நோய் வராதா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள் 

கந்தசாமி செட்டியார்: தாலூகர ஆபீஸ் ஹெட்கிளார்க் 

தெய்வயானை அம்மாள்: அவருடைய மனைவி: 

வேங்கடராமய்யர்: தாலுகா ஆபீஸ் ஹெட் அகௌண்டண்டு 

ராமச்சந்திர ஐயர், நாராயண ராவ் : தாலுகா ஆபீஸ் குமஸ்தாக்கள் 

முதலியார் – டைபிஸ்டு 

குமாரசாமி – ஆபீஸ் மொச்சி (சிற்றேவல் புரிபவன்) 

முதற் காட்சி 

இடம்: கந்தசாமி செட்டியாருடைய வீடு 

காலம்: காலை சுமார் எட்டரை மணி 

தெய்வயானை: ஏன்தான் உங்களுக்கு இப்படிக் கோபம் வருதோ தெரியவில்லை! 

கந்தசாமி: யாருக்கு, எனக்கா கோபம் வருது? (கோபத்துடன்) என்னைக் கோபக்காரன் என்று சொல்கிற எருமைகளை எல்லாம் நன்றாய் உதைக்கணும்! எனக்குக் கோபம் வருதாம்! இன் னொருதரம் அப்படிச் சொன்னால் என்ன செய் வேன், தெரியுமா? (கோபத்துடன் விழிக்கிறார்.)

தெய்வயானை: ஆம், கொஞ்சந்தான் வருது!

கந்தசாமி: எனக்கெப்ப கோபம் வந்தது? சொல்லு பார்ப்போம். 

தெய்வயாளை: விடிஞ்சு எந்திருச்சதும் அந்தப் பல்லுக் குச்சிக்கு என்ன ஆட்டம் ஆடினிய? அப்பா மாதிரி பல் தேய்க்கிறேன் என்று சாரதா பல்லைக் குத்திக்கிட்டிருந்தாள். அதைப் புடுங்கி அட்டாலியிலே வச்சேன். அதுக்குத்தான் இந்தச் சத்தமா, இந்தப் பேச்சா! 

கந்தசாமி: அதைக் காணோமே என்று தேடியவுடன் நீ வந்து எடுத்துக் குடுத்திட்டா நான் ஏன் அத்தனை சத்தம் போடுறேன்? 

தெய்வயானை: எனக்குத்தான் எல்லாம் மறந்து மறந்து தொலைஞ்சிறுது! அதுக்கு இத்தனை கோபமா வரணும்? 

கந்தசாமி: குளிக்கிற வெந்நீர் நெகச் சூடாயிருக்கணு மிண்ணு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? நாலாயிரத்து நானூத்தி நாப்பத்தி நாலு தடவை சொல்லியிருப்பேன்! தினந்தோறும் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை இறக்கி வைத்தால் என்ன செய்வது? 

தெய்வயானை: வெந்நீரை அடுப்பிலே வச்சிட்டு எத்தனையோ வேலைகளைப் பார்துக்கிட்டிருக்கேன்; அது கொஞ்சம் அதிகமாகச் சுட்டிருது. அதுக்கு சமாதானமாகச் சொன்னா என்ன? 

கந்தசாமி: ஒரு தடவை, ரெண்டு தடவையா யிருந்தர சமாதானமாச் சொல்லலாம். தினம் இந்தப் பாடாயிருந்தால் என்ன பண்ணுவது? அதுதான் போகுது. சட்னிக்கு இத்தனை காரம் வேண் டாம், அதனால் கோபம் அதிகரிக்குது, உடம்புக்குங் கெடுதி என்று எத்தனை தடவை சொல்லி யிருக்கேன். அப்புறமும் நாக்குத் தெறித்துப் போகிறாப் போல் சட்னி அரச்சிருந்தால் கோபம் வருமா, வராதா? நீயே சொல். 

தெய்வயானை: நான் சொல்றேன், கேளுங்க. நீங்கள் காரத்தைக் குறைக்கக் குறைக்க உங்களுக்குக் கோபம் அதிகமாத்தான் வருது! காரம் நல்லாச் சாப்பிடுங்க, உங்களுக்குக் கோபமே வராது! 

கந்தசாமி: அது போகட்டும்.நீ இப்ப போய்ப் பாலைக் கொண்டு வா. ஆபீசுக்குப் போக நேரமாச்சு. 

(தெய்வயானை ஒரு டம்ளரில் பாலைக் கொண்டு வந்து வைக்கிறாள்.) 

கந்தசாமி: (பாலைப் பார்த்து விட்டுக் கோபத்துடன்) தினந்தோறும் பாலில் கொஞ்சங் கோதுமை மா போட்டுக் காச்சு என்று எத்தனை தடவை சொல்லி யிருக்கேன். நாலாயிரத்து நானூத்தி நாப்பத்தி நாலு தடவை சொல்லி யிருப்பேன்! ஏன் காச்சலை? 

தெய்வயானை: (முகத்தில் அச்சக் குறிகளுடன் மௌன ம்)

கந்தசாமி: (கோபம் அதிகரிக்க) ஏன் காச்சலை என்று கேட்கிறேன். 

தெய்வயானை: (மனக் கலக்கத்துடன்) மறந்துட்டேன்!

கந்தசாமி: இப்படி மறந்து மறந்துதானே மனுஷனைக் கொல்றே? 

தெய்வயானை: பாலில் கோதுமை மா போட்டுக் காச்சாட்டா மனுஷர் செத்தா போயிடுவாக? 

கந்தசாமி: நீ சாக மாட்டாயடி, நீ சாக மாட்டாய்! உனக்கு ஆண்டவன் ஆயுசைப் பலமாய் எழுதியிருக்கான்! நீ குடி! குடியிதை ! நீ குடிச்சு சிரஞ்சீவியா யிருந்தாப் போதும்! 

(டம்ளரை வீசிப் பாலுடன் தெய்வயானையின் மீது எறிந்து விட்டு ஆபீசுக்குக் கிளம்புகிறார்.) 

தெய்வயானை: விடிஞ்சு எழுந்திருச்சா தினந்தோறும் இந்த இழவுதான்! இதற்கு என்று தான் விடிவோ, எப்ப விமோசனமோ! என் தலை யோடுதான் விமோசனம், அதுக்கு முன்னே எங்கே? 

இரண்டாம் காட்சி

[கந்தசாமி செட்டியார் ஆபீஸ் காம்பவுண்டுக்குள் நுழைகிறார். அதே சமயம் ராமச்சந்திர ஐயரும் அவருடன் சேர்கிறார். தூரத்தில் ஹெட் அக்கவுண்டண்டு தன் மேஜையண்டை உட்கார்ந்திருப்பது தெரிகிறது.) 

கந்தசாமி: ஏனய்யா ராமச்சந்திரய்யரே, இந்த மனுஷ னுக்குப் பெண்டாட்டி பிள்ளை ஏதாவது உண்டா, இல்லையா? ஹெட் அக்கவுண்டண்டா லக்ஷணமா பதினோரு மணிக்கு ஆபீசுக்கு வருவதை விட்டு, எல்லாருக்கும் முன்னால் எட்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விடுகிறானே, ஐயா! ஏன்தான் இப்படி நம்முடைய பிராணனை வாங்கறானோ தெரியல்லே! 

ராமச்சந்திர ஐயர்: அவனுக்கு ஆபீசேதான் பெண்டாட்டி. பீசேதான் பிள்ளை! சீக்கிரம் வாரும், காதிலே கேட்டால் என்னமும் சொல்லித் தொலையப் போறான். 

கந்தசாமி: சொல்லுவானா, பாரும். நான் அங்கே போனதும் ஒரு போடு போட்டு, ஆசாமியை வீட்டிற்குக் கிளப்புகிறேன்! (ஆபீசுக்குள் நுழைந் ததும் ஹெட் அங்கவுண்டெண்டை நோக்கி) உங்கள் பிள்ளைகள் இரண்டும் கம்புங் கழியுமாய் வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு தெருவில் சண்டைக்கு நிற்கிறான்கள். நீங்கள் இங்கே நிம்மதியா உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். போய் அவன்களைக் கொஞ்சம் சமாதானம் பண்ணிவிட்டு வாருங்கள், ஸார். தெருவே சிரிக்குது! 

வேங்கடராமய்யர்: அந்தக் கழுதைகள் எப்பொழுதும் அப்படித்தான். அது கிடக்கட்டும். வருஷாந்திர ஆப்காரிக் கணக்கு அனுப்ப வேண்டுமே? அதைக் கொஞ்சம் இன்று கவனியுங்கள்.

கந்தசாமி: வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து விட்டீர்களே! (தன் மேஜையண்டை செல்கிறார். அது கொஞ்சம் தூசியாயிருப்பதைக் கண்டவுடன் கோபத்துடன்) அடே மொச்சி ! அடே குமாரசாமி! இங்கே வாடா!

குமாரசாமி : எஐமான்! 

கந்தசாமி: ஏண்டா கழுதை, உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். மேஜையையும் நாற்காலியையும் தூசியில்லாமல் துடைக்க வேண்டு மென்று. இதோடு நாலாயிரத்து நானூத்தி நாப்பத்தி நாலு தடவை சொல்லி யிருப்பேன் ! பார், நீ துடைத்திருக்கிற லக்ஷணத்தை! 

(அவனுடைய காதைப் பிடித்து ஹெட் அக்கவுண்டண்டிடம் இழுத்துச் செல்கிறார்). 

இந்தப் பயல்களை எல்லாம் நீங்கள் கண்டிப்பதே கிடையாது. எங்களை மட்டும் அந்தக் கணக் கெங்கே, இந்தக் கணக்கெங்கே என்று துளைக்கிறீர்கள்! 

வேங்கடராமய்யர்: ஏண்டா, அவர் குணந்தான் உனக்குத்தெரியுமே, அவர் மேஜையை நன்றாய்த் துடைப்பதற்கு என்னடா! போடா! போய்த் துடை, போ. 

கந்தசாமி : (இதர குமாஸ்தாக்களை நோக்கி) பாருங்கள் ஐயா! பாருங்கள்! வேலைக்காரர்களைக் கண்டிக்கும் அழகை! (தன்னுடைய இருப்பிடத்திற்குக் கந்தசாமி செட்டியார் செல்கிறார். அவருடைய மேஜையின் மீது டைப் அடித்த சில காகிதங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. அவைகளில் ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக் கொள்கிறார்.) 

கந்தசாமி : ஏன் ஐயா, டைபிஸ்டு! இந்தக் காகிதம் உம்மிடம் டைப் அடிக்கக் கொடுத்து எத்தனை நாட்களாகிறது? வேலை செய்கிற ஒழுங்கைப் பார்க்கலை, ஒழுங்கை! 

டைபீஸ்டு: (முனகிக் கொண்டே) இவர் வேலை செய்கிறது தான் என்ன ஒழுங்கோ? நாலு நாளாய் ஏன் கேட்காமலிருந்தார்? (இதை உரத்த குரலில் சொல்ல அவருக்குத் தைரியமில்லை.) 

கந்தசாமி: மண்வெட்டி எடுத்துக் கொண்டு கூலி வேலை செய்யப் போக வேண்டியவன் எல்லாம் தாலுகாக் கச்சேரிக்குள் நுழைந்துகொண்டு நம்ம பிராணனை வாங்குகிறான்! 

வேங்கடராமய்யர்: (டைபிஸ்டு ஏதோ சொல்ல வாய் எடுக்கிறார். அவரைக் கை அமர்த்தி, மெல்லிய குரலில்) பேசாமல் இரும் ஐயா, எரிமலை இதோடாவது அடங்கட்டும். அந்த மனுஷன் கோபக்காரன் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயந் தானே. அவன் ஏதாவது கொடுத்தால் நாலு தட்டுத் தட்டி முஞ்சியில் எறிந்து விடுமே. இந்தச் சனியன் வேறு எங்காவது தொலையட்டும், நம்மால் இதைக் கட்டிக்கொண்டு அழமுடியாது என்று எத்தனையோ தடவை கலெக்டருக்கு எழுதிப் பார்த்தாச்சு; பலிக்க வில்லை. நம்ம கழுத்திலேயே தான் கட்டி விட்டான்,கலைக்டர் சனியன்! இருபது வருஷம் தாலுகா ஆபீஸிலே வேலை பார்த்தும் இந்த மனுஷனுக்கு இன்னும் கோபம் போகவில்லையே! அதுதான் விநோதம்! 

மூன்றாம் காட்சி 

இடம்: கந்தசாமி செட்டியார் வீடு 

[கந்தசாமி செட்டியார் சில நாட்களாய்க் காய்ச் சலாய்ப் படுத்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற் காகத் தாலுகாபீஸ் குமாஸ்தாக்கள் ராமச்சந்திர ஐயரும், நாராயண ராவும் வருகிறார்கள்.]

நாராயண ராவ்: (வீட்டிற்கு வெளியில் மெல்லிய குரலில்) எனக்கென்னவோ இந்த மனுஷனைப் பார்க்கப் போவதற்குக் கொஞ்சங் கூட இஷ்டமில்லை. இங்கும் என்னமாவது தாறுமாறாய்க் கத்து வான். சுகமாயிருந்தாலாவது நாமும் என்னத் தையாவது பதிலுக்குச் சொல்லலாம். சீக்குக் காரனிடம் எப்படிச் சொல்வது? ஏதாவது தப்பித் தவறிச் சொன்னால் அவனுக்கு மேலும் கோபந்தான் வரும். 

ராமச்சந்திர ஐயர்: நாம் போய்ப் பார்க்கா விட்டால் இன்னொரு ஆபத்து இருக்கிறது. அதை நினைத் துப் பார்த்தீரா? நாளைக்கு ஆபீசுக்கு வந்ததும் கத்துவான்! நான் சீக்காய்க் கிடந்தேனே, ஒரு கழுதையாவது நான் இருக்கேனா, செத்து விட் டேனா என்று ஒரு முறை வந்து பார்த்ததா என்று ஆபீஸ் முழுதுங் கதறுவான்! வந்தது வந்து விட்டோம். எதுக்கும் பார்த்து விட்டுப் போவதுதான் நல்லது. 

நாராயண ராவ்: ‘என்ன விருந்தாலும் மனுஷனுக்கு இத்தனை கோபம் வரக் கூடாதய்யா! 

ராமச்சந்திர ஐயர் : இத்தனைக் கோபத்திற்கும் காரணம் என்ன தெரியுமா? அவன் காரம் குறைவாகச் சாப்பிடுகிறானாம்! 

(இருவரும் சிரித்துக் கொண்டே கந்தசாமி செட்டியாரின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். செட்டியார் ஒரு படுக்கையின் மீது படுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் சிரிப்பை அடக்கி கொண்டு முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டு, அவருடைய படுக்கையை நெருங்குகிறார்கள்.) 

நாராயண ராவ்: உங்கள் ரஜா விண்ணப்பம் வந்ததி லிருந்து எனக்கு ஆபீஸில் இருப்பே கொள்ள வில்லை. உங்களைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று ஆவல். எங்கே முடிகிறது? இன்றைக்கு எப்படியாவது பார்த்து விட்டு வருவது என்று கிளம்பினோம். உடம்புக்கு என்ன? இப்பொழுது எப்படி இருக்கிறது? துரும்பாய் இளைத்து விட்டீர்களே! 

ராமச்சந்திர ஐயா : வரததான் முடிய வில்லை. என்றாலும் உங்களைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண் டேன். மனசு கேட்கிறதா? வயிற்றோட்ட மாமே, இப்பொழுது சௌகரியமா யிருக்கிற தல்லவா? ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து தடவை போயிற்றாமே! அதுதானே இப்படி மெலிந்து விட்டீர்கள்! 

கந்தசாமி: வயிற்றோட்டம் ஒன்று மில்லையே! யார் சொன்னது? (ராமச்சந்திரய்யர் விழிக்கிறார்.) ஜூரந்தான், ஏழெட்டு நாளாய்ப் பொறுக்க முடியவில்லை. கை, கால் குடைச்ச லிருக்கிறதே, ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்? 

நாராயண ராவ்: பொறுக்க முடியாது, ஐயா, பொறுக்க முடியாது! நீங்களா யிருக்கக்கண்டு இவ்வள வாவது பொறுத்துக் கொள்கிறீர்கள். எனக்கு இரண்டு நாள் ஜூரம் வந்தது, அப்பா நான் பட்ட பாடு! அதை ஏன் கேட்கிறீர்கள்! ஈஸ்வரனுக்குத் தான் தெரியும்! 

ராமச்சந்திர ஐயர்: நீங்கள் இங்கே இப்படி இத்தனை நாளாய் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களே. ஆபீசுக்குப் பெரிய மனுஷராய் ஒருவர் இருக் கிறாரே,ஹெட் அக்கவுண்டெண்டு! நீங்களும் அவருக்கடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் தானே உங்களை ஒரு முறை வந்து பார்த்தாரா?

நாராயண ராவ் : அவர் ஏன் வந்து பார்க்கிறார்? ஆபீஸ் உண்டு, அவருண்டு, அவர் வேலையுண்டு. ஆபீஸ் காகிதங்களையும், கணக்குகளையும் கட்டி மாரடிக் கவே அவருக்குச் சரியாய்ப் போய் விடுகிறதே! எந்நேரமும், இருபத்திநாலு மணி நேரமும் ஆபீஸ்தான். ஆபீஸே தியானம்! ஆபீஸே பேச்சு! ஆபீஸே காரியம்! 

ராமச்சந்திர ஐயர்: இந்த மாதிரி கொஞ்சங்கூட ஈரமில்லாத மனுஷனை நான் எங்குமே பார்த்ததில்லை ஐயா! 

கந்தசாமி: பாவம், அவரை ஏன் குறை சொல்கிறீர்கள்? அவர் நல்ல மனிதர், ஸார். 

(கந்தசாமி செட்டியாரை மற்ற இருவரும் சற்று ஆச்சரியத்துடன் நோக்குகிறார்கள்.)

நாராயண ராவ் : வைதீகப் பிராமணர் ஆச்சே, பூஜை புனஸ்காரம் உண்டோ, அதுவுங்கூட அவருக்கு இல்லையோ தெரியவில்லை. 

ராமச்சந்திர ஐயர்: பூஜை ஏது, புனஸ்காரம் ஏது? அவ ருக்கு ஆபிஸ் தான் பிரம்மா, ஆபீஸ் தான் விஷ்ணு, ஆபீஸே ருத்ரன்! நான் சொல்கிறேன், கேளும். அவர் சர்க்காருக்கு எப்படி உழைக் கிறாரோ, அதில் பாதி சிரத்தையுடன் ஈஸ்வரனைப் பூஜித்தால் போதும். இதற்குள் அவருக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும்! 

நாராயண ராவ்: ஆனால் இப்போது அவருக்குக் கிடைத்திருப்பதெல்லாம் மாதம் அறுபத்து நான்கு ரூபாய் சம்பளந்தான்! (சிரிக்கிறார்.) 

கந்தசாமி: இப்படி எல்லாம் நாம் நினைக்கவுங் கூடாது, பேசவுங் கூடாது. நான் அவரிடம் ஓர் அரும் பெருங் குணத்தைக் காண்கிறேன். அவர் ஊதி யத்தைக் கருதிச் செய்கிறாரோ,கருதாமல் செய் கிறாரோ. ஊதியங் கருதிச் செய்வதாகவே வைத்துக் கொள்வோம். என்றாலும் எடுத்துக் கொண்ட வேலையை எவ்வளவு சிரத்தையுடன் செய்கிறார்! ‘பற்று மற்றொன்றில்லேன்’ என்கிறார் களே. அதைப்போல் அவர் மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாரா, மனைவியைப் பற்றிக் கவலைப் படுகிறாரா? பாவம்!எல்லாருக்கும் முன்னால் அவர் ஆபீசுக்கு வந்து விடுகிறார்! எடுத்துக் கொண்ட வேலையுடன் அவர் இரண்டறக் கலந்து விடு கிறாரே! இவை எல்லாம் போற்றுதற்குரிய குணங்களில்லையா? என்னைப் பார்க்க வராவிட் டால் என்ன சார் கெட்டுப் போகுது? ஐயோ! பாவம்! 

(ஆச்சரியம் பொங்க ராமச்சந்திர ஐயரும், நாராயண ராவும் சிறிது நேரம் மௌன மாயிருக்கிறார்கள்.) 

கந்தசாமி: ஆபீசில் என்ன விசேஷம்? ஏதாவதுண்டா?

நாராயண ராவ் : நான் தற்புகழ்ச்சி செய்கிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் ஆபீஸ் வெறிச்சோடி யிருக்கிறது! 

ராமச்சந்திர ஐயர் : விசேஷம் என்ன, விசேஷம்? அந்த மொச்சியை பீ.மெமோக் கிளார்க் அடித்து விட்டார்! 

நாராயண ராவ்: அவன் பண்ணினதும் அநியாயந்தான், ஐயா! (கந்தசாமி செட்டியாரை நோக்கி) நீங்களானால் அவனுடைய வேலைக்கே உலைவைத்: திருப்பீர்கள். 

கந்தசாமி: ஏன், என்ன செய்தான்? 

நாராயண ராவ்: அரைமணி நேரம் இருட்டில் உட்கார்ந்து கொண்டு ‘விளக்கு! விளக்கு!’ என்று அலறிக் கொண்டிருக்கிறார். கொண்டு வரவில்லை. வைத் தார் ஓர் அறை! 

சுந்தசாமி : ஐயோ பாவம்! வேலைக்காரப் பையன்களை இப்படி எல்லாம் கொடுமையாக நட த்த கூடா து, சார். அவனும் நம்முடைய பையன் களைப் போலத்தானே, ஐயா? அவனுக்கென்ன வயதாகி விட்டது ? அவனுடைய வயதுள்ள நம்ம பிள்ளைகளெல்லாம் நொண்டித் தட்டும், கிளித்தட்டும், விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பாவம்! ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக வேலைக்கு வந்திருக்கிறான். இதை எல்லாம் நாம் கொஞ்சங் கூட நினைத்துப் பார்ப்பதில்லை,சார்.கோபம் இருக்கிறதே, அதனால்தான் மனிதன் மிருகமா கிறான். பி. மெமோக் கிளார்க் எப்பொழுதுமே கொஞ்சம் முன் கோபி? 

(சமயலறையில் சுமார் பத்து வயதுள்ள அவரு டைய புதல்வன் அழும் சத்தம் கேட்கிறது.) கந்தசாமி (சனஸ்வரத்தில்) கணபதி என் அழுகிறான்? யார் அடித்தது? 

தெய்வயானை: அடிக்காமல் என்ன செய்யச் சொல் கிறீர்கள்? உங்களுக்குச் சவ்வரிசிக் கஞ்சி காய்ச்ச வேண்டு மென்று, அரைமணி நேரமாய் சர்க்கரை டப்பாவைத் தேடுகிறேன், காணோம். இவன் எங்கேயோ கொண்டுபோய் வைத்து விட்டான்.

கந்தசாமி: அதற்குச் சிறு பையனை அடிப்பானேன்? இன்னுங் கொஞ்ச நேரந் தேடினால், அகப்படு கிறது. வீட்டிற்குள்ளே தானே வைத்திருப்பான்? இந்த வீட்டிற்குள்ளே ஒரு சாமானை எடுக்க முடியாதா? கொலம்பஸ் கடல்களெல்லாம், சமுத்திரங்கள் எல்லாம் அலைந்து அமெரிக்காவைக் கண்டு பிடித்தானாம்! 

தெய்வயானை: சர்க்கரை டப்பா அமெரிக்கா அளவு பெரிதில்லை! 

கந்தசாமி: வீடும் அட்லாண்டிக் சமுத்திரம் அளவு பெரிதில்லை! (முன்னால் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து) மனிதர்களுக்கு ஏன்தான் இப்படிக் கோபம் வருகிறதோ, தெரியவில்லை. பாவம்! அவளைச் சொல்லவும் குற்றமில்லை. எனக்குச் சீக்கிரம் கஞ்சி போட்டுக் கொண்டுவர வேண் டுமே என்று அவளுக்கு ஆவல். அந்த ஆவலினால் குழந்தையைப் போட்டு அடிக்கிறாள்! 

(இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன். நோக்குகிறார்கள். அந்தசமயம் டாக்டர் வரவே அவர்கள் செட்டியாரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியேறுகிறார்கள்) 

நாராயண ராவ்: (தெருவில் நடந்துகொண்டே) ஐயர்வாள் ! நாம் இன்று கடுங்கோபி கந்தசாமி செட்டியா ரைத்தான் பார்த்து விட்டு வருகிறோமா அல்லது வேறு யாரையுமா? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 

ராமச்சந்திர ஐயர்: நான் நேரே இப்பொழுது டாக்டர் வீட்டிற்குத்தான் போகவேண்டும்! என் கண்ணாடியை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்! 

நாராயண ராவ் : மனித இயற்கை மிக விசித்திரமா யிருக்கிறது. எந்த மனிதன் எந்தச் சமயத்தில் எப்படித் ருந்துவானென்று ஒருவராலும் சொல்ல முடியாது. 

தெய்வயானை: (வீட்டிற்குள் சமையலறையில்) துருவாசரா யிருந்த என் கணவர் ஏன்தான் இப்படி தர்ம புத்திரராய் மாறிவிட்டாரோ? இது எதன் சூசகமோ தெரியவில்லை! 

நான்காம் காட்சி 

(கந்தசாமி செட்டியார் சுகமடைந்துவிட்டார். அன்று ஆபீசுக்குச் செல்லவேண்டும். ஸநான அறைக்குக் குளிக்கச் செல்லுகிறார்.) 

கந்தசாமி: வெந்நீர் இவ்வளவு சூடாயிருக்கக் கூடாது. என் உடம்பிற்கு ஆகாது என்று நாலாயிரத்து நானூத்தி நாப்பத்து நாலு தடவை சொல்லி யாச்சு! தண்ணீரை இப்படிக் கொதிக்க வைத்து, ஏன்தான் என் பிராணனை வாங்குகிறாயோ, தெரியவில்லை! 

தெய்வயானை: பழைய குருடி கதவைத் திறடி! நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்! இப்படித் தருமராய், சாந்தமே அவதாரம் எடுத் தவராய் மாறிவிட்டாரே, இவரோடு எப்படி நாம் குடித்தனம் நடத்தப் போகிறோம் என்று பயந்து போனேன்! நல்ல வேளை ஈசன் காப்பாற்றினார்! 

கந்தசாமி : (தனக்குள்) ஐயோ! எனக்கு ஏன்தான் இப்படி எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறதோ தெரியவில்லை.காய்ச்சலாய்ப் படுத்திருந்தபோது நன்றாயிருந்தேனே! அப்பொழுது என் உள்ளம் எவ்வளவு அமைதியாயிருந்தது? இனி கோபிக் கவே கூடாது. கோபம் பொல்லாது! 

(ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, பூஜைக்குப் பின் சாப்பிட உட்காருகிறார். அன்றையச் சட்னி அதிகக் காரமாகத்தானிருக்கிறது. கோபம் வருகிறது.ஆயினும் அதை அடக்கிக் கொண்டு, சாப்பிட்டு விட்டு எழுந்து, கை யலம்பி, ஆபீஸ் உடைகளை மாட்டிக் கொள்கிறார். ஆபீசுக்கு நேரமாகிவிட்டது குடையைத் தேடுகிறார். அது அகப்படவில்லை.) கந்தசாமி: வைத்த சாமான் வைத்த இடத்தில் என் றைக்கு இருக்கிறதோ, அன்றைக்கல்லவா இந்த வீடு உருப்படியாகும்! அந்தப் பயல் எங்கே? அவன்தான் எடுத்து எங்காவது வைத்திருப் பான். நன்றாய் உதைக்க வேண்டும். ஐயோ! ஆபீசுக்கு நேரமாய் விட்டதே. மிதி, மிதி என்று மிதிக்க வேண்டும். அடே கணபதி! கணபதி இ! இ! இ! 

தெய்வயானை: கொலம்பஸ் கடல்களையும், சமுத்திரங் களையுங் கடந்து சென்று அமெரிக்காவை……..

கந்தசாமி : ஐயோ! ஆம், நிஜந்தான். எனக்கு ஏன்தான் இப்படிக் கோபம் வருகிறதோ, தெரியவில்லை. கோபம் பொல்லாது. ஐயோ ! எனக்கு மீண்டும் காய்ச்சல் வராதா? அப்பொழுது நான் நன்றா யிருந்தேனே! என் மனம் எவ்வளவு சாந்தியா யிருந்தது?உடம்பிற்கு ஜுரம் நல்லதோ, கெடு தியோ, ஆனால் உள்ளத்திற்கு மிகவும் நல்லது! மனதிற்கு அது சிறந்த டானிக்! ஆ! எனக்கு மீண்டும் நோய் வராதா? 

(திரை) 

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *