கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 125 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்தரது பஞ்சாட்சர உச்சாரணந் தெளிவாகவும், தொடர்ச்சியாகவுந் தோடுடைய செவிகளிலே விழுகின் றது. ஓங்காரநாதம் அணுவும் புக முடியாத இடங் களையும் நிறைந்து வழிகின்றது. 

அகம் முகையவிழ, நிஷ்டை கலைகிறது, இமைக் கபாடங்கள் பூட்டவிழ, நயனங்கள் மலர்கின்றன. 

‘பக்தர்களின் அஞ்சலி ஆர்ப்பரிப்பு; பக்தி மூச்சினாலே என்னுடன் இரண்டறக் கலக்கும் ஏக்கம்.’

நஞ்சுண்ட அதரங்களிலே குமிண்சிரிப்பு அரும்ப, நெஞ்சிலே அருள் சுரக்க, சக்தியைத் திரும்பிப் பார்க் கின்றான். 

சக்தியின் கோலத்தில், பரமேசுவரனின் மனச்சரிவு. ஈசுவரின் ஓசங்குன்றிட, சினமென்னும் இராகு நிழற் குடை விரித்திருக்கின்றது. குழல் துன்பத்தின் இழை களாகச் சோர்ந்து புரள, விழிப்புழையிலே சோகச் சாந்தின் கருமை மொய்க்கிறது. இதழ்கள் சுட்டன. 

“பக்தியாம் பக்தர்களாம்! கூத்தாடியின் அபி நயம்!”-ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எழுத் தொலியாக உருவாகின்றது. ஒவ்வோர் உச்சரிப்பும் ஏளன உலையிற் புடம் போட்டு வெளிவருகின்றது. 

“சக்-தீ!” 

கைலாசம் ஒரு துகட் பொழுதிலே கோடானு கோடி. முறை தடுமாறிச் சுழன்று, மறுகணம் இமயமேயாக நிலைக்கின்றது. 

“நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு நான் என்ன பஞ்சபாணனா? அன்றேல், சங்கப் புலவன் நக்கீரனா? ஊமத்தம் பூக்களை மோந்து உன்மத்தந் தலைக்கேறி, பேய்களும் பூதகணங்களும் ஆர்ப்பரிக்கும் நடுநிசியில், சங்கார லீலா விநோதம் புரிவதான எண்ணத்தில், ஊன் பொடிபூசிச் சுடலையாடுவதும்……அந்தப் பித்தனுக்கு ஒரு மனைவியாம் ; அவளுக்கு ஒரு வாழ்க்கையாம்!’ ஆளுடைய பிள்ளைக்குப் பாலமுது ஊட்டிய அந்த நித்திய யவ்வனக் கொங்கைகள் குலுங்க ஈசுவரியின் விழிப்புலத்திலே இரு குருத்துக் கங்கைகள், பிரசவ நோக்காட் டிலே சிரசுதயங் காட்டுகின்றன. 

”பிரம்மா! உன் படைப்புத் தொழிலுக்கும் போட்டியா? ‘இந்த விழி நதிகள் பூலோகத்திற்கும் பாயுமானால், பிரளயந்தான்” 

“வாணி பீடுடன் மொழிந்தாளே, அத்தனையும் உண்மை. பூலோகத்தில் வாழும் பக்தரெல்லோரும் நம்மை மறக்கத் தொடங்கி விட்டார்கள். படைப்பிற்கு நான்முகன். அவனுடைய அவனுடைய அழகிய கற்பனைகளைத் தானும் பகிர்ந்து வாழ்வதனால் தனக்கு இயல்பாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கும் அமைந்து விட்ட தாக வாணி பெருமை பேசுகிறாள். வெள்ளைக் கலை யுடுத்திய அவளையே மக்கள், கலையின் தெய்வமாக வணங்குகிறார்கள். என்னை யார் மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்? நான் எல்லாவற்றையும் அழித்துத் துவம்ஸம் செய்யும் பித்தனின் மனைவி-பிச்சி! இரத்த வெறி மிகக் கொண்டு, மனிதப் புலாலைப் பிழிந்து பச்சை உதிரத்தை குடிப்பவளாக தோன்றுகிறேன். போதும் வாழ்ந்த வாழ்வு!”-சலிப்பின் இளரேகை புரையோட அகிலாண்டேஸ்வரி சொன்னாள் 

“ஓகோ! இது பெண்கள் சண்டையா?” ஈசனின் முகத்திலே விஷமத்தனம் குதித்துத் தவழ்ந்தது. 

“பெண்களென்றால் ஏளனமா? கிருபையிடமும், அநுசூயாவிடமும்.. என்று தேவி சொல்ல; உருத்திர தாண்டவ முத்திரையிடும் விரல்களைக் குவித்துச் செவி களைப் பொத்துகிறான். 

ஈசனின் துன்ப அபிநயம், தேவிக்கு மாரீசக் களிப் பினை அளிக்கிறது. விழிகளிலே சுரக்கும் கங்கைகள் தூர்ந்து விடுகின்றன. 

‘’சக்தி! ‘நீயே சர்வலோகங்களினதும் ஆதியந்த மற்ற, எல்லையற்ற ஜீவ நதியாகப் பரம்பியிருக்கும் பொழுது, வாணி உகுத்த பகட்டுச் சொற்களிலே மதியிழந்து அழுக்காறு கொள்ளலாமா?” 

முகத்திலே சிந்தனை மின்னல்கள் பளிச்சிட்டு மறைய, சக்தி பரமேசுவரனை நோக்குகிறாள். 

“நீயே நான். நானே நீ. நாமே நாம். இதுவே தத்துவம்”

“உன்மத்தப் பிதற்றல். ஆலகாலம் கண்டத்திலே கட்டுண்டது என நினைத்தேன். இல்லை, அது சிரசு வரை ஏறியிருக்கின்றது. இல்லாவிடின் மேன்மையான படைத்தல், காத்தல் ஆகிய தொழில்கள் இருக்க அழித் தலாம் தொழிலினையே மேற் கொண்டிருப்பீர்களா?” 

பரமேசுவரனின் இதழ்களிற் பக்தரின் அறியாமை யைக் காணும்போது மலரும் சிரிப்பொன்று புரளுகிறது. 

“அழித்தலே படைத்தல்; அழித்தலே காத்தல்! படைத்தல் அழித்தலே; காத்தலும் அழித்தலே! படைத்தல் – காத்தல் -அழித்தல்-மறைத்தல் – அருளல் என்னும் ஐந்தொழிலையும் இயற்றாதியற்றியும், அழித் தலையே உரித்தாக வரித்தோம். அழித்தலே நித்தியம். உயர்ந்த சமத்துவ சமரசத் தத்துவத்துடன் நித்தியத் துவத்தை விளக்குந் தொழிலின் மேன்மைக்கு எஃது ஈடாகும்?”

ஏளனத்தின் நறுக்கொன்று அவளுடைய முகத்திலே பளிச்சிட, “என் அண்ணன் கண்ணனைப் போல நீங்க ளுந் தத்துவம் பேச விழைந்தீர்களா?” எனக் கேட்கிறாள். 

தேவியின் வார்த்தைகள் ஈசனின் நெஞ்சத்திற்கு நேரே சர மழை பொழிகின்றன. அவற்றை வில்வ இலைகளாக ஏற்றுக் கொள்கின்றார். 

“கோகுலவாசியா மகாதத்துவம் பேசுபவன்? வார்த்தைகளிலே உள்முடிச்சுக்கள் பல வைத்து அவன் எதையாவது சொல்வான். பக்தர் அதிலே ஏதோ ஆழ்ந்த நித்திலக் கருத்து இருப்பதான பிரமையில் அந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் ஓயாத பிரயத்தனத் திலே ஈடுபட்டிருக்கும் பொழுது, அவன் கோபியருடன் லீலா விநோதங்கள் புரியச் சென்று விடுவான். இது தத்துவமோ? தந்திரமோ?” 

பழுத்த இலையொன்று பூட்டவிழ்ந்து நிலத்தாயை முத்தமிட எடுக்கும் நேரக் கணிப்பிற்குக் கைலாசத்தில் மௌனம் நிலவுகின்றது. 

மௌனத்தைக் குடைந்து வாணி எழுப்பும் வீணா கானம் கேட்கிறது. இசையலையிலே தேவியின் மனம் அலைக்கழிக்கப்படுகின்றது. 

“வீணையும் அதன் நாதமும் போல அவர்கள் வாழ் கின்றார்கள். பிரமன் இப்பொழுது எதையாவது புதி தாகப் படைத்திருப்பான். அப் புதிய ஆற்றிலில் மதர்க் குங் கற்பனையிலே களிப்புக் கொள்கிறாள் வாணி. அவளுக்குத்தான் என்ன குறை ? அவளைக் கணவன் நாக்கிலே வைத்துச் சேவிக்கிறான்.” 

“தேவி, தர்மம் அழிந்ததா? சுயம் ஒழிந்ததா? நீ உமை. நான் உமையொரு பாகன். எனவே, நீயே நான். நானே நீ. நாமே நாம். ஏன் வீண் சஞ்சலம்? பூலோ கத்திற்குச் சென்று வெகு காலமாகி விட்டது. நாமே நேரிற் சென்று உண்மைகளை அறிந்து மீளுவோம்.” -அன்புப் பசையிலே பிணைக்கப்பட்ட வார்த்தைகள். 

“நமது பூலோக விஜயத்தின் போது நம்முடைய தொழிலின் மேன்மை நிறுவப்பட்டால்…?” ஈசனின் கேள்வி. 

“ஈசனின் இஷ்டம் இயற்றப்படும்.” 

“மண்டலங்கள் கீதம் பாட, மாதவர்கள் தாளம் போட, மாங்குயில்கள் வேதம்பாட, காலாட,துடையாட இடையாட, கழலாட, தோடாட, குழல் சோர, உடைய விழ கொங்கைகள் இரண்டும் பொங்கிக் குலுங்கி ஆட தத்தீம் – தித்தீம் – தகதீம் என்று கூத்தாடி என் தேவி மகிழ்விப்பாள்” 

“சம்மதம்” 


மண்ணுலகின் பொன் பூக்குங் காட்சிகள். சக்தி மெய் மறக்கின்றாள். புள்ளி மானினந் துள்ளும் காடு களும், கோல மயிலாடு வனங்களும். தேன் சுவைப் பழஞ்சொரி சோலைகளும், நறுமலர்குமுக்கு காக்களும், மரகதப் பாய் விரிக்கும் கழனிகளும், குதிக்கும் அருவி களும், அசையும் நதிகளும், பங்கயத் தடாகங்களும், ஓதையுடன் அலை வீசிக் கரை அளையும் நீலத்திரைக் கடலும், புள்ளின இசையும். பூவினச் சுகந்தமும், தென்றலின் பஞ்சுத் தழுவலும் கள்ளின் மயக்கத்தை ஊட்ட… 

“அற்புதமான படைப்பு.” 

“மாயத் தோற்றங்களின் அநித்திய ஜாலங்கள். சக்தி வா, மனித நாகரிகம் கொழுத்து வளரும் நகர மொன்றிற்குச் செல்வோம்.” 

முகில் தொட்டுக் கர்வஞ் சிந்திப் பல அடுக்கு மாளிகைகள் எழுந்து நிற்கின்றன. கடுகதியில் இயந் திர விசை இசைத்து ஓடும் வாகனங்கள். கண்களைப் பறிக்கும் நியோன் விளக்குகள். விஞ்ஞான அசுரனின் இரைச்சல். அற்ப எறும்புகளாக அலையும் மனிதர்கள்.

சக்தி திகைக்கின்றாள். 

“கடவுளின் படைப்புக்குக் கடவுளின் படைப் பேயான மானிடன் விடுக்குஞ் சவால். அந்த இமயம் நிகர்த்த கட்டடங்கள் மனிதன் கட்டியவை. ஓடும் நதியைப் பிளந்தெடுத்தது அந்த மின்னொளி. பணமும் விஞ்ஞானமும் சர்வ வல்லமை பெற்றுச் சகலவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன. ‘ஈசனின் விமர்சனம் தேவியின் மெளனம். 

‘வா படைப்பின் விசித்திரங்களைப் பார்ப்போம்.” 

பேச்சுக்கள் இற்று விடுகின்றன. சூக்கும இயக்கம். 

“இது மருத்துவமனை. பேச முடியாதவர்கள்; பார்க்க முடியாதவர்கள்; நடக்க முடியாதவர்கள்; வாழ முடியாதவர்கள்…அதோ, பெரு வியாதிக்காரர்கள்! குணப்படுத்தப்பட இயலா நோய்களின் ஆக்கினைக்குள் அழுந்தி அணு அணுவாகச் சாகிறவர்கள்…” 

மருத்துவமனை வாசிகளின் அவலக் குரல்களுக்குச் செவி சாய்க்கிறார்கள். 

‘ஐயோ தயாநிதி! சித்திரவதை செய்யாமல் என் உயிரை எடுத்துக் கொள்.’ 

‘கண்களும் கால்களும் அற்றுப் பிறந்த இது செத்தே பிறந்நிருக்கக் கூடாதா?’ 

‘சனியன் செத்துத் தொலைக்காமல் கட்டிலில் இழு பட்டுக் கிடக்குது’ 

‘பிள்ளை, அப்பாவுக்குக் கிட்டப் போகாதே. அது தொற்று வியாதி.’ 

‘அம்மாவுக்கு ஆபத்து. உடன் இரத்தந் தேவை’

தேவி திருச்செவிகளைப் பொத்துகின்றாள்.

“நரக வேதனை. வாருங்கள், போய்விடுவோம்.”

“படைப்புத் தொழிலின் மேன்மைகளை யதார்த்த மாகப் பார்த்தாயா?” 

ஈசனின் கேள்விக்குத் தேவி பதில் உத்தரஞ் சொல்ல வேயில்லை. 

பட்டினத்தின் வேறு பகுதியில் நடக்கத் தொடங்கினார்கள். 

ஒரு பெரிய கட டடம்.தனி அறை ஒருவன் பல வேலையாள்களுக்கு இரகசியம் பேசுங் குரலிற் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றான். 

“இவன் கள்ளக் கடத்தல் வியாபாரி. தான் உயிர் வாழ்வதற்காகத்தான் இத்தகைய அரசாங்க விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளதாக இவன் நம்புகின்றான்.” 

பெரிய ஆலையொன்றிலே, தோலைப் பொசுக்கும் வெப்பத்தைக் கக்கும் உலைக்கு முன்னால், தன் உடலைக் கயிறாக முறுக்கி ஒருவன் வேலை செய்கின்றான். 

“இவன் ஒரு தொழிலாளி. தான் உயிர் வாழ்வதற் காகத் தன் உடலை இப்படிக் கசக்கிப் பிழிகின்றான்.” 

மாமிச மலையான ஒருவன் வயிறு புடைக்கச் சாப் பிட்டுக் கொண்டிருக்கின்றான். 

“இவன் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதற்கே!”

சாலையின் ஓரத்திலே, பிட்சாபாத்திரம் ஏந்தி, வருவோர் போவோரிடம் பற்களைக் காட்டி ஒருவன் பிட்சை கேட்கின்றான். 

“இவன் பிட்சை எடுப்பது தன்னுடைய உயிரைக் காப்பாற்றவே!” 

ஒருத்தி தன்னுடைய கற்பைப் பேரம் பேசுகின் றாள். விலை சம்மதம். ஓர் அறைக்குட் சென்று கூச்சமின்றி அந்த அந்நிய ஆடவனுடன்… 

இவ்வளவு நேரமும் நகரத்தின் காட்சிகளையும், ஈசனின் விமர்சனங்களையுங் கேட்டுக் கொண்டு வந்த சக்தி திகைக்கின்றாள். 

“ஐயோ, கற்பு” என்று சக்தி கதறுகின்றாள்.. 

“அவளுடைய செயல், தசை இன்பங்களின் பாற் பட்டதன்று. உயிர் வாழ்வதற்காக தன்னுடைய உடலை வாடகைக்கு விடுகின்றாள். அவளைப் படைத்தவன் பிரம்மா. அவளைக் காப்பவன் திருமால்!”‘ 

தோல்வி மனத்தை அலைக்கழிக்க, நாணம் மீதூரத் தேவியின் தலை கவிழ்கின்றது. 

“போதும் ஈஸ்வரா கைலாசத்திற்கு மீளுவோம்.” 

”தேவி, என்னுடன் வா.” மறுப்பு எதுவுமில்லை. பின் தொடர்கின்றாள். 

சுடலை. ஆனந்த மிகுதியால் ஈசன் ஆர்ப்பரிக்கின்றான்..  

“இங்கே இந்நாட்டின் சர்வாதிகாரிக்குச் சிதை. இது வணிகனுக்கு. இது தொழிலாளிக்கு. இஃது ஒரு கற்புக்கரசிக்கு. இஃது ஒரு விபசாரிக்கு. இது பணக்காரனுக்கு. இஃது ஏழைக்கு. படைப்பிலும் வாழ் விலும் எவ்வாறிருப்பினும், ஈற்றில் இச்சுடலைக்கு வந்து சமமாகிச் சங்கமிக்கின்றார்கள். சாவு நித்தியம். என் தொழிலேந்தும் சமத்துவ சமரசத் தத்துவம் நித்தியம். எல்லாமே அழிந்து, எல்லாமே ஒன்றாகி, எல்லாமே நானாகி என்னிற் கலந்து நீயாவது நிச்சயம். நீ சக்தி!” 

ஈசன் வெற்றிக் களிப்புடன் உடலெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆடுகின்றான். 

கைலாசத்திலே காலாட, துடையாட, இடையாட கழலாட தேவி இயற்றும் ஆடலின் நாதம் தோடுடைய செவிகளிலே விழுகின்றது. 

– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *