நெஞ்சில் ஈரம்
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 3,229
(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் திவாகர் அலுவலகம் கிளம்பும் போது அம்மா மாலதியின் குரல் கேட்டது. “திவா… இந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களோட ஊர் சுற்றல் வைத்துக் கொள்ளாதே. கல்யாணத் தரகர் சொன்ன இடத்திற்குப் பெண் பார்க்கப் போக வேண்டும்” என்றாள்.
அம்மா கொடுத்த பெண்ணின் புகைப்படத்தை அலுவலகம் எடுத்துச் செல்லும் பையில் போட்டு வைத்தது ஞாபகம் வந்தது. அலுவலகம் சென்ற பின் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வழக்கம்போல் அன்றும் வேலை அதிகம். அலுவலகம் விட்டுக் கிளம்பும் போது தூறலாக ஆரம்பித்த மழை திவாகர் நுங்கம்பாக்கம் பெருவழிச் சாலை அடைந்த போது கனமழையாக மாறியது.
இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கடையில் மழைக்கு ஒதுங்கினான். எதிர்ப்புறம் இருந்த கடை வாசலில் கிழிந்த புடவையுடன் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தாள். மழையில் புடவை நனைந்த நிலையில் அவள் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.
அப்போது தெருவில் இரு இளம் பெண்கள் பேசிய வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் பெண்களுக்கான சிறிய குடையுடன். மற்றொரு பெண் மழைக் கோட்டு போட்டுக் கொண்டிருந்தாள்.
குளிரில் நடுங்கும் மூதாட்டியைப் பார்த்த அந்தப் பெண் தன் மழைக் கோட்டைக் கழற்றி அவளுக்கு அணிவித்தாள், தன் கைப்பையிலிருந்து சில ரூபாய் நோட்டுக்கள் எடுத்து மூதாட்டியின் கையில் திணித்தாள்.
மழைக் கோட்டை அணிவிக்கும் போது அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த பரிவும், குளிரின் நடுக்கம் குறைந்ததால் முதியவளின் முகத்தில் பிரதிபலித்த நன்றி உணர்வும் திவாகரின் மனதைத் தொட்டன.
மழையில் நனைந்தவாறே அந்த இளம் பெண் சிநேகிதியை நோக்கிச் சென்றாள். அவள் நடக்கும் போது சற்றே சாய்ந்து நடந்ததை கவனிக்கத் தவறவில்லை திவாகர்.
வீடு திரும்பிய பின் கூட திவாகரின் மனம் அவளைச் சுற்றியே வட்டமிட்டது. அழகிய பெண், சாந்தமான முகம், மற்றவர்க்கு உதவும் விசாலமான மனம். அவள் கணவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி என்று நினைத்தான்.
***
மறுநாள் சனிக்கிழமை. காலைச் சிற்றுண்டியின் போது அம்மா கேட்டாள்.
“பெண்ணோட புகைப்படத்தைப் பார்த்தியா? நாளை காலை பத்து மணிக்குத் தரகர் வருவார். பதினோரு மணிக்கு வருவதாகப் பெண் வீட்டில் சொல்லி இருக்கிறோம்.”
பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த திவாகர் அதிர்ச்சி அடைந்தான். அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசினான். “அப்போ நாளைக்குப் பெண் பார்க்க போக வேண்டாமா” என்றாள் அம்மா. “கண்டிப்பாகப் போகிறோம்” என்றான் திவாகர்.
***
ஞாயிற்றுக்கிழமை. திவாகர், அம்மா அப்பாவுடனும், தரகருடனும் பெண் வீட்டை அடைந்த போது மணி பதினொன்று. பெண்ணின் பெயர் விமலா. ஒரே மகள். வேலையில் இருக்கிறாள்.
சிற்றுண்டி முடிந்த பின் விமலா வந்தாள். எல்லோருக்கும் வணக்கம் சொல்லி இருக்கையில் அமர்ந்தாள். விமலா சற்றே சாய்ந்து நடந்து வந்ததை திவாகரும் அவன் பெற்றோரும் பார்த்தனர். விமலாவிற்கு சிறு வயதில் வந்த கடும் ஜுரத்தால் இந்த நிலை வந்தது என்று சொல்லிய அவள் தந்தை “நான் எல்லாவற்றையும் தரகரிடம் சொல்லி இருந்தேன். அவரும் உங்களிடம் சொன்னார் அல்லவா?” என்றார்.
தரகர் குற்ற உணர்வால் தலைகுனிய திவாகரின் அம்மா சொன்னார்.
“விமலாவைப் பற்றி அறிந்து மற்றவர்கள் தான் வந்திருக்கிறோம். திவாகர் உங்கள் பெண்ணைப் பற்றிச் சொன்னான். கல்யாணத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் திவாகரும், விமலாவும்”
விமலாவிற்கும் அவளுடைய பெற்றோர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் திவாகரை அவர்கள் பார்த்ததில்லை. விமலாவின் சிறிய ஊனம் திவாகருக்கு எப்படித் தெரியும்? விமலாவின் தந்தையிடம் திவாகர் சொன்னான்.
“உங்கள் மகளை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் அவளை மணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”
விமலா திவாகரைப் பார்த்துக் கேட்டாள்.
“நான் உங்களை இதற்கு முன் பார்த்ததில்லை. என்னிடம் உள்ள இந்தக் குறையைப் பற்றி உங்களுக்கு யார் சொன்னார்கள்? நீங்கள் என்னை மணம் செய்து கொள்வது இரக்கத்தினால் என்றால் அது சரியல்ல. பின்னால் நாம் இருவருமே வருத்தப்பட நேரிடும்.”
திவாகர், வெள்ளிக்கிழமை அன்று கொட்டும் மழையில், விமலா மழைக் கோட்டை வயதான பெண்மணிக்கு அணிவித்ததைப் பார்த்தது பற்றிக் கூறினான்.
“உங்களுடைய செயலைப் பார்த்ததில் உங்களின் விசாலமான மனது தெரிந்தது. அதன் முன்னால் உங்கள் ஊனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை. அங்கு இருந்தவர்களில் யாரேனும் ஒருவர் ஒரு துணி கொண்டு கொடுத்து அந்த மூதாட்டிக்கு உதவியிருக்கலாம். குளிரைப் போக்க பக்கத்து கடையிலிருந்து ஒரு டீயாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். நான் உட்பட, அங்கிருந்த யாருக்கும் அது தோன்றவில்லை. மழைக் கோட்டு இல்லையென்றால், மழையில் நனைய வேண்டி வரும் என்று தெரிந்தும் நீங்கள் உங்கள் கோட்டை கொடுத்து உதவினீர்கள். மற்றொருவர்க்கு உதவ நினைத்த உங்களிடம் ஊனமில்லை. உதவாத மற்றொருவர்க்கு மனதில் தான் ஊனம்.
“மன ஊனம் உள்ளவர்கள் நிறைய சமுதாயத்தில் உண்டு. மற்றவர்க்கு உதவாமை, அசூயை, புறம் கூறுவது இவையெல்லாமே மன ஊனங்கள். நான் உடல் ஊனமில்லாத பெண்ணை மணந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப் பெண்ணிற்கு மன ஊனம் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா.”
“என் மனைவி நிச்சலமான மனதுள்ளவளாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. என் கணிப்பின் படி உங்களுக்கு மன ஊனமில்லை. எனக்கும் என் பெற்றோருக்கும் இந்தக் கல்யாணத்தில் பரிபூரண சம்மதம். முடிவு உங்கள் கையில்!”
விமலா நாணத்தால் தலை குனிந்தது அவள் சம்மதத்தைப் பறை சாற்றியது.
– ஜூலை 2022, அமுதசுரபி.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
