புதுவருடத்தை முன்னிட்டு நான் பட்டபாடு
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 119
(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது மனையாள் பெரிய சீதன ஆதனங்களோடு என்னைக் கலியாணஞ்செய்து கொண்டபடியால் அவளின் சொல்லு எனக்குத் தேவவாக்காகும். அவள் காலால் இட்டதைத் தலையாற் செய்வதே எனது பெருங்கடமை.
முதல்நாள்
புதுவருடத்திற்கு முதல்நாள் மனைவி என்னைப் பார்த்து “நமது . வீட்டில் பொங்குவதற்குப் புதுப்பானை வேண்டாமா? ஏன் சும்மா இருக்கின்றீர்கள், கடைக்குப் போய் ஒரு பானை வாங்கிவந்தாலென்ன” என்று புறுபுறுத்தாள். “அப்பா! எனக்கு இன்று வசதியீனமாயிருக்கிறது. வேலைக்காரச் சங்கரனை அனுப்பினாலென்ன?” என்றேன். “உங்களுக்கு எப்போதும் வசதியீனந்தான்! ஆர் போனாலுமென்ன? நல்ல பானையும் அகப்பையும் வந்தாற் சரிதான்” என்று கருணை செய்தாள் மனையாள். அப்படியே சங்கரனைக் கூப்பிட்டு ஒரு பானையும் அகப்பையும் மலிவாக வாங்கிவா என்று கடைக்கு அனுப்பி னோம். அவன் போய் ஒரு பானை வாங்கிக் கொண்டு படலையில் வரும்போது “அம்மா! அம்மா! ரொம்ப மலிவாக வாங்கிவிட்டேன். மற்றவர்கள் 30 சதம் கொடுத்தாங்கள், நான் 20 சதத்துக்கு வாங்கினேனுங்க” என்று பானையைக் காட்டினான்.
“ஏனடா இதை வாங்கினாய்? ஓட்டைப் பானையும் புதுவருடப் பொங்கலுக்கு நல்லதோ” என்று எனது மனைவி சீறினாள்.
எனக்கு நெஞ்சு திடுக்கிட்டுப் போனது. என்னைத்தான் பின்பு அனுப்பப் போகிறாள் என்று ஏங்கினேன். கடவுள் புண்ணியத்தால் அப்படி நடக்கவில்லை. ஓட்டைப் பானையை மாற்றி வரும்படி சங்கரனையே அவள் அனுப்பினாள். அவன் போய் ஓட்டை இல்லாத வேறொரு பானையை வாங்கிவந்து “அம்மா! இது 15 சதம் – மிச்சம் மலிவு” என்று சந்தோசத்துடன் கொடுத்தான். மனைவி அதை வாங்கிப் புரட்டிப் புரட்டிச் சுண்டிப் பார்த்துவிட்டு, “சீ ! இது வெடித்த பானை ஆயிற்றே. இந்தப் பேயனாலே இவ்வளவு தொந்தரவு ஆயிற்று.”
“நீங்கள் என்ன! பிடித்துவைத்த பிள்ளையார் போல அசையாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் கடைக்குப் போனா லென்ன கால் முறிந்து போகுமா? சும்மா கதிரையில் இருந்து கொண்டு “பேப்பர்” வாசிக்கிறதும் “சிகரட்” டுக் குடிக்கிறதுந் தானே வேலை. அத்தோடு அகப்பையுமில்லை” என்று கடுகடுத்துப் பேசினாள்.
எனக்குத் தலை விறைக்கத் தொடங்கிவிட்டது. சங்கரனைப் பார்த்துப் பல்லை நெறுமிவிட்டு, (என் மனைவியைப் பார்த்து நெறுமி இருந்தால் ஒரே அட்டகாசமாய்த்தான் இருக்கும்) அவனையுங் கூட்டிக் கொண்டு போய் ஓட்டை – வெடிப்பு – ஒடிவு இல்லாத பானையும் அகப்பையும் வாங்கிவந்து என் மனைவியைப் பார்த்து, “மணி (முழுப்பெயர் சயமணியம்மை) இந்தப் பானையைப் பார்” என்று இதமாய்க்கூறி இரண்டு கரங்களாலும் கொடுத்தேன், அவள் சட்டென்று வாங்கியபின் பானை நல்லது என்று சொல்லிவிட்டு அகப்பையை எடுத்துப் பானைக்குள் வைத்தாள். அகப்பை உள்ளேபோக மறுத்து விட்டது. உடனே அவள் காளிபோல் சீறி “இதுவென்ன இழவு! உங்களுக்கும் அறிவில்லையோ! பெரிய அகப்பையை ஏன் வாங்கி வந்தீர்கள். இது பானைக்குட் போகுமா? உங்களோடு இப்படித் தலை உடைக்கத்தானே பிரமன் எழுதிவிட்டான்” என்று சினந்து பானையையும் அகப்பையையும் எடுத்து எறிந்தாள். பானை உடைந்துவிட்டது. நான் திகைத்து “கலியாணஞ் செய்வது தகாது என்றெண்ணிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு அவள் பேசுவது என் காதிற் கேளாதபடி அகப்பையுடன் பிடரியைத் தடவித் தடவிச் சொறிந்தபடியே கடைக்குப்போய் அகப்பைக்களவான பானை வாங்கிவந்து ஒன்றும் பேசாமலே முற்றத்தில் வைத்துவிட்டேன்.
பின்பு மனையாள் ஏதோ கடுகடுத்த முகக்குறியுடன் எனக்குச் சொல்ல உன்ன முந்தியே நான் – “தெரியும் ! பொங்கல் நேரத்திற் காகங்களைத் துரத்தச் சீனவெடி இல்லை. கோவியாதே! இதோ நான் வாங்கிவருகின்றேன்” என்று கடைக்கு ஓடினேன்.
என்னை முன்பின் அறியாத சோனகன், திறமானதென்று கூறி ஒரு கட்டுச் சீனவெடியை விலைக்குத் தந்தான். வீட்டிற்குக் கொண்டுபோய் அவளிடங் கொடுத்தேன். அவள் மகிழ்ந்து வாங்கி “இது நல்ல வெடியோ? என்றாள். “மிச்சந்திறமான” தென்றேன் நான். அவள் – “மாதிரி பார்ப்பதற்காக, ஒன்றைக் கொளுத்தி யெறிந்தாள். அது “புஸ்” என்று புகைத்தது. அவள் வெறுப்புடன் பின்னும், இரண்டைக் கொளுத்தினாள். அவையும் “புஸ்” என்றே புகைத்தன. நான் மனசுக்குள் கடவுளை நேர்ந்து கொண்டேன். அவள் கோப ஆவேசத்தினால் பல்லைக் கடித்துக்கொண்டு, அதையெடுத்து என்மேலெ றிந்துவிட்டாள். வேறெவரும் எங்களருகே இல்லாதபடியால் நான் அவளெறிந்ததைப் பொறுத்துக் கொண்டு, நானே யெடுத்துக் கட்டோடு கொளுத்தினேன். முழுவதும் “புஸ்” என்று சீறின. எனக்கு என்னசெய்வதெனத் தெரியவில்லை. மனைவி யின் முகத்தைப் பார்த்தேன்.
இதற்கிடையில் கிராமச் சங்கத்துக்கு அங்கத்தவராகத் தன்னைத் தெரியும்படி சொல்ல ஒருவர் “அலோ அனுசுயா” என்று படலையிற் கூப்பிட்டார். நானும் மனைவிக்குத் தப்பி னேன்! தப்பினேன் !! என்றெண்ணிக் கொண்டு, வெளியே அவரோடு போனேன்.
அடுத்தநாள்
அதிகாலையில் என் மனைவி திருக்கணித பஞ்சாங்கக்காரர் வெளியிட்ட துண்டுக் கடுதாசியொன்றை வைத்து வாசித்துக் கொண்டு “இன்று பொங்கலும் வேண்டாம்! பூசையும் வேண்டாம்!! நாளைக்குத்தானே (வியாழக்கிழமை) வருடப் பிறப்பு” என்றாள். இல்லை “உவர்கள் யார் சொன்னாலும் என்ன. வாக்கிய பஞ்சாங்கத்தில் புதன்கிழமைதானே வருடங் குறித்திருக்கிறது. இன்று பொங்கலை நடத்துவோம்” என்றேன்.
முடியாது இரண்டு பகுதிப் பஞ்சாங்கங்களில் ஒன்றுதானே யுண்மையாகும். சைவராகிய நாங்கள் எந்தக் கருமத்திற்கும் நல்முகூர்த்தம் பார்க்கிறோம். இப்படித் தேதி மாறுபட்டால்; முகூர்த்தம் முதலியன மாறுபட்டுக் குழப்பம் உண்டாகும். இப்படியே வருடம் பிறக்கும் நாளிலும்; கந்தசட்டி விரத காலத்திலும்; நவராத்திரி நாள்களிலும்; பிறவற்றிலும் பஞ்சாங்கங்கள் முரண்பட்டுச் செய்விக்கின்ற விவாதத்தைக் கண்ட அன்னிய சமயத்தவர்கள் எமது சமயத்தைப் பரிகசிக் கிறார்கள் அல்லவா? இது எவ்வளவு வெட்கம். ஆனபடியால் எமது சமயத்தைவிட்டு வேறு சமயத்தையே நிச்சயஞ் சேர்வேன் என்றாள். “கண்ணே! இதற்கேன் பிடிவாதம். ஒரு மாதிரியாக நாங்களும் ஒரு நாளிலே பொங்கலை நடத்துவோம்” என்றேன். “இல்லை ஏதோவொரு விசேடித்த பயன் கருதிச் செய்யப்படும் இப்பொங்கல் வழிபாட்டை உரிய நாளிலேதான் செய்யவேண்டும். அல்லாத நாளிற் செய்தாலது வீண் செலவாகும். ஆனபடியால் இவற்றுள் எந்த நாள் (புதன் அல்லது வியாழன்) சரியென யோசிக்க வேண்டும்” என்றாள். “இதைப் பற்றி யாழ்ப்பாண நாட்டில் ஒரு யோசனையும் நடவாது. முன் செய்தபடியே வாக்கிய பஞ்சாங்கத்தைப் பின்பற்றிச் செய்வோம்” என்றேன்.
“முடியாது. இரண்டிலொன்று சரியென முடிவு செய்யும் வரையும் இங்கு வருடக் கொண்டாட்டம் எதுவும் நடத்தலாகாது. அதுவரைக்கும் பொங்கல் முதலியன தவணையிடப்பட்டிருக் கின்றது” என்று கட்டளையிட்டாள்.
“அடி அம்மா! அப்படியானால் கொண்டாட்டத்துக்கென வாங்கிய வேட்டி சால்வையை என்ன செய்ய” என்றேன். “அவற்றையும் பெட்டியில் வைத்துப் பூட்ட வேண்டியதுதான்” என்றாள். ஆ! பஞ்சாங்கங்களே! உங்களால் வேட்டி சால்வை கூடக் கட்ட முடிய வில்லையே! என்று மூச்சுவிட்டேன்.
சைவாபிமானிகளே! நீங்கள் இந்தப் பஞ்சாங்க முரணுக்கு ஏதும் பரிகாரம் செய்து எங்களை வருடங் கொண்டாட விடுவீர்களா? ஐயோ! சங்கரன் ஓட்டைப் பானை வாங்கியதே கெட்ட சகுனமாய் முடிந்தது. பஞ்சாங்கங்களாலும் சீதன ஆதனகாரியைக் கல்யாணம் செய்தமையாலும் இவ்விதங் கலங்குகின்றேன் கடவுளே.
– ஈழகேசரி, 17.04.1938.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
வேண்டுகோள்
மா.வீ.தியாகராசன்
September 27, 2026
பாட்டி சொன்ன கதை
தெளிவத்தை ஜோசப்
September 27, 2026
