மங்கலநாதர்
(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாமா இவ்வளவு பக்தியாய் முன்னெல்லாம் இருந்த தில்லை. சரசு கல்யாணத்திற்குப் பின்னால் ரொம்ப மாறி விட்டார். வழுக்கை விழுந்த இடம் வரை விபூதிப் பட்டை அடித்துக் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு ‘மங்கலநாதர் மங்கலநாதர்’ என்று அடிக்கொரு தடவை சாமிபெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சரசு மாமாவுக்கு மூத்த பெண். அடுத்தது மீனாச்சி. அப்புறம் ஈஸ்வரி. கடைசியாய் லெச்சுமி. நாலும் பெண்களாய்ப் போனதில் மாமாவுக்கு ரொம்ப வருத்தம். என்னைக் கண்டால் எரிச்சல். கடைக்குட்டி லெட்சுமிக்கு இரண்டு வயது இளையவன் நான். ஒவ்வொரு பெண்ணாய் நினைத்து ஊர் ஊராய் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு, மனசுக்குள் கணக்குகளாய்ப் போட்டுக் கொண்டு திரிகிறார் மாமா. ஓசியிலும் உரிமையிலும் வந்து சேர வேண்டிய மாப்பிள்ளை கால தாமதமாய்ப் பிறந்துவிட்டே னென்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் நெறு நெறுவென்று வரும் மாமாவுக்கு.
சரசைப் பெண் பார்க்க வந்ததிலிருந்து கல்யாணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் வில் வண்டியில் புறப்பட்டுப் போனவரை அப்படியே இன்னும் மனசில் கலர் கலராய்த் தெரிகிறது.
கல்யாணத்திற்கு ஒரு மாதமிருக்கையில் மாமா வேட்டியை இழுத்துக் கோவணங் கட்டிக்கொண்டு மச்சுக்குள் ஏறினார். பண்ணையாள் கருங்கள் மேலவீட்டு ராமசாமி சித்தப்பா. அத்தை, அம்மா லெச்சுமி எல்லோரும் சாக்குகளை வைத்துக் கொண்டு நின்றார்கள்.
மாமா கடகம் கடகமாய் மச்சிலிருந்து நெல்லைக் கொட்டிக் கொண்டேயிருந்தார். பட்டாசாலை முழுவதும் உத்திரத்திலிருந்து சிமிண்டுத் தரைவரை நெல் தூசி பனி மூட்டம் போல் அடைத்தது. நெல் வாசனை சொகமாக இருந்தது. சாக்கு நிறைய நிறையக் கருங்கன் கோணூசியை வாயில் கவ்விக் கொண்டு வந்து சணலைக் கோர்த்துத் தைத்துப் போட்டான்.
மூட்டைகளை அடுக்கிக் கொண்டே வந்தார்கள்.
“அத்தை அம்மாவிடம் அத்தாச்சி பாருங்க போது மாண்ணு” என்று அடிக்கடி கேட்டுக் கொண் டிருந்தது. அம்மா ஓரொரு சமயம் ஓரொரு வித மாய்ப் பதில் சொன்னது. ”செழுவனூராள்கள் அவ்வளவு பேரும் வந்தாங்கன்னாலே இது பத்தாது. அப்புறம் ஏழூருச் சனமிருக்கு. அதுக்கும் மேலே உள்ளூர்லெ ஆறு தெரு அம்பது சாதி மனுச இருக்கு. நீ அள்ளு அண்ணே. இன்னும் பாதிக்கே அள்ளலையே” என்று ஒரு சமயம் சொன்னதும் அத்தை ஒரு பெருமூச்சை சிறுசிறு மூச்சுகளாக விட்டது.
மூட்டைகளை அடுக்கிவரும்போது மனசுக்குள் ஒவ்வொரு மூட்டையாய் எண்ணிக் கொண்டே வந்தவன் இருபது என்று சத்தம் போட்டுக் சொல்லி விட்டேன், அத்தை என்னைப் பார்த்து முறைத்தது மாமாவுக்கும் காதில் விழுந்தது போல் அவனை எங்கிட்டாச்சும் தொலைஞ்சு போகச் சொல்லு,’ என்று கத்தினார். ‘ஒன்னைக் கார்வார் பாக்கச் சொல்லி இங்கு யார் கூப்பிட்டா?’, என்று அம்மா அடிக்க வந்தது.
வெகு நேரங்கழித்து மாமா மச்சுக்குள்ளிருந்து வெறுங்கடகத்தை எறிந்துவிட்டு சத்தம் போட் டார், “இனி சண்டுதான் தேறும்”.
அடுத்து நாலு நாளும் பொழுது விடியுமுன் மாமா ராமசாமி சித்தப்பாவைக் கூட்டிக்கொண்டு ஊருணி முக்கிற்குப் போய் விடுவார். வெயில் வரும்போது ஒரு விறகு வண்டியோடு வந்து சேர்வார்கள். விறகு வண்டி அசைந்து அசைந்து வரும். இந்தப்பக்க மாட்டோரம் ராமசாமி சித்தப்பா அந்தப்பக்க மாட்டோரம் மாமா. மாறி மாறி விலை கேட்டதில் அரைப் பைத்தியமாகி விறகு வண்டிக்காரன் வருவான்.
மாமா பெட்டியிலிருந்து பணம் எடுத்து பத்து தடவை எண்ணுவார். பதினோராவது தடவையாய் ராமசாமி சித்தப்பா எண்ணி விறகு வண்டிக்காரரிடம் கொடுப்பார். ‘கொறையிதே’ என்று வண்டிக்காரன் சொல்ல மறுபடி வாக்கு வாதங்கள் நடக்கும். முனியசாழி தாத்தா வந்து மாமாவிடம் பேசி வண்டிக்காரனிடம்பேசி ஒரு அஞ்சு ரூபாய் நோட்டை மாமாவிடமிருந்து பறித்து வண்டிக்காரனிடம் கொடுப்பார்.
வண்டியைத் தள்ளிக்கொண்டு போய் தொழுவத்தருகில் நிறுத்தி மேக்காலைத் தூக்கி மெல்ல மெல்ல ஆகாயத்திற்குக் கொண்டு போய் வண்டிக்காரர் தொங்கிக் கீழே குதிப்பார். விறகு சர சரவென்று இறங்கும். வண்டி ‘ஆ’ வென்று கையைத் தூக்கி நிற்கும், பைதக்களை நாலு பேர் தள்ளிக்கொண்டே போகப் போக மிச்ச மீசாடி விறகுக் கட்டைகளும் தரையில் விழும்.
நாலு வண்டி விறகு தொழுவத்தை அடைத்து மாடுகளை வெளியே தள்ளிவிட்டது. கட்டாந் தரையில் தான் மாடுகளுக்கு ஒரு மாதமும் படுக்கை இருக்கை எல்லாம்.
சிலுவை வடிவத்தில் கருங்கன் வரிசையாய் எட்டு அடுப்புகள் வெட்டினான். அத்தை ஊர் பூராவும் ஓடி ஓடி தேக்சாக்களையும் அண்டாக்களையும் வாங்கி வந்தது. கூட லெச்சுமி சிருக் சிருக்கென்று திரிந்தது. நெல் அவியல் வாசனை வயற்காடு வரை பரவியது, நெல் அவிக்க, ஆளாட்ட, அரைக்க, புடைக்க என்று ஆறு பொம்பிளைகள் கூலிக்கு; சொந்தக்காரப் பொம்பிளைகள் எட்டுப்பேர். ஒரு பெரிய கூட்டம். மூன்று வேளையும் மாமா வீட்டு ஆள்பத்தியில் சாப்பாட்டிற்கு உட்கார்ந்தது. எப்போது போனாலும் மாமா வீட்டில் பந்தி நடந்து கொண்டே இருந்தது.
ராத்திரி பகலாய் மாமா மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு ஊர் ஊராய்ப் போய் வந்து கொண்டிருந்தார். சரசு அந்த நாள் களில் புதுப்புதுச் சேலையாய்க் கட்டி அந்தி சந்தி இண்டு வேளையும் தலையில் பூ வைத்து சந்தோ ஷத்தை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் திரிந்தது.
ஒரு வாரம் இருக்கும்போது உள்ளூரில் ஒரு வீடு பாக்கி இல்லாமல் தாம்பாளமும் பத்திரிகையுமாய் அலைந்தார். “ஈசாக் சவுண்ட் சர்வீஸில் ஸ்பீக்கர் செட்டுக்கு இன்னும் சொல்லல்லீயா?” என்று லெச்சுமி இரண்டு தடவை அத்தையிடம் கேட்ட பிறகு மாமா போய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார்.
கோவில் மேளத்திற்குச் சொல்வதற்காக மாமா நடுவில் ஒரு நாள் உத்தரகோச மங்கைக்குப் போய் விட்டு வந்தார், அங்கே போய்விட்டு வந்ததிலிருந்து மாமா மாறி மாறிப்பேசினார். ”கல்யாணச் செலவு கண்ட மேனிக்குப் போகுது’ என்று புலம்பத் தொடங்கி விட்டார். கல்யாணம் முடியும் வரை ரொம்பத் தடவை அதே மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார்.
கல்யாணத்திற்கு முதல் நாள் காலை இராமநாத புரத்திலிருந்து ஒரு வண்டி நிறைய ஐந்தாறு மூட்டை களில் காய்கறிகளும் தேங்காய்களும் வந்திறங்கின. பெரிய பெரிய தூண்களைப் போலிருந்த நாலு வாழை இலைக்கட்டுகளை வண்டியிலிருந்து இறக்கி போட்டான் கருங்கன்.
கட்டுகளை அவிழ்த்துப் பரப்பிய வாழை இலைகளின் வாசமும் உதறிப் போட்டிருந்த கறிவேப்பிலை மணமும் வீடுபூராவும் அலைந்தது.
அன்று சாயங்காலம் முனியசாமித் தாத்தா வந்து ஒரு குட்டிச் சாக்கில் இருபத்தாறு தேங்காய்களைச் சுண்டிப் பார்த்து எண்ணிப் போட்டார். ஊரைச் சுற்றி ஏராளமான மூலைகளில் இருபத்தாறு சாமிகள். உள்ளூரில் கல்யாணமென்றால் இந்த இருபத் தாறு சாமிகளுக்கும் முதல் நாள் சிதறு காய் அடிக்க வேண்டும். எல்லாச் சாமிகளும் அரைக்கல் கால்க்கல் லில் நட்டிருக்கும். காத்தான்காளையென்று அத்தனை சாமி பேரும் இடமும் முனியசாமித் தாத்தா மாதிரி வயசான ஆள்களுக்கு மட்டும்தான் தெரியும். அவர் மூட்டையோடு கிளம்ப வானரக் கூட்டம்போல் பிள்ளைகள் சிதறுகாய் பொறுக்க பின்னால் படை எடுத்தன. தேங்காயெண்ணிக்கை திடீரென்று வெகு வாக குறைந்தது வீட்டில்.
ஸ்பீக்கர் செட் வந்ததும் சரசு ரெண்டு தடவை கண் ணாடி முன்னால் நின்றுவிட்டு வந்தது. பொழுது இருட்டும் நேரத்தில் உத்திர கோச மங்கையிலிருந்து மேள செட் வந்திறங்கியது. மாமா வாத்தியக்காரர் களை ரொம்ப உபசரித்துக்கொண்டிருந்தார்.
மூன்று அண்டாக்களில் சாதம் வெந்து கொண்டிருந்தது. சமையற்காரர்கள் சுறுசுறுவென்று கொல்லையில் வெட்டிய அடுப்புகளின் பக்கம் நின்றார்கள். சுற்று வட்டாரக்களிலிருந்து பையும் பெட்டியுமாய் குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தது ஜனம்.
ராத்திரி பந்தி ஆரம்பித்த போது பந்தலிலிருந்து முதல் மேளச் சத்தம் கேட்டது. சரசு அறை வீட்டிற் குள் உடம்பு புல்லரிக்க பயமும் சந்தோஷமுமாய் நின்று கொண்டிருந்தது.
ஒவ்வொரு பந்தியாய் முடிய ராத்திரி வெகுநேரமாகி விட்டது. வீட்டில் எங்கு திரும்பினாலும் சாம்பார் வாசனையும் வாழயிலை வாசமும். நடு ராத்திரி யெல்லாம் ஆட்கள் வந்துகொண்டே யிருந்தார்கள். தெருவில் எல்லார் வீட்டுத் திண்ணைகளிலும் விருந்தாளிகள் படுத்துக் கொண்டும் கதை பேசிக் கொண்டுமிருந்தார்கள்.
பந்தலில் பெட்ரோமாக்ஸ் விளக்கை இறக்கிக் காற்றடித்துக் கொண்டிருந்தார் ஒரு ஆள். மாண்டில் வெறிப்பதும் அடங்குவதும் வேடிக்கையாயிருந்தது. மாமா அவதி துவதியாய் எங்கிருந்தோ வந்தவர். ‘போய் அம்மாவைக் கூட்டிக்கிட்டுவா. ஜல்தியாப் போ” என்றார். ஆள் ரொம்ப சோர்வாக இருந்தார் காலைப் பலகாரம் பொங்கல். சமையற்காரர்கள் அண்டாக்களில் பொங்கலும் சாம்பாரும் பண்ண ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்த நேரம். அம்மா அங்கே தான் நினறு கொண்டிருந்தது.
அம்மாவும் நானும் பட்டாசாலையைத் தாண்டிய போது கருங்கன் அரிசி மூட்டையைத் தூக்கிக் கொண்டு கொல்லை சமையற்கட்டுக்குப்போனான். அம்மா போனதும் மாமா மேல் துண்டால் ஒரு தடவை முகத்தைத் துடைத்துக் கொண்டார். ‘“செலவு கையை மீறிப் போய்க்கிட்டிருக்கு. என்ன செய்யறதின்னே தெரியலை’’ என்றார். அம்மா கழுத்திலிருந்து சங்கிலியைக் கழற்றி ஒரு பந்துபோல் சுருட்டி மாமாவிடம் கொடுத்தது. மாமா மறுத்து என்னவோ சொன்னார். மாமா கையில் சங்கிலியைத் திணித்துவிட்டு அம்மா விடுவிடுவென்று உள்ளே போய்விட்டது.
விடியற் காலையில் ஸ்பீக்கர் செட்டிலிருந்து பாட்டும் மேளச் சத்தமும் ஊர் முழுக்கக் கேட்டது.ஏழு மணிக்குப் பந்தி. சாப்பிட உட்கார்ந்த ஆட்களும் குழந்தைகளும் இலை போடும் ஆளிடம் பெரிய இலைகளாகப் போடும்படி கேட்டார்கள். மூன்று தடவை நான்கு தடவை வரை பொங்கல் வைக்கச் சொல்லிக் கேட்கும் சப்தங்கள் வந்து கொண்டே இருந்தனர்.
மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு. திருப்பூட்டு மஞ்சக் காப்பு என்று மத்தியானம் வரை கல்யாணம் நடந்து முடிந்தது. சரசு அவ்வளவு நேரமும் குனிந்த தலை நிமிராமலே உட்கார்ந்திருந்தது.
இடையில் ஒரு தடவை “சமையல் கட்டுக்குப்போய் நாலு மஞ்சள் துண்டு வாங்கிட்டு வா” என்றது அம்மா. சமையல் கட்டு கோலாகலமாயிருந்தது.
இருபது பேருக்கு மேல் நின்று சாதம் வெந்த அணடாக்களையும் தேக்சாக்களையும் இறக்கி புது ஒலைப்பாய்களில் கொட்டிப் பரப்பினார்கள். புது ஒலை, ஈரமும் சூடும் பட்டு விசேசமாய் மணத்தது. ஒரு ஆள் உயரத்தில் அரை ஊருணித் தண்ணீர் கொள்கிற மாதிரி இருந்த பாயாச தேக்சாவைக் பதினைந்து பேர் துணிகளைப் பிடித்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். ராமசாமி சித்தப்பா மாமா விடம் சொல்லிக் கொண்டிருந்தார். “கூட்டம் எக்கொள்ளலைப்பா. இன்னும் ரெண்டு அரிசி மூட்டைகளை அவுத்துத் தண்ணியிலே போடச் சொல்லு”.
பெண்ணையும் மாப்பிள்ளையையும் அறைவீட்டில் விட்டுப் பால் பழம் சாப்பிடச் சொல்லிப் பெண்கள் சுற்றி கேலி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே இலைகளைப்போட்டு மதியச் சாப்பாட்டுப் பந்தி ஆரம்பமானது.
தெருப்பூராவும் பந்தல், பந்தல் முழுவதும் பந்தி மூன்று வரிசைகளில் மாற்று விரித்துப் பந்தி வேறா வேறாவென்று நடந்து கொண்டிருந்தது.
பெண்கள் பிள்ளைகளை அள்ளிக் கொண்டும் இழுத் துக் கொண்டும் முதற் பந்தியில் இடம் பிடிக்க ஓடி வந்தார்கள். இலை போடுவதற்குள் இங்கெ இன் னும் எலைவரலை என் று ஆளுக்காள் சத்தம். ஊரில் யார் வீட்டிலாவது கல்யாணமென்றால் தான் மத்தியானத்தில் சோறும் குழம்பும். இல்லையென்றால் பொழுது சாய ஒரு வேளை மட்டும் சோறும் குழம்பும் சாப்பிடும் ஊர். சரசு கல்யாணத் தேதி கல்யாண வேலைகள், மாப்பிள்ளை பற்றியெல்லாம் விசாரித்த பெரும்பாலோர் இந்தமத்தியான சோறையும் குழம்பையும் சேர்த்து மனதில் கொண்டு விசாரித்ததும் உண்மை.
பெரும் பெரும் கடகங்களில் சோற்றை அள்ளித் தோள்களில் தூக்கி வந்து இறக்கினார்கள் இளவட்டங்கள். கடகங்களிலிருந்து ஓலைப் பெட்டிகளில் அள்ளி சோற்றை இலைகளில் கொட்டினார்கள். பின்னாலேயே கால்படி பிடிக்கும் பெரிய பெரிய அகப்பைகளில். சாம்பாரை ஊற்றிக் கொண்டே வந்தார்கள். ஜனங்கள் சோற்றைக் குவித்து நடுவில் குளம் கட்டினார்கள். சாம்பாரை முடிந்தவரை குளங்களில் நிரப்பிப் பிசைந்தும் பிசையாமலும் அள்ளியும் உருட்டியும் விழுங்கிக்கொண்டு இருந்தார்கள்.
வெளியூர் ஜனமும் உள்ளூர் ஜனமுமாய் இன்னும் ஏராளமான பேர் பந்தலுக்கு வெளியே அடுத்தடுத்த பந்திகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். பாயாசம் ஊற்றிக் கொண்டிருந்த நாலைந்து பேர் திக்கு முக்காடிக் கொண்டிருந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்’ என்று பாயாசம் ஊற்றச் சொல்லி ஆள்கள் இம்சை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஊரில் ஒரு வீடு பாக்கியில்லாமலும் பட்டி தொட்டி பதினெட்டு கிராமமும் சரசு கல்யாணத்தில் உட்கார்ந்து சாப்பிட்டது. பொழுது இருட்டும் போது வண்ணா மாற்றுக் கொடுத்தவள், மாப்பிள்ளைக்குக் கிராப் வெட்டியவர் என்று நார்ப் பெட்டிகளில் சோறும் சட்டிகளில் சாம்பாரும் வாங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
சரசு கல்யாணம் முடிந்து மறு மாதம் மாமா உத்திர கோச மங்கைக்குப் போய் வந்தார்; வந்ததும் ஒரு மஞ்சள் பைக்குள்ளிருந்து காகிதப் பொட்டலத்தைப் பிரித்து எல்லோருக்கும் விபூதிகொடுத்துவிட்டு மீதித் திருநீறை திண்ணை மாடத்தில் வைத்தார். அப்புறம் ராமநாதபுரத்திற்குப்போய் வரும் போதெல்லாம் உத்திரகோச மங்கையில் இறங்கி சாமி தரிசனம் பண்ணிவிட்டுத்தான் வருவார். ஒரு நாள் முனியசாமித் தாத்தாவிடம் திண்ணையில் உட் கார்ந்து சொன்னார்.
“மாமா அந்தக் கோபுரத்துக்குக் கீழே நிக்கிறப் பாத்தான் மனுசன் எவ்வளவு சின்ன ஆளுண்ணு தெரியுது, நேத்து நான் போயி கர்ப்பக்கிரகத்திலெ நிக்கிறென். தீபாராதனை ஆகுது, சுத்தீ தெய்வீக வாசனை, மணிச்சத்தம் எங்கெயோ வேற ஒலகத்திலெ அடிக்கிற மாதிரி. பூ விழுகிறசத்தம் மாதிரி மெல்லக்கேக்குது. அப்ப என்னை அறியாம நெனைச்சேன்: மங்கலநாதர்சாமிக்கு எங்குடும்பம் இண்ணைக் கிலெர்ந்து அடிமை. இனி, என் வீட்டு எந்த மங்கலக் காரியமும் ஒன் சன்னிதானத்திலெதான் நடக்கணும்”.
ஒரு வருஷங் கழித்து மீனாச்சிக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பணிவாசல். மாமா வீட்டிற்கு வீடு பத்திரிகை கொடுக்கும்போது சொன்னார்.
”உத்திரகோச மங்கைலெ கொண்டு போயிக் கல்யாணத்தை வச்சுட்டானேன்னு மலைக்காதெ ஆத்தா. யார் யாரு கல்யாணத்துக்கு வாரியளோ எல்லாரும் வாங்க. நாலு வண் டி பூட்டிப்போகுது. ஒரு வண்டியிலெ அரிசி தவசி ஏத்தினாலும் மத்த மூணு வண்டியிலெ எல்லாரும் ஏறி வரலாம். வாங்க”.
மாமா வீட்டு வண்டி ஒன்று. வேண்டிய வீட்டு வண்டிகள் மூன்று, நாலு வண்டிகளும் நாலு ஜோடி மாடுகளும் மீனாச்சி கல்யாணத்திற்கு முதல் நாள் பொழுதிருக்க வந்து நின்றன. நாலு ஜோடி மாடுகள் வரிசையாய் நிற்பதைப் பார்க்க கூட்டம். ஈ கடிக்கும் போதெல்லாம் மாடுகள் உதறின. உதறும் ஒவ்வொரு அசைவுக்கும் மாடுகளின் கழுத்து மணியோசை மாறி மாறி ஊரை அழைத்தது.
பொட்டலில் வைக்கோலைக் குவியலாய்ப் போட்டுக் கொளுத்தினான் கருங்கன். ஜிவ்வென்று எரிந்து அடங்கி மேலே கருக்கும் உள்ளே தீயுமாய்க் கிடந்தது. ஒரு கொட்டாங்கச்சியில் விளக்கெண்ணை வாங்கி. கருக்கை சுடச்சுட அள்ளி அதில் போட்டுக் குழப்பி னான். எல்லா வண்டிக்காரர்களும் சேர்ந்து ஒவ்வொரு வண்டியாய் சாவியை எடுத்துப் பைதாவை நகர்த்தி அச்சில் மசகை அப்பினார்கள். கூடியிருந்த பிள்ளைகளுக்கு இதுவே ஒரு வைபவம் போல இருந்தது.
நாலுவண்டிகளுக்குள்ளும் வைக்கோல் பரப்பி மேலே ஜமக்காளங்கள் விரித்து மெத்தை போலாக்கிக் காண்டிருந்தார்கள். மாமா வீட்டு வண்டியில் ஒரு மூட்டை அரிசியைக் கொண்டு வந்து போட்டான் கருங்கன்.
மாடுகளை அவிழ்த்து வண்டிகளில் பூட்டியபோது நிலா நாராயணபிள்ளை வீட்டு வேப்ப மரத்திற்கு மேல்வானத்தில் தெரிந்தது. மாமா வீட்டு வண்டியில் கல்யாணப் பெண் மீனாச்சியை அம்மாவும் அத்தையும் கூட்டி வந்து ஏற்றினார்கள். முன் வண்டி ராமநாதன் வண்டி, சுளிக்காளைகள். அதில் ஏற என்னை அம்மா விடவில்லை, விரட்டிக் கொண்டு வந்து தன் பக்கத்திலேயே மாமா வீட்டு வண்டியில் உட்கார்த்தி வைத்தது. கலியாணத்திற்கு வர வேண்டிய கூட்டம் வண்டி வண்டியாய் மோதியது. பைதாவில் தான் ஆள் உட்காரவில்லை அப்பிக் கொண்டு உட்கார்ந்தார்கள்.
கல்யாணத்திற்குப் புறப்பட்டுப் பெட்டிகளிலிருந்து சலவை உடுத்தி வந்தவர்கள் கல்யாணத்திற்குப் போகப்போவதையும் பற்றி ஒரு மாதமாய் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் பலருக்கும் வண்டிகளில் இடம் கிடைக்காத கோபம். வண்டிகள் புறப்பட்டுப் போகும்போது சௌந்தரஞ் சின்னம்மா தெருவில் நின்று கத்தியது, “ஆனாலும் இந்த ராமநாதனுக்கு இம்புட்டுத் திமிரு கூடாது. இன்னொருத்தர் கல்யாணத்துக்கு இவன் என்ன சட்டாம்பிள்ளை. எறங்கு எறங்குனு எறக்கி விட்டுட்டுப்போறான்”
ஊர் தாண்டி காட்டுப் பள்ளிவாசல் வரும்போது நாலு வண்டிகளுக்கும் போட்டி வந்து விட்டது. வைக்கோல் வாசனை கமகமவென்று மணத்தது. லேஸ்லேஸாய் வைக்கோல் குத்தியது. நாற்கால் பாய்ச்சலில் மாடுகள் பறக்கையில் தலை அடிக்கொரு தரம் கூட்டில் தட்டி வலித்தது,
முந்தின வண்டிக்காரர்கள் பிந்தின வண்டிகளைக் கடக்கையில் கைதட்டிச் சிரித்தார்கள். வழியெல் லாம் வண்டிகளில் சிரிப்பும் கனைப்பும். அம்மாவும் அத்தையும் கல்யாணப் பொண்ணு போற வண்டி இது கருங்கா. நிதானம் நிதானம் என்று இழுத்துப் பிடித்து விட்டார்கள். இல்லாவிட்டால் ராமநாதன் வண்டியை முந்தியிருப்பான் கருங்கன்.
இதம்பாடல் வந்தது ஞாபகமிருந்தது. வண்டி வாசனையும் வேகச்சுகமும் அம்மா மடியில் சுழல விட்டது. “எறங்கு எறங்கு”, என்ற அம்மா சத்தங் கொடுத்து எழுப்பி விட்டதும் பார்த்தால் ஒரு பெரிய கட்டிடத்தின் வாசலில் வண்டிகள் நின்று கொண்டிருந்தன.
”உத்திரகோசமங்கை வந்துருச்சுடா எறங்கு” என்றது. அம்மா. வண்டியோடு நிலாவும் உத்திரகோச மங்கைக்கு வந்திருந்தது.
பெரிய சத்திரம். திண்ணைகள் இரண்டும் பெரிய ஒப்படிக் களங்கள்’ வாசலில் நிறுத்தி லெச்சுமி தூரத்தி லிருந்த கோவில் கோபுரத்தைக்காட்டியது. ‘யம்மாடி யோவ்’ என்றேன் உயரத்தைப் பார்த்துவிட்டு.
நானும் லெச்சுமியும் சத்திரம் பூராவையும் சுற்றி வந்தோம். ஒரு அறையில் ஒரு மூட்டை அரிசியும் கை களில் அள்ளி விடுகிற மாதிரி காய்கறிகளும் பரப்பி இருந்தது. ஒரு சின்னக் கட்டிலிருந்து இலைகள் பிரிந்து கிடந்தன.
பணிவாசலிலிருந்து மாப்பிள்ளை வீட்டு. வண்டிகள் மூன்று வந்திறங்கின. செழுவானூரிலிருந்து சரசு வீட்டுக்காரர்கள் ஒரு வண்டியில் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் அங்குமிங்கும் பேச்சுச் சத்தம் வந்து அடங்கியது;
‘அதிகாலையில் எழுந்து எல்லோரும் குளிக்கப் போனார்கள். மாமா சீக்ரகிம் சீக்கிரம்’ என்று சத்தங்கொடுத்துக் கொண்டு டு உற்சாகமாய்த் திரிந் தார். வெயில் வந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பந்திக்கு ஆள்களைக் கூப்பிட்டார் மாமா. நீளமாய் ஒரு வரிசையில் ஆண்களும் மறுவரிசையில் பெண் களும் பிள்ளைகளும் உட்கார்ந்தார்கள், படபடப் பாய் எந்த சத்தமும் கேட்கவில்லை. முண்டியடித்து யாரும் பந்திக்கு ஓடிவரவில்லை. சிலர் வேண்டு மென்றே சத்தம் போட்டுப் பேசிப் பார்த்தநர்கள், சத்திரந் தாண்டி தெருவுக்கு அதெல்லாம் கேட்க வில்லை
மேள தாளத்தோடு பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கோவில் வரை ஊர்வலம். எங்கள் ஊரில் பாதி இருக்கும் கோவில் கண் மூடி கண் திறப்பதற்குள் சந்நிதியில் நிறுத்திக் கல்யாணம் நடந்துவிட்டது. தீபாராதனையின் போது மாமா கண்ணீர் விட்டு உருகி மங்கல நாதரைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
சத்திரம் திரும்பி பதினோரு மனிக்கெல்லாம் மாமா மதியச் சாப்பாட்டிற்கு அழைத்தார். ஒரு மணி நேரத்தில் ஒரே பந்தியில் சாப்பாடு முடிந்தது. தெருப்பூராவும் ஊர் பூராவும் சாம்பார் வாசனை இல்லை. வாழை இலை வாசம் திண்ணைக்குக் கூடத் தெரியவில்லை.
ஊருக்குக்குக் கிளம்ப வண்டி பூட்டி நிற்கும் போது மாமாவுடன் ராமசாமி சித்தப்பா நின்றார், கருங்கன் மீந்து போன பாதி அரிசி மூட்டையை வண்டியில் கொண்டு வந்து போட்டான். அந்தப் பாதி அரிசி மூட்டையைப் பார்த்துக் கொண்டே ராமசாமி சித்தப்பா மாமாவிடம் சொன்னார்.
“என் குடும்பமும் இண்ணைக்கிலெருந்து மங்கல நாதருக்கு அடிமை. இனி என் மக்கள் கல்யாணங் களெல்லாம் அவன் சந்நிதியிலே நடக்கும்.”
– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
![]() |
கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 805
