கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 116 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்கள் இரண்டையும் உயர்த்தி உத்தரத்தையே வெகு நேரம் பார்த்தான். அம்மா சின்ன வயசில் சொல்லிக் கொடுத்தது இது. 

“தூக்கம் வரவில்லையென்றால் மல்லாக்கப் படுத்து இருட்டில் உத்தரத்தை வெகுநேரம், குறு குறுவென்று பார்க்க வேண்டும்; ஒன்றையும் நினைக்கக் கூடாது. பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு அயர்வு வந்து தூக்கம் சுற்றும்”. ஒரு காலம் வரை இது பலித்திருக்கிறது. இப்போது அதுவும் பலிப்பதிலில்லை. 

உத்தரத்தைக் குறுகுறுவென்று பார்க்கையில் சாட்டை சாட்டையாய்த் தொங்கும் நூலாம்படை தெரிகிறது. அடித்துச் சுத்தப்படுத்த நேரமில்லை. அதைத் தொட்டு ஒவ்வொன்றாய் நினைப்பு எங்கெங்கோ போகிறது. 

“நினைப்பையெல்லாம் ஓர்மைப் படுத்தி ஒண்ணு ரெண்டு மூணு என்று பத்து வரை மனசுக்குள் சொல்லிக் கொண்டே போய் மறுபடி ஒண்ணு ரெண்டு மூணு என்று பத்துவரை வந்து இப்படியே பல தடவை சொல்லத் தூக்கம் வரும்” என்று இன்னொரு மருந்தையும் அம்மா சொல்லியிருந்தது. ஒண்ணு இரண்டு மூணு என்று ஆரம்பித்து நாலு வருவதற்குள் மனசு எங்கேயோ சம்பந்தமில்லாத  இடத்திற்கு ஓடுகிறது, 

மாதத்தில் இரண்டு மூன்று தடவையாவது இப்படி ராத்தூக்கம் நின்று போகிறது. பதினோரு மணிக்குள் தூங்கினால்தான் உண்டு. அதற்கப்புறமும் புரண்டு கொண்டிருந்தால் அந்த ராத்திரி சிவ ராத்திரிதான். சுவரடியில் கடிகாரத்தைப் பார்த்தான். ரேடிய வெளிச் சத்தில் பனிரெண்டாகிக் கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லையென்ற கவலை பாதி தூக்கத்தையே வராமலாக்கி விடுகிறது. 

வீட்டோர சாக்கடைப் பக்கம் முனிஸிப்பாலிட்டிக் காரன் வெள்ளை மாவு தூவுவதுபோல் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் வழியா நிலா கொஞ்சம் வெளிச் சத்தைத் தூவியிருந்தது. அடித்துப் போட்டதுபோல இரண்டு பிள்ளைகளுக்கப்பால் அவள் தூங்கிக் கொண் டிருக்கிறாள். கழுத்தில் மஞ்சள் கயிறு தெரிகிறது. அவளிடமிருந்து கழுத்துச் செயினை வாங்கிப்போய் பேங்க்கில் வைத்து ஒரு வருஷம் ஆகப்போகிறது. இன்னும் ஒரு தடவைகூட வட்டி கட்டவில்லை. வந்த மூன்று நோட்டீஸ்களும் அந்த அலமாரியில். இனி ஏல நோட்டீசும் வந்துவிடும். 

நோட்டு வாங்க மூன்று ரூபாய் கேட்டு அழுதழுது வீங்கித் தூங்கிவிட்டாள் மூத்தவள். மத்தியானம் வைத்த ரஸம், மத்தியானம் பொங்கிய சோறு, நாள்பட்டுப் போன ஊறுகாய். ராத்திரி சாப்பிட உட்கார்ந்தபோது நாக்கை எதிலாவது சுட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. 

நினைப்புகள் ஒரு சீராயில்லை. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றுக்கு மனசு குதித்துப் போய் விடுகிறது. கையா, காலா, திருகாணியா போது மென்று நிறுத்த இது மனசு. அதுவும் தூக்கம் வராத உடம்புக்குள் உட்கார்ந்த மனசு. பறப்பதும் பரிதாபப் படுவதும் விழுவதுமாய் அது அமர்க்களமாகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் நாலைந்து ஏர்கள் தொலியடித்துக் கொண்டிருந்தன. 

ஒருநாள் டாக்டரிடம் போய் ராத்திரிகளில் தூக்கம் வரமாட்டேனென்கிறது என்றான். டாக்டர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே “முந்தியெல்லாம் தூக்கம் வரலைனா அர்த்தமிருக்கு. இப்பத்தான் கல்யாணமாயிருச்சே. ஏன் தூக்கம் வரலை”, என்றார். 

மனுசனுக்குள்ள ஆயிரம் கவலைகளைப்பத்தி ஒரு டாக்டரும் படிக்கிறதில்லை. அவர் சொன்ன அந்த ஒரு சங்கதிக்காகத்தான் மனுசன் பேயாய் அலைவ தாய் டாக்டர் படித்துத் தெரிந்து வந்திருக்கிறார். உண்மையிலேயே தெரியாமல்தான் டாக்டர் அப்படிப் பேசுகிறாரா அல்லது வேண்டுமென்றே பேசுகிறாரா தெரியவில்ல.

இவன் பலமுறை பார்த்திருக்கிறான். சீக்காளி ஒரு ஏழை கிளார்க்காக இருப்பான். பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு போய் வயிற்று வலியென்று சொன்னால் போதும். டாக்டர் உயர்ந்த பேச்சில் இறங்கி விடுவார். “ப்ரேக்ஃபாஸ்ட் என்ன சாப்பிட்டீக? காலையிலேயே நிறைய மட்டன் சாப்பிட்டீயளா?” என்பார். இவன் காலம்பற வழக்கமாய்ப் பழையது சாப்பிடுகிற ஆளாயிருப்பான். டாக்டரிடம் விட்டுக் கொடுக்காமல் தோசை சாப்பிட்டதாகப் புளுகுவான். ஒரு அந்தஸ்துக் கொடுத்து டாக்டர் பேசிவரும் தோரணையில் சீக்காளியே தன்னை ஒரு வசதிக்காரனாக நினைக்க வைத்து விடுவார். பத்து ரூபாயாவது கறக்க வேண்டுமே. 

படித்த பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வந்தது. சிகப்பும் வெள்ளையுமாய்ப் பள்ளிக்கூட வாசலுக்கு மேல் பூத்து மயக்கும். அவற்றிற்கு ஊடே ஈரப்பசையோடு நீட்ட நீட்டமாய் மங்கிய நிறத்தில் கொத்துகளாய் வேறு பூத்துக் கிடக்கும். வெயிலுக்கு வதங்கி வரும் வாசம் ஒருவிதம். எது வந்தாலும் வகுப்பில் போய்  உட்கார்ந்தவுடன் தூக்கம் வரும். சரித்திர வாத்தியார் ராமசுப்பிரமணியன் ஒரு நாள் தூங்கி வழிந்த பையன்களைப் பார்த்துச் சொன்னார். “தூக்கம் ஒரு பெரிய விசயம்டா. படுத்ததும் தூங்குறானே கவலையில்லாம அவன் கடவுளைப் போல இல்லாட்டி முட்டாளைப் போல”, சிக்கந்தர்ங்கிற பயல் திருப்பிக் கேட்டான். 

“அப்பா நாங்கள்ளாம் முட்டாள்களாக்கும்” 

தூங்குவதில் எத்தனையோ வகை. பச்சப்புள்ளை தூக்கம். சின்னப் புள்ளை தூக்கம். வாலிபப் புள்ளை தூக்கம். நடு வயசு தூக்கம், கெழட்டுத் தூக்கம் என்று ஒவ்வொருவகையையும் வெவரிச்சுச் சொல்வார் மணி மாமா. 

சொப்பனம் இல்லாமல் தூக்கமே இல்லை என்று ஒரு விஞஞானப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்தது. இப்போதெல்லாம் தூக்கம்கொஞ்சமாகி, சொப்பனங்கள் ஜாஸ்தியாகி விட்டன. கொசமுசவென்று. சொப்பனங்கள். தலை இல்லாமல் உருவம் வருகிறது. வால் முளைத்துப் பெண் வருகிறாள். நேரில் நடப்பது போல் அப்படி அப்படியே சொப்பனங்கள் வேறு. பேலன்ஸ் ஷீட்டில் ஒரு நாள் 529-ரூபாய்15 பைசா டேலியாகவில்லை. வீட்டிற்குக் கொண்டு வந்து ராத்திரி பத்து மணி வரை பார்த்து விட்டுப் படுத்தான். விடிய விடிய 529 – ரூபாய் 15 பைசாவை ஒவ்வொரு ரிஜிஸ்தரிலும் துண்டுக் காகிதங்களிலும் டிராயரிலும் தூக்கம் பூராவிலும் தேடிக் கொண்டே இருந்தது விடியற்காலை எழுந்ததும் தெரிந்தது. 

ஒரு நாள் சொப்பனம். தெரியாமல் தூங்கியிருக்கிறான். 

சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதிவிட்டு மதுரையில் ராத்திரி பத்தரை மணிக்கு பாஸஞ்சர் ரயிலில் ஏறினான். ‘கிராமத்திலிருந்து மதுரைப் பக்கமெல் லாம் போய் வருகிற மணிமாமா, ரயிலில் திருட்டுப் பயல்கள் ஜாஸ்தியாய்ப் புழங்குகிறார்கள் என்று படித்துப் படித்துச் சொல்லி அனுப்பியிருந்தார். ஐந்து ரூபாயும் டிக்கெட்டும் சட்டைப் பையில் இடது கை மாறி வலது கை வலது கை மாறி இடது கை என்று பையைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டே தூங்காமல் விடியகாலை மூன்று மணிக்கு ராமநாதபுரம் வந்து இறங்கியாயிற்று. ராத்திரிக் கடைகளில் சினிமா வசன ரிக்கார்டுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கிராமத்திற்குப் போனால் இதெல்லாம் எங்கே கேட்க முடியப் போகிறதென்று ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விடிய விடிய வசனம் கேட்டு விட்டு காலையில் ஊருக்கு பஸ் ஏறினான். பஸ் படுவேகமாய் போனது. சில்லென்று காலைக் காற்று வீசியது. மரங்கள் செடிகள் எலலாம் ஓட்டம் எடுத்தன. எல்லாம் அழகாய் வேகமாயிருந்த அந்த விநாடியில் அவனுக்கு வேலை கிடைத்து விடுமென்று திடீரென்று ஒரு நம்பிக்கை வந்தது, சுற்றுப்புறம் இன்னும் அழகாகவும் பஸ் இன்னும் வேகமாய்ப் போவதாகவும் நினைத்தான் மதுரை மாதிரி பெரிய பெரிய ஊர்களில் கை நிறையச் சம்பளம் வாங்கி வேலை செய்யப் போவதை மனசு துள்ளித் துள்ளி நினைத்தது. ஒவ்வொரு திட்டமாய்த் தீட்டித் தீட்டி முடிப்பதற்குள் ஊர் வந்து விட்டது.

குளித்துப் ‘பளையது’ சாப்பிட்டுப் படுத்த ஆள்தான் அம்மா தலையைத் தொட்டது போலிருந்தது. எழுந்து பார்த்தால் சாயங்காலம் ஆகியிருந்தது. படுத்து ஒரு நிமிடத்தில் எழுந்தது போலிருந்தது. துளி சொப்பனம் வந்ததாய்த் தெரியவில்லை அப்படித் தூக்கம் இன்னும் தூங்கவில்லை. 

ஒரு நாள் ஆபீஸர் “ஏன் பங்கி அடிச்சுப் போயிருக்கீய!” என்றார். முதல் நாள் ராத்திரி இந்த ராத்திரி போல். தூக்கம் வராமல் கிடந்து காலையில் எழுந்து அப்படியே ஆபீஸ் போனதும் முகத்தில் இருந்திருக்கும். ராத்திரி பூரா தூக்கம் வரலை,, என்றான். ஆபீஸர் யோகாசனம் செய்யச் சொன்னார். 

பத்தடிக்குப் பத்தடி அறையில் குடித்தனம்: இதில் எங்கே போய் யோகாசனம் செய்வது? அஞ்சரை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கைப் பம்ப்பில் தண்ணீர் அடிக்க வேண்டும். ரெண்டு சிறிசுகளையும் குளிக்க வைக்க வேண்டும். சைக்கின் ஏற்றி எட்டு மணிக்கெல்லாம் கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் விடவேண்டும். வந்ததும் குளித்து சாப்பிட்டுக் கை காயுமுன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு ஓட வேண்டும். ரிஜிஸ்தர்களையும் ஃபைல்களையும் கட்டிக் கொண்டு அழ வேண்டும். எந்த இடை வெளியில் எந்த இடத்தில் போய் யோகாசனம் செய்ய? 

காலையில் ‘வாக்கிங், போகலாமென்று ‘ஏத்ரீ’ கிருஷ்ணன் சொன்னார். கை பம்ப், குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, பள்ளிக் கூடத்திற்குக் கூட்டிப் போவது, கடன் காரனைக் கண்டு திகில் கொண்டு ஓடுவதெல்லாம் எப்போ தீர்வது; எப்போ வாக்கிங் போவது? 

போன மாதம் ஆபீஸ் வேலையாய் மெட்ராஸ் போக வேண்டி வந்தது. பாரீஸ் கார்னரிலிருந்து ஃபோர் ஷோர் எஸ்டேட்டில் இருக்கும் சிநேகிதன் வீட்டிற்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தான். விடிய வேண்டிய நேரம். கடற்கரைச் சாலையில் வயிறு பெருத்த ஆள்கள் சொத் சொத் தென்று நடந்து கொண்டிருந்தார்கள், வாலிபமான ஆள்கள் பல பேர் ‘விறுக் விறுக்’ கென்று நடந்தார்கள். கடற்காற்று புசு புசு வென்று வீசிக் கொண்டிருந்தது. பசேலென்ற கடற்கரை ரொம்ப அழகாயிருந்தது. மந்திரி ஒருவர் போலீஸ் காவலுடன் காற்றை இழுத்து அனுபவித்து நடந்து கொண்டிருந்தார். அநேகமான பேர் வெள்ளை ட்ரவுசர் வெள்ளை அரைக்கை பனியன் வெள்ளை கான்வாஸ் ஷூக்களோடு பறவைக்கூட்டம் போல் திரிந்தார்கள். 

அவர்கள் ஏறி வந்த கார்கள் சாலை எங்கும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன. கார்களை ஓட்டி வந்த டிரைவர்கள் யாரும் வாக்கிங் போக வில்லை. கார்களின் ஓரங்களில் நிழல் விழுந்த திசைகளில் துண்டை விரித்துப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். காசிருந்து வசதியிருந்தால் தான் வாக்கிங் கீக்கிங் எல்லாம் சாத்தியம் என்று அன்றைக்குப் புரிந்தது 

கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டாகியிருந்தது.  

கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே நினைப்பதை விட்டு மனதுக்கு சந்தோஷமானவைகளை நினைத்தால் தூக்கம் வருமா என்று நினைத்தான். கிராமம் ஞாபகத்திற்கு வந்தது. 

சிங்காரம் பிள்ளை வீட்டுத் திண்ணைகள் இரண்டும் பெரிய பெரிய பொட்டல் வெளிகள் போலிருக்கும். தெருவில் பாதிக்கு மேல் ஆட்களுக்கு அங்கே தான் படுக்கை. ஓரொரு திண்ணை ஓரத்திலும் அடர்ந்த வேப்ப மரங்கள் ஒவ்வொன்று. இரண்டு ஓரங்களிலும் பயிர்க்குழி போட்ட கொல்லைகள் . சுவர் மறைக்காத திண்ணைகளுக்கு மூன்று பக்கமிருந்தும் பச்சைக் காற்று விடிய விடிய வீசும். சிங்காரம் பிள்ளை வீட்டிற்குள் எந்தப் பேய் பிசாசும் அண்டாது என்பார்கள். அகால நேரங்களில் முப்பது நாற்பது பேர் விடுகிற குறட்டை, சப்தத்திற்கு அஞ்சாத பேய் பிசாசும் உண்டா? 

நடுச்சாமத்தில் கண்ணாயிரம் பிள்ளையின் படுக்கை கிடக்கும். நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்த ஆள் நடுச்சாமத்தில் காணாமற் போய்விடுவார். படப்புக் கொல்லை வீட்டில் அவருக்கு வைப்பாட்டி உண்டு. பொம்பிளைகள் சாணி தெளிக்க எழுந்திருக்கு முன்பாய் திரும்பி விடுவார். வெயில் வந்து வெகு நேரம் வரை தூங்கிவிட்டுக் கடைசி ஆளாய் எழுந்து போவார். 

ஊரைத் தாண்டித் தொலைவில் கண்மாய். கரையடியில் உலகம்மாள் கோவில். கோவிலை ஒட்டிக் மேல் ஏழெட்டு இலுப்ப மரங்கள். ஆலமரம் அரச மரம்போல் இலுப்ப மரமும் பெரிசு பெரிசாயிருக்கும். கரை ஒரு ஆள் உயரத்திலிருக்கும். கரை மேல் நின்றால் எப்படிச் சுருள் முடி உள்ள ஆளும் காற்றுக்குத் தலையைக் கலைத்துக் கொள்ள வேண்டும். இடுப்பில் கையை வைத்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும். பலபேர் கவனப் பிசகாயிருந்து உடுத்தியிருந்த வேட்டிகளைக் காற்றுப் போகிற திசைக்குக் கொடுத்து விட்டு உடம்பில் துணி யில்லாமல் ஓடியிருக்கிறார்கள். மத்தியான வெயிலுக்கு இலுப்ப மரத்தடிகளில் துண்டுகளை விரித்துப் பலபேர் சாமங் கொண்டாடுவார்கள். 

அய்யனார் கோவிலைச் சுற்றி கோவைச் செடிகள் ஜாஸ்தி. ஊருணிதாண்டிக் கொஞ்ச தூரம் வரை நஞ்சை. வடக்கே போகப் போகப் புஞ்சை. முதலில் நெல், அப்புறம் கேப்பை கம்பு சோளம் என்று வரிசையாய்ப் பயிர்வகை பார்த்து நடந்து அய்யனார் கோவிலுக்கருகில் போனால் ஏராளமாய்க் கோவைப் பழம் பார்க்கலாம். அவ்வளவு பருமனாய்க் கோவை பழுப்பது எந்த ஊரிலும் இல்லை என்று கிஷ்ணக் கோனார் ஓயாமல் சொல்வார். 

கோவில் வாசலில் கதவு கிடையாது. கல் நிலை வழுவழுவென்றிருக்கும். அதில் உட்கார்ந்தால் எட்டுத் திசையிலிருந்து வீசும் காற்றும் அந்த நிலை வழியாய்ப் போவது போலிருக்கும். எல்லாப் பயிர் வாடையும் அதிலிருக்கும். காட்டுச் செடிகள் விசேசமான வாசங்கொண்டு காற்றில் வரும். தூங்கி எழுந்து வந்தவனுக்குக்கூட அந்தசொகத்தில் மறுபடி கண்ணைச் சொக்கும். 

பரம்பரை பரம்பரையாக அந்தக் காற்றையும் மண்ணையும் விட்டுச் சீமானாகப் போவதாய் நினைத்துக்கொண்டு வேலைகிடைத்ததும் டவுனுக்கு வந்து மேலும் மேலும் சீரழிந்ததுதான் கண்டபலன். சுத்திச் சாக்கடையும் நடுவில் பத்தடிக்குப் பத்தடி வீடும் பத்தாத சம்பளமும் கைகட்டி நிற்கவேண்டிய உத்தியோகமும் கடனும் கப்பியுமாய்…சே… என்று வருகிறது. 

ஒரு நியமம் குறையக் கூடாது. எழுந்திருப்பதிலிருந்து படுப்பதுவரை எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். 

நேரப்படி எழுந்திருக்காவிட்டால் முதலாளியின் சம்பாத்திய ஒழுங்கு கெட்டுப்போகும். பணக்காரர் கள் அதிகாரிகள் அவர்கள் சௌகர்யத்திற்கு- சம்பாத்ய முறைக்கு வைத்துக் கொண்ட பழக்க வழக்கங்கள், கிளார்க், அட்டெண்டர்களுக்கும் வந்து கொன்று திங்கறது. ஆகாசத்திற்கு ஆசை உண்டாகிப் பாதாளத்தில் வாழ்க்கையை வைத்து விட்டார்கள். 

பயிர் பச்சையைப் பார்த்து வெகு நாளாகிறது. வீட்டிலிருந்து இருபது தெருத் தாண்டிப் போனால் தான் மெயின் ரோடுவரும், கடை ஆபிஸ், மார்க்கெட், சிநேகிதர்கள் எல்லாம் இந்தத் தெருக் களுக்குள் அடங்கி விடுகிறது. எங்கே போய் காற்று வாங்குவது என்னவென்று சொல்லி மெயின் ரோடு போய்ப் பயிர் பச்சைகளைப் பார்ப்பது? 

கடிகாரத்தைப் பார்த்தான். மணி நாலரை ஆகியிருந்தது. உடம்பு மந்தென்றிகுந்தது. 

மெல்ல எழுந்து அறைக்குள் அங்கு இங்கும் நடந் தான். அவளும் பிள்ளைகளும் நல்ல தூக்கத்திலிருந் தார்கள். ஒரு யோசனையு மில்லாமல் கதவைத் திறந்தான். மெல்லச் சாத்தி வைத்துவிட்டு நடைக்குப்போனான். அந்த ஸ்டோரில் தங்கியிருக் கும் எல்லோருடைய சைக்கிள்களிலும் தன் சைக்கிளைத் தேடிக் கண்டு பிடித்தான்: முன்னும் பின்னும் அசைத்து ஒரு வழியாய் உருவி எடுத்தான். 

பொதுக் கதவைத் திறந்து சைக்கிளைப் படிகளில் இறக்கினான். வெது வெதுப்பாகக் காற்று வீசியது கூடவே சாக்கடை வாசம் எடுத்தது. சைக்கிளில் ஏறி வேகம் வேகமாய் மிதித்தான், ஒவ்வொரு தெருவாய்த் தாண்டித் தாண்டி இருபது தெருக்களையும் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான். 

நிலவொளியில் வயல் பயிர்கள் கருகருவென்று தெரிந்தன. சாலை ஒரத்தில் ஒரு வெள்ளைச் சேலை விரித்து கிடப்பதுபோல் வாய்க்கால் தெரிந்தது, தண்ணீர் மடமடவென்று பாய்ந்து போனது. எங்கும் குளிர்ச்சி தெரிந்தது. புதரும் செடி கொடி களுமாயிருந்த ஒருஇடத்தில சைக்கிளை நிறுத்தினான். 

கொத்தாய்ப் புல் வளர்ந்த இடத்தில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்தான். துருவ நட்சத்திரம் பளீரென்று தெரிந்தது. நிலாவைச் சுற்றி மேகம் நிர்மலமாயிருந்தது. காற்றை இழுத்து. இழுத்துச் சுவாசித்தான். சுவாசப் பைகளுக்குள்பயிர் வாசனையும் பச்சைக் காற்றும் போய்ப் போய் அடைவதாய் நினைத்துக் கொண்டான். 

புல் தரை மெத்தென்றிருந்தது. கையைத் தலைக்கு வைத்து மெல்லச் சாய்ந்தான். பையில் கிடந்த நாலைந்து சில்லரைக் காசுகள் புல் தரையில் விழுந்தன. தெரிந்தும் அவைகளை எடுப்பது இப்போது ஆசியமில்லா த வேலை போல்தெரிந்தது. 

எவ்வளவு நேரம் ஆனதென்று தெரியவில்லை. விழித்துப் பார்த்துத்தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சரியானஞாபகத்தில் சூரியன் மப்போடு வந்திருந்தான்; வில்லை. எழுந்து சைக்கிளில் நாளாயிற்று இப்படித் தூங்கி கொண்டு வந்தான். வெயில் அவ்வள ஏறினான். வெகு என் று சொல்லிக் கொண்டான்: ஊருக்குள் வர வர இவனுக்கு நேரம் புலப்பட ஆரம்பித்தது. கைப்பம்பில தண்ணீர் அடித்தாளோ’ பிள்ளைகள் பள்ளிக்கூடம் போனார் களோ ஆபீஸில் பேலன்ஸ் ஷீட் இன்றைக்கு வைக்க வேண்டுமே என்கிற ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வர வர சைக்கிளை வேகமாய் மிதித்தான்.

– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

கந்தர்வன் கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *