மொஹித்தே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 16, 2026
முதற்பதிப்பு: 1999
பார்வைகள்: 28 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது இளம் பருவத்தில் வாழ்க்கை நெருக்கடிகள் காரணமாக, மாநகர் ஒன்றில் சிக்கிக்கொண்டேன். மாநகர் என்று சொன்னால், ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் சொன்னதுபோல, அது ஒன்றுதான் இந்தியாவில் மாநகரம். மற்றவை எல்லாம் கிராமங்களும் பெரிய கிராமங்களும். சிறு கிராமத்திலிருந்து வறுமை என்னைத் துரத்தியபோது அந்த மாநகரத்தில் தனிமை என்னைத் துரத்தியது.


மாநகருக்கு நாற்பத்தைந்து கற்கள் வெளியே ஏற்பட்டிருந்த புதுக் குடியிருப்பு. நிரைநிரையாய் ஒவ்வோர் பிரிவிலும் கட்டிடங்கள், குகை கள் போல. குகைக்குப் பதினாறு பொந்துகள், தளத்துக்கு நான்காய். தளவாய் குடிபோனபோது பெரும்பாலும் குடியிருப்பே காலியாகத்தான் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில பொந்துகளில், இரும் புச்சட்டங்களின் உள்ளே இருந்து மனிதத்தலைகள் எட்டிப் பார்த்தன.

பிளாஸ்டிக் சிமின்ட் சாக்குகளும், பலகைத் துண்டுகளும் உடைந்த காங்கிரீட் செங்கல்களும் சாம்பல் பூத்த உடல்களுடன் கட்டிடத் தொழிலாளர்களின் நடமாட்டமும் காற்றில் சிமன்ட் தூசியின் நெடியுமாய் புதுக்குடியிருப்பு முற்றுப் பெற்றுக்கொண்டிருந்தது.

திறந்து கிடந்த சன்னல் கதவுகள் வழியாய் காற்று வேகமாய்ப் புகுந்து விநோதமாய் ஓசை எழுப்பிக்கொண்டு போயிற்று.தளவாய் குடி யேறிய குகையின் தரைமட்டப் பொந்தில் ஓய்வுபெற்ற வங்காளி தனது இரு மகள்களுடன் குடியேறி இருந்தார். வங்காள வட்ட முகங்கள். மூன்றாவது தளத்தில் தளவாயும் அவன் குடும்பமும் புகுந்தனர்.

வேலை செய்யுமிடம் நெடுந்தொலைவில் இருந்தது. பதினைந்து கற்கள் அரசுப் பேருந்துகளிலோ அல்லது ‘பெஸ்ட் மாநகரப் பேருந்து களிலோபயணம் செய்து துறைமுகப்பிரிவு இரயில்நிலையத்தில் இறங்கி முப்பது கற்கள் ரயிலில் பயணம் செய்து கடைசி சந்திப்பில் இறங்கிச் சற்றுதூரம் நடக்க வேண்டும். சமயங்களில் வேலை நேரத்துக்கு இணை யாகப் பிரயாண நேரம் அமைந்துவிடும்.

வாழ்வென்பது நாள் தொலைப்பது என்றாயிற்று.

நான்காவது தளத்திலோர் மராத்திக் குடும்பம் வந்தது. சனிக்கிழமை இரவுகள் இடம் பெயர்தலுக்குத் தோதானவை. திறந்த டெம்போக்களில் ரும்புக்கட்டில்,மடக்கு நாற்காலி, தண்ணீர்டிரம், டி.வி. ஆன்டெனா சமையல்மேஜை, கேஸ் ஸ்டவ் சிலிண்டர்கள், அட்டைப் பெட்டிகள், டிரங்குப் பெட்டிகள்… வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒருமுறை சனிப்பெயர்ச்சி.

முன்னிரவில் அனக்கமில்லாமல் இருந்த தளம், அதிகாலையில் மராத்தி உரையாடல்களில் கலகலத்தது.

காலையில் வந்து முகமன் சொல்லிவிட்டுப் போனார் பீதாம்பர் மொகித்தே. மராத்தியில் மால்வன் கொச்சை தெரிந்தது. மும்பையின் வடி கட்டப்படாத இந்திக் கலவையை விடவும் மராத்தி உயிரும் ஒட்டமும் உடையது. என்றாலும் மராத்வாடா வேறு, மால்வன் வேறு.

பத்து மணிக்கு மேல் பெரிய அளவுப் பாத்திரங்கள் கேட்டார்கள். நாலைந்து வாளி குடிதண்ணீர் சேட்டார்கள். சிறிய அளவில் குடியேறும் சடங்குகள் இருக்கும் போலும். மத்தியானத்துக்கு சமைக்க வேண்டாம். சாப்பிட வரவேண்டும் என்றார்கள்.

தளவாய்க்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. மொழி சார்ந்த, மரபுகள் சார்ந்த கூச்சம். தளவாயின் வீட்டுக்காரி சொன்னாள், ‘சும்ம போயி எட்டிப் பாத்துக்கிட்டு வரலாம். சாப்பிடுகது எல்லாம் என்னத்துக்கு? அவ்வோ என்ன ஆளுகளோ என்னமோ?”

”எல்லாம் மனுசாளுகதானே? என்ன ஆளுகளானா என்னா? இப்பம் இந்தக் கட்டிடத்திலே நம்மளையும் சேர்த்து மூணு குடும்பம். ஒரு சகாயம் வேணும்ணா சொந்த ஆளுகளா வருவா? இன்னும் இருவது முப்பது வருசம் தாமசிக்கப் போறோம்…”

“அப்பம் நீங்க மாத்திரம் போயிட்டு வாங்கோ.”

“ச்சே! அது நல்லாருக்காது. நீயும் கூட வா.”

சற்று அகச்சுளிப்புடன் மலர்த்திப் பிடித்த முகத்துடன் படியேறிப் போனார்கள்.

அந்தக் கூச்சத்துக்கு அவசியம் இல்லாமல் இருந்தது. வீட்டு மனிதர் களும் நெருங்கிய உறவினர்களுமாய் பன்னிரண்டு பேர்கள். பாசாங்கில் லாமல் சிரித்தார்கள். பெண்கள் தார் பாய்ச்சிப் புடவை உடுத்து, மூக்கில் முத்துக்கள் கோர்த்த நத்து அணிந்து, நெற்றிச் சாந்தில் அரிசி மணிகள் ஒட்டியிருந்தனர்.

பூசை முடிந்திருந்தது. கௌதம புத்தரும் டாக்டர் அம்பேத்காரும் சேர்ந்து சட்டம் கட்டப்பட்டிருந்த படத்தின் முன் தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு இருந்தன. தீபம் சிறியதாய் நடுங்கியது. ஊதுபத்தி இன்னும் புகைந்துகொண்டிருந்தது.

பெரிய தட்டத்தில் சுடச்சுட பூரி பரிமாறினார்கள். தொட்டுக் கொள்ளகிண்ணங்களில் பருப்பு, உருளைக்கிழங்கு கறி, உ.பி.பால்காரப் பையா கடையில் வாங்கிய சின்னச்சின்ன வட்டங்களில் பொன்னிற ஜிலேபிகள். பெரிய அகப்பை சோறு கட்டி போல் வைத்து அதன் தலைமீது உசல் ஊற்றினார்கள். பித்தளைத் தம்ளர்கள் பொன்போலத் துலங்கின.

பின்பு தெரிந்தது மொகித்தே ‘பெஸ்ட்’ மாநகர பேருந்து நடத்துனர் என்பது. அவரது நடையில் அதற்கான தடயங்கள் இருந்ததைக் கூர்ந்து பார்த்தால் தெரியும்.

அந்த புதுக் குடியிருப்புக்கு, துறைமுகப் பிரிவு ரயில் நிலையம் செல்ல அரசுப் பேருந்துகள் இருந்தன. ‘பெஸ்ட்’ பேருந்துகளும் இருந் தன. மராத்திய மாநில அரசுப் பேருந்துகள் எந்த அட்டவணைக்கும் உட் பட்டவை அல்ல. மழை போலச் சுதந்திரமானவை. சங்கீதக் கல்லூரி போல் சகல வாத்திய இசைகளும் எழுப்புபவை. ஆனால் ‘பெஸ்ட்’ பெருந்துகளுக்குக் கால நிர்ணயம் உண்டு. அளவான கூட்டம்தான் ஏற்று வார்கள். கட்டணம் அதிகம்.

எட்டு மணிக்கு வரும் ‘பெஸ்ட்’ பேருந்துக்கான வரிசையில் தளவாய் நின்று கொள்வான், வழக்கமாக . முட்டல் மோதல் இல்லாமல், வரிசையில் ஒழுங்கு இருக்கும். இடைச் செருகல்கள் இருக்காது. உடல் வலிவு குறைந்தவனும் மனவலிவு குன்றியவனும் தொண்டை சக்தி இல்லாதவனும் கூட வரிசையில் நின்று நிதானமாய் ஏறலாம். வயோதிகர், நோயாளி என்றால் நடத்துனர் முதுகில் கை தாங்கி ஏற்றி விடுவார்.

பண்பாடு செழித்த தமிழ்நாடு போல ஒருத்தர் முண்டியடித்து ஏறி, கைககளைப் பரத்தி, படுத்த பாவனையில் இன்னும் மூன்று பேருக்கு இடம் பிடித்துக்கொள்ளும் வீர விளையாட்டுக்கள் கிடையா. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான இருக்கைகள். யார் கற்பும் பங்கப்படுவ தில்லை.

ரயிலுக்கு இரண்டாம் வகுப்பு பருவச்சீட்டு போக, தினமும் பேருந்துக்கு ஒற்றைப் பயணத்துக்கு மூன்று ரூபாய் ஐம்பது காசு என்பது யோசிக்க வைப்பதுதான். என்றாலும் அந்தந்த நாளை, அன்றன்றே தொலைத்துத் தலைமுழுகியாகி வேண்டும்.

மொகித்தேக்கு மாறுபடும் பணி நேரங்களும் வார விடுப்புக்களும்.

கட்டம் போட்ட துணியில் தைத்த, கால் முட்டு வரை இறங்கிய, முடிகயிறு முன்னால் தொங்கும் அரையாடை. மல் துணியில் பனியன் போலத் தைத்து நெஞ்சின் குறுக்காக பாக்கெட் வைத்த மேலாடை. பல் தேய்த்துக்கொண்டே. மாடிப்படி இறங்கி வருவார். அது உண்மையில் பல்தேய்ப்பு அன்று. சுட்டுக் கருக்கிய புகையிலையைப் பொடித்து பற்களிலும் உள் ஈறுகளிலும் வெளி ஈறுகளிலும் இழுவிக்கொள்வது.

“காய், அண்ணா, கஸ காய்?” என்பது அவரிடம் இருந்துவரும் முதல் வாசகம். தளவாயை விடவும் பத்து வயது பெரிய மொகித்தேக்கு ஒரு பெண்ணும் இரண்டு பையன்களும். சிறுவர்கள் போக்குவரத்துக் கழகத் துணியில் தைத்த அரைக்கால் சட்டையுடன் மேலும் கீழுமாய் ஓடித் திரிவார்கள்.

அவர்களுக்கு வாரம் ஒரு முறையே வரும் தண்ணீர் போதுமான அளவு வருவதில்லை. தளவாயின் குழாயில் வேகமாக வரும்.தளவாய் பிடித்து அண்டா, குண்டா எல்லாம் நிறைத்தபின், மொகித்தே வீட்டுக்கு மாடிப்படி ஏறிக்கொண்டு போவார்கள். இடுப்பில் வைக்கும் தோதில் பித்தளை அண்டாக்கள் நிறைய இருந்தன அவர்களிடம். ஒன்றுக்குமேல் ஒன்றாய் அடுக்கிக்கொள்ளலாம்.

இட்டிலி சாம்பார் என்பது, பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் கூறு எனப் பொதுவாக எல்லா மராத்தியர்களும் நம்பினார்கள். மொகித்தேவும் அதற்கு விலக்கல்ல. முழு இட்லியைக் கையில் பிடித்துக் கொண்டு, சாம்பாரில் முக்கிக் கடித்துக் கடித்துத் தின்பதும் மீதிச் சாம் பாரைக் கடைசியில் கிண்ணத்தோடு எடுத்துக் குடிப்பதும் ஒரு காட்சி தான். தளவாய் வீட்டில் எப்போது இட்டிலி அவித்தாலும் ஒரு தட்டு மொகித்தே வீட்டுக்கும் போனது.

மொகித்தே வீட்டுக்கு ஊரிலிருந்து யாராவது வந்துகொண்டே இருந்தார்கள்.சுட்டுத்தின்ன மக்காச்சோளக் கொண்டைகள், தட்டைப் பயிற்றங்காய், விதைவைக்க எத்தனிக்கும் கத்திரிக்காய், வேருடன் பிடுங்கிய கொண்டைக்கடலைச் செடி என தளவாய் வீட்டுக்கும் ஒரு பங்கு வரும்.

எதிர்பாராமல் ஒருநாள் காலை, பேருந்தில் நுழைகையில், மொகித்தே கால்களை அகட்டி வைத்து நின்றுகொண்டிருந்தார். தொங்கும் தோல்பையும் டிக்கட் கட்டையும் பயணச்சீட்டு துளையிடும் உபகரணமும் காக்கிச்சீருடையும் தொப்பியுமாய் எதிர்கொண்டார். சற்றுத் திகைப்பாய்கூட இருந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாகவும். சில்லறை இல்லாமல் மராத்தியில் வசவு கேட்க வேண்டாம் இனி. எப்போதும் வரிசையில் முன்னால் நிற்பதால் இருக்கை கிடைத்துவிடும். வரிசையில் முன்னால் போய் நிற்பதற்காக எடுத்துக்கொள்ளும் காலம், விரையம் கிடையாது. மடித்து மடித்து வைத்துக்கொண்டு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ படிக்கலாம். ஏதும் வாராந்தரி, மாதாந்தரி வாசிக்கலாம். உலகச் சந்தை நிலவரங்கள் பேசலாம்.

பயணச்சீட்டில் துளையிடும் கருவியால் ‘டிக்,டிக்’ என ஒலி எழுப்பிக்கொண்டு, மொகித்தே இரண்டு மூன்று முறை அவனைத் தாண்டிப் போனார். தளவாய் கையில் மடித்து நீட்டிப் பிடித்திருந்த ஐந்து ரூபாய்த் தாளை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

முதல்நாள் ஆனதால், பழக்கம் கருதிய சலுகையாய் இருத்தல் கூடும் என அவன் எண்ணினான். என்றாலும் தளவாய்க்கு சஞ்சலமாக இருந்தது. பக்கத்து இருக்கைக்காரர் பழகிய முகம் அல்ல. இடையில் பரிசோதகர் ஏறினால் என்ன சமாதானம் சொல்ல இயலும் என்ற கவலை கடுத்தது.

மொகித்தே தொழிலை சுமைபோல் எண்ணித் தன்னையும் பிறரையும் வருத்தும் நடத்துநராக இல்லை. எப்போதும் உல்லாசம் ததும்பும் முகமும் பேச்சும்.

“காதர்பாய்,சக்காராம், குல்கர்னி, டிக்கட் வாங்கியாச்சா? சீக்கிரம் வாங்கிக்கோ….தீர்ந்துபோகும்… அப்பாஸ் பாய், துக்காராம், காசிநாத் டிக்கட் வாங்கு… தீர்ந்தாக் கிடைக்காது… பொறவு வருத்தப்படாதே… செய்யது பாய், பாண்டுரங், புஷ்பா பாயி, பின்னால வா… பால் கம்பனி வந்தாச்சு…”

உரையாடலாகவும் உத்தரவாகவும் வேடிக்கை ஆகவும் நடத்திக் கொண்டு போனார்.

ஒவ்வொரு நிறுத்தமாய் வேகமாய் விரைந்துகொண்டிருந்தது பேருந்து. மொகித்தே இன்னும் பயணச்சீட்டு தரவில்லை. பக்கத்து இருக்கைக்காரன் உப்பங்கழியில் இறங்கும் கடல்நாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இறங்கும்போது சிரித்துவிட்டு விடை பெற்றுக்கொண்டாலும் மனம் ஆசாக இல்லை. ஒன்றும் பெரிய சங்கதி இல்லைதான். பார்க்கப் போனால் மூன்றரை ரூபாய் விஷயம். ஆனால் மூன்றரை ரூபாய்க்கு ஒரு கிலோ முள்ளங்கி வாங்கலாம் கொத்தான தழையுடன் அல்லது ஆறு பச்சை வாழைப் பழங்கள் வாங்கலாம் கனிந்து புள்ளிகள் விழுந்ததாய்.

அடுத்த நாள் காலை பேருந்துக்கு நிற்கும்போது மறுபடி நினைவு வந்தது. அன்றும் மொகித்தே பயணச்சீட்டு தரவில்லை. வாந்தியை மிதித்துக்கொண்டு நிற்பதைப்போல் சிரமமாக இருந்தது. மொகித்தே பொருட்படுத்தவே இல்லை. அவர் சக்காராமையும் துக்காராமையும் காசிராமையும் விளித்துக்கொண்டிருந்தார்.

பக்கத்து இருக்கைக்காரர் அன்றும் பழகாத முகம்தான். என்றாலும் முதல் புள்ளியிலேயே உடன் ஏறி அமர்ந்தவர், இளக்காரம் தொனிக்கப் பார்த்தார். அவமானம் குறுகச் செய்தது. மொகித்தேக்கு ஒரு அவஸ்தையும் இல்லை.

மறுநாளும் அதற்கு மறுநாளும் எனத் தவறாமல் நடந்தது. பேருந்தை மாற்றிக் கொள்ளலாம் எனில் அலுவலகம் சேர இருபது நிமிடங்கள் தாமதம் ஆகிப்போகும். அரசுப் பேருந்தை நம்பி ஆற்றில் இறங்க முடியாது.

என்ன எண்ணத்தில் மொகித்தே இப்படிச்செய்கிறார் என யோசனை யாக இருந்தது.இதற்கெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டு மாதம் ஒருமுறை மொத்தமாய், கால்பங்குச் சலுகையுடன் பணம் கேட்பாரோ என்னவோ?

மொகித்தேயிடமே கேட்டுவிடலாம் என்று எண்ணினான். இரவு அவர் வீட்டுக்குச் சென்று எட்டிப் பார்த்தபோது அடுத்த நாள் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டு செய்ய வெந்தயக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தார்.

“ஆவ் அண்ணா” என்றாள் அவர்மனைவி. “யா…பஸா…” என்றார் மொகித்தே.

சுற்றி வளைத்துச் சற்று நேரம் சாப்பாடு ஆயிற்றா, வெயில் அதிகம், மண்ணெண்எணய் கிடைக்கவில்லை-எல்லாம் ஆன பின் சொன்னான் அவன்.

வேகத்தடைமீது வண்டி குலுங்குவதுபோல் சிரித்தார் மொகித்தே. “அரே அண்ணா! இது ஒரு விஷயமாஎன்ன? சோடோ!”

“இல்லே பாய். எனக்குச் சங்கடமா இருக்கு. டையிலே பரி சோதகர் வந்தா…?”

“வந்தா உனக்கென்னா? நானில்லா இருக்கேன்?”

“இருந்தாலும், பக்கத்து சீட்டுக்காரன் ஒரு தினுசாப் பார்க்கிறான்!” ”அரே, நீ என்ன ஆளப்பா? பார்த்தால் பார்த்துக்கிட்டுப் போறான்! உஸ்கா பாப்கா கியா ஜாத்தா? ‘பெஸ்ட்’ எங்களுக்குச் சலுகை தந்திருக் கப்பா… எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்ணாலும் எத்தனை மட்டம் வேணும்ணாலும் கூட்டீட்டுப் போலாம், கட்டணம் இல்லாமல்… ஒரு பய கேக்க முடியாது….”

”ஆனா…”

“காய் அண்ணாதும்? எனக்கு சொந்தக்காரன் இல்லையா நீ?”

ஒன்றும் பேசத் தோன்றவில்லை தளவாய்க்கு. தனது அற்பச் சிந்தனை மீது கோபமும் வந்தது.

– விண்நாயகன், டிசம்பர் 1999.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *