மிஸ்டர் எஸ்.கே.முத்து
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 13, 2026 முதற்பதிப்பு: 1976
பார்வைகள்: 37
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிஸ்டர் எஸ்.கே. முத்து, நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் விரைவு வண்டியில் இருந்து இறங்கியபோது எங்கும் ஒரே நீலமயமாக இருந்தது. அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டாலும் சுற்றுப்புறம் அழுது வடிந்தது. எதிரே தெரிந்த நித்தியானந்த விலாஸ் காபி சாப்பாடு ஓட்டலில் மட்டும் நாலைந்து டிரைவர் கன்டக்டர்கள். ஒன்றிரண்டு அதிகாலைப் பயணிகள்.
வண்டியிலிருந்து இறங்கி, அதன் விலாவில் இருந்து எடுக்கப்படும் பெட்டிகளுக்காகக் காத்து நின்றான். முகத்தில் இருந்த குளிர் நீலக் கண்ணாடியைக் கழற்றிய பிறகுதான் அவனுக்குத் தான் பெட்டிகளை அடையாளம் தெரிந்தது. ஏர் பேக், சஃபாரி சூட்கேஸ், வி.ஐ.பி. பிரீஃப்கேஸ் என்று மூன்று.
இறக்கிவைக்கப்படும் வரை இடதுகையில் கூலிங்கிளாசின் காம்பைப் பிடித்து ஆட்டிக்கொண்டும் பற்களால் அதைப் பொயக்கடி கடித்துக்கொண்டும் நின்றவன், பெட்டியைக் கண்டவுடன், பான்ட் பாக்கெட்டில் இருந்து மணிபர்சை எடுத்தான். ஜிப் மூடிய அதன் வாயைக் கிழித்து, மடிக்கப்படாமல் முழுதாக இருந்த புதிய நோட்டுக்களில் பத்து, ஐந்து, இரண்டு என்று தாண்டி ஒற்றை ரூபாய்த் தாளை உருவி இறக்கி வைத்தவனிடம் நீட்டினான்.
அவனுக்கு இப்போது ஒரு யோசனை. நாகர்கோயிலில் இருந்து உடனேயே ஊருக்குப் போவதா? இல்லை ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கி, ஷேவ் செய்து, குளித்து உடைமாற்றி, பத்துமணி சுமாருக்குப் போவதா?
சொந்த ஊரான ஈசாந்திமங்கலம் அங்கிருந்து நாலே மைல்தான். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த வழியாக பஸ்கள் உண்டு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பம்பாயில் இருந்து வருபவன் பஸ்ஸிலா போவது? அது கௌரவத்துக்கு இழுக்கு என்று அவனுக்குத் தோன்றியது.
டாக்ஸியில் போவதானால் ஆறுமணிக்கே ஊருக்குப் போய் இறங்கிவிட முடியும். அதிகாலையில் தெரு முற்றங்களில் சாணித் தண்ணீர் தெளிக்கும் சில பெண்டுகளின் விழிகள் நெற்றிமீது ஏறுவதைத் தவிர அதில் என்ன கவர்ச்சி இருக்கிறது? பலர் பார்வையிலும் படாவிட்டால் இந்தப் புதிய ஏர் பேக், சஃபாரி, வி.ஐ.பி; ஷோலே ஷூ, டபிள் நிட்டட் பேன்ட், பாம்பே டையிங் ஷர்ட், நூற்று முப்பது ரூபாய் கூலிங்கிளாஸ் இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது?
கூலியைப் பிடித்து, பக்கத்தில் இருந்த ரகு விலாஸ் போர்டிங் அன்டு லாட்ஜிங்கில் இறங்கினான். காலை மொட்டவிழ்ந்து பகல்பூக்க ஆரம்பித் ததும் சுமார் பத்தரை மணிக்கு ரூமை காலி செய்துவிட்டு படிக்கட்டுகளில் இறங்கியவன் தோற்றத்தில் சில சில்லறை மாற்றங்கள்.
பாக்கெட்டில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கும் தங்கமுலாமிட்ட ஹீரோ 70 பேனா. அதன் உள்ளே இருந்தபடி மறைவாகக் காட்சி தரும் ரோத்மான்ஸ் கிங் சைஸ் சிகரெட்டுகள் இருபது கொண்ட பெட்டி. நாஷனல் பேனோசோனிக் என்ற பெயர் கொண்ட, ஜப்பானில் தயாரா னது என்ற போர்வையில் வரும் உல்லாஸ் நகர் டிரான்சிஸ்டர்கம் காசெட் பிளேயர். முன்நெற்றி முடியைக் கோதிப் பின்னால் தள்ளி, சொன்னபடி கேட்காமல் அது ஷாம்பூ குளியலில் கண்டபடி அலைவதை மனதுக்குள் ரசித்துக்கொண்டு லாட்ஜ் வாசலுக்கு வந்தான்.
‘தூத்துக்குடிக்கு அடுத்த வண்டி எப்போ?’ என்று கண்டக்டர் ஒருவரைத் துளைத்துக்கொண்டிருந்த சில கிராமத்து ஆட்கள் இவன் அலை பரப்பிய வாசனையால் திரும்பி, ‘இது என்ன புதுசா மணக்கு’ என்று மூக்கு நிறைய இழுத்து சுவாசித்துவிட்டு எஸ்.கே.முத்துவை பய பக்தியுடன் பார்த்தனர்.
ஒரு கையில் டிரான்ஸ்சிஸ்டர் மறுகையில் பிரீஃப்கேசுமாக அவனும், பின்னால் தலைச்சுமட்டு சாமான்களோடு கூலியாளுமாக வந்ததைக் கவனித்த டாக்ஸியொன்று மெல்ல நகர்ந்து கிட்டே வந்தது. சாமான்களை டிக்கியிலும் பிரீப் கேசை பக்கத்திலும் வைத்து சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். முத்து தியேட்டரைத் தாண்டி, சி.பி.ஆஸ்பிடல், புத்தேரி, இறச்சகுளம்… பிரீஃப் கேசைத் திறந்து படம்போட்ட ஆங்கில சினிமாப் பத்திரிகை ஒன்றைக் கையிலெடுத்துப் புரட்டத் தொடங் கினான். படிப்பது நோக்கமில்லை. ஆதலால் சற்றுப் புரட்டுவதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாய்…
ஈசாந்தி மங்கலம் நெருங்கியதுமே சிறிய புளகம் தோன்றி, புதிய பரபரப்பை அவன் மேல் ஏற்றி இறக்கியது. பத்திரிகையை மூடிவிட்டு டிரைவருக்குச் சொன்னான்.
“அதோ ரெண்டு மருதமரம் தெரியுது பாருங்கோ… அங்கே நிறுத்தினாப் போதும்… கொஞ்சம் மெதுவாய் போங்க. நிறுத்தி ரெண்டு ஹார்ன் குடுங்க… யாராவது வருவாங்க…”
எஸ்.கே.முத்துவுக்கு ரோட்டோரத்து வீடல்ல. மெயின்ரோட்டில் ருந்து கிழக்காக உள்ளே சரியும் முடுக்கில் கடைசி வீட்டுக்கு முந்திய வீடு. அந்த முடுக்கில் கார்நுழைவது என்பதோ, நுழைந்தாலும் மேலேறி வருவது என்பதோ நினைக்கக்கூடியதல்ல.
மெயின் ரோட்டின் மேற்குப்புறமாக நின்ற மருதமரங்களும் அதைத் தொட்டுக்கொண்டு ஓடும் கால்வாயும் அதில் துணி துவைத்துக் கொண் டிருந்த ஆண்பெண்களும் மருதமரத்துக்கு நேர் கிழக்காக இருந்த காளி கோயிலும் காளி கோயிலின் படிப்புரைகளில் தாயக்கட்டம், நாயும் புலி யும் போன்ற வீரவிளையாட்டுக்களில் மெய்ம்மறந்திருந்தோரும் ஒருமித் துத் திரும்பிப் பார்க்க… டாக்ஸி நின்றது. நின்ற வாக்கில் மூன்று முறை சங்கொலித்தது. அந்த வழியாகக் கார்கள் போவது ஒன்றும் புதியதல்ல என்றாலும் குறிபார்த்து அணில் அடித்ததைப் போன்று அங்கேயே அது நின்றதால், காரில் வந்தது யாராக இருக்கும் என்ற முனைப்பில் ஜோடிக் கணைகள் பல காருக்குள் எறிபட – இடது கையில் பெட்டியும் இரண்டாக நெடுக்கு வாட்டில் மடிக்கப்பட்ட படம் போட்ட ஆங்கிலப் பத்திரிகையு மாகக் காரில் இருந்து இறங்கி, சித்திரைத் திருநாள் மகாராஜா போலச் சுற்றுப் புறங்களை ஒரு பார்வை பார்த்து, ஜிப் வைத்த மணிபர்சைத் திறந்து ரூபாயை எடுத்து டிரைவரிடம் நீட்டி…
இன்னும் இது யார் என்று தெரியாத வியப்பில் – குளிர்நீலக் கண்ணாடி, கலைந்த முன்சிகை, தொழியுழவில் செதுக்கிய வரப்பு போலத் திட்டவட்டமான மீசை, இந்தி சினிமா நாயகன் போன்ற பேன்ட் சட்டை, அகலமான பெல்ட், ஸ்வஸ்திக் சின்னம் – இரைகின்ற ஸ்டவ்வை அணைத்தது போன்ற அமைதி.
“அட… நம்ம காத்த முத்துல்ல…” திடீரென அவனை அடையாளம் கண்ட ஒரு அவயம்.
“ஆமா… அவந்தான். அட செறுக்கி விள்ள! ஆளு அடையாளமே தெரியல்லியேடே! என்னண்ணு மாறிப் போனான். பறட்டத் தலையும் ஊள மூக்குமாத் திரிஞ்ச பயலா?”
ஏதோ ஒரு அசிங்கத்தைச் சொதக்கென்று மிதித்ததைப் போல, அவன் முகம் போனதைக் கண்டு பெரிய அபசாரம் செய்துவிட்ட குற்ற உணர்வு குடைய…
யாரோ ஒருவர், பெட்டி பேக்கை தூக்கிக்கொள்ள, கீழே லெதர் சோல் கொண்ட ஷூ புன்னைச் சருகில் சாரைப் பாம்பு ஊர்வது போலச் சப்திக்க நடந்த காத்த முத்துவின் பின்னால் – “இவன் கிளக்கே எங்கயோ இருக்காண்ணு சொன்னா… அவன்தானா… பய ஆளாயிட்டான்டே… இங்க கெடந்தா அந்த எட்டு மரக்கா விதைப்பாட்டையும் உழுதுகிட்டு ரெண்டு எருமையையும் மேச்சுக்கிட்டுத்தாலா கெடக்கணும்.”
“பின்னே! இங்கிண கெடந்தா எவன்தான் உருப்படுவான்? நல்ல சம்பா அரிசிச் சோறும் சாளைப் புளிமொளமும் திண்ணு ருசி கண்டாச் சுண்ணா ஈரமண்ணா விளங்குவான்? எங்கயாம் போயி நாலு காசு பாக்கணும்… எசக்கியப்பன் சொல்லச்சிலே நான் நம்பல்லே பாத்துக்கோ.
ரெம்பத்தான் டாவு விடுகான்ணு நினைச்சுப்போட்டேன். மாசம் சொளையா நூறு ரூவா அனுப்புகாண்ணா பாத்துக்கோயேன். பயலைப் பாத்த பொறகுல்லா தெரியி… காரியக்காரன்தான்டே…”
விமர்சனங்களைப் பின்னணியில் விட்டு, மனதுக்குள் மகிழ்ந்து அதி கௌரவத்தோடு நடந்தான் எஸ்.கே. முத்து.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வடக்கே இருந்து நாகர்கோயிலுக்குப் போகும் பஸ் நிறுத்தத்தில் சிறியதோர் கும்பல். ஒன்றிரண்டு கிசுகிசுப் புகள். கண்கள்கலங்கிச் சிவந்தன. நாசி விடைத்தபடி எஸ்.கே. முத்துவின் அம்மா. எங்கோ பார்த்துக்கொண்டு அப்பா.
அண்ணன் ஊருக்குப் போகிறான் என்ற நினைப்பில் அதிகமாக வாலாட்டாமல் அடங்கி நின்ற தம்பி, தங்கைகள். எஸ்.கே. முத்துவின் பக்கத்தில் சூட்கேஸ். பம்பாயில் கிடைக்காத அரும்பொருட்கள் கொண்ட பனையோலைக் கடவம் நான்கு புறமும் கொச்சக்கயிற்றால் வரிந்து, போய்ச் சேருவதுவரை அவிழாமல் இருக்க கட்டப்பட்டு நெரிந்து பிதுங்கியது. அதன்மேல் பெருங்காயப் பை. அதன் புறக்கோட்டு வடிவம் பார்த்தால் திருநெல்வேலி தொடங்கி பம்பாய் வரைக்குமான சாப்பாட்டுப் பொட்டலங்கள் போலத் தோன்றியது. வரும்போது இருந்ததைப் போலல்லாமல் நெற்றியில் பூசிய சுடலைமாடன் கோயில் திருநீறு, அதன்மேல் பத்ரகாளி கோயில் குங்குமம். ஆனால் எஸ்.கே. முத்து கண்களில் ஒரு வெறுமையும் துயரமும் மிடைந்து கலந்து நெருங்கிப் பிசைந்துகொண்டு கிடந்தன.
“பத்திரமாப் போயிட்டு வாப்பா… போனதும் எளுத்துப் போடு, டிக்கட்டை மறந்திராதே… ரெயில்லே ராத்திரி உறங்கீராதே… செல வாதிக்கு கிலவாதிக்குப் போனாலும் யாருகிட்டேயும் சொல்லி ஏப்பிச்சிக்கிட்டுப் போ…” அப்பாவின் அறிவுரைகள்.
”ஏ காத்து முத்து! என்னா பொறப்பிட்டாச்சா? இல்லாட்டாலும் இங்கிண கெடந்து என்னத்துக்கு? நம்ம பயலுக்கும் அங்க என்னமாம் ஒரு சான்ஸ் உண்டும்ணா பாருடே! சிஸ்த் பாசாயிருக்கான்” என்று ஒரு தகப்பனார் பரிந்துரை செய்தார்.
“மக்கா! போனால நம்ம பூலிங்கத்துக்கு மச்சினனைப் போயிப் பாத்து நான் சொன்னதை ஞாபகமாச் சொல்லு. இந்தப் பூவிலே முடியா தாம். அடுத்த பூவிலே வேணும்ணா பார்க்கலாம்ணு சொல்லு. வெலை குறுணிக்கு எண்ணூறாயிட்டு இருக்குண்ணு சொல்லு என்னா? சரி… போயிட்டு வா. போயி வெவரமா லெட்டர் எழுது…” என்று ஒரு கோரிக்கை.
“அப்பம் போயி வீடெல்லாம் ஏற்பாடு செய்துக்கிட்டு எளுத்துப் போடு. உனக்க அத்தானும் எப்படியும் வாற ஆவணியிலே கலியாணத்தை முடிச்சுப் போடணும்ணு சொல்லுகா. கண்டமானம் செய்யாட்டாலும் உள்ளதுக்குள்ள செய்வா… மெத்தனமா இருந்திராதே” என்ற அம்மா பதினெட்டாம் முறையாக ஞாபகப்படுத்தினாள்.
வாழைக் குலைகளை மேலேயும் மனிதக் குலைகளை உள்ளேயும் திணித்துக்கொண்டு கீரிப்பாறை நாகர்கோயில் பஸ் ஒன்று நிற்காமல் விரைந்து சீறியது. ”சவம் சந்தை முறையில்லா… கார் கிடைக்காது போலிருக்கே… பன்னிரண்டுக்கு திட்டுவிளை வண்டி உண்டு… அது வந்துண்ணா கொள்ளாம். எல்லாரையும் ஏத்திக்கிடுவான்…”
மணி பார்க்க மணிக்கட்டைத் திருப்பினான் எஸ்.கே முத்து. அது மூளியாக இருந்தது. பகீரென்ற நெஞ்சப்பதங் குலைச்சல். சொன்னது போலவே திட்டுவிளை வண்டி வந்தது. நின்ற வண்டியில் சாமான் களையும் ஏற்றி அவனையும் ஏற்றிவிட்டு அப்பாவும் ஏறினார். டிக்கட் வாங்கியபோது இன்னும் மூன்று ஆண்டுகள் ஊருக்கு வரக்கூடாது என்று எண்ணினான்.
பம்பாயிலிருந்து வந்த ஆடம்பரத்தில், உறவினர் வீடுகள் ஒன்று விடாமல் போய் வந்ததும் கண்டபடி சினிமாவுக்கு அலைந்ததும் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் என்று சுற்றியதும் உடம்பு மேலும் கறுத்துப்போயிருந்தது. உடல் சற்றுக் கனத்திருந்தது. அயிலைக் கருவாடு புளிமுளம், நெத்திலி அவியல், திரைச்சி மீன் தீயல் என்று சாப்பிட்டது வீண்போகவில்லை.
ஆனாலும் ஒரே மாதத்தில் பன்னிரண்டு நூறு ரூபாயும் வெங்காயம் உரித்ததைப் போல் ஒன்றுமில்லாமல் போய், கடைசியில் டிக்கட் வாங்கவும் காசில்லாமல், யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் சொல்லி படிக்கல் வீட்டில் நூறு ரூபாய் வாங்கித் தந்தாள்.
நாகர்கோயிலில் இறங்கி, திருநெல்வேலி பஸ்ஸில் அவனை ஏற்றி, பஸ் புறப்பட்டதும் கண் கலங்கக் கையசைத்த அப்பா -ஒழுகினசேரி தாண்டியதும் எஸ்.கே. முத்துவின் மனம் கூட்டிக் கழித்தது.
ஊருக்கு வருவதான ஏற்பாட்டில் இரண்டு மாதம் முன்னால் சேர்ந்துப் பிடித்த சீட்டில் இன்னும் இருபத்தெட்டு மாதங்கள், மாதம் ஐம்பது ரூபாய். தவணையில் வாங்கிய கைக்கடிகாரத்துக்காகச் செலுத்த வேண்டிய கப்பம். அதையும் அனுபவிக்க முடியாமல், அக்காளைக் கட்டிய உரிமையில் அத்தான் எடுத்துக்கொண்டு, அங்கு நீ போய் வேறு ஒன்று வாங்கிக் கொள் என்ற போது மறுக்க முடியவில்லை. இதெல்லாம் போக, கூட வசிக்கின்ற குத்தாலத்திடம் இரவல் வாங்கிக்கொண்டு வந்த டிரான்சிஸ்டர் – காசெட் பிளேயரை தங்கை கணவர் பிடுங்கிக்கொண்டார் அன்பாக. மேலுக்கு, வேண்டுமானால் பணம் தந்து விடுகிறேன் என்று கை கழுவி விட்டார். அடுத்தமுறை வாங்கி வருவேன் என்றால் யாருக்கு சமாதானம்?
இந்தக் கடன்களையெல்லாம் கழிக்க, எத்தனை ஆண்டுகள் இனிமேல், “தோ மசால் தோசா, ஊத்தப்பா ஏக் பிளேட், வடா சாம்பார் தீன்’ என்று கூச்சலிட வேண்டும் என எண்ணுகையில் அவன் கண்கள் கலங்கிக் கசிந்தன.
‘அருமாந்த பிள்ளை… தூரா தொலைக்குப் போறமேண்ணு வருத்தப்படுகு’ என்று பக்கத்து இருக்கைப் பெரியவர் மனதுள் அனுதாபம் சிந்தினார்.
– தீபம், 1976.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பரிதியைக் கண்ட பனி
சிங்கை மா.இளங்கண்ணன்
November 13, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 13, 2026
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 13, 2026
