திருமணம்
கதையாசிரியர்: ரா.தணலன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 1,700
(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22
16. ரகு
என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை….கண் களையுமா நம்பாமல் இருக்கட்டும். ஐயோ…. என் நினைவு தடுமாறுகிறதே….! நான் ஏன்தான் அந்தக் குண்டு வீச்சிலிருந்து உயிர் பிழைத்தேன்.
என் மார்பையும் இடது கையையும் துளைத்துச் சென்ற கண்ணாடிச் சில்லுகள் என்உயிரை ஏன் எடுத்துச் செல்லவில்லை? இந்த நரக வேதனைப்படவா நான் உயிருடன் திரும்பி வந்தேன் ?
என் ஒரு கை போயிற்று. மார்புக் கூடு நொருங் கிற்று. எந்த வேலைக்கும் லாயக்கற்றவனாக நான் ஏன் உயிருடன் திரும்பி வந்தேன் ? ஆனால்……
பிழைத்து விடுவேன் என்றறிந்ததும் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் ? இன்று….?
குண்டடி பட்டுக் கீழே விழுந்தபோது என்நினைவி லெழுந்து நிழலாடிய உருவம் கமலாவினுடையது….! நான் மீண்டும் பிரக்ஞையடைந்து நினைவு பெற்ற போது என் நினைவில் வந்து என்னைத் துன்புறுத்தியது கமலாவினுடைய உருவம். சகிக்கமுடியாத மரண வேதனையிலே நான் துன்புற்றுத் துடிதுடித்துக் கொண்டிருந்தபோது நான் யாரை நிணைத்து மனம் புழுங்கினேனோ அந்த ஒரே ஒருத்தி கமலா….? சாவு என்னைப் பார்த்துச் சரஸ நகை புரிந்து கொண்டிருந்த பொழுது நான் யாருக்காக வாழவேண்டும் என்று துடித்தேனா அவள் கமலா….! கமலா, கமலா, கமலா, கமலா…என் கனவும் நினைவும் உடலும் உயிரும் எல்லாம் கமலா கமலாவாக இருந்தாள். ஆனால்…
ஐயோ என்னால் நம்ப முடியவில்லையே. காதால் கேட்டது போகட்டும் கண்ணால் கண்டதுமா பொய்யாக இருக்கும். பாலு அவள் மேலாக்கைப் பிடித்து விளை யாடினான். அவள் மோகனப் புன் னகை புரிந்தாள். அவள் அவன் கைக்குள் இருப்பதாகக் கூறினான். வேறொருவனுக்கும் கூட்டிக் கொடுப்பதாகச் சொன் னான். என் உடல் நடுங்குகிறது. உள்ளம் துடிக்கிறது எனக்கு ஒன்றும் புரியவில்லை….!
கமலா இப்படி மாறியிருப்பாளா? நம்ப முடிய வில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. காலம் எங்கள் வாழ்வைச் சின்னபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. அதன் கரங்களிலே நாங்கள் கொடுமையான துன்பங்கள் அடைந்தோம். அதனால்…? என்னால் நினைக்கவே முடியவில்லை. என் தலை சுழல்கிறது.
பாலுவின் பேச்சைக் கேட்டபோது ஆத்திரம் வந் தது. அவன் என் மனைவியின் முன்றானையைக் கையால் தொட்டபோது என் உதிரம் கொதித்தது. கோப வெறியிலே என் கண்கள் -குருடாயின. அவன் கழுத்தை நெறித்துக் கொல்லவேண்டும் என்று ஆத் திரம் வந்தது. நான் முடவன். ஒரு கையில்லாதவன் என் மார்க்கூடின் ஒரு பகுதி வலிவிழந்து கிடக்கிறது. நான் இந்த ஊருக்கு ரெக்ரூடிங் சார்ஜெண்டாக உத்தி யோகத்தில் வந்திருக்கிறேன். ராணுவ உடைகளில், இந்த நிலையில் என்னை யாருமே அடையாளம் புரிந்து கொண்டிருக்கமாட்டார்கள். நான் என்னை நானே பார்த்துக் கொண்டேன். என் உள்ளத்தில் புயலாகச் சீறி எழுந்த ஆத்திரம்.. பொங்கிக் குமுறி யெழும் கட லென வந்த கோபம், தாக்கப்பட்ட பைந்நாகம் போல் பாய்ந்தெழுந்த சீற்றம் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டது. நான் குன்றிப்போய் விட்டேன். என் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரம் அங்கே நின்று கொண் டிருந்திருந்தால் நான் கேவி அழுதிருப்பேன். ஆம்… நான் இன்று மனிதனாக இல்லை. மனிதர்களால் வெறுத் தொதுக்கப்படும் புழுவின் நிலையிலே இருக் கிறேன். கையாலாகாதவனாக, கோழையாக, உயி ருடன் நடமாடும் மனிதப் பிண்டமாக மாறிவிட்டேன். உண்மையில் கமலா மாறிவிட் டிருப்பாளானால் நான் அவள் முன் போவது கேவலம். அவள் என்னைத் துரும்பளவு கூட மதிக்கமாட்டாள். ‘கட்டிய மனைவி யைக் கதியற்ற நிலையில் விட்டுவிட்டுக் கண் காணாது ஓடி விட்ட கபோதிதானே நீ….என்று அவள் கேட்கத் துணிந்துவிட்டால் அந்த அவமானத்தைச் சகித் துக் கொள்வதைவிட நான் அப்பொழுதே இறந் தொழிந்து போவதுதான் நல்லது. ஆம்…. நான் இனி ஏன்தான் உயிருடன் இருக்கவேண்டும். வாழ்க்கை யில் எனக்கிருந்த எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து விட்டன. நான் மனிதனாகவே வாழ முடியாத நிலை மையை அடைந்துவிட்டேன். நான் இன்னும் எதற்காகத்தான் உயிருடன் இருக்கவேண்டும். நடைப் பிணமாக ஏன் தான் வாழவேண்டும்….?
பித்துப் பிடித்தவன் போல் நான் நடந்து சென் றேன். என்உணர்வு என்னிடம் இல்லை. என் அறிவும் என் வசம் இல்லை. எப்படியோ மனம்போன போக்கில் எங்கோ நடந்து செல்கிறேன். காரிருள் வானமும் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் என்னைக் கரம் நீட்டி அழைக்கின்றன. நான் மனித உலகிலே வாழத் தகுதியற்றவனாகி விட்டேன் இனி அங்கே தான் அடைக்கலம் புகவேண்டும்.
17. மாணிக்க முதலியார்
என் வாழ்விலே ஏன்தான் இப்படித் தொல்லை கள் வந்து மோதுகின்றன?
பெண்களைப் பெற்றவர்கள் பாடு பெரும்பாடு என்று கூறப்படுவது பொய் என்று நினைத்தேன். அதைப் பொய்யாக்க வேண்டும் என்று தீர்மானித் தேன். என் அருமைக் குழந்தைகளைச் செல்வமாக வளர்த்தேன். அவர்களுக்கு நான் எந்தக் குறையும் வைக்கவில்லை.
கமலா விமலா என் இரு கண்மணிகளாய் இருந் தனர். மனைவி இறந்த பிறகு எனக்கு அவர்கள் வாழ் வின் லட்சியங்களாய்த் திகழ்ந்தனர். கமலாவின் பரந்த நெற்றியைக் காணும் பொழுது, அமைதிதவழும் அவளுடைய அழகிய முழு நிலா முகத்தைப் பார்க்கும் பொழுது என் கனவிலே மனித வாழ்வின் முழுப் பயனும் வந்து நிற்கும். மனிதன் வாழ்கிறான். எதற் காக அன்பு செலுத்துவதற்காக, நேசிப்பதற்காக, அன்பு ஒன்று தான் வாழ்க்கையை வாழ்க்கையாக்கு கிறது. இந்தக் கருத்துக்களை நான் என்றென்றும் மறப்பதில்லை. அது ஒவ்வொரு தடவை என் குழந்தை களின் முகங்களைப் பார்க்கும்பொழுதும் என் நினைவில் திருப்பத் திரும்ப வந்து போகும். ஆனால் இன்று அவற்றின் வாழ்வு என் கண்ணெதிரே சீர் குலைந்து விழுவதைக் காணும் பொழுது….?
ஒரு தந்தையின் வேதனையை எந்த வார்த்தைக ளால் வெளியிட முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. என் உள்ளம் துடிக்கிறது. கலைஞன் ஒருவன் காலம் பல வருந்தித் தன் கற்பனைத்திறள் அத்தனை யும் இழைத்து வண்ணமாக்கிய ஓலியம் ஒன்று அவன் கண் முன்னே கலையறியாம் கசடர்களால் அலங்கோல மாக்கப்பட்டால் அவன் உள்ளம் என்ன பாடு படும்…? பொன்னும் பொருளும் குவித்துப் புதுமைக்கு இலக் காக்கிய பேரெழில் மாளிகையை ஆக்கிப்படைத்தோன் ஒருவன், அவன் கண் எதிரே அது அழிந்து குலைந்து படுதல் கண்டால் என்ன பாடு படுவான்….? ஆனால்…. அவற்றால் எல்லாம் என் நி லையை ஒப்புக்கூற முடியுமா…? நானோ என் கண்மணிக் குழந்தைகளை உயிர் உள்ள ஓவியங்களாய் கருதினேன், என் வாழ் வின் லட்சியப் படைப்புகளாகக் கண்டேன். அவர்கள் இன்று….!
கண்ணீரில் கரையாத சோகச் சித்திரமாய் நட மாடும் கமலா என் ஆவியை அள்ளிக்கொண்டு போகி றாள். விமலாவுக்கும் அந்தக்கதியா வரவேண்டும்?
நடேச முதலியார் என்னிடம் வந்தார். நான் வழக் கம்போல் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். ஆனால், நேற்றிரவு அவர் என்னை விட்டுப்பிரியும்போது அவர் கண்களிலே குதித்தாடிய மகிழ்ச்சி எங்கே ? ஆர்வத்துடன் என்னைவிட்டு அகலும்போது அவர் காட்டிய நேசபாவம் எங்கே? நான் ஒளி தவழும் கண்க ளுடன் அவரை வரவேற்றேன். அந்த முகத்தைப் பார்த்ததும் என் கண்களிலே சுடர் விட்டுக்கொண் டிருந்த அந்த ஜோதி அணைந்து விட்டது. நான் மெது வாக, “ஏன் உடம்பு சரி இல்லையா?” என்று கேட்டேன்.
“அவர் இல்லை என்று தலையசைத்தார்….”
“யாருக்காவது….?”
“ஒன்றும் இல்லை….”
“ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்….?”
அவர் ஒருமாதிரியாகக் கூறினார். “நான் ஒரு பிஸினெஸ்மேன் மாத்திரம் அல்ல. உணர்ச்சி வசப்பட்டவன். ஏசிகன், மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாவதைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை….”
“யாருக்கு என்ன துன்பம் ?”
“நான் ஒரு வெறும் வியாபாரியாக மாத்திரம் இருந்தால் உணர்ச்சிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவே மாட்டேன். என்னை ஒரு சிறிதளவு ஏமாற்றுபவர்கள்கூட லேசில் தப்பிவிட விட்டு விட மாட்டேன்….”
“யாராவது உங்களை ஏமாற்றி விட்டார்களா?”
“ஆமாம். நான் யாரை ரொம்பவும் நம்பி அவர்க ளுடைய முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டேனோ அவர்கள்…”
“அப்படிப்பட்ட துரோகிகள் யார்….”
“மன்னிக்கவேண்டும் நீங்கள் தான்…”
“நானா….? – நான் திடுக்கிட்டுப்போய் விட்டேன். எனக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஆனால்…. நான் அவருக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் என்பது எனக்குப்புரியவில்லை, கவலையுடன் அவர் முகத்தைப் பார்த்தபடி நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன்….” என்று கேட்டேன். என் குரல் சம்மிற்று.
அவர் தொடர்ந்து கூறினார். ஆனால், உங்களைச் சொல்லக்குற்றம் இல்லை. என்மேல் தான் தவறு. கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொள் என்று சொல் வார்கள். உங்கள் மகளை மருமகளாக்கிக்கொள்ள நினைக்கும் முன் நான் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும்…
நீங்கள் சொல்வது எனக்குப்புரிய வில்லையே… விமலா ஒரு குற்றமும் அறியாதவள்….
ஆனால் கமலா….?
எனக்குத்தூக்கி வாரிப் போட்டது. நான் தழு தழுத்த குரலில் “கமலாவும் அப்படியே…. சபேசன் விமலாவை விரும்புகிறான் என்று தெரிந்ததும் நீங்கள் எப்படி அவர்களுக்கு மணம் செய்துவைக்கத் தீர்மானித்தீர்களோ அதைப் போல் கமலா ரகுவைக் காதலிப்பதை அறிந்ததும் நான் அவர்களுக்கு மணம் செய்து வைத்தேன்.
“அந்த ரகு வேற்று ஜாதியைச் சேர்ந்தவனா?”
“ஆமாம். ஆனால் மனிதர்களிலே உத்தமன். அவனைப்போல் நல்ல பையனைப்பார்க்க முடியாது ….”
“அந்த யோக்யன் ரகு எங்கே….? உங்கள் மகளை விட்டு விட்டு ஓடி விட்டான் என்பது நிஜமா….?”
“அது பொய், உங்களை யாரோ ஏமாற்றி விட் டார்கள் என்று நினைக்கிறேன். வேலை கிடைக்கா மையால் வறுமையால் மிகவும் துன்புற்றுப் பட்டாளத்தில் சேர்ந்துவிட்டான்…”
“மாணிக்கம்…உலகம் பல விதமாகச் சொல்லும். என் கவுரவத்திற்கு….அந்தஸ்திற்கு உன்னைப்போன்ற வனுடன் சம்பந்தம் செய்து கொள்வது சரியா ? நீயே சொல்…”
“அதை முன்பே யோசித்திருக்க வேண்டாமா….?” “ நீ என் னிடம் கமலாவின் விஷயத்தை முன்பே தெரி வித்திருக்கலாமே….?”
என்னால் பேச முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்த பின் நடேச முதலியாரைப் பார்த்து…. “இப்பொழுது அதை எல்லாம் பற்றி யோசனை செய்யாதீர்கள். நம்முடைய குழந்தைகளின் நல் வாழ்க்கையைப் பற்றி யோசனை செய்யுங்கள். அவாகள் நம் கண் முன்னே உள்ளம் உடைந்து உருக் குலைந்து போகவிடலாமா….? யோசனை செய்து பாருங் கள்….” என்று மனமுருகக் கெஞ்சினேன். அவர் எழுந்து விட்டார். வாயிற் படியை நோககி நடந்து கொண்டே “நான் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இனி அத் திருமணம் நடைபெறாது….” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.
இடியுண்டவன்போல் நான் திகைத்து நின்றேன், ஆயிரம் ஈட்டிகள் என் உள்ளத்தைக் கூறு கூறாகத் துளைப்பதைப்போல் உணர்ந்தபடி நின்றேன். நான் எந்நேரம் அப்படி நின்றுகொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. விமலாவும் சபேசனும் ஆனந்தமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தனர் என் உள்ளம் விம்மியது. ஐயோ…. இவர்கள் எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றனர். வசந்தகாலமலர் போல் இளமையின் பூரிப்பில் மகிழ்ந்து நிற்கும் என் மகள் வாலிபத்தின் விழிப்பிலே இலட்சியக் கோட்டைகளின் தலை வாசலிலே நிற்கும் இளங்காளை சபேசன்…! நான் அவனுக்காகவும் மனம் வருந்தினேன். நான் ஒரு தந்தை….! தந்தைமார் எல்லோரும் சிறியவர்களாக இருந்து பெரியவர்களானவர்கள் தானே…? அவர்கள் தங்கள் இளமையிலே எப்படி இருந்தார்கள் என்பதை ஏன் தான் மறந்து விடுகிறார்கள்? — இவர்கள் காதல் சிட்டுக்கள் போல் இன்பவானை அளாவிப் பறந்து திரிந்து வருகின்றனர். இவர்களைப் பிரித்து விட வேண்டிய கொடுமையான் கடமை என் தலைமேல் வந்து சுமந்திருக்கிறது. விமலா என்னைப் பார்த்துவிட்டு “ஏன் அப்பா ஒருமாதிரியாக இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறாள். நான் நடேச முதலியாரைக் கேட்ட அதே கேள்வி… என் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது….”விமலா…. சபேசா…. நீங்கள் ஒருவரை ஒருவர் மறந்து விடவேண்டும்….
இந்த வார்த்தைகள் அவர்கள்கா துகளிலே எப்படி விழுந்திருக்கும் என்று எனக்குத் தெரியாதா? அப்பா என்றுகூவினாள் விமலா. சபேசன் திகைத்து நின்றான். அவளை என் அருகே அழைத்து என் தோளில் சாய்த்துக்கொண்டு “சபேசன் நன்மைக்காக….” என்றேன். என் மகள் பேசவில்லை. அவள் என் தோளிலே சாய்ந்துகொண்டு விம்மிக் கொண்டிருந்தாள்.
“என் நன்மைக்காகவா….? என்று உடைந்து “போன குரலில் கேட்டான் சபேசன்”
“ஆமாம். தம்பீ….நீ வயதில் சிறியவன். வாழ வேண்டியவன். வாழ வசதி உள்ளவன். என் மகளை நான் எப்படி நேசிக்கிறேனோ அதே போல்தான் உன் னையும் நேசிக்கிறேன். என் மகளின் வாழ்வு கெட்டுப் போவதை நான் எப்படி விரும்ப மாட்டேனோ….அதே போல் உன் வாழ்வு குலைந்து போவதையும் நான் விரும்பமாட்டேன். சபேசா….உனக்கு வாழ அருமை யான சந்தர்ப்பம் இருக்கிறது. நீ அதை இழந்து விடாதே…!”
“மாமா….ஏன் தான் இப்படி எல்லாம் சொல்கிறீர் கள் ? நான் உயிரோடிருப்பது உங்களுக்கு பிடிக்க வில்லையா….?”
“சபேசா…. உனக்கு உயர்ந்த குடும்பத்திலிருந்து அழகிய மனைவி கிடைப்பாள். உன் அப்பா தேடி வைப்பார். உன் இன்ப மயமான எதிர்காலத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையத்தான் நான் ஆசைப்படு கிறேன். அதனாலேயே சொல்கிறேன்….”
“அப்பா நான் விமலாவை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கிறார். உங்களுக்கும் தெரியும்…”
“இல்லை…. தம்பீ ! இப்பொழுது அவர் மனத்தை மாற்றிக்கொண்டார். உன்னிடம் எப்படி விளக்குவது என்று எனக்குப் புரியவில்லை.” ஆனால்….
“தம்பீ….எங்கள் குடும்பம் களங்கம் நிறைந்தது. அந்தஸ்தில் குறைந்தது என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். இந்தச் சம்பந்தம் தம் கவுரவத்திற்கு அவ மானகரமானது என்று நினைக்கிறார்.
“ஆனால்….”-சபேசன் ஏதோ ஆத்திரத்துடன் கூற வந்தான். நான் குறுக்கிட்டேன், “நீ அவருடைய ஒரே மகன். அவர் உன்மேல் அளவு கடந்த ஆசை வைத்திருக்கிறார்.”
“என்னால் இதைச் சகித்துக் கொள்ளமுடியாது. விமலாவைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அதை விட நான் சாவேன்….சாவையே வரவேற்பேன்….”
“தம்பீ….அப்படி நினைக்கக்கூடாது. இளைஞர்கள் இந்த சிந்தனையில் தான் தவறு செய்கிறார்கள். விமலாவைவிட நல்ல பெண் உனக்குக் கிடைப்பாள்….”
“நீங்களும் அப்படிச் சொல்லாதீர்கள். அப்பாவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் என்னைப் புறக்கணித்து விடாதீர்கள். ஐயோ அதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.”
‘சபேசா…. இந்த வாழ்வு உன் தந்தையால் நான் அடைந்தது. நான் அவருக்குத் துரோகம் செய்ய மாட்டேன். தவிர என் ஒரு பெண்ணை இதைப் போல் கல்யாணம் செய்து கொடுத்து நான் பட்ட துன்பம் போதும். இனியும் அதைப்போன்ற துன்பத்தை என்னால் தாங்க முடியாது. சபேசா…. நான் ஏழை… கிழவன் ….வாழ்க்கையிலே போராடத் தெம்பில்லாத வன். என்னை மன்னித்துவிடு….’
விமலா விம்மிக்கொண்டு தன் அறைக்கு ஓடிச் செல்கிறாள். சபேசன் தலையைக் குனிந்து கொண்டு வெளியேறுகிறான். நான்’ குழந்தையைப் போல் அழுது கொண்டு ஆசனத்தில் சாய்கிறேன். நான் என்ன செய்வேன் ? என்னால் என்ன செய்ய முடியும்….? என்னதான் செய்ய முடியும் ? ?
18. விமலா
மனிதன் வாழ்க்கையிலே ஒரு தடவை தான் சாகிறான். ஆனால், அவன் வாழ்க்கையிலே சாவுச் சிந்தனை எத்தனை தடவை வந்துவந்து மோதுகிறது?
அது இன்ப துன்பங்களின் இறுதி என்பதாலா? பொல்லாத போராட்டத்தின் முடிவு என்பதாலா…? ஏற்றத்தாழ்வுகளின் விடிவு என்பதாலா….? என்னைப் போல்…. வாழ்வின் சுவையை, இனிமையை, இன் பத்தை, லட்சியத்தை இழப்பதிலும் தவிப்பதிலும் இருந்து விடுதலை என்பதாலா….?
வாழ்வதில் என்ன பயன்….? நான் இனி உயி ருடன் இருப்பதால் யாருக்கு லாபம். மனம் உடைந்து போய்க் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு வந்து என் அறைக்குள் விழுந்தேன். விசித்து விசித்து அழுது கொண்டிருந்த பின், இதயத்தை அழுத்தும் துயரத்துடன் மனதில் எதையோ நினைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். என் கண் எதிரிலே சாளரத் திற்கு வெளியே அழகிய புறாக்கள் பறந்து கொண்டிருந்தன. அந்த வெண் புற கவிஞனின் கற்பனை போல் லாகவமாகச் சுழன்று சுழன்று பறந்துகொண்டிருந்தது. இதயம் வரண்டுபோன நிலையிலே வெறித் துப்போன பார்வையுடன் நான் அந்தப் புறவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எதிர்பார்க்க வில்லை. பாய்ந்து வந்த பருந்து ஒன்று ஒரே பாய்ச் சலில் அந்தப் புறாவைப் பிடித்துவிட்டது. சாவின் கரத்திலே அந்த அழகிய சின்னஞ்சிறு உடல் துடி துடிப்பதை நான் பார்த்தேன். பருந்து மறைந்து விட்டது. ஆயினும், நான் வான வெளியிலே அந்தப் பயங்கரக் காட்சியை நினைவுக் கண்ணிலே பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அக்காள் தான் சாக நினைத்த வரலாற்றைக் கூறியபோது ‘உனக்கு என்ன பைத்தியமா பிடித் திருந்தது’ என்று நான் கோபமாகப் பேசினேன். ஆனால்.இன்று….?
என் நினைவிலே வாழ்வு அநித்தியமான வாழ்வு அநித்தியமானது என்ற குரல்…. ஏதோ ஒரு விதமான குரல்…. பூவைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் வண்டின் குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆமாம் வாழ்வு அநித்தியமானது தான் என்றைக்கிருந்தாலும் ஒரு நாள் செத்தேதான் ஆகவேண்டும். ஆறிலும் சாவு, நூறிலும் சாவுதான். வாழ்ந்தார் வாழ்ந்தபடி எல்லாம் வாழினும்வரும் இறுதி சாவுதான் அல்லவா…!
சாவு…அது எவ்வளவு நிச்சயமானது? எவ்வளவு நிர்மலமான ? எவ்வளவு அற்புதமானது….?
ஆமாம், அமைதியாக, அழகாக நான் படுத் துறங்குவேன். பிறகு எழுந்திருக்கவே மாட்டேன். அழகிய நிலா தன் முழு ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இளம் செடி கொடிகள் இன்பத் தென்றலிலே அசைந்தாடிக் கொண்டிருக்கின் றன. ஆமாம். இந்த நிலவு எவ்வளவு மனோகரமாக இருக் கிறது ? எவ்வளவு அழகாக இருக்கிறது ? இந்த அழகிய இரவிலே அழகிய முறையிலே சாவைத்தழுவ வேண்டும். சஞ்சலமற்ற அமைதியிலே ஆழ்ந்து விட வேண்டும். ஆமாம் அதுதான் என் ஆசை….!
அப்பாவுக்கு ஏதோ ஒரு காலத்திலே வாங்கி வைத்திருந்த விஷம் கலந்த மருந்து, பெட்டியில் இருந்தது. அது என் நினைவுக்கு வந்தது. யாரும் அறியா மல் அதை எடுத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண் டேன். இரவிலே நான் சாப்பிடமாட்டேன் அழுது கொண்டே கிடப்பேன் என்று அப்பா எதிர் பார்த் திருப்பார். என்னைச் சமாதானம் செய்வது எப்படி என்பதைப்பற்றி அளவற்ற கவலையுடன் யோசனை செய்து கொண்டிருந்திருப்பார். ஆனால், நான் அமைதி யாகச் சாப்பிடச் சென்றேன். நாளை முதல் நான் சாப்பிடவா வரபோகிறேன்? இன்று கிடைக்கின்ற இந்தக்கடைசி உணவை ஏன் அம்மா விட்டு விட வேண்டும். சாப்பிட்டேன். குடிப்பதற்காகப் பாலும் எடுத்துக்கொண்டு என் அறைக்குச்சென்றேன்.
பாலை வைத்துக்கொண்டு விஷக் குப்பியைக் கையில் எடுத்த பொழுது என்னை மீறித்துக்கம் வந்து விட்டது. தேம்பி அழுது விட்டேன். நான் சாவதற் காகவா பிறந்தேன். ஆம்! பிறந்த எல்லோரும் என்றாவது ஒருநாள் சாகத்தான் பிறந்திருக்கின்றனர். ஆனால், யாருமே சாவைத்தேடிக் கொள்ளப் பிறக்க வில்லை. அந்தத் தலைவிதி அபாக்கிய வதியான எனக்குத்தான் வந்திருக்கிறது…. அழுவதும் தொழுவதும். ஆசையும் பாசமும், கனவும் நினைவும் எல்லாம்…. என்னைப்பொறுத்த வரையில் இன்னும் சிறிது நேரத்தில் ஓய்ந்துவிடும். அதன் பிறகு அமைதி! குன்ற அமைதி ! நிறைவுற்ற அமைதி ! நிலையான அமைதி!
நான் விஷக்குப்பியைப் பாலில் சாய்த்தேன். குடிக்க வாய் அருகே கொண்டுபோனேன். பால் டம்ளர் தடாலென்று கீழே தட்டி விடப்பட்டது. தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு நான் எழுந்து நின்றேன். என் எதிரே பாலு நின்று கொண்டிருந்தார்.
நான் அழுதுகொண்டு படுக்கையில் விழுந்தேன். இந்த வேளையில் இவர் எங்கே வந்தார் ? இவர்தான் என் அக்காவின் கல்யாணத்தை முடித்து வைத்தார். என் கல்யாணத்தையும் முடித்து வைப்பாரா? அவர் மெதுவான குரலில் “விமலா….விமலா இது என்ன வேலை யம்மா…? என்ன புத்திகெட்ட பெண்ணாக இருக்கிறாய் நீ….அவன் மணந்து கொள்ளாவிட்டால் உன்னை மணந்து கொள்ள ஆயிரம்பேர் காத்திருப்பார்கள். அப்படித்தான். அவனையே மணந்து கொள்ளவேண்டு மானாலும் அதற்கு நான் ஏற்பாடு செய்ய மாட்டேனா என்னிடம் சொல்லி யிருக்கக்கூடாதா…? விஷத்தைச் சாப்பிடப் போகிறாயே அம்மா…பைத்தியக்காரி….!” என்றார்.
விம்மல்களை நெஞ்சில் புதைத்துவிட முடியவில்லை, அழுதுகொண்டே “நான் எதற்காக வாழவேண்டும் என்றேன். அவர் ஒரு கணம் யோசித்த பின். “நடேச முதலியார் மனதை மாற்றவேண்டும். அவ் வளவுதானே. நீ என்னோடு வா…” என்றார்.
“உங்களோடு வந்தால்….”
“நாம் அவரிடம் போவோம். நீ அவர் காலைப் பிடித்துக்கொண்டு உன் துயரத்தைச் சொல். நானும் சொல்கிறேன். வெளியே கார் நிற்கிறது எழுந்து வா’ என்றார். எனக்கு அப்போதிருந்த மன நிலையிலே எதையும் சிந்திக்கவே சக்தி அற்றவளாக இருந்தேன் நான். நான் அவரோடு புறப்பட்டு விட்டேன். அவர் கூறியபடி வெளியே காரும் நின்றது. நாங்கள் அதில் ஏறப்போனோம். நான் நினைக்கிறேன் அந்தக் காரில் நான் ஏறியிருந்தால் தற்கொலையை விட மோசமான நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பேன் என்று என்னையோ அக்கர்வையோ ஏமாற்றிப் பிடித்துக் கொண்டு எங்கோ கண் காணாத தூரத்திற்கு ஓடிச் செல்ல பாலு திட்டமிட்டிருந்தது பின்னால் அல்லவா தெரிய வந்தது?
எப்படித்தான் ஒரு நொடிக்குள் அத்தகைய விசித்திரம் நடந்தது என்பது எனக்கே தெரியவில்லை. நான் காரில் ஏறப் போனேன். ஒரு நொடிக்குள் மோட்டார் சைகிள்கள் நாலு திசைகளிலும் இருந்து வந்து எங்கள் வீட்டைச் சூழ்ந்துகொண்டன. போலீஸ் லாரி ஒன்று வேகமாக வந்தது. பாலு தப்பி ஓட முயன்றார். வேட்டுச் சப்தம் கேட்டது. சப் இன்ஸ் பெக்டர் கையிலே இருந்த துப்பாக்கி புகைந்து கொண் டிருந்தது. பாலுவின் இடுப்பிலே இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவர் ஓட வில்லை.
அப்பா எழுந்து ஓடிவந்தார். அவருக்கும் ஒன் றும் புரியவில்லை. பாலு கைது செய்யப்பட்டார். அவ ரோடு அன்று கச்சேரிக்கு வந்திருந்த பாங்க் ஏஜெண் டும் கையில் விலங்குகளுடன் காட்சி அளித்தார். இன் னும் யாரோ ஒருவன். நகைக் கடை சேட்டாம் ! அவ னும் காணப்பட்டான்.
அந்தக் கார் சோதனை யிடப்பட்டது. அதற்குள் பெட்டி பெட்டியாக நகைகளும் நோட்டுக் கத்தைகளும் காணப்பட்டன. அதிலே அக்காவினுடைய ‘நெக்லஸும்’ கூட இருந்தது. எங்களால் ஒன்றும் நம்ப முடியவில்லை. பாலு முதலியோர் போலீஸால் அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸார் மறு நாள் காலையில் அப்பாவை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி விட்டுப் போயினர். ஒன்றும் புரியாது திகைப் படைந்த நிலையிலே நான் போய்ப் படுக்கையில் விழுந் தேன். உறங்கி விட்டேன்.
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.