கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 76 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

சார் வேணுமின்னா இன்னைக்கு சூட்டிங்கை கேன்சல் பண்ணிடலாமா? இரசிகர்கள் ரொம்பவும் அதிகமாயிட்டாங்க,

நோ..நோ..நீங்க சூட்டிங்கை கண்டினியூ பண்ணுங்க, எனக்கு இப்ப என்ன சீன்?

நீங்க நேரா நடந்து வர்றீங்க, கேமிரா உங்களை பார்த்த மாதிரியே பின்னால “மூவ்” ஆயிட்டிருக்கும். நீ நான் கை காட்டிற இடத்துல வந்து ‘சட்டுனு’ வலது புறம் திரும்பி உங்க முடியை கோதி விடறீங்க.

ஓ.கே.நான் ரெடி,

‘ஸ்டார்ட்’ காமிரா.. ‘ஆக்சன்’ டைரக்டர் தயாராய் நிற்க, இன்று தமிழ் பட உலகின் சூப்பர் ஸ்டாரான “கதிர்” காமிராவை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான்.

‘டைரக்டர்’ சொல்லியிருந்தபடி நடந்து வந்து அவர் கை காட்டிய இடத்தில் நின்று வலது புறம் திரும்பி முடியை கோதி விட்டபடி நின்றான்.

ஓ.கே..குட்..கட்..

சார், நல்லா வந்திருக்கு சார். இந்த “சீனே” உங்களை “இண்டிரட்யூஸ்” பண்ணும்போது வரும்.

அதை ஆமோதிக்கும்படியாகத்தான் இருந்தது அங்கிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களின் கைதட்டல்.

கிட்டத்தட்ட இரவு பனிரெண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சூட்டிங் முடிய, சூட்டிங் முடிந்து கதிரை அழைத்து செல்ல கார் டிரைவர் காத்திருந்தான்.

காரில் ஏறப்போன கதிர் சட்டென திரும்பி மகேந்திரா இது உன் ஊருதானே ?.

ஆமாம் சார், இங்கிருந்து மூணு கிலோ மீட்டர் போனா எங்க கிராமம் “நாச்சிபட்டி” வந்திடும் சார். இப்ப “சம்சாரம் குழந்தைக” எல்லாம் எங்க ஊர் திருவிழாவுக்கு இங்கதான் வந்திருக்காங்க.

அப்ப ஒண்ணு செய்யலாம், நான் வண்டியை எடுத்துக்கறேன், உன்னைய உங்க ஊர்ல கொண்டு போய் இறக்கி விட்டுட்டு நான் அப்படியே வீட்டுக்கு போயிடறேன்.

ஐயோ வேணாம், சார் நம்ம வீட்டுக்கு போறதுக்கு நாலு மணி நேரம் ஆகும் சார், அதுல வேற இது காட்டுப்பகுதி சார், உங்களை தனியா விட்டுட்டு நான் போக முடியாது சார்.

கதிர் சிரித்தான், இங்க பாரு நான் முதலாளியா? நீ முதலாளியா சொல்லு.

சார்…நீங்கதான் சார்

அப்ப கம்முனு என் பக்கத்துல உட்காரு, உன்னை பத்திரமா வீட்டுல விட்டுட்டு நான் போயிக்குவேன். எனக்கு ஒண்ணும் ஆகாது. நீ வீட்டுக்கு போயி இரண்டு நாள் இருந்துட்டு அப்புறமா வீடு வந்து சேரு. புரியுதா?

வேறு வழியின்றி டிரைவர் தலையசைத்தான்.

சார் உங்களை தனியா அனுப்பறது எனக்கு சங்கடமா இருக்கு சார்.

நான் சொல்றதை கேளு, இராத்திரி ரொம்ப நேரமாச்சி, நீ கதவை தட்டி வீட்டுக்குள்ள போ.

சார் இவ்வளவு தூரம் வந்துட்டு உங்களை வீட்டுக்குள்ள கூட கூப்பிடாம..

நீ கவலைப்படாம போ.. கார் வேகமாக கிளம்பியது.

‘நல்ல இருள்’, இரு பக்கமும் புதர் செடிகளாய் இருக்க, காரின் முன் பக்க வெளிச்சம் மட்டும் பாதையை காட்ட வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் கதிர்.

சார், எனக்கொரு வாய்ப்பு கொடுத்து பாருங்க சார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் கதிர் டைரக்டரிடம் கெஞ்சி கொண்டிருந்தான்..

சிரித்தார், உன்னைய அசிட்டெண்டா வச்சிருக்கேன், அப்படியே சத்தமில்லாம இரு. எனக்கு இந்த சீன்ல உன்னைய போடணும்னு தோணாம இல்லை, ஆனா அங்க பாரு புரொடியூசரோட ‘ரெகமண்ட்ல’ ஒருத்தர் கேட்டுட்டு நிக்கறாரு. கண்டிப்பா உனக்கு சான்ஸ் தர்றேன், அதுவரைக்கும் பேசாம இரு.

எத்தனை அவமானங்கள், வாய்ப்பு சாதாரணமாக கிட்டிவிடவில்லை. அப்பப்பா

‘இன்று” நின்றால் ஆரவாரம், நடந்தால் ஆரவாரம், இரசிகர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், தினமும் வீட்டு வாசலில் ஆயிரத்துக்கும் மேல் இரசிகர்கள் கூட்டம் என் முகம் பார்க்க..

அடுத்த முதல்வராக கூட வாய்ப்பு என்று பத்திரிக்கைகளும், செய்தி சேனல்களும்..வரிந்து கட்டி எழுதி தள்ளிக்கொண்டிருக்கின்றன.

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்..எத்தனை எத்தனை அழைப்புக்கள்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானால் கோடிக்கணக்கில் வியாபாரம். தனக்காக உயிரைக்கூட தர தயாராய் இருக்கும் இரசிகர்கள், இரசிகைகள்..

இப்பொழுது இந்த இரவில் தனியாக தான் மட்டும் காரில் செல்வது தெரிந்தால், அதுமில்லை, நான் இந்த இடத்தில் நின்று இறங்கினால் கூட. ஆயிரக்கணக்கில் இரசிகர்கள் கூடி கொள்வார்களே !

எந்நேரமும் ஆகட்டுமே, செய்தி கேள்விப்பட்ட நொடியில்..இரசிகர்கள் சுற்றிக் கொள்வார்கள்

காரை ஓட்டியபடியே சிந்தனைகள் சூழ காரின் விரைவு பட்டையை அழுத்தியபடி பறந்து கொண்டிருந்தான் கதிர்.

தூரத்தில் யார்? யாரோ நிற்பது போல தெரிகிறதே, காரை நிறுத்த சொல்லி கை காட்டுகிறார்களே.

நிறுத்தலாமா? வேகத்தை குறைத்தாலும் நின்று கொண்டிருந்தவரை தாண்டி விட்டான்.

ஆள் கிராமத்தானாக தெரிந்தார், கையில் சிம்னி விளக்கு ஒன்றை வைத்திருந்தார்.

அவரை தாண்டி சிறிது தூரம் போன பின்னால் நிறுத்தியவன் தலையை எட்டி பின்னால் பார்த்தான்.

அவர் கார் தாண்டி சென்றதும் ஏமாற்றமடைந்திருப்பார் போலிருக்கிறது, மீண்டும் ஏதாவது வருகிறதா என்று வரும் பாதையை நோக்கியபடி இருந்தார்.

இவன் கூப்பிட்டான். ஐயா…

அந்த இருள் அமைதியில் அவன் குரல் தெளிவாக கேட்க சட்டென்று திரும்பிய அந்த ஆள் வேகமாக காரை நோக்கி ஓடி வந்தார்.

தம்பி..தம்பி..என் மகளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்கு, கொஞ்சம் உதவி பண்ணியின்னா பக்கத்து டவுனு ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்த்துடுவேன்.

எங்கிருக்காங்க, உங்க மக?

இது வழியா கொஞ்ச தூரம் போகணும்..

போகலாமா ? அதுவும் ஊர் பேர் தெரியாத ஊரில் நடு இரவுக்கு மேல்

சரி போகலாம், பார்ப்போம், முடிவு செய்தவன் ஏறுங்க காருல,

அவர் எப்படி ஏறுவது என்று தடுமாற, இவன் முன் புற கதவை திறந்து ஏற சொன்னான்.

சிம்னி விளக்கை வெளியில் காண்பித்தபடி அவர் வழி சொல்ல இவன் காரின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த கரடு முரடான பாதைக்குள் வண்டியை செலுத்தினான்.

ஓலை குடிசைக்கு முன் கார் நிற்க, கிராமத்து ஆள், தம்பி நீயும் கொஞ்சம் ஒத்தாசை பண்ணேன், அவர் கேட்டது இவனை கொஞ்சம் அசெளகர்யப்படுத்தியது.

ஐந்தாறு வருடங்களாக இவனிடம் யாரும் வேலை சொல்லியதே இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து வேலை செய்யத்தான் ஆட்கள் இருந்தார்கள்.

குடிசைக்குள் இருவரும் போனார்கள். அந்த பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.

அயோ..அம்மா..அவளின் அரற்றல் குரல் இவன் மனதுக்குள் ஒரு பீதியை தர, அடுத்து என்ன செய்வது என்று விழித்தான்.

தம்பி மச மசன்னு நிக்காம ஒரு கை பிடி, இந்தா காலு பக்கம் பிடிச்சுக்க, அவர் தலை மாட்டில் பிடிக்க இவன் தடுமாறினான்.

என்ன தம்பி முடியலையா, பார்த்து பார்த்து..

அவர் சொல்லவும் இவனுக்குள் சின்ன ரோசம் வர கொஞ்சம் நகருங்க, அந்த பெண்ணை அப்படியே இரு கைகளிலும் தாங்கி பிடித்தபடி வெளியே வந்தான்.

கர்ப்பிணியாய் இருந்ததால் கொஞ்சம் எடை இருந்தது போல் தெரிந்தாலும் அந்த பெண் பூஞ்சையாகத்தான் இருந்தாள்.

அவனுக்கு திரைப்படங்களில் எத்தனை இளம் கதாநாயகிகளை இப்படி துக்கி பிடித்து நடித்திருக்கிறோம் என்பது அப்போது ஞாபகம் வந்தது. அது நடிப்பு.

ஆனால் இது எந்த வித “டைரக்சனும்” தராமல் தான் முடிவெடுத்து இவனே செய்கிற வேலை.

சிரமத்துடன் அந்த பெண்ணையும் தாங்கி பிடித்து அந்த கிராமத்தானிடம் கார் கதவை எப்படி திறப்பது என்று சொல்லி திறக்க வைத்து அவளை அதனுள் படுக்க வைத்தான்.

கிட்டத்தட்ட ஊர் பாதை வழியாகவே ஐந்தாறு கிலோ மீட்டர் சென்று அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் காரை நிறுத்தினான்.

அது அரசு மருத்துவமனை என்பது பார்த்தவுடன் தெரிந்தது. ஒரே ஒரு நர்ஸ் இருந்தாள். அவளும் தூக்க கலக்கத்தில் இருந்தாள்.

என்னயா? பிரசவ கேசா? கிராமத்தானை பார்த்து கேட்டவள் இவனின் உடைகளை பார்த்து கொஞ்சம் மரியாதை கலந்து அந்த ‘ஸ்டெச்சரை’ கொண்டு வாங்க, சொல்லியபடி கார் அருகில் சென்றாள்.

பழைய ‘ஸ்டெச்சர்’, அதை இவனே பிடித்து தள்ளியபடி கார் அருகில் கொண்டு சென்றான்.

காரில் இருந்து அந்த பெண்ணை மூவரும் சிரமப்பட்டே ‘ஸ்டெச்சருக்கு’ மாற்றினர். மீண்டும் அதை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று நிறுத்திவிட்டு கார் அருகில் வந்தான்.

நர்ஸ் அந்த பெண்ணிடம் சென்று விட கிராமத்து ஆள் இவனுடன் கார் அருகில் வந்தவர், கார் கதவை மூடுவதற்கு உதவிகள் செய்து விட்டு இவன் காரை எடுக்கும்போது சட்டென்று தன் கையில் வைத்திருந்து ஒரு நோட்டை இவன் கையில் அழுத்தி, தம்பி செலவுக்கு வச்சிக்க, ரொம்ப நன்றி..

அவர் கையில் என்ன திணித்தார் என்பது கூட இவனுக்கு உணர்வில்லை, காரை எடுத்தவன் மீண்டும் முக்கிய பாதைக்கு வந்த பின்னால் காரை நிறுத்தி உள் விளக்கை போட்டு என்னவென்று பார்த்தான்.

கசங்கிய பழைய ஐம்பது ரூபாய் தாளென்று,வேர்வையின் வாசனையுடன்.

இவன் யார் என்பது கூட தெரிந்திருக்கவில்லை, “உதவிக்கு வந்திருக்கிறான்” முடிந்ததை கொடுக்கலாம் என்று கொடுத்திருக்கிறார்

வீடு வந்து சேர்ந்த பொழுது நன்கு விடிந்திருந்தது.

காரை விட்டிறங்கிய பொழுது இவன் மனநிலை “பழைய கதிராய்” இருந்தது.

இந்த பனிரெண்டு வருட சினிமா புகழ் நிரந்தரமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருந்தது அவன் மனம்.

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *