அடக் கடவுளே !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 17,124 
 
 

எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நாக்குல சனிம்பாங்களே, அது நமக்கு இருக்கு போல. எம் மச்சான் தண்டபாணியாலத் தான் அது எனக்கு தெரியணும்னு இருந்திருக்கு. ‘கவலையை விடுங்க மாமா, நீங்க எங்க போகப் போறீங்க பாருங்க’ன்னானே, அப்ப ‘ஜிவ்’வுன்னு பறந்தவன், இப்படி ‘பொதேர்’னு விழுவேன்னு நினைக்கவே இல்லை.

‘தங்கத் தேர்’ தினமும் 8 மணிக்கு ‘உண்மை’ சானல்ல வர்ற ஸீரியல். அதை பாத்தே ஆகணும் எனக்கு; இல்லேன்னா தலை வெடிச்சுடும். அன்னைக்கு அதைப் பாத்துக்கிட்டிருக்கும் போது தான் சனி என் நாக்கை உருட்டி, ‘இவன்லாம் என்னாடா நடிக்கிறான்’னு அதுல வர்ற ஒரு நடிகனை பாத்து சொல்ல வச்சிருக்கு. உடனே கூட உக்காந்துக்கிட்டிருந்த தண்டபாணி, ‘ஏன் மாமா நீங்க நடிக்கக் கூடாது? இவனையெல்லாம் நீங்க தூக்கி சாப்பிட்டுட்டலாமில்ல?’ன்னவும், ‘ஆமாடா, உங்க மாமாவுக்கு சான்ஸ் வாங்கிக் குடேன், உன் கூட படிச்சவன் ஸீரியல்ல டைரக்டரா இருக்கான்னு சொல்லுவியே’ன்னு அவுங்க அக்கா, அதாவது என் பொண்டாட்டி வேணியும் அவனுக்கு தாளம் போடவும், ‘அதுக்கென்னக்கா, நாளைக்கே கூட்டிட்டுப் போறேன்.. மாமா, நாளைக்கு பேங்குக்கு லீவு போட்டுடுங்க’ங்கறான்.

‘டேய் வேண்டாடா, நான் பேங்க் மேனேஜர்ரா, திடீர்னு லீவு போட முடியாது, என் உத்தியோகத்துக்கு வேட்டு வச்சிடாத தண்டபாணி’ன்னு கெஞ்சியும் அவன் மசியல. ‘அட போங்க மாமா, நீங்க வேற, ஸீரியல்ல வந்துருங்க, அப்புறம் பாருங்க, இந்த மேனேஜர் உத்தியோகமெல்லாம் ஜுஜுபி’ன்னுட்டு, என்னை வலுக் கட்டாயமா அடுத்த நாளைக்கே அவன் ஃப்ரெண்ட் ஆதி கிட்ட இழுத்துக்கிட்டுப் போயிட்டான்.

ஆதி, எட்டு பத்து பாக்கெட் வச்ச முக்கா பேண்ட் போட்டுக்கிட்டு, நாலு அஸிஸ்டெண்டுங்களோட (அவங்க அஸிஸ்டெண்டுங்கன்னு அப்புறமா கேசவன் சொன்னான்) பேசிக்கிட்டிருந்தான். ‘வா பாணி’ன்னு மச்சானை பாத்து கூப்டுப்புட்டு, ‘மருது, அந்த மளிகைக் கடை டிராக்கை இப்போதைக்கு ஆஃப் பண்ணி வச்சுக்க, பர்த்திக்கு ஆரம்பத்துல ரைஸ் மில்லு முதலாளி டிராக் ஒண்ணு இருந்திச்சில்ல, அதை மறுபடி ஓப்பன் பண்ணிக்கலாமா பாரு’ன்னு ஒரு அஸிஸ்டெண்டு கைல சொல்லிட்டு, எங்களை தனியா கூப்டுக்கிட்டுப் போனான். மச்சான் விஷயத்தை சொன்னதும் ‘அவ்ளதானே’ன்னான்.

நாலு நாள் கழிச்சு போன் வந்தது. புரொடக்சன் மேனேஜர் புருஷோத்தமனாம், பேசினான். ‘திங்கட் கிழமை காலைல அஞ்சரை மணிக்கெல்லாம் வண்டி வரும் ஸார், அனேகமா உங்களதுதான் ஃபர்ஸ்ட் ஷாட்டா இருக்கும்…. என்னா ஸார்?.. டிரஸ்ஸா? பேண்ட் ஷர்ட்டுல வந்துடுங்க போதும்..’ அப்போலேருந்தே பறங்க ஆரம்பிச்சுட்டேன். இன்னைக்கென்ன புதன் கிழமை. இன்னும் நாலு நாள் காத்திருக்கணுமா. யப்பா, இவ்வளவு சீக்கிரம் சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கவே இல்ல. தண்டபாணி பய கில்லாடி தான். திங்கட்கிழமை லீவு சொல்லணும்.

வேணி ரெண்டு நாள்ள உறவுக்காரங்க எல்லாருக்கும் சொல்லிட்டா, ‘எங்க வூட்டுக்காரரு ஸீரியல்ல நடிக்கப் போறாரு’ன்னு. நான் சும்மா இருப்பேனா, நானும் என் பங்குக்கு தெரிஞ்சவன் தெரியாதவன் கிட்டெல்லாம் சொல்லிட்டேன். எங்க ஆஃபீஸ் ப்யூன் கணபதி, ‘வா ஸார், நீயும் வண்ட்டியா ஸீரியலுக்கு’ன்னு தெனாவட்டா சிரிச்சான். ‘ஆமா, ஸீரியல் பேர் என்னா?’ன்னு கேட்டான். அட எளவே அதை கேட்டு வச்சுக்கலியே. முழிச்சேன். ‘சரி வுடு, ஆக மொத்தத்துல நடிக்கப் போறே’ன்னு எளக்காரமா பாக்குறான், பரதேசி. இவன் மட்டும் தான் நடிக்கலாமாக்கும், ஏன் எங்களுக்கெல்லாம் நடிப்பு வராதா? அது சரி, இவன் மட்டும் என்ன கிழிச்சுட்டான்? யாருமே பாக்காத சானல்ல ராத்திரி பத்தரை மணிக்கு வர்ற ஸீரியல்ல வர்றான். இதுக்கே பெருசா பீத்திக்கிறான்.

திங்க்க்கிழமையும் வந்தது. ராத்திரி முழுக்க சரியா தூங்காம கண்ணு செவந்திருக்கு. அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியாயி வாசல்ல போய் நின்னுகிட்டிருக்கேன். அஞ்சரை மணிக்கு ஃபோன், ‘இன்னா ஸார், ரெடியாயிட்டியா? இதோ வண்டி வந்துகிட்டேயிருக்கு..’ புரொடக்சன் புருஷோத்தமன் பேசினான். ஆறு மணிக்கு இன்னொரு ஃபோன், ‘ஸார் டிரைவர் பாலு பேசறேன், உங்க வீட்டுக்கு வர்றதுக்கு வழி கொஞ்சம் சொல்லுங்க, இப்ப வளசரவாக்கத்துல இருக்கேன்..’ வளசரவாக்கத்துலயா? அப்ப சைதாப்பேட்டை வர ஆறே முக்கால் ஆயிடும். வழியை சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயி உக்காந்துகிட்டேன். ஃபோன்ல ப்யூன் கணபதி பேசறான். இன்னைக்கு லீவு வேணுமாம், தொத்தாவை ஆஸ்பத்திரில சேர்க்கணுமாம். நானே எப்ப வண்டி வரும்னு டென்ஷன்ல இருக்கேன், இவன் வேற. ‘சரி எடுத்துக்கடா’ன்னு சொல்லித் தொலைச்சேன்.

ஒரு வழியா எட்டு மணிக்கு ஒரு அம்பாசடர் கார் வந்திச்சு. ‘ஏறுங்க ஸார்’னு முன்னாடி கதவை தெறந்து விட்டான் டிரைவர். ஏற்கனவே ஒருத்தன் வாட்ட சாட்டமா டிரைவர் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்கான். ஒடுங்கிக்கிட்டு உக்காந்துகிட்டேன். இந்த ஆளை ஏதோ ஒரு ஸீரியல்ல பாத்திருக்கேனே! திரும்பிப் பின்னால பாத்தேன். ரெண்டு குண்டு பொம்பளைங்க… அட, இது ‘நிலாக்காலம்’ ஸீரியல்ல நடிக்கிற சுகுணா இல்ல! ‘வணக்கம் ஸார்’ன்னு என்னவோ என்னை ரொம்ப தெரிஞ்சவ மாதிரி சொன்னா. அப்புறம் தான் தண்டபாணி சொன்னான், அப்படித்தான் அவங்கல்லாம் தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரைப் பாத்தாலும் வணக்கம் சொல்லுவாங்களாம், நாளைக்கே அந்த ஆள் ஸீரியல்ல ஒரு டைரக்டர் ஆகித் தொலைச்சிடலாமில்லையா? அதுக்காகத்தான் அந்த வணக்கமாம். நானும் செயற்கையா சிரிச்சு, வணக்கம் சொல்லி வச்சேன்.

ஒரு மாதிரி ஒம்பது மணிக்கு பனையூர் பங்களா வந்து சேர்ந்தோம். எங்கே பாத்தாலும் குறுக்கால தடி தடியா ஒயருங்க.. (அதை கேபிள்னு சொல்லணுமாம், அப்புறம் சொன்னாங்க) பெருசு பெருசா லைட்டுங்க.. பெரிய அட்டைல சரிகை பேப்பர் ஒட்டி இப்படி அப்படி திருப்பற மாதிரி செஞ்சு, அதுக்கு அங்கே இங்கே தள்ளிக்கிட்டு போறதுக்கு சக்கரம் வேற செட் பண்ணியிருக்காங்க..(அதுக்குப்பேரு ‘ரிஃப்ளெக்ட’ராம். – இது உம் மச்சான் சொன்னானான்னு நீங்க கேக்குறது காதுல விழுது) என் கூட வந்த குண்டு பொம்பளைங்களும் அந்த ஆளும் உள்ளே எங்கியோ போயிட, நான் மட்டும் திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டிருக்கேன். ‘ஸார் நான் தான் புருசோத்தமன்.. ஃபோன்லத் தான் பேசியிருக்கோம்.. நீங்க குணாளன் தானே?’ன்னு கேட்டுகிட்டே எங்கேருந்தோ அந்த புரடக்சன் மேனேஜர் வந்தான். ‘ஆமா’ன்னதும் ‘ஸூப்பர்’ன்னுட்டு, டிபன் சாப்பிட கூப்டுக்கிட்டுப் போனான். எதுக்கு ‘ஸூப்பர்’ன்னான்? சரி விடு, நல்ல விஷயந்தானே, அடுத்த ஸீரியலுக்கும் கூப்பிடுவானோ என்னவோன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

வெராண்டா மாதிரி ஒரு எடத்துல, இட்லி, வடை, கோதுமை உப்புமா, ராகி உப்புமா, பொங்கல்னு செமத்தியா டிப்பன் குடுத்தாங்க. ஆனா டீன்னு ஒன்னு குடுத்தான் பாருங்க, இதுவே எங்க பேங்கா இருந்தா நேரா கணபதி (ப்யூன்) மூஞ்சிலயே ஊத்தியிருப்பேன்.

டிப்பன் சாப்பிட்டாச்சு, அடுத்து யாரைப் பாக்கணும், என்ன செய்யணும்? யோசனை பண்ணிக்கிட்டிருக்கும் போது, தடிமனா கண்ணாடி போட்டுக்கிட்டு, கைல கேஸ் கட்டுங்க மாதிரி பேப்பரோட ஒரு ஆள் வந்தான். ‘ஸார் நான் மூர்த்தி, அஸிஸ்டெண்ட் டைரக்டர், நீங்க தானே பாஸ்கர் ரோல் செய்யறீங்க?’ன்னு கேட்டுப்புட்டு கண்ணாடியை கழட்டி தொடச்சிக்கிட்டான். ‘பாஸ்கரா?’ இன்ன ரோல்னு எனக்கு சொல்லலியே’ன்னதும், ‘சரி சரி, நீங்கதான் செய்யறீங்க, போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க, பன்னெண்டு மணிக்கு மேல மேக்-அப் போட்டா போதும்’னு கண்ணாடியை மாட்டிக்கிட்டு, அங்கே யாரையோ பாத்து ‘ஏம்பா டைரக்டருக்கு டிபன் போயிடிச்சா?’ன்னு கேட்டுக்கிட்டே போயிட்டான். ‘அனேகமா உங்களுக்குத் தான் மொத ஷாட்டா இருக்கும்’னு புருஷோத்தமன் சொன்னான், இவன் பன்னெண்டு மணிக்கு மேல மேக்-அப் போட்டா போதுங்கிறான்! என்னாடா கன்ஃப்யூஷன்.

அந்த ஆதியையே பாத்தா என்ன? அதான் சரின்னு அந்த பங்களாவை ஒரு ரவுண்டு அடிச்சேன். பின்னாடி ஒரு சின்ன குட்டை மாதிரி இருந்த எடத்துல என் கூட வந்த குண்டு பொம்பளை சேலை ஒண்ணை கசக்கிக்கிட்டிருந்தா. என்னான்னு கேக்கலாம்னு பக்கத்துல போனேன். ‘யார்யா அது..? ஃபீல்டு.. ஃபீல்டு.. வெளியே போய்யா’ன்னு திடீர்னு ஒரு எடத்துலேருந்து சத்தம் வந்தது. ரிஃப்ளெக்டர்னு சொன்னேனே அதுக்குப் பக்கத்துல நின்னவன் தான் அப்படி கத்தியிருக்கான். வழக்கம் போல திரு திருன்னு முழிச்சுக்கிட்டு அப்படியே நின்னேன். ‘அட ஏம்பா, ஃபீல்டுன்னு சொல்றேன் இல்ல.. அங்கியே நின்னுக்கிட்டு கழுத்தறுக்கிறே.. போய்யா வெளியே..’

என்னடா இது, இந்த ஃபீல்டுக்கு வரணும்னுத்தானே, மச்சான் தண்டபாணி ரெகமெண்டேஷனோட உள்ளே வந்திருக்கேன். ஏன் பின்ன இப்படி வெரட்டித் தொலைக்கிறான்?

ஓஹோ, இதுவா விஷயம். அப்புறமாத்தான் அந்தப் பக்கம் கேமரா ஓடிக்கிட்டிருந்ததும், குண்டுப் பொம்பளை சேலையை கசக்கறது ஒரு ஸீன்னும் புரிஞ்சுது. வேகமா அந்தப் பக்கம் போயி, டீவிக்கு (அதை மானிடர்னு சொல்லணுமாம்) முன்னாடி உக்காந்திருந்த ஆதி கிட்ட, ‘ஸாரி’ன்னேன். நிமிந்து கொஞ்சம் மொறைப்பா பாத்தவன், அப்படியே ஆஃப் ஆயி, ‘ஓ, பாணியோட மாமா இல்ல நீங்க? பரவால்ல, பரவால்ல. உள்ளார போய் உக்காந்துகிடுங்க. உங்க ஸீன் மதியத்துக்கு மேலத்தான் வரும். சாப்டு ரெஸ்ட் எடுங்க’ன்னான்.

காலைல டிப்பன் சாப்பிட்ட அதே வெராண்டுவுல இப்ப சாப்பாடு. பதார்த்துக்குன்னு தனித் தனி குழிங்க இருக்கிற தட்டை கைல குடுத்துட்டாங்க. டைனிங் டேபிள்ல, ஃபேன் கீழ உக்காந்து வேணி பக்குவமா பரிமாறி சாப்டு பழக்கமா, இங்கே தட்டை உள்ளங்கைல வச்சுக்கிட்டு திங்கறது ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும் கூட, எங்க தாத்தா சொல்லுறது க்யாபகம் வந்து தொந்தரவு குடுத்தது தான் பெருசா இருந்தது.. தட்டை கைல ஏந்திக்கிட்டு சாப்டா அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. ‘டேய், பிச்சைக்காரனாடா நீ, தட்டை கைல வச்சுக்கிட்டு சாப்பிடுற?’ன்னு பொரிஞ்சு தள்ளிடுவாரு. சரி விடுங்க, இதெல்லாம் பாத்தா ஸீரியல்ல நாளைக்கு செங்கோல் ஓச்சுறது எப்படி? ஒரு மாதிரி சாப்டு முடிச்சேன். ஏன் ஒரு மாதிரின்னு சொல்றேன்னு கேக்குறங்களா? அது என்னாங்க, சுடச் சுட சோறு போடுறானா, உள்ளங்கை பத்திக்குது. அதுக்கு மேல கொதிக்க கொதிக்க ரசம் ஊத்துறான். அப்பளம் ஒரு பக்கம் பறக்குது, தட்டு சாஞ்சு கூட்டு வெளியே ஊத்துது. இது நடுவுல சட்டைக்குள்ள வேர்வை ஒரு பக்கம். அங்கே சாப்பிடுறதே ஒரு சர்க்கஸ் தான்.

‘ரெஸ்ட் எடுங்க, ரெஸ்ட் எடுங்க’ன்னு நம்ம மேல எவ்வளவு கரிசனத்தோட இருக்காங்க, அவங்க பேச்சை கேக்காம இருக்கலாமா? ஃபேன் இருக்கிற ஒரு ரூமா பாத்து படுக்கலாம்னு போனா, கண்ணு மேல டவல், கர்சீப்பு, துண்டுன்னு போட்டுக்கிட்டு நாலஞ்சு பேர் ஏற்கனவே படுத்துக் கெடக்கறானுங்க. ‘ஃபீல்டுல ஏன்யா நிக்கறே?’ன்னு என்னை திட்டினானே அவனும் அந்த கும்பல்ல அடக்கம். சாப்பிட்டப்புறம் ஆஃபீஸ்ல ஹாய்யா ஏ.சி. ரூம்ல அரை மணி கட்டையை நீட்டறவன், கடைசீல எப்படியோ ஒரு ரூம்ல எடம் புடிச்சு கை காலை குறுக்கிக்கிட்டு தூங்கிட்டேன். ‘ஸார் டீ’ன்னு குரல் கேட்டு எழுந்து பாத்தா வியர்வைல தொப்பமா நனைஞ்சிருக்கேன்.

சாயந்திரம் ஆறு மணிக்கா மேக்-அப் போட்டு வுட்டாங்க. கொழந்தைங்களுக்கு கிராப் வெட்டும் போது அப்பாங்க கூட நின்னுக்கிட்டு ‘இங்க கொஞ்சம் ஷார்ட் பண்ணு, அங்க கொஞ்சம் ஷார்ட் பண்ணு’ன்னு சொல்லிகிட்டிருப்பாங்களே, அதே மாதிரி காலைல வந்த கண்ணாடிக் கண்ணன், அதான் அஸிஸ்டெண்ட் டைரக்டர், கூடவே நிக்குறான். ‘முடியை ஜெல் போட்டு அழுத்தி சீவி விட்டுடுங்க’ங்கிறான். ‘ஜெல்’ல்லுன்னா? லாரி காருக்கெல்லாம் போடுவாங்களே ‘கிரீஸ்’ அதுவே நீலக் கலர்ல இருந்தா எப்படி இருக்கும்? அதைத்தான் ஒரு பாட்டில்லேருந்து வழிச்சு தலை முடி மொத்தம் தடவி சீவி விட்டாரு மேக்-அப் மேன். மொட்டை அடிச்சா மாதிரி இருந்திச்சு; கண்ணுல தண்ணி வந்திச்சு. சரி, சரி, இதுக்கெல்லாம் தண்ணி வந்தா எப்படி ஸீரியல்ல முன்னேற முடியும்னு என் முதுகுல நானே மானசீகமா தட்டி சமாதானப் படுத்திக்கிட்டேன்.

‘Sஸார், ‘ஆக்சன்’ன்னு சொன்னதும் கதவை தொறந்துகிட்டு உள்ளே வர்றீங்க.. இதோ இங்க நிக்கறீங்க.. நின்னு ஒரு சலாம் வைக்கறீங்க.. என்ன சரியா?’ டைரக்டர் ஆதி கேமராவுக்கு சற்றுத் தள்ளி, மானிட்டருக்கு முன்னால் உட்கார்ந்தபடி சொன்னான்.

‘சரி ஸார்’ன்னேன்.

‘ஏய் மூர்த்தி, என்னப்பா இது? இதுவா இவருக்கு காஸ்ட்யூம்? (அதாவது டிரஸ்) சீனை படிச்ச இல்ல?’னு ஆதி கேக்கவும், ‘படிச்சேன் ஸார்’ன்னான் அஸி. டைரக்டர்.

‘புடுங்குன..’ அதுக்கு மேல ஆதி கத்தினதை எழுதுற மாதிரி இல்லை. மூர்த்தி வெளியே ஓடிப் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்தான்.

‘ஸார் அதை களட்டிட்டு இதை மாட்டிக்குங்க’ – ஒரு காக்கி அரைக் கை சட்டையை நீட்டியபடி மூர்த்தி சொன்னான்.

‘ஆங்.. இது சரியா இருக்கு ஸார். ஸார் இப்ப நான் ஆக்சன் சொன்னதும்..’ முன்னால சொன்னதையே ஒரு வரி மாத்தாம ஆதி இப்பவும் சொன்னான்.

ஆதி ஆக்சன் சொன்னதும் வந்து சொன்ன எடத்துல நின்னேன்.

‘ஸார் என் கையை பாத்து நான் சொல்லுறதை அப்படியே சொல்லுங்க ஸார்.’

தலையை ஆட்டினேன்.

‘கட்.. கட்’ ‘ஸார் கேமரா ஓடிகிட்டிருக்கு, தலையை ஆட்டறீங்களே..’

‘ஸாரி’

‘சரி.. இப்ப ஆக்சன் சொன்னதும் மூர்த்தி கையைப் பாத்து அவன் சொல்லுறதை அப்படியே சொல்லுங்க.

எதுக்கு மூர்த்தி கையைப் பாக்கணும்; பேசணும்? ஒண்ணும் புரியலை. சரி சொன்னத்தை செஞ்சுப்புடுவோம். டைரக்டர் சொன்னதை தட்டாம செய்யற நடிகர்னு நாளைக்கு பேர் வரும்ல?

மூர்த்தி சொல்லிக்கிட்டே போனான். ‘அவரு கெளம்பிப் போய்ட்டாரே ஸார்.. நீங்க மீட்டிங்குல இருக்கீங்க, பாக்கணும்னா அரை மணி போல ஆவும்னேன்..ரொம்ப கோவமா போய்ட்டாரு..’ இதை அப்படியே சொன்னேன்.

‘கட்.. கட்.. ஸூப்பர் ஸார்.. இப்ப ஆக்சன் சொன்னதும் அங்கே கேமரா பக்கத்துல..’ என்று சொல்லி நிறுத்திவிட்டு ‘ ஏய் மூர்த்தி ஸாருக்கு லுக் குடு..’ என்று ஆதி சொல்லவும் அந்த மூர்த்தி மறுபடியும் ஒரு நாட்டிய அடவு புடிச்சான். ‘ஆங், இப்ப மூர்த்தி கையை காட்டுற எடத்துல மூஞ்சியை சோகமா வச்சுக்கிட்டு பாக்குறீங்க.. புரியுதா ஸார்?’

மறுபடி தலையாட்டினேன்.

‘ஏம்ப்பா, பதிராஜ் எங்கே? கூப்பிடு அவரை.. வந்து மேனேஜர் ஸீட்டுல உக்காரச் சொல்லு.. ரெடியாயிருக்காரு இல்ல’ன்னு மூர்த்தியை ஆதி கேட்டதுக்கு, ‘மகுடம் ஸீரியல் ஷூட்டிங்குல இருக்கார் ஸார்.. எட்டு மணிக்கு வந்துடறேன்னு சொல்லியிருக்கார்..’ன்னான்.

‘சரி அப்படியா?’ன்னுட்டு ஏதோ யோசிச்சான். ‘சரி, சரி. அவர் வந்ததும் க்ளோஸ்-அப் எடுத்துக்கலாம்.. ஆங்.. ஸார் நீங்க ஒரு தடவை மறுபடி மூர்த்தி கையை திரும்பிப் பாத்துட்டு தலை குனிஞ்சுகிட்டு வெளியே போயிடறீங்க.. என்ன ஸார்? புரியுது இல்லையா?’

நான் என்ன செய்யணும்னு புரியுது, ஆனா இந்த மூர்த்தி கையைப் பாரு, பாருங்கறானே அதுதான் எதுக்குன்னு புரியலை. சரி, நாம சொன்னதை செஞ்சிடுவோம்; நல்ல பேரை வாங்குவோம்.

‘என்னா மச்சான் கையைப் பாரு, கையைப் பாருங்கறாங்க’ன்னு ரெண்டு நாளைக்குப் பெறகு தண்டபாணியைக் கேட்டேன். ‘அதுவா மாமா, நீங்க ஸீன்ல வரும் போது உங்களுக்கு எதிர்த்தாப்பல இருக்கிறவரை பாத்துப் பேசற மாதிரி இருக்கும், அதாவது அந்தக் கையை எதிர இருக்கிற ஆளா நினைச்சு நடிக்கணும்’ன்னான். ‘அது சரி, அது என்னா வார்த்தைக்கு வார்த்தை ஸூப்பர்?’னு அடுத்த சந்தேகத்தையும் கேட்டேன். ‘அது இப்ப டிரெண்ட் மாமா.. சரின்னு சொல்லுறதுக்குப் பதிலா ஸூப்பர்னு சொல்லுறாங்க.’ அட எளவே, நான் என்னவோ என்னை ஸூப்ப்ர்னு புகழறாங்கன்னு புளகாங்கிதமாயிப் போனேனே!

23 ஆம் தேதி, புதன்கிழமை. காலைலேயே ஒரே பரபரப்புத்தான். அன்னைக்கு நைட் 10 மணி ‘அதிருஷ்டம்’ ஸீரியல்ல நான் வர்றேனாம், தண்டபாணி ஆதி கிட்ட பேசித் தெரிஞ்சுக்கிட்டு அவுங்க அக்காவுக்குச் சொல்ல, அவ ஊரெல்லாம் சொல்ல, செல்ஃபோன்ல இருந்த காசு நாப்பத்தெட்டு ரூபா சில்லறை போயி, மறுபடி சார்ஜ் பண்ற மாதிரி ஆயிடிச்சு. பேங்குல எனக்குக் கீழ வேலை பாக்குற கிளார்க்குங்கல்லாம் ஃபோன் பண்ணி வாழ்த்துக்கள் சொல்லி, ஐஸ் வெக்கறானுங்க. . நைட் 9.55-க்கே டீவி முன்னாடி கோந்து போட்டு ஒட்டிக்கிட்டு எல்லாரும் உக்காந்துட்டோம்.

கடைசீல ஒரு மாதிரி என் ஸீன் வந்திச்சு. நான் ஒரு சலாம் வச்சுட்டு, பேசுறேன்: ‘அவரு கெளம்பிப் போய்ட்டாரே ஸார்.. நீங்க மீட்டிங்குல இருக்கீங்க, பாக்கணும்னா அரை மணி போல ஆவும்னேன்..ரொம்ப கோவமா போய்ட்டாரு..’ ஆனா அது என் குரலே இல்ல.

‘அறிவு கெட்ட முண்டமே, என்னா வேலைடா செஞ்சிருக்கே? அந்த ஆளு மலேசியா பார்ட்டி, அவரை வெரட்டி விட்டுட்டியேடா.. அறுபது லட்ச ரூபா வியாபாராம் போயிடிச்சேடா உன்னால.. போடா என் கண்ணு முன்னால நிக்காத..’ அப்படின்னு மேனேஜர் திட்டறார். தலையை தொங்கப் போட்டுக்கிட்டுப் போறேன். ஸீரியல்ல மட்டுமா தலையை தொங்கப் போட்டுக்கிட்டேன்? அதோ அப்ப தொங்கின தலை இன்னும் நிமிரவே இல்ல. ஆஃபீஸுக்கு நாலு நாள் லீவு போட்டுட்டு இப்பத்தான் மெதுவா எழுந்து நிக்கறேன். அங்கே போனதும் தொங்கின தலை மேல துண்டை வேற போட்டுக்கணும்.

ஏனா? ஸீரியல்ல மேனேஜரா உக்காந்து என்னை வெரட்டினது வேற யாருமில்ல. ஸீரியலுக்காக பதிராஜ்னு பேரை மாத்திக்கிட்ட என் ப்யூன் கணபதி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *