கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 179
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

சேலையைச் சரி செய்து கொண்டிருந்தவளின் முகம் அலைபேசி சிணுங்கியதும் வாடியது. சிலையாய் நின்றவள் நான்கு ரிங் அடித்த பிறகு மெல்ல எடுத்தாள்.

எதிர்பார்த்தது தான்.. “ஏய், ஃபோன் அடிச்சா உடனே எடுக்க மாட்டியா? மகாராணிக்கு அவ்வளவு திமிரா?” என அடைமழையாய் கொட்டினாள் வனஜா.

“அக்கா, சேலை மாற்றிக்கொண்டு இருந்தேன். அதான்…” என்று சொல்லி முடிக்கும் முன் இடைமறித்து, “ஏய்.. உன் விளக்கம் யாருக்கு வேணும்? ரமேஷ் வந்துட்டு இருக்காரு. உன்னைத் தான் வேணும்னு கேக்குறாரு. அப்படி என்னத்த உங்கிட்ட பாத்தாரோ.. தெரியல. ரெடியா இருடி.. என்ன கேட்டுச்சா..” என்று விரட்டினாள்.

“சரி அக்கா..” என்று முணுமுணுத்தாள் மாலா. “அதைக் கொஞ்சம் சத்தமாத்தான் சொல்லித் தொலையேன்” என்றபடி ஃபோனைத் துண்டித்தாள் வனஜா.

கண்ணாடியில் தன் முகத்தினைப் பார்த்தாள் மாலா.

சென்ற முறை ரமேஷ் வந்தபோது சொல்லிச்சென்றது காதில் ஒலித்தது.

“மாலா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னை நல்லாப் பாத்துக்க நினைக்கிறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? யோசித்துச் சொல். அடுத்த வாரம் வருகிறேன்” என்று சென்று விட்டான். ஒருமுறை கல்லூரி நண்பர்களிடம் போட்டியிட்டுத் தோற்றதால் விருப்பமின்றி ரமேஷ் இங்கு வர வேண்டிய சூழல். அப்போது தான் முதல் முறையாய் மாலாவைச் சந்தித்தான்.

அவளின் அமைதியான முகம், ஆர்ப்பாட்டமில்லா அழகு அவனைக் கவர்ந்தது.

பெண்களிடம் பேசவே தயங்கும் அவனுக்கு ஏனோ அவளுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

நண்பர்கள் மீண்டும் வந்து அழைக்கும் வரை அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்று விட்டான்.

ரமேஷின் விரல் நுனி கூட அவள் மீது படவில்லை. அடுத்தடுத்து 6 மாதங்களாகத் தொடர்ந்து வருகிறான்.

பெற்றோரை இழந்து தனியாய் நின்ற மாலாவை ஐம்பதாயிரம் கடனுக்காக வனஜாவிடம் விற்றுவிட்ட தாய்மாமன் செயலால் ஆண்வர்க்கத்தையே வெறுத்தாள்.

யாரிடமும் பேசுவதில்லை. அவள் வளர்க்கும் காதல் சிட்டு மட்டுமே அவள் உறவாய் இருந்தது.

ஆனால், அந்த வெறுப்பை மாற்ற வைத்தது ரமேஷின் குணம் தான். உடல் அழகைத் தாண்டி உள்ளத்தின் அழகை ரசிக்கும் ரமேஷை மாலாவிற்கும் பிடித்தது தான்.

இன்று தனது சம்மதத்தைச் சொல்லிவிட முடிவெடுத்திருந்தாள். வெகு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் இதழில் புன்னகை மலர்ந்தது.

அதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது போல் காதல்சிட்டும் படபடத்தது.

– நவம்பர் 2026, அன்புப் பாலம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நெல்லை அன்புடன் ஆனந்தி திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர், கவிஞர்...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *