குடியலூர்ச் சந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 61 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள் 

இராமநாதன் செட்டியார் 

அவருடைய மனைவி 

இடம்: வீடு.

காலம்: இரவு 9 மணி

முதற் காட்சி 

இராமநாதஞ் செட்டியார்: கால் வலிக்கிற வலி சொல்லி முடியாது. மாட்டிற்கும் மனிதனுக்கும் அலைச் சல்தான் மிச்சம்! 

மனைவி: மாடு விற்கலியாக்கும். குடியலூர்ச் சந்தை பெரிய சந்தை என்கிறார்களே? 

இராமநாதஞ் செட்டியார்: பெரிய சந்தை! எல்லாம் நேரில் போய்ப் பார்த்தால்தான் அதனதன் வண்ட வாளந் தெரியுது! இந்தக் காலைக் கொஞ்சம். அமுக்கு. வலி பொறுக்க முடியவில்லை.

மனைவி: (காலை அமுக்கிக் கொண்டு) நான் ஒருநாள் பஸ் ஸில் வரும்போது பார்த்தேன். சந்தையிலே ஜனங்கள் அதிகமாகத்தான் கூடியிருந்தார்கள்.

இராமநாதஞ் செட்டியார்: சந்தையாம் சந்தை! பிரமாதச் சந்தை! நம்ம மாட்டை விலை கேக்கிறதுக்கு அங்கே நாலு பேருண்டா? 

மனைவி: நாலு பேர் கூட இல்லாத சந்தை அதென்ன சந்தையோ? அப்படியானா நம்ம பெரியநாயக் கன்பாளையம் சந்தை தேவலை இண்ணு சொல்லுங்க. 

இராமநாதஞ் செட்டியார் : நம்ம சந்தைக்குக் காலில் கட்டி யடிக்க வருமா அது? பெரிய சந்தையாம்! இண்ணைக்கி நம்ம மா ட்டை நூறு பேர் ஆயிரந் தடவை பார்த்திருப்பான். அதிலே நாலு பேரா வது விலை கேக்கணுமே. இடது பாதத்தை நல்லாப் பிடிச்சு விடு. இந்த வலியா வலிக்கும்! 

மனைவி : (இடது காலை லேசாய்ப்பிடித்து விட்டுக் கொண்டு) விலை கேக்காம பின்னே என்னதான் செய்யிறாங்க? 

இராமநாதஞ் செட்டியார்: பன்னண்டு மைல் நடந்தாலுந் தான் என்ன, இப்படியா மேல், கால் எல்லாம் வலிக்கும்! இந்த முதுகைக் கொஞ்சம் பிடித்து விடு. 

மனைவி : (முதுகைப் பிடித்துக் கொண்டு) விலை கேக்காம என்னதான் பண்றாங்க? 

இராமநாதஞ் செட்டியார்: ஒவ்வொரு மாடாப் பல்லைப் பல்லைப் பிடித்துப் பார்த்துவிட்டுத் தங்கள் பல்லையுங் காட்டி விட்டுப் போறாங்க! 

மனைவி: அப்படி எத்தனை மாடு வந்திருக்குது? 

இராமநாதஞ் செட்டியார்: அது வந்திருக்குது பசுவிலே இருநூறும்,எருதிலே ஆயிரமும். 

மனைவி: சந்தை பெரிசுதான் போலிருக்கு! 

இராமநாதஞ் செட்டியார்: மாடு வாங்கினதும் போதும் இப்பப் படுகிற கஷ்டமும் போதும்! இதை எப்படியாவது வித்துத் தொலைக்கணுமே என்று இப்பத் தோணுது. 

மனைவி: நம்ம மாட்டிற்கென்ன தங்கத்திற்கு? யாரும் நாம் வாங்கின விலைக்கு அதிகமாகவே கொடுத்து வாங்கிக் கொள்வான். 

இராமநாதஞ் செட்டியார்: அதை வாங்கின புதிசிலே நீ மட்டு மல்ல, எல்லோரும் அப்படித்தான் சொன்னார் கள். இப்பொழுது அதற்கு நூறு குறை சொல்லு கிறான்கள் திருட்டுப் பயல்கள்! 

மனைவி: நம்ம மாட்டிற்கு எவன் குற்றஞ் சொல்கிறவன்? 

இராமநாகஞ் செட்டியார்: எல்லாருந்தான் சொல்கிறான். நிறம் காரியாம், கடைக்கண் புள்ளியாம், வாலில் சுளியாம்! 

மனைவி: அப்படி என்றால் என்னவாம்? 

இராமநாதஞ் செட்டியார்: அது ஒரு பயலுக்குந் தெரியலை. அது ஆகாது என்றுதான் சொல்கிறான்கள். 

மனைவி : அவன்களுக்கு ஆகாவிட்டால் போகட்டும். நம்ம வீட்டிலே இருந்திட்டுப் போகுது. ஒன்றுங் கெட்டுப் போய் விடாது. 

இராமநாதஞ் செட்டியார் : இப்பொழுது அதைத் தவிர வேறு வழியுமில்லை. (தோளை நல்லாப் பிடிச்சு அமுக்கடி. யம்மா. ரணமா வலிக்குது.) 

மனைவி : மாடு விக்காட்டாப் போகுது. வீட்டுக்குக் காய் கறியாவது வாங்கி வரப்படாதோ? 

இராமநாதஞ் செட்டியார்: வேணும் விழையுமென்று பிடிச்சு அமுக்கடியம்மா. வலி பிராணன் போகிறது! 

மனைவி: பிடிச்சுத் தானே அமுக்றேன். இதைவிட எப்படி அமுக்கச் சொல்றீய? அது போகட்டும். பையை வெறிசாக் கொண்டு வந்திருக்கயளே. காய் கறியாவது வாங்கிக் காண்டு வரப் படாதா? 

இராமநாதஞ் செட்டியார்: குடியலூர்ச் சந்தையிலே காயுங் கறியும் வந்து குவிஞ்சு கிடக்குது! அதை நான் வாங்காம வந்திட்டேன்! பொக்கிப் பயல் சந்தை எங்கிறேனே! 

மனைவி: கத்திரிக்காய், வாழைக்காய் கூடவா இல்லாமப் போச்சு? நீங்க பேசறது அதிசயமாத் தானி ருக்கு. நம்ம பயலுக்கு இரண்டு ஆரஞ்சிப் பழமாவது வாங்கி வருவது? 

இராமநாதஞ் செட்டியார்: ஒரு சொத்தைக் கத்திரிக்காயைக் காணோம். இவள் ஆரஞ்சிப் பழத்துக்குப் போயிட்டாள்; நல்லாப் பிடிச்சு அமுக்கிண்ணு அப்பவே பிடிச்சுச் சொல்லிக்கிட்டு இருக்கேனே. நீ இவ்வளவு நேரமா அமுக்கின திலே ஒரு துளி வலி கொரஞ்சிருக்கா? 

மனைவி: (கொஞ்சம் நன்றாய்ப் பிடித்து விட்டுக் கொண்டு) அதெல்லாந் தான் ஒண்ணும் வாங்கலை. குடியலூரிலே செவந்திப் பூ மலிவா விக்குமே. எனக்கு அரையணாப் பூவாவது வாங்கி வரப்படாதா? 

இராமநாதஞ் செட்டியார் : காலையில் வீட்டில்தின்ற இட்லியோடு புருஷன் வந்திருக்கானே. அவனுக்கு உடனே சோற்றைப் போடுவோம் என்பதில்லை. விளக்குமாறு வாங்கினியா, செருப்பு வாங்கி னியா என்று அரைமணி நேரமாய்ப் பிராணனை வாங்கிறாள்!(எழுந்து) நீ முதுகமுக்கி நாசமாப் போனது போதும். சோற்றைப் போடு. 

மனைவி: (ஏதோ முனகிக் கொண்டு) அதெல்லாம் எடுத்து வைத்து அரை மணிக்கு மேலாச்சு. நீங்க மேல் அமுக்கச் சொன்னியண்ணு அமுக்கிக் கிட்டிருந் தேன். அதுக்குள்ளே ஏன் இப்படிச் சீறி விழுகிறீய? 

இராமநாதஞ் செட்டியார்: (இலைக்கு முன்னால் போயுட்கார்ந்து அதில் ரவாக் கேசரியும் வடையும் பரிமாறப்பட்டிருப் பதைப் பார்த்து) இந்த இழவெல்லாம் இண்ணைக்கி யார் கேட்டா? சாதத்தைப் போடு. 

மனைவி : கேசரியும் வடையுந்தான் இண்ணைக்கிச் செய்திருக்கு, சாதம் வடிக்கலை. 

இராமநாதஞ் செட்டியார்: காலையிலிருந்து ஒண்ணும் சாப்பி டாமல் பட்டினியாய் வருவானே. அரைக்கால் படி அரிசியை வடிப்போமென்று ஏன் அறிவில் லாமல் போய் விட்டது ? 

மனைவி: (டம்ளரில் தண்ணீர் எடுத்து ‘டக்’ என்று செட்டி யாருக்குப் பக்கத்தில் வைத்து விட்டு) மாடு விற்கலை, எதை எடுத்தாலுங் கோபங் கோபமா வருது! அதற்கு நானா பழி ? 

இராமநாதஞ் செட்டியார்: எனக்குக் கேசரியும் வேண்டாம் வடையும் வேண்டாம். (இலையோடு அப்பால் இழுத்து எறிந்து விட்டுப் போய்க் கோபத்துடன் துக் கொள்கிறார்.) 

இரண்டாம் காட்சி 

பாத்திரங்கள்: இராமநாதஞ் செட்டியார், அவருடைய மனைவி.

இடம் : வீடு. 

காலம்: ஏழு நாட்களுக்கப்புறம் ஒரு நாள் மாலை ஆறு மணி சுமார் 

[செட்டியார் குதிரை வண்டியில் வந்து வீட்டிற்கு முன்னால் இறங்குகிறார். வண்டிக்காரன் வித வித மான அனேக சாமான்களை வண்டியிலிருந்து வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கிறான்]. 

மனைவி : மாடு வித்து விட்டது போலும். என்ன விலைக்கு வித்தீர்கள்? 

இராமநாதஞ் செட்டியார்: (புன்சிரிப்புடன்) லாபந்தான். 

மனைவி : (ஆத்திரத்துடன்) விலை? 

இராமநாதஞ் செட்டியார் : (சந்தோஷத்துடன்) பத்து ரூபாய் லாபம்! 

மனைவி : (சிரித்த முகத்துடன்) நான் அண்ணைக்கே சொன்னேனே, நம்ம மாட்டை விற்பதில் ஒரு கஷ்டமுமிராதிண்ணு. 

இராமநாதஞ் செட்டியார் : அதற்குச் சந்தையிலே எவ்வளவு கிராக்கி தெரியுமா? தங்கமான மாடில்ல? அதை ஏன் வித்தோமிண்ணு இப்பத் தோணுது. இனி அம்மாதிரி மாடு கிடைப்பது வெகு கஷ்டம்!

மனைவி : பின்னே காரி நிறம் என்று அண்ணைக்கிச் சொன்னதாக… 

இராமநாதஞ் செட்டியார்: காரிநிறமானால் என்ன? பக்கா வுக்கு ரெண்டு படி பால் கறக்கிதா, லேசா? 

மனைவி: கடைக்கண் புள்ளி என்று… 

இராமநாதஞ் செட்டியார் : கடைக்கண் புள்ளியாவது, கழுதைக்குட்டியாவது ! 

மனைவி: வாலில் சுளி? 

இராமநாதஞ் செட்டியார்: எவன் சொன்னது வாலில் சுளி என்று? நம்ம மாட்டுக்கு வாலில் சுளி இண்ணு சொல்றவனுக்குக் கண் பிடரியில்தான் இருக்கணும். 

(செட்டியார் வாங்கி வந்திருக்கும் சாமான்களை ஒவ்வொன்றாய் மனைவி பார்க்கிறாள்.) 

மனைவி : ஆரஞ்சிப் பழம் வாங்கி வந்திருக்கிய போலிருக் குதே? 

இராமநாதஞ் செட்டியார்: ஆமாம். ஆப்பிளும் ஒரு டஜன் வாங்கிவந்திருக்கிறேன். எல்லாவற்றையும் எடுத்துக் காற்றாட வை.’ 

மனைவி: எங்கே வாங்கினீர்கள்? சந்தையில் மாட்டை வித்திட்டுக் கோவைக்குப் போய்விட்டு வருகிறீர்களா? 

இராமநாதஞ் செட்டியார்: கோவை போவானேன்? சந்தையில்தான் பழங்கள் கூடை கூடையாய் வந்திருக்குதே! 

மனைவி: காய்கறி எதற்கு இத்தனை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்? அவ்வளவும் அழுகித்தானே போகும்? 

இராமநாதஞ் செட்டியார்: அழுகுவானேன்? நன்றாய்க் கை குளிரப் போட்டுச் சமையல் செய். மீதியிருந்தால் அடுத்த வீடு, அண்டை வீட்டுக்கெல்லாம் கொடு. குடியலூர்ச் சந்தையில் காய்கறி கொள்ளை மலிவு! குவியல் குவியலாய்த்தான் குவித்திருக் கிறான்கள்! 

மனைவி: அத்தனை காய்களும் விக்கணுமே? 

இராமநாதஞ் செட்டியார் : பதினாயிரம் ஜனங்களுக்கு மேல் கூடுகிற அந்தச் சந்தையில் இந்தக் காய்கள் ஒரு நொடிக்குள் விற்று விடாதா? 

மனைவி : ரோஜாப்பூ எதற்கு இத்தனை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ? நிமிஷத்தில் உதிர்ந்து வாடிப்போய்விடுமே! 

இராமநாதஞ் செட்டியார்: வாடினாலும் என்ன? ரோஜா ரோஜாதான்! ரஸம் வைக்கலாம். ஏன் அடுத்த வீட்டு ஜானகி, கமலம் இவர்களுக்கெல்லாம் கொடேன்? 

மனைவி : குடியலூர்ச் சந்தை பெரிய சந்தைதான் போலிருக்கு! 

(இராமநாதஞ் செட்டியார்: இதற்கு யாரையாவது கேக்கவா வேண்டும்! இந்தப் பக்கத்திற்கே அது பெரிய சந்தையல்லவா? 

மனைவி : நம்ம சந்தைக்கு அதைக் காலில்… 

இராமநாதஞ் செட்டியார்: சே! சே! யார் சொன்னது அப்படி? குடியலூர்ச் சந்தை எங்கே, நம்ம பொக்கிப் பயல் சந்தை எங்கே, கிட்டவா இருக்குது?சரி, பசி எடுக்கிது, என்ன வைத்திருக்கிறாய்? 

மனைவி : களைத்து வருவீர்களே என்று சாதந்தான் வடித்திருக்கிறேன். போடட்டுமா? 

இராமநாதஞ் செட்டியார் : சோற்றைத் தின்று தின்று சலித்துவிட்டது.ஏதாவது பலகாரம் பண்ணியிருக்கக் கூடாதோ? 

மனைவி : (புன்சிரிப்புடன்) இண்ணைக்கி மாடு வித்துவிடு மிண்ணு நான் ஜோஸ்யமா கண்டேன்? 

இராமநாதஞ் செட்டியார் : சரி, என்னை ஒண்ணுங் கேலி செய்ய வேண்டாம். மைசூர்ப் பாகும், ஜிலேபியும். ஒரு சேர் அந்தப் பையில் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு, ரெண்டு ஆப்பிளையும். நறுக்கிக் கொண்டு வா. 

(திரை)

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *