நாடகம் போட்டுப்பார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 358 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7

‘நான் ஒரு முட்டாளுங்க’ நாடகம் அரங்கேறுவதற்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருந்தன. ராம்குமாருக்கு து து ஒரு புது அனுபவம். இருபத்துமூன்று மணி நேரமும் இதைப் பற்றிய சிந்தனைதான் – பாங்க் வேலையின்போது கூட. இரவு எப்போதாவது அவனையும் மீறி ஒரு மணி நேரம் தூங்குவதோடு சரி. 

அரங்கேற்றத்துக்கு முதல் நாள் ‘கிராண்ட் ரிகர்சல்.’ அதைச் சுருக்கமாகவும் செல்லமாகவும் ‘கிராண்ட்’ என்று அழைப்பார்கள். 

இந்தக் காலகட்டத்தில் இசை, ஒளியமைப்பு, காட்சியமைப்பு பிரச்னைகள் முக்கியமாகிவிடும். கர்னாடிக், லைட், சினிமா, ஐரோப்பிய, அரேபிய சங்கீத ‘பிட்’டுகளுக்காகக் காஸெட்டுகளை தேடி தேடி அலைந்து, காட்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப செலக்ட் பண்ணி, ஓரிரு காஸெட்டுகளில் ரிக்கார்டு செய்து கொண்டு, மியூஸிக் ரிகர்சல் செய்வார்கள். ‘கிராண்ட்’ அன்று காலை செட் போட்டதும், விளக்குகளைப் பொருத்தி ‘லைட் எஃபெக்ட்ஸ்’ என்று ஒரு ரிகர்சல் நடைபெறும். மாலையில் அரங்கேற்றத்துக்கு ஒரு அரங்கேற்றம் நடைபெறும். சாதாரணமாக இடையில் நிறுத்தாமல், நாடக ஷோ மாதிரியே நடைபெறும். குழுவினரின் உறவினர்களும், நண்பர்களும் சில சபா காரியதரிசிகளுமாகச் சுமார் நூறு பேர் அழைக்கப்படுவார்கள். அவர்கள் ரசிப்பதை அல்லது ரசிக்காததைப் பார்த்து, சேர்த்தும் குறைத்தும் மாற்றங்கள் செய்து மறுநாள் அரங்கேற்றம் செய்வார்கள். 

ராம்குமார் கல்கத்தாவிலிருந்து சென்னை வந்தபோது தமிழ் நாடக மேடையைப் பற்றி எதுவுமே அறியாமல் இருந்தான்.ஐந்தாறு மாதங்களில் அமெச்சூர் குழுவினருடன் நெருங்கிப் பழகத் தொடங்கியதிலிருந்து பல விஷயங்கள் அவனைக் குழப்பின. வெற்றி நாடகத்தின் அளவுகோல் என்ன? ஆடியன்ஸின் ஓயாத சிரிப்பா? கேட் வசூலா? குழுவின் செல்வ நிலையா? 

நாடக நடிகர், நடிகைகளின் புகழுக்கு அவர்கள் நடிப்புத் திறமை காரணமாக அல்லது அவர்களது சினிமா, டி.வி. பப்ளிசிடி காரணமா? நாடகக் கலை தாய் என்றால், மகன்கள் தாய்க்குப் பெருமை சேர்க்கிறார்களா? பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால், நாடக விளம்பரங்களில் ‘சினிமா புகழ்’ என்று போட்டுக் கொள்கிறார்களே… சினிமா விளம்பரங்களில் ஏன் ‘நாடகப் புகழ்’ என்று பெருமையாகப் போட்டுக் கொள்வதில்லை? 

‘நம்மகிட்டே மட்டும் ஒரு சினிமா நடிகரோ, நடிகையோ இருந்தா கவலையே படவேண்டாம். வெளியூர்ல ஈஸியா ‘புக்’காயிடும். முக்கியமா எக்ஸிபிஷன் நடத்தவறவங்க தேடிக்கிட்டு வந்து சான்ஸ் குடுக்கிறதோட, கேட்ட பணத்தையும் குடுப்பாங்க. 

‘மார்க்கெட் இப்படியிருக்கும்போது, நல்ல நாடகம் தயாரித்து என்ன பிரயோஜனம்? நாமே பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளவா நாடகம்?’ தன்னையே கேட்டுக் கொண்டான் ராம்குமார். அவன் உறுதியானான். ஆமாம், என் திருப்திக்கு நாடகம் தயாரிக்கப் போகிறேன். அது உண்மையாகவே நல்ல நாடகமாயிருந்தால், நிச்சயம் சான்ஸ் கிடைக்கும். ரசிகர்கள் வரவேற்பார்கள். பத்திரிகைகள் பாராட்டி எழுதும். அந்த நம்பிக்கைதான் நாடகக் கலையின் வளர்ச்சிக்கு ஆணிவேர்.’ 

‘நான் ஒரு முட்டாளுங்க’ நாடகத்தைப் பற்றி ராம்குமாருக்கு வெகு திருப்தி ஏற்பட்டிருந்தது. அது ‘க்ளிக்’ ஆகும் என்ற நம்பிக்கையும் இருந்தது. 

ஒரு நாள் நாடகாசிரியர் வி.கே. ‘ரன் த்ரூ ரிகர்சல் பார்த்தார். “நான் எழுதியதை நிறைய மாத்தி நல்லாவே செஞ்சியிருக்கீங்களே” என்று சர்டிபிகேட் கொடுத்தார். தான் எழுதியது சினிமாவில் உருத் தெரியாமல் போவதைக் கண்டு பழக்கப்பட்டுப் போய்விட்டிருந்ததால், நாடக மேடையிலும் தன் எழுத்து காணாமல் போனதைக் குறித்து வி.கே. சிறிதும் கவலைப்படவில்லை. எப்படியாவது ராயல்டி பணம் வந்தால் சரி. 

நாடகத் தயாரிப்பாளர் சற்று மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்து விட்டால் விதிக்குப் பொறுப்ப தில்லை! 

முரளி ஒரு பயங்கரமான செய்தியுடன் வந்தான். ‘குமார், சேவிங்ஸ் சவிதா நாடகத்துல நடிக்க முடியாதுன்னுட்டாங்க வீட்டிலே பெரிய ப்ராப்ளமாம்!” 

“என்ன முரளி இது பெரிய குண்டத் தூக்கிப்போடறே?” 

“சவிதா மாமனார் ஊர்லேருந்து வந்திருக்கார். அவர்கிட்டே சவிதா டிராமாலே நடிக்கிறதைப் பத்திச் சொல்லியிருக்காங்க. அவருக்கு ரொம்பவும் கோவம் வந்திருச்சாம். பிள்ளைகிட்டே ‘இன்னிக்கு டிராமா, நாளைக்கு டி.வி. அப்புறம் சினிமாவா? உன் புத்தி ஏண்டா இப்படிப் போச்சு? நம்ம குலம் என்ன? கோத்திரம் என்ன? உடனே கான்சல் பண்ணச் சொல்லு’ன்னாராம். சவிதாவோட ஹஸ்பெண்ட், இனாகுரேஷனோட நின்னுடச் சொல்றேன்’னாராம். ‘அதெல்லாம்’ வேணாம். ஒரு டிராமா நடிச்சா என்ன,நூறு டிராமா நடிச்சா என்ன… நான் சொல்றபடி கேக்கலேன்னா, உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்’னு சொல்லிட் டாராம். சவிதா எங்க வீட்டுக்கு வந்து இதைச் சொல்லிட்டு, வேறே யாரையாவது போட்டுக்குங்க ப்ளீஸ்’னு அழுதுகிட்டே சொல்லிட்டுப் போயிட்டாங்க.” 

“அப்போ கிராண்ட் ரிகர்சலுக்குள்ளே யாரைத் தயார் பண்றது… பெரிய ரோல் ஆச்சே… நீ வரயா, அவங்க வீட்டுக்குப் போய் நிலைமையை எடுத்துச் சொல்லி, சவிதா- மாமனார்கிட்டே ரிக்வெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்!” 

“வீட்டுக்கு வராதீங்கன்னு சவிதா சொல்லிட்டாங்க. மேட்டர் ரொம்ப காம்ளிகேட் ஆயிடுமாம்.” 

“அப்படின்னா இனாகுரேஷனை ஒரு மாசம் தள்ளிப் போட்டுடலாம்.” 

“சீச்சீ. உனக்கு இது முதல் நாடகம்… அதான் இப்படிப் பேசறே. இதெல்லாம் சகஜம்பா…அந்த டேட்லே நம்ம இனாகுரேஷன் நடக்கும்.” 

“எப்படி?” 

“பாரேன்!” 

– தொடரும்…

– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *