சாவித்ரி மாமிக்கு நைட்டி தான் வேண்டும்
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 165

உங்களுக்கு சாவித்ரி மாமியைத் தெரியுமா? மாமி பம்பாயில் டோம்பிவிலி பகுதியில் பல வருடங்களாக வசிக்கும் ஒரு தமிழ் பிராமணப் பெண்மணி. மாமிக்கு எழுபத்தி நான்கு வயது ஆகிறது. மாமா சதாஷிவம் மறைந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன.
மாமி தனது மூன்றாவது பையன் ஆனந்தின் வீட்டில் தான் வசிக்கிறார். முதல் பையன் செகந்தரபாடில் வேலை. மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அவன் ஜீவனம் ஓடிக்கொண்டு இருந்தது. அவனுக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்தன.
இரண்டாவது பையன் ராகவன் சென்னை வாசி. சென்னையில் மைலாப்பூர். ஹோட்டல் வூட்லண்ட்ஸ் தெரியுமா உங்களுக்கு? அதற்கு நேர் பின்னர் உள்ள பல மாடிக்குடியிருப்பு ஒன்றில் ராகவன் மட்டும் அவன் மனைவி உஷாவின் வாசம். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. ராகவன் பாம்பேயில் வேலை பார்த்தவன். மனைவி உஷா அப்பா அம்மாவின் ஒரே செல்ல மகள். திருமணத்திற்கு பின்னர் ராகவனுக்கு மைலாப்பூரைப்பற்றி ஆகா ஓகோவென்று சொல்லி அவனை சென்னைக்குக் குடி பெயரச் செய்து விட்டாள் உஷா. உஷாவின் உண்மையான நோக்கம் தனது தந்தை தாயுடன் இருக்க வேண்டும் என்பது. இதில் சதாஷிவத்திற்கும் சரி சாவித்ரி மாமிக்கும் சரி வருத்தம் தான்.
மாமனார் மாமியார் என்று பெண்டாட்டியுடன் போன பையன்கள் அப்பா அம்மா வீட்டிற்கு மறுபடியும் வந்ததாக சரித்திரமே இல்லை.
நல்ல வேளை. உஷாவின் தாய் தந்தையர் இரண்டு தெரு தள்ளித் தான் இருந்தனர். ஆனால் என்ன ராகவன் கிட்டத்தட்ட வீட்டு மாப்பிள்ளை மாதிரி தான். உஷா வேலைபார்த்து வந்தது Cognizant Technologies என்கிற கம்பெனியில். ராகவன் இன்போசிஸ் கம்பனியில் வேலைபார்த்து வந்தான். இருவருக்குமே கை நிறைய சம்பளம்.
ஆனந்த் பாவம் திருமணம் செய்து கொள்ளவில்லை. தந்தைக்கும் தாய்க்கும் துணையாக இருந்து விட்டான். ஆனந்த் அவனது அத்தை பெண் உமாவை காதலிக்க அவளும் அவனை விரும்ப அவனது அத்தை ஒத்துக்கொள்ளவில்லை. உமா திருமணம் பண்ணிக்கொண்டு கணவனுடன் துபாயில் செட்டில் ஆகி விட்டாள்.
ஆனந்த் ஒரு கல்லூரியில் வணிகவியல் பேராசிரியர். இந்த ஒரு காரணம் போதுமாக இருந்தது அவனது அத்தைக்கு – அவனை நிராகரிக்க.
கல்லூரிப் பேராசிரியர் என்றால் ஒரு காலத்தில் ஒரு விதமான மவுசு இருந்தது. என்றைக்கு மாணவர்கள் வாடிக்கையாளர்கள் ஆனார்களோ அன்றில் இருந்து வீழ்ச்சி ஆரம்பம் ஆகி விட்டது என்பதே நிஜம். இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.
சாவித்ரி மாமிக்கு ஐந்து வருடங்கள் முன்னர் தான் பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து இருந்தது. உணவுக்க்கட்டுப்பாடு ஒன்றும் பெரிதாக இல்லை. டோம்பிவிலியில் பிரசித்தி பெற்ற பிரேமா சங்கரன் மாமியின் எடுப்புச் சாப்பாடு தான் அவர்களுக்கு க்கை கொடுத்து வந்தது.
சரி. சரி. இந்தக்கதைக்கு வருவோமா?
சாவித்ரி மாமி புடவை அணிந்து நிறைய வருடம் ஆகி விட்டது. படுபாவி எவன் நைட்டி என்கிற ஒரு உடையை கண்டுபிடித்தானோ தெரியவில்லை முக்கால் வாசி பெண்கள் அதை காலை, நண்பகல், மாலை, இரவு என்று பாரபட்சம் இன்றி அணியத் துவங்கி விட்டனர்.
சென்னை, பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களில் நைட்டியை மாட்டிக்கொண்டு மேலே ஒரு துண்டை போர்த்திக்கொண்டு கடைகளுக்கு பாலும் ரொட்டியும் வாங்க வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்தது.
நைட்டி என்பது ஒரு இரவு நேர உடை என்பதை மறந்து அதை நாள் முழுக்க அணிந்து வலம் வரும் பெண்களில் சாவித்ரி மாமியும் ஒருவர்.
மாமியிடம் அவரது பிள்ளைகளுக்கு பிடிக்காத விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் ஆசையாக என்ன வாங்கி கொடுத்தாலும் அதை அப்படியே கடாசி விடுவது மாமியின் சுபாவம். இதில் கணவரும் விதிவிலக்கு அல்ல.
ஒரு முறை சதாஷிவம் போத்தீஸ் கடையில் இருந்து ஐயாயிரம் விலை கொடுத்து பச்சை வண்ணத்தில் வைர ஊசி புடவை வாங்கிக்கொண்டு வந்தார். மாமி அதை ஒரு தடவை கட்டிக்கொண்டதோடு சரி. அந்தப் புடவை அப்படியே அலமாரியில் உறங்கி விட்டது. பிள்ளைகள் எந்தப் புடவை வாங்கிக்கொடுத்தாலும் அதை தானம் பண்ணுவது மாமிக்கும் வழக்கம் ஆகி போனது தான் வருத்தமே.
திருமணத்திற்கு உறவினர்கள் புடவை கொடுத்தால் அது வேலைக்காரி அல்லது தெவசத்திற்கு சமையல் செய்ய வரும் மாமி என்று நிமிடத்தில் பறந்து விடும்.
ஒரு முறை ஆனந்த் கொல்கத்தா போயிருந்தான். திரும்பி வருகையில் கொல்கத்தா காட்டன் புடவையை அம்மாவுக்கு வாங்கி வந்தான். அதை வாங்கிக்கொண்ட சாவித்ரி மாமி அடுத்த வெள்ளிக்கிழமை அந்த புடவையை பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சாத்தி விட்டாள்.
ராகவன் ஒரு முறை நல்லியில் மாமிக்கு இரண்டு மூன்று புடவை வாங்கிக்கொடுக்க அதையெல்லாம் மாமி அலமாரியில் பூட்டி வைத்து விட்டாள். மாமிக்கு சொந்த ஊரு சங்கரன் கோவில். திருநெல்வேலி என்றாலே இன்று அனைவரும் கதி கலங்கும் போது (நடிகர் சத்தியராஜ் அமைதிப்படை என்ற படத்தில் கஸ்தூரிக்கு அல்வா கொடுத்தது நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்) மாமியின் நடவடிக்கையை “திருநெல்வேலி ஏத்தம்” கூறுதல் வேண்டும்.
“ஏத்தம்” என்றால் என்ன. நான் தான் அனைவருக்கும் தானம் வழங்க வேண்டும். நான் ஒருவரிடமும் ஒன்றும் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம். It is a kind of superiority complex.
மாமி சுமங்கலி பிரார்த்தனை பூஜையை அவரது வாழ்க்கையில் ஒரு முறை தான் பண்ணினார். அதுவும் பல வருடங்கள் முன்னர். ஆனால் சுமங்கலி பூஜை பண்ணின ஒரு வாரத்தில் மாமியின் அண்ணன் முப்பத்தியொன்பது வயதில் இதய நோயால் திடுமென்று சரிய, மாமி அன்றில் இருந்து சுமங்கலி பிரார்த்தனை பண்ணுவதையே நிறுத்தி விட்டார். புடவையை ஒரு சுமங்கலிக்கு தானம் பண்ணுவது பூஜை பண்ணுவதற்கு சமம் என்று மாமி தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அவருக்கு அன்பளிப்பாக வந்த புடவைகள் எல்லாவற்றையும் தானம் பண்ணி விட்டார்.
ஒரு முறை வீடியோவில் “எங்க சின்ன ராசா” படம் பார்த்த சாவித்ரி மாமி அதில் மனோரமா போட்டுக்கொண்டு இருந்த அட்டிகையைப் பார்த்து ஆசைப்பட்ட போது ஆனந்த் உடனே மாதுங்காவில் லட்சுமி ஜ்வலரியில் முன் பணம் கொடுத்து அட்டிகை ஆர்டர் செய்தும் விட்டான். மாமி ஒரு முறை போட்டுக்கொண்டதோடு சரி. பின்னர் அதைத் தூக்கி உஷாவிடம் கொடுத்து விட்டாள். அதில் ஆனந்திற்கு வருத்தம் தான்.
பக்கத்துக்கு வீடு பாஹி மாமி ஆனைமுடி மோதிரம் வாங்கினாள் என்று கேள்விப்பட்டு சாவித்ரி மாமியும் அந்த மாதிரி மோதிரம் வாங்கினாள். ஆனால் அதை இரண்டு நாள் போட்டுக் கொண்டதோடு சரி. மூத்த பையன் நான்கு வளையல்களை அம்மாவுக்கு ஆசையாக வாங்கிப் போட இரண்டு திருப்பதி உண்டியலுக்கு போய் விட்டது. மற்ற இரண்டும் மூத்த மகன் கிரியின் மனைவிக்கே கொடுத்து விட்டாள். தனது செயல்களால் அடுத்தவர்கள் மனம் என்ன பாடு படும் என்று மாமி சற்றும் கவலைப்பட்டதாக த் தெரியவில்லை.
இதை விட வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் சதாஷிவத்தைப்போட்டு பிடுங்கி எடுத்து – “திருமணம் ஆகி இத்தனை வருடம் ஆகி விட்டது..எனக்கு வைரத் தோடு நீங்கள் வாங்கவில்லை ” என்று நச்சரித்து வைரத்தோடும் வாங்கி விட்டாள். ஆனால் அதை ஒரு மாதம் போட்டுக்கொண்டதோடு சரி. அலமாரியில் வைத்து பூட்டி விட்டாள்.
மாமா உயிரோடு இருந்த வரை – “அடியேய், செவ்வாய் வெள்ளியாவது புடவை கட்டிக்கொள்ளக் கூடாதா” என்று கேட்டு கேட்டு மாமி அதை சட்டை செய்யாமல் மாமா பரலோகம் போய் விட்டார்.
ஒரு முறை மாமி குளிக்கச் சென்ற போது நைட்டியுடன் மாமியின் தங்கத்தில் செய்யப்பட்ட தாலிக்கொடியும் காணாமல் போய் விட்டது. அவர்கள் வீட்டில் வேலை பார்த்த தெலுங்கு பையன் கங்கராஜு அடுத்த நாளே ஊருக்கு போய் விட்டான். அவன் தான் திருடி இருப்பான் என்கிற சந்தேகம் இருந்த போதிலும் அவர்கள் போலீஸ் கம்பளைண்ட் எல்லாம் கொடுக்க வில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை லக்ஷம் பெறுமானம் உள்ள கொடி தொலைந்து போய் விட்டது. மாமி வருத்தப்பட்டது என்னவோ வாஸ்தவம். ஆனால் நைட்டி மீது உள்ள மோகம் மட்டும் குறையவே இல்லை.
இதற்கு பின்னர் ஒருவரும் (அவரது மகன்கள் உட்பட) மாமிக்கு புடவையோ நகையோ கொடுப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள்.
சிறிது காலம் பிள்ளைகள் நைட்டி வாங்கி கொடுத்தார்கள். ஆனால் மாமி கிழிந்த ஒட்டுப்போட்ட நைட்டியே போதும் என்று பிடிவாதமாக நின்ற போது, பிள்ளைகள் நைட்டி வாங்கி கொடுப்பது நின்றே விட்டது.
இதோ மாமி, பிரேமா மாமியின் சாப்பாட்டுக்காகக் காத்து இருக்கிறார். மாமி அணிந்து கொண்டு இருப்பது ஒரு கிழிந்து போன நிறம் மக்கிபோன் நைட்டி. அடப்பாவிகளா, மூன்று பிள்ளைகள் இருந்தும் அம்மாவிற்கு இந்த நிலைமையா என்று ப்ளீஸ் யாரும் மாமியின் பிள்ளைகள் மீது பழி போடாதீர்கள்…போட மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன்.