சிவனும் மகனும் சம்பாஷித்தல்
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 290
(1933ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எடா! பாலசுப்பிரமணியம்! நீ செய்வதை நினைக்க நினைக்க என் மனம் மிக வருந்துகிறது. நான் ஒற்றியூரில் குடியிருந்தும் அம்பலத்தில் ஆடியும் நஞ்சுண்டும் பிச்சையெடுத்தும் மண் சுமந்தும் நான்கு மக்களைப் பெற்று வளர்த்தேன். அறிவறிந்த மக்களைப் பெற்றேனேயன்றிப் பின்புத்தியுடைய பெண்மக் களை பெற்றேனல்லேன். இதனால் நான் சீதனம் நகை கொடுக்க வேண்டும் என்ற கவலையின்றி வாழ்ந்து உங்கள் நால்வரையும் நல்ல இடத்தில் சம்பந்தஞ் செய்துவைத்தேன். என் மைந்தருள் மூத்த மூவரும் இயன்றமட்டும் ஒழுங்குற வாழ்கிறார்கள். நீதான் ‘கேவலமாய்’ வாழுகின்றாயாம். உன்னை அடித்துத் திருத்தலா மென்றால் உன் அம்மா உன்னைக் ‘கடைக்குட்டி’ என்று சொல்லித் தடுக்கின்றாள்.
இப்போது இங்குள்ள வாலிபர் சிலர் சிங்கப்பூருக்குப் போய் வந்தவுடனும் சில பத்திரிகைகளை வாசித்தவுடனும் சாதிபேதம் பார்க்கவேண்டாம், கலப்புவிவாகம் செய்யலாம், இதுபிழை, அதுதான்சரி என்று பலவாறு பிதற்றுவர். இது போல நீயும் செல்வச்சந்நிதியில் இருக்கின்றபோது செய்கின்ற ‘புரளி’ மிக அதிகமாம். பொலிகண்டிக் கந்தவனத்தில், மாவிட்டபுரத்தில், நல்லூரில் இருந்த காலத்தில் இவ்வளவு ‘மோச’ மில்லை. நீ செல்வச்சந்நிதியில் அந்தத் தாழ்த்தப்பட்ட சாதியாருக்குச் சிறிது சுவாதீனங் கொடுத்தாய். அதனால் அவர்கள் உன்னை அன்புடன் வணங்கி உயர்சாதி மக்களுடன் சமரசமாய் உலாவுகின்றார்கள். பல மடங்களைக் கட்டி “இன்ன சாதியாரின் மடமிது” என்று வகுத்தறிய முடியாமல் பல உயர்மக்களைக் கலக்கமுறச் செய்கின்றனர். காவடி எடுக்கின்றார்கள். அன்னதானம் புரிகின்றார்கள். சுருக்கிச் சொல்லுகில் தம் வீடுபோற் பாவித்து வருகின்றார்கள். (கதிர்காமத்திலும் சிறிது சுயாதீனங் கொடுத்திருக்கின்றாயாம்) உனக்கு என்ன பித்தமா? காந்தியினு டைய சமரசம் உனக்கு ஏன்? மேலும் “மகன் அறிவு தந்தை அறிவு” என்றபடி, உனது போக்கும் எனது போக்கும் ஏறக்குறைய ஒத்திருத்தல் வேண்டும் அல்லவா?
நான் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, வண்ணார் பண்ணை யாதியாம் (சிவ) தலங்களில் வாழ்வதை நீ காண வில்லையா? உன்னுடைய மூத்தண்ணன் (பிள்ளையார்) இளையண்ணன் (வைரவர்) உனது சீனியண்ணன் (வீரபத்திரர்) இவர்களின் வாழ்க்கையைக் கவனிக்கவில்லையா? இவ்வாறெல்லாம் நாங்கள் காலம் போக்க நீமாத்திரம் உன் வாலிபப்புத்தியால் இந்தப்புதிய இயக்கத்தில் ஈடுபட்டுச் செல்வச்சந்நிதியில் சமரசமாய் வாழுகின்றாயே! இன்னும் நீ சாதிபேதம் பாராமல் இழிந்த குறவர் குடியில் 2 ஆம் மனைவியை மணந்தாய், இதுவும் இக்கால வாலிபரின் இயக்கங்களுள் ஒன்றுதான். ஆனபடியால் “எடமேனே” இந்தச்சமரச குணங்களையெல் லாம் நீ விட்டுத்திருந்தி நட. உன் செயல்களைப் பற்றி அந்த ஐயர் நாடோறும் எனக்கு முறையிடுவார். நீ திருந்தாவிட்டால் உன்னை எங்கள் கூட்டத்தில் நின்றும் விலக்கி விடுவோம். அன்றியும் “பிறீ பிறெஸ்” பத்திரிகையிலும் உன்னைக் கண்டித்து எழுதிவிப்பேன் என்று சிவபெருமான் தமது இளையகுமாரனாகிய பாலசுப்பிரமணியனுக்குக் கூறினார்.
தந்தை கூறிய இந்த வார்த்தைகளைக்கேட்டு என்றும் இளையோன் ஆகிய (வாலிபன், Youth ) பாலசுப்பிரமணியம் பின்வருமாறு கூறத்தொடங்கினான்.
தந்தைக்கு மகன் புத்தி கூறுவது மரபல்லவாயினும் நீங்கள் நடுவயசு உடையவர்களாய் வாழ்ந்த அக்காலத்தில் நான் உங்களுக்குச் சில விசயம் போதித்துள்ளேன். இதைப்பற்றி எனது அரிய நண்பன் அருணகிரிநாதனும் “தந்தைக்கு முன்னந் தனியான வாளொன்று சாதித்தருள் கந்தச்சுவாமி” என்று விதந்து கூறியுள்ளான்.
மேலும் பிரமனுக்குங் குட்டுக்கொடுத்துப் படிப்பித்திருக்கின் றேன். ஆனபடியால் வயதுபின்னிட்டு வாக்கு மாறிய உங்களுக்குச் சில விசயங்களைப் போதிப்பது பிழையாகாது என்றே எண்ணுகின்றேன். பொதுவாக நாற்பது, ஐம்பது வயசின் மேற்பட்டாருடன் புதிய சீர்திருத்த விசயமாகச் சம்பாசித்தல் நன்றல்லவென்பதே நம் போன்ற வாலிபரின் அபிப்பிராயம் ஆகும்.
தந்தையே அந்த ஐயரும் அவர்போன்றாரும் கூறுவதைக் கேட்டு என்னைக் கோபிக்காதீர்கள். “யதார்த்தவாதி வெகுசன விரோதி” அல்லவா? ஏழைகளுக்காக வாழ்வதே எமது கொள்கை. உங்களையும் ஏழைப்பங்காளன் என்றே உலகம் சொல்லுகின்றது. நீங்கள்தானே ஏழைகளுக்காக மண்சுமந்து அடிபட்டீர்கள். பன்றிக்குட்டிகளுக்காகத் தாய்ப்பன்றியானீர் கள். இன்னும் எத்தனையோ உதவிகளை ஏழைகளுக்கு ஈர்ந்தீர்கள்.
மேலும் கடவுளராகிய எங்களுக்கு இந்தியாவிற் சில பாகங்களி லும் அதை அடுத்த சில தீவுகளிலும் மாத்திரம் மதிப்புண்டு. ஆனால் மகாத்மா காந்திக்கு ஏறக்குறைய உலகம் முழு வதிலும் சிறந்த மதிப்புண்டு. இதற்குக் காரணம் காந்தி ஏழைமக்களுக்காக யாவரும் வாழ வேண்டும் என்று போதிப்ப தும் சாதிப்பதுமேயாம். நாங்கள் சமரசக் குணம் பூண்டு வாழாமையால் அன்றோ ஏழைமக்கள் பலர் அந்நியமதம் புகுந்து எங்களையும் மறந்தனர். அந்தோ என்னென்று சொல்வேன். ஏழைமக்களின் பெயர்களைத்தானும் பூரணமாக உச்சரிக்க மனம் உடன்படாது. முத்தன்,கந்தன்,பொன்னன், நாகன், பொன்னி, சின்னி என்று குறுக்கி அழைக்கின்றனரே. (அறிவுடையாரும் இங்ஙனம் கூறுகின்றனர் ) இதனால்தான் நானும் என்பெயரை முருகன், கந்தன்,சிலம்பன். குழகன், குமரன்,வேலன் என்று வைத்துள்ளேன்.
இன்னும் இங்குள்ள பத்திரிகை ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியார் சிலரால் அனுப்பப்பட்ட கடிதம்ஒன்றை வெளியிட நாணி விட்டது. காரணம் அவ்விசயத்தில் உள்ள உபந்நியாசர்களின் பெயர்கள் அலங்காரமாய் குறிப்பிடப்பட்டமையோ பிறிதோ தெரியவில்லை. மேலும் பழைய உபாத்தியாயர் ஒருவர் “பள்ளன் பெரியபுராணம் படிக்கலாமா” என்று தமது நண்பரு டன் சம்பாசித்தாராம் ! அந்தோ! அச்சுப்புத்தகம் மலிந்து, சைவசமயம் நலிந்து சமரசகுணம் பொலிந்து இருக்கும் இக்காலத்தில் மேலே காட்டப்பட்டவர் போன்றார் இருப்பரேல் எமது சைவ சமயம் அபரபக்கத்துச் சந்திரன் போல வளரும் என்பதில் ஐயம் உண்டோ?
எமது சைவசமயத்தை கெடுக்கும் மூடவழக்கங்கள் இன்னும் பலவுள. விரிவஞ்சி விடுத்தேன். ஆதலால் எமதரிய சைவமும் தமிழும் வளரவேண்டுமாயின் எல்லா ஆலயங்களிலும் கல்லூரிகளிலும் சமரசம் பெருக வேண்டும் . இல்லையேல் ஏழைச் சகோதரர்கள் உயர்சாதியாரால் வருத்தமுற்று அந்நியர் கையில் சரண்புகுவர் என்பது எனது துணிபு.
– ஈழகேசரி, 24.09.1933.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
