பேரில் என்ன கிடக்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதந்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2025
பார்வையிட்டோர்: 2,383 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கந்தா! முருகா!! சண்முகா!’

யாரோ உச்சரித்த இந்தப் பெயர்கள் அவனைத் திரும்பிப் பார்க்கச் செய்தன. 

அவனுக்கு வீட்டிலே ஒரு மனைவி இருந்தாள். இரு அழகிய குழந்தைகளும் இருந்தன. ஒரு காலத்தில் போதிய வரு வாயும் இருந்தது. எப்படியோ காலந்தள்ள முடிந்தது. அவன் செய்யும் தொழிலில் கேவலம் என்ன வந்தது! 

மனிதர் கள்ளைக் குடிக்கிறார்கள். அவன்கள் இறக்கி வியாபாரம் செய்கின்றான். மது விலக்கு என்ற பேச்சு எப்போ தாவது அங்கே அடிபடுவது உண்டு. யார் கவனிக்கிறார்கள்? மது விலக்குப் பிரசாரகர் ஒருவர் கூட்டத்துக்குப் போகும் வழியில் அவனுடைய “கொட்டிலில்” ஒரு “டோஸ்” அடித்து விட்டுப் போனதும் உண்டு. அவன் கடவுள் சந்நிதானத்தில் எல்லோரும் சமம் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறான். ஆனால் அவனுடைய “கொட்டில்” கடவுள் சந்நிதானத்துக்கும் ஒரு படி மேலே, பிரத்தியட்ச சமத்துவம் நிலவும் பூலோக சுவர்க்கம் அது. 

அதிகம் படித்தவனல்ல. பள்ளிக்கூடத்துக்கு போனது உண்டு. அதனாலென்ன? அவன் செய்யும் தொழிலுக்கு பி. ஏ. படிப்பு தேவைப்படவில்லை. அத்தொழில் ஈனமானது என்று யாரும் சொன்னதுமில்லை. அப்படி அவன் நினைத்துப் பார்த்த துமில்லை. நிம்மதியாய் வாழ்க்கைப் படகை ஓட்டிக் கொண்டு வந்தான். 

அவனுக்கு ஏனோ ஒரு ஆசை. தன்னுடைய பிள்ளை களில் ஒன்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பது தான். கொஞ்சம் பணம், காசு சேர்த்து நல்ல வீடு கட்டியிருக்கிறான். அவன் குடிப்பதில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மகனு டைய மேல் படிப்பு விஷயத்தைப் பார்த்துக் கொள்ளலாம். இன்னும் பிள்ளைகள் பிறந்தால்…? பிறக்காமல் எங்கே விடப் போகின்றேன்? அவனுக்கு இப்போது முப்பத்தெட்டு வயது தானாகிறது. அவளுக்கோ ஆக முப்பத்திரண்டுதான். பாதாளம் மட்டும் பாயும் பணம் அவனுக்குத் தேவைதான். யாருக்கு தான் தேவையில்லை? 

இப்படியிருக்கையில் தான் ஆலயப் பிரவேசம் என்ற கூச்சல் பிறந்தது. அடிக்கடி தங்களை ஆடு மாடுகள் போல உயர்ந்த சாதிக்காரர் நடத்துவதாக கேள்விப்பட்டான். அவனுடைய அனுபவம் அதுவல்ல. அவனுக்கு தன் “கொட்டி லுக்கு” வருபவர்களில் பலர் ஆடு மாடுகள் போல் தோன்றுவ துண்டு. ஆனால் சமூக அமைப்பில் கீழ் தட்டு மேல் தட்டு என்பதைப் பற்றி அவன் சிந்தித்ததில்லை. அப்படி நினைத்துப் பார்த்தாலும் தன்னிலும் பார்க்க கீழ்த்தட்டிலிருப்பவர்களை அவனுக்குத் தெரியும். சோத்துக்கு வழியில்லாமல் இருப்பவன் பிராமணணாய் தானிருக்கட்டுமே, தனக்கும் பார்க்க கீழே என்பது அவன் பகுத்தறிவு வாதம். அவனுக்கு பகுத்தறிவு உண்டோ? அது இல்லாத பாமரன் என்று அவனுடைய தலைவர்கள் சொல்கிறார்களே! 

அவனுடைய ஊரில் இருந்த ஒரு விநாயகர் ஆலயத்தை திறந்துவைக்க பல பெரியோர் திட்டம் தீட்டினர். அவனுக்கு ஒரு பெரிய வேடிக்கையாயிருந்தது. அந்த ஆலயத்தை திறந்தாலும் சரிதான். மூடினாலும் சரிதான். ஒரு பத்துப் பேர் உள்ளே போனால் கோவில் நிரம்பி விடும். அதை திறப்பதாமே. 

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது அவன் பிரச் சினையல்ல. அதைப் பற்றி அவன் ஆழமாய்ச் சிந்தித்ததும் இல்லை. அவனுடைய மனைவியின் முதல் பிரசவம் மானிப்பாய் ஆஸ்பத்திரியில் நடந்தது. அன்று மருதடிப் பிள்ளையாருக்கு அவன் தேங்காய் உடைத்தது மட்டும் மெய். இளமையிலிருந்தே தெய்வம் என்ற மேலான நியதி ஒன்றுக்கு பயந்து வாழ பழக் கப்பட்ட மனது. 

“நீங்களெல்லாம் இம்மாதிரி விஷயங்களில் முன்னுக்கு நின்று உழைக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு ஒரு சிறு கூட்டம் அவனை ஒரு நாள் அணுகியபோது அவனுக்கு பெரு மையாய் இருந்தது. உழைப்பதெப்படி என்பது அவனுக்குத் தெரியாது. அப்புறம் அவர்கள் சொல்லிக்கொடுத்த பிறகு புரிந்தது. அவர்கள் கொண்டுவந்த ஒரு “லிஸ்டில்” தன் பெயரை எழுதி ஐம்பது ரூபா எனத் தொகையைக் குறிப்பிட்ட பிறகு தனக்கென வாழாப் பிறர் மனையாளன் என்ற உணர்ச்சி பிறந்தது. “நீங்கள் கட்டாயம் ஆலயப் பிரவேசத்திலன்று வந்து கலந்து கொள்ள வேண்டும்” என்று பற்கள் பல தெரியக் கூறி விட்டு வந்தவர்கள் போய் விட்டார்கள். அன்றிரவு “சும்மா இளிச் சவாயன் மாதிரி சுளையா ஐம்பது ரூபாயை தூக்கி குடுத்துப் போட்….?” என்று அவன் மனைவி கண்டித்ததிலும் நியாயமிருப்பதைக் கண்டான். 

அப்புறம் அவனும் குளித்து வெள்ளை வேட்டியணிந்து மனைவி பிள்ளைகள் சகிதமாக அந்தப் புனித தினத்தில் விநாய கரடி தொழுதான். ஒலிபெருக்கி, சொல்மாரி, நன்கொடையாளர் பட்டியலில் அவன் பெயர் எல்லாம் அவனைத் தலைகிறங்கச் செய்தன. ஆனால் அன்றைய வியாபாரம்…? அந்த எண்ணமும் மனதில் ஒரு மூலையிலிருந்து கிளம்பிக் கொண்டேயிருந்தது. தன் பிள்ளை குட்டிகளுக்காகவாவது இதையெல்லாம் பொருட் படுத்தக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். 

பிறகு…. அவன் பெரிய மனிதனானான். அடிக்கடி தலைவர்கள் அவனுடைய வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள். ஒரு அரை மந்திரி கூட அவனுடைய வீட்டுக்கு வந்து போனார். தேநீர் விருந்து அது இதென்று கையால் கரையவும் தொடங் கியது. மனைவி சில சமயம் “ஒரு சதத்துக்கு பிரயோசனமில் லாத வேலையாள்…?” என்று முணுமுணுக்கிறபோது தன் மனைவி சொல்வது சரியா, தலைவர்கள் சொல்வது சரியா என்று சந்தேகப்பட்டிருக்கிறான். ஆலயப் பிரவேச விஷயமும் போகப் போக கேலிக் கூத்தாக அவனுக்குத் தோன்றலாயிற்று. அவன் காலையில் எழுந்து குளிக்கவோ, கோயிலுக்குப் போகவோ முயற்சிக்கவில்லை, வேறு யாரும் அந்த சுற்று வட்டாரத்தில் செய்ததாகவும் தெரியவில்லை. 

தேர்தல் வந்தது. நல்ல வேளை! அவனைத் தேர்தலுக்கு நிற்கும்படி யாரும் கேட்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அபேட்சகருக்காக கச்சேரிக்குப் போனான். கட்டுக்காசு ஏதோ குறை கிறதென்று உதவி செய்தான். அவன் வீட்டிலிருந்தே கொடிகள் ஒட்டவும் திட்டங்கள் தீட்டவும் தொடங்கினார்கள். “பெரிய மனிதத் தன்மையை”க் காப்பாற்ற தேர்தல் முடிவதற் கிடையில் இரண்டாயிரம் ரூபா வரை கையை விட்டு நழுவி விட்டது. 

கொஞ்சம் சோர்ந்து போயிருந்த வேளை மகனுடைய மேல் படிப்புப் பற்றிய எண்ணத்தைக் கைவிட வேண்டுமோ என்ற கவலை கூடிக்கெடுத்த கூட்டம் மீண்டும் அணுகியது. “புத்தமதத்திற்கு அரசாங்கம் சலுகைகள் பல வழங்குகிறது. அதைத் தழுவினோமானால் நமக்கு விமோசனம் பிறக்கும்’ என்று அவர்கள் சொல்லும் போது தன் மகனுடைய மடியில் அரசாங்க உத்தியோகம் வந்து விழுந்து விட்டதாய்க் கனவு கண்டான். ஊர்வலம், மேளதாளம், பேச்சு, ஒலிபெருக்கி, புத்த விகாரை ஒன்றுக்கு அஸ்திவாரக்கல் எல்லாவற்றுக்கும் அவன் கையால் இன்னொரு ஐந்நூறு ரூபா ரொக்கமாகவா இருந்தது? மனைவிக்கு செய்து போட்டு அழகு பார்த்த நகைகள் அடைமா னமாயின. குடும்பம் முழுவதையுமே அழைத்துச் சென்று, பேசப்பட்டதைப் புரியாமல் கைதட்டி, “சாது சாது” என்று கூக்குரலிட்டு… வீட்டுக்கு வந்தால் “தட்டு முட்டு சாமான் எல்லாம் “அரோகரா”. அங்கே யார் வந்திருக்க முடியும்? தலைவரோ “அவங்கள் ஆரோ கையாட்களை வைத்துச் செய்திருக்கிறாங்கள் என்கிறார். மனைவியோ “கையாளெண்டா ஆர்? எல்லாம் எங்கடை ஆக்கள்தானே என்கிறாள். எவ்வளவு நாளாய் பொறுத்திருந்து பார்த்தாள்! 

பொங்கல் வந்தது. புத்தகோயில் கட்டி முடியவில்லை. ஒரு கோயிலுக்கும் அவன் போனதில்லை. மனைவி “பொங்க லுக்குச் சாமான் வேண்டியாருங்கோவன்” என்று நச்சரிக்கிறாள். “புத்த சமயி பொங்கல் கொண்டாடலாமா? தலைவர் ஒன்றும் சொல்லவில்லையே” என்றா தயங்குகிறான்? அவங்கள் எங்கடைவாலை உருவிவிட்டதெல்லோ. உங்களிட்டை பசையும் இப்ப இல்லை. இனி ஏன் வாறாங்கள்? அவங்கள் அண்டைக்கு சமயம் மாறினவங்களே?… இருந்தா ஊரோடை ஒத்துப் போக வேணும் பிள்ளையளுக்காகவாவது பொங்கத்தான் வேணும். நீங்க பெரிய கடைக்குப் போட்டு வாருங்கோ” என்று தொல்லை கொடுக்கிறாள். அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தலைவர் சமயம் மாறவில்லை. முந்தி கண்டித்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு புதிதாகப் பெற்ற சிநேகிதத்தின் மூலம் அந்த “சமூகத்துரோகி”களுக்கு அரசாங்கம் சலுகைகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அந்தத் தலைவர் கல்வீடு கட்டினது கூடப்போன மாதம்தான். ஒரு தொழிலும் செய்யாமல் எப்படி வீடு கட்டி முடித்தார்? 

“அவன் கிடந்தானை…” என்று பஸ்ஸில் புறப்பட்டு பெரிய கடைக்குப் போய் மஞ்சளிலை, இஞ்சியிலை, சீன வெடி யீறாக வாங்கி மூட்டை கட்டிவைத்துக்கொண்டு திரும்பும் போது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வாசலில் அந்தப் பெயர்களை யாரோ உச்சரித்தார்கள். 

தன்னுடைய பிள்ளைகளுக்கு எந்தப் பெயர்களைச் சூட்டமாட்டாரோ, அந்தப் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக் குச் சூட்டி மகிழ்ந்த சமூகம் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட்ட தால் வெளியே நின்று புலம்புகிறார். அவன் கந்தனாயிருந்து கந்தசாமியாகி விட்டவன் அந்தக் கோயிலுக்குப் போனதில்லை. எந்த தேநீர்க் கடையில் பிரவேச உரிமை பெற்றானோ அங்கே தேநீர் குடிக்க அவன்கையில் பணமில்லை. ஒருவரிடம் போதிய திருந்தது. அவர்தான் அவனை ஓட்டாண்டியாக்கிய தலைவர்: இப்போது அரசாங்கத்துக்கு நந்திகேசுவரர், உரிமை வெறும் அர்த்தமற்ற சொல் மேடையலங்கார வார்த்தை, விமோசனம், கனவு முன்பு அவனிருந்த நிலை எவ்வளவோ தேவலை என்று அவனுக்குப்பட்டது. 

– 1964, சுதந்திரன்.

– தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 2004, யாழ் இலக்கியவட்டம், யாழ்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *