திரைகடல் ஓடி திரவியம் தேடி
என் வாழ்க்கையில் முதன் முதலில் திரை கடல் கடந்து திரவியம் தேட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது நான் முதன் முதலில் வீட்டுக் கடன் வாங்கிய பிறகுதான். சிறு வயதில் இருந்து வாடகை வீட்டிலேயே குடியிருந்த ஒவ்வொருவருடைய மனநிலையும் இதுதான் என்றே நினைக்கிறேன்.
என் விஷயத்தில் நானும் என் மனைவி இருவரும் சிறுவயது முதல் வாடகை வீட்டிலேயே வசித்தவர்கள் அதனால் எங்களுக்காக ஒரு சொந்த வீடு என்ற கனவு எங்கள் மனதுக்குள் எப்போதும் கனன்று கொண்டிருந்தது. அதனால் 2008 நடுப் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியில் ஒரு வீட்டுக் கடனை எடுத்தேன். சில மாதங்கள் புதிய வீட்டில் மொட்டை மாடிக்கு செல்வதும் தொட்டிகளில் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதுமாக பொழுதைக் கழித்தேன். ஒரு வருடம் முடிந்த நிலையில் என்னுடைய வருடாந்திர லோன் அறிக்கையை அந்த வங்கி எனக்கு அனுப்பி வைத்தது. அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது.
12 மாதங்கள் இஎம்ஐ கொடுத்தும் என்னுடைய அசலில் பன்னிரண்டாயிரம் ரூபாய் மட்டும்தான் குறைந்து இருந்தது. அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கவே முடியவில்லை. வீட்டுக் கடன் என்பதன் நிதர்சனம் அப்பொழுதுதான் புரிந்தது. அதற்குப்பின் பல தடவைகள் ஐ சி ஐ சி ஐ கலெக்ஷன் ஏஜென்ட் அரிவாளுடன் என்னை துரத்துவதாக கனவு கண்டு எழுந்ததுண்டு.
எவருக்கும் கடனாளியாக இருக்க விரும்பாத நான் திரவியம் சேர்க்க திரை கடல் ஓடுவது என்று முடிவு செய்தேன். ஒரு வருடம் கஷ்டப்பட்டு வீட்டுக் கடனை அடைத்தேன். அதே சமயத்தில் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து ஒரு செய்தி, சென்னையில் என் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டனர் விலை உயர்ந்த எந்த பொருள்களும் களவாடப்படவில்லை என்றாலும் அது மனதில் எங்களுக்கு ஒரு பீதியை உருவாக்கி இருந்தது. அந்த வருட இறுதியில் சென்னை வந்து வங்கியில் பத்திரங்களை சேகரித்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். அப்பொழுதுதான் முட்டாள்தனமான அந்த எண்ணம் என் மனதில் தோன்றியது.
என் தனி வீட்டுக்கு மேல் முதல் தளம் கட்டலாம் என்பதுதான் அந்த எண்ணம். அதனால் அந்தப் பணியை ஒரு பொறியாளரிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் திரைக்கடல் ஓடினேன். இந்த முதல் தளத்தை கட்டும் பொருட்டு பணம் ஈட்ட மேலும் இரண்டு வருடங்கள் தங்கி பணம் அனுப்பிக்கொண்டு முடிவில் 2015ல் வீட்டு வேலை முடிந்து நாங்கள் திரும்பினோம்.
புதிய கார், புதிய தொட்டி செடிகள், கலர் மீன்கள் என்று அழகாக சென்ற வாழ்க்கையில் அந்த வருடம் சென்னையில் கன மழை அதற்கு மேல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டிருந்தார்கள். அதனால் எங்கள் வீடு இருந்த பகுதி முழுவதும் நீர் சூழ்ந்து கொண்டது. 15 நாட்கள் மின்சாரமே இல்லை. நான் பணிக்கும் திரும்ப முடியவில்லை. அப்பொழுது அடுத்த முட்டாள்தனமான எண்ணம் மனதில் தோன்றியது.
இரண்டாவதாக ஒரு வீடு என் அலுவலகத்துக்கு அருகில் வாங்கினால் என்ன? இப்பொழுது அதற்காக இன்னொரு வங்கி வீட்டுக் கடன் அதை அடைக்க மறுபடியும் திரை கடல் ஓடினேன். இரு வருடம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வங்கி கடனை அடைத்து பத்திரங்களை வங்கியில் இருந்து திரும்பி வாங்கிய பொழுது மீண்டும் மகிழ்ச்சி. இன்னும் ஒரு வருடம் தங்கி ஒரு சிறிய காருக்காக பணம் சேர்த்து 2020 பிப்ரவரியில் சென்னை திரும்பினேன். எனக்காக காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி.
அதுதான் கொரோனா பேரிடர் மற்றும் லாக் டவுன். வெளிநாட்டில் இருந்து வந்ததால் நாங்கள் தான் கொரோனாவை கட்டிக் கூட்டிக் கொண்டு வந்ததாகவே அங்கு வசித்தவர்கள் நம்பினார்கள். நாங்கள் வந்த 15 ஆம் நாள் கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். இரு வருடங்கள் குழந்தைகள் தொலைதூர பள்ளி கல்வி முறையில் கல்வி புகட்டப்பட்டார்கள். கடைசியில் 2023 கொரோனா முழுவதுமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று பள்ளிகள் திறந்த பொழுது என் குழந்தைகளும் பள்ளிக்குத் திரும்பினார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சக மாணவர்களால் ஏளனம் செய்யப்பட்டனர். ஒரே சமயத்தில் தமிழும், ஹிந்தியும் அவர்களால் கற்க இயலவில்லை. சில மாதங்களிலேயே அப்பா நாம் வெளிநாட்டுக்கே போய் விடலாமா என்று விண்ணப்பிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஆசைக்காக இந்த முறை திரைகடல் ஓடினேன். ஆனால் திரவியம் சேர்க்க அல்ல மாறாக என் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக.
இன்று லண்டனில் பணிபுரிகிறேன் இங்கு வந்து 30 மாதங்கள் ஆகின்றன. குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். சமீபத்தில் தான் என் நெஞ்சுக்கு இனியவளை இழந்தேன். என் பணி மேஜையின் மேல் இருந்த ஒரு புத்தர் சிலையை உற்று நோக்கி கொண்டிருந்தேன்.
திரைகடல் ஓடி திரவியம் தேடி என்ன பயன்? நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் வாழ நினைத்து அங்கு திரும்பிய தருணங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு தடை இருந்தது, அது செம்பரம்பாக்கமாக இருக்கலாம் அல்லது கொரோனா பேரிடராக இருக்கலாம். ஆனால் திரவியம் தேட திரை கடல் ஓடி இருக்க வேண்டுமா?
அவ்வை கிழவி ஏன் அவ்வாறு கூறினாள்? எனக்கு புலப்படவில்லை. புத்தர் சிலையின் கீழ் இருந்த வாசகத்தை படித்தேன், ஆசையே துன்பத்திற்கு காரணம்.
இன்றும் என்னை அறியாமல் என் மனம் கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதுண்டு. வீட்டுக் கடனை வாங்காமல் வாடகை வீட்டிலேயே இருந்திருந்தால்? அல்லது வீட்டுக் கடனை வாங்கி திரைகடல் ஓடாமல் சென்னையிலேயே வாழ்ந்து அந்த கடனை அடைத்து இருந்தால்? முதல் தளம் கட்டாமல் இருந்திருந்தால்? மற்ற எல்லாரைப் போலவும் மழைக் காலங்களில் வரும் வெள்ள நீருடன் வாழ பழக்கப்பட்டு இருந்தால்? இரண்டாவதாக ஒரு வீடு வாங்காமல் இருந்திருந்தால்? அதன் கடனை அடைக்க மறுபடியும் திரை கடல் ஓடாமல் இருந்திருந்தால்?
ஆனால் என்ன செய்வது மனம் ஒரு குரங்கு தானே! வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு தருணத்திலும் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவுகளும் நம் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்ற உண்மையை உணர்ந்த நான் புத்தரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு புத்தன் சிரிப்பதை போல் தோன்றியது.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 1,232