வீடு
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 229
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வீடு’ எழுதப்படுவதற்குக் கழைக் கூத்தாடியின் நிதானந் தேவை. மூலத்தை நீட்டவோ மழிக்கவோ கூடாது. புத்த போதனைகளுங் கோட்பாடுகளும் அசலாகவே இருத்தல் வேண்டும். கதையென்றாலுங் கதையேதான்.
ஒறுப்பாகவேனுஞ் சில பாளிச் சொற்கள் இக்கதையிலே வருகின்றன பௌத்த மதக் கோட்பாடுகளை விளக்க அவை அவசியமே என்று காணப்படும் இடங்களிலே மட்டுங் கையாளப்பட்டுள் ளன. அவற்றிற்குச் சமஸ்கிருத அர்த்தங்கள் ஏற்ற வேண்டாம்.
வினை
புத்தர் மௌனத்தின் மோனத்திலே எழுந்தார். இதழ்கள் பூட்டே அவிழாது ஒன்றின் மேல் ஒன்றாகச் சயனித்தன முகம் சிலையாக பாவம் சித்திரமாக அமைந்தது. அமைதியான அமைதி; நிறைவான நிறைவு. எதிரிலே பாத்திரத்துடன் நின்ற இளவரசன் நந்தகுமாரனின் கண்களைக் கருணா மூர்த்தியின் விழிகள் ஒரே கணத்தின் சிதறலிலே துழாவின. நடக்கத் தொடங்கினார். அவனோ தானத்தைப் பெற்றுக் கொள்ளாது செல்லும் புத்தரைப் பின் தொடர்ந்தான். சாக்கிய வேந்தர் சுத்தோதணன் திகைத்து நின்றார். ஸப்த ஸப்த ஸ்வரங் களை இனிதாகக் குழைத்துப் பொழிந்த வீணையின் தந்திகள் தெறித்து எழுந்த அபஸ்வரத்தைத் தொடர்ந்து குடிபுகும் நிச்சுவாசப் பேரமைதி. பிரேத வீட்டின் சோகம் முளைவிடுகிறது.
கபிலவஸ்துவிலே புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருந்த அரண்மனையில் அன்று மூன்று வைபவங்கள். அரண் மனைக் கிரஹப் பிரவேசம் ; நந்தகுமாரனின் முடிசூட்டு விழா; அவனுக்கும் ஜனபதகல்யாணிக்குங் கல்யாணம். சித்தாத்தர் தனது லௌகீகக் கனவுகளை நொருக்கிக் கடற்கரைக் குருத்து மணலாக்கிய பின்னர், மன்னர் சுத்தோதணன், தன் இளைய மனைவி பிரஜாபதி கௌதமி மூலம் பெற்ற நந்தகுமாரன் சாக்கிய மன்ன னாக வீற்றிருப்பான் என்ற நம்பிக்கை வேர்களை ஆழம் ஆழமாக ஊன்றி, வாழ்க்கைக் கிளைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார். இன்றைய-இந்தப் போழ்திற்காக- சாம்பரிற் குளித்த தணலாக எத்தனை காலந் தவித் திருக்கின்றார்? எல்லாமே மங்கலமாக நடக்கின்றது என்ற நினைவுப் போது மலர, தானத்தைப் பெற்றுக் கொள்ளாது புத்தர் நடக்கிறார். காந்தத்தினால் ஈர்க் கப்படுங் கருந்தாதுத் துணுக்காக நந்தகுமாரன் பின் தொடருகின்றான்.
மகனைத் தடுத்து நிறுத்த இயலாததை உணர்ந்து, மின்னலை விழுங்கிய கருமுகிற் குன்றென முகம் வாடி நின்றார். அவர் தம்முடைய நம்பிக்கை வேர்கள் ஒவ்வொன்றாக அறும் அவ்வேளையிலும், வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை.
கீழே இறங்குவதற்கு முன்னர், புத்தர் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் வைத்தாவது தானத்தை ஏற்றுக் கொள்வார் என்ற அவாத் தாரகை எரிநட்சத் திரமாக, இருட்காடே மனவிசும்பில் விரிகிறது. சரியாக உச்சிக்கு வந்து கதிர்ச் சரங்கள் விழ இரு நாழிகை நேரமிருக்கும். அதற்கிடையிற் சேர்க்காது போனால், தானம் வீண்; விழா பாழ்.
ஒவ்வொரு படிக்கட்டிலும் மிக நிதானமாகவும், அமைதியாகவும் புத்தர் இறங்கினார். தானப் பாத்தி ரத்துடன் நந்தகுமாரன் பின்தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் மெதுவாகக் கழன்று கழன்று உதிருகின்றது. கீழ் மண்டபத்தை அடைந்ததும் புத்தரின் சென்னி திரும்பிற்று. அப்பொழுதும் நம்பிக்கையின் மெல்லிய நூலில் அவன் வலிக்கப்பட்டான். பிரிகள் சிலிம்பி நூல் அறுந்தது.
புத்தர் விஹாரத்தை நோக்கி நடந்தார். மௌனப் போர்வை. உள்ளத்திலே பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் கூத்தாட, நியாயப்பிரமாணங் ஏதுகளுக்குங் குதிராத நிர்ச்சிந்தைச் களுக்குங் காரண சூன்யத்தில் நத்தகுமாரன் பின் தொடர்ந்தான்…
இருள் வானிலே சட்டென்று பூத்துக் கண்களைக் கூசச் செய்யும் நட்சத்திர மொன்று அக்காலதரிலே தோன்றிற்று. சாக்கியப் பெண்களின் எழில்ராணி ஜனபதகல்யாணி மணப் பெண் கோலத்தின் எழில் ஏந்தி தன் காதலனை நோக்கினாள்.
சிங்கத்தின் வாயொன்று கர்ஜிக்கும் பொழுது சிக்காராகத் திறந்தது போன்ற அமைப்பிலிருந்தது. அந்தக் காலதர். காங்கையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்குஞ் சூரியக் கதிர் முற்றிச் சரிந்த நெற் கதிர் வண்ண வித்தை எழுப்பி முகத்தின் விமலத்தைத் துல்லியமாகக் காட்டிற்று.
கூன் நுதல்; கூர் மூக்கு; கட்டித் தயிரிற் சிக்கிய இரு நாவற்பழக் கண்கள்; எலும்புகள் எதுவும் தெரி யாது குங்குமச் சதை நிறைந்த முகம். கருமேகத்தின் சமுத்திர அலைகளை நிகர்த்த அளகபாரத்தில் ஜொலித்த நகைகளெல்லாம் விண் மீன்களை நாணச் செய்தன. பருவத்தின் திரட்சி மேடாய் முன் தள்ளும் மார்புகளின் பாரத்தைக் காலதரின் கீழ் விளிம்பிலே சாத்திய பாவத்தின் ஒயிலே சௌந்தர்யத் திலகமாகத் திகழ்ந்தது.
நந்தகுமாரன் நின்றான்.
அவளுடைய அந்த அகலிய நயனங்கள் இமைத் திரைக்குப் பின்னால் கண்ணாமூஞ்சியாடின. பின்னர் கூச்சந் தெளிய, வெளிவந்து. இமை வாய் விரித்துச் சிரிப்பில் அலர்ந்தன.
விழிகளைப் பருகும் விழிகள். நொடிப்பொழுது நேரத்தில், யுக யுகாந்திரத்து இரகசியங்கள் பின்னிப் பிணைந்து சங்கமித்துக் கலந்தன.
“விஹாரத்திற்குச் சென்று திரும்புவேன்!”
“சீவர ஆடைக்குள்ளே சிற்றின்ப நினைவுகளைப் புதைத்து விட்டவர்களுடைய இருப்பிடத்திற்கா? என் மனம் சுடரைச் சுற்றும் விட்டிலாக நடுங்குகின்றது.”
“உன் எழிலோவியம் தீட்டப் பெற்ற மனத்திற்குள் துறவறத் தத்துவம் நுழைய மாட்டாது.”
“முகூர்த்த வேளை சமீபிக்கின்றது.”
“கடிதில் நான் திரும்புவேன்.’
“நான் என் விழிகளை நீங்கள் வரும் வழியிற் புதைத்துக் காத்திருப்பேன்”
இக் காட்சியினைக் கண்டுங் காணாதவராக சலனமற்ற மனத்துடன், புத்தர் விஹாரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
வழி
புத்தர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். நியாய வரையறைக்குள் அடங்காது பிதுங்கும் பக்தியுடன் நந்தகுமாரன் நின்றான். அவ்விடத்தில் ஏதேனொரு பூந்தடியை நாட்டியிருந்தால், அடி வேரூன்றி நுனி தளிர் தள்ளியிருக்கும்.
நண்பகல் கால் நாழிகை ஓட்டத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்த விரற்கட்டை நேரந் தவறி னால், தானம் கொடுப்பதுமில்லை; கொள்வதுமில்லை. கண்களைத் திறக்காமலே, “நந்த, நான் தானத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்” என இரு கைகளையும் புத்தர் நீட்டினார்.
அஞ்சலியில் உடலைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டு, தானத்தை அளித்தான். வயிற்றுச் சுமையை இறக்கியவளின் நெற்றியிலே துளிர்க்கும் நித்திலத் துளிகளை நினைவூட்டும் வியர்வை மணிகள்.
புத்தம் புதிய குவ ளை மலர்களாகப் புத்தரின் கண்கள் மலர்ந்தன. தானத்தை ஏற்றார்.
நந்தகுமாரனின் முகத்திற் கேள்வியொன்று கொக்கு நிஷ்டையிட்டிருப்பதை அவதானித்தார்.
“நந்த, என்ன யோசனை? எனக்கு அவகாசமுண்டு”.
“திரிகால முணர்ந்த திரிலோகமூர்த்தி நீங்கள். மதக்கோட்பாடுகளின் முடிச்சுகளைப் பிரித்துப் பார்க்கும் அவகாசத்துடனா நான் வந்திருக்கிறேன்? மூத்தவர் முதல்வர், புனிதர், புண்ணியர்! உங்களுடைய ஆசி பெற விழைந்தேன். சண்டாளர்களிடங்கூடத் தானம் ஏற்கும் நீங்கள், ஏன் என் தானத்தை அரண்மனையில் ஏற்க மறுத்துவிட்டீர்களென்பதை அறியாதே என் மனம் குழம்புகின்றது.”
சுபாவத்திற்கு எதிராக உணர்ச்சியில் வெந்த நந்த குமாரனின் வார்த்தைகளிலேகாங்கை கொழுத்துக் கிடந் ததை உணர்ந்தார். விழிப்புலன் அவனுடைய முகத்தை மேய்ந்தது.
உலகின் துன்பங்கள் தாக்காத பால்முகம். இருப் பினும், பாலுணர்ச்சி அலைமோதல்களிற் குதிர்ந்து இச்சாபங்க முற்றிருந்த ஒரு மனக்குறையின் சுவடு அவ னுடைய முகத்தில் முத்திரையிட்டிருந்ததை அனுமானித்தார்.
அவருடைய பார்வையிலிருந்து நழுவுந் தப்புவகை எண்ணம் குருத்துத் தள்ளுகின்றது.
“விடை தாருங்கள்.”-குரலில் அவசரங் கொப் பளித்தது.
”அவசரமா? எதற்கு இவ்வவசரம்? நாம் மூப்பினை யும், சாவினையும் நோக்கி வேகமாக இயங்கிக் கொண் டிருக்கின்றோம் என்பதை உணராது, அற்பங்களுக் காக-மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் மிக மிக அற்பங்களுக்காக – நாம் அவசரப்படுகின்றோம்.”
”முகூர்த்த வேளைக்கு முன்னர் நான் திரும்பி விடவேண்டும். நானேகும் வழியைப் பார்த்தே ஜனபத கல்யாணி கால் கடுக்க நிற்பாள்.”
“வேளை-முகூர்த்தம் -நேரம்! நந்த. இந்தக் கல் யாண முகூர்த்தந் தவறினால் இந்தப் பூவுலகில் எதிர் காலத்தில், கல்யாணங்களே நடைபெறாதிருக்கப் போகின்றனவா? எத்தனையோ முகூர்த்தங்கள் மரித்த பின்னர் இம்முகூர்த்தம் வந்திருக்கின்றது. இந்த முகூர்த்தம் இறந்த பின்னரும், எத்தனையோ முகூர்த் தங்கள் விளையக் காத்திருக்கின்றன. இம்முகூர்த்தத்தி லிருந்து இன்னொரு முகூர்த்தம் வரும்வரை காத்திருப் பதற்கிடையில், நீ மண வாழ்விற்குத் தேவையான இளமையை இழந்து விடுவாயா? வேளையைப் பற்றி யும், முகூர்த்தத்தைப் பற்றியுங் கவலைப்படும் நீ, இவற்றின் ஓட்டத்தினாலேற்படும் மூப்பினைப் பற்றிச் சிந்தியாதிருப்பது ஏனோ? வேளைக்கும் சித்தத்திற்கும் சம்பந்த முண்டு என்ற உண்மையை மறக்காதே. அனந்தமென்ற இறந்தகாலத்திலிருந்து அனந்தமென்ற எதிர்காலத்தை நோக்கி இவை இயங்கிக் கொண்டிருக் – கின்றன. இறந்தகாலம் எதிர்காலம் என்ற இரண்டு போழ்துகளைப் பிரிக்கும் இமைப்பொழுதுதான் இந்த நிகழ்காலம். அதனை நீ வேளையென்றோ முகூர்த்த மென்றோ அழைக்கலாம். உலகில் எல்லோரையும் துன்பத்திற்குள்ளாக்கும் பிணி-மூப்பு-சாக்காடு ஆகிய ண்மைகளைப் பற்றி உன்னுடன் நான் பேசும் முகூர்த்தம் இதுதானென்று வைத்துக் கொள்.”
அர்த்தங்களின் அடி முடி எதுவுமே அறிவுக்கரங் களுக்குட் சிக்காது – ஆனாலும், அதற்குள் அனந்தகோடி அர்த்தங்கள் விரிவதான ஒரு மயக்கத்தை அந்த வார்த் தைகள் பாய்ச்சுகின்றன. இருள் முகிலின் கரும் வயிற்றைப் பிளந்து திடீரெனப் பிரசவமாகும் மின்னலைப் போன்று ஏதோ ஒரு பிரகாசந் தோன்றி. மறுகணமே இருட் சாந்து வியாபித்து விரிகின்றது.
யாரிடமுங் காண இயலாத ஓர் அமானுஷ்ய காந்த சக்தி புத்தரிடந் துலங்குகின்றது. அதன் ஈர்ப்பிற்குக் கட்டுப்பட்டு அமருகின்றான்.
“தானத்தை விஹாரத்தில் வைத்து ஏற்றுக் கொண்டதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?”
”உன் மொழியில், அதற்கான முகூர்த்தம் இப் பொழுதுதான் வந்தது எனவும்வைத்துக் கொள்ளலாம்.”
“தூய நெறிகளைக் கடைப் பிடித்துத் துல்லியர் களாக வாழும் புத்தருக்கும், பிக்குகளுக்குந் தானம் வழங்கவே தகுதியற்ற பாவியென்று அரண்மனையிலுள் ளோர் இகழ மாட்டார்களா? நீங்கள் துறவறம் நாடிய தால் க வெறுமையாக இருக்கும் மன்னர் வார்சுதார் பதவியை நான் நிரப்பல் வேண்டுமென்பது எந்தையின் விருப்பம்.”
அஞ்ஞான மருள் சூழ எழும் ஐயத்திற் பிறந்த கேள்வியல்ல என்ற உண்மையிற் காலப் புழுதி படியவில்லை.
“மன்னன்-செல்வாக்கு – அந்தஸ்து! இவை எதனால் உண்டாகின்றன? பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும், இல்லை, அதற்குப் பின்னரும்- சம்சாரச் சக்கரம் ஓயாமல், தரிக்காமற் சுழல்கின்றது. நமது ஊழ் வாழ்க்கையில் இதனைச் சுழற்றுகின்றது. நீ சென்ற என்னவாக இருந்தாய்? அடுத்த வாழ்க்கையில் என்ன வாகப் பிறப்பாய்? இன்றிருக்கும் நிலை, நாளையுஞ் சாசுவதமானதா? இதனை அறியும் மார்க்கத்தினைப் புரிந்து கொள்ள உன் சித்தத்தினைப் பழக்கியெடுக்க முனைந்ததுண்டா? சீலமே தானமளிக்கும் ஸ்திதியினை நிச்சயிக்கின்றது.”
‘சீலமா? நீங்கள் மனிதரை வாட்டும் பிணியென்ற துன்பத்தைத் துடைக்கவும், எங்களால் இன்பமென்று கொள்ளப்படும் சகலவற்றையுந் துறந்தீர்கள். பிணி பரப்புந் தொழிலில் ஈடுபட்டு, பல ஆடவருக்குத் தன் உடலைச் சிற்றின்பப் பொருளாக விருந்து படைத்து, அவர்களது சீலநெறியைச் சோரப்படுத்தி, அவர்களது பணத்தைக் கவர்ந்து வாழும் நகர சோபினியிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்? கர்ம வினையாற் சண்டாளனாகவே பிறந்தவனிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்?” பிறப்பிலேற்பட்ட லௌகீக வசதிகளில் முளை கொண்ட செருக்கே உபரியாக வார்த்தைகளில் வெடித்துச் சிதறின.
“தொழிலினைக் கொண்டே மக்களின் உயர்வு தாழ்வுகளை மதிக்கும் ஜாதி முறை. பிராமணியச் சனாதனக் கோட்பாடுகளின் அறுவடை. நீ உன் முன்னைய பிறவிகளெல்லாவற்றிலும் மனிதனாகவும் மன்னனாகவும் பிறந்தாயா?… ஜாதிக் கோட்பாடுகளை வேருடன் கல்லியெறிய விரும்புபவன் நான். நகரசோபினி பரத்தைத் தொழிலை மேற்கொண்டமைக்குக் காரணம் என்ன? ஊழா? இம்மைப் பிறப்பா? அல்லது, அவளுடைய அழகில் பித்தராகிய சீமான்களெல்லாருஞ் சேர்ந்து அவளை நகர சோபினியாக்கிய ஏற்பாட்டி னாலா? அவளுடைய உடல் அழுக்குப் படிந்ததாக இருக்கலாம். இருப்பினும்,சித்தம் அன்னபுள்ளன்னத் தூய்மையாக இருக்கின்றதே…நந்த, ஒருவன் பிராமண னாகப் பிறப்பதுமில்லை; சண்டாளனாகப் பிறப்பது மில்லை. ஒருவனுடைய செய்கைகள்தாம் அவனைப் பிராமணனாகவுஞ் சண்டாளனாகவும் ஆக்குகின்றன.”
கல் வீசப்பட்ட குளத்தில் எழும்பும் அலைகளன்ன: ஹேது வட்டம் விரிந்து கரைதட்டி, மோதி, மடிந்து…
“இந்தப் பிரபஞ்சத்தில் நமது வாழ்க்கை இல்லாத தொன்று; அது கானல் நீர்-கனவு. இறந்த காலத்தை மறந்து விட்டோம்; அஃது ஒரு மறைந்த கனவு. எதிர் காலம் ஒரு சூதாட்டம்; அது நிச்சயமற்ற கனவாக விரைவாகவுந் தொடர்பாகவும் ஓடிக்கொண்டிருக் கின்றது. மற்றவர்களைப் பற்றி ஏன் பேச்சு? நீ சுயமாக அதிகமாகவே நேசிக்கும் உன்னையே நினைத்துப் பார். சற்று நேரம் சிந்தையை ஒருங்கு குவித்து யோசித்துப் பார்”
புத்தர் மீண்டுந் தியானத்திலே ஆழ்ந்தார்.
நந்த குமாரனின் பார்வை, விஹாரத்தின் சூழலில் அலைக்கழிகின்றது.
வெள்ளரசமரங் குடை விரித்து நிற்கின்றது. உச்சி வெயிலின் காங்கையிலே காற்றுச் சாக, அதன் வெளிர் இலைகள் தியான மோனத்தில், சிருஷ்டியின் ஆதார, விக்கிரகங்களை விளக்குகின்றன. தூரத்தில், செழுங் கிளை பரப்பிக் கொழுத்திருக்கும் ஆலமரம். அதன் கிளைகளிற் புறவுக் கூட்டம் குறுகுறு’ப்பதை மறந்து அமர்ந்திருக்கின்றன. விஹாரத்திற்கு வேலியிட்டது. போல வரிசையாக நிற்கும் அலரி மரங்கள். முகை களையும் மலர்களையும் கொத்துக் கொத்தாகத் தூக்கி நிற்கின்றன. இப்பால் கனி தரும் மாதுளை மரம். கோணல் மாணலான சுள்ளிக் கிளைகளைப் பரப்பிச் சடைத்திருக்கின்றது. செம்புகளைக் கட்டித் தொங்க- விட்டதைப் போன்ற பழங்கள். அப்பழங்கள், சிங்க முகக் காலதரிற் செழுங் கொங்கை சாத்தி நிற்கும் ஜன பத கல்யாணியைப் பற்றிய ஆயிரம் எண்ணங்களை மனத்தில் எழுப்பிச் சிலந்தி வலை பின்னுகின்றன. சுயத்தைப் பற்றி நினைக்க அளிக்கப்பட்ட அவகாசம், மாம்ஸத்தில் ஊறும் உணர்ச்சிகளின் கரங்களில் அம்மானை ஆடப்படுகின்றது.
புத்தரின் விழிகள் நிஷ்டையிலிருந்து விழித் தலர்ந் தன .நந்தகுமாரனின் புலன்கள் அலைக் கழிவதை உணர்ந்தார்.
“நந்த, உன் மனம் ஆற்று நீராக அலைக்கழிந்தே ஓடுகிறது. இன்னிசை மீட்டுவதாக அது பறைசாற்றி ஓடினாலும், ஈற்றிலே கடலிற் சங்கமிக்கின்றது. ஆறாக ஓடும் மனித வாழ்க்கை – சிற்றின்பம் என்கிற இசை- துன்பமென்ற கடல்…… அவ்வரச மரத்திலிருந்து இப் பொழுது ஓரிலை பழுத்து விழுந்தது. இதே சமயம் புதுத் தளிரும் முளைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் வேர் கள் உணவும் ஈரலிப்பும் நாடி நிலத்திற்குள் ஆழமாகச் செல்கின்றன. இவ்விதத்தில் அந்த மரம் ஒரே நிலை யிலிருந்து கொண்டே இயங்குகின்றது. நம்மைப் பற்றி அறியச் சித்தத்தின் இயக்கத் தேவை. அதன் இயக்கத் தினை நிறம் – சுவை மணம் -ஒலி – தழுவல் என்ற புலனறிந்த வழிகளினால் அறிய முடியாது, நீ உன்னையே காப்பாற்றவும், உண்மையை அறியவும் உன் சித்தமே தேவை. அஃதே உன் இரட்சகர்.”
“நீங்கள் போதிக்கின்றீர்கள். போதனை கூட அகம்பாவத்தின் ஒரு வழிபாடுதான் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், நான் இயற்கையையும் அதனழகையும் அனுபவிப்பதில் இன்பம் நுகரப் பிறந் தவன். அதோ, அதிலே காய்த்துத் தொங்கும் அந்த மாதுளம் பழங்கள் சிங்கவாய்க் காலதரில் என் வருகைக் காகக் கால் கடுக்கக் காத்து நிற்கும் ஜனபத கல் யாணியைத்தான் எனக்கு ஞாபகப் படுத்துகின்றன.”
“அதனைப் பிளந்ததும் தெரியும் பரல்கள் எதனை உனக்கு ஞாபகப்படுத்தும்?”
“மாணிக்கப் பரல்களை மாணிக்க நிறம் ஜனபத கல்யாணியின் யௌவன இதழ்களை எனக்கு ஞாபகப் படுத்தும்.”
”என் சிந்தையில் அது மனிதரை வாட்டிடும் புண்களின் சே படர்ந்த முகங்களை ஞாபகப்படுத்த லாம். அழகும் விகாரமும் மனோ கற்பிதங்கள். சித்தப் படியல்லாது, புலன்களினால் வழி நடாத்தப்படும் பலஹீனனே அழகைப் பற்றிச் சிந்திக்கின்றான். குரு டனுக்கு நிறமும், செவிடனுக்கு இசையும் என்ன சுகத்தை அளிக்கும்? மதி குலைந்த பித்தனுக்கு? நந்த! எது அழகு? அதனை யாரால் விளக்க முடியும்?”
“ஜனபதகல்யாணி எழில்மிகுராணி எனச் சாக்கிய குலத்தவர் சகலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவள். பத்துப்பேர் ஒரு பொருளைப் பார்த்துப் பத்துவித அபிப்பிராயங்கள் சொல்லுவார்கள். ஒருவனே ஒரு பொருளைப் பத்துத் தடவைகள் பார்த்தும் பத்துவித மான அபிப்பிராயங்களைச் சொல்லக் கூடும். ஆனால் ஜனபதகல்யாணியின் அழகு மட்டும் விதிவிலக்கு. சகலருடைய நிரந்தர முடிவே அவள் அபூர்வ அழகி என்பது தான்.”
“நந்த, கவிஞனுக்கும் காதல் வசப்பட்டவனுக்கும் நிறைந்த கற்பனாசக்தியுண்டு. கற்பனையை விரித்துப் பார், முகமெல்லாம் சுருக்கங்கள் மொய்க்க, யௌவன தசைக் கோளங்களெல்லாம் முதுமையினாற் சுருங்கியும் தொங்கியும், பிணியினாலும், மூப்பினாலும் அவதிப் படும் எழுபது வயதுக் கிழவியான ஜனபத கல்யாணி யைக் கற்பனை செய்து பார்.”
மின்னற் பாய்ச்சலில் அவ்வாறு எழுந்த கற்ப னையை, சிங்கவாய்க் காலதரிற் காத்து நிற்கும் லாவண்ய உருவத்திir திவ்வியம் விழுங்கித் தென்பினை ஊட்டிற்று.
“உங்களிடம் வருபவர்கள் மலர்களைக் காணிக்கை யாகக் கொண்டு வருகிறார்கள். மலர்களின் அழகில் உங்களுக்குப் பிரீதி உண்டல்லவா?”
“நந்த, இந்தப் பழக்கம் என்னாலே போதிக்கப் பட்டதல்ல. மூத்தோரையும் இனியவர்களையுந்தரிசிக்கச் செல்லுகையில் ஏதாவது கையுறை கொண்டு செல்லு தல் பண்டு தொட்டு வழக்கிலுண்டு காணிக்கை மலராக இருப்பது விரும்பத்தக்கது. எவ்வித மனக் குறையுமின்றி,எந்த அந்தஸ்திலுள்ளவர்களாலும் மென் மலர்களைக் கொண்டு வருதல் முடியும். மலர்கள் தூய்மை-மென்மை-நேர்மை ஆகியவற்றின் உருவங் களாகத் திகழ்கின்றன. அதே சமயம், அவை அநித் திய வாழ்க்கையின் அடி முடிச்சுகளை மிகச் செப்பமாக விளக்குகின்றன. அதோ, அந்த அலரி மலர்களைப் பார். பாலாடையை அதியற்புதச் சிற்பியொருவன் செதுக்கியெடுத்து, அதன் மையத்திலே தங்கத் திலகம் இட்டிருக்குஞ் சௌந்தர்யம். ஓரிரு தினங்களில் அதே மலர்கள் கயர்த்தழும்பு ஏறி, கறுத்துக் கருகி உதிர்ந்து’ விடுகின்றன. மலர்களின் அழகு ஓரிரு தினங்களுக்கு. கல்யாணியின் அழகு பல தினங்களுக்கு…அழகின் வயது என்ன? அழகினை ஏன் மூப்பு வந்தடைதல் வேண்டும்?”
அலரி மலர்கள் தத்துவத் திரிகையில் அரைந்து பொடியாக, மரத்திலே தொங்கும் இரு மாதுளங்கனி களின் அமைப்பே நந்தகுமாரனின் மனம் எல்லாம் விரிகின்றது. தன் பக்கமே தன்னை முற்றாக இழுக்கும். நினைவுத் தளைகளை அறுக்க அவன் புத்தரின் பக்கம் திரும்பினான்.
”புனிதரே! என் உள்ளத்தில் ஊறுஞ் சில எண்ணங்களைச் சொல்லலாமா?”
“தாராளமாகக் கூறலாம்.”
“நட்சத்திரத் தோடாக வனப்புக் காட்டும் மாதுளம் மலர்கள் இயற்கைசால் அன்பு வாழ்க்கையின் பெறு பேறாகப் பரற்சினைகளைச் சுமந்து, முற்றிக் கனிகளா கின்றன… நீங்கள் ஆயிரம் வார்த்தைகளில் அன்பைப் பற்றி விளக்கந் தருகின்றீர்கள். விளக்கி விட்டதாக நீங்கள் திருப்தி கொள்ளும் போது கூட, என் போன்ற சாமான்யனுக்கு அதில் ஒரு பின்னந்தானும் விளங்கா திருக்கலாம்.ஆணும்-பெண்ணும் மனங்கலந்து, இல்லற இன்பங்களிலே தோய்ந்து, ஒரு குழந்தையைச் சிருஷ்டித்தால், அக்குழந்தை உன்னத அன்பின் உயர்ந்த சின்னமாகத் திகழ்கின்றது. அத்தகைய அன்பினை விளக்க வார்த்தைகளே தேவையில்லை.”
”அழகாகப் பேசுகிறாய். சாக்கிய மன்னர் தர்க்க சாஸ்திரிகளை அமர்த்தி, இல்லறத்திலே துய்க்க வைப் பதற்கான நியாயப் பிரமாணங்களைக் கற்பித்திருக் கிறார். சித்தத்தின் மூலம் நாம் அறிவதுதான் பேருண்மை இருப்பினும், உன் பேச்சு மிகவுஞ் சுவாரஸ்ய மாக இருக்கின்றது.”
“உணர்ச்சி அலைகளிலே சுரக்கும் இச்சை உடலிலே படருகின்றது. எனவே, இச்சையில் நிச்சயம் மனிதப் பலஹீனங்களும் படிந்திருக்கும். இருப்பினும், இவற்றின் இச்சா பூர்த்தியில் மலர்வது அன்பு; பங்கத் திற் குதிர்வது விரோதம். நீங்கள் போதிக்கும் துறவற நிலையிற் சித்தத்தை ஒரு நிலைப்படுத்துதல் என்பது, மாம்ஸ இச்சைகளை மறுத்து, வறுத்துத் துவளவு செய்யும் இராக்கத முயற்சி. அறிவின் செருக்கிற்கு முதலிடங் கொடுத்து, சித்தத்தின் செம்மை என்ற தீ ஜ்வாலைகளில் உணர்ச்சிகளைப் பொசுக்கிய பின்னர், மனிதனின் ஆசாபாசங்களுக்கும், பிரேமைகளுக்கும் புதிய விளக்கங் கொடுப்பது மிகமிகச் செயற்கையானது. இயற்கையிலே குறைபாடுகளிருக்கின்றன என்றால், அந்தக் குறைபாடுகளே நமது வாழ்க்கையின் பயனும் பலமுமாம். செயற்கை அறிவின் ஆணவ வழி; நாம் இயற்கையின் செல்வங்கள். நாங்கள் சந்ததி பெருக்கி வாழப் பிறந்தவர்கள்.”
”நந்த! சித்தத்தை உணர்வது ஆணவமென்றால் உண்மையைச் சொல்வது செருக்கு என்றால், நீ மெய் யென வரித்திருக்கும் பிரமேயங்களில் ஏதோ தவறு. இருக்கவே செய்கிறது. சித்தத்தைச் செயற்படுத்தா தவன் லோப – துவேச – மோக (இச்சை – அழுக்காறு அஞ்ஞானம்) ஆகிய பலஹீனங்களுக்குத் தன்னைத் தானே ஒப்புக் கொடுக்கின்றான். அலோப – அதுவேச- அமோக (அருள்-காருண்யம்-ஞானம்) ஆகிய நற்குணங்கள் சித்தத்தைச் சுத்தப்படுத்தியவனுக்கே ஏற் படுகின்றன. அஞ்ஞானத்தில் உலைபவனிடஞ் செருக் கும் ஆணவமுமே வந்தடைகின்றன.”
“நான் மனிதர்களைப் பற்றிப் பேசுகின்றேன். நீங்கள் புத்த நிலை அடைந்தவர்களைப் பற்றிப் பேசு கின்றீர்கள். “
‘“உன் இச்சைகள் உன் சித்தத்தினைத் திரையிட்டு மறைத்துள்ளன. காலப்போக்கில் உனக்கு உண்மை தெரியத்தான் போகின்றது. தர்க்கக் கலையின் மூலம் நீ பெற்ற கல்வியால் யாது பயன்? கல்வியின் பயன் நல்லதையும் கெட்டதையும் இனங்கண்டு கொள்வது மட்டுமல்ல. அவை எக் காரணங்களினால் நல்லவை கெட்டவை என்பதைக் கல்வி உணர்த்துதல் வேண்டும்.”
நந்தகுமாரனின் முகத்திலே சிந்தனை மேகங்கள் படிவதைப் புத்தர் அவதானித்தார்.
“நந்த, சந்ததி பெருக்குவதுதான் இயற்கையா அல்லது வாழ்க்கையா? சந்தான விருத்திதான் வாழ்வின் இலட்சியமா? ஆண் சிலந்தி சந்தான விருத் திக் கலையிலே தன்னையே அழித்துக் கொள்ளுகிறது. எந்தப் பெண் சிலந்தி மீது மோகித்துச் சேருகின்றதோ அதற்கே ஆண் சிலந்தி இரையாவது உனக்குத் தெரியாதா? இச்சைகளைப் பூர்த்தியாக்குவதுதான் இயற்கை வாழ்க்கையா? மதுவினை அருந்த அருந்த, கட்குடியன் அதிகம் அதிகமாகவே, மேன் மேலும் மது. வினை நாடுவான். மனிதருடைய புலாலிச்சைகளும் மதுச்சுவையைப் போன்றவை.”
புத்தர் சேதந பூர்வமாகப் பேச்சை இடையில் முறித்து நிறுத்தினார். இடைவேளை மௌனத்திற்குப் பின்னர் மீண்டுந் தொடர்ந்தார்.
“அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? அதிலே எத்தனை ஆலம் பழங்கள் தொங்குகின்றன? அந்தப் பழங்கள் எத்தனை கோடி விதைகளை வைத்திருக் கின்றன. இந்த உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங் களிலுந் தோன்றும் அனந்த கோடி விதைகளனைத் தும் சந்ததி இயற்கையாகக் பெருக்குதலையே கொண்டு முளைக்கத் தொடங்கினால். கண்களை மூடிக் கற்பனை செய்துபார். சந்ததி பரப்பும் உன் விவாதஞ் சரி வருமா?”
பரிதியுருண்டை படுவானிற் சரிந்து கொண்டிருந் தது. கதிர்த் தெறிப்புக்கள் வெள்ளரசம் இலைகளைத் தக தகக்கச் செய்தன பிரக்ஞை தெளிந்த தென்றல் சுகமாக வீசத் தொடங்கிற்று. ஆலங்கிளைகளிலிருந்த புறவுக் கூட்டம் கீழே இறங்கிக் ‘குறு குறு’த்தது.
ஒன்றுமே புரியவில்லை; என்றாலும், ஏதோவெல் லாம் புரிகிறதாகவும் படுகின்றது. தெளிவான சூனியம்.
“நந்த, என்ன யோசனை?”
“என் உணர்ச்சிகள் உங்களுடைய தத்துவத்தை மறுக்கின்றன. ஆனால், எதிர் நியாயமொன்றுங் கற்பிக்க இயலாது தத்தளிக்கின்றேன். எல்லாமே குழப்பம்… முகூர்த்தந் தவறியதினால், மூன்று விழாக் களுந் தவறிவிட்டன. அரண்மனையில் மகாமசானச் சூனியம் வியாபித்திருக்கும். அந்தச் சூனியத்தைப் பற்றிய நினைவுகள் என் மனத்திலே பய உணர்ச்சி களைப் பாய்ச்சுகின்றன.
”பயத்தை வெல்வது அன்பு. அன்பு என்பது தண்ணீரென்று வைத்துக் கொள். நமது விழிப்புலத் திற்குத் தென்படும் ஆற்று நீரும் குளத்து நீரும் எவ்வளவுதான் சுத்தமானதாகத் தோற்றினாலும், அவற்றில் எவ்வளவோ அசுத்தங்கள் படிந்திருக்கின்றன. நமக்கு மேலே மேலே பறந்து செல்லும் முகிற் கூட்டங்களிற் கண்களுக்குப் புலப்படாத துல்லிய நீர் இருக்கின்றது. அமோக மனத்தில், அத்தகைய நீர்தான் நிறைந்து நிற்கும். அடுத்த முகூர்த்தம் வரும் வரைக் கும் இங்கு தங்கி பிக்குகளின் சீல வாழ்க்கை நெறியை அனுஷ்டித்துப்பார். இது வெறும் பரீட்சணமாகத்தான். அடுத்த முகூர்த்தம் வரும் பொழுதும் ஜனபதகல்யாணி யின் மீதுள்ள காதல் இச்சைதான் ஏகமாக இருந்தால், நீ அரண்மனைக்கே மீளலாம்.”
பகவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் அர்த்தம் தோன்று கின்றது. இருப்பினும், புத்தரின் சித்தத்திற்கு மறுப்புச் சொல்ல இயலவில்லை. அருவியின் பிரவாகத் துளி நீரும் உருட்டப்படுகின்றது,
”சம்மதந்தானே?”
‘‘ஆம்’”எப்படி அந்த வார்த்தை நாக்கிலிருந்து தழுவியது என்பது அவனுக்கே தெரியாது.
விதிகளின்படி சடங்கு நடத்தப்பட்டு அவனுக்குச் சீவர ஆடை புனையப்படுகின்றது.
இளவரசன் நந்தகுமாரனின் ‘அவன்’ மறைந்து, நந்ததேரரின் ‘அவர்’ தோன்றலானார்.
ஊமை
புலரிக் காலத்துத் தெளிவு, வானத்து இருளைச் சுருட்டி விழுங்குகின்றது. நிலமடந்தை சீதளச் சுகத்தி லிருந்து துயிலெழுந்தும், பாயின் கதகதப்பிற் படுத் திருக்கும் ஒரு கோலம். புத்தரும் அரஹத் பிக்குகளும், சித்தத்தின் தூய்மையில், துன்பமே தீண்டாத புனித நிலையில், தியானத்திற் சங்கமித்தனர்.
சீவர ஆடைக்குட் புகுந்தும், உடலில் மதர்க்கும் மாம்ஸ ஆக்கினைகளிலிருந்து விடுபடாது, துயிலெழுந் துந் துயிலெழா நிலையில், பிரதக் ஜன பிக்குகள் தவிக் கின்றனர். நந்த பிக்குவின் செவிகளில், துயிலெழுந்த புள்ளினத்தின் இன்னிசை விழத்தான் செய்தது. ஆனால், இரவிலே தோன்றிய அந்தக் கனவின் பிடி யிலிருந்து மனம் விடுபடவேயில்லை. கற்பனையோ அல்லது நினைவு ஜரிகை இழையோ எதுவுமின்றி, இல்லாத- ஆனால், இருக்கின்ற என்ற தோற்றத் தைத் தருஞ் சோபிதத்தில்- சில இழைகள் குறுக்கும் நெடுக்குமாக, கனவுச் சிலந்தியின் வாயிலிருந்து கக்கப் பட்டு வலை பின்னுகின்றன . ஒரு சமயம் அவ்வலையிற் சிக்குப்பட்டதைப் போலவும், அடுத்த கணம் ஒரேயொரு இழையில் அந்தரத்தில் தொங்குவது போலவும் அவஸ்தை.
பென்னம் பெரிய தங்கப்பாளங்களினால் நிரு மாணிக்கப்பட்ட அரண்மனை. அடித்தள ஆதாரம் எதுவுமின்றி, இறக்கை முளைத்த பாயாக மிதக்கும் முகிற்கூட்டத்தின் மீது அவ்வரண்மனை மிதக்கின்றது. அந்த ஆயிரம் அரண்மனை பூராகவும் சிங்கமுகக் காலதர்கள் ஓட்டையிட்டிருக் கின்றன. ஒவ்வொரு சிங்க முகக் காலதரும் இராட் சதமானது ஒரு பெரிய சதுரங்க சேனையே ஒன்றினூடாக உட்புகுந்து வெளிவரலாம். அதற்குள்ளே புகுந்த என்னைப் பார்க்கும் பொழுது, சின்னொரு சுண்டெலி நுழைந்ததைப் போல! அதன் உள்ளே மேலும் வியப்பிலாழ்த்துஞ் த்திர விசித்திர நுணுக்கம். ஒரு பூம்பொழில் அடர்ந்து வளர்ந்த செடிகளுங் கொடிகளும். பச்சை யின், பிரகாசம் பிராந்திய மெல்லாம் விரிந்து சிந்து கின்றது. சகல இலைகளுந் தகதகக்கும் மரகதக் கற்களாலானவை. கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம். வைரம் ஆகியவற்றாலான அதி விநோதப் பூக்கள். அந்தப் பூக்கள் வாடுவதுமில்லை; இலைகள் பழுத்து விழுவதுமில்லை. ஊமை ஒளி ஜாலக் கலவையின் கவர்ச்சியைத் தவிர, நறுமணமே யில்லை; மணமேயற்ற பிராந்தியம். ஏதாவது மோப்பத்தைப் பிடிப்பதில் என் மூக்குத் துவாரங்கள், துருத்தியாக உப்பிக் கொள்கின்றன. நிலம் அசலாகத் தங்கந்தான். ஆனால், வைக்கோல் பரப்பியிருப்பதைப் போல, கால்கள் புதைகின்றன. உள்ளே-வெகுவெகு உள்ளே-நடந்து செல்கின் றேன். நறுமணநாற்றம் குப்பென்று மூக்கினை நிறைத்து உடலெல்லாம் பரவுகின்றது அகிற் புகையும், பன்னீரும் இந்த மணத்திற்கு இலட்சத் தில் ஒன்று என்ற பின்ன வாக்கிலும் ஈடு செய்ய மாட்டாது. என்னை அந்த மணம் வசீகரித்து, கால்களின் இயக்கமின்றியே தன் பாலிழுக்கின்றது. ஒரு கட்டிலில், மதுபோதையிலே சுயமிழந்த வளாகப் பிறப்பின் கோலத்திற் கூச்சமின்றி, ஆடைகள் அவிழ்ந்தும் விலகியும் உடற்கவர்ச்சி ஸ்தானங்களை மறைக்காமலே மறைக்கும் பாங்கில் ஒருத்தி படுத்துக் கிடக்கின்றாள். அந்தக் கந்தம் அவளுடைய மேனியிலிருந்து வீசியதுதான். ஒரு கணத்தின் கீற்றில் அவள் ஜனபத கல்யாணியின் உருவ அச்சில் வார்க்கப்பட்டவள் போல! என் கண்களிற் படிந்திருந்த வியப்பு ஒட்டடைகளைத் துடைத்துப் பார்க்கின்றேன். சந்தேகமில்லை; ஜனபதகல்யாணியே தான்! ஊரும் ம் சந்தேகம், மீண்டும் உன்னிப்பாகப் பார்க்கின்றேன். அவள் ஜனபதகல்யாணி அல்லள் என் பதிலே துளியுஞ் சந்தேகமில்லை. அவளைப் பார்த் ததும் என்னுடைய தோற்றத்தைப் பற்றிய உட் பிரக்ஞை விழித்துக் கொள்கின்றது. மழித்த தலை; மஞ்சளிலே தோய்ந்த சீவர ஆடை; கையிலே பிட்சைப் பாத்திரம். இவற்றைத் தவிர வேறெதுவு மற்ற பிக்ஷாண்டி. என் மனம் சமிழ்ப்பிற் சவுங்க, சென்னி கழுத்துப் பூட்டில் முறித்து தொங்கிக் கொள்ளுகின்றது. ‘உங்களை நான் சாதுக்க ளென்று அழைப்பதா; அல்லது, அல்லது, என் இனிய வரே என்று அழைப்பதா?’- வீணையின் தந்தியை மீட்டும் இசை; ஈட்டியின் பாய்ச்சலில் ஏளனம்! நாக்கரவம் வாய்ப்புற்றுக்குள் அடங்கியொடுங்கி விட்டது. பரிவும் பாசமும் சுரக்கும் சுனையில்.. அவளாக வந்து, எனது சீவர ஆடையைக் களைந் தெறிந்து, நிலவின் பாலைத் துகிலாகச் சாத்துகி றாள், பிட்சைப்பாத்திரம் கீழே வீசப்படுகின்றது. ஆனால், அதுவோ இறக்கை முளைத்ததுவாக மேலேமேலே செல்லுகின்றது. கண்ணுக்கு எட்டாத விண்தூரத்தில், ஒரு கரும் புள்ளி காட்டி மறை கின்றது… அவள் என்னைத் தழுவி, என்னுடலில் வெறியேற்றி. தன் கட்டிலுக்கு அழைத்துச் செல் கின்றாள்…அரண்மனையா? சிங்கமுகக் காலதரா? அழகியா? கட்டிலா?… ஒன்றுமேயில்லை. கானல் நீர் மாதிரி, இல்லாத ஒன்று இருக்கும் ஒன்றாக மயக்கியிருக்கிறது. தோற்றமுமல்ல, மனப்பிராந்தி வாக்கில், சூனியத்திலே திகைக்கின்றேன்… நான் ஒரு சிலந்திக் கூட்டிற்குள் அகப்பட்டுத் தத்தளிப் பதை உணர முடிகின்றது. ஒரு பெண்ணின் உருவப் பிரமாணத்தில் தோன்றும் ஓர் இராட்சதச் சிலந்தி. நானும் ஓர் ஆண் சிலந்தி. இந்தச் சிலந்திக்கூட்டிற் குள் நான் எப்படிச் சிக்கினேன்? பெண் சிலந்தி, அதனைக் கூடிக்கலவிய குற்றத்திற்காக, என்னைக் குற்றுயிராகவே புசித்துக் கொண்டிருக்கிறது… ஆகாய அரண்மனையா? அல்லது, சிலந்திக் கூடா?… மூட்டமிட்ட வானில் தோற்றிய வான வில்லா?. சுத்தமாக விளங்குகின்றது. நான் நானேதான்; சாக்கிய இளவரசன் நந்தகுமாரன். அவள் ஜனபதகல்யாணியே தான். அவள் சிங்க முகக் காலதரிற் கொங்கை சாத்தி நிற்கின்றாள். இத்தனை காலமாக அந்தக் காலந்தான் எத்தனை யுகங்கள் – இந்தக் காலதரடியில், வழி மேல் விழிகள் புதைத்துக் கால் கடுக்க நான் நிற்கின்றேன். வாருங்கள், உள்ளே. ள்ளே.’ அவளுடைய இந்த அழைப்பு என் நரம்புகளையே தோலுக்கு வெளியாலும் இழுத்து வீணாகானம் பொழி கின்றது. நான், ‘கல்யாணி, கல்யாணி’ என உச்சஸ்தாயியில் ஜபித்துக் கொண்டே அவளைத் தழுவி அனுபவிக்க ஓடுகின்றேன்.
கனவினை, நினைவில் அசைபோடும் உன்மத்தத் தில், சுயத்தை மறந்து ‘கல்யாணி. கல்யாணி” என்று நந்தரின் உதடுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன.
புத்தர் போதித்த தத்துவங்களின் உட்தாற்பரியங் களை உணராது, சீவர ஆடைக்குட் புகுந்த நந்த பிக்கு வைப் போன்றே வாழும் பிரதக்ஜன பிக்குக்களிருவர், அவர் சயனிக்குமிடத்திற்கு வந்தார்கள்.
அந்த அரவத்தில் அவருடைய கண்கள் திறந்து கொண்டன.
“பிக்குவே! பகற்கனவு காண்கின்றீர்களா? மனத் தினை ஒரு நிலைப்படுத்த வந்துள்ள விஹாரத்திலும், உங்களுடைய சகல புலன்களும் ஜனபதகல்யாணியைச் சுற்றியே சுழல்கின்றன. துறவற வாழ்க்கையில் மனம் ஒன்றாத தங்களுக்குச் சீவர ஆடைகளைத் தத்ததனால் புத்தருக்கு யாது இலாபம்? உங்களுடைய இன்பங்கள் உங்களுடையவையே. புதிதாம் அரண்மனை – அரச பதவி-சாக்கிய எழிலரசி, இத்தனை பேறுகளையும் நீங்கள் புத்தர் ஒருவருக்காகத் தானே இழக்கத் துணிந் தீர்கள்.”-இந்த வகையில் ஒருவர் பேச்சினை விநய மாகத் தொடங்கினார்.
“எங்களது சிந்தைக்குப் புலப்படாதவையாகவோ அன்றேல் இல்லா தனவாக வோ தோன்றும் உண்மை களைப் புத்தர் அறிந்தவராக இருக்கலாம். நமக்குத். தெரிய ஒரேயொரு புத்தர் தான்- சாக்கியமுனிவர்தான் வாழ்கிறார். அவர் ஒருவராக இருப்பதினாலேதான் அவருடைய மதிப்பும் உயர்ந்துள்ளது. அவர் புத்தரா வதற்காகவேகூடப் பிறந்திருக்கலாம். அவருடைய ஊழும், தங்களுடைய ஊழும் ஒன்றா? ஒரு வேளை. நீங்கள் நமது மன்னராகவும், ஜனபதகல்யாணியின் அன்புக் கணவராகவும், வாழ்வதற்காகவே பிறந்திருக் கலாம். கோழைகளே மற்றவர்களுடைய எண்ணங்களுக்குத் தலை சாய்த்து வாழ்வார்கள்” என்று மற்றவர் அவருடைய இகலோக இச்சை யென்ற தீயில் நெய்யூற்றிப் பேசினார்.
இருள் விரிந்ததும், இரைதேட விழித்துக் கொள் ளும் வௌவாலாக, அஞ்ஞானப் பேச்சுக்களின் அநு சரணையிலே சிற்றின்ப இச்சைகள் புது வேகத்துடன் சிறகடித்தன. தான் சீவர ஆடையைத் துறந்து ஜனபதகல்யாணியின் காதலை ஏற்று, இல்லறத்தில் ஈடுபடல் வேண்டுமென்ற நிதர்சனத்தைச் சொல்லி விடல் வேண்டு மென்ற எல்லை மட்டும் அது பறக்கின்றது.
“இதனை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம். நாளை மறுதினம் நல்லதொரு கல்யாண முகூர்த்த முண்டு எதையும் பருவத்திற் பயிர் செய்தல் வேண்டும். உங்களுடைய வயதில் புத்தர் சித்தார்த்த கௌதமராக, யசோதரையின் கணவராக, கபிலவஸ்து அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்தவரென்பதை மறந்து விட்டீர்களா?”
“நீங்கள் சென்று வாருங்கள். இப்பொழுதே புத்தரைக் கண்டு உண்மையைச் சொல்வேன். இன்றே நான் அரண்மனைக்கு மீள்வேன் என நந்த சூளுரைத்தார்.
நெறி தவறி, மனத்தினை அலைமோதவிட்ட, அந்தப் பிக்குகளிருவரும் அகமகிழ்ந்தார்கள்.
ஊகை
புத்தர் புன்னகை பூத்தார். ”வா நந்த, வா! நீ என்னைப் பார்க்கவும் வரலாமென்று இப்பொழுதுதான் நினைத்தேன். நாளை மறுதினம் கல்யாண முகூர்த்த மொன்று உண்டு என்ற செய்தியைச் சாடையாக நினைவுபடுத்தத்தானே வந்தாய்?”
எதிர்பார்க்காத அவ்வினா பிக்குவைச் சவலையாக் கிற்று. சங்கோசத்துடன், ‘ஆம்’ என்பதற்கு அறிகுறி யாகத் தலையை ஆட்டினார்.
“ஏதோ சொப்பனம் கண்டு விழித்தவனைப் போன்று வாட்டமுற்றிருக்கின்றது உன்முகம். துராசைகள் துர்க்கனவுகளை விளைவிக்கும்.”
”கனவொன்று கண்டது உண்மை. முகம் வைத்த புண் சீழ் உடைத்து, என்றோ ஏறிய சிராயைக் கக்குவ தைப் போன்று, ஜனபதகல்யாணியைக் கனவிற் கன்டேன்.”
“கல்யாணியின் மீது நீ கொண்டுள்ள இச்சை களைப் பற்றியும், சந்ததி பரப்பி வாழும் உன் ஏடை பற்றியும் உன் மனத்தினைக் கடலலைகளாக்கி உலைய விடுகின்றாய்… ஆண்மையும் பெண்மையும் ஒரே சரீரத் திலுண்டு. ஒன்றின் வளர்ச்சியை மற்றையது விழுங்கி, பின்னதே கொழுத்து ஏகமாக வியாபிக்கின்றது. பாலுணர்ச்சியென்பது, புலால் வேட்கையின் உபரியே. அக்நியின் தீ நாக்குகளை, இரு பால்களின் கூட்டுறவாலே தணித்து விடலாமென்பது ஊமத்தஞ்சாறு குடித் தவனின் உன் மத்தக் கற்பனை. அதற்கு மாறாக, அவ்வுடற் புணர்ச்சி மேற்படி தகிப்பினை நெய்யூற்றி வளர்க்கவே மிகவும் உதவுகின்றது என்பது தான் உண்மை. சந்ததி பெருக்கும் விவகார மென்பது பிரக்ஞை பூர்வமாக அல்லாது, தற்செயலாகவே நடை பெறுகின்றது. அப்பொழுதுங்கூட, பெற்றோர் ஒரு குழந்தைக்கு அதன் சரீர உருவத்தை மட்டுமே அளிக்கின்றனர். தாயோ, தந்தையோ, அல்லது இருவருங் கூட்டாகச் சேர்ந்தோ அப்புதிய ஜீவனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சித்தத்தை அளிக்க முடி யாது. எதற்கு ஆரம்ப முண்டோ, அதற்கு அழிவு முண்டு. சித்தத்தினை எவராலும் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அதற்கு அழிவுமில்லை”.
‘“நான் எவ்வளவுதான் முயன்றும், நீங்கள் சித்தத் தைப் பற்றிச் சொல்லும் எதனையுங் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.”
“உடலிச்சை ஈர்ப்பிலே உன் புலன்கள் அலையும் பொழுது, சித்த பரிசுத்தத்தை எவ்வாறு எய்த முடியும்? உன்னையே நீ உணர்.நீ,நீ யென்று நினைக்கும் உன் யாக்கைதான் என்ன? கேசம்-உரோமம்-நகம் – தந்தம் – தோல்-இரத்தம்- மாமிசம் – என்பு- நரம்பு -குழலட்டை- எச்சில் – பித்தம் – சிலேற்பனம் – சலம் – மலம் என வரும் முப்பத்திரண்டு அழுக்குப் பொருள்களினாலானதே அது! இந்தப் புழுதி படிந்த புல்லிய இச்சைகளினாலே தான் சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங்கடலின் அலைகளில் எற்றுண்டு, அலைக்கழிந்து, துன்பத்தின் இருப்பிடமாக வாழ வேண்டியிருக்கின்றது.”
“நீங்கள் கட்டி வளர்க்குஞ் சங்கம் மிகப் பெரியது; அதன் நோக்கமும் வெகு வெகு புனிதமானது. அரண்மனைச் சுகத்திற் சுகித்த காலத்திலேயே தாமரை யிலைத் தண்ணீராக வாழ்ந்து விட்டீர்கள். அவ்வுந்நத நிலைக்கு என்னை-சேற்றுடன் இரண்டறக் கலந்து விட்ட நீரையும்-உயர்த்தப் பார்க்கின் றீர்கள், மன்னித் தருளல் வேண்டும். நான் புல்லியன். நீங்கள் இவ்வளவு போதனை செய்தும் என் மனம் ஜனபதகல்யாணியையே நாடுகின்றது”.
ஒரு நிமைப் பொழுது நேரம் புத்தர் யோசனையிலாழ்ந்தார்.
“உன் விருப்பம் அதுவே யானால், நான் தடை சொல்லவில்லை. உனக்கு இஷ்டமிருப்பின், நாளைக்கே நீ அரண்மனை திரும்பலாம்.”-இந்த வார்த்தைகள் பனித்துளிகள் மீது படும் சூரியக் கதிர்களாக, அவனு டைய உள்ளத்தில் மண்டிக் கிடந்த துன்பச் சாயல் களைக் காய்ச்சி எடுத்தன
திரிலோக திலகம் தியானத்திலாழ்ந்தார்.
ஆலமரத்தில் வாழும் புறவுக்கூட்டம் கீழே இறங்கி, குருத்துக் குறு மணலிற் செம்பவளப் பாதங்களால்- இல்லை, புறப்பாதங்களின் நிறமேதனி ; அதுஅதுவே- கோலமிட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியில் மேய்ந்த கண்கள், புத்தரின் பக்கம் திரும்பின. தியான வேளையில், புத்தருடைய முகத்தில் ஏற்படும் ஜோதிப் பிழம்பான எழிலிலே தரித்தன.
நெடுநேரத் தியானத்தின் பின்னர் விழிகளைத் திறந்த புத்தர், தன் எதிரே அதிசயத்துடன் அமர்ந் திருக்கும் நந்த பிக்குவைக் கண்டார்.
“அரண்மனைக்குச் செல்லத் தீர்மானித்து விட் டாய். அதற்கிடையில் ஒரு தடவை இந்திர சபையைப் பார்க்க உனக்கு ஆசையாக இல்லையா? நான் இன்று இந்திர சபைக்குச் செல்வதாக இருக்கின்றேன். நீயும் என்னுடன் வருகின்றாயா?”
“நானா? இந்திரசபைக்கா? நீங்கள் மிக உயர்ந்த புத்த நிலையை அடைந்தவர்கள். நான் அரஹத்பிக்கு நிலைக்குத்தானும் உயராதவன். ஆகாய மார்க்கத்திற் பறக்குஞ் சக்தியற்றவன்”.
“அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். ஆகாய மார்க்கத்தில் நான் அழைத்துச் செல்கின்றேன். வருகிறாயா”
“யாருக்குத்தான் இந்திர சபையைப்பார்த்தின்புற அசையிருக்காது? நான் வருகின்றேன்”
கனவு காணும் குழந்தையின் வதனத்திலே படரும் நகையொன்று புத்தருடைய முகத்தில் விரிந்தது.
ஊளை
புரந்தரன் அர ண்மனை நோக்கி ஆகாயப் பயணம். அகண்டாகாரமான ஆகாய வெளி. உடற் கொட்டின் சுமை அருகி, இற்று, பஞ்சுத் துரும்பாக மிதக்கின்றது. கண்களுக்குப் புலப்படாத எழிலித் திரள்கள் மேனியை மொத்தி ஒத்தடத் தழுவல் கொடுக் சர்வமும் வியாபித் கின்றன தண்மையின் இதம் திருக்கின்றது. அந்தரத்திலே தொங்கும் காட்சிகள் வியப்பின் மூலவிக்கிரகத்திற்கு முன்னால் நிறுத்துகின்றன. கபிலவஸ்து அரண்மனையில் இல்லற இன்பங்களின் தத்துவங்களைத் தர்க்கரீதியாகப் போதித்த ஆசிரியர்களுடைய தர்க்க பிரமேயங்கள் இந்தக் காற்றிலும் பார்க்க மிக இலேசாக, ஏமந்தருதுவின் பனிச் சிதறல்கள் மறையும் விந்தையில், நழுவுவ தான ஓர் எண்ணம். வாலிபம் கால ஓட்டத்தில், எதிர் நீச்சலடித்து முன்னேற, பிஞ்சாகிப் பிஞ்சாகிக் குழந்தை யாகின்றார். பல பொம்மைகளுக்கு நடுவில் விடப்பட்ட குழந்தை எந்தப் பொம்மையைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கித் தவிப்பதைப் போல, நந்த பிக்குவின் மனத்தில் ஒரே குழப்பம். குழப்பத்தில் ஓர் இன்பக் கதகதப்பும் சாயந் தீட்டுகின்றது. மின்வெட்டிலே குழப்பமில்லாத ஒரு தெளிவுந் தோன்றுகின்றது.
ஆகாய வெளியிற் பிரயாணஞ் சுகமாகத் தொடர்கின்றது.
“நந்த, பிரயாணம் சௌகரியமாக இருக்கின்றதா?”
“எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இது மனித சக்தியின்பாற்பட்டது தானா? நம்பிக்கையான ஓர் அவ நம்பிக்கை என் மனத்தின் அடிவானில் மூட்டம் போடுகின்றது”.
“சித்தத்தைச் சுத்தப் படுத்தி மோட்ச வாழ்வினை எய்த விழைபவனுக்கு முடியாத காரியம் எதுவுமேயில்லை. அதோ, அவ்விடத்திற் புகையும் புலவும் எழுந்து வருகின்றதே என்னவென்று பார்.”
“புனிதரே, எத்திசையில்?”
“உன் வலப்பக்கத்தில்”
இலேசான புகைப்படலம்; பாழ் மண்டபங்களில் தொங்கும் சிலந்திக்கூடுகள் மாதிரி! சிதையா? அல்ல, அதனை மருவிய பொட்டல் நிலமும் கருகி வெந்து கிடந் தது. அக்கினியின் தணியாப் பசி, பசுமை முழுவதையும் உறிஞ்சிவிட்டது. பற்றைகள் பூராவாக எரிந்து, வேர் கள் கருகி, ஆயிரக்கணக்கான காகக் கால்களை நாட்டி வைத்திருக்கின்றன. நிலத்தை அசுத்தப்படுத்துங் கறுப்புத் திட்டிகள் சிந்திக்கிடக்கின்றன. மரங்களின் பெரும் பகுதி எரிந்து அநித்தியத்தின் வித்தார விளக்க மாகச் சாம்பர் கொட்டி நிற்க, நீறு பூத்த தணல், எஞ். சிய பச்சைப் பகுதிகளைத் தாக்குகின்றது. அப்பிராந்தி யத்தை எரித்து நிர்த்தூளியாக்கிய பெருநெருப்பிலிருந்து வெளியேற முடியாது, அதில் அகப்பட்டு, கருகிச் செத்துப் புழுத்துக் கொண்டிருக்கும் மிருகச் சவங்களி லிருந்து குப்பெனக் குவிந்து வருந் துர்நாற்றம். தீயின் கோரம் சாம்பல் பெருக்கி ஊளையிட்டது. அருவருப்பின் ஏகத்துவம். அத்துர்நாற்றம் உடலை வெட்டிப் பிளக் சுவையின் கின்றது சுளுக்கு. பீபத்ஸத்தின் சதுர். குடர் குரல் வளைக்குள் ஏறிக் குமட்டுவதான அசுகி. பாண்டலின் கோரம். ஒரு மரம் ஒண்டியாகத் தெரி கிறது. அடிமரம் எரியாமல், இலைகளெல்லாம்பொசுங்கி, கருகிய கவர்கள் ஒறுப்பாகக் கரம் நீட்ட, நெடிதுயர்ந்து நிற்கின்றது, அதன் கிளையொன்றில், ஒரு மந்தி மயிர் பொசுங்கித் தொங்கிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அசினமும் எரிந்து, சப்பாத்திப் பூவன் னச்சே நிணம் பிதுங்கித் தொங்குகின்றது. கருகிய உரோமமும்-வெளியே தெரியும் மாமிசமும்! குற்றுயி ரான அந்த அருவருப்புக் கோலத்தின் சிரசாகவே அது காட்சியளித்தது. மனம் அருவருப்பின் ஆழி அலை களிற் பயப் பிராந்தியுடன் அலைக்கழிக்கின்றது. பட்டிலும் பஞ்சிலும்- அழகிலும் இன்பத்திலும் வளர்க் கப்பட்ட நந்த பிக்கு. கண்களை மூடிக்கொண்டார்.
“நந்த, ஆகாய மார்க்கப் பயணத்தில் எவ்வளவோ ஏன் பார்க்க இருக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டாய்?”
“பாதி கருகி, அருவருப்பின் உருவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் குரங்கைப் பார்த்தீர்களா?”
“பார்த்தேன்.”
“இப்படியொரு அவலட்சணத்தை நான் என் வாழ் நாளிற் கண்டதில்லை.”
“மனிதன் பிணியாலும், மூப்பாலுந் தாக்கப்பட்டு அந்தக் குரங்கைப் பார்க்கிலும் விகாரமாகக் காட்சியளிக்கலாம்”
பிக்கு சிந்தனைக் கல்லைகளில் ஏற்றப்பட்டார்.
புத்தரின் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. பதுமையின் முகம்போல, கூம்பாமல் கூம்பாமல் மலராமலிருந்தது.
“நாம் இந்திரலோகத்திற்கு வந்து விட்டோம்.”
அந்த அந்தரலோகத்தைக் கண்டு நந்த பிக்கு பிரமித்தார்.
கள்
புலன்களுக்குச் சாமான்யமாகச் சிக்காத இந்திரலோகக் காட்சி விரிகின்றது… இந்திரலோகமென்ற அந்தச் சுந்தரலோகம். சர்வமும் சௌந்தர்யஞ் சொட்டச் சொட்ட நயமொழுகி வழிகின்றது.முற்றாத- வெகு வெகு பிஞ்சான-உள்ளங்களுடன் சுரர்கள் வாழும் இந்திரலோகத்தில், இன்பக்களிப்பேகோலோச்சு கின்றது. அழகும்-களிப்பும், வறிக் கள்ளும்-கூத்தும் பிரிகளாக இணைந்த அவர்களுடைய வாழ்க்கையில் காலத்தைப் பற்றிய கவலையேயில்லை. நரவருடங்கள் பல புணர்ந்தே அந்த உலகத்தின் ஒரு நாள் அசை யிட்டுச் சுழலுகின்றது…
நந்த பிக்குவின் விழிகள், இமைகளை அகட்டிப் பிதுங்குகின்றன. இன்பச் சகதியின் நடுவே பூத்த பங்க யமாக-இருப்பினும், சுவர்ண நிறத்தின் ஒளி ஜாலஞ் சிந்தி-குன்றின் மமதையுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது புருகூதன் மாளிகை. துர்நாற்றம் அங்கு இல் லாததொன்று. கனவில் விரிந்த அந்தச் சுகந்த கந்தம் மட்டுமே, அள்ளு கொள்ளையாக வீசப்பட்டிருக்கும் பாரி ஜாத மலர்களிலிருந்து அட்ட திக்குகளிலுங் கலக் கின்றது. அந்தரத்திலே, பொன் ஜரிகை நாடாக்கள் மின்னி மறைந்து மீண்டும் பிரகாசிக்கின்றன. மாளி கைக்குள் நடக்கும் போழ்து நீரின் மேற்பரப்பில் நடக் கும் பிரமையே ஏற்படுகின்றது. நிலத்தின் வழுவழுப்பு மெருகு சகலவற்றின் சுந்தரத்தையும் பிம்பங் காட்டிச் சுப்பிர ஜாலம் இயற்றுகின்றது.
சுரபானம் சுவைத்து, அப்சரஸுகள் வீசும் வெண் சாமரங்களிலிருந்து பிறக்கும் சீதளக் காற்றிற் குளித்து, பாட்டும் -கூத்தும் பரவசமும் அளைய…
புத்தரைக் கண்டதும், இந்திரன் தனது பண்டு கம்பள ஸைலாசனத்திலிருந்து எழுந்து வந்து, அஞ்சலி செய்து, எதிர் கொண்டழைத்தான். புத்தருக்குப் பக் கத்திலே வியப்பின் வியூகத்திற்குள் விழுந்து விழிக்கும் நந்தபிக்குவைக் குறித்து ஊமை வினாவை விழியிலே தொடுத்து இந்திரன் விடுக்கின்றான்.
”இந்திரா! இவர் நந்த பிக்கு. உன்னுடைய லோகத்தின் அற்புதங்களை ஒரு தடவை பார்த்து மீள வந்திருக்கிறார்”.
“அப்படியா? அவருக்கு இங்கு தகுந்த உபசரணைகள் நடக்கும். நீங்கள் இந்திர இருக்கையில் அமருதல் வேண்டும்.”
“உனக்கு தர்மோபதேசங் கேட்க ஆவலா?”
“ஆம். தங்களுடைய வருகைக்காக வெகு காலங் காத்திருந்தேன்”.
“உன் இஷ்டம்…”
புத்தர் அமைதியாக நடந்து, இந்திரனுடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். இன்பங்களின் அதிபதி, உண்மையின் நிர்மலத்தில் மனம் புதைத்து, தர்மோப தேசங் கேட்கத் தொடங்கினான்
கிளை பிரிந்து, வழி தப்பிய மானாக நின்ற நந்த பிக்குவை அப்ஸரஸ் ஒருத்தி ஓர் ஆசனத்தில் அமரச் செய்தாள். அவ்விருக்கை, மயிற்பீலிகள் உள்ளே வைக் கப்பட்டு, அணில் வால்போல மிருதுவாக இருந்தது. அதிலமர்ந்ததும் இடுப்பளவிற்குப் புதைந்து போனார். என்ன சுகமான இருக்கை’- மனத்தினைக் கொட்டும் இன்பத் தினவுகள். இன்னொருத்தி வந்து, வெண்சா மரம் வீசிக் குளிர் காற்றை இறைத்தாள்.
எதிரில் நடன அரங்கம் விரிகின்றது…
தங்கத்தின் நயங்காட்டும் அத்தரையில், பனிப் படிகத்திலே துரிதமாகச்சறுக்குஞ் சாகசம் புரிந்தவாறே திவ்விய கன்னியர் அறுவர் தோன்றினர். தரையிற் பட்டும் படாமலும், ஓரிடத்தில் நிமைப் பொழுதுந் தரிக்காது, அசைந்தாடும் பாதங்கள். அப்பாதங்களின் திவ்விய சுந்தர எழிலிற் பிக்குவின் நயனங்கள் நிலைத்தன.
வியப்புப் போதையிற் சுழன்ற கற்பனை, கவிஞ னாக இயங்குகின்றது.
குருத்துக் குறுமணற் பரப்பில், புறாக் கூட்டம் கோலந் தீட்டய அந்தக் காட்சி… புறாப் பாதங்களின் நிறத்திற் பெண்களா? இந்த அழகின் ஒரு துளி தானும் பூலோகத்திற் கிடையாது என எழுந்த எண்ணப் பிந்தின் தடத்தில், கண்கள் தரித்து, பாதங்களை மட்டுமே பருகின. பின்னர் மெல்ல மெல்ல அவர் களுடைய மேனியழகினைப் பருகிடும் அவாவை மாந்தி, மேலே மேலே எழுந்தன.
தென்றல் வீசுகின்றது.
மயில் ஆடுகின்றது.
சீதளக் காற்றிலே சுடர் நடுங்குகின்றது.
அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக, இசை எழுப்பி நீந்துகின்றன.
புள்ளிமான் மருளுகின்றது.
அரவம் படம் விரிக்கின்றது.
அன்னப்புள் நடக்கின்றது.
இவையனைத்தும் திவ்விய கன்னியரேயாகி, அவர் களே சகலமுமாக, பிக்குவின் என்பின் குழலட்டையைக் கூட உலுப்பி ஆடுகின்றார்கள். இன்பப் புஷ்பாஞ்சலி வர்ஷிக்கப் படுகின்றது.
அவர்களுடைய நர்த்தனம் ஏற்படுத்திய சுழற்சியில்,
அரங்கமே ஆட,
அந்தர லோகமே ஆட்
பிக்குவின் மனமும் துரும்பாக ஆட,
புளகாங்கிதப் புனல் கொட்டுகின்றது!
புறாப்பாத எழில் நிறங் காட்டும் மேனியை மறைக் காதே அணியப் பட்டிருந்த பாலாவி உடைகள் கூட அவிழ்ந்து விழ, பிறப்புக் கோலத்தின் சுயகோலஞ் சிந்தும் விழிநிறைந்த வனப்பைச் சுவைத்து, தேன் குடத்தில் விழுந்த ஈயாகத் தத்தளிக்கிறார். திவ்விய கன்னியரின் பாந்தத்திற் பிணிக்கப்படுகிறார்.
இந்திரனுக்குத் தர்மோபதேசஞ் செய்து திரும்பிப் பார்த்த புத்தர், பிக்கு அரம்பையரின் சுந்தரச் சதுரிற் சுயமிழந்து சொக்கியிருப்பதை அவதானிக்கவுந் தவற வில்லை.
மறுகணம்-
கன்னியர் அறுவரும் காற்றுடன் காற்றாகக் கலந்து மறைந்தனர்.
சுந்தரக் கனவிலிருந்து சட்டென்று விழித்த ஓர் ஏமாற்ற உணர்வு நந்த பிக்குவின் மனத்தினைப் பிறாண்டியது.
நினைக்க நினைக்கப் பிரளயமாகப் பெருகும் அழகுச் சுவை நெஞ்சில் அலைமோத, ஒன்றுமே பேசாது புத்தரைப் பின்தொடர்ந்தார்.
நெறி
புத்தர் மௌனத்தைக் கலைத்தார். பூலோகம் சமீபித்துக் கொண்டிருந்தது. ‘நந்த, இந்திரலோகத்தில் பார்த்த திவ்விய கன்னியரைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?’
சிந்தனையின் ஒவ்வோர் அரவத் தலையின் நெளிவிலும், அவர்களது உருவங்களே துலங்க, ஊமை உலகின் இன்பத்திலே துய்த்த பிக்கு, கனவிற் பிதற்றும் பித்தனாக “ஒரு திவ்விய கன்னியின் அழகிற்கு இந்தப் பூலோகம் முழுவதும் ஈடாக மாட்டாது. ஒருத்தியுடன் ஒருகணம் சேர்ந்து வாழுஞ் சுகத்திற்காக எனது இராச் சியத்தையே அவள் காலடியிற் காணிக்கையாகச் சேர்க் கவுந் தயங்க மாட்டேன்” என்றார்.
“ஜனபதகல்யாணி வாழும் இந்தப் பூலோகத்தை விட ஒரு திவ்வியகன்னி அவ்வளவு உயர்ந்தவளா?” என் அறியாமை என்னுடையதே. திவ்விய கன்னி ஒருத்தியினுடைய காற் தூசியின் அழகுக்குத் தானும் ஈடாக மாட்டாள் ஜனபத கல்யாணி. ஆகாய மார்க்கத்திற் பாதி எரிந்து, புலவு வீசத் தொங்கிய மந்தியைப் பார்த்தோமே, அதனைப் பார்க்கிலும் விகாரமானவள் ஜனபதகல்யாணி.’-சுயத்தை இச்சை விழுங்கிய பித்த நிலையிற் பேசினார்.
”அப்படியா?” என்று புத்தர் கேட்பதற்கும், இருவரும் பூலோகத்திற் பாதம் மிதிப்பதற்குஞ் சரியாக இருந்தது.
குஞ்சிரிப்பே முகமாக, புத்தர் வெள்ளரசமரத்தை நோக்கி நடந்தார். திவ்விய கன்னியரின் நினைவே மனமெல்லாம் நிறைந்து நிற்க, நந்த பிக்கு பின் தொடர்ந்தார்.
“நந்த! உன் மனம் உண்மையிலேயே திவ்விய கன்னியரிற் படிந்திருக்குமேயானால், ஏன் அவர்களுள் ஒருத்தியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாகாது?”
‘’மனித ஆசைகளுக்கு ஓர் எல்லையுண்டு. நான் திவ்வியகன்னி ஒருத்தியை மணக்க விரும்புவது, அம்பு லியைப் பிடித்து விளையாட ஆசை கொள்ளும் சவலையின் கற்பனை நிகர்த்ததாகத் தானிருக்கும். இந்திர லோகத் திற்குப் பறந்து செல்லவோ, திவ்விய கன்னியை என் பால் ஆகர்ஷித்து இழுக்கவோ சக்தியற்றவன் நான்.”
“சாக்கிய சிம்மாசனமும், ஜனபத கல்யாணியும் திவ்விய கன்னியின் அழகிற்கு முன்னால் மிகமிக அற்ப மாகப்படுகின்றதல்லவா? மனத்தினை ஒரு நிலைப் படுத்தி, நீ சித்தத்தைச் சுத்தப் படுத்துவாயே யாகில். உன் இறுதி மனோரதம் ஈடேறும். சித்தம் ஆதியந்த மற்றது. அதனாற் சாதிக்க இயலாதது ஒன்றுமில்லை. சித்தத் தூய்மையில், நான் ஆகாய மார்க்கத்திற் பயணஞ் செய்ய முடியுமேயானால், ஏன் உன்னால் மட்டும் இயலாது?”
சிந்தனையே அவராக, மௌனத்திலாழ்ந்தார். நந்த பிக்கு. திடீரென ஒளி பெற்றவர் போல,“நீங்கள் துறவற நெறியைப் போதிப்பவர்கள். சிற்றின்ப விவ காரம் என்ற உடலிச்சையை வென்றவர்கள் என்னு டைய ஆசைகளை வெறும் மாம்ஸ இச்சை யென்று இகழ்வீர்கள். அத்தகைய தாங்கள், நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதை எவ்வாறு ஆசீர்வதிப்பீர்கள்?” எனக் கேட்டார்
”வெவ்வேறு தளத்தின் சீவராசிகளின் அவாக்கள் வெவ்வேறானவை. ஒழுங்கற்ற சீவன்களின் ஆசைகள் ஒழுங்கற்றவை. பக்குவமடைந்த சீவன்களின் ஆசைகள் பக்குவமடைந்தவை. பக்குவமடைந்த மனிதர்களின் ஆசைகள், பக்குவமடையாத மனிதரின் ஆசைகளைப் பார்க்கிலுஞ் செம்மையானவை நிற்க உன்னுடைய பக்குவ நிலையில், திவ்விய கன்னியுடன் நடத்தும் அதியற்புத மாய வாழ்க்கையை நாடி நிற்கின்றாய். உன் இச்சா பூர்த்திக்கு நான் தடையாக நில்லாமல், உன் வெற்றிக்கு வேறொரு வழியில் உதவுவதுதான் பொருந்தும். உன் இஷ்டம் நிறைவேற உன் சித்தமே உனக்குத் துணை செய்தல் வேண்டும். சித்த மார்க்கத் தின் அற்புத உண்மையை உணர்ந்து, அதன்படி சித்தத் தினை நெறிப்படுத்தல் வேண்டும்…”
‘‘புனிதரே! இதற்கிடையில் நான் தங்களுடைய தனைகளை மறந்து விட வில்லை. துக்க-சமுதய- நிரோத -மார்க்க ஆகிய சதுராதிய சத்தியங்கள்.
“கிளிப்பிள்ளையாகச் சில அடிப்படை உண்மைகளை வெளிப்படையாக உதடுகளில் உச்சரிப்பதால் யாது பயன்? உண்மைகளின் உண்மையினை உணரல் வேண்டும். இவ்வுலகிலே துன்பங்கள் நிறைந்திருக் கின்றன. அதனால் ஏற்படும் துக்க நிலை. சமுதய என் பது துன்பங்களை ஏற்படுத்தும் ஹேதுக்கள் எவை என் பதை உணர் தல். துன்பத்தைத் தரும் ஹேது இச்சையே தான்.ஓரிச்சையைத் திருப்தி செய்ய முயல,புதிய இச்சை களும் ஊறுகின்றன. ஈற்றில், இவ்விச்சைகள் முடிவடை யாது, இச்சைகளே எஞ்சுகின்றன. இச்சைகளை அழித்தோ, அல்லது அவற்றை விரோதித்தோ விலகு தலே நிரோத. இச்சைகளை அழிப்பதற்கான வழியை உணர்தல் மார்க்க. நான் போதித்த ஆரிய அஷ்டாங்க மார்க்கம் நினைவிலிருக்கிற தல்லவா ?”
“ஆம், நற்காட்சி -நல்லூற்றம் – நல்வாய்மை நற்செய்கை – நல்வாழ்க்கை – நல்லூக்கம்- நற்கடைப் பிடி – நல்லமைதி ஆகிய எட்டுமே ஆரிய அஷ்டாங்க மார்க்கமாம்”.
“நன்று. தியானத்தில் நல்லமைதி பெற்று, சித் தத்தை உணர். வழி தானாகவே பிறக்கும்”.
நந்த பிக்கு வணங்கினார்.
புத்தர் பிரகாசமாகப் புன்னகை பூத்தார்.
ஒளி
புத்தர் வாழ் விஹாரத்திலே ஏனையோருக்குப் புலப்படாத ஒரு மாற்றம். தன்னந்தனியாக நந்தபிக்கு வினுள் ஏற்பட்டு வரும் மாற்றம். சங்கத்திற் சேர்ந்தவர் களுக்கு விதிக்கப் பட்டிருந்த அத்தனை சீல விதி களையும் ஊக்கமாகவும் கெட்டியாகவும் கடைப்பிடித் தார். சித்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கத்தில் மிகுந்த பிரயாசையுடன் தியானத்தில் மூழ்கத் தொடங் கினார். அவரிலே காணப்படும் புற மாற்றங்கள் பிரதக் ஜன பிக்குகள் சிலரைப் பேராச்சரியத்திலே திக்கித் திணறச் செய்தன. நந்த பிக்குவுக்குத் திவ்விய கன்னி யொருத்தியை விவாகஞ் செய்து வைக்கப் புத்தர் சம்மதந் தெரிவித்த அந்தச் செய்தி, அவர்களை வியப்பு ஆழியின் அலைகளில் அலைக் கழித்தது. அழுக்காற்றில் நுகும்பு விட்ட அஞ்ஞானம் வெடித்து இதழவிழ்க்கத் தொடங்கிற்று. அவர்கள் அடிக்கடி வந்து சிற்றின்ப விவகாரங்களைப் பற்றியும், திவ்விய கன்னியரின் திவ்விய அழகினைப் பற்றியும், பிக்குவிடம் பிரஸ்தா பித்தார்கள் ஆரம்பத்தில், அவர்களுடைய அத்த கைய பேச்சுக்கள், அவருடைய செவிகளிலே தேன் மழையை வருஷித்தன. அந்நேரங்களிற் புறாப்பாத நிறமுள்ள எழில் மிகு திவ்வியகன்னி ஒருத்தி, பாலாவி உடை போர்த்தி, மின்னும் அளகபாரத்திலே பாரிஜாத மலர் சூட்டி, கரத்தில் வெண் சாமரமேந்தி, ஆகாய மார்க்கத்திற் கீழே இறங்கிக் கொண்டிருப்பதான மாயா ஜாலக் காட்சிகள் விரியும். இந்தக் காட்சிகளை, S. சித்தத்தை ஒரு நிலைப்படுத்தித் தன் காரியத்தைச் சாதித்தல் வேண்டு மென்ற வெறி விழுங்கி விடும். வெறியின் அணங்காடல்… அவரே சீலத்தினதும் சித்தத்தைச் சுத்தப் படுத்துவதினதும் உருவாக மாறத் தொடங்கினார். ஜனபத கல்யாணி ஏதோ பல பிறவி களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியின் சாயலாக மறக்கப் பட்டே போனாள். பிக்குவின் உள்ளத்திற் பழையன கழிந்து, புதியன புகத் தொடங்கின. ஒவ்வோர் அணுவும் சாகாமலே செத்து, புதிய அணுக்கள் பிறக்காமலே பிறந்து, புதுக் கோலங் கொள்ளு ளு. கின்றது. சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தித் தியானத் தில் ஆழ ஆழ, அதிலேயே ஏற்படும் சுகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் விநோத இன்பங் குதிருகின்றது. அந்நிலையில், வேறு எந்த நினைவுகளும். இச்சை களும் இல்லையேயான ஒரு வெறுமை. வெறுமை யென்றாலும், நிறைவின் நிறைவான வெறுமை. எந்த இலட்சியத்திற்காகக் கடின நோன்புகளை மேற் கொண்டோ மென்ற நினைவுகளே இதழ் இதழாக ஒடிந்து கழர உடலின் இச்சைகள் துளி துளியாக மரிக்க, உடலிச்சை எழுச்சிகள் தழுவ முடியவே முடியாத புதிய வீரமொன்று அதன் சிதையிலே துளிர்த்து வளர, சீலமும்- தியானமும்- சித்தமுமே இலட்சியமாக, அதற்கு அப்பாலும் அப்பாலும் வேறெதுவுமே இல்லை யாக, ஊழின் பல பிறவிகளென்ற எல்லைகளின் அந்த ரங்க முடிச்சுகளைச் சிக்கவிழ்த்த திவ்விய நிலை வெகு வாக வெகுவாக வளர்ந்து வரும் நாளில்-
நந்தபிக்கு அரஹத் நிலை எய்தினார்.
போதி
புத்திபூர்வமாக இழையும் சில நினைவுகள். பின்னியும்- பின்னாமலும், சேர்ந்தும் – தனித்தும், எல்லை யிட்ட வேலியைத் தகர்த்து வழி தேடுகின்றன. பாதங் களின் இயக்கமும் அலைவுமின்றி, இந்தப் பூமியை- அல்லது, அதன் வாழ்க்கைச் சக்கரத்தை -வலம் வருவ திற் சேரும் அனுபவம்… ஆகாய மார்க்கத்தில், இந்திர சபைக்கு அன்று சென்றதிலும் பார்க்க மிக மிக எளிதாக இயங்க முடிகின்றது.
கபிலவஸ்து அரண்மனையிலும் பார்க்க நெடிது. நெடிதாக, எழிலிக் கூரையைக் கிழித்து வளர்ந்திருக்கும் மலைகள். மலைகள்… அவை, வைரத்தகதகப்பில் ஒளிரும் பனிப் படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சு கின்றன. ஆண்டான் யார்? அவன் அடிமைகள் யார்? பனிக் கற்களின் ஏகம். நீர், உறைந்து திடமான ஒரு நிலை; ஒரு ஸ்திதி ; ஒருபிறப்பு… புஷ்பாஞ்சலியிற் சிதறிய அலரி மலர்களாகப் பனிக் கட்டிகள். அவை உருகி, வெள்ளி நூல்கள் பல இழுத்து,பலவும் ஒன்றாகி, குமரி லாவண்யம் பெற்று, சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பெரும் பாறையிலிருந்து கீழே துள்ளிக் குதித்து… அருவி யின் இசையும்-கூத்தும்! தண்மையின் திரிசங்கு சுகத் திற் சுகிக்கும் அதன் நிலையும் அதன் ஸ்திதியும்
விஹாரத்திலுள்ள, புறவுக் கூட்டத்தின் வசிப்பிட மாம் ஆலமரம், தளிரிலை தூக்கும் வெள்ளரச மரம்- இத்தகைய பல நூறு இலட்சம் மரங்கள் செறிந்த காட்டின் வழியாக.மூப்பிலேமுற்றாமலும், இளமையிலே துள்ளாமலும், ஆறு ஓடுகின்றது. அதனையே தனது வண்ணமாக்கிக் கொண்ட ஒரு கோலம்.பழுத்துக் கழன்ற இலைகள்; உதிர்ந்து விழுந்த பூக்கள்: ஒடிந்து விழுந்த கிளைகள். வழியெல்லாம் தன்னை வந்தடையும் எதனையும் கழிக்காது, தன்னுடன் இழுத்துச் செல்லும் மண்மிசை வாழ்க்கை. முல்லைப் பயணம் மேற்கொண் டுள்ள ஆறு, எங்கே ஓடுகின்றது? கழனி நிலத்திற்கா? அல்லது, அப்பாலும் அப்பாலுமாகக் கடலுக்கா?
மரகதப் போர்வையிட்ட மருத நில வெளி. புழுதி வாழ்க்கையில் மண்ணைக் கிளறி, பாடு பட்டே வாழ்க்கை நடத்தும் மனிதப் பிரயாசையின் குடலை விளைச்சல்… அதன், நடுவில் நீல விதானத்தைப் பிம்பங் காட்டியவாறே, நிஷ்டையிலே தோன்றுங் குளம். தடாகத்தடியிலே உறைந்து கிடக்குஞ் சேற்றினை அமைதியான தன் நீருடையால் மறைத்து வைத்திருக் கின்றது. கூந்தலுக்கு அழகு செய்யும் வண்ணம் அங் கொன்றும் இங்கொன்றுமாக இதழ் சிரிக்குந் தாமரைப் பூக்கள். முட்காம்புகளிற் குடை விரித்திருக்கும் தாமரை இலைகளில் ஒறுப்பாகச் சிந்திக் கிடக்கும் நீர்த்திவலை கள். தினகரன் கதிரில் நித்தில ஜாலம் காட்டும் அவை குளத்து நீரே!…அவற்றின் நிலை ; ஸ்திதி…
நரன் வழி தோன்றும் இச்சைகளிலும் பார்க்க எத்தனையோ கோடானு கோடி அலைகளைச் சுழித்து உருட்டும் சமுத்திரம். இராட்சத ஓதையெழுப்பி, அலை களைக் கரைகளுக்கு உதைத்து, பால் நுரைகள் கக்கும் ஆழியின் எல்லைகள் எவை? விழிப் புலத்திற்குச் சற்றுஞ் சிக்குப் படாது, அடிவானத்திற்கு அப்பாலும் அப்பாலும் விரிந்து பரந்து கிடக்கின்றது. விழிப் புலத்திற்கும் எட்டாத இடத்தில் உருவாகும் இவ்வலைகள் கரை தட்டியதும் மரிக்கின்றனவா? அழிவு உண்டானால் பிறப்புமுண்டு…இத்தனை அனந்தகோடி அலைகள் ஏன் பிறக்க வேண்டும்?… கடல் நீரின் நிலை; ஸ்திதி… பாலை வனத்தை வஞ்சித்த நீர் இங்கே உபரியாகவும் எல்லையற்றதாகவுங் கிடந்தும்; குடிப்பதற்கு உதவாது, உப்புக் கரித்து…
பனிக் கட்டிகள்;
அருவி ;
குளம்;
கடல்;
எல்லாம் நீரே…
ஒன்றென்றாலும் ஒன்றல்ல, பலவென்றாலும் பலவல்ல..
நீரின் வாழ்க்கைச் சக்கரம் புத்தி பூர்வமாகப் பிடிமானத்திற்குள்ளே சிக்குப்படுகின்றது,
திவ்வியகன்னியராக விண்வெளியில் உலவும் முகிற் கூட்டங்கள். கண்ணுக்குப் புலப்படாமல், காற்றிலும் இலேசாக, வாயுவாக உலையும் நீர். நிர்மலமான நீர்…
முகில், நீரே! ஆனால் வாயு.
அருவி நீரே! ஆனால் திரவம்.
பனிக்கட்டி நீரே! ஆனால் திடம்…
எல்லாமே ஒன்று. ஆனாலும், ஒன்றல்ல. இருப்பினும் எல்லாமே நீர்; நீருடைய வாழ்க்கைச் சக்கரத்தின் சில ஸ்திதிகள்…
ஒரு நீர்த்துளி இப்பொழுதிருக்கும் நிலை சாசுவ மானதா? இல்லையென்றால்…அதன் முந்திய ஸ்திதி என்ன? அடுத்த ஸ்திதி என்ன? எது பழைய நிலை; எது புதிய நிலை? மழைத் திவலைகளாக மண்ணிற்குத் திரும்பும் நீரா? அல்லது, நீராவியாக விண்ணேகும் நீரா? எது கழிகின்றது? எது புகுகின்றது? எது மரபு? எது வேலி? எது வழி? போயாதினத் தத்துவமா…
சித்தத்தை உணராது சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தின் அனந்தகோடி பற்களுள் ஒன்று…
புரியாதன யாவுமே புரிகின்றன.
சித்த பரிசுத்தம் பெற்று, சீல வாழ்க்கை தழுவி, சங்கத்தின் பூரண அங்கத்துவமே நிறைத்து, அரஹத் நிலையடைந்த நந்தபிக்கு நிறைவின் நிறைவுடன் நடந்து கொண்டிருக்கின்றார். புரிந்தும் – புரியாமலும், சத்தும்- அசத்துமாக, ஓயாமலும் தரிக்காமலுஞ் சுழலுஞ் சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்றவராக, அதன் நிறைவே வியாபிக்க, துன்பமே அற்ற தூய நிலையில் நடக்கின்றார்… அவருக் கென்றிருக்கும் இச்சா பந்தமும், லௌகீகச் சொத்தும் சீவர ஆடையும், ஒரு பிக்ஷா பாத்திரமுமே…
நந்த பிக்ஷ பிக்ஷ, தானமேற்றுக் கொள்வதற்காகப் பிக்ஷாபாத்திரத்துடன் நடந்து கொண்டேயிருக்கின்றார்.
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுவை
எஸ்.பொன்னுத்துரை
September 22, 2026
சிதை
எஸ்.பொன்னுத்துரை
September 22, 2026
கல்லறையின் விடியல்
கிறிஸ்டஸ் செல்வகுமார்
August 16, 2026
