பானுவும் மதியும்
கதையாசிரியர்: சந்திரா மனோகரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 3,323
மதி, அகிலாவைத் திருமணம் செய்துகொண்டபின், கொல்கத்தா சென்றுவரவேண்டுமென்கின்ற அவனுடைய நீண்டநாள் கனவு நிறைவேறியது, ஊர் பங்காளி பானு அங்கு இருப்பதால் பிரச்னை இல்லை. அவனும் தொடர்ந்து அழைத்துக்கொண்டுதான் இருக்கிறான். எப்படியும் இருபது நாட்களாவது தங்கியிருந்து, இந்தியாவின் மூன்றாவது பெரு நகரத்தை அலசியெடுத்துவிட வேண்டும்… தாகூர் வீடு, மதர் தெரசா வீடு, விக்டோரியா மெமோரியல், இந்தியன் ம்யூஸியம், நேஷனல் லைப்ரரி,…. அப்புறம், சுந்தர்பன் நேஷனல் பார்க்.. ஆஹா! கொல்கட்டா சிட்டி ஆப் ஜாய் ஆயிற்றே!
ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் கனவை இயற்கை கலைத்து விட்டது!
மகிழ்ச்சி, பசி, தாகம் யாவும்இழந்த நிலையில் மதியும் அகிலாவும் கொல்கத்தா பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பி வந்துவிட்டார்கள். சென்ட்ரல் வந்திறங்கியதும் பரபரவென்று ஒரு கால் டாக்சியைப் பிடித்து, அடையாறு விவேகானந்தர் வீதியில் நான்காவது குறுக்குச் சந்திலிருக்கும் பி டைப் ஆறாம் நம்பர் வீட்டு முன்பு நிற்க –
விடிகாலை ஆறு மணிதான் ஆகியிருந்தது – பக்கத்துவீட்டு உமா, இரும்பு கேட் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். நீண்ட பெருமூச்செறிந்தவாறு இருவரும் அயர்ச்சியுடன் இறங்கினார்கள். இவர்களைப் பார்த்ததும் அவளுக்கு ஆச்சரியம். சற்றும் எதிர்பார்க்கவில்லை ‘ஆன்ட்டி\! என்னாச்சு…. திரும்பி வர்றதுக்குப் பத்து நாளாகும்னு சொன்னீங்க..’ திடுக்கிட்டவளாய் கேட்டாள்.
‘என்ன நீ நியூஸ் பார்க்கலியா…. ஒரிசாவெல்லாம் மழை… வெள்ளம்… விஜயவாடாவுக்கு மேலே எந்த டிரெயினும் போறதில்லே..அதனாலே ப்ரோக்ராமே கேன்சல் பண்ணிட்டோம்.’ என்றான் மதி அநாயாசமாக. அகிலா கணவன் முகத்தை இமையாது பார்த்தாள்.
‘அப்படியா.. இருங்க சாவியை எடுத்துட்டு வர்றேன்’ பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியவள், கொத்துச் சாவியையும் ஒரு பாக்கெட் பாலையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
‘சூடா காஃபி போட்டுக் குடிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுங்க.. ஆன்ட்டி ரொம்ப டயர்டா இருங்காங்க போல… பத்துமணிக்கு டிபன் எடுத்துட்டு வரவா?’ என்றாள், மதி கையிலிருந்த சூட்கேஸை வாங்கி பால்கனியில் வைத்தவாறே.
‘நோ உமா! அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்..’ என்றவாறு அகிலாவைக் கைத்தாங்கலாக அழைத்தபடி உள்ளே நுழைந்தான்.
நேற்று நள்ளிரவில்தான் கொல்கத்தா செல்லும் ஹௌரா மெயிலில் பயணத்தைத் துவக்கினார்கள் மதியும் அகிலாவும். ஊர் பங்காளி பானு வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகத் திட்டம்.. நெடிய பயணம். இரவு உணவுக்குப் பின்னர் உறக்கம். வெளியே மழை சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது.
தடக் .. தடக் .. தடக் .. தடக் என்ற பேரொலியுடன் ரயில் நெல்லூரைத் தாண்டிவிட்டிருந்தது.
விஜயவாடாவுக்கு இன்னும் நேரம் பிடிக்கும் போலிருந்தது.
வெளியே பரவும் வெளிர் நிறம். மழை இன்னும் ஓயவில்லை. விடியல் நேரத்தில் விஜயவாடாவில் ரயில் நின்றிருந்தது.
ஸ்டேஷனில் அலைமோதும் கூட்டம். உறக்கம் கலைந்து சோம்பல் முறித்தவாறு மதி எழுந்தான். அகிலா பாத்ரூமுக்குப் போனாள். ஆங்காங்கே காச் மூச்சென்று சத்தம். மதி கீழேயிறங்கி இட்லி, பொங்கல் வாங்கி வந்தான்.
இருவரும் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு காஃபி அருந்தினார்கள். அரை மணி நேரமாயிற்று, முக்கால் மணியும் கடந்தது. ரயில் புறப்படுகிற மாதிரி தெரியவில்லை.
மதி கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். ‘ஆளாளுக்குப் போயி விசாரிச்சிட்டு வர்றாங்க… நீங்களும் போய் விபரம் கேட்டுட்டு வாங்க’ என்றாள் அகிலா கொட்டாவி விட்டவாறு.
மதி போய்விட்டுத் திரும்பிவந்தான். ‘ட்ரெயின் விஜயவாடாவோட சரியாம்… அப்படிப்போனாலும் ஸ்ரீகாகுளம் வரைக்கும்தான்.’
‘ஏன்…. என்னாச்சுங்க?’
‘புவனேஷ்வர் – கரக்பூர் ட்ராக்கிலே வெள்ளம் புகுந்து… நிலைமை ரொம்ப மோசமிங்கறாங்க.. ஆல் ட்ரெய்ன்ஸ் கோயிங் டுவார்ட்ஸ் நார்த் ஆர் கேன்சல்டு’
‘இப்ப என்னங்க பண்றது?’
‘வி வில் வெயிட்.. அநேகமா, இதே ட்ரைன்லே சென்னைக்குத் திரும்பிற வேண்டியதுதான்னு நெனைக்கிறேன்’
சிறிது நேரம் மௌனம். அவர்கள் சீட்டின் எதிர்ப்புறம், பக்கத்திலிருந்தவர்கள் யாருமில்லை. இருவரும் கால்களை நீட்டி நெட்டி முறித்தவாறு ஹாய்யாக அமர்ந்திருந்தார்கள்.
‘ஏங்க… பேக்கிலே இடதுபுற ஓரத்திலே மருந்து இருக்கும், எடுங்க..சாப்பிட்டவுடனே டேப்லெட் போடணும்’
சீட்டுக்கடியிலே இருந்த பேக்கை மதி வெளியே இழுத்தான். அடுத்தநொடி சட்டென்று அதிர்ந்துபோனான்.
‘அகிலா… இங்கே பாரு.. அடிலே எவனோ பிளேடு போட்டிருக்கான்!..’
‘அய்யய்யோ… நல்லாப் பாருங்க… நகையெல்லாம் ஒரு பைலே போட்டு ஓரமா வச்சேன்’ – அகிலா அலறினாள்.
மதி பையைத் தலைகீழாகக் கவிழ்த்தான். நகைப்பையைக் காணோம். அவளுக்கு நெஞ்சு படபடத்தது. சிறு பூச்சியைக்கண்டு மருளும் மழலைபோல் காணப்பட்டாள்.
‘பத்து பவுனுங்க… உங்க பானுகிட்டே என்னங்க சொல்றது?’ அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
‘இங்கயே இரு.. போலீசுக்கு சொல்லிட்டு வர்றேன்..’
‘வேண்டாங்க.. எனக்கு பயமா இருக்கு.. அங்கெல்லாம் போய்ப் பிரயோஜனமில்லீங்க. இது தமிழ்நாடு இல்லே’
‘அப்புறம்.. இப்படியே விட்ரலாமிங்கறியா’
‘அய்யோ… எனக்கு ஒண்ணும் புரிலீங்க’ – அவன் பிடரிமீது சரிந்தாள்.
அப்பொழுது – ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்.
‘அகிலா இறங்கு… இதே ட்ரெயின் ஈவினிங் ஆறு மணிக்கு சென்னைக்குப் போகுதாம்.. டிடிஆர் கிட்டேச் சொல்லி வேற சீட் வாங்கிக்கலாம்..’
‘ஏங்க … ஒரு யோசனை… நடந்ததை விபரமா அவருகிட்ட சொல்லிப்பாருங்க’
‘நோ யூஸ்… இப்ப வேற டிடிஆர் வந்திருப்பார்’
வேறு இருக்கை கிடைத்தது. அவ்வளவு கூட்டமில்லை. கனத்த இதயத்துடன் இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள்.
சென்னைக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. அகிலாவுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சதா அதே நினைப்பு.
‘அகிலா ஆன்ட்டி’ ஏன் ரொம்ப டல்லா இருக்கறீங்க…. உடம்புக்கு என்ன? – உமா அடிக்கடி தொந்தரவு பண்ணிக்கொண்டேயிருப்பாள். அவளும் எதையெதையோ சொல்லி சமாளித்து வந்தாள்.
ஒருநாள் காலையில் – காலிங் பெல் அடித்தது. வெளியே பக்கத்து வீட்டுப்பெண்கள் சிலர், உமா உட்பட தட்டில் ஸ்வீட், பூ, பழங்கள் ஆகியவைகளுடன் நின்றுகொண்டிருக்க…. ‘கங்கிராட்ஸ் அகிலா… முதல்லே மகனா, மகளா எது பிடிக்கும்!’
மதியும் அகிலாவும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.
‘எல்லாம் இந்த உமா வேலைதான்’ என்பதை இருவரும் புரிந்துகொண்டு அசடுவழியச் சிரித்து வைத்தார்கள்.
இயல்பாக வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது.
ஒருமாதம் ஓடிப்போனதே தெரியவில்லை. என்னதான் இருந்தாலும் காணாமல்போன நகையைப்பற்றிய எண்ணம் இருவரையும் உறங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது.
‘பானு கிட்டேப் பேசினீங்களா.. ?’
‘இம்… அவன் பிசினஸ் விஷயமா மலேசியா போயிட்டானாம்’
‘நடந்ததைச் சொல்ல வேண்டாங்களா?..’
அவனைவிட அகிலாவுக்குத்தான் அதிக வருத்தமாயிருந்தது.
‘அவன் சவுண்ட் பார்ட்டி.. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டான்’
‘என்னஇருந்தாலும் அவர் கொடுத்த ஏழு பவுன் நகைதான் நம்ப மேரேஜுக்கு பெரிய உதவியா இருந்துச்சு.’
‘நீ சொல்றது சரிதான்… அவனாக் கேட்கலே …கல்கத்தா போறதுனாலே, எடுத்துட்டு போனோம்’
‘என்னங்க பேசறீங்க … ஒருத்தர்கிட்டே வாங்கின பொருளே திருப்பித்தர வேண்டாமா.’
‘பொறுமையா இரு… நடந்தது நடந்துபோச்சு.. இனி அது திரும்பி வரப்போறதில்லே.. வாழ்க்கையிலே அவன் என்னை அவ்வளவு சுலபமா மறக்கமாட்டான், அகிலா… காதல் கல்யாணம்.. பெரிய இடம் .. அப்படியொரு வசதி.. அந்தக் கல்யாணத்தை முன்னாலே நின்னு நடத்தி வச்சதே நான்தான் .. இது நடக்காதுன்னு ஒரு கட்டத்திலே அவனே முடிவுக்கு வந்துட்டான்… தனி ஒருவனா நான் போராடி அந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சேன்.. இன்னிக்கு செல்வச் செழிப்போட நல்லா இருக்கான்.. அதெல்லாம் பெரிய கதை, அகிலா.’
ஒரு மாதத்தில் – அகிலா கருவுற்றாள். இருவருக்கும் அளவில்லாத ஆனந்தம். ஒரு வெள்ளிக்கிழமை . கோயிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு, சந்நிதானத்தில் வீற்றிருந்த பிச்சைக்காரர்களுக்கு தானம் பண்ணினார்கள். அவர்கள் குடியிருந்த பிளாக் முழுவதற்கும் ஸ்வீட் வழங்கினார்கள்.
‘என்ன ஆன்ட்டி, ரொம்ப லேட்! என்றாள் உமா., கிண்டலும் கேலியுமாக.
‘கன்ஃபர்ம் பண்ணிட்டாப் பிரச்னையில்லேன்னு பார்த்தோம்’ – சமாளித்தாள் அகிலா அகிலா முகத்தில் ஒரு வசீகரம். தாயாகப்போகிறாள். ஆபீசுக்கு அடிக்கடி லீவுபோட்டுவிட்டு, அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டான்.
மதி பக்கத்தில், உமாவும் அவள் அம்மா மணிமேகலையும் நம்பிக்கையூட்டினார்கள்.
உமாவோட பாட்டிக்கு அகிலாவைக் கண்டால் அதிகப் பிரியம். தன் ஒரே மகளைப் போலவே அவளையும் நேசித்தாள்.
ஒரு நாள் காலை வேளையில், பக்கத்து வீட்டில் அலறல் சத்தம். ‘என்னங்க.. போய்ப் பாருங்க’ என்றாள் அகிலா வாஷ்பேஸினில் முகத்தை அலம்பியவாறே. தடாலென்று ஓடினான் மதி. பாத்ரூமில் வழுக்கிவிழுந்த பாட்டியை தூக்க முடியாமல் உமாவும் அவள் அம்மாவும் திணறிக்கொண்டிருந்தார்கள்.
மதி குண்டுக்கட்டாகத் தூக்கி படுக்கையில் கிடத்தினான். தனசுந்தரி பாட்டி வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த மகளுக்கும் பேத்திக்கும் கையும் காலும் ஓடவில்லை.
ஆம்பளை இல்லாத வீடு. உமாவின் அப்பா மறைந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அவள் அம்மா சத்துணவு டீச்சர். உமா காலேஜ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு ஃபார்மசியில் சொற்ப சம்பளத்துக்கு இருக்கிறாள்.
நேரத்தை வீணடிக்காமல் மதி துரிதமாகச் செயல்பட்டான். ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நின்றது. தாயும் மகளும் துடித்துப் போனார்கள்..
‘அம்மா… கவலைப்படாதீங்க.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க கூட வாங்க.. உமா… நீ அகிலாவைப் பார்த்துக்க..’
ஆம்புலன்ஸ் பிரபல துரை ஆர்த்தோ சென்டர்க்கு விரைந்தது. சீஃப் டாக்டர் துரையரசன் எம்.எஸ்.ஆர்த்தோ நடத்திக்கொண்டிருக்கும், துரை ஆர்த்தோ சென்டர் வாசல் முன்பு ஆம்புலன்ஸ் நின்றது.
டாக்டர் துரையரசன் ஒரு கான்ஃபரென்ஸ் விஷயமாக டெல்லி போயிருப்பதாகச்சொன்னார்கள். தனசுந்தரி பாட்டியை ஐ.சி.யூ வில் சேர்த்தார்கள்..
உடனே சிகிச்சையைத் துவக்கினார்கள்.
‘பாட்டிக்கு இடுப்பிலே ஃபிராக்சர் ஆகியிருக்கு… நாளைக்கு சீஃப் டாக்டர் வரட்டும்… ஒண்ணும் அவசரமில்லே…. வலி மாத்திரை கொடுத்திருக்கு… பிபி, சுகர் எதுவும் இல்லாததுனாலெ அவங்க ஸ்ட்ராங்கா இருக்காங்க!’ என்றார் அசிஸ்டன்ட் டாக்டர்..
‘அப்புறம் மிஸ்டர் மதி!.. அட்வான்ஸ் ரூபாய் அறுபதாயிரம் கட்டறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. ஒண்ணும் அவசரமில்லே.. நாளைக்கு காலைலே கூடக் கட்டலாம்’
ஆஸ்பிடலிலிருந்து நேராக ஆஃபீஸ்க்குப் போனான். ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு லோன் அப்ளை பண்ணினான். ஆனால் அவ்வளவு கிடைக்காது என்று கை விரித்தார்கள்.
அதுவும் மூன்று நாட்கள் ஆகுமென்றார்கள். செய்வதறியாது தடுமாறினான். இழந்த ஆபரணங்களின் நினைப்பு மனதை வாட்டியது. கடவுள்மேல் பாரத்தை வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.
உமாவும் அகிலாவும் கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்கள்..
‘உமா..கவலைப்படாதே. ஆஃபிஸ்லே லோன் கேட்டிருக்கேன்.. எப்படியும் கெடைச்சிரும்’
‘அங்கிள்… போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்லே முப்பதாயிரம் தேறும்.. நான் வேலைசெய்யற ஃபார்மாசிஸ்ட் கடை ஓனர் நல்ல மனுஷன்… அவர்கிட்டே கடனா கேட்கறேன்..’
‘வேண்டாம்… தேவைப்பட்டால் பார்த்துக்கலாம்.. அம்மாகிட்ட எதுவும் சொல்லவேண்டாம்.. செலவைப்பத்திக் கவலைப்படாதே, உமா’
அவள் முகத்தில் ஒட்டியிருந்த இறுக்கம் சற்று குறைந்திருந்தது.
அன்று இரவு – ‘அகிலா! இப்ப நீ எதை நெனைச்சுக் கவலைப்படறேன்னு நல்லாத் தெரியும்..’
‘ஆமாங்க.. அந்த நகைமட்டும் இப்ப நம்ப கைலே இருந்துச்சுன்னா… இப்படிப் பணத்தைப் புரட்டறதுக்கு அல்லாட வேண்டியதில்ல பாருங்க’ – அவள் உள்மனத்திலிருந்த காயம் இன்னும் ஆறவில்லை.
‘அதை நெனைச்சு என்ன பிரயோஜனம்.. அது சிந்தின பால் மாதிரி… திரும்பவும் கலயம் ஏறவா போகுது.. அப்புறம் உமா கிட்ட சொல்லிரு.. அந்த மெடிக்கல் ஷாப் ஓனர்கிட்டே எதுவும் கேட்கவேண்டாம்னு சொல்லு.. பாவம்.. இவ சின்னப் பொண்ணு.. வேறமாதிரி ஆயிரும்’
சுமார் பதினோரு மணியிருக்கும். கொல்கத்தாவிலிருந்து பானு அலைபேசியில்அழைத்தான்.
‘என்னப்பா பங்காளி! மேரேஜ்க்கு வருவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. தெரியும்..மழைலே ட்ரெயின் எல்லாம் கேன்ஸல்ன்னு கேள்விப்பட்டேன்… மலேசியாவிலிருந்து வந்த உடனே உங்கிட்டேப் பேசறேன்.. அப்புறம் அண்ணி எப்படியிருக்காங்க..’
‘ஷி ஸ் இன் த ஃபேமிலி வே பங்காளி!’
‘அப்படிப்போடு அருவாளே!… வாழ்த்துகள் சொல்லிரு…நான் நேர்லே வரேன்.. ஒருப்ராஜெக்ட் விஷயமா உங்கிட்ட சில ஆலோசனை கேட்கணும்..’
‘அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அந்த நகை…’ என்றான் மதி தயங்கியவாறே.
‘அட.. அதைப் பத்தி உங்கிட்டே கேட்டனா..’
‘இல்லை பங்காளி… அந்த நகை…’
‘அட என்னப்பா நீ…. சுத்திசுத்தி அந்த நகைக்குள்ளயே வர்றே… என்னாச்சு.. பாட்டியை எந்த ஆஸ்ப்பிடல்லே சேர்த்திருக்கே…? அதைச் சொல்றதே விட்டுட்டு…’
முழு விபரத்தையும் மதி சொன்னான். பேசிமுடிக்கும்போது சிக்னல் கட் ஆகிவிட்டது.
அடுத்த நாள். காலையில்c- ஆஸ்பிடல் வெயிட்டிங் ஹாலில், மதி காத்திருந்தான். ஒரு நர்ஸ் டாக்டர் அறையிலிருந்து எட்டிப்பார்த்து, ‘மதி சார், இருக்கீங்களா?’ என்றாள்.
மதி உள்ளே நுழைந்தான். டாக்டர் துரையரசன் எம்.எஸ்.ஆர்த்தோ சுழல் நாற்காலியில் வீற்றிருந்தார்.
‘என்ன சார்! என்னை உங்களுக்கு அவ்வளவு தெரியுமான்னு தெரிலே… ஆனா, உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்!
‘அப்படியா டாக்டர்..’ –
அவன் விழிகளில் வியப்பு தெறித்தது.
‘மிஸ்டர் பானு விரிவாச் சொல்லியிருக்கார்.. நானே உங்களை காண்டாக்ட் பண்ணலாம்னுதான் இருந்தேன்…. ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரர் போலிருக்கு..’ என்றார் முறுவலித்தவாறே.
‘ஆமா டாக்டர்.’
‘அவர் மலேசியா போயிட்டு வந்தது தெரியுமா?’
‘தெரியும் டாக்டர்.. நேத்துப் பேசிட்டிருந்தோம்..’
‘அவர் போனதே என்னோட விஷயமாத்தான்… இங்க ஒரு மெடிக்கல் ரிசர்ச் சென்டர் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்… அதுக்கு பானு சாரோட ரோல்தான் காரணம்… மலேசியாவிலே ஒரு பெரிய மெடிக்கல் கம்பெனியோட டை-அப் கிடைச்சிருக்கு.. அவர் இல்லேனா இதை சாதிச்சிருக்க முடியாது.. அவர் அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னார்.. அது இருக்கட்டும்.. அந்த தனசுந்தரி பேஷண்ட் விஷயமாத்தானே வந்திருக்கீங்க..’
‘ஆமா டாக்டர்..’
‘ஒண்ணும் கவலைப்படாதீங்க… இப்ப ஒரு மணிக்கு ஆப்ரேஷன்.’
‘தேங்க்யூ டாக்டர்… அப்ப நான்?’
‘நீங்க ஆபிஸ்க்குப் போங்க.. அந்தப் பாட்டியோட டாட்டர் இருக்காங்கல்லே.. அதுபோதும்… எனக்கு அதுக்கு முன்னாலே ஒரு ஆப்ரேஷன் இருக்கு. யூ ஆர் வெரி டெடிகேட்ட் பெர்சன், மிஸ்டர் மதி! ஐ நோ இட்!’ என்று சிரித்தவாறு, அவசரமாக தன் அறையை விட்டுக் கடந்து ஆபரேஷன் தியேட்டர் நோக்கிப் பறந்தார்.
மதி டாக்டர் அறையைவிட்டு வெளியே வரவும் – கேஷ் கௌண்டரில் அவனை ‘சார்… சார்’ என்று அழைத்தார்கள்.
அவன் சற்று பதட்டத்துடன் நெருங்கினான்.
‘சார்.. பேஷண்ட் நேம் தனசுந்தரிங்களா?’
‘ஆமாங்க.’
‘இப்ப ஒரு மணிக்கு ஆப்ரேசன்… டாக்டர் சொன்னாருங்களா..’
‘சொன்னாருங்க… இன்னும் ஒரு மணி நேரத்திலே அட்வான்ஸ் பணத்தை….’
‘சார்.. இருங்க… பேஷன்ட் நேம்லே ஒன் லேக் ருபீஸ் கட்டியிருக்கு..அதை சொல்றதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டோம்!’
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘அமௌன்ட் எங்கிருந்து… யார் அனுப்பினாங்கன்னு சொல்லமுடியுமா?’
‘கொல்கொத்தாவிலிருந்து பானுங்கிறவர் நெஃப்ட்லே ரெமிட் பண்ணியிருக்கார்!.’
ஒரு வினாடி அசைவற்று நின்றான் மதி.. அவன் விழிகளிலிலிருந்து நீர் திரண்டு பொலபொலவெனக் கொட்டியது.
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |
