கழு வேறிச் சாக உத்தரவு கேள். அதிலும் ஒரு கஷ்ட மிருக்கின்றது, உனது சொத்துக்களெல்லாம் ராஜாங்கத் துக்குச் சேர்ந்து போய்விட்டபடியால் உன்னிடம் கழு மர மொன்று வாங்கவும் காசு கிடையாது. ஆகவே ராஜாங்கத் தின் செலவிலேயே உன்னைக் கழு வேற்றவேண்டும்.
வா.அ. நமக்கும் உனக்கும் இருக்கின்ற குணத்தின் தாரதம்யத்தை நீ அறிந்திடும் பொருட்டு, நீ கேட்பதன்முன் உன்னுயிரை உனக்குக் கொடுத்தேன். உனது ஆஸ்தியில் பாதி அநந்த நாதரைச் சேரும். மற்றொரு பாதி ராஜாங்கத்துப் பொது பொக்கிஷத்தைச் சேரும். நீ வணங்கி மன்னிப்புக் கேட் பாயாயின், கொஞ்சம் அபராதத்துடன் அதை விட்டுவிடினும் விடுவேன்.
ச. ஆம், ராஜாங்கத்துக்குச் சேரவேண்டியதை, அநந்தநாதருடையதை யன்று.
ஷா. வேண்டாம், என்னுயிரையும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், அதைமாத்திரம் மன்னிப்பானேன்? என் வீட்டின் அஸ்திபாரத்தை எடுத்தால், என் வீட்டையே எடுத்துவிடுகிறீர்கள்! நான் எதைக் கொண்டு பிழைக்கின்றேனோ அதைப் பிடுங்கிக்கொண்டால், என்னுயிரையே பிடுங்கிக்கொள்கிறீர்கள்!
ச. ஐயா, அநந்தநாதரே, இவனுக்கு ஏதாவது நீர் தயை பாராட்டக்கூடுமா?
கி. ஒரு கழு மரம் ஒன்று, விலையில்லாமல், வேறொன்றும் கொடுக்க முடியாது, அதுவும் தர்மத்துக்காக!
அ. மஹாராஜா அவர்களும் சபையோரும் மனமிரங்கி ராஜாங் கத்துக்குச் சேரவேண்டிய அவனது ஆஸ்தியில் பாதி அப் ராதத்தை மித்துவிட்டால், மற்றப் பாதியை நான் உபயோகித்து விர்த்திசெய்து, இவனது பிற்காலம், இவனது பெண்ணைக் கள்ளத்தனமாய்க் கலியாணம் செய்துகொண்ட புருஷனுக்குக் கொடுப்பதாய்ச் சம்மதிக்கின்றேன். ஆனால் அதற்கு இன்னும் இரண்டு நிபந்தனைகளுக்கு இவன் உடன் படவேண்டும்.- முதலாவது, இந்தக் கிருபையைப் பெற்றதற்காக, உடனே இச் சமணன் ஹிந்துமதத்தைச் சேர வேண்டும்; இரண்டாவது, இவன் சாகுங் காலத்தில் தனக்குள்ள பொருள்களையெல்லாம் தன் பெண்ணுக்கும் மருமகனுக்கும் தானமாகக் கொடுப்பதாக ஒரு தான பத்திரம் அரச சபையிலேயே, இப்பொழுதே எழுதி வைக்கவேண்டும்.
வா.அ. இந்தப்படி அவன் செய்யவேண்டும்; இல்லாவிடின் இவ து உயிரை க்ஷமித்ததாக நான் சற்று முன் கூறியதை மீட்டுக்கொள்வேன்.
ச. சம்மதந்தானா, சமணா? என்ன சொல்கிறாய் நீ?
ஷா. சம்மதந்தான்.
ச. ராயசம், தானபத்திரம் ஒன்று எழுது.
ஷா. இவ்விடத்தை விட்டுப்போக எனக்கு உத்தரவுகொடுக்கும் படி கேட்டுக்கொள்ளுகிறேன், எனக்குத் தேக மொன்றும் சௌக்கியமாயில்லை. தான பத்திரத்தை என்னிடம் பின் னால் அனுப்புங்கள், நான் அதில் கையெழுத்துப் போடுகிறேன்.
வா.அ.போ! ஆனால் சொன்னதைச் செய்.
கி. உனக்குத் தீட்சை கொடுக்க ஒரு குருக்கள் பெறுவாய் நான் நியாதிபதியா யிருந்தால் இன்னும் மூன்று பெய ரைக் கொடுத்திருப்பேன்-உன்னைக் கழுவி லேற்ற.
(ஷாம்லால் போகிறான்.)
வா.அ.ஐயா, தாங்கள் அரண்மனைக்கு வந்து, இன்று என்னுடன் போஜனம் கொள்ளவேண்டும்.
ச. மஹாராஜா அவர்கள் என்னை மன்னிக்கும்படி மிகவும் வணக்கத்துடன் கேட்டுக்கொள்ளுகிறேன். இன்றிரவே நான் மதுரைக்குப் புறப்படவேண்டும்; ஆகவே நான் உடனே புறப்படவேண்டிய அவசியம் இருக்கிறது.
வா.அ.உமக்குச் சாவகாச மில்லாதது எனக்கு மிகவும் வருத்தமா யிருக்கின்றது – அநந்தநாதரே, இவருடைய மனத்தை நீர் திர்ப்தி செய்யவேண்டும், ஏனெனில் இவருக்கு நீர் மிக வும் நன்றியறித லுடையவரா யிருக்கவேண்டுமென்று எண்ணுகிறேன்.
[வாணீபுரத்தரசன், மந்திரிகள் பரிஜனங்கள் புடைசூழப் போகிறான்.]
பா. ஐயா, நானும் எனது நண்பனும் இன்று பெரும் பழியினின்றும் தப்பிப் பிழைத்தது உமது புத்தி சாதுர்யத்தால். ஆகவே, அதற் கீடாக, அந்தச் சமணனுக்குச் சேரவேண் டிய மூவாயிரம் பொன்னையும், நீர் மேற்கொண்ட சிரமத்திற் காக, உபசாரமாக, உமக் களிக்கின்றோம்.
அ. அதற்குமேலும், இனி எக்காலத்திலும் உமக்கு அன்பிலும் ஊழியத்திலும் கடன் பட்டவர்களா யிருக்கின்றோம்.
ச. எவன் மனம் திர்ப்தி யடைகின்றதோ அவன் பட்ட கஷ்டத் திறகுத் தக்க பலனைப் பெற்றவனாகிறான். எனக்கோ, உம் மைக் காப்பாற்றியதே பெரும் திர்ப்தியா யிருக்கின்றது; அதனாலே நான் பெரும் பலன் பெற்றதாக மதிக்கிறேன். என் மனமானது பணத்தின்மீது இதுவரையில் நாடினதன்று. இவ்விஷயத்தில் நாம் மறுபடியும் சந்திக்கும் பொழுது, என் ஞாபக மிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சுகமாய் நெடுநாள் வாழ்வீராக எனக் கோருகிறேன்; நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்.
பா. ஐயா, நான் எப்படியும் உம்மைப் பலாத்காரம் செய்ய வேண்டும் இன்னும். உமது சிரமத்துக்கு – கூலியாக வல்ல – ஞாபகக் குறியாக, பரிசாக ஏதாவது எங்களிடம் பெற்றுப்போம். நான் உம்மை இரண்டு விஷயங்கள் எனக்கு தயை செய்யும்படி வேண்டிக்கொள்ளுகின்றேன், என்வேண்டுகோளை மறுக்க லாகாதென்றும், என்னை மன்னிக்க வேண்டுமென்றும்.
ச. நீர் என்னை மிகவும் நிர்ப்பந்திப்பதனால், அதற்குடன்படுகின்றேன்; உமது கைக்குட்டையைக் கொடும். உமது ஞாபகமாக வைத்திருக்கின்றேன்- உமக் கென்மீ துள்ள பிரீதிக்கு அடையாளமாக, இந்த மோதிரத்தை எடுத்துக் கொள்ளுகின்றேன் உம்மிடமிருந்து. உம்முடைய கையை இழுத்துக் கொள்ளாதீர்? நான் வெறொன்றும் எடுத்துக் கொள்ளமாட்டேன். உமது பிரீதியில், நீர் இதை எனக்கு மறுக்கலாகாது.
பா. ஐயா, இந்த மோதிரம் – ஐயோ’! இது அற்பமானது; இதை உமக்குக் கொடுத்து நான் அவமானத்துக் காளாக்கிக் கொள்ளமாட்டேன் என்னை.
ச. எனக்கு வேறொன்றும் வேண்டாம்; அது தான் வேண்டும். பொழுது நான் நினைத்துப் பார்க்கும்பொழுது, அதன் மீது தான் நாடுகின்றது என் மனம்.
பா. இதன் விலையைவிட இதில் வேறு விசேஷ மிருக்கின்றது. தண்டோரா செய்து, வாணீபுரத்திலுள்ள மிகுந்த விலை யுயர்ந்த மோதிரத்தைக் கண்டுபிடித்து, உமக்கு எப்படியும் வாங்கித் தருகின்றேன். இவ் விஷயத்தில் மாத்திரம் என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்ளுகிறேன் உம்மை.
ச. ஐயா, இப்பொழுது தெரிகின்றது எனக்கு, நீர் கொடுக் கிறேன் என்று சொல்வதில் தாராளமாய்த் தானிருக்கிறீர்; முதலில், எப்படிப் பிச்சை கேட்பது என்று கற்பித்தீர்; இப்பொழுது, பிச்சை கேட்டால் அதை எப்படி மறுப்பது என்று கற்பிக்கின்றீர் என எண்ணுகிறேன்.
பா. ஐயா, இந்த மோதிரம் என் மனைவி எனக்குக் கொடுத்தது. அவள் அதை என் விரலி லிட்டபொழுது, அதை நான் ஒரு காலும் இழக்கவாவது, விற்கவாவது, கொடுக்கவாவது கூடாதென்று, சத்தியம் செய்யும்படிச் செய்தாள்.
ச. இந்தப் போக்கானது தானம் கொடாம லிருக்க அநேகருக்கு உதவுகின்றது. உமது பெண்சாதி பயித்தியக்காரியா யல்லா மல், இந்த மோதிரத்தைப் பெற நான் எவ்வளவு அருஹன் என்பதை அறிந்திருப்பா ளாயின், இதை நீர் எனக்குக் கொடுத்ததற்காக உம்மீது எக்காலமும் துவேஷம் பாராட்ட மாட்டாள்.- சரி, நீர் சுகமா யிரும், நான் வருகிறேன்.
[சரோஜினியும், நீலகேசியும் போகிறார்கள்.]
அ. பானுசேனா, அவருக்கு அந்த மோதிரத்தைக் கொடுத்து டு. அவரது மகிமையும் என் அன்பும் உன் மனைவியின் கட்டளைக்கு எதிராகச் சீர்தூக்கப் படட்டும்.
பா. போ! கிரிஜாநாதா, ஓடிப்போய் அவரைப் பிடித்து அவரிடம் இந்த மோதிரத்தைக் கொடு. உன்னால் முடியுமானால் அவரை அநந்தநாதர் வீட்டுக்கு அழைத்து வா. போ உடனே! சீக்கிரம். [கிரிஜாநாதன் போகிறான்.]
பா. வா. நீயும் நானும் அங்கே போய்ச் சேர்வோம். நாளைத் தினம் பொழுது விடிந்தவுடன் நாம் மணிபுரத்துக்குப் பறந்தோடிப் போவோம்.-வா. அநந்தநாதா.[போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
இரண்டாம் காட்சி
இடம் – வாணீபுரம் ஓர் வீதி.
சரோஜினியும், நீலகேசியும் வருகிறார்கள்
ச. சமணனுடைய வீடு எது என்று விசாரித்து, அவனிடம் இந்தப் பத்திரத்தைக் கொடு, அவன் கையெழுத்து செய் யட்டும் இதில். நாமின்றிரவே புறப்பட்டுப்போய், நமது கணவர்கள் வருவதற்கு ஒருதினம் முன்பாகவே, வீடு சேர் வோம். இந்தப் பத்திரம் லீலா தரருக்கு மிகுந்த சந்தோஷத் தைத் தருவதாகும்.
கிரிஜாநாதன் வருகிறான்.
கி. ஐயா, அம்மட்டும் உம்மைக் கண்டுபிடித்தேன்! பானுசேனர் மறுபடியும் ஆலோசனை செய்து, இம் மோதிரத்தை உமக் குக் கொடுத்தனுப்பினார்; உம்மை போஜனத்துக்குத் தயவு செய்து வரும்படியும் வேண்டுகிறார்.
ச. அது முடியாது; அவர்மோதிரத்தை நான் மிகவும் சந்தோஷ மாய்ப் பெற்றுக் கொள்ளுகின்றேன்; அதை அப்படியே அவரிடம் கூறும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அன்றியும் வயோதிகனான சமணன் வீட்டை இச்சிறுவனுக்கு சற்றே காண்பிக்கும்படி வேண்டுகிறேன் உம்மை.
கி. அப்படியே செய்கின்றேன்.
நீ. தங்களிடம் ஒரு வார்த்தை (சரோஜினியுடன்) எனது கணவன் மோதிரத்தையும் நான் பெறப்பார்க்கின்றேன்; எப்பொழுதும் கையைவிட்டுக் கழற்ற லாகாதெனப் பிரமாணம் செய்யும்படி செய்தேனே அதை!
ச. நீ பெறுவாய், சந்தேகமில்லை! அவர்க ளிருவரும் புருஷர் களுக்கே தங்கள் மோதிரங்களைக் கொடுத்ததாக அதிக மாகச் சத்தியம் செய்வார்கள்; நாமும் அது பொய் என்று அவர்களுக்குமேல் சத்தியம்செய்து அவர்களை வெட்கப் படச் செய்வோம். – போ புறப்படு, துரிதப்படு;- நானிருக் குமிடம் நீ அறிவாயே?
நீ. வாரும், ஐயா, வாரும்.- அந்த வீட்டை எனக்குக் கொஞ்சம் காண்பிக்கின்றீரா?
[போகிறார்கள்.]
காட்சி முடிகிறது.
– தொடரும்…
– வாணீபுர வணிகன் (நாடகம்), நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, மூன்றாம் பதிப்பு: 1957.