கர்ம வியாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 76 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு பகலாக உபத்திரவப் படுத்தும் மார்பு வலியும் பணக்கார மனைவியின் அலட்சியப் போக்கும் சேர்ந்து வருத்த காசிலிங்கம் பெருமூச்சோடு நித்திரைப்பாய் விட்டெழும்பி அறை வாசலுக்கு வந்தான். கையிலிருந்த தண்ணீர்ச் செம்பை வாசல் படியில் பட்டென்று அடித்து வைத்த மனைவி சிவபாக்கியம் “இப்படி நித்தச் செத்த வீட்டுக்குப் பதிலாக…” என்று நிறுத்திய பாதி வாக்கியத்திற்குத்தான் எத்தனை பயங்கர சக்தி! எவ்வளவு கொடூரம்!

காசிலிங்கம் என்றைக்கு அவள் கணவனாக நிச்சயிக்கப்பட்டானோ அன்றே பற்றிய மார்பு வலி! உள்நாட்டு வைத்தியம் பார்ப்பவர்கள் சரி, புறநாட்டு மருத்துவம் பயின்ற வைத்திய மேதைகள் சரி எவ்வளவோ முயன்றும் எள்ளளவும் குணப்படுத்த முடியவில்லை. நேரயில் உழன்று நலிந்து காற்றிலாடும் காய்ந்த புல் போலாகிவிட்ட காசிலிங்கம் தன் வைத்தியச் செலவுக்காவது உதவட்டுமே என்று ஆசிரியத் தொழிலில் ஒட்டிக் கொண்டிருந்தான்.

கொழும்பு வந்திருக்கும் ஹோப் கப்பலும் கடைசியாக அவனுக்கு நோய் இருப்பதையே ஒப்புக் கொள்ள மறுத்து நேற்று அவனைத் திருப்பி அனுப்பிவிட் டது.

ஐம்பதினாயிரம் ரூபா சீதனத்தோடு வந்தவள் தான் என்ற மமதையில், அவன் நோய் வேதனையை மனத்துயரைக் குறைக்க அன்பாக ஒரு சொல் பேசுவதற்கே மறுத்து வந்தவள் நேற்று ”இவரில் இனி வேலையில்லை” என்பது தீர்மானமாகத் தெரிந்ததும், இன்று அவனைச் செத்துத் தொலையச் சொல்லும் அளவுக்கும் வந்துவிட்டாள்.

கண்ணிலூறிய நீரையும் முகத்தையும் சேர்த்துக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்த காசிலிங்கம் ஆர்வத்தோடு ஓடிவந்த தன் ஒரே மகனை, மூன்று வயதுக் குழந்தையை வாரி எடுக்கப் போன போது “நில்லுங்கள்! பிள்ளைக்கும் நோய் தொற்றிவிடும்!” சிவபாக்கியம் கத்தினாள்.

தொற்றாநோயைத் தொற்றிவிடும் என்று இன்று புதிதாகச் சொல்கிறாளே என்று குமுறியவன் “உன் விருப்பம் போல் நான் செத்துவிட்டேன் என்று எண்ணிக்கொள். நான் இனியும் உனக்குச் சுமையாக இருக்க மாட்டேன்!” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறிவிட்டுக் கட்டியவேட்டியுடன் தெருவில் இறங்கிய போது சிவபாக்கியம் அவனைத் தடுக்கவில்லை. “தொலையட்டும்” என்று அவள் முணுமுணுத்ததும் அவன் காதில் படத்தவறவில்லை.

ஊணுறக்கமின்றி எங்கெங்கோ அலைந்து மூன்றாம் நாள் செல்வச் சந்நிதிக்கு வந்து சேர்ந்த காசிலிங்கம் கோயில் வாசலில் பசிக்கும் வயிறும், வலிக்கும் மார்பும் கொதிக்கும் மூளையும் கசியும் கண்களுமாக இருந்த போது ”யார் நீங்களா?” என்ற அலறல் கேட்டு நிமிர்ந்தான்.

ஒரு கன்னிப்பெண் “வாருங்கள் வீட்டுக்கு!” என்று கண்களாலும் குரலாலும் கெஞ்சி நின்றாள். அந்த நொடியில் பாதி மார்பு வலி பறந்து விட்டது. காரில் அவளருகில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கையில் பூரண குணமாகி அவள் கன்னங்களைக் கண்களால் ரசித்துக் கொண்டிருக்கும் வாலிபனாகி விட்டான் அவன். 

“இது கர்மவியாதி! உங்கள் மேல் தன் உயிரையே வைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பெருமூச்சு நிற்கும போது தான் இந்த நோய் குணமாகும்”. – ஒரு ரேகை சாஸ்திரி கூறியது காசிலிங்கத்தின் மனச் செவிகளில் எதிரொலிக்கிறது.

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *