மண்ணில் தெரியுதொரு தோற்றம்
கதையாசிரியர்: எஸ்.அகஸ்தியர்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,964
(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் – 7
வெளியே சென்ற விரிவுரையாளர் இராமசாமி இன்னும் வீடு திரும்பவில்லை. இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்துக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. கடமை உணர்ச் அவரை உந்தியது.
‘ஏதோ தலை போகிற காரியமாக அழைத்துவிட்டு. வேண்டாத விஷயங்களை அளந்து கொட்டின இந்த விரிவுரையாளரைப் பற்றி என்ன சொல்வது?’
இன்ஸ்பெக்டர் தனக்குள் நச்சரிக்கலானார்.
‘ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி பண்ணும் இயக்கங்களின் சேட்டைகளைக் கைகட்டிப் பாத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்கின்ற விரிவுரையாளரின் ‘பேதமை’ யையும் பொன்ராசனின் போராட்டத்துக்கு ஆதரவுதந்து அவர் அரசியல் தத்துவ விளக்கம் கொடுத்த விதத்தையும் சற்று நேரம் மீட்டுப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
‘பொன்ராசா தனக்காகப் போராடவில்லை; சகல மக் களுக்காகப் போராடும் சுத்த வீரன்.’
விரிவுரையாளர் கூறிய வார்த்தைகள் ஈட்டிகளாக வந்து அவர் நெஞ்சினை ஊடறுத்தன. தேகம் புரைந்து கனன்றது; இதய நாளம் துன்னிக் கெம்பிற்று;மனசில் தடு மாற்றம் உண்டானபோதும் இன்ஸ்பெக்டர் உறுதி குலைய வில்லை.
சற்று யோசித்துப் பார்த்தார். ‘இங்கே வந்திருக்கக் கூடாது’ என்றே தோன்றிற்று. சிறு நரியின் தந்திரம் சிங்கத்தை மாட்டிவிட்ட சோக முடிவு அவருக்குத் தெரியும். அப்படி நரித் தந்திரத்துடனே விரிவுரையாளர் தன்னை அழைத்து அதிகாரத்தை இம்சிக்கத் திட்டமிட்டாரோ என்று ஒருகணம் நினைக்கலானார்.
பொன்ராசனின் போராட்டத்துக்கு நியாயம் கற்பிக்க வெளிக்கிட்ட அவர், ஜானகியின் கண்ணீர் தனது வெற்றியில் தங்கியிருப்பதாகச் சொன்னதன் அர்த்தம் அவருக்கு இன்னும் மந்தமாகவே இருந்தது. விடுத்துக் கேட்கவும் விரும்பவில்லை. அது ‘இன்ஸ்பெக்டர்’ அந்தஸ் துக்கே மதிப்பீனம் எனவே தன்னுள் புழுங்கி அளிந்து கொண்டிருந்தார்.
அப்போது ஜானகியும் சரஸ்வதியும் அறைக்குள்ளே கலகல’த்துச் சிரித்துச் சம்பாஷிக்கின்ற ஒலிகள் அவர் காதில் விழுந்தன.
ஒட்டுவியளம் கேட்பது தன்மானத்துக்கே அவக்கேடு. ஆனால், துப்புத் துலக்க பொலிஸுக்கு அதுவே கதி ஆதலால் சுவரோடு நின்று காதை நன்றாகத் தீட்டிக்கொண்டிருந்தார்.
“நீ கொடுத்து வைத்தவள். அதுதான் இந்த அழ கான இயற்கை வளம் கொண்ட மலைநாட்டுப் பகுதியில் வாழமுடிகிறது” என்றாள் ஜானகி.
“இங்கு எங்கே இயற்கை அழகு இருக்கிறது? இந்த வளங்கள் கூட தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் கரங்கள் பட்டுத்தான் உயிர் பெற்று அழகாய்த் தெரிகின்றன. இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தத் தொழிலாளர்களின் உரிமையை அபகரித்துக்கொண்டு வேறு ஓர் வர்க் கம் போலியாக வாழ்கிறது. நாங்களும் கிட்டத்தட்ட அப் படித்தான்; முழுதும் போலி வாழ்க்கை.
‘போலி’ என்றதும் ஜானகிக்குச் சிரிப்பு வந்தது.
“அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவனிடத்திலும் போலித் தன்மைகள் இருக்கின்றன. தங்கள் பலவீனங்களை மறைக்கின்ற பிரயத்தனங்களும்,பலங்களை வெளிப்படுத்த முயல்கின்ற தீவிரமும் போலித்தனத்தின் ஓர் மறைமுக மான கிரியைகள் தாம்.மலையகத்திலே போலிகள் உண்டு; மலைநாட்டிலே அப்போலிகள் இல்லை” என்றாள் ஜானகி.
ஜானகியின் புது வியாக்கியானத்தில் சரஸ்வதிக்கு வியப்புத் தட்டிற்று.
“மலையகத்துக்கும் மலைநாட்டுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டாள் சரஸ்வதி.
“மலையகம், மலைநாட்டுத் தமிழ்த்தொழிலாளர்களால் அவர்களின் கடும் உழைப்பால் சிருஷ்டிக்கப்பட்ட நகரம். இந்த நகரத்தில் ‘குஷி’யாக வாழும் பேர்வழிகளே மலைய கத்தைக் கலையகமாக்குவோம்’ என்று கூச்சல் போடுகிறார்கள். இந்தக் கூச்சல்காரர்களை உற்பத்தியாக்கியதும் இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்கள் தாம். மரத்தின் கொப்பை அதன் வேரில் வைத்துத் தறிப்பது போல், இந்தத் தொழிலாளர்களைப் புறக்கணித்துக் கொண்டு இவர்கள் போடும் கூச்சல் தான் ஆபாசமாகவிருக்கிறது” என்றாள் ஜானகி.
அதிக காலம் மலைநாட்டிலே வாழ்ந்துபழகிய தனக்கே அதன் தாற்பரியங்களைச் சரியாகத் தெரியாதிருக்க, யாழ்ப் பாணக் குடாநாட்டில் இருந்துகொண்டு ஜானகி இப்படி வியாக்கியானம் செய்த அற்புதத்தைக் கண்டு வியந்த சரஸ்வதி, ஜானகியை விடுத்துக் கேட்டாள்:
”அது சரி, நீ எப்படி இதையெல்லாம் சுளுவாகத் தெரிந்துகொண்டாய்?’
“உன்னுடன் நான் பேராதனை யூனிவர்சிட்டியில் வாசிக்கும்போது நீ புத்தகத்தைப்படித்து வாழ்க்கையைப் பார்த்தாய்.நான் வாழ்க்கையை அனுபவித்துப் புத்தகத்தைப் பரீட்சித்தேன். இதுதான் வித்தியாசம்.”
ஜானகி யூனிவர்சிட்டியில் படிக்கும்போது ஓய்வு நேரங்களில் விடுதிக்கு வெளியே சுற்றுவாள். இதனால் மாணவர்கள் அவளைக் கிண்டல் செய்து கூறிய வசைமாரிகள் இன்னும் சரஸ்வதி காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அவளுக்கு வந்த வசைகள் யாவும் தெரிந்தும் விரிவுரையாளர் இராமசாமி பூனைபோல் கண்ணை மூடிக் கொண்டிருப்பார்.
அந்தப் பேச்சு ஒருநாள் அவர் காதிலேயே விழுந்தது. அவரைவிட அந்த வசைகள் அவர் புதல்விக்கே அவமானத்தையும் ஆத்திரத்தையும் கிளறின.
விரிவுரையாளர் வகுப்பிலே அழகாக வாழ்க்கைத் தத்துவம் பேசுவார். அதிலே மயங்கி வெறிகொண்ட மாணவர் கூட்டம் வெளியே வந்து காதல் சிட்டுகளாகப் பறந்து திரிகின்றது. பொன்ராசாவுக்குப் பிடித்த பித்து ஜானகிக்கும் தொற்றிக்கொண்டது. இப்படி எத்தனை காதல் ஜோடிகள்…?’
மாணவர்களின் ரகஸ்ய மா நாட்டுப் பேச்சுக்கள் பின்பு சரஸ்வதி காதில் துண்டு துணுக்குகளாக விழுந்தன.
எத்தனை நாட்களாக இந்த இங்கிஷைகளை மனசுள் மறைத்துக்கொண்டிருப்பது? பொன்ராசன் ஜானியை மட்டுமா வசைவுகள் தாக்குகின்றன? மதிப்பிற்குரிய விரிவுரையாளரான தந்தையையும் தாக்குகின்றனவே.
அவருடன் இதுபற்றிப் பேசுவது என்ற திடமான முடிவோடு வெக்காளித்து வந்த சரஸ்வதி, அவரின் புத்தக அறைக்கே பிரவேசித்தாள்.
புதல்வி முகத்தில் ஒருவித சினப்புத் தேங்கியதைக் கவனித்த அவர், ‘சரஸ்வதி, என்ன முகம் ஒருமாதிரிக் கோணிப் போயிருக்கிறதே?’ என்று வினவினார்.
”உங்களைப் பற்றி வெளியே கேவலமான கதைகள் அடிபட வேண்டியதில்லை. ஆனால், அப்படி வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு என்ன அர்த்தம்?” என்றாள் புதல்வி.
அவர் சிரிசிரியென்று சிரித்தார்.
“எனக்கும் தெரியும். சுத்த இலட்சியவாதிகளை அதே களத்தில் நின்று தாக்கமுடியாத தன்னிச்சைவாதிகள் போர்வீரன் கண்ணில் மிளகாய்ப் பொடி வீசுவதுபோல் அசிங்க வார்த்தைப் பாணங்களை ஏவிவிடுவார்கள் . நாய்கள் குரைத்துச் சந்திரனில் மறு உண்டாவதில்லை. குரைக்கிற நாய்களே அனுங்கி இறக்கும். இலட்சியவாதிகள் மீது தன்னிச்சைவாதிகள் அபாண்டங் கக்குவோர்க்கும் அந்த முடிவுதான்.”
“எல்லாருமே அப்படிப் பேசிக் கொள்ளும்போது..?” என்று வினவினாள் சரஸ்வதி.
“ஒருவன் எல்லாருக்கும் நல்லவனாக முடியாது. நல்லவனாக இருக்கமுடியும். நான் நடிக்க விரும்பவில்லை. வர்க்க பேதத்திலே யுத்தகளமாகிவிட்ட சமுதாயத்தில் இரு கன்னைப் போராளிகளை ஒரு சேரத் தழுவமுடியாது. எதிரிகள் தூற்றும்போது நாம் சரியாக நடக்கிறோம் என்பதே அர்த்தம். வசைவுகள் முக்கியமல்ல, அவற்றைப் பாடுபவன்தான் முக்கியம்.”
“அவர்கள் எதிரிகளல்ல உங்கள் மாணவர்கள் தாம்.”
“மாணவர்கள் வாழ்க்கை அனுபவங் குன்றியவர்கள். தூண்டிவிட்டால் அறிவு செத்து உணர்ச்சிப் பாகாகிவிடுவார்கள் உணர்ச்சிக்கு அடிமையானவர்களிடம் நிலையான கொள்கையை எதிர்பார்க்கலாமா? நிதானமாகச் சிந்திப்பவர்களும் உண்டு. அவர்களிலே பொன்ராசா, ஜானகியைக் குறிப்பிடலாம்.”
“பொன்ராசா-ஜானகி”
ஜோடி கட்டி அவர் வாய் இப்படி உச்சரித்தபோது மாணவர்கள் அவர் பற்றிக் கூச்சல் போடுவதில் அர்த்தமிருப்பதாகவே அவளுக்குப் பட்டது. அப்போது அவரில் ஒருவித வெறுப்பு அவளுக்கு ஏற்பட்டது.
“நீங்களும் பொன்ராசா. ஜானகியையே குறிப்பிடுகிறீர்கள். அப்போ மாணவர்கள் உங்களை நிந்திப்பது சரி தானே?”
“அது உண்மையல்ல. ஒரு காலம் பொன்ராசாவின் சித்தாந்தம் இவர்களை வழிநடத்தும்போது என்னை நிந்திப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.”
“எப்படிக் கூறமுடியும்?”
“அவன் நீதிக்காகப் போராடுபவன்; ஓர் உடைப் பெடுத்த வெள்ளம்.”
‘ஜானகி?”
“அவள் அதன் நீரோட்டம்.”
சரஸ்வதி தந்தையின் தீக்ஷண்ய வார்த்தையில் கட்டுண்டாள். இவற்றையெல்லாம் முன்கூட்டியே அவரால் எப்படி அறிந்துகொள்ள முடிந்தது என்று அதிசயித்தாள்.
***
ஜானகி,சரஸ்வதியின் கையை உலுப்பினாள்.
மலாரடித்து விழித்தவள் போல் அப்போது தான் அந்த இனிய நினைவுச் சுழிகளிலிருந்து விடுபட்டாள் சரஸ்வதி.
“என்ன சரஸ், கல்லுப் பிள்ளையாராட்டம் சமைந்து போய் விட்டாயே?” என்று சிரித்தவாறு கேட்டாள் ஜானகி.
“பழைய நினைவுகள் இன்பமானவை.ஜானகி, நீ இங்கே இன்னும் ஒரு கிழமையாவது தங்கிவிட்டுத்தான் போகவேண்டும்…” என்று குழந்தை போல் செல்லங் கொழிக்க வேண்டினாள் சரஸ்வதி.
“எனக்கு விருப்பம்தான். ஆனால், அவர்…?”
”ஏன் அவர் சம்மதிக்கமாட்டாரா?”
“அதுவும் அவரிடம்தான் கேட்கவேண்டும்.”
சுவரோடு ஒட்டி நின்ற இன்ஸ்பெக்டர் சிவலிங்கம். இருவரின் பேச்சு முனை மாறி வருவதைக் கவனித்துச் சற்று அசையலானார்.
விரிவுரையாளரின் குரல் அப்போது விறாந்தைப் பக்கம் ‘கணீ”ரித்துக் கேட்டது:
“என்ன இன்ஸ்பெக்டர், தனிமையாக நின்று ஏதோ யோசிக்கிறீர்கள். ஏன், ஜானகி எங்கே?”
இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல முன்பே ஜானகியும் சரஸ்வதியும் ‘சடா’ரென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தனர்.
இன்ஸ்பெக்டரைக் கண்ட ஜானகியும், சரஸ்வதியும் ‘திக்’கிட்டுப் போய் ஒருவரையொருவர் ‘தறுதறு’த்து முழுசிக்கொண்டே நின்றார்கள்.
‘தாங்கள் பேசியவற்றை இன்ஸ்பெக்டர் ஒட்டுக்கேட்டிருக்கிறார். ஐயையோ நாங்கள் அப்படி என்ன பேசிக் கொண்டோம்?’
ஜானகியின் கண்கள் கலங்கின அதைக் கவனித்த விரிவுரையாளரின் மனசு காரணமில்லாமல் அடித்துக்கொண்டது.
;என்ன விபரீதம் நடக்குமோ?’
நேற்று இன்ஸ்பெக்டருக்கு அழுத்தமாகச் சொன்ன வார்த்தைகள், இப்போது விரிவுரையாளர் நினைவில் கரைந்து நெஞ்சினில் சூழ்ந்தன:
‘பொன்ராசாவை வலை போட்டுத் தேடும் உங்கள் முயற்சியில் வெற்றி உங்களுக்கானால், கண்ணீர் விடுவது ஜானகியாகத்தானிருக்கும். உங்களால் ஜானகி கண்கலங்க வில்லை என்பது உண்மை. ஆனால், அவள் வரித்துக்கொண்ட சித்தாந்த இலட்சியம் அவளை வாட்டுகிறது.’
இந்த வாக்கியங்களை ஏன் முன்பின் யோசியாமல் சொன்னேன்?’ என்று தனக்குள் குமுறலானார் விரிவுரையாளர்.
அப்போது தொண்டை ‘முடுக்’கிட்டது:
‘பாவம்,ஜானகி துன்பமடையப்போகிறாள்.’
அத்தியாயம் – 8
இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தின் மனோநிலை ஜானகிக்குப் புரிந்துவிட்டது. அவரிடம் தனது அபிப்பிராயத்தை மனம் திறந்து கேட்கவே அஞ்சினாள். தன்னைப் பற்றிய அவர் கணிப்பு தலைகீழாய்ப் போவதைத் தெரிந்தும் தெரியாதவள் போல் பாசாங்கு செய்வதில் தனக்கு ஆத்ம திருப்தியோ மனச் சுகமோ இல்லையென்று நினைத்தாள். என்றாலும், அப்படி ஒரு பாசாங்கு புரியாமல் அந்தத் திருப்தியோ மனச் சுகமோ இனி வரப்போவதில்லை என்பதையும் ஜானகி உணர்ந்தாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன் தானும் சரஸ்வதியும் அறைக்குள் பேசிக்கொண்ட சமாச்சாரங்கள் அவருக்குத் தன்னில் ஒரு வெறுப்பையும், தவறான கணிப்பையும் தோற்றுவித்திருக்கும் நிலையில், தான் கணவரோடு இதயத் தூய்மையுடன் சல்லாபிக்கமுடியாது என்ற உணர்வு தானாகவே ஜானகியை வாட்டி எடுத்தபோதும், அப்படி ஒரு தவறான கணிப்பீடு அவருக்கு உண்டாவதன் நியாயத்தை அவள் மனசு நிதானமாக நடுநிலை நின்று தராசு பிடித்த போது அது ‘சரி’யென்று கூட அவளுக்குத் தோன்றியது.
தன்னையறிந்து தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்த இலட்சியங்களைப் பாராட்டுகின்ற பொன்ராசாவில் தனக்குண்டான ஒருவித மனப்பிடிப்பு – மன அழுத்தம், அது தனது இதயதாகத்தின் தணிப்புக்கு உவப்பாயிருந்த போதும், அந்த மனப் பிடிப்பே அவள் நெஞ்சில் ஒரு போர்க்களமாகிவிட்டதை ஜானகி உணர்ந்தாள். எனினும், அந்த லட்சியத்திற்குத் தூண்டுதல் புரியமுடியாமல் பொன்ராசாவின் அணைப்பு அவளுக்கு இல்லாதது அவளுக்கே ஒரு வினையாகியதை அவள் தெரிந்த பின்னும். அந்த வினையின் முனையாகத் தனது இதயத்தை அர்ப்பணிப்பதில் தனது ஆத்ம ஈடேற்றமே அடங்கியிருக்கிறது என்ற ஓர் விசித்திரமான ஊகம் அவளிடம் தலைதூக்கிற்று.
தன்னிச்சையுணர்வின் மேம்பாட்டில் வாழ்க்கையமைத்துப் ‘பெரும் அந்தஸ்து’த் தேட முனையும் இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தையும், பொதுஜன வாழ்க்கைச் சிறப்புக்குத் தன்னை ஆளாக்கி, வாழ்க்கையைத் தியாக வேள்வியாக்கிக் கொண்டு ஏகாந்த ஜீவியாக – ஓர் உலகளாவிய தோழனாகத் திகழும் பொன்ராசாவையும் அவள் மனசு எடை போட்ட போது தான் வரித்த இலட்சியத்தினால் தனக்கு ஏற்பட்ட அந்தகார வாழ்க்கை, தன்னை மேலும் புடமிட உதவுமென்று திடங் கொண்டாள் ஜானகி. ஆயினும், கன்னை சாராத நடுமைய நிலையான தனது தத்தளித்த வாழ்க்கை அலைபாயும் புகை மண்டலம் போல் அமைந்ததையும், அந்த வா வாழ்க்கையே கொதி உலையாகக் கெந்தகிப்பதையும் உணர்ந்தாள்.
அவளின் உணர்வும் மனநிலையும் அவளுள் சுமைகளாக அழுந்துகின்றனவே தவிர,அவற்றின் தாற்பரியங்களை ஏற்ற ஒரு பந்துவிடம் பரிமாறி, அப்படி ஒரு நிலையிலே தன்னால் சாந்தியடைய ஒரு வாய்ப்பு இல்லையே என்ற ஏக்கம் ஜானகியின் நெஞ்சினைத் தாக்கியது. அப்போது அவளின் ஆதர்ஸமாகவிருந்த விரிவுரையாளரோ பொன்ராசாவோ கூட அவள் மனசின் துயரங்களுக்கு ஆறுதலளிப்பவர்களாகத் தோன்றவில்லை.
“பச்சோந்திகளின் இலட்சியம் வானவில் போன்றது. நேர்மை பிறழாதவன் இலட்சியமோ சூரியகாந்தியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அதன் காந்தத்திலே போலிகள் கருகிவிடுகின்றன” என்று பொன்ராசா சொல்லியிருந்தான்.
‘அது உண்மையானா, நான் கொண்ட தூய்மையான இலட்சியத்தில் இப்படி ஏன் இருள் மண்டிக் கிடக்கிறது?’ என்று சாம்பி வெதும்பினாள் ஜானகி
‘பொன்ராசா நீ என் வாழ்க்கையில் சந்தித்திருக்கா விட்டால்…?’
அவள் மதியை மீறி எழுந்த உணர்ச்சி, அவள் அங்க மெங்கும் புரைந்து அவளுள் குமுறியது. மிருதுவான அவள் பூத்தேகம் வாடிய பச்சைத் தண்டாக நைந்து உருக்குலைய, ஓர் சின்னஞ்சிறு குழந்தை போல் சதிரம் கமற, நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு, குலுங்கிக் குலுங்கிக் குமுறிக் குமுறி அழுதாள் ஜானகி.
அழுது தீர்ந்த தியக்கம் அவளை ஆட்கொண்டது.
தன் மனம் அவனில் தாவியபோதும், அவனுடன் இணையவிடாமல் தன்னைத் தடுத்த செருக்கும்,பட்டதாரி என்ற கிறுக்கும் சேர்ந்து தன்னை ஓர் தன்னிச்சைவாதி யாக்கிவிட்டதை ஜானகி இப்போது புரிந்து கொண்டாள். என்றபோதிலும், தான் வரித்துக் கொண்ட லட்சியத்தைப் பொறுத்தவரை தான் இன்னும் முதலைப் பிடியில் இருப்பதாகவே தோன்றிற்று. ஆனால், தனது அந்தராத்மாவில் எழுகின்ற புதிய சிந்தனைகளைத் தன்னுள்ளே புதைத்துப் புழுங்குவதைவிட, அவற்றைத் தூய்மையாகவோ சுதந்திரமாகவோ வெளிப்படுத்த முடியா வண்ணம் தன் வாழ்க்கை ‘இன்ஸ்பெக்டர்’ என்ற சிவலிங்கத்துடன் இணைந்ததை நினைத்த போது, தனது நிலை செங்கதிரில் மயங்கி நெருப்பில் கை வைத்த சிறு பிள்ளை போலாகிவிட்டதே என்று வருந்தினாள்.
எந்தக் கோணத்தில் நின்று எடையிட்டபோதும் அவளுக்குச் சரியான ஒரு முடிவு புலப்படுவதாகவேயில்லை.
வறுமையே தெரியாமல் வாழ்ந்த தனக்கு அந்த வறுமையின் கோரம் பெரும் பூதமாகத் தனது வீட்டிலேயே நிகழ்கின்ற ஓர் உணர்வை பொன்ராசா தனக்கு ஊட்டினான் என்பதையும், அப்பால் தானே இந்தப் பூதத்திற் கெதிரான போராட்டக் களத்தில் இலட்சிய வேட்கை யோடு தாவிய நிகழ்ச்சிகளையும் நினைத்தபோது ஜானகிக்கு அவையெல்லாம் பெரும் வியப்பாகவே இருந்தன. என்றா லும், அவளின் இதயம் அப்படி ஓர் இலட்சிய தாகத்தோடு தேசாந்திரியாகப் போராடும் பொன்ராசாவை உருவாக்கிய விரிவுரையாளர் இராமசாமியை வாழ்த்திக் குரு தரிசனம் புரிந்தது.
‘சாந்தமான குருமூர்த்தி.’
சதை திணைத்த பெருப்பினில் வாளித்துவிட்ட சிலை போல் ‘மொழு மொழு’த்த சர்வாங்கம் பிளந்த மாம்பழ முனைக் கீறுகளான மேவு சொண்டுகள், சதாவும் உதடு களில் தேங்கிய புன்முறுவல், எடுப்பான சல்லாபப் பார்வை, அகன்ற ஏறு நெற்றி, திட்டு முனையான பாற்சங்கு மூக்கு, வழித்த தலைப் புடங்கில் விரல் சுற்றி முடித்த புளியுருண்டைக் குடுமி, தீக்ஷண்யம் நிறைந்த ஞானக் கண்கள்,அழகு பிம்ப வட்ட உருவ சாது முகம்- இத்தனை சாந்த சுரூபியான விரிவுரையாளர் இராமசாமி நெஞ்சில் இப்படிக் கொழுந்துவிட்டெரியும் இலட்சிய நெருப்பு எப்படியெல்லாம் பிரகாசிக்கின்றது என்பதை ஜானகியால் கற்பனை பண்ணவே முடியவில்லை.
அவரை நினைத்தபோது மனம் ஒடுங்கி நெஞ்சினுள் பூஜிக்கின்ற ஓர் உணர்வு அவளில் மேலிட்டதும் அவர் சொன்ன அறிவுரை நினைவில் வந்தது.
‘மனிதனை மனிதன் ஒருபோதும் பூஜிக்கக்கூடாது. மனிதனைப் பூஜிப்பவன் அவன் அடிமையாகிவிடுவான். அடிமை மனத்திலான தோழமை சுதநதிரக் கருத்து களுக்கே விலங்கிடும். நீங்கள் என்னுடன் பக்தியாகவல்ல: தோழமையுடன் பழகவேண்டும்.’
‘தோழமையா..?அப்படியாயின். பொன்ராசா என் தோழனா?’
அவள் தன்னுள் கிளப்பிய வினாவுக்கு அவள் மறுத்தோ ஒத்தோ பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள். ஆனால், அந்த வாக்கிலே உலகத்து மனித குலத்தை ஒரே வர்க்கமாகப் பார்க்கின்ற புனித நினைவும், ஆத்ம உறவும், இனிய சிந்தையும், தூய அன்பும் அவளுக்குத் தொனித்தன. இவ்வுணர்வுகள் அவளுள் இதம் கொள்வதை அக்கணமே உணர்ந்தாள்.
‘பொன்ராசா என் தோழனாயின், காதல்…?’
சிவலிங்கத்தின் கருத்திலே தனக்குண்டான முரண்பாடு வலுவாக முற்றியிருந்தும், வாழ்க்கை உறவில் என்றும் உடைவு ஏற்பட்டதில்லை என்பதை அவள் மனசு சற்றுவேளை தராசு பிடித்தது.
‘இந்தத் தாம்பத்திய உறவில் காதல் இல்லையா?’
பூதாகரமான இந்தக் கேள்விக்கு அவள் விடை தெரியாமல் தத்தளித்தாளாயினும், அந்தக் கேள்வியில் சிவலிங்கத்தின் உறவைப் பொறுத்து அதில் ஏதும் தெய்வீகமோ, காந்த சக்தியோ, பூரணத்துவமோ இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. அப்போது ஜானகி தனக்குள் தீய்ந்து கறுவினாள்.எனினும், ‘காதலின் பிணைப்பு வர்க்க பேதமற்ற சமத்துவ வாழ்க்கை அமைப்பில் தான் நிதர்சனமாகின்றது’ என்ற பொன்ராசாவின் கூற்றை வாய் விட்டு வாயினிக்கச் சொல்லியபோது, அந்த வாழ்க்கை- அந்த உறவு – அந்தத் தாம்பத்தியம் தனக்குக் கிட்டாமல் விட்ட ஒரு தாபம் – ஓர் அந்தகாரம் அவளைச் சூழ்ந்து வதைப்பதை உணர்ந்தாள்.
நெஞ்சு துருத்தி எழுந்த அழுகையின் காந்தாரம் அவள் இதயத்துள் ‘ஹோ’வென்று பற்றி எரிந்து விளாசுவது போல் குமைந்து சாம்பியது.
‘ஐயோ என் அம்மா, நான் என்ன கருமத்துக்குப் பிறந்தேன்?”
முகத்தைப் பொத்திக் கொண்டு, தேகம் குல்லிட, வீரிட்டுக் குழறினாள் ஜானகி.
பின்புறமாக ஏதோ ஓர் அரவம் – ஆஜாடபூதியான தோற்றம் அசையும் பிரமை தட்ட ஜானகி உடனே தனது சேலைத் தலைப்பால் வதங்கிய முகத்தைத் துடைக்க எத்தனித்தாள் அசையாமல் வந்த உருவம் ‘திடீ’ரென்று அவள் கண்களிரண்டையும் பின்பக்க வாட்டாக நின்று கரங்களால் அப்பிக்கொண்டு, “எங்கே, நீ சமத்தென்றால் யார் என்று சொல்லு பார்க்கலாம்?” என்று கிளிக் குரலில் கேட்டது.
“சரஸ்வதிதான். எடு கையை” என்று சோர்ந்த குரலில் சொன்னாள் ஜானகி.
துள்ளிக் குதித்துக்கொண்டு ஜானகி முன்னே ‘கிளு கிளு’ப்போடு நகைத்து வந்த சரஸ்வதி, ஜானகியின் முகத்தைக் கண்டு ஏங்கிய நெஞ்சினளாய் மனம் கரைந்து வெதும்பினாள்.
“ஜானகி இதென்ன கண்ணீர், முகமெல்லாம் அதைத்துப் போயிருக்கிறதே. ஏன் உந்த அழுகை?” என்று பதை பதைத்துக் கேட்டாள்.
இத்தனை வேளையும் மறைந்திருந்து விம்மிய ஜானகியின் நெஞ்சு உடனே மடை திறந்த வெள்ளம்போல் பதறியது. சரஸ்வதியின் கரங்களைச் ‘சடா’ரென்று தாவிப் பிடித்துக்கொண்டு, நெஞ்சில் கேவிய விம்மல் எக்கித் தாவ ஏகாந்தத்தில் கதறும் குழந்தையைப் போல் கேவிக் கேவி அழுதாள் ஜானகி.
“சீச்சீ, ஜானகி நீ ஓர் இன்ஸ்பெக்டரின் மனைவி. அப்படிப்பட்டவள் கோழைத்தனமாக அழலாமா?”
சரஸ்வதி ஜானகியைச் சாந்தப்படுத்தினாள்.ஆனால், அந்த வார்த்தையே ஜானகியை ஆகவும் தாக்கிற்று.
“சரஸ்வதி. அப்படி ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டதால் தான் வாழ்க்கைத் துணையே இல்லாமல் இப்படிக் கண்ணீர் விடுகிறேன். டியே சரஸ், உனக்கு வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்; நான் நினைத்ததோ எதிர்பார்த்ததோ எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையடி” என்று சொல்லி ‘ஓ’வென்று வாய்விட்டே அழுதாள் ஜானகி.
இரண்டு தோழிகள் கண்களும் துவாளித்து கண்ணீராகத் தேம்பிக் கிடந்தன.
ஆறுதல் கூறவுந்த தன்வாயில் பீறிய அந்த வார்த்தை ஜானகியைத் துயரத்திலாழ்த்தியதாயின்.ஜானகி எப்பவோ அந்த நினைவிலேயே அழுந்தியிருப்பாள் என்று யோசித்த சரஸ்வதி அவளின் இன்பம் செத்த தாம்பத்திய வாழ்வைத் தெரிந்தும் தான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதென நினைத்துத் தன்னையே நொந்து தனக்குள் சாடி வெதும்பினாள்.
ஜானகியைத் தேற்றிச் சமாதானப்படுத்துவதும் இந்நிலையில் அவளை ஏமாற்றுவதாகவே படும். இனிமேல் தெம்பு தரும் வார்த்தைகள் ஜானகியின் நெஞ்சுப் பாரத்தைக் குறைக்கா என்று தெரிந்தும் பெண்மையின் இயல்பான மன இரக்கம் பெண் பிறவியான சரஸ்வதி நெஞ்சில் சுரங்கவூற்றாய் ஊனித்தது. ஆயினும்,அந்தத் தாய்மையின் சக்தியும் அரவணைப்பின் கரங்களும் அப்போது செயலற்றுப் போய்க் கிடந்தன.
“ஜானகி.”
அப்போது ஒரு குரல் கனிவாக அழைத்துக்கேட்டது. சரஸ்வதி திரும்பிப் பார்த்தாள்.
விரிவுரையாளர் இராமசாமி விருந்தையில் நின்று கொண்டிருந்தார்.
“ஜானகி அப்பா கூப்பிடுகிறார் வா.”
சரஸ்வதி அழைத்தாள். வரண்ட முகத்தைச் சேலையால் துடைத்துக்கொண்டு பதனமாக நகர்ந்து தலையைக் கவிழ்த்தியபடி சென்றாள் வானதி.
“என்ன சங்கதி.என் முகத்தில் வாட்டம்?” என்று சாடையாக வினவினார் விரிவுரையாளர்,
”ஒன்றுமில்லை”
“ஒன்றுமில்லாமல் யாரும் கண்ணீர் விடுவதுண்டா உண்மையைச் சொல்லு: ஏன் அழுதாய்?”
அவர் கேட்டு வாய் மூடவில்லை. ஜானகியின் கண்களில் கண்ணீர் புரைந்து வழிந்தது.
“ஜானகி, என்னிடம் பயின்ற மாணவர்கள் கோழைகளல்ல: வீரர்கள். அவர்கள் திடகாத்திர வீரர்கள். அவர்கள் ஒருபோதும் அழக்கூடாது. பேதைகள்தாம் அழுவார்கள். நீ அப்படி ஒன்றும் பேதைப் பெண்ணல்லவே?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்து ”உசாராக இரு. உனக்கு ஒரு செய்தி சொல்லப் போகிறேன்” என்றார்.
‘என்னது?’ என்று கேட்பதைப் போல் தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள் ஜானகி.
“புறப்படமுன் மலைநாட்டுப் பிரதேசங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு சரஸ்வதியுடன் யாழ்ப்பாணம் செல்லலாம். இன்ஸ்பெக்டரும் சம்மதித்துவிட்டார்.”
சரஸ்வதி வாஞ்சையோடு ஜானகியைப் பார்த்தாள். இன்ஸ்பெக்டரே சம்மதித்துவிட்டா ரென்றால் சொல்லவா வேண்டும்?
மலைகளில் கவிந்த பனிப்புகார் நீவுவது போல் அப்போது ஜானகியின் மனசு வெளுத்துக் கொண்டு வந்தது. அதைக் கவனித்த சரஸ்வதி கேட்டாள்:
“ஜானகி, என்ன பேசாமல் நிற்கிறாய்? சம்மதந் தானே?”
“ஓம்”
“பச்சைக் கள்ளி.”
சரஸ்வதி சொக்கையில் கிள்ளினாள்; ஜானகி ‘குமுக்’ கிட்டுச் சிரித்தாள்.
இதயம் பூரிக்க இரு புதல்விகளையும் பார்த்துக் கொண்டே கண் சிமிட்டினார் விரிவுரையாளர்.
– தொடரும்…
– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.