மனதோடு ஒரு நிமிடம்
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 182

கதிரவன் காரை மர நிழலில் நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி நின்றார்.
அவருக்கு முன் வெட்டியூர் தேர்வு நிலைப் பேரூராட்சி என எழுதப்பட்ட பெயர்ப்பலகை அவரை வரவேற்பது போல் உணர்ந்தார்.
முப்பது வருடங்கள் கழித்து இன்றுதான் வந்திருக்கிறார். பிறந்த ஊர் என்கிற ஆனந்தம் வர மறுத்து, மனம் பாறையாய் இறுகிப் போய் கிடந்ததை அவரால் உணர முடிந்தது
இங்கிருந்து சென்றபோது, பதினைந்து வயதிருக்கும். இதோ இன்று நாற்பத்தைந்தை தாண்டி யாகிவிட்டது.
மெதுவாக ஊருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தார்.
வழியில் எதிர்ப்பட்ட மனிதர்களை அடையாளம் காண இயலவில்லை, இவரது அடையாளமும் மாறிப்போயிருந்தது. அந்த வகையில் நல்லதுதான்.மனதுக்குள் எண்ணியவாறு நடக்கத் துவங்கினார். ஊர் அப்படிஒன்றும் மாறியிருக்கவில்லை, ஆனால் கட்டிடங்கள், கடைகள் என புதுவரவுகள் அதிகம் இருந்தது.
ஏரிக்கரை யை ஒட்டினாற் போன்ற பாதையில் நடக்க ஆரம்பித்தார்.. சற்று தூரம் கடந்தபிறகு, ஏரிக்கரை யின் இறக்கப்பகுதியில், மரங்கள் அடர்ந்த அந்த இடத்திற்கு வந்தார். அங்கு நடந்தவைகளை மறக்க முடியுமா? நினைவுகள் பின்னோக்கி நீந்தின.
கதிரவனும் அவனது நண்பர்களும் கூட்டாக அமர்ந்திருந்தனர். அனைவரது விரல்களும் சிகரெட் பிடித்தபடி இருக்க, வாய் புகையை கக்கிக் கொண்டிருந்தது. அதில் ஒருவன் சொல்லிக்கொண்டுருந்தான். டேய் மச்சான், சிகரெட் பிடிக்க கத்துகிட்டோம். அடுத்த லெவல் போலாமா?
அதுக்கெல்லாம் காசு எங்கடா போறது? அதுவுமில்லாம அதை குடிச்சி ஸ்மெல் வந்தா வீட்ல மாட்டிப்போம்,அதெல்லாம் அப்புறமா பார்த்து க்கலாம். இப்ப இத்தோட நிறுத்திப்போம், எனச்சொல்லிக்கொண்டிருக்கையில் கதிரவனின் சட்டைக் காலரை யாரோ கொத்தாக தூக்கிப் பிடிக்க அதிர்ச்சி யாய் திரும்பியவனின் கன்னத்தில் பளார் பளார் என அடிகள் இடிகளாய் இறங்கியது.
கதிரவனின் அப்பா குமரவேலை அங்கு கண்டதும், அத்தனை பேரும் ஆளுக்கொரு திசையில் ஓட, கதிரவன் மட்டும், அப்பா பிடித்த பிடியில் சிக்கி நின்றிருந்தான்.
ஏண்டா நாயே, படிக்கிற வயசில பண்ற வேலையா இது? வீட்டுக்கு வா, உன்னை பொளந்து ரெண்டாக்கறேன்.
அப்படியே அவனை கொத்தாகப்பற்றி, தரதரவென இழுத்துக்கொண்டு போனார் குமரவேல். வழியில் தென்பட்டவர்கள் எல்லாம் என்ன குமாரு? ஏன் இப்படி பையனை இழுத்துட்டுப் போற? என்கிற அவர்களின் கேள்விகள் எதற்கும் செவிமடுக்காமல், கதிரவனை இழுத்துப் பிடித்தபடி நடந்து வீட்டை அடைந்தார் குமரவேல்.
வீட்டினுள் நுழைந்தவுடன், கொத்தாக பிடித்த சட்டையை உதறித் தள்ளியதும், கதிரவன் பிடிப்பின்றி தடுமாறி உருண்டு விழ அம்மா பார்வதி, பதற்றமாகி ஓடி வந்தாள்.
என்னாச்சி? என்றபடி மகனை தாங்கிப் பிடித்தாள்.
ஒம்பதாவது படிக்கிற வயசிலயே இவன் பண்ற வேலையப் பார்த்தியா? படிப்புதான் சரியா வரல,சரி ஒழுக்கத்துலயாவது நல்லா இருப்பான்னு பார்த்தா, கண்ட தெருப் பொறுக்கியோடு சேர்ந்துகிட்டு சிகரெட் பிடிச்சிகிட்டு இருக்கான். இவனை இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும், ஆத்திரத்துடன் அவனை நோக்கி கையை ஓங்கியபடி வந்தார் குமரவேல்,
தெருத்தெருவாக அவனை இழுத்துவந்து அசிங்கப்படுத்தியதால், வெறியில் இருந்த கதிரவன் அவரை ஓங்கித் தள்ள அதைச் சற்றும் எதிர்பாராத குமரவேல் தடுமாறி தரையில் விழுந்தார்.
அதைக் கண்ட ஆங்காரத்தில் கதிரவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் பார்வதி. ஏண்டா நாயே என்ன திமிரு உனக்கு, பெத்தவரையே பிடிச்சித் தள்ளறியா? பட்டறையில இரும்புக் கம்பி அடிச்சி காப்பு காய்ச்ச கைடா, அந்தக் கை ஒழைப்புல தான் நீ திங்கற மூணு வேளை சோறும். நீ கெட்டுபோய்டுவியோன்ற பயத்துல உன்னைத் தட்டிக் கேட்டா, பதிலுக்கு திருப்பி அடிப்பியா நீ?
அவள் கத்திக் கொண்டிருக்கையில் குமரவேலுவுக்கு வேகமாக மூச்சிறைத்தது. நெஞ்சைப்பிடித்துக் கொண்டு பா….ர்வதி, தண்ணி என்று சொல்லி திக்கி திணறினார்.
பதைபதைத்த பார்வதி தண்ணீரை எடுத்து வந்து அவரின் வாயருகில் கொண்டு சென்றாள், இந்தாங்க இதை குடிங்க,, என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவரின் இரைத்த மூச்சு அடங்கி தண்ணீரை குடிக்காமலேயே உயிரை விட்டிருந்தார்.
அன்றைய நிகழ்ச்சியின் தாக்கத்தில் இன்று கலங்கி வடித்த கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துவிட்டுக் கொண்டார் கதிரவன்.
அவர் உயிர் போறதுக்கு நீ மட்டுமே காரணம் இல்லை கதிரு, அவர் உடம்பை அக்கறையா பார்த்துக்கல, அதுக்கு பணமும் இல்ல. கடினமான பட்டறை வேலை, அந்தக் காலத்துல படிக்கல, தெரிஞ்ச வேலைய கையில எடுத்துகிட்டார், ஆனா நீ அப்படி இருக்க்கூடாதுன்னுதான் உன்னை படிக்க வெக்கணும்னு நினைச்சார், அதுக்காகத்தான் எல்லா சிரமத்தையும் பொறுத்துகிட்டார். எல்லாம் விதி வேறென்ன சொல்றது மனதில் வேதனையை மறைத்து க்கொண்டு அம்மா அன்று தன் சமாதானத்துக்காக சொன்னாலும், அப்பாவின் மரணம், அதற்கு நான்தான் காரணம் என்கிற எண்ணம் மனதை ரம்பம் போல் இன்றுவரை அறுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஏரிக்கரைப் பகுதியை விட்டு நகர்ந்து, வீதிப்பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தார். தான் வாழ்ந்த வீட்டை பார்க்க எண்ணி நடக்கத் துவங்கினார்.
அவர் முன்னோக்கி நடக்க, அவரின் மனமோ பின்னோக்கி நகர்ந்தது.
அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில், வீட்டுச் சொந்தக்காரர் மூர்த்தி, வீட்டிற்கு வந்தார். ஏம்மா, பார்வதி, வீட்டை எப்ப காலிபண்ணப்போற?
அவரின் கேள்விக்கு பதில் தன்னிடம் இல்லாததால் தலை குனிந்தாள் பார்வதி.
இப்பிடி எதுவுமே சொல்லாம தலைகுனிஞ்சிகிட்டா என்ன அர்த்தம், ம் சொல்லு?. இந்த வீட்டுக்கு ஒரு வருசமா வாடகை தரல உன் புருசன் அது தெரியுமா உனக்கு.? கேட்டாக்கா, இப்ப பட்டறையில வருமானமில்ல, வந்துதும் சேர்த்து குடுத்துடறேன்னு சொன்னான். ஆனா அவனே இப்ப ஆள் இல்ல, நீ மட்டும் என்ன பண்ணப்போற?
முந்தானை யால் கண்களைத் துடைத்துக் கொள்ளும் அவளை கணநேரம் உறுத்துப் பார்த்தார் மூர்த்தி.
சரி சரி நீ மட்டும் என்ன பண்ணுவ, நான் சொல்றத. கொஞ்சம் கேட்டினா, இந்த வீட்டுக்கு வாடகைன்னு ஏதும் குடுக்க வேணாம். வருமானமே இல்லன்னான் உன் புருசன், ஆனா உனக்கு மட்டும் நல்லா வாங்கிப் போட்டிருக்கான், அதான் பட்டறைக்காரன் பொண்டாட்டி மாதிரி இல்லாம பளபளன்னு சினிமாக்காரி இருக்க, யாருக்கும் தெரியாம. அப்பப்போ வந்து போறேன். சரின்னு சொல்லு, எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். என்று கண்களைச் சிமிட்டி க் கேட்டதும்.
கண்களில் அனல் பறக்க அவரை முறைத்தாள் பார்வதி, எதுவுமே இல்லன்னா நாண்டுகிட்டு சாவேனே தவிர இந்த மாதிரி பிழைக்க ஈனங்கெட்ட சென்மம் நானில்லை, நீ சொன்ன இந்த வார்த்தையை உன்னை பெத்த அம்மாவோ இல்ல கட்டின பொண்டாட்டியோ கேட்டிருந்தாங்கன்னா, உன்னை கோடாளியாலயே பொளந்துருப்பாங்க.
அவங்க பொளக்கறத விட நான் பொளக்கறதுதான் நான் எங்கப்பாவோட பிள்ளைன்னு சொல்றதுக்கு அர்த்தமாயிருக்கும் என்று கத்தியபடி உள்ளறையிலிருந்த வேகமாய் வந்தான் கதிரவன். கையில் பிடித்திருந்த இரும்புத்தடியால் ஓங்கி மண்டையில் அடித்தான் மூர்க்கத்துடன்.
ஓவென்று வீறிட்டு கதறித் துடிதுடித்து விழுந்தான் மூர்த்தி. அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, நிலைமையின் ஆபத்தை உணர்ந்த பார்வதி, அவசரமாக மகனின் கையிலிருந்த இரும்புத் தடியை பிடிங்கினாள். அவசரப் பட்டுட்டியே கதிரு, நான் சொல்ற மாதிரி கேளு.மாத்தி ஏதும் பேசாத, இவன் எங்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான், அதனால நான் கோபத்துல இவனை அடிச்சுட்டேன், நீ இதுல இல்ல சரியா?
அதற்குள் திமு திமுவென கூட்டம் கூட அடுத்து வந்த அரைமணியில் அம்மாவை போலீஸ் கையில் விலங்கிட்டு அழைத்துச்செல்ல, முதல்முறையாக வாழ்க்கையில் தனியனான் கதிரவன்.
தான் வாழ்ந்த வீட்டின் அருகில் வந்துவிட்டிருந்தார் கதிரவன்.ஆனால் அந்த வீட்டின் அடையாளம் முற்றிலும் உருக்குலைந்திருந்தது. வீடு முழுவதும் சிதலமடைந்து, கேட்பாரின்றி, கிடக்கும் பேய்வீடு போல் காட்சியளித்தது,
கடைசியாக அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேறியது தற்போது நினைவிற்கு வந்தது.
அம்மாவை போலீஸ் பிடித்துச்சென்ற இருநாட்களாக, உணவின்றி உறக்கமின்றி, பயத்துடன் அழுதழுது வீங்கிய முகமாய் இருந்தான் கதிரவன். வெளியே போலீஸ் ஜீப் வந்திருந்தது.அதிலிருந்து இரு போலீஸ் காரர்கள் உள்ளே வந்தனர். தம்பி கிளம்பு, உங்கம்மா உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க என்றதும் அவர்களுடன் பயணித்தான்.
இரண்டு நாட்கள் கழிந்த ஒரு மோசமான சூழ்நிலையில் அம்மாவைச் சந்திக்கிறேன். இதற்கெல்லாம் காரணமான தன்மீது ஒருவித வெறுப்பு தோன்றியது கதிரவனுக்கு, கெட்ட சகவாசத்தால் கேடாய் முடிந்த தன் வாழ்க்கையை எண்ணி வெட்கினான். அம்மாவிடம் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்கவேண்டும். மனதில் இவ்விதமாக மருகியபடி அமர்ந்திருந்தான் கதிரவன்.
ஜீப் தனது பயணத்தை மயானத்தின் அருகில் முடித்துக் கொண்டது. . தம்பி இறங்குப்பா என்று போலீஸ் காரர் சொன்னதும் குழப்பத்துடன் இறங்கினான் கதிரவன், இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.?
வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன், அம்மா எங்கே? என்றான்.
போலீஸ் இருவரும் எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்க, அவர்களுக்கு முன்பே அங்கு வந்து நின்றிருந்த அதிகாரி ஒருவர் கதிரவனின் தோளைப் பற்றினார், தம்பி, நேத்து இரவு அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துட்டாங்க. உங்க சொந்தக்காரங்க யாரும் வரமாட்டேன்னுட்டாங்க, அதான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு உன்னை இங்க கூட்டி வந்தோம், அம்மாவுக்கு கொள்ளி போட.
அவர் முடிக்குமுன்பே ஓவென கதறினான் கதிரவன்.
அவனை சமாதானப்படுத்தி, இறுதி காரியங்கள் செய்விப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
அம்மா எரிந்து போனாள், அடுத்து எங்கு போவது, என்ன செய்வது? பேசாமல் அம்மாவின் சிதையின் மீது விழுந்துவிடலாமா?
அவனின் குழப்பநிலையை உணர்ந்த அந்த அதிகாரி, தம்பி, நான் ஜெயிலர். முத்துவேல் உங்கம்மா இறக்குறதுக்கு முன்னாடியே உங்க நிலையை எல்லாம் சொல்லிட்டாங்க. எதிர்பாராத உங்கப்பாவோட மரணத்தை அவங்களால தாங்க முடியல. கூடவே வீட்டு ஓனர் கொலை வேற, எல்லாத்தையும் விட உனக்குன்னு யாருமே இல்லையே, எப்படி வாழ்க்கையில மீளப்போறன்னு உன்னை நினைச்சிதான் அதிகமாக அழுதுட்டிருந்தாங்க. ஆனா திடீர்னு அந்தம்மா இறப்பாங்கன்னு அவங்க மட்டுமல்ல நாங்களும் எதிர்ப்பார்க்கல.
அவர் சொல்லிக்கொண்டே செல்ல, அமைதியாக இருந்தான் கதிரவன்.
சரி, நடந்தது நடந்திடிச்சி, இப்ப அடுத்தது என்னன்னு தான் பார்க்கணும். உன்னை அப்படியே விட்டுட்டு போகமாட்டேன் . நீ மேற்கொண்டு படிக்கிறயா? சொல்லு, நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன்,
இல்ல ஸார். எனக்கு படிக்க விருப்பம் இல்ல, அதுமட்டுமல்ல இப்ப இருக்கிற சூழ்நிலையில் மனசை ஒருமுகப் படுத்தி என்னால படிக்கமுடியாது. அதனால தொழில் ஏதாவது கத்துக்கிறேன்.
ஓகே, எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணித்தரேன்.அதை நல்லவிதமா பயன்படுத்தி வாழ்க்கைல முன்னுக்கு வரணும், சரியா, என்று புன்னகையுடன் கேட்ட அவரிடம், பதிலுக்கு தலையாட்டினான் கதிரவன்.
அன்று அந்த ஜெயிலர் இட்ட பிச்சை தான் இன்று தொழிலதிபராக தான் மிளிரவதற்கு காரணமாயிற்று.
…ஸார் யாரை பார்க்கவந்தீங்க, என்ன வேணும்? என்று கேட்ட குரலால் பழைய நினைவினின்று மீண்டு நிகழ் உலகிற்கு வந்தார் கதிரவன்.
எதிரே நின்றிருந்த. அவரிடம் தான் யார் எனத் தெரியப்படுத்த விரும்பாத கதிரவன். நான் சென்னையில் இருந்து வரேன், என் பிரெண்ட் ஒரு அட்ரஸ் கொடுத்தான். அவனுக்கு தெரிஞ்ச குடும்பத்தை பார்த்துவரச்சொல்லி, இங்க. வந்துபார்த்தா, வீடே பாழடைஞ்சி கிடக்கு. நாந்தான் தப்பான அட்ரஸ்க்கு வந்துட்டேன் போல, சரி, பரவாயில்ல, நான் பார்த்துக்கிறேன். இந்த வீடு ஏன் இப்படி கிடக்கு, பராமரிப்பு இல்லாம?
அதையேன் கேட்கிறீங்க. இந்த வீட்ல ஒரு கொலை நடந்துச்சாம், முப்பது வருசத்துக்கு முன்ன, அதுக்குப் பிறகு இந்த வீட்டு ப் பக்கமே யாரும் வரதில்ல. இதை விக்கணும்னு பார்க்கறாங்க, ஆனா யாரும் வாங்க தயாரில்ல, ஒரு தலைமுறையே போய்டிச்சி, இந்த வீட்டை ஒண்ணும் பண்ணமுடியல, என்ன பண்றது, அவர் அலுத்துக்கொள்ள, மெல்ல அவரிடமிருந்து விடை பெற்று கிளம்பினார் கதிரவன்.
ஒரு யுகம் போல அனைத்து நினைவுகளும் இன்று அவருள் கடந்து போக, இனி நினைக்க ஏதுமில்லை, ஒரு நெடிய பெருமூச்சு விட்டபடி, காரை விட்டிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அதே நேரத்தில் அவரை நோக்கி இரு இளைஞர்கள் வேக நடையிட்டு வந்தார்கள்.
ஸார், நீங்க மனதோடு ஒரு நிமிடம் நிகழ்ச்சி நடத்துற கதிரவன் தானே?, இளைஞர்களில் ஒருவன் கேட்க, நடப்பதை நிறுத்தி, அவர்களை கேள்விக்குறி யோடு பார்த்தார் கதிரவன்.
நாங்க காலேஜ் படிக்கிறப்ப நீங்க எங்க காலேஜ்க்கு வந்துஸ்டூண்ட்ஸை எல்லாம் சந்திச்சி பேசுனீங்க, ரொம்ப அற்புதமா இருந்தது உங்க பேச்சு, எங்களுக்கு ள்ள ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திச்சு,
அப்படியா தம்பி ரொம்ப நன்றி முகமலர்ச்சியுடன் கைகூப்பினார் கதிரவன்.
இந்த மாதிரி மாணவர்களை சந்திச்சி பேசற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது, ஸார். ஆவலோடு அவர்கள் கேட்க, கதிரவன் அவர்களை ப் பார்த்து வாங்க அப்படி உட்கார்ந்து பேசலாம் என்றதும், அங்கே மரநிழலில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்ச் சில் அமர்ந்தார்கள்.
கதிரவன் சொல்ல ஆரம்பித்தார். அறிவுரை கேட்டு சிலர் திருந்தலாம், அடிவாங்கிகூட சிலர் திருந்தலாம்.. ஆனா வாழ்க்கையில இழப்புகள் ஏற்பட்டபிறகு திருந்தறது எவ்வளவு வலின்னு நான் உணர்ந்திருக்கேன். . அந்த வலி மற்ற யாருக்கும் வரக்கூடாதுன்னு தான், பள்ளி, கல்லூரிகளில் போய் மாணவர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கேன்.உங்களை மாதிரி இளைஞர்கள் என்னை சந்தித்து, அந்த நிகழ்ச்சியோட பலனை சொல்லும்போது, அதுதான் என்னுடைய வலிக்கு மருந்தாகிறது.
அந்த இளைஞர்கள் அமைதி காத்தார்கள்.ஒருவன் சுதாகரித்துப் பேசினான்.
நீங்க அனாதை ஆசிரமம் வெச்சு நடத்தறதாவும் கேள்விப் பட்டோம், அப்படியா ஸார்?
ஆமாம் தம்பி, என்னுடைய வலிக்கு இதெல்லாம் மருந்தாக நான் நினைக்கிறேன். நான் ஒரு தொழிலதிபராக வளர்ந்துட்டேன். என்னுடைய வருமானத்துல இதெல்லாம் பண்றேன். ஆதரவற்ற இளம் சிறார்களுக்காக இல்லம் நடத்தறேன், அந்த குழந்தைகள் எல்லாம் படிச்சு முடிச்சி ஒரு வேலைக்குப் போய்.அவங்களுக்கு ன்னு ஒரு குடும்பம் அமையறவரைக்கும் என்னோட கண்காணிப்பு இருக்கும்.
குடும்பம் இல்லாதவங்களுக்கு, ஒரு நல்ல குடும்பத்தை ஏற்படுத்தி தரீங்க, உண்மையில நீங்க ரொம்ப கிரேட் ஸார்.
என்னுடைய வலி வேறு யாருக்குமே வரக்கூடாது, அதுவுமில்லாம, நானே ஒரு நல்ல மனிதரோடு உதவியாலதான் வளர்ந்தேன்.அதையும் நான் மறக்ககூடாது.
உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்களேன்.ஸார்.?
அதான் சொன்னேனப்பா, எனக்கானது பெரிய குடும்பம்.நூறு குழந்தைகளுக்கு மேல என்ன நம்பி இருக்கிறாங்க, அவங்களுக்கு செய்பறதே மிகுந்த மனநிறைவை எனக்கு அளிக்குது.அதனால எனக்குன்னு தனியா வாழ்க்கையை ஏற்படுத்திக்கணும்னு இதுவரைக்கும் தோணல, இனிமேயும் தோணாது.
இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்று அவரை வணங்கினார்கள்.
உங்களை இன்னைக்கு பார்த்ததில எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. மனதோடு ஒரு நிமிடம் நிகழ்ச்சியின் மூலம மாணவர்களை இன்னும் நிறைய பேரை சந்திச்சி நல்வழிப்படுத்தணும்னு கேட்டுக்கொள்கிறோம் ஸார். என்றதும், அழகாக முறுவலித்த கதிரவன், நிச்சயமாக தம்பி, என்றார்.
வாழ்க்கை கற்றுத் தரும் பாடம் சில மனிதர்களை மாமனிதர்களாக உருவாக்கிறது, என்பதை கதிரவன் என்ற. மாமனிதன் மூலம் புரிந்து கொண்ட அந்த இளைஞர்கள் அவரிடம் இருந்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கிளம்பினர்.