முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 88
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. காதலி நீயா?
மீனாவைச் சந்தித்துவிட்டு வந்த பின்பு. ராஜாமணி இந்த உலகத்தில் இல்லை. அவன் பகல் நேரத்தில்கூட கட்டிலில் படுத்த வாறு அவளைப்பற்றி இன்பக் கனவுகள் காண ஆரம்பித்து விட்டான்.
மீனா இனிமையானவள் – அழகானவள் -கண்ணுக்கு குளிர்ச்சியானவள் — அவளை நினைத்துக் கொண்டிருந்தால்கூட பசிதாகம் எதுவுமே எடுக்காது.
அவள் எப்படியெல்லாம் சிரித்தாள்; பூவாய் மலர்ந்தாள்; சொல்லாத காதல் கதைகளை எல்லாம் சொன்னாள். அவளைப்போன்ற தேனினும் இனிமையானவளை இந்த உலகத்தின் எந்த மூலையிலும் சந்திக்க முடியாது. அத்தனை அழகும் இளமையும் அவளிடம் தஞ்சமடைந்திருந்தன.
அவன் படுக்கையில் புரண்டான். கண்களை மூட எத்தனித் தான். ஆனால் அந்த பேரழகியின் சிரித்த முகம் அவனுடைய கண்களை மூடிவிடாமல் வதைத்தது.
அவளுடன் தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு புதுக்கனவு. அப்படியே தூங்கிவிட்டான். மறுபடியும் இன்பக்கனவு தாக்கியது.
சுமார் ஒருமணி நேரம் வரையில் அந்தக் கனவிலேயே அவன் சஞ்சாரம் செய்தான்.
திடீரென்று ஓர் அதிர்ச்சி.யாரோ தன்னை அடித்துவிட்டது போன்ற பிரமை.
தூங்கிக்கொண்டிருந்த ராஜாமணி பயங்கரகனவு கண்டவனைப் போல் திடுக்கீட்டு கண்விழித்துப் பார்த்தான்.
எதிரில் வீட்டுக்குச் சொந்தக்காரரான கண்ணபிரான் ஆத்திரத் துடன் நின்றுகொண்டிருந்தார். அவருடைய உடல் குலுங்கிக் கொண்டிருந்தது. கைத்தடியால் தரையில் தட்டி “என்னடா கொடக் கூலி கட்டாதவனுக்கு சாப்பாட்டுக்குமேல் தூக்கம்?” என்று இரைந்தார், துள்ளினார்.
அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்று, “கொடக்கூலி கட்டாதவன் தூங்கக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லையே. அப்படியே நான் உங்களுக்கு எவ்வளவு வாடகைப் பாக்கி தரவேண்டும்? இரண்டு வருடம் தானே” என்று அலட்சியமாகச் சொன்னான். கவலைப்படும் வழக்கம்தான் அவனுக்குக் கிடையாதே! மேலும் வாடகைப் பணத்தை மோசம் செய்து கொள்ளும் எண்ணமும் அவனுக்கில்லையே!
ராஜாமணி அன்றாடம் பத்திரிகைகளை வீடுதோறும் விநியோகம் செய்யும் ஏழை வாலிபன்தான்! கள்ளங்கபடமற்ற அவன். சூது வாதின்றி எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவான், தான் சொல்லுவது மற்றவர்களுடைய மனத்தைப் புண்படுத்துமா, புண்படுத்தாதா என் றெல்லாம் அவனுக்குச் சிந்திக்கத் தெரியாது. அவன் ஒரு விசித்திரமான பிறவி. ஆனால் கட்டுக்கடங்காத இளமையும் கம்பீரமான தோற்றமும் இயல்பாகவே படைத்தவன்.
அவன் சொன்ன வார்த்தைகள் கிழவர் கண்ணபிரானை மேன் மேலும் ஆத்திரமடையச் செய்தன. இரண்டுவருடமாக வாட்கைக் கொடுக்காமல் கிண்டல் செய்து பேசும் அவனை மறுபடியும் வீட்டில் விட்டுவைக்க அவருக்கு அறவே விருப்பம் இல்லை. இரண்டில் ஒன்று பார்த்து விடவேண்டும் என்ற ஒரே முடிவுடனேயே வந்திருந்தார்.
இரண்டு பேர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் வளர்ந்தது. அவன் சாதாரணமாக நினைத்துப் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவரை மிகமிகக் கடுமையாகத் தாக்கின. கெட்டதையே நினைக்கும் கொடூரமான நெஞ்சமல்லவா அது!
கடைசியில் கண்ணபிரான். “வீட்டை இப்போதே நீ காலி செய்தாக வேண்டும்” என்று கத்தினார்.
இவ்வளவு கண்டிப்பான வார்த்தையைக் கேட்டதும் ராஜாமணி கலங்கினான். சென்னையில் நினைத்த வுடனேயே வீடு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமா? ஓரளவு திருப்தியான வீடு கிடைக்க பல நாட்களை வீணாக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
அவன் கெஞ்சினான், விரைவில் வாடகை கொடுத்து விடுவ தாகவும் மன்றாடினான். தொண்டை கரகரத்தது.
ஆனால் பிடிவாதக்காரரான கண்ணபிரான் அதற்குச் சம்மதிக்கவேண்டுமே. “இன்றைக்கு எப்படியும் வீட்டைக் காலி செய்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உன்னையும் பெட்டி படுக்கைகளையும் தூக்கி வெளியே எரிந்துவிடுவேன்” என்று கத்தினார். அரக்கம் அவருடைய கருணை உள்ளத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டது.
கண்ணபிரான் ஐம்பது வயதைக் கடந்துவிட்ட அரைக்கிழவராக இருந்தபோதிலும் பலசாலிதான் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.உருளைக்கிழங்குபோல் உருண்டு திரண்ட அவர், ராஜாமணியை அலாக்காகத் தூக்கிவந்து வெளியே போட்டாலும் ஆச்சரிப்பட முடியாது.
அவர் மேன்மேலும் மனத்தைப் புண்படுத்தியவாறு பேசவே ராஜாமணி வீட்டைக் காலிசெய்துவிட்டு எங்கேயாவது போய் விடுவது என்ற முடிவுக்கு வந்தான். மானம் போய்விட்டால் அதன் பிறகு வாழ்வும் ஒரு கேடா? மனிதனாகப் பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் அமைதி தானே முக்கியம்.
“நான் வீட்டைக் காலி செய்வதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. ஆனால் இரண்டு வருடமாக வாடகை கொடுக்காமல் போகிறேனே என்றுதான் வருத்தப்படுகிறேன். நான் போன பின்பு நாணயமாக நடக்காதவன் என்று நீங்கள் ஊரெல்லாம் பேசுவீர்கள்” என்று வருத்தத்தோடு சொன்னான்.
அப்பொழுது கண்ணபிரான் சொன்ன கேலிகலந்த சொற்கள்……? அவன் தன்மான உணர்ச்சியுடன் தனக்கிருந்த ஒரே ஒரு ‘டிரங்குப் பெட்டி’யை மட்டும் தூக்கிக்கொண்டு ஒரு மூலைபில் சாத்தி வைத்திருந்த சைக்கிளைப் பிடித்துத் தள்ளினான்.
உடனே கண்ணபிரான் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு, “என்னுடைய வாடகைப் பாக்கிக்காக சைக்கிளை எடுத்துக்கொண்டேன்” என்றார்.
எப்படியாவது அவனை அங்கிருந்து துரத்திவிட்டு ஆக்கிரமித்துக் கொண்டால் தான் மட்டும் அங்கேயே சொகுசாக வாழ்க்கை நடத்தலாம் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
ராஜாமணிக்கு அவர் சொன்னது என்னவோ போல் இருந்தது, குடலினுள் யாராவது கையை நுழைத்து குடலைப் பிடித்து உருவி இழுக்கிறார்களா?
சைக்கிளை வேண்டுமானாலும் அவன் இழப்பதற்குத் தயாராக இருந்தான். ஆனால் சைக்கிளின் ‘சீட்டுக்கு’ அடியில் உள்ள குழாயினுள் மறைத்து வைத்திருந்த பத்திரத்தை மட்டும் இழக்க முன்வர வில்லை. காரணம்…? அந்தப் பத்திரம் விலைமதிப்பற்றது. மாலினி என்ற இளம் பெண்ணுக்குச் சொந்தமான அந்தப் பத்திரத்தை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தான்.
முறையாக அவன் சைக்கிளைக் கேட்டுப் பார்த்தும் பயன் கிட்டாமல் போகவே, வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சொன்னான்,
“உங்களுக்கு இந்த சைக்கிள்தானே வேண்டும். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் இந்த சைக்களை சென்டிரல் ஸ்டேஷனில் எடுத்தேன்; அதன் சொந்தக்காரன் இப்பொழுது போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருப்பான். நீங்கள் இந்த சைக்கிளை எடுத்துக்கொண்டால் நீங்களும் சைக்கிளும் போலீஸ் ஸ்டேஷனில் போய் தான் நிற்பீர்கள். நான் எழும்பூர் ஸ்டேஷனில் போய் வேறு சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன்.”
அவன் இப்படி அலட்சியமாகச் சொன்னதும் கண்ணபிரான் அலறிவிட்டார். சைக்கிளைப் பிடித்திருந்த கை தானாகவே விலகியது, “அடப்பாவி, திருட்டு சைக்கிளையா என் வீட்டினுள் வைத்திருக் கிறாய்? முதலில் இந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போ. நீ எனக்கு வாடகை கொடுக்காமல் நாமம் போட்டாலும் பரவாயில்லை.”
“வாடகை கொடுக்காமல் ஏமாற்றும் பழக்கம் எனக்குக் கிடையாது. என் கைக்கு பணம் வந்ததும், உங்களுக்கு வரவேண்டிய பணம் தானாகவே வரும்.” என்று சொன்ன அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வெளியே போனான். இதுவரையிலும் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறோமே என்பதை நினைத்த போது அவனுக்கு அழுகை வாத்தான் செய்தது,
அவன் சைக்கிளை ஓட்டியவாறு நாலைந்து மைல் வந்து விட்டான். நாணயமாக நடக்க முடியவில்லையே என்ற வேதனை அவனை என்னவெல்லாமோ செய்தது.
“ராஜாமணி கொஞ்சம் நில்.” என்ற குரல் பாதையின் பக்க வாட்டிலிருந்து கேட்டது.
சைக்கிளை ஓட்டியபடியே ராஜாமணி திரும்பிப் பார்த்தான். வழக்கமாக பத்திரிகை வாங்கிக்கொள்ளும் பெரியவர் ஒருவர், பிளாட்பாரத்தின் மீது நின்றுகொண்டிருந்தார்.
அவன் சைக்கிளை விட்டிறங்கி அவர் எதிரில் சென்றான். “நாலைந்து மாதங்களாகவே உனக்கு பேப்பர் பாக்கியைக் கொடுக்காமல் இருந்து விட்டேன்.” என்று கூறிய அவர் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டதும் அவன் வீட்டுக்கார கண்ணபிரானை நினைத்துக் கொண்டான். இந்த முப்பது ரூபாயையும் கொடுத்துவிட்டால் அவர் மகிழ்ச்சியடைவாரே என்று எண்ணினான். உடனே அவன் சைக்கிளில் ஏறி வீட்டுக்காரக் கிழவரின் வீட்டுக்கு விரைந்தான்.
ராஜாமணி சைக்கிளை அனாயசமாக ஓட்டிக்கொண்டு வந்த போது ஒருபெண் திடீரென்று குறுக்கே பாய்ந்ததைக் கண்டு ‘பிரேக்’ போட்டான் ஆனால் அதற்குள் சைக்கிள் அவள் மீது மோதி கீழே தள்ளிவிட்டது.
ராஜாமணியும் சைக்கிளோடு கீழே விழுந்தான். இரண்டு பேர்களும் ஒன்றாகக் கிடந்தார்கள்.
சட்டென்று துள்ளி எழுந்த ராஜாமணி, கீழே விழுந்துகிடந்த அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியதும் அவள் தன்னுடைய காதலி மீனாவாக இருப்பதைக் கண்டு வியப் புற்றான்.
மீனா அவனைப் பார்த்ததும், “ராஜா, நீங்களா?” என்று கூவி விட்டு அதற்குமேல் எதுவுமே பேச முடியாதவளைப் போல் தத்தளித்தாள். அவளுடைய முகம் பேயறைந்து விட்டதைப்போல் வெளுத்துப் போயிருந்தது.
ராஜா அவளுடைய முகத்தையும், அதில் காணப்பட்ட சலனங்களையும் கவனித்துவிட்டு, “ஏன் மீனா என்னவோபோல் இருக்கிறாய்? உடம்புக்கு ஒன்றும் இல்லையே.” என்று பாபரப்போடு வினவினான். அவள் சோர்வாகக் காட்சியளித்தது அவனுடைய நெஞ்சைத் தாக்குவது போல் இருந்தது.
“நான் .எப்போதும் போல் நன்றாகத்தானே இருக்கிறேன்.” என்று கூறிவிட்டு இருக்க முயன்ற மீனா, “எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. மறுபடியும் நான் வந்து உங்களைச் சந்திக்கிறேன்.” என்று படபடத்தாள்.
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவள் ஏன் இப்படி படபடக்கிறாள் என்பதோ புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது.
மீனா எப்பொழுதும் தெளிவாகவே இருப்பாள். அமைதியாகவும் பேசுவாள். ஒருமுறைகூட அவளுக்கு குரல் கிரீச்சிட்டுக் கத்தாது. ஆனால் இப்பொழுது அவளுடைய நிலை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. பழைய தெம்பு. கலகலப்பு எதுவுமே அவளிடத்தில் இல்லை. அவள் இடியால் தாக்கப்பட்டவள் போல் காணப்பட்டாள்.
ராஜாமணி அவளுடைய இடது கையைப் பார்த்தான்.
ஆறு வளையல்களுக்குப் பதில் ஐந்து வளையல்கள் மட்டுமே காணப்பட்டன, ஒரு வளையல் உடைந்து கையில் குத்தியதற்கு அடையாளமான இரத்தக்கசிவு பளிச்சிட்டது.
“மீனா, என்ன இதெல்லாம்? நீ யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டு வந்தாயா? வளையல் உடைந்து கையில் குத்தியிருக்கிறதே.” என்று கேட்டான் படபடப்போடு.
“நான் யாருடனும் சண்டை போடவில்லை.எதற்காக நீங்கள் மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள் கிறீர்கள். நான் மறுபடியும் சாயங்காலம் வந்து உங்களை கடற்கரை காந்திசிலை அருகில் சந்திக்கிறேன் ” என்று உளறிய மீனா அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேகமாகப் பறந்தாள், சிட்டுப்போல.
கலவரமடைந்த ராஜாமணி ஓடும்போது அவளுடைய பின் புறத்தைப் பார்த்தான்.
இரத்தக்கறை வெண்மையான தாவணியில் படிந்திருந்தது. அதைத் கவனித்துவிட்டதும் ராஜாமணி வீரிட்டுக் கத்திவிட்டு, மீனா வின் தாவணியில் இரத்தம் அவள் பரபரப்புடன் ஓடியதற்கும், இந்த இரத்தக் கரைக்கும், உடைந்த வளையலுக்கும் ஏதாவது சம்பந் தம் இருக்குமா?” என்று தன்னைத்தானே கேட்டுப் பார்த்துக் கொண்டான்.
ஆனால் பதில் கிடைக்கவில்லை.
அவள் யாரையாவது கொலை செய்துவிட்டு வருகிறாளா? இல்லாவிடால் ஏன் இப்படி தலைதெறிக்கும் வேகத்தில் ஓடுகிறாள்? படபடத்தாள்?
மீனா என்றைக்குமே இப்படி நடந்துகொண்டதில்லை. அவள் யார்த்ததும் குழைந்து விடுவாளே! ராஜா ராஜா என்று கூறிக் கொண்டே இருப்பாளே!
ஏதோ ஒரு பயங்கரம் அவளுடைய வாழ்வில் நடந்திருக்க வேண்டும் என்று எண்ணிய ராஜாமணி, சைக்கிளை நிமிர்த்தி அதில் ஏறி உட்கார்ந்தான். கால்கள் ‘பெடல் கட்டைகளை வேகமாகச் சுற்றத் தொடங்கின.
அவன் மனத்தின் வேகத்தோடு சைக்கிளின் உருளைகளும் போட்டி போட்டன.
8. ஒரு பயங்கரம்!
ராஜாமணியின் உடல் ஏதோ ஒரு கிலியுடன் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. தான் மீனாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த தால் இப்படியொரு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கவும் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டான்.
மீனாவைப் பொறுத்த வரையில் அவள் மிகவும் நல்லவள், ஒரு பெரிய கம்பெனியில் வேலைசெய்து வந்தாள். அவளுக்கென்று இந்த உலகத்தில் யாருமே இல்லாததால் அனாதை என்றுதான் சொல்லவேண்டும்.
அவள் அழகு நிரம்பியவள். இயற்கை வனப்பே போதுமான அளவுக்கு இருந்ததால் செயற்கைச் சாதனங்களின் துணையை ஒரு போதுமே நடமாட்டாள். இது அவனுக்கே தெரியும்.
மீனாவை நினைத்து எதை எதையோ கற்பனை செய்து அர்த்த மில்லாமல் குழம்பிப் போனதால், குடியிருந்த வீட்டை அடைந்ததும், உள்ளேபோக மனமின்றி “கண்ணபிரான் ஸார். கண்ணபிரான் ஸார்” என்று கூப்பிட்டான். ஏனோ குரல் நல்லபடியாக ஒவிக்க வில்லை.
அவர் மிகவும் இழிவாகப் பேசிவிட்டதால் வீட்டினுள் செல்லுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. என்னதான் பெரிய மனிதராக இருந்தாலும் மரியாதை என்று ஒன்று இருக்கவேண்டாமா? அவன் வெறுப்படைந்தான். அவனுடைய தன்மான உணச்சி வந்து வெளி யிலேயே நிற்க வைத்தது ஆயினும் போலி கௌரவத்துக்கு அடிமை யாகக் கூடாது என்ற எண்ணத்துடன், “கண்ணபிரான் ஸார், நீங்கள் என்னை வெளியே தள்ளினீர்கள். ஆனாலும் பணத்தை எடுத்துக் கொண்டு மோசம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. அதனால் பணம் கொடுப்பதற்காகவே உள்ளே வருகிறேன்” என்று சொன்னவன் வாசலில் வந்து நின்று உள்ளே பார்த்தான்:
கதவு என்று பெயரளவுக்கு இருந்த ஒரு பலகை திறந்த படியே கிடந்தது. ஆனால் உள்ளேயிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை அவர் கதவைத் திறந்துப் போட்டுக்கொண்டு பகலிலேயே தூங்க ஆரம்பித்து விட்டாரோ?
அவன் வாசல் சட்டத்தைப் பிடித்துக்கொண்டு உள்ளை தலையை நீட்டி யாராவது இருக்கிறார்களா, என்று கவனித்தான்.
முன்பு தான் படுத்திருந்த அதே இடத்தில் வீட்டுக்காரரான கண்ணபிரான் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். எதிர்பார்த்ததைப் போன்ற தூக்கம் தான். ஆனால் குறட்டை இல்லை.
அவரைப் பார்த்ததும் ராஜாமணிக்கு சிரிப்புதான் வந்தது. முன்பு தான் தூங்கியபோது அவர் வந்து கலாட்டா செய்தார்! சாப் பிட்ட பின்பு தூங்கியதற்காகக் கோபித்துக்கொண்டார். இப்பொழுது; அவரே தூங்குவது என்றால்… ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதியா? நல்ல உலகம்…! ஆளுக்கொரு சட்டத்தை வைத்திருக்கிறது.
வீட்டினுள் சென்று அவரை எழுப்பி பணம் கொடுக்க நினைத்த ராஜாமணி உள்ளே சென்று தூங்கிக்கொண்டிருந்த கண்ணபிரானைப் பார்த்து, “ஸார்… ஸார்…” என்று கூப்பிட்டான். அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததைப் போல் தோன்றவே தோள்பட்டையைப் பிடித்து குலுக்கினான்.
மனிதன் தடித்த ஆசாமி தான்! தோள்பட்டை எப்படி தேக்கு மரக்கட்டைபோல் உருண்டு திரண்டு இருக்கிறது!
அவன் எழுந்திருக்காமலும் அசைந்து கொடுக்காமலும் இருக்கவே ராஜாமணி திகிலடைந்து அவருடைய நெஞ்சுத் துடிப்பைப் பார்த்தான்.
அந்தோ!
நெஞ்சு துடிக்கவில்லை.
அவருடைய நெஞ்சிலிருந்து இரத்தம் கொப்பளித்துக்க கொண்டிருந்தது. அவர் இறந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்டதும் ராஜாமணி பயந்து போய் வீரிட்டுக் கத்தினான். ஒரு பிணத்தின் அருகில் நின்றுகொண்டு தொட்டுவிட்டோம் என்பதை நினைத்துக்கொண்டதும் உடல் சில்லிட்டது.
அவர் இறந்துவிட்டார். அதுவும் கத்தியால் குத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவருடைய மரணம் ஒருமணி நேரத்திற்குள் நடந்திருக்கிறது.
அவருடைய உயிர் பிரிந்துவிட்டதால் தனக்கு அபாயம் ஏற் டக்கூடுமோ என்று நினைத்துப் பயந்த ராஜாமணி தற்செயலாகக் கீழே பார்த்தான்.
தரையில் மல்லிகைச்சரம் கிடந்தது. அதன் பக்கத்தில் பாதி யாக உடைந்த வளையல் துண்டு ஒன்றும் காணப்பட்டது.
எதையோ நினைத்துக் கொண்ட ராஜாமணி, கண்ணபிரானின் கொலையில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி அந்த மல்லிகைச் சாத்தையும், வளையல் துண்டையும் எடுத்து சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டு திருதிருவென்று விழித்தான்.
உடைந்த வளையல் துண்டு… மல்லிகைச்சரம்…
அவனுக்கு நினைவு வந்துவிட்டது. மீனாவின் வளையல்களில் ஒன்று உடைந்து அவளுடைய கையைக் குத்தி காயப்படுத்தியிருந் தது. அந்த வளையல்களில் ஒன்றுதான் இதுவும். மீனாவின் பொருட்கள் இந்த அறையினுள் எப்படி வந்தன?
அப்படியானால் மீனா இந்த வீட்டினுள் வந்து…
அதற்குமேல் ராஜாமணியால் கற்பனை செய்ய முடியவில்லை. மீனா இந்த வீட்டினுள் வந்திருக்கிறாள் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. மல்லிகை சரமும் அவளுடைய தாகத்தான் இருக்கவேண்டும். மல்லிகைச்சரம் சூட்டிக்கொள்ளும் வழக்கமும் மீனாவுக்கு உண்டு.
அப்படியானால் அப்படியானால்? மீனா தாவனியில் இந்தக் கறைகூட காணப்பட்டதே! அவள்தான் அவரைக் கொலை செய்து விட்டாளா? கத்தியால் குத்திக் கொலை செய்யும் அளவுக்கு அவளுக்குத் துணிச்சல் வந்துவிட்டதா? பெண் சீரினால் புலியாகவும் மாறி விடுவாள் என்பது மீனாவைப் பொறுத்தவரையில் உண்மையா?
மீனா தான் கண்ணபிரானைக் கத்தியால் குத்திக் சொலை செய்திருப்பாளோ என்று ஐயுற்ற போதிலும், உடனே அவனுடைய உள் மனம் “மீனா அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக்கூடியவள் அல்ல.” என்று மறுத்துக் கூறியது. மீனாவை மிகவும் நன்றாக அவனுக்குத் தெரியுமே! அவள் அவனுடைய உயிர்க் காதலி ஆயிற்றே.
மீனாவை விசாரித்தால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்று எண்ணிய ராஜாமணி வெளியே ஓடிப்போய்விடலாம் என்ற எண்ணத்துடன் காலைத்தூக்கி வைத்ததும் தெருவில் கார் வந்து நிற்கும் ஓசையையும், கதவுகள் திறந்து மூடப்படும் சப்தத்தையும் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான்.
குதிரைகளின் குளம்படி ஓசையைப்போல் பூட்ஸ் ஒலிகள் எழுந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சில போலீஸ்காரர்களும் வீட்டினுள் விரைந்து வந்தார்கள்.
ராஜாமணி அவர்களைக் கண்டதும் மெதுவாக நழுவ எத்தனித்தான். அவர்களிடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகுமோ? கொலைக் குற்றத்தை தன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டால்கூட ஆச்சரியப் பட முடியாதே!
அவன் நடுங்கினான். திகிலோடு விழித்தான்.
அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர் குணாளன் “பட்டப் பகலிலேயே படுகொலை. அதே இடத்திலேயே கொலைகாரன்” என்று சொன்னார்.
அவர் சாட்டிய குற்றம் ராஜாமணியை என்னவெல்லாமோ செய்தது. அபாயத்தில் வலிய வந்து சிக்கிக் கொண்டோமே என்ற எண்ணத்துடன் நடுநடுங்கிப் போனான்.
“ஸார், நீங்கள் என்னை தவறாக நினைத்துவிட்டீர்கள்போல் தோன்றுகிறது. நான் இங்கே வருவதற்கு முன்னாலேயே இறந்து கிடக்கிறார்” என்றான் அவன்.
“இது உன்னுடைய அறைதானே…?”
“மத்தியானம் இரண்டுமணி வரையில் இது என்னுடைய அறையாகத்தான் இருந்தது. இரண்டு வருடங்களாக நான் வாடகை கொடுக்காமல் இருந்ததால் காலி செய்யும்படிச் சொல்லி விட்டார்கள். நான் வேறு வழியின்றி காலி செய்தேன்.”
“காலி செய்துவிட்டுச் சென்ற நீ மடிபடியும் எதனால் இந்த வீட்டுக்கு வந்தாய்? அவருடன் சண்டை போடலாம் என்ற நோக்கத்துடனா?”
“அப்படியெல்லாம் இல்லை இன்ஸ்பெக்டர். நான் பேப்பர் போட்ட பழைய பாக்கி முப்பது ரூபாய் வசூலாகியது. அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்துடனேயே இங்கே வந்தேன். நான் வந்து பார்த்தபோது அவர் செத்துக் கிடக்கிறாா இன்ஸ்பெக்டர்” என்று சொன்ன ராஜாமணி முகத்தை இரண்டு கைகளால் மூடிக்கொண்டு அழுதான்.
“நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம். உண்மையைச் சொல் நீ இவரைக் கொலை செய்தாயா இல்லையா?” இன்ஸ்பெக்டர் அதட்டி னார்.
”உண்மையைத்தானே சொல்லவேண்டும். சொல்லுகிறேன். வாழைக்குலை என்று சொன்னால்கூட நான் பயப்படுவேன் ஸார். அப்படிப்பட்ட நான் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கு கத்தியை கையில் தொட்டிருப்பேன் என்று நம்புகிறீர்களா ஸார்? நான் கொலை செய்யவில்லை. இதை எங்கே வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சியுடன் சொன்ன ராஜாமணி, “இப்பொழுதே கோயிலுக்கு வாருங்கள். சத்தியம் செய்கிறேன்.” என்று படபடத்தான்.
“சத்தியம் செய்தால் உடனே ஏமாந்துவிடுவோம் என்று நினைத்தாய் போலிருக்கிறது. நீயும் இவரும் வாடகை சம்பந்தமாக சண்டை போட்டிருக்கிறீர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது. அதனால் நீ ஏன் ஆத்திரமடைந்து அவரைக் கொலை செய்திருக்கக்கூடாது என்று கேட்கிறேன்.”
ராஜாமணி அவருடைய குற்றச்சாட்டை கண்டிப்பாக மறுத்து, “நான் கொலை செய்யவில்லை ஸார், நிரபராதி” என்று சொன்னவன், “இந்த வீட்டினுள் கொலை நடந்திருக்கிறது என்பதும், இதே இடத்தில் நான் இருக்கிறேன் என்பதும் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டான்.
“சிறிது நேரத்திற்கு முன்னால் இந்த வீட்டில் கொலை நடந் திருப்பதாக யாரோ ஒருவன் எங்கிருந்தோ டெலிபோன் செய்தான். ஆனால் அவனுடைய குரலும் உன்னுடைய குரலும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன.” என்றார் இன்ஸ்பெக்டர்
“நல்லவேளை, நானும் கொலைகாரனும் இரட்டைக்குழந்தைகள் என்று சொல்லாமல் விட்டீர்களே” என்று சொன்ன ரரஜாமணி, “உங்களுக்கு டெலிபோன் செய்த அதே ஆசாமிதான் கொலைகாரனாக இருக்கவேண்டும். என் மீது கொலைக்குற்றம் வரவேண்டும் என்பதற்காக போன் செய்து என்னைக் காட்டிக்கொடுக்கச் செய்திருக்கிறான்'” என்றான்.
“நீ என்னதான் சொன்னாலும் உன்னை நம்பப்போவதில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கிறோம்.”
இன்ஸ்பெக்டர் குணாளன் இப்படிச் சொன்னதும், அவருடன் வந்த போலீஸ்காரர்களில் ஒருவர் ராஜாமணியின் சட்டையைப் பின் புறமாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டார்.
அவன் பதறினான்.
“என்னை விட்டு விடுங்கள்.” என்று கதறினான் தன் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிவிட்டதைப் போன்ற குலைநடுக்கம் உண்டாயிற்று.
8. உயிர் காப்பாள் தோழி !
நீண்ட நேரம் விசாரணை செய்த பின்பு இன்ஸ்பெக்டர் குணாளன், “நீ பேப்பர் போட்டு பிழைப்பு நடத்தும் ஏழையாக இருந்தாலும் உன்னை அலட்சியப்படுத்த மாட்டோம். நீ கொலை செய்திருக்க மாட்டாய் என்றே நம்புகிறேன். ஆனால் பொறுப்பான யாராவது ஜாமீன் கொடுத்தால் உன்னை விடுதலை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சொன்னவர், “உனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
“தெரிந்தவர்களா? நான் பேப்பர் போடும் வாடிக்கைக்காரர்கள் எல்லோருமே எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனால் என்னை நம்பி யாராவது வந்து ஜாமீன் கொடுப்பார்களா என்றுதான் தெரிய வில்லை,”
அவன் நம்பிக்கை இழந்த நிலையில் பேசிய அதே நேரத்தில், “நான் உங்களுக்கு ஜாமீன் கொடுக்கிறேன். உங்களுக்கு எந்தவிதமான கவலையுமே வேண்டியதில்லை” என்று ஒரு குரல் வாசல் பக்கமாகக் கேட்டது.
எல்லோருமே வாசலை நோக்கினார்கள்.
பணத்தில் புரண்டு விளையாடும் வாக்கியும் பெற்ற இளம்பெண் மாலினி நாகரிகத்தில் எதிரொலிக்கும் விதத்தில் ஆடைகுறைப்பு செய்துகொண்டு அசைந்து அசைந்து வந்து இன்ஸ்பெக்டர் குணாளனைப் பார்த்துக் கைகூப்பினாள். நடனமாடுவதைப் போலிருந்தது, அது.
மாலினிதான் ராஜாமணியிடம் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் பத்திரிகை வாங்கும் வாடிக்கைக்காரர்களில் அவளும் ஒருத்தி.
லட்சாதிபதியான அவள் ஜாமீன் கொடுப்பதற்காக வந்தது அவனுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பணக்காரர்களிடத்தில் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற கருணையை எதிர் பார்ப்பது குதிரைக்கொம்பு அல்லவா!
“மாலினி, நீங்களா எனக்கு ஜாமீன் கொடுக்க வந்தீர்கள்? என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை” என்று சொன்னான் ராஜாமணி, நன்றியுடன்.
இன்ஸ்பெக்டர் குணாளன் அவளை உட்காரும்படி சொன்னார் பணக்காரர்களுக்கு எந்த இடத்துக்குச் சென்றாலும் அங்கே மதிப்பு இருக்கத்தானே செய்கிறது.
மாலினி உட்காராமல் ராஜாமணியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். “நீங்கள் ஜாமீன் கொடுப்பதை உங்கள் சித்தப்பா ஆட்சேபிக்க மாட்டார்கள் அல்லவா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் குணாளன்.
“யார் ஆட்சேபித்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இப்பொழுது பதினெட்டு வயதைக் கடந்துவிட்ட மேஜர் பெண் சுதந்திரமாக எந்த முடிவு வேண்டு மானாலும் எடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது”.
அவள் இப்படி விளாசியதால் இன்ஸ்பெக்டர் இந்தக் காலத்துப் பெண்களிடம் ஜாக்கிரதையாகத்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் மௌனமாக இருந்தார்.
“மாஜிஸ்திரேட்டின் தனிப்பட்ட உத்தரவின்பேரில் இவனை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.
:தாங்க்யூ” என்று சொன்ன மாலினி அவனிடம் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
மறுநாள் முதல் வேலையாக மாஜிஸ்திரேட்டிடம் ஜாமீன் மனு எழுதிக் கொடுத்துவிட்டு அவனை அழைத்து வந்தாள் மாலினி.
ராஜாமணி பெண் போல் அழுதுகொண்டே இருந்தான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
“என்ன ராஜா, சின்ன குழந்தையைப் போல் அழுதுகொண்டு! யாராவது உங்களைப் பார்த்தால் கேலியாகச் சிரிப்பார்கள்” என்று அவனை உரிமையோடு அழைத்தாள் மாலினி.
”என்னை நினைத்து நான் அழவில்லை. நேற்று மாலையிலும், இன்று காலையிலும் பேப்பர் போட முடியாமல் போய்விட்டதே என்று நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன். எல்லோரும் என்னை ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பார்கள்.”
அவன் குழந்தை உள்ளத்துடன் சொன்னதைக் கேட்டு மாலினி வாய்விட்டுச் சிரித்தாள். இந்த இருபதாம் நூற்றாண்டில் இது போன்ற மனப்பான்மை இருந்தால் சமூகத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமா?
“நீங்கள் ஒருவர் இல்லாவிட்டால் இந்த உலகமே அழிந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள் பேப்பர் கொண்டு வருவீர்களா என்று சிறிது நேரம் வரையில் பார்ப்பார்கள். வரமாட்டீர்கள் என்று தெரிந்தால் உடனே வேறு பேப்பர் வாங்கிக் கொள்வார்கள். மனிதனுடைய மனோநிலையே இப்படித்தான்.” என்று சிறியதொரு விளக்கம் கொடுத்தாள் மாலினி. அவள் கண்களிலும் கண்ணீர் மல்கியது.
அவள் சொன்னதைக் கேட்டதும் ராஜாமணி அசடுவழியும் படிச் சிரித்தான் தன்னை மட்டுமே பெரிதாக நினைத்துக் கொண்டிருப் பது தவறு போலிருக்கிறது.
“உங்களுக்குத் தெரிந்த விஷடங்கள்கூட எனக்குத் தெரியாமல் போய்விட்டது.” என்று சொன்ன ராஜாமணி “சைக்கிள் பத்திரமாக இருக்கிறது அல்லவா?” என்று கேட்டான்.
“போலீசாரின் பாதுகாப்பில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறது. இப்பொழுதே நாம் எடுத்துக்கொள்ளலாம்.” என்று சொன்ன மாலினி கொலையைப் பற்றி விசாரித்தாள்.
“நான் கொலை செய்திருக்க மாட்டேன் என்று நம்புகிறீர்கள் அல்லவா?”
“நிச்சயமாக நம்புகிறேன். கடிக்கின்ற மூட்டைப் பூச்சியைக் கூட நசுக்குவதற்கு உங்களுக்கு மனம் வராது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கொலை செய்தது யார் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். கொலையாளியைக் காட்டிக்கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடனும் இருப்பீர்கள்.” என்றாள் அவனைக் குற்றம் சாட்டுவதுபோல.
ராஜாமணி பதில் பேசவில்லை. தன்னை அன்போடு நேசிக்கும் மீனா மீது சந்தேகத்திற்குரிய உணர்வு தோன்றிய போதிலும் அவள் – பெயரைக்கூட வெளியே சொல்ல விரும்பவில்லை. மீனா கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறாள் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டால் உடனே அவளை போலீஸார் கைது செய்து கொண்டு போய் விடுவார்கள், தன்னால் அவளுக்குத் தொல்லைகள் தான் ஏற்படும் ஆதரவற்ற அவள் மனமுடைந்து போய்விடுவாள்.
பொய் சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை, என்பதை உணர்ந்துகொண்ட அவன் “நான் கொலை செய்யவில்லை என்பதை மட்டும்தான் இப்பொழுது சொல்ல முடியும்.” என்று சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்த மாலினி, ‘இப்பொழுது சொல்லமுடியும் என்றால் பிறகு கொலையாளி யார் என்பதையும் நீங்கள் சொல்லுவீர்கள் போலிருக்கிறதே. ஏனென்றால் நீங்கள் பேசும் தோரணை இப்படி இருக்கிறது.” என்றாள்.
“என்னைக் குழப்பாதீர்கள் மாலினி.. பிறகு நான் எதையாவது உளறித் தொலைத்துவிடுவேன்.” என்று சொன்ன ராஜாமணி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அவனுடைய சைக்கிளை எடுத்து உருட்டிக் கொண்டு வந்தான்.
9
ஸ்டேஷனுக்கு வெளியே வெள்ளரிப்பிஞ்சு போன்ற இளமைச் செழிப்புடன் மாலினி நின்று கொண்டிருந்தாள். அவனை எதிர் கொண்டு வரவேற்றாள்.
“இனி நீங்கள் எங்கே போய்த் தங்கப்போகிறீர்கள்?”
“அதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இன்றிரவு போலீஸ் ஸ்டேஷன் லாக்காப்பிலேயே கழிந்துவிட்டது.”
”நான் ஒரு யோசனை சொன்னால் கேட்கிறீர்களா?”
“நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால் இந்த உலகத்தில் நான் நன்றாக வாழவேண்டும் என்பதில் முழு அக்கறையும் உள்ளவள் நீங்கள். இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொடுத்ததே நீங்கள் தானே.”
“இப்பொழுது சைக்கிள் பிரச்னை வேண்டியதில்லை.” என்று கண்டித்த மாலினி, “எங்கள் வீட்டுக்குப் பின்னால் ‘அவுட் அவுஸ்’ காலியாக இருக்கிறது. அந்த வீட்டுக்கே நீங்கள் வரலாம்” என்று சொன்னாள்.
அவுட் அவுஸில் குடியேறும் அளவுக்கு அவனிடம் பணவசதி ஏது? தினசரி இரண்டு ரூபாய் சம்பளம் கிடைப்பதே அவனுக்கு அதிக வருமானம்.
“நானா…? நீங்கள் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் போலிருக்கிறது’ என்றான் ராஜாமணி.
“இல்லை, உங்களைத்தான் சொல்லுகிறேன்.”
“என்னைக் கண்டாலேயே உங்கள் சித்தப்பாவுக்குப் பிடிக்காது. உங்கள் அத்தான் குடிமுழுகி விட்டதைப் போல் சீறி விழுவார். கோட்டு கோதண்டம் என்ற மூக்கன் ரவுடியும் உங்கள் சித்தப்பாவுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறான்.”
“நீங்கள் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்பதால், வேறு குணாதிசயத்தைக் கொண்ட யாருமே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா?’”
“அப்படியொன்றும் இல்லை. அவர்கள் என்னை விரும்ப மாட்டார்களே என்றுதான் சொல்ல வருகிறேன்.”
ராஜாமணிக்கு அது கவலையாக இருந்தது.
“அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை.” என்று சொன்ன மாலினி கைப்பையைத் திறந்து சில பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டி, “இதை அட்வான்சு கொடுப்பதற்காக வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
“என்னங்க இது?… உங்கள் பணத்தை வாங்கி உங்கள் வீட்டுக்கே அட்வான்ஸ் கொடுப்பது என்றால்…?”
“உங்கள் பணமாவது, எங்கள் பணமாவது. எல்லாம் ஒரு பணம்தான். பணம் யாருடைய கையில் இருக்கிறதோ, அந்தப் பணத்துக்கு அவன் எஜமான்.” என்று சொன்ன மாலினி பணத்தை அவன் கையில் வைத்து அழுத்தினாள்.
அவன் கை மட்டுமல்ல, உடலெங்கும் நடுக்கம் எடுத்தது. கண்ணபிரான் மரணத்துக்குப் பிறகு நடக்கப்போகும் காரியங்களில் எல்லாம் பயங்கரம் நிறைந்திருப்பதைப் போலவே அவன் கண்களுக்குத் தோன்றியது.
ஏனோ தன்னையும் மீறி பதறினான்.
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.