நூறு பரப்பு நிலம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 80 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதப்பர் கிணற்றடி ஆடுகாலின் நிழலிலமர்ந்துசாமைப் பழங்கஞ்சியைச் சிரட்டையில் ஊற்றிக் குடித்துக் கொண்டி ருந்தார். அவர் மனைவிக்குச் சீதனமாகக் கிடைத்திருந்த நூறு பரப்புக் காணியில் எண்பத்தைந்து பரப்பை கடந்த பதினைந்தாண்டுகளில் விற்றழித்துவிட்டார். இதை எண்ணிக்கொண்டபோது தமது ஏமாளித்தனத்தின் மேலும், முகுந்தனின் புத்தி சாதுரியத்தின் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்து அவருக்கு வயிறுபற்றி எரியலாயிற்று.

கல்யாணம் செய்த புதிதில் சீதனத் தோட்ட நிலத்தில் புகையிலைக் கன்று வைப்பதற்குக் கைமுதல் இல்லாமல் கஷ்டப் பட்டு, கடைசியில் முகுந்தன் என்ற அயலூர்ப் பணக்காரன் ஒருவனிடம் வட்டிக்குப் பணமெடுத்து அவர் புகையிலைக் கன்று நாட்டிய, தை மாதத்தில் பக்கத்துத் தோட்டங்களில் எல்லாம் புகையிலைக் கன்றுகள் மதமதவென்று வளர்ந்து நின்றன.

முடிவில் பருவத்தே பயிர்செய்யாத குறையால் அவர் புகையிலைக் கன்றுகள் மாங்கன்றுகள் போலாகி, இட்ட முதலில் கால்வாசி கூடத் தேறவில்லை. வேறு வழியின்றி மனைவி அன்னத்தை மன்றாடி 5 பரப்புக் காணியைக் கடன் காரனுக்கு எழுதிக்கொடுத்தார்.

அடுத்தவருடமும் பணமில்லாமல் நேரகாலத்தோடே முகுந்தனிடம் கடன் கேட்கச் சென்ற மருதப்பர் நூறு நடை நடந்து அலுத்த பின்னர் அவ் வருடமும் முன்போலவே தை மாதத்திலேயே பணங் கிடைத்து, புகையிலைக் கன்று நாட்டி, முந்தின ஆண்டு போல் நட்டப்பட்டு, மீண்டும் 5 பரப்புக் காணி முகுந்தனுக்கு எழுத நேர்ந்துவிட்டது.

முதல் தடவை ருசிப்பட்ட முகுந்தன் தொடர்ந்தும் பிந்திப் பிந்திக் கடன் கொடுத்து பதினைந்து வருடங்களில் 75 பரப்புக் காணியை மருதப்பரிடமிருந்து குறைந்த விலையில் அமுக்கிக் கொண்டான்.

இந்த ஆண்டுதான் மருதப்பருக்குப் புத்தி வந்து பத்துப் பரப்புக் காணியைப் புரட்டாதி மாதத்திலேயே வேறொருவனுக்கு விற்று காசை வாங்கி, கார்த்திகை மழையில் நனைந்து நனைந்து புகையிலைக் கன்று வைத்துவிட்டார்.

கருகருவென்றிருக்கும் புகையிலைக்கன்றின் அகன்ற இலைகள், காற்றில் புரண்டு அலைபாய்வதைக் கண்டு நெஞ்சில் இன்பம் சுரந்து பெருக, சிரட்டையை வாய்க்கால் மணலில் போட்டுவிட்டு எழுந்தார் மருதப்பர். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *