கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 3,655 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபதாம் நூற்றாண்டிலே வாழும் பத்னி பராயணர்களான ராமச்சந்திரர்களே! மேலே உள்ள தலைப்பைக் கண்ணுற்று மிரளாதீர்கள்; திடுக்கிட்டு எகிறிக் குதிக்காதீர்கள்; துணுக்குற்றுக் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். இதற்குள் என்ன ரகசியம் புதைந்து கிடக்கின்றதோ என்று எண்ணி, அதைக் கண்டு பிடித்து விட்டுத்தான் மறுகாரியம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மானங்கெட்ட கற்பனையின் உதவியை நாடி வீண் முயற்சியில் இறங்காதீர்கள். ஏனெனில் நான் பத்னி விரதபாலனம் செய்வதில் நம்பிக்கை கொண்டவன். இவ்விஷயத்தில் நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. அப்படியே நான் தப்பித் தவறி மனம் சலித்து மாற முயன்றாலும், என் கிருஹத்தில் இருக்கும் ஜகதம்பா போன்ற என் சகதர்மிணி கத்தியின் கூர்மையை யொத்த இந்த விரதத்திலிருந்து நழுவுவதற்கு எனக்குச் சந்தர்ப்பமோ அவகாசமோ சிறிதும் அளிப்பதில்லை. ஆகவே, அந்தத் தைரியத்தில்தான் நீங்கள் நிஷ்கவலையாக நிம்மதியாக மேலே படிக்கலாம் என்று நான் தைரியமாகச் சொல்லுகிறேன்.

19 வருஷம் வைகாசி மாதத்திலே விவாகம் என்னும் தொத்து நோய் குஜராத் முழுவதும் தன் பலம் முழுவதையும் ஒருங்கே காட்டித் தன் கை வரிசை யைக் காட்டியது என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். அதனால் எத்தனையோ பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் கால் கட்டுக் கை கட்டுப் போட்டு வாய்ப் பூட்டும் போடப்பட்டது என்பதை யாரும் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடுவதற்கில்லை.

அதற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் ரெவின்யூ இலாக்காவில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என்னும் பதவியில் தாசில்தார்களின் வீட்டிலே பஞ்சபட்ச பரமான்னங்களுடன் நேர்த்தியான விருந்து உண்ணும் உத்தியோகம் பார்த்து வந்தேன். அச்சமயம்தான் எனக்கு பார்குவா கிராமத்து வாசியான தயால்ஜி பாயியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு எப்படி ஏற்பட்டது என்பதை ஏராளமாக யுத்தக் கடன் சேகரித்துக் கொடுத்து அதன் மகிமையின் காரணமாக மாஜிஸ்திரேட் ஆகிவிட்ட நான் இங்கே இச்சமயத்தில் சொல்லுவதற்கில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்லுவதில் சிறிதும் தவறில்லை என்று எண்ணுகிறேன்.

அந்தக் கல்யாண காலத்தில் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் கல்யாணம் நடப்பதாயிருந்தது. அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் ‘வார் லோன்’ வாங்கப் போய் விட்டால் அவர்கள் வீட்டு விக்ன விநாயகரான கணபதியின் விக்ரஹம் கூடத் தும்பிக்கையை நேரே நிமிர்த்திக் கொண்டு உட்கார அஞ்சும் என்றால், நீங்களே என் பெருமையைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்களேன்! எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட இந்த நெருங்கிய தொடர்புக்கு இதைக் காட்டிலும் முக்கிய மான வேறு நல்ல காரணத்தை நான் எங்கிருந்து எப்படிக் கற்பித்துக் கூறமுடியும்!

ஸப் கலெக்டர் பதவியை அடைந்திருந்த நான் அப்பொழுதுதான் பூனாவிலிருந்து சர்க்கார் வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்யும் உரிமை உண்டு. சர்க்கார் காரியமாகப் போனால் எனக்கு இரண்டாவது வகுப்புக்கு உரிய கட்டணத்தைச் சர்க்கார் கொடுத்து வந்தது.

ஆனால் பணத்தை மிச்சம் பிடிக்கும் எண்ணத்தில் நான் மூன் றாவது வகுப்பில்தான் பிரயாணம் செய்வது வழக்கம். ரெயில்வே கட்டணத்தை மட்டும் அல்ல; எனக்குக் கிடைக்கும் தினசரிப் படியிலும்கூட நான் நல்ல மிச்சம் பிடித்து விடுவேன். ஆகவேதான் நான் வண்டி நிற் கும் இடமான அந்தச் சிறு ஸ்டேஷனுக்குச் சென்று- அந்த ஸ்டேஷனின் பெயரை இங்கே குறிப்பிடுவது அநாவசியம் – ஒன்பது மணி பாஸஞ்சர் வண்டிக்கு பார்குவாவுக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்தேன்.

இந்த வண்டியில் ஒரு சௌகரியம் என்ன வென்றால், பெரும்பாலும் புதிதாகப் பிரயாணம் செய்யும் யாத்ரீகர்கள் தான் ஏறுவார்கள். பழைய பழகிய முகத்தைப் பார்க்க முடியாது. அடிக்கடி பிரயாணம் செய்து அலுத்துப் போயிருக்கும் பிரயாணிகள் இந்த வண்டியை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். இந்த வண்டியில் இன்னொரு சௌகரியம் என்னவென்றால், காலை நீட்டிக்கொண்டு ‘ஹாயா’கப் படுத்துக் கொள்ள இடம் கிடைக்கும். அடுத்தபடியாக, மேலதிகாரிகள் இதில் பிரயாணம் செய்வது மிகவும் அபூர்வம். ஆகவே, ‘மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஏன் பிரயாணம் செய்கிறாய்? இன்று ‘ஹெட்குவார்ட்டரி’ல் இருக்க வேண்டிய நாளாயிற்றே! எங்கே போகிறாய்?’ என்றெல்லாம் தொணதொணவென்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்டு மூளையைக் குழப்பும் மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளுவதும் அபூர்வம்.

நான் சர்னி ரோடில்—அடடா! ஸ்டேஷனின் பெயரைச் சொல்லி விட்டேனா?-பாதகமில்லை; ரயிலேறினேன். நான் ஏறிய வண்டியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இருபது வயதிருக்கலாம். பெண்களுக்கு இயல்பான நாணம் அவள் அழகுக்கு அழகு கொடுத்துக் கொண்டிருந்தது. சிவந்த உதடுகளில் சிரிப்புத் தாண்டவமாடிக் காண்போரின் கண்களைச் சிறைப்படுத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு அருகில் அவளுடைய இரண்டு வயதுக் குழநதை குறுகுறுப்பாக உட்கார்ந்திருந்தது. இன்னொரு பலகையில் ஒரு வாலிபன் காலை அந்தப் பெண்ணின் பக்கம் நீட்டிப்படுத்துக் கொண்டு தூங்க முயன்று கொண்டிருந்தான். அவன் அந்தப் பெண்ணின் கணவனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

கிராண்ட் ரோடில் வண்டி நின்றதும், வயது முதிர்ந்த தேசாய் ஒருவர் கர்நாடக பாணியில் சிவப்புத் தலைப்பா தரித்துக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார். அவர் வாய் சிவக்க, வெற்றிலைச் சாறு சாறு வழியத் தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார்.

எனக்கோ பேச்சு என்றால் கொஞ்சம் பிடிக்கும். ஊர் ஊராக, ஜில்லா ஜில்லாவாகச் சுற்றிச் சிநேகம் பிடிப்பதில் எனக்கு நிகர் நான்தான். ஆகவே, தேசாயை மெதுவாகப் பேச்சுக்கு இழுத்து லோகா பிராமமாகப் பேசிச் சிநேகம் செய்துகொண்டேன்.

பால்கருக்கு வந்ததும் எனக்குப் பசி எடுத்தது. ராத்திரி பார்குவாவுக்குப் போய் விருந்துச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தாக வேண்டும். வயிற்றை விருந்துக்குத் தயார் செய்து கொள்ள வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நல்லது என்று எண்ணி அரை டஜன் வாழைப் பழத்தை வாங்கி அதில் பாதியை உரித்து வாய் வழியாக வயிற்றுக்குள் தள்ளி மிகுதியைக் காலடிகளில் வைத்துக் கொண்டேன்.

கடுகு மலையானது, எள்ளு பனையானது என்ற பழ மொழிகளை நினைவு கூரும்பொழுது நேயர்களிடம் ஒரு விஷயத்தைக் கூறாமல் இருக்க முடியவில்லை. நான் பால்கரில் வாழைப் பழம் வாங்கிப் பாதியைத் தின்று பாதியை எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் மத்தியில் வைக்காமல் முழுவதையுமே தின்றிருந்தேனானால், ‘இடைக்கால மனைவி’ என்னும் இந்தக் கதையை நான் எழுத வேண்டிய அவசியமும் நேர்ந்திராது; நேயர்களுக்குப் படிக்க வேண்டிய சிரமும் ஏற்பட்டிராது.

ஆனால் நடப்பது என்னவோ நடந்து விட்டது. இரண்டு வயதுகூட நிரம்பாத அந்த அசகாயச் சூரப்பயல் தாயின் பக்கத்திலிருந்து எப்பொழுது கீழே இறங்கினானோ, எனக்குத் தெரியாது. ஆனந்த நடை போட்டுக் கொண்டும் குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டும் அவன் மெதுவாக வாழைப் பழத்தை நோக்கிப் போகலானான்.

நானோ பி.ஏ. பட்டம் பெற்றவன். கல்லூரியில் கல்வி பயின்று வந்த காலம் முதற்கொண்டே மாதர் முன்னேற்றம், பெண்கள் பெருமை, ஸ்திரீகள் சுதந்திரம் போன்ற விஷயங்களில் முன்னேற்ற நோக்கங் கொண்டவன்; ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். ஆகவே, என் உள்ளத்தின் ஆழத்தில் அழுந்திக் கிடந்த ‘பெண்களுக்குப் பெருமை நிறைந்த உரிமை தர வேண்டும்’ என்ற உணர்ச்சி விதை வெடித்தது; அதிலிருந்து முளையும் கிளம்பியது. உடனே ஒரு வாழைப் பழத்தை எடுத்து விண்டு அந்தக் குழந்தையின் கையில் கொடுத்தேன். அவன் ஆனந்தத்தால் கண்கள் அகல விரியச் சிரித்த முகத்துடன் என்னையே பார்த்தவாறிருந்தான். நான் கைநீட்டிக் குழந்தையைப் பக்கத்தில் அழைத்தேன்.

குழந்தையின் தாயார் குனிந்த பார்வையுடன் என்னை ஒருமுறை பார்த்தாள். பிறகு இலேசாகச் சிரித்தவாறு, “இருக்கட்டும். வேண்டாம். வேட்டியை வீணாக்கி விடுவான்!” என்றாள்.

“அதனால் என்ன?” என்று நானும் சற்று உரிமையுடன் சொனனேன். குருட்டாம் போக்கில் வைக்கும் குறி சில சமயம் சரியாகப் பட்டு விடுவதுண்டல்லவா? அது போல் எங்கள் பேச்சு எங்களிடையே எங்களையறியாமல் ஏதோ ஒரு தொடர்பை உண்டு பண்ணி விட்டது போலும்! என் அருகில் உட்கார்ந்திருந்த தேசாய் துப்பறியும் கதை எழுதுவதில் வல்லவரான ஷெர்லாக் ஹோம்ஸாகவே ஆகிவிட்டார். அவர் தம் மனத்தில் நான் குழந்தையின் தகப்பனார் என்றும் அந்தப் பெண் தாயார் என்றும் தீர்மானித்து எங்கள் இருவரையும் கணவன் மனைவியாக்கி மனத்தில் மூன்று முடிச்சும் போட்டுக் கொண்டு விட்டார்.

பால்கரிலிருந்து வண்டி புறப்பட்டதும் தேசாய் தம் பையை அவிழ்த்து வெற்றிலை மடித்துப் பீடா பண்ண ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு பீடா பண்ணிவிட்டார். பிறகு சிரித்துப் பேசியவாறே கிழவர் தம் மனைவிக்கு ஒரு பீடாவைக் கொடுத்தார். இன்னொன்றைத் தம் வாயில் போட்டுக் கொண்டார். மூன்றாவதை எனக்குக் கொடுத்தார். பிறகு கையினால் ஜாடை காட்டி நாலாவது பீடாவை அவளுக்கு, அதாவது அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு சொல்லி என் கையிலேயே கொடுத்தார்.

எனக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. உள்ளத்திலே ஒரு கலவரம் மூண்டது. நானோ கல்யாணமானவன். ஸப் கலெக்டர் பதவியில் இருப்பவன். அவளோ வயது வந்த பெண். அத்துடன் கல்யாணமானவள். ஒரு குழந்தைக்குத் தாய் வேறு. அதுமட்டும் அல்ல; எனக்கு முன்பின் சிறிதும் அறிமுகம் இல்லாதவள். இரண்டு வார்த்தைகூட அவளுடன் பேசி நான் அறியேன். அப்படியிருக்கும்பொழுது அவளுக்கு நான் எப்படி வெற்றிலைப் பீடா கொடுப்பது? எனக்குத் தலை சுழன்றது. அவளுக்குப் பீடா கொடுக்கும் பெருமையை அவரே ஏற்றுக் கொள்ளட்டும் என்று எண்ணி நான் கையினால் ஜாடை காட்டினேன். பீடாவைப் பெண்ணின் கையில் கொடுக்குமாறு தேசாய்க்கு நாம் வீணில் ஏன் ஜாடை காட்டவேண்டும்? வழியோடு போகிற வினையை யாராவது விலைக்கு வாங்கிக் கொள்வார்களா? நாம் சொல்லி விட்டோம் என்பதற்காகத் தேசாய் தாம் அப்படிச் செய்து விடுவாரா? அப்படிச் செய்ய அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ‘டேய்! நல்ல மனுஷ்யன் அப்பா, நீ! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்!’ என்று என் மனம் என்னை அதட்டியது. ‘டேய், முட்டாள்! தூங்கும் இந்த ஆசாமி விழித்துக் கொண்டு, அவன் மனைவிக்கு நீ வெற்றிலை கொடுப்பதைத் பார்த்துவிட்டால், உன் எலும்பைச் சுக்குச் சுக்காக முறித்துப் போட்டு விடுவானே! உன் மானம் மரியாதை யெல்லாம் கப்பல் ஏறி விடுமே! ஊர்-உலகம், நாடு-நகரம் எல்லாம் சிரிக்குமே! பொறுப்புத் தெரியாத பிண்டமே!’ என்று என்னை இடித்தும் கூறியது.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன், எதேச்சையாக என் பார்வை அந்தப் பெண்ணின் மீது விழுந்தது. அவள் பார்த்த அந்தப் பார்வை அவளுக்கு விஷயம் நன்கு விளங்கி விட்டது என்பதை எடுத்துக் காட்டியது. தேசாய் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டார் என்பதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் குனிந்த தலை நிமிராமல் வந்த சிரிப்பையும் அடக்க முடியாமல் அவள் அப்படித் திண்டாடுவதற்கு நியாயம் இல்லையல்லவா? அவள் ஜன்னல் வழியாக முகத்தை வெளியே நீட்டிச் சிரிப்பை அடக்கிக் கொள்ள வெகு பிரயாசைப்பட்டாள். ஆனால் நான் அழுவதா, சிரிப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் தவித்தேன்.

‘அட! நீர் என்ன ஐயா நீர்! விசித்திரப் பிரகிருதியாயிருக்கிறீர்கள்!’ என்றார் தேசாய்.

‘ஆமாம்’ என்று சொல்ல நானும் வாய் எடுத்தேன். நல்ல வேளையாக நாக்குச் சத்தியாக்கிரஹம் செய்தது. ஏதாவது ஒன்றுக்கொன்று பேச்சுக்கு இடம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. ஆகவே, அரைக் கண்ணால் அந்தத் தூங்கும் மனிதனைப் பார்த்துக்கொண்டும், அரைக் கண்ணால் அந்தப் பெண்ணைப் பார்த்தவாறும், வெற்றிலைப் பீடாவைத் தேசாயின் கையிலிருந்து வாங்கிப் பயந்தவாறே அந்தப் பெண்ணிடம் நீட்டினேன்.

அந்தப் பெண்ணுக்கும் இது ஏதோ வேடிக்கையாகத் தோன்றியது போலும், புடவைத் தலைப்புக் குள்ளிருந்த தன் கையை நீட்டி என் கையில் இருந்த பீடாவை வாங்கிக் கொண்டாள். பிறகு இச்செய்கையினால் பீறிட்டுக் கொண்டு வரும் சிரிப்பை அடக்கிக் கொள்ளுவதற்காக அந்தப் பீடாவையே வாயில் போட்டுக்கொண்டு சுவைக்கலானாள். வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக்கொண்டு குதப்பத் தொடங்கி விட்டால், அப்புறம் எப்படிச் சிரிப்பது?

ஆனால் எங்கள் கண்கள் பேசாமல் இருந்தால்தானே? ஒன்றை ஒன்று சந்தித்து ஏதோ பேசிக் கொண்டன. அதைத் தொடர்ந்தாற்போல இரண்டு மூன்று நிமிஷங்களுக்குள்ளாக நிகழ்ந்த விந்தைச் நினைவுக்கு வந்தன. கூடவே சிரிப்பும் வந்தது.

இவ்வாறு இரண்டொரு மணி நேரம் கழிந்து விட்டது. நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்து விட்டது. தேசாய் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் அது தான். படுத்திருந்த அந்த வாலிபனும் தூக்கம் கலைந்து எழுந்து அந்த ஸ்டேஷனில் இறங்கத் தன்னைத் தயார் செய்து கொண்டான். அதைப் பார்த்த அந்தப் பெண்ணும் இறங்க ஆயத்தமானாள். கடந்த இரண்டு மணி நேரப் பதற்றமும், சிரிப்பை அடக்கும் முயற்சியும் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன. இன்பலோகத்திலே சஞ்சரித்துக் கொண்டிருந்த என் மனத்தை ஸ்டேஷன் இவ்வளவு சீக்கிரம் வந்தது என்னவோ செய்தது.

ஆனால் என்ன செய்வது? வண்டி நின்றதும் தேசாய் தம் சம்சாரத்துடன் இறங்கி விட்டார். அடுத்தபடியாக நான் இறங்கினேன். அழைத்துப்போக வருகிறவர்கள் நான் எந்த வகுப்பிலிருந்து இறங்குகிறேன் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாகவே, இரண்டாவது பெட்டிக் கெதிரே போய் நின்றுவிடுவது என் வழக்கம். ஆகவே, நான் மூன்றாவது வகுப்புப் பெட்டிக் கெதிரே அதிக நேரம் நிற்க முடியாதல்லவா? இருந்தாலும் இறங்கும் பொழுது ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அவளும் பின்னாலேயே இறங்கிக் கொண்டிருந்தாள். இறங்கும் பொழுது, ஆஜானுபாகுவான அந்த வாலிபன் தூக்கத்தினால் கரகரத்த தொண்டையுடன், “நீ இந்தப் பெட்டிக் கெதிரேயே நின்று கொண்டிரு. சகனியாவின் வேட்டி இங்கேயே தங்கிப் போய்விட்டது. கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன்” என்று சொன்னது என் காதில் தெளிவாக விழுந்தது.

அந்தச் சின்னஞ் சிறு ஸ்டேஷனிலும் கூட நல்ல கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. இறங்குபவர்களை வரவேற்க வந்தவர்களின் எண்ணிக்கை இறங்குபவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாயிருந்தது. நான் என் வழக்கப்படி இறங்கினதும் இரண்டாவது வகுப்புப் பெட்டிக் கெதிரே போய் நின்று கொண்டேன். என் நண்பரின் தமையன் பிள்ளை மக்கன் என்பவன் “ஓ ராவ் சாஹேப்! ராவ் சாஹேப்!” என்று மூச்சு வாங்கக் கூப்பிட்டுக் கொண்டே ஓடிவந்தான்.

“ஏன் மக்கன்ஜி! சௌக்கியந்தானே?” என்று கேட்டுக் கொண்டே நான் அவன் கையில் என் பையைக் கொடுத்தேன். ஆனால் என் பார்வை மட்டும் ரயிலில் என்னுடன் கூட வந்த – வேட்டியைத் தூக்கிக் கொண்டு என்ஜின் பக்கம் ஓடிய வாலிபன் மீதே இருந்தது. அவன் நாலைந்து தடவை ‘சகனியா, சகனியா’ என்று கூப்பிட்டான். கடைசியில் அவன் கூப்பிட்ட சகனியா அவனுக்குக் கிடைத்துவிட்டான். ஆகவே, அந்த மனிதன் அவனுடன் பேசுவதற்காக அவன் இருந்த பெட்டிக்குள்ளேயே ஏறிவிட்டான்.

அவர்கள் பேச்சு முடிவதற்குள்ளாகவே என்ஜின் புறப்படுவதற்கு அறிகுறியாக ஊதிவிட்டது. கார்டு வந்து சட்டென்று அந்தப் பெட்டியின் கதவை அறைந்து சாத்தினார். அதைக் கண்ட அந்த ஆசாமி கீழே இறங்க முயன்றான். அதைக் கண்ட அந்தப் பார்ஸி கார்டு, “ஏய், உட்காரு! செத்து விடுவாய்! வீட்டில் சொல்லிக் கொண்டு வந்தாயா? எங்கேயாவது விழுந்து கிழுந்து செத்துத் தொலைக்கப் போகிறாய்?” என்று எச்சரித்து விட்டு நகர்ந்தார். அதற்குள் வண்டி நகரத் தொடங்கி விட்டது. பாவம், அந்த ஆசாமி இறங்கும் வகை அறியாமல் வண்டிக்குள்ளேயே தங்கி விட்டான்.

அந்தப் பெண்மணியும் குழந்தையும் என்ன ஆவார்கள்? அவர்களை அழைத்துப் போக யாராவது ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்களா? இந்த ஆசாமி இவர்களை எங்கெல்லாந்தான் தேடுவான்? இவர்கள் நிலை என்ன ஆகும்? – இம்மாதிரியான பாரமார்த்திக எண்ணங்கள் அலை அலையாக என் மனத்தில் எழுந்தன.

இதே சமயம் மக்கன்ஜி, “ராவ் சாஹேப்! இங்கேயே நில்லுங்கள். இன்னும் வந்திருப்பவர்களையும் அழைத்து வருகிறேன்!” என்றான்.

“சரி, சரி, போய்ச் சீக்கிரம் அழைத்து வா!” என்று சொல்லிப் பிளாட்பாரத்தில் ஒரு முறை பார்வையைச் செலுத்தினேன்.

மக்கன்ஜி கொஞ்ச தூரம் சென்றவன் திரும்பி வந்து, “சார்! நீங்கள், அதோ நிற்கிறது பாருங்கள், அந்த வண்டியில் போய் உட்காருங்கள். நான் இதோ வந்து விட்டேன்!” என்று சொல்லி விட்டு மற்றப் பிரயாணிகளை அழைத்து வருவதற்காகச் சென்றான்.

தயால்ஜிபாய் வீட்டுக்கு இந்த ரயிலில் ஆண், பெண் அடங்கலாகப் பத்து வண்டிகள் நிறைய விருந்தினர்கள் வருவதாயிருந்தனர். வண்டிகளில் விருந்தினரை ஏற்றி விடுவதற்காக மக்கன்ஜி இங்கும் அங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தான். என்னுடன் கூடவே. ரயிலில் வந்த கிழவர் தேசாயும் ‘பரபர’ வென்று பம்பர மாகச் சுற்றிக் கொண்டு காரியத்தில் கண்ணாயிருந்தார்.

“ராவ் சாஹேப்! உங்களுடன் இந்த உபாத்தியாயரும், இந்த சேட்ஜியும் வருவார்கள். நீங்கள் புறப்படலாம்!” என்று தூரத்தில் இருந்தவண்ணமே மக்கன்ஜி கூச்சலிட்டான்.

ஆமதாபாத் வாசியான ஒரு சேட்டும் சூரத் தலைப்பாகை தரித்த ஒரு உபாத்தியாயரும் என் வண்டியை நோக்கி வந்தார்கள். நாங்கள் மூவரும் வண்டியேறிப் புறப்பட்டோம். அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும் என்ற கவலையில் நான் ஆழ்ந்திருந்தேன். என் மூளை இந்தச் சிந்தனையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல வண்டியின் சக்கரங்களும் ‘கட கட’வென்று சுழன்று வண்டியின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.

சிறிது நேரத்துக்கெல்லாம் எங்கள் வண்டியைத் தாண்டிக் கொண்டு இன்னொரு வண்டி இன்னும் வேகமாகப் போயிற்று. அதில் அந்த வயது முதிர்ந்த தேசாய் தம் மனைவியுடன் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்த தேசாய் ஓடும் வண்டியில் இருந்த வண்ணமே கையினால் ஜாடை காட்டி, ஏதோ சொன்னார். “எல்லோரையும் சௌகரியமாக உட்கார வைத்து விட்டேன்!” என்று சொல்வதுபோல என் காதில் விழுந்தது. அவர் சொன்னதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இவ்விதம் மாட்டு வண்டிகளின் சக்கரங்களிலிருந்து எழுந்த புழுதியினால் மூச்சுத் திணற ஐந்து மைல் கடந்து நாங்கள் பார்குவா கிராமத்தை அடைந்தோம். என் நண்பர் குசலப் பிரச்னம் விசாரித்து விட்டு, ஜில்லா கலெக்டர் தம்மை எப்படி எல்லாம் ஆட்டி வைத்தார் என்பதை யெல்லாம் சொன்னார். பிறகு, “எனக்கு அந்தப் பதவி எப்பொழுது கிட்டும்?” என்று கேட்டார். இம்மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டார். எத்தனை கேள்விகள் கேட்டு என்ன? என் கண்களிலிருந்து நாணமே உருவான அந்த நங்கையின் சிரித்த மதிமுகத்தை அவருடைய அந்தக் கேள்விகளால் அகற்ற முடியவில்லை.

எது எப்படிப் போனால் என்ன? நண்பர் என்னைத் தம் அன்புப் பிணைப்பில் கட்டியே போட்டு விட்டார். நான் வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் நடு நாயகமாக விளங்கினேன்! எனக்குக் காட்டிய மரியாதை சொல்லத் தரம் அன்று. அந்தக் கல்யாணச் சந்தடியிலும், எனக்கு ஏகப்பட்ட ஆசார உபசாரங்கள் செய்தார். அந்த ஊரில் உள்ள இன்னும் சில பிரமுகர்கள் வீட்டுக்கு என் சார்பில் அவரே அழைப்பை ஏற்றுக் கொண்டு, முன் வந்து நடத்தி வைத்தார். நான் தங்குவதற்கு வசதியாகத் தம் வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே பிரமாதமான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். இந்த ஆசார உபசாரங்களையும் மரியாதையையும் கண்ணுற்ற நான் அகமகிழ்ந்தேன். இந்த இலாகாவுக்கு நான் கலெக்டராக வந்தால், நண்பரின் இந்த ஆசார உபசாரங்களை நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்கு ஏதாவது நல்லது செய்வதென்று மனத்தில் திட சங்கற்பமும் செய்து கொண்டேன்.

தயால்ஜிபாய் தாமே நான் தங்கும் விடுதி வரைக்கும் என்னுடன் வந்தார். என்னுடைய பையை அங்கே கொண்டு வந்து வைக்கச் செய்தார். நான் அதிலிருந்து அல்பக்காக் கோட்டு, புது வேட்டி, புது அங்க. வஸ்திரம் முதலியவற்றை எடுத்து அணிந்து கொண்டு கல்யாணக் கூடத்தை அலங்கரிக்க என்னைத் தயார் செய்து கொண்டேன். என் நண்பர் மெதுவான குரலில், “ராவ் சாஹேப்! உத்தரவு வந்து விட்டதா?” என்றார்.

“எதற்கு?” என்று வியப்புடன் கேட்டேன்.

“நீங்கள் நம் ஜில்லாவுக்குக் கலெக்டராக வரப் போவது உண்மைதானே?” என்று இனிமையாகக் கேட்டார் அவர்.

அப்படியா சமாசாரம்! இவ்வளவு மரியாதை, மட்டுக்குக் காரணம் இதுவா? சில நாட்களில் அந்தப் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுக்கப் போவதாகத்தான் பேச்சு உலாவி வந்தது. நண்பரின் நம்பிக்கைக் கோட்டை தகர்ந்து நான் வேறு ஜில்லாவுக்குக் பிரதம மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டாலும் படலாம். என்ன ஆகும் என்று யார் கண்டார்கள்? ஆனால் நண்பரின் நம்பிக்கையில் அவநம்பிக்கையை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆகவே, “அதற்குத் தானே நான் பூனாவுக்குப் போயிருந்தேன். ஆனால் யாரிடமும் இப்பொழுதே ஒன்றும் சொல்லி விடாதீர்கள்!” என்று – சொல்லி அவருடைய பிரமையைப் பிரமையாகவே இருக்கும்படி மழுப்பி வைத்தேன்.

“அட! எனக்குச் சொல்லித்தர வேண்டுமா?” என்று சொல்லிவிட்டுத் தயால்ஜி என்னைத் தம் வீட்டுக்குத் தேநீர் அருந்த அழைத்துச் சென்றார்.

“ராவ் சாஹேப்! நான் இந்த மாடிப் படிக் கதவைக் கீழே தாளிட்டு விடுகிறேன். காலை வேளையில் யாரும் உங்கள் தூக்கத்தைக் கலைத்துத் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் அல்லவா?” என்றான் மக்கன்ஜி.

“ரொம்ப சரி!” என்று சொல்லி நான் படியேறி எச்சில் துப்ப ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். இதற்குள் மக்கன்ஜி கீழே கதவைத் தாளிட்டுக் கொண்டு போய்விட்டான். நான் தூங்குவதற்காக அறைக்குள் நுழைந்தேன். ஒரு மூலையில் ஸ்டேஷனில் பார்த்த அதே பெண் உட்கார்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.

“ஆ” – என் வாயிலிருந்து என்னையறியாமலே இந்த வார்த்தை எழுந்தது. என் குரலைக் கேட்டு அந்தப் பெண் எழுந்து நின்றாள். “ஆ! நீங்களா! இங்கே எங்கே?” என்று கேட்டாள். இருவரும் கலவரத்துடன் ஒன்றும் புரியாமல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்.

இருள் சூழ்ந்த இரவு. இருவரும் ஒருவருக்கொருவர் மிகச் சமீபத்தில் இருந்தோம். விளக்கு வேறு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. போதாக்குறைக்கு எல்லாவற்றுக்கும் மேலாக வாசற் கதவு வேறு தாளிடப் பட்டிருந்தது. அந்த அறியாக் குழந்தையைத் தவிர எங்களிருவருக்கும் மத்தியிலே மூன்றாமவர் யாரும் இல்லை. இதைவிட எங்கள் இருவருக்கும் தனிமையில் சந்திக்க வேறு என்ன வேண்டும்?

“நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்?” என்று சுய நினைவை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

“ஏன்? நாங்கள் இங்கே கல்யாணத்துக்கு வந்திருக்கிறோம்!” என்றாள் அவள்.

“அப்படியா? நீங்களும் பார்குவாவுக்குத்தான் வந்து கொண்டிருந்தீர்களா?” – வேறு என்ன கேட்பது என்று புரியாமல் போகவே, நான் இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தேன்.

“இல்லை, இல்லை; இது பாவ்கோடி அல்லவா?” பெண்களுக்கே இயல்பான நிஷ்கவலையுடன் அவள் சொல்லி வைத்தாள்.

“இல்லை, இது பார்குவா. இந்த வீடு இந்த ஊரில் மிகப் பிரபலஸ்தரான தயால்ஜிபாயியின் வீடு!” என்று அவளுக்குப் புரிய வைத்தேன் நான்.

“என்ன, என்ன? இது பாவ்கோடி இல்லையா? அப்படியானால் என்னை இங்கே ஏன் அழைத்துக் கொண்டு வந்தார்கள்?” என்று ஏகமாகப் பதறிப் போய்க் கேட்டாள் அவள்.

“அதனால்தான் உங்கள் கணவர் ரயிலிலேயே தங்கி விட்டாரோ?” என்று கேட்டேன்.

“ஆ! என்ன?” என்று இன்னும் பதறிப் போய்த் துடிதுடித்துக் கேட்டாள் அவள்.

“என்னவா? சகனியாவின் வேட்டியைக் கொடுத்து வருகிறேன் என்று சொல்லி முன் பெட்டியில் போய் ஏறிக்கொண்டார் அல்லவா? அப்பொழுது வண்டி புறப்பட்டு விட்டது! அவர் வண்டியுடன் போனதை நான் என்னுடைய இந்தக் கண்களாலேயே பார்த்தேன்!” என்றேன்.

“என்ன, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்கு விளங்கவில்லையே! குழந்தைக்கு அப்பா இன்னொரு வண்டியில் உட்கார்ந்திருக்கிறார் என்று அந்தத் தேசாய்க் கிழவர் சொல்லிப் போனாரே! அப்புறம் யாரோ மக்கன்ஜியாம், அவர் வந்து என்னை இன்னொரு வண்டியில் ஏற்றி விட்டுப் போனார்!” என்று அவள் களையிழந்த முகத்துடன் சொன்னாள்.

அப்புறம் தான் – அதாவது அவள் சொன்னதைக் கேட்டபின்தான் எனக்கு விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது. நான் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அப்படியே அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டேன். இம்மாதிரித் தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருந்த பொழுதிலும், அந்த விஷயத்தை நினைத்துப் பார்த்ததும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “அட கடவுளே!” என்றேன்.

“கடவுளைக் கூப்பிட்டு என்ன பிரயோஜனம்? இப்பொழுது என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்று கூறி அவள் தன் தலையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“எல்லாம் அந்தக் கிழவர் செய்த குழப்பம். எல்லாரையும் சரியாக உட்கார வைத்தாகி விட்டது என்று என்னிடம் வந்து சொல்லிப் போனார். அப்பொழுது அவர் சொன்னது எனக்குச் சரியாகப் புரியவில்லை. யாரை உட்கார வைத்தால் என்ன, உட்கார வைக்கா விட்டால் என்ன என்று எண்ணிக் கொண்டிருந்து விட்டேன். இப்பொழுதல்லவா விஷயம் புரிந்தது!”

“அப்படியானால் என்னை உங்கள்…” இதற்கு மேல் வாக்கியத்தை முடிக்க முடியாமல் அவள் வெட்கம் காரணமாக வெளிறிய முகத்துடன் தலை குனிந்தாள். பிறகு உதடுகளில் இளநகை தாண்டவமாட, “இது பெரிய தர்ம சங்கடமாக அல்லவா ஆகிவிட்டது?” என்றாள்.

“தர்ம சங்கடம் என்றால் சாமான்யமான தர்ம சங்கடமா?-ஆமாம், வெற்றிலைப் பீடா வாங்கிக் கொள்ளும்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வில்லையா?” என்று கேட்டேன்.

அவள் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பி விட்டு, “அது எக்கேடாவது கெட்டுப் போகட்டும். இப்பொழுது அவர் நிலைமை என்ன ஆகும்?” என்று மிகக் கலவரத்துடன் என்னைக் கேட்டாள்.

“என்ன ஆகும்? அடுத்த வண்டியில் திரும்பி வந்து விடுகிறார்!” என்றேன்.

“ஆமாம், நம் நிலைமை…?”

“நம் நிலைமைக்கு என்ன?”

“ஆமாம், அப்படியானால் உங்கள் காரணமாகத் தான் எனக்கு இந்த மட்டு மரியாதை,வசதி- கிசதி, விருந்து-கிருந்து, ராஜோபசாரம் எல்லாம் கிடைத்திருக்கிறது என்று சொல்லுங்கள்!”

“ஆமாம்! அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நானும் ஆமோதித்தேன்.

பிறகு நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். பெண்களுக்கு இயல்பான நாணம் அவளை மேலே பேசவிடவில்லை. பொறியில் அகப்பட்ட எலி போல் அவள் மனம் அலை பாய்ந்திருக்க வேண்டும். சிறிது நேரத்துக் கெல்லாம் அவள் என்ன நினைத்துக் கொண்டாளோ, “இனி என்ன ஆகும்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு என்னையே பார்க்கலானாள்.

பாவம், அவள் மிகவும் பதறிப் போயிருந்தாள். எனக்கும் என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. நானும் அவள் முகத்தையே பார்த்தேன். “ஐயையோ நான் என்ன செய்வேன்?” என்று கேட்டவள் அந்தப் பதற்றத்திலும் தன்னை மறந்து ‘கல கல’வென்று சிரித்து விட்டாள். என்னாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. நானும் ஒரேயடியாக மடைவாய் திறந்து விட்டது போலக் ‘கட கட’ வென்று சிரித்து விட்டேன். பிறகு, ‘இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி விடுதலை கிடைக்கும்?’ என்று கண்டு பிடிப்பதற்காக நாங்கள் இருவரும் ஏககாலத்தில் ஜன்னலண்டை சென்றோம்.

“ஆமாம், யாரிடமாவது சொல்லிப் பார்த்தால் என்ன?” என்று அவள் ஆரம்பித்தாள்.

“பார்க்கலாம். ஆனால் எல்லோரும் தூங்கிப் போய்விட்டார்களே!” நான் நம்பிக்கை இழந்து திரும்பினேன்.- “இதை யாரிடம் போய்ச் சொல்லுவது? எப்படிச் சொல்வது? சொன்னால் மானம், மரியாதை எல்லாம் காற்றாகப் பறந்து விடாதா?” என்று கூறிய வாறே அறையின் மத்தியில் தரையில் போய்த் ‘தொபு கடீர்’ என்று உட்கார்ந்து கொண்டேன்.

“நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் நியாயம் தான். இந்தச் சமயம் யாரிடம் போய் என்னத்தைச் சொல்லுவது?… இந்தப் பிள்ளையைப் பெற்ற தகப்பனுக்குத் தெரிந்தால் என் உயிரை வாங்கி விடுவானே?”

“இங்கிருக்கிறவர்களுக் கெல்லாம் தெரிந்தால் என் மானத்தை வாங்கி விடுவார்களே! நானோ ராவ் சாஹேப்! என் கதி என்ன ஆவது?” – நான் கவலைப் பட்டுக்கொண்டு என் பதற்றத்தைக் காட்டினேன். அவரவர் கவலை அவரவர்க்கு!

“சுகமோ, துக்கமோ எப்படியாவது இராப் பொழுதை ஓட்டி விடுவோம்!” என்றாள் அவள்.

“நான் தனியாகத் தூங்கக் கீழே இறங்கிப் போய் விடட்டுமா?” என்று நான் அவளைக் கேட்டேன். அதைத் தொடர்ந்தாற் போலவே, கீழே போய்க் கதவைத் திறக்க முயற்சித்தால் ஊர் முழுவதும் விழித்துக் கொண்டு விடுமே! என்ன செய்வது?” என்ற சந்தேகத்தையும் நானே எழுப்பினேன்.

“போதாக் குறைக்கு இது கல்யாண வீடு வேறு ஆயிற்றே!” என்று ஞாபகப்படுத்தி அவள் என் சந்தேகத்துக்கு இன்னும் அதிக வலுவூட்டினாள்.

நான் வாய் பேசாமல் மௌனமாக இருந்தேன்.

“ஆனால் பொழுது விடிந்தால் நான் யாரிடம் என்னவென்று சொல்லுவேன்?” என்று அவள் இன்னொரு புதிய சிரமத்தையும் சங்கடத்தையும் சுட்டிக் காட்டி என்னைக் கேட்டாள்.

“அதைப்பற்றி இப்பொழுது என்ன கவலை? எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம். உங்களை நான் பாவ்கோடிக்கே கொண்டுபோய் விட்டு வந்து விடுகிறேன்!” என்று சொன்னேன்.

“ஆமாம், அதுதான் சரியான யோசனை!” என்று அவள் என்னோடு ஒத்துப் பாடினாள்.

இந்தச் சிரமமான பிரச்னையை ஒருவாறு தீர்த்துக் கொண்ட பின்னர் அவள் அந்த அறையின் அகல நீளத்தைத் தன் கண்களாலேயே அளந்து பார்த்துக் கொண்டாள். விளக்கின் மங்கிய ஒளியையும் மதிப்பிட்டுக் கொண்டாள். பிறகு என் மீது பார்வையைப் புதைத்தாள். நானும் அந்த சமயம் அதே காரியத்தைத்தான் செய்து முடித்து அவள் பக்கம் பார்வையைத் திருப்பியிருந்தேன். என் முகத்தைப் பார்த்த அவள் இலேசாகச் சிரித்தாள். பிறகு தலையைக் குனிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். நானும் பக்கத்தில் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இச்செய்கையினால் எங்களையும் மீறி எங்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

கடைசியில் இருவரும் ‘கலகல’ வென்று சிரித்து அந்த அறையையே அதிரச் செய்து விட்டோம்.

எங்கள் சிரிப்பொலியைக் கேட்டு எதிர் வீட்டு ஜன்னல் இலேசாகத் திறந்ததையும், எங்கள் தம்பதி விநோதத்தை அங்கிருந்த வண்ணமே யாரோ கண்டு ஆனந்திக்க முயல்வதையும் நான் கண்ணுற்றேன்.

என் வாய் திறந்தது திறந்தபடியே இருந்து விட்டது. “கட்டையிலே போகிறவன்!” என்று அவள் என் காதுகளில் விழும்படியாகத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் குறிப்பறிந்த நான் மெதுவாக எழுந்து சென்று எதிர் ஜன்னல் கதவைச் சாற்றி விட்டு வந்தேன். எங்கே தூங்குவது, எப்படித் தூங்குவது என்ற எங்கள் பிரச்னை தீர்க்கப்படாமலேயே கிடந்தது.

முன் உட்கார்ந்த இடத்துக்கே வந்து நான் உட்கார்ந்து கொண்டேன். மறுபடியும் எங்கள் இருவர் பார்வையும் அந்த சிறு அறையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுப் பிறகு எங்களிலேயே வந்து லயித்தது. இம்மாதிரி எத்தனை தடவை செய்தோமோ, சட்டென்று எங்கள் கண்களில் விளக்குத் தட்டுப்பட்டது. அடுத்த கணம் ஏககாலத்தில் எங்கள் இருவருக்குமே படுத்துத் தூங்கி விடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

விருந்தாளிகள் வந்து ஏகமாகக் குழுமி விடவே தயால்ஜி பாயியினால் எங்களுக்கு ஒரே ஒரு அறைதான் ஒழித்துக் கொடுக்க முடிந்திருந்தது. அதில் ஜமக்கா ளமோ, கம்பளியோகூட விரிக்கப்பட்டிருக்கவில்லை. எங்கள் இருவருடைய மூளையையும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் முற்றுகையிட்டுக் கொண்டிருந்ததே தவிரத் தூங்க வழி தோன்றவில்லை.

“மக்கன்ஜியை எழுப்பி இன்னொரு படுக்கை கேட்டு வாங்கினால் என்ன?” என்றேன் நான்.

“கேட்கலாம். ஆனால் மற்றவர்களும் விழித்துக் கொண்டு விட்டால்…” என்ற அதே சிரமத்தை மறுபடி யும் அவள் நினைவுறுத்தினாள்.

“இன்னொரு படுக்கை இல்லாமல் இந்தப் படுக்கையையே இரண்டு பேரும்…” என்று நான் ஆரம்பித்தேன்.

“ஐயையோ!” என்று சொல்லி இரு கைகளையும் அவள் பிசைந்தாள். அப்பொழுது அவளுடைய நாணிக் கோணிக்கொண்ட அழகைக் காணக் கோடிக் கண்கள்தான் வேண்டும். ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்ட எங்களுக்குச் சிரிப்பதைத் தவிர வேறு வழி தோன்றாமற் போகவே மறுபடியும் சிரித்தோம்.

“ஆமாம். யாருக்காவது தெரிந்துவிட்டால்…?” என்று அவள் மறுபடியும் ஆரம்பித்தாள்.

“அதைத்தானே நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!” என்று சொன்ன நான் மறுபடியும் ஒரு முறை என்னை மீறிச் சிரித்தேன்.

சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம். எனக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று.

“ஒரு காரியம் செய்தால் என்ன?” என்றேன்.

“என்ன?” – ஆவலுடன் கேட்டாள் அவள்.

“இந்தத் தலையணையின் ஒரு பக்கத்தை நான் தலைக்கு உயரமாக வைத்துக்கொள்கிறேன். நீங்கள் இன்னொரு பக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தலைக்கு உயரமாக ஏதாவது வைத்துக் கொண்டால்தான் தூக்கம் வரும்!”

“எனக்கும் அப்படித்தான். தலைக்கு உயரம் இல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை!”

“இந்தக் குழந்தை நமக்கு நடுவில் தூங்கட்டும்”- அப்பொழுது நான் அந்தக் குழந்தையை எங்கள் இருவருக்கும் இடையே சுவர்போல ஒரு மறைப்பாக உபயோகப்படுத்திக் கொள்ள முயன்றேன். இதைச் சொன்ன பிறகு, நான் கோட்டு, ஷர்ட்டு, தலைப்பாகை முதலியவற்றைக் கழற்றி ஒரு புறமாக வைத்துவிட்டுப் படுக்க என்னைத் தயார் செய்து கொண்டேன்.

“ஏகப்பட்ட ஆசார-உபசாரங்கள் செய்து எனக்கும் வயிறு வெடிக்க விருந்து செய்துவைத்து விட்டார்கள்!” என்றாள் அவள்.

நாங்கள் இருவரும் தலையணையில் பாதிப் பாதியைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு படுத்துத் தூங்க முயன்றோம்.

எங்களுடைய இந்த முயற்சி வெற்றி அடைவதற்கு முன்பாகவே பையன் கீழ் ஸ்தாயியில் முகாரி ராகத்தை ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டான். ஆகவே, அவன் தாயார் எழுந்து உட்கார்ந்து அவன் அழுகையை ஓய்க்க முயன்றாள்.

“ஏன்? என்ன வேணுமாம் அவனுக்கு?’ என்று நானும் தூங்கும் முயற்சியைப் பாதியிலேயே கைவிட்டு விட்டு அவளைப் பார்த்துக் கேட்டேன்.

அவள் தன் குழந்தையின் அழுகையை ஓய்க்க என்ன வெல்லாமோ செய்து பார்த்துவிட்டாள். ஆனால் அதற்கெல்லாம் அவன் அழுகை ஓய்வதாயில்லை. வர வர உச்சஸ்தாயியை எட்டிப் பிடிக்க ஆரம்பித்தது.

கடைசியில் என்னால் பேசாமல் இருக்க முடிய வில்லை.”என்ன வேண்டுமாம், அவனுக்கு?” என்று சலிப்புடன் கேட்டேன்.

என் கேள்வியைக் கேட்ட அந்தப் பெண்ணின் முகத்தில் நாணம் படர்ந்தது. முகத்தைப் புடவைத் தலைப்பில் புதைத்துக்கொண்டு சிரிக்கலானாள்.

“என்ன விஷயம்?” – அதில் ஏதோ ரகசியம் இருப்பதாக எண்ணி நான் திருப்பித் திருப்பிப் பல தடவைகள் அவளை அதே கேள்வியைக் கேட்டுத் திக்கு முக்காட வைத்துவிட்டேன்.

“ஒன்றும் இல்லை. இவன் அப்பாதான் தினமும் இவனைத் தட்டித் தூங்கப் பண்ணுவது வழக்கம். அதற்காகத்தான் அழுகிறான்!” என்று குறும்பாகச் சிரித்தவாறே நாணம் பொங்கத் தலையைத் தரையில் புதைத்த வண்ணம் அவள் சொன்னாள்.

அட, கஷ்டமே!

“இவ்வளவுதானே விஷயம்! சரி, நான் தட்டித் தூங்கப் பண்ணுகிறேன். அவனைத் தூக்கி இப்படிப் படுக்கையில் போடுங்கள்!” என்று சொல்லிக் குழந்தையை என் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு தட்டித் தூங்கப் பண்ண முயன்றேன்.

பயல் சரியான பயல்தான்! என் கை பட்டதும் கண்களை மூடிவிட்டான். வெற்றி மகிழ்ச்சியுடன் நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு அடக்க மாட்டாத சிரிப்பு வந்தது. மிஷினை முடுக்கிவிட்டதும் குழாயில் ‘குபுக் குபுக் குபுக் குபுக்’ என்று தண்ணீர் பொங்கி வருமே, அதுபோல அவள் விட்டு விட்டுக் ‘கலீர், கலீர்’ எனச் சிரித்தாள்.

பிறகு நாங்கள் இருவரும் ஒரே தலையணையைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு எதிரும் புதிருமாகப் படுத்து விட்டோம். பிறகு தூக்கத்தை வரவழைக்கப் பிரும்மப் பிரயத்தனம் செய்தோம். சாதாரணமாக எனக்குத் தூக்கம் என்றாலே ரொம்பப் பிடிக்கும். தூக்கத்தில் கும்பகர்ணன் என்பார்களே, அவன்கூட என்னிடம் சிற்சில சமயம் பிச்சைதான் வாங்கவேண்டும். இன்றைக்குக் கிடைத்தது போன்ற ஆசார உபசாரமான விருந்து வேறு என்றைக்காவது கிடைத்திருந்தால், கண்களை மூடியதுமே நான் கண் அயர்ந்திருப்பேன். ஆனால் இதுவோ புது இடம். இரண்டாவதாக அன்றைக்கு எத்தனையோ வீடுகளில் தேநீர் அருந்தியிருந்தேன். அதையெல்லாம்விட முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண் எனக்குத் தூக்கத்துக்குத் துணைவியாக வாய்த்திருந்தாள். அப்படியிருக்கும்பொழுது தூக்கம் எங்கிருந்து வரும்? தலைவலி மண்டையைப் பிளந்தது. மூச்சுக் காற்றில் உஷ்ணம் ஏறியது. கை கால்கள் முறுக்கிக்கொண்டு முட்டுகளில் கடுத்தன. ஒன்று, இரண்டு, மூன்று நூறுவரைக்கும் எண்ணினேன். ஆயிரம் தடவை ராமநாமத்தை ஜபித்தேன். இந்திய சட்டத்தின் பிரிவு-உபபிரிவுகளை ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டேன். என்ன செய்து என்ன? கண்கள் திறந்தது திறந்தபடி இருந்தனவே யொழிய இமை கொட்டவில்லை. கண் கொட்டாமலிருந்த எனக்கு அந்தப் பெண்ணும் கண் கொட்டினதாகத் தெரியவில்லை.

தூக்கமும் வரவில்லை. உள்ளமும் பதற்றத்தில் சோர்ந்து விட்டது. உள்ளமும் உடலும் சோர்ந்த அந்தச் சமயத்தில், மறுபடியும் அந்தப் பையன் தூக்கக் கலக்கத்தில் ஸ்வரம் பாடத் தொடங்கினான்.

நான் ஒரு கையினால் அவன் முதுகில் தட்ட ஆரம்பித்தேன்.

சோர்ந்து புரண்டு படுத்த அந்தப் பெண்ணும் குழந்தை அழுவதை அறிந்து தாயின் இயல்புக் கேற்பக் கையை நீட்டினாள். எங்கள் இருவர் கைகளும் ஒன்றை ஒன்று ஸ்பரிசித்துக் கொண்டு விட்டன.

“அட கடவுளே!” என்று நான் என்னையும் அறியாமல் கூறிய வண்ணம் தீயை மிதித்து விட்டவன் போலத் துள்ளி எழுந்து உட்கார்ந்தேன்.

அந்தப் பெண்ணும் எழுந்து உட்கார்ந்தாள். “அடி அம்மா!” என்ற சொல் அவள் வாயிலிருந்து அவளையறியாமலேயே வெளி வந்தது.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மறுபடியும் பார்த்துக் கொண்டோம். தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த நாங்கள் எங்களை யறியாமலே இன்னொரு முறையும் சிரித்துவிட்டோம்.

“ஆமாம், பொழுது எப்பொழுது விடியுமோ, புரியவில்லையே!” என்றாள் அந்தப் பெண்.

“நானும் அதையேதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் புரியவில்லை!” என்றேன் நான்.

எங்கள் கேள்விக்குப் பதில் சொல்லுவதுபோல் விளக்கின் ஒளி பளிச்சென்று சுடர்விட்டுப் பிரகாசித்தது. நாங்கள் பயத்தினால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். பிறகு விளக்கின் பக்கம் பார்வையைத் திருப்பினோம். அதற்குள் விளக்கு அணைந்துவிட்டது.

***

விடியற்காலை ஐந்து மணி சுமாருக்கு நான் மாடிக் கதவைத் திறந்தே தீருவது என்று துணிந்து தீர்மானித்து விட்டேன். நேரே கதவைத் திறந்துகொண்டு தயால்ஜியைக் கூப்பிடப் போனேன்.

“தயால்ஜிபாய்! நான் இப்பொழுதே போய் ஆக வேண்டும்!” என்றேன் அவரை எழுப்பி.

“ஏன் சார்! இவ்வளவு அவசரம் என்ன?” என்று அவர் மிகவும் வினயத்துடன் கேட்டார். நான் கோபித்துக்கொண்டு விட்டேன் என்று அவருக்குத் தோன்றியது போலும்!

“இங்கே வருகிற அவசரத்திலே இன்று கமிஷன கரைப் பார்க்க வேண்டும் என்பதையே மறந்து விட்டேன். அதனால்தான்…” என்றேன்.

“அடடா! அப்படியானால் இப்பொழுது என்ன செய்வது?” என்றார் அவர்.

“பரவாயில்லை. காலையில் இங்கிருந்து ஒரு வண்டி போகிறதல்லவா? அது நாலு மணிக்கெல்லாம் பம்பாய் போய்ச் சேர்ந்துவிடும்!” என்றேன்.

“அட ராமா! சரி, நீங்கள் புறப்படுங்கள். உங்கள் மனைவி இன்னும் இரண்டு நாள் இங்கு இருந்துவிட்டு வரட்டும்!” என்றார் தயால்ஜிபாய்.

“இல்லை. அதுவும் முடியாது. குழந்தையை டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்!” என்றேன்.

தயால்ஜிபாய்க்கு மிகவும் மன வருத்தம்தான். இருந்தாலும் வேலையின் முக்கியத்தைக் கருதி உடனே வண்டியைப் பூட்டச் சொன்னார். மக்கன்ஜியையும் கூப்பிட்டு எங்களை ஸ்டேஷன்வரை கொண்டுவிட்டு வருமாறு உத்தரவிட்டார். மக்கன்ஜி கூடவருவதை நான் விரும்பவில்லை. ஆகவே, வெகு சிரமப்பட்டு அவனைத் தடுத்து நிறுத்தினேன், கடைசியில் அவசர அவசரமாகக் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, நானும் என் இடைக்கால ‘மனைவி’யும் சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஸ்டேஷனுக்குப் புறப்பட்டோம்.

வழியில் நாங்கள் வார்த்தை யாடிக்கொண்டே போனோம். இரவின் இருள் அகன்றதுபோலவே, எங்களிடையே குடிகொண்டிருந்த குழப்பமும் வெட்கமும் அகன்றன. கடைசியில் ஸ்டேஷனும் வந்துவிட்டது. வண்டிக்காரனை அதிக நேரம் காக்க வைப்பது சரியாகப் படவில்லை. ஆகவே, அவனுக்கு ஒரு ரூபாய் இனாம் கொடுத்து அவனை அனுப்பிவிட்டேன். எங்கள் மனத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமை நேரமாக, நேரமாக ஒரு விதமாகக் குறையலாயிற்று. ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டால் அப்புறம் நம்மைக் கேட்பவர் யார்?

ஆகவே, போர்ட்டரின் அறையை நோக்கி வண்டி எப்பொழுது வரும் என்று விசாரிப்பதற்காகப் போனேன். நான் கதவைத் தட்டுவதற்குள்ளாகவே தூரத்தில் வண்டி வருவது தெரிந்தது. கதவு தட்டும் சத்தத்தைக் கேட்ட போர்ட்டர் ஜன்னல் கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான். அதற்குள் அந்த அறைக்குள்ளிருந்து யாரோ உரத்த குரலில், “ஏண்டி! எங்கேயடி போய்த் தொலைந்தாய்?” என்று கடிந்து கொண்டது காதில் விழுந்தது.

என் இருதயத்தை மறுபடியும் குறைந்த அந்தச் சுமை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக அழுத்தலாயிற்று. உள்ளிருந்து அந்த ஆசாமி கோபம் மூண்ட கருநாகத்தைப் போல என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். எனக்குப் பேய் அறைந்தாற் போல நிலைக்குத்தல் இட்டு விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ராவ்சாஹேப்பின் அதிகார தோரணையைக் கையாளாவிட்டால் காரியம் சாயாது என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, நான் வெகு மிடுக்காக, “அடே, மிஸ்டர்! நேற்று நீ வண்டியிலே தங்கிவிட்டாய், பாவம்,உன் பெண்சாதி..” என்று ஆரம்பித்தேன்.

“டேய், மிஸ்டருக்கு மகனே! மரியாதையாகப் பேசுடா!” – அந்த ஆசாமி என்னுடைய அதிகாரத்தை யெல்லாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. “நான் தான் வண்டியை உடனே நிறுத்திவிட்டு வந்து விட்டேனே, அப்பா! நீ என் பெண்சாதியை எங்கே அழைத்துக் கொண்டு போனாய், சொல்லு! நேற்றிரவு முழுவதும் இவளைத் தேடித் தேடி என் கால் கடுத்து விட்டது! எங்கேடா அழைத்துக்கொண்டு போனாய், சொல்லடா!” என்று மிகவும் கீழ்த்தரமான பாஷையைக் கையாளத் தொடங்கி விட்டான்.

“டேய்! நாவை அடக்கிப் பேசு. என்னை யார் என்று எண்ணினாய்? ‘டா!’ போட்டுப் பேசுகிறாயே! உனக்கு உதை இதை கேட்கிறதா?” என்று அதிகார மிடுக்குடன் அதட்டினேன்.

“உனக்கு மரியாதை வைத்து வேறு பேச வேண்டுமா? வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவனாக இருந்தால் நீ ஊரான்…” என்று இன்னும் கீழே இறங்கி விட்டான் அவன்.

ஏன் அவனிடம் வாயைக் கொடுத்தோம் என்றாகி விட்டது. என் அதிகாரத்துக்கோ மிரட்டலுக்கோ ஒரு பலனும் ஏற்படவில்லை. என்னுடன் யாராவது வில்லைச் சேவகனே வேலைக்காரனோ இருந்தால் என் பதவியையும் அதிகாரத்தையும் பற்றி அவனுக்குத் தெரியச் செய்திருக்க முடியும். காசைக் கெட்டியாக முடிந்து கொள்ள முயன்ற நான்தான் என்னோடு யாரையும் அழைத்துப் போகவில்லையே! என்ன செய்வது? இருந்தாலும் நான்தான் இந்த இலாக்காவுக்கு ஸப்கலெக்டர் என்பதைச் சொல்லலாம் என்று எண்ணி வாயைத் திறந்தேன். அதற்குள் அவன் கைச்சட்டைகளை ஒதுக்கி வீட்டுக் கொண்டு, முஷ்டியை மடக்கிக் கொண்டு குத்துவதற்காக என் அருகில் வந்துவிட்டான். அவனுக்குத் துணையாக அவனோடு இன்னொரு ஆஜானு பாகுவான ஆளும் வந்து சேர்ந்தான்.

எனக்கு இன்று நம்பாடு சட்டினிதான் என்று தோன்றிவிட்டது. நான் ஜில்லா கலெக்டராகவே இருந்தால்கூட என்னை யார் லட்சியம் செய்யப் போகிறார்கள்? எனக்கு உலகமே சுற்றியது.

நல்ல வேளையாக, அந்த மனிதன் என் அருகில் வருவதற்குள்ளாக ரெயில் பிளாட்பாரத்தில் வந்து நின்று விட்டது. பக்கத்திலிருந்த போர்ட்டர் கதவைத் திறந்து வைத்தான். நான் ஒரே தாவாகத் தாவி வண்டிக்குள்ளே போய்க் கதவை உட்புறமாகத் தாளிட்டுக் கொண்டேன். இரண்டாம் வகுப்புப் பெட்டியிலே உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளச் சௌகரியம் செய்து வைத்தானே, அவனுடைய புத்தியை மெச்சிக் கொண்டும், எனக்கு ஜில்லா கலெக்டர் பதவி அளிக்கப் போகும் அதிர்ஷ்ட தேவதையை வாழ்த்தி வணங்கிக் கொண்டும் ‘வண்டி எப்பொழுதடா புறப்படப் போகிறது?’ என்று காத்துக் கொண்டிருந்தேன். ‘இருந்தாலும் கை நஷ்டம் நஷ்டந்தானே? இரண்டாவது வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்து விட்டாயே!’ என்று என் உள்ளம் என்னை இடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

‘இது என்ன உலகமடா? நன்மை செய்யப்போனவனுக்குத் தீமையா? பிரிந்த மனைவியைச் சேர்த்து வைத்தேனே! இதற்கு இதுதானா வெகுமதி!’ என்று எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே வண்டி புறப்பட்டு விட்டது! “சீ! நீயும் ஒரு மனிதன்மாதிரி!” என்று சற்று இரைந்தே சொல்லி விட்டு அந்தப் பெண்ணைக் கடைசியாக ஒரு முறை கண்ணாரப் பார்த்தேன்.

என் இடைக்கால ‘மனைவி’ ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே தங்கி விட்டாள்!

– குலப்பெருமை, கே.எம்.முன்ஷி, தமிழாக்கம்: ரா.வீழிநாதன், முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *