சரசுவின் சௌந்தர்ய லஹரி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. ரஞ்சனி

கார் ஸ்ரீரங்கத்திற்குத் திருப்பி விடப்பட்டது. வேப்பிலை ரெங்கம்மாவின் வார்த்தைகள் காதிலே ஒளித்ததால் சரசு இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவர்கள் செல்ல வேண்டியவர்களானார்கள். 

சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் போகும் வரை, சரசு எதை எதையோ பேசிக் கொண்டு வந்தாள். 

நவீன உலகத்துக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை அவள் பேசிக்கொண்டு வருவதையே மாமியாரும், தணிகை வேலனும் கவனித்தார்கள். 

திருச்சி எல்லையோரத்தில் முச்சந்தியில் ஒரு நடன மேடை இருந்ததாம். அதை இப்போது காணோமாம். காவிரியில் குளிப்பவர்களின் வசதிக்காக கரையோரத்தில் ஒரு மண்டபத்தை அப்போதுதான் கட்டினார்களாம். 

காவிரியில் வெள்ளம் வரும்போது, முங்கில் பாலத்தில் நடந்து செல்வதே குஷியாக இருக்குமாம். 

அவள் சொல்வதை யெல்லாம் பிரக்ஞையற்றவர்கள் உபதேசம் கேட்பது போல் கேட்டுக்கொண்டு சென்றார்கள் மாமியாரும், தணிகைவேலனும். 

கார் ஸ்ரீரங்கத்திற்குள் புகுந்தது. அவளே காருக்கு வழி சொன்னாள். ஆனால் ஊரின் வடக்குப் புறத்தில் காவிரியை ஒட்டிய ஒரு வாழைத் தோட்டத்தையே அவள் சுட்டிக் காட்டினாள். 

அது குடியிருப்புப் பகுதியாக அவர்களுக்குத் தோன்ற வில்லை. ஏராளமான வாழை மரங்கள். ஒரு பக்கம் கரும்பு. நடுவிலே, திட்டுப் போன்ற ஒரு பகுதி, அங்கே தென்னை மரங்கள். மரங்களுக்கு நடுவிலே ஒரு பாழடைந்த வீடு 

அந்த வீட்டில் ஜன்னல் இருந்ததற்கு அடையாளமிருந்ததே தவிர ஜன்னல் இல்லை. கதவுகளும் பெயர்க்கப்பட்டிருந்தன. முன்புறத்து மாட்டுக் கொட்டகையில் மட்டும் நான்கைந்து மாடுகள் கட்டப்பட்டிருந்தன. யாரோ ஒரு வேலையாள் அவற்றிற்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தானே தவிர வேறு ஆள் நடமாட்டமில்லை. 

பிரதானச் சாலையில் இருந்து தோப்புக்குள் போவதற்கு ஒரு வண்டிப்பாதை மட்டும் இருந்தது. 

காரின் கீழ்ப்பகுதி இடிக்கும் என்று சொல்லி, டிரைவர் மெயின் ரோட்டிலேயே காரை நிறுத்தி விட்டார். 

சரசு மிகப் பழக்கமானவள் போல் கீழே இறங்கி மாமியாரையும், தணிகைவேலனையும் அழைத்துக்கொண்டு உரிமையோடு தோப்புக்குள் நடந்து வீட்டையடைந்தாள்.

வேலைக்காரன், “யார் நீங்கள்?” என்று கேட்டான்.

“என்னையா கேட்கிறாய்….?” என்று கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தாள் சரசு. 

பாழடைந்த நிலையில், சுவரின் காரை சுவரின் காரை உதிர்ந்து விட்ட நிலையில், மூலைக்கு முலை சிலந்திகள் வலை பின்னிய நிலையில் அந்த வீட்டைப் பார்த்ததும், சரசுவுக்கு அழுகை வந்து விட்டது. 

ஆனால் மாமியாருக்கும், தணிகைவேலனுக்கும் சிரிப்புத்தான் வந்து கொண்டிருந்தது. 

யார் ரகசியங்களில் சம்பந்தப்பட்டவர்களோ, அவர்கள் தானே அழுவார்கள். மற்றவர்கள் சிரிக்கத்தானே செய்வார்கள்? 

சரசு பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திப் போய் விட்டாள். 

உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலம், சரசுவின் கண் முன்னால் வந்தது… 

அந்த நாளில்-


ஸ்ரீரங்கத்தில் ஒரு தேவதாசி குடும்பம். அதிலே பிரபலமான நர்த்தகி சிங்காரவடிவு. அரண்மனை நர்த்தகியே அவள்தான். 

சோழ நாடு முழுவதிலேயும் பேரழகி எனப் புகழப் பட்டவள், சிங்கார வடிவு. அந்த அழகைக் கொண்டு அவள் ஸ்ரீரங்கத்திலும், உறையூரிலும் வாங்கியிருந்தது முப்பது வேலி நிலமும், இரண்டு மாளிகைகளும். 

ஸ்ரீரங்கத்தில் இருந்த பத்து வேலி நிலத்தில் ஒரு கட்டிடம் எழுப்பி இருந்தாள் சிங்காரவடிவு. 

பெரும் தனக்காரர்கள் வண்டி கட்டிக்கொண்டு அங்கேதான் அவளைச் சந்திக்க வருவார்கள். 

போட்டி போட்டுக்கொண்டு வண்டிகள் காத்திருக்கும்.

சிங்கார வடிவு பேரம் பேசிப் பழக்கப்பட்டவளல்ல.

அவளோடு அவளது இரண்டு சகோதரிகளும் இருந்ததால், வருகிற பெரும் தனக்காரர்கள் எல்லோரையும் உட்கார வைத்து பெரிய திருமண விருந்தே சமைத்து விடுவாள். 

இரண்டு சமையல்காரர்கள், மூன்று வேலைக்காரிகள், ஆறு வேலைக்காரர்கள் அவள் வீட்டிலிருந்தார்கள். 

வேலைக்காரர்கள் அடிமைகள் போல் நடக்கும் காலமானதால், சிங்கார வடிவின் முன்னால் விவசாயிகளும் கூடக் கைகட்டி நின்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மகாராணியாகவே அவள் வாழ்ந்தாள். 

கவிவாணர்கள், கலைச் செல்வர்கள் பலர் அங்கே வருவார்கள். ஆள் பார்த்து, இனம் பார்த்து அவள் நடந்து கொள்வாள். 

அவளது அண்ணன்தான் சோழநாட்டில் நாதஸ்வரத்தில் நல்ல கலைஞர் என்று பெயர் வாங்கியவர். 

ஆடம்பரமாகவும் அதே நேரத்தில் அடக்கத்தோடும் வாழ்ந்த சிங்கார வடிவு தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று பிரார்த்தித்தாள். 

தேவதாசிகளின் பழக்கப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வேறு யாருக்கும் இணங்காமல், தான் விரும்புகின்ற அழகான ஒருவரை வரவழைத்து உடலுறவு கொள்ள அவள் விரும்பினாள். 


தஞ்சையைச் சேர்ந்த தனிநாயகம் அவள் மனதைக் கவர்ந்தவன். 

தாசியை விரும்புகிறவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அவள் நேசிக்கின்ற காதலன் ஒருவன் இருப்பான். அந்தக் காதலனே தனிநாயகம். 

அந்தத் தனிநாயகத்துக்கு அவள் செய்தி அனுப்பி அன்றையப் பொழுதை அவள் ஆனந்தமாகக் கழித்தாள். 

திட்டமிட்டுக் கர்ப்பமடையும் திறமை தேவதாசிகளுக்கு உண்டு. அது ஒரு பரம்பரைப் பயிற்சி. எந்த நாளில் கூடினால் கர்ப்பமடையும் என்று அவர்களுக்குத் தெரியும். சில விவரம் தெரியாக தாசிகளைத் தவிர மற்ற எல்லோருமே குழந்தை அழகாகப் பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்பதை நன்கு கற்று வைத்திருந்தார்கள். 

சிங்கார வடிவு அந்தக் கலையில் கைதேர்ந்தவள். அது பற்றி மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கே கூடப் போதுமான அறிவு அவளுக்கிருந்தது. 

அவள் விரும்பியது போலவே கருவுற்றாள், கருவுற்ற காலத்திலிருந்து பிரசவ காலம் வரையிலே தனிநாயகத்தைத் தவிர வேறு ஒருவரோடும் அவள் உறவு வைத்துக் கொள்ளவில்லை. 

அதன் விளைவாக அவள் ஈன்றெடுத்த செல்வம்தான் அபரஞ்சி. 

‘தாசி வீட்டில் பெண்பிள்ளை பிறந்தால் திருவிழாக் கொண்டாட்டம்; ஆண்பிள்ளை பிறந்தால் துக்கம்’ என்பார்கள். அதை நிருபிப்பது போல் அபரஞ்சியின் பிறப்பைப் பெரிதாகவே கொண்டாடினாள் சிங்காரவடிவு. 

தங்களுக்கே ஒரு குழந்தை பிறந்திருப்பது போல், ஏராளமான பெருந்தனக்காரர்கள் அந்த வைபோகத்திற்கு வந்திருந்தார்கள். 

மன்னவர் அரண்மனையில் இருந்து பட்டாடைகளும், முத்து மாலைகளும் அனுப்பி இருந்தார். 

ஐம்பெரும் குழுவும் எண்பேராயமும் தங்கள் மகிழ்ச்சியைக் குறிக்க மரியாதைகள் அனுப்பி இருந்தார்கள். 

சோழ நாட்டில் தேவதாசி முறை மிக அதிகமாக இருந்த காலம். ஆகவே நூற்றுக்கணக்கான தேவதாசிகள் அந்த வைபோகத்திற்கு வந்தார்கள். அவர்களிலே நல்ல ஜோடியாகத் தேர்தெடுக்கலாம் என்று ஏராளமான பேர் வந்திருந்தார்கள். 

அரண்மனை விழாவுக்கு அடுத்தபடி இதுதான் விழா என்று சொல்லும்படி அந்த வைபோகம் அமைந்திருந்தது- 

அபரஞ்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்களே, அப்படி வளர்ந்தாள். 

தாசிக்குக் கல்வியே நாட்டியம்தானே! பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் பழக்கம் இல்லையே? 

அவள் ஐந்து வயதிலிருந்தே நாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கினாளே தவிர, அந்நாளைய வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லவில்லை. 

‘ஆளாக வளரும்போது மகள் அழகாக வருவாள். ஆயிரக்கணக்கான வாலிபர்களை வட்டமிட வைப்பாள். சோழநாட்டுப் பொன்னும் பொருளும் தன் வீட்டிலே குவியும்’ என்று ஆசையோடு அபரஞ்சியை வளர்த்தாள் சிங்காரவடிவு. 

சொத்து ஏராளமாகச் சேர்ந்துவிட்டதால், அபரஞ்சிக்குப் பிறகு இன்னொரு குழந்தை வேண்டும் என்று தனிநாயகத்தோடு உறவு கொண்டு மற்றும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் சிங்காரவடிவு. 

அவளுக்கு மல்லிகை என்று பெயரிட்டு வளர்த்தாள்.

காலங்கள் ஓடின. அபரஞ்சி பருவமகளானாள்.

சிங்கார வடிவுக்காக ஏங்கியவர்களெல்லாம் இப்போது அபரஞ்சிக்காக ஏங்கினார்கள். 

ஸ்ரீரங்கம் சந்நிதியில் அபரஞ்சியின் அரங்கேற்றம். 

சோழ நாட்டிலேயே முதன் முதலாக நாதஸ்வரத்தில் ராகம் வாசித்து அதற்கு நாட்டியம் ஆடியவள் அபரஞ்சி தான். 

தேவதாசி முறை இருந்த காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. ஒருத்தி ருதுவானதும் அவளைச் சாந்தி முகூர்த்தம் செய்வதற்குப் பல பேர் போட்டியிடுவார்கள். ஆயிரம் வராகன், இரண்டாயிரம் வராகன் என்று அதற்கான தொகை உயர்ந்துகொண்டே போகும். 

ஸ்ரீரங்கம் கோவிலிலேயே அந்த பேரம் ஆரம்பமாகி விட்டது. 

பல்லாயிரம் வராகன் கொடுப்பதற்கே பல பேர் தயாராக இருந்தார்கள். 

தாங்களே கட்டில் வாங்கிப் போடவும், திருமணத்திற்குத் தருவது போல் சீர்வரிசை தரவும் பலபேர் தயாராக இருந்தார்கள். 

ஒருமாத காலம் கூடவே இருப்பதற்குச் சில பேர் குத்தகை பேசினார்கள். 

பொன்னிலும் பொருளிலும் மிதந்த சிங்காரவடிவுக்கு எல்லாமே சாதாரணமாகத் தோன்றிற்று. 

ஒவ்வொருவரையாகத் தட்டிக் கழித்துக் கடைசியில் உறையூரைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருக்கு ஒப்புக் கொண்டாள் சிங்கார வடிவு. 

“பௌர்ணமி அன்று சாந்தி முகூர்த்தம்” என்று முடிவு செய்யப்பட்டது. அந்தப் பௌர்ணமியும் வந்தது. 

14. சுபபந்துவராளி

உறையூர்வணிகன் நவகோடி, ஒரு நவமணி வணிகன்.

அவன் தேர்ந்தெடுக்கும் முத்துக்கள் அற்புதமாக இருக்கும் என்பது உறையூர் மக்களின் பொதுக் கருத்து. 

முத்துக்களைத் தேர்ந்தெடுப்பவனுக்கு மோகனப் புன்னகையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாதா? 

நூற்றுக்கணக்கான பெருந்தனக்காரர்களுக் கிடையே அபரஞ்சி அவனுக்குக் கிடைத்ததே அவனது திறமைக்குச் சான்று. 

அத்தனை பேரிலும் அவன் கிடைத்தது, அபரஞ்சியின் அதிர்ஷ்டத்துக்குச் சான்று. 

ஆம்! நவகோடி பேரழகன். 

கட்டான அவனது மேனி காண்போரை மயங்க வைக்கும். 

ஒரு போர்வீரனின் உடற்கட்டும், ஒரு கலைஞனின் நளினமும் அவனிடம் குடிகொண்டிருந்தன. 

ஆறாயிரம் வராகனை அளந்து வைத்துவிட்டுத்தான் அவனும் சிங்காரவடிவின் படிக்கட்டை மிதிக்க வேண்டியிருந்தது. 

அருமை மருமகனை ஆரத்தி எடுத்து வரவேற்றாள் சிங்கார வடிவு.

புது மணப்பெண் போல் அலங்கரித்து, பள்ளி அறையில் காத்திருந்தாள், அபரஞ்சி. 

எதுவுமே சம்பிரதாயத்தை மீறவில்லை. 

அந்தாளில், தாசி வீட்டுக்குப் போவது, ஒருவனது வசதியைக் குறிக்கும் என்று மரியாதை செலுத்துவார்கள். 

தாசிகளும் அத்தகைய மரியாதையுடனேயே வரவேற்பார்கள். 

அனைத்துக்கும் முத்திரை வைத்தது போல், கட்டின மனைவியின் கடமைகளையே தாசிகள் காட்டிக் கொள்வார்கள். 

அபரஞ்சிக்கு அவ்வளவு உபதேசித்து அல்லவா, சிங்கார வடிவு அனுப்பி இருந்தாள்? 

நவகோடி உள்ளே நுழைந்ததும், அவனது பாதங்களைத் தொட்டு வணங்கினாள் அபரஞ்சி. 

அந்த மரியாதையைக் காதல் கலந்த மரியாதையாக எடுத்துக்கொண்டு, அவளைக் கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தினான் நவகோடி. 

அவள் கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. 

அது ஒரு தாசியின் சாகஸமல்ல; அவளது உள்ளக் கிடக்கை. 

வெளியே சொல்ல முடியாத வேதனை. 

ருதுயான காலத்திலிருந்தே அபரஞ்சி ஒருவனோடு வாழும் உன்னத வாழ்க்கையைச் சிந்தித்திருந்தாள். 

பரம்பரை தாசிகளின் குணங்கள் அவளை அண்ட வில்லை; தன் தாயைப் போல வாழ அவள் விரும்ப வில்லை. 

ஒரு குலமகளாக, குங்குமமும், பூவுமாக வாழ அவள் விரும்பினாள். 

அது தாயிடம் வாதாடி நடக்கின்ற காரியமா?

தன்னிடம் வரும் முதல் ஆடவனை அதற்குப் பக்குவப் படுத்திவிட முடியாதா? 

அடிக்கடி அவனையே வரும்படி செய்துவிட்டால், இந்த அவதி மறைந்து விடாதா? 

பக்குவமான யோசனையை அந்தப் பருவப்பெண் செய்து வைத்திருந்தாள். 

முதல் முதலாக ஒரு ஆடவன் அவளைத் தொடுகிறான். 

அவளிடம் நாடகக் கணிகையின் நடிப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிக் கூத்து இருந்தது. 

நாலுவகைக் குணமும் நிறைத்திருந்தது.

பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும் அவன் தடவிக் கொடுத்த போது, அவளது ரோமக் கால்கள் சிலிர்த்து நின்றன. 

அந்த ஆனந்த லாகிரிக்கிடையே குடும்ப வாழ்க்கை பற்றிப் பேரம் பேச அவள் தயங்கினாள். 

அவன் முத்தமிடும்போது, தானும் உணர்ச்சிப் பெருக்கைப் பரிமாறிக் கொண்டாள். 

எவ்வளவோ தாய் போதித்திருந்தும் அந்த சாகஸங்களை எல்லாம் அவள் காட்டிக் கொள்ளவில்லை. 

எந்த அம்பிகையின் சக்தியோ, ஒரு குடும்பப் பெண்ணின் உணர்வுகளே அவள் உள்ளத்தில் மேலோங்கி நின்றன. 

நவகோடி அதை ரசித்தான்.


முதற்சாந்தி நிறைவேறியது. அபரஞ்சி, ஆடையை ஒழுங்குபடுத்திக்கொண்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு திரும்பினாள். 

திரும்பி வந்து அவள் கட்டிலில் அமர்த்ததும், அவன் அவளது அழகை வியந்து பேச ஆரம்பித்தான். 

இலக்கியத்தில் ‘கலவி நயத்தல்’ என்று ஒன்று வரும்.

அது ஆடவனது திறமையைத் தாசி புகழ்வதாகவே இருக்கும். 

ஆனால், இங்கே நிலைமை தலைகீழாகவே இருந்தது.

எல்லாப் புகழ்ச்சியும் முடிந்த பிறகு, அபரஞ்சி மெதுவாக ஆரம்பித்தாள். 

பெரும் பொருள் சேர்ப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை, முதலில் தெளிவுபடுத்தினாள். 

முடிந்தால் தான் ஒரு மாதவியாகவோ, வெறுப்புற்றால் மணிமேகலையாகவோ வாழ விரும்பியதாகவும், மாதவி வாழ்க்கைக்கே சந்தர்ப்பம் வாய்த்திருப்பதாகவும் அவள் கூறியது அவனுக்கும் புரிந்தது. 

மாதவியின் காதலைப் பெற்ற, கோவலனும் ஒரு வணிகன் தானே? 

முற்ற முழுக்க அவளையே தனது மனைவியாக ஏற்றுக் கொள்வதில், தனக்கு இருக்கும் பெரும் விருப்பத்தையும் அவன் தெளிவுபடுத்தினான். 

“பளிங்கு போன்ற இந்த உடம்பும், பால் போன்ற இந்த மனமும், எனக்குக் கிடைக்குமானால், நான் பல ஜென்மங்களில் அனுபவிக்க வேண்டிய சுகத்தை, இந்த ஒரு ஜென்மத்திலேயே அனுபவித்து விடுவேன்” என்றான். 

“இந்த ஒரு ஜென்மத்தை நான் ஒழுங்காக ஈடேற்றி விட்டால், அடுத்த ஜென்மத்தில் உத்தமப் பெண்ணாகவே பிறப்பேன்” என்றாள் அவள். 

அப்போதே உரிமை உணர்ச்சி வளரத் தொடங்கிற்று.

அவளை இறுகக் கட்டிப்பிடித்து, ஆரத் தழுவி, உச்சி முகந்தான் நவகோடி. 

ஒரு மனைவியின் முனகலோடு ஈடுகொடுத்தாள் அவள். 

இருவரும் கூந்தலைக் கோதிவிட்டுக்கொண்ட சுகம், நீண்ட நாள் நேசித்த காதலர்கள் ஒன்று சேர்ந்தது போல் தோன்றிற்று. 

அந்த இரவில் அவனுக்கு மீண்டும் மீண்டும் தாகம் எடுத்தது; அவளும் பால் பழம் கொடுத்தாள். 

உடம்பில் வலியும் அசதியும் ஏற்பட்டதைக்கூட அவள் பொருட்படுத்தனில்லை. 

காலையில் அவனைக் குளிக்க வைத்தாள், தானும் குளித்தாள். 

இடைவெளியில்லாமல் அவன் வந்து போக வேண்டுமென்று, இருவருக்குள்ளும் முடிவாயிற்று. 

சிங்காரவடிவுக்குத் தேவை பொன்னும் பொருளும் தானே? அதை ஒருவனே கொடுத்தால் என்ன; பலபேர் கொடுத்தாலென்ன? 

அவன் பொன்னைக் கொடுத்தான்; அவள் பெண்ணைக் கொடுத்தாள். 

வணிகள் தொழிலைக் கவனிக்காமல் தாசி வீட்டிலேயே இருந்தால் வாணிபம் என்னவாகும்? 

அங்காடியில் எல்லாக் கடைகளையும் விடத் தலை தூக்கி நின்ற நவகோடியின் கடை தேய ஆரம்பித்தது.

‘அவனைப் பார்க்க முடியாது’ என்போரும், ‘வரவர அவனிடம் முத்துக்கள் சரியாக இல்லை’ என்போரும். பெருகத் தலைப்பட்டார்கள். 

அவனிடம் வாங்கிக்கொண்டு போய் விற்போர் கூட வரவில்லை. அவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. 

‘ஒன்பது மணிகளையும் ஒன்றாக வைத்துப்பார்ப்பதை விட, அபரஞ்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் போதும்’ என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். 

அபரஞ்சியோ, ‘அவன் வருவது எப்போது?’ என்று எதிர்பார்த்தாளே தவிர, ‘கொடுப்பது எவ்வளவு?’ என்று கணக்குக் கேட்கவில்லை. 

ஆனால், மகள் கேட்காமல் இருந்தாலும் தாய் கேட்காமல் இருப்பாளா? 

”என்ன தம்பி! வரவர நீங்கள் தாம்பூலம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்?” என்று ஒருநாள் கேட்டே விட்டாள், சிங்கார வடிவு. 

கள்ளங் கபடமற்ற நவகோடி கல்யாணமாகாதவன். 

“எனக்கு வேறு யார் இருக்கிறார்கள் அத்தை? வர வருமானம் குறைந்து விட்டது. அது தான்….!”  என்று இழுத்தான். 

சிங்கார வடிவுக்குப் பரம்பரை தாசிகளின் குணம் வந்து விட்டது. 

‘எவ்வளவோ பெருந்தனக்காரர்கள் காத்துக் கிடக்கும் போது இன்னும் இந்த சனியனோடு மாரடிப்பானேன்?’ என்று எண்ண ஆரம்பித்தாள். 

அது பற்றி அபரஞ்சியிடம் கூறவில்லை. நவகோடியிடமும் கூறவில்லை. 

அது மார்கழி மாதம்.

மறுநாள் பகலில் சூரியன் உச்சியில் இருந்த போது, கந்தர்வ கோட்டை நிலக்கிழார் ஆளப்பிறந்தார். வண்டி கட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்குக் காவலாக இரண்டு குதிரை வீரர்கள் கூடப் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள். 

வருகின்ற ஆடவனின் வயதை எந்த தாரி கவனித்தாள்? 

இரண்டாயிரம் வராகனை கையில் வாங்கிக்கொண்டு மாடத்துக்கு வழிகாட்டினாள் சிங்காரவடிவு. 

அவரும் மாடத்திலே ஏறி அங்கிருந்த கூடத்திற்குள் நுழைந்து மஞ்சத்திலே அமர்ந்து பஞ்சவர்ணக்கிளியை எதிர்பார்த்தார். 

“வாருங்கள் தாத்தா! எப்போது வந்தீர்கள்?” என்றபடி சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள் அபரஞ்சி. 

வேடிக்கை பேசினாள். வெற்றியை கொடுத்தாள். “இந்த இரண்டாயிரம் வராகனுக்கு எவ்வளவோ நிலம் வாங்கலாமே?” என்றாள். 

“நிலம் என்னிடம் இருக்கிறது” என்றார் பெரியவர். 

“அப்படியென்றால் மாடு வாங்கலாமே?” என்றாள்.

கிழவர் சும்மாயிருப்பாரா! “அது வாங்கத்தான் இங்கே வந்தேன்” என்றார்.

“கீழே என் சின்னம்மா இருக்கிறாள், நல்ல கனமா இருப்பாள். அழைத்து வரட்டுமா?” என்றாள் அபரஞ்சி.

“சீ! சீ! பேசாமல் வா இங்கே” என்று அவளது கையைப் பிடித்தார் நிலக்கிழார்,

“அது நடக்காது. அந்தச் சிதப்பரத்து நாயகனே வந்தாலும் கூட என் கணவரைத் தவிர வேறொருவர் என்னைத் தொட முடியாது” என்று கூறிவிட்டாள் அபரஞ்சி. 

ஆத்திரத்தோடு கீழே இறங்கினார் நிலக்கிழார்.

அள்ளி அள்ளி வைத்துப் பெட்டகத்தைப் பூட்டுவதில் ஈடுபட்டிருந்தாள் சிங்கார வடிவு. 

பெரியவரைக் கண்டதும், “என்ன அதற்குள் வந்து விட்டீர்கள்? எல்லாம் திருப்திதானே?” என்றாள்.

“மரியாதையாக வராகனைக் கொடு, பெண்ணையா பெற்றிருக்கிறாய். பேய் அது. அவளுக்கு, யாரோ கணவன் இருக்கிறானாம். அவன் தான் தொடுவானாம். என்னை ஏமாற்றுவதற்கா வரச் சொன்னாய்?” என்று சீறினார் பெரியவர். 

சிங்காரவடிவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நவகோடிக்கும், அபரஞ்சிக்கும் ஒரு இணைப்பு ஏற்பட்டிருந்தது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. 

அபரஞ்சி நவகோடியைப் பற்றிப் பேசியதெல்லாம் ‘கெட்டிக்காரத்தனமான சாகஸம்’ என்றே கருதிய சிங்காரவடிவு இது காதல் என்று கேட்டதும் குதித்தாள். 

“அப்படியா சொன்னாள்? நான் பார்த்து விடுறேன்” என்று மாடத்துக்குப் போக முயன்றாள் சிங்கார வடிவு. 

“அம்மையும் மகளும் ஏதோ பேசிக் கொள்ளுங்கள், முதலில், என் வராகனைக் கொடுங்கள்” என்று கையை நீட்டினார் நிலக்கிழார்.

பொன் முடிப்பைத் தூக்கி அவர் கையில் ‘டக்’கென்று கொடுத்துவிட்டு, மாடத்துக்குச் சென்றாள் சிங்காரவடிவு.

அங்கே நவகோடியின் ஓவியத்தைப் பார்த்தாள் அபரஞ்சி.

தாய் சித்ராவதியானாள்; மகள் மாதவியாகவே ஆகி விட்டாள். 

கடுமையான வாக்கு வாதத்திலும் அபரஞ்சி சளைக்க வில்லை. 

“இது ஒருவனுக்குப் போட்ட முந்தானை” என்று முந்தானையைக் காட்டினாள். 

“இன்னொருவனுக்குப் போட வைக்கிறேன்” என்று சபதம் செய்தாள் சிங்காரவடிவு. 

அரண்மனையிலிருந்து ஆள் வந்து கீழே நிற்பதாகச் செய்தி வந்தது. இறங்கிச் சென்றாள் சிங்காரவடிவு.

காவிரிக் கரையில் சோழமன்னர் தனியாக இருக்கிறாராம். அபரஞ்சியை அழைத்து வரும்படி ஆள் அனுப்பி யிருக்கிறார். 

15. மத்யமாவதி

“மிகவும் நல்லது. நான் நினைத்தது பலித்தது” என்று துள்ளிக் குதித்தாள், சிங்காரவடிவு. 

“போடி, போ! மன்னவரே அழைக்கிறார். இந்த வக்கு வகை இல்லாத வணிகனுக்காக ஏங்குகிறாயே? நீயும் ஒரு தாசி மகளா? கொட்டிக் கொடுக்கக் கோடி நாயகர்கள் இருக்கும் போது, கட்டிக் கிடக்க இந்தக் கழுதைதான் வாய்த்ததா? வேறு யார் கிடைந்தாலும் நீ ஏமாற்றி விடுவாய்? நான் வணங்கிய தெய்வத்தின் வரம். மன்னர் பெருமானே அழைத்திருக்கிறார். ராஜகோபத்திற்கு ஆளாகாதே! பேசாமல் அலங்காரம் செய்து கொண்டு புறப்படு!” என்று உத்தரவிட்டுவிட்டுக் கீழே இறங்கிப் போய் விட்டாள் சிங்காரவடிவு. 

வழியறியாத பேதையர் வழக்கம் போல், கட்டிலில் படுத்துக்கொண்டு அழுதாள் அபரஞ்சி. 

கையே தலையணையாய்க் கண்ணீரைச் சிந்தினாள். கண்ணீர் முத்துக்கள் கை வளையலை நனைத்தன.

உணர்ச்சிமிக்க உள்ளத்திலிருந்து கசிந்த ஈரம், கற்புள்ளவர்கள் எந்த ஜாதியிலும் பிறப்பார்கள் என்பதைக் காட்டிற்று. 

கீழே சென்ற சிங்காரவடிவு சோழ மன்னரின் சேவகர்களைப் பார்த்து, “நவகோடி என்ற வணிகள் வருவான். அவனை உள்ளே அனுமதிக்காதீர்கள். இனி அவள் அரசரின் சொத்து” என்று கூறிவிட்டாள்.

சேவகர்களும் வழியை அடைத்துக்கொண்டு நின்றார்கள். 

மாடத்தில் நாயகளை எதிர்பார்த்த அபரஞ்சி – கூடத்தில் அவன் இனி வருவாளா என்று கருதிய அன்னை – வாசலில் காவல் காக்க அரசாங்கச் சேவகர்கள். 

சொக்குப் பொடி என்பார்களே! அதில் சிக்கி கொண்டவன் போல், ஒரு நாளைக்கு நான்கு முறை வரும் நவகோடி, அந்த நேரமும் வந்து சேர்ந்தான். 

“இதோ பார். இனி நீ இங்கே வரவேண்டாம். இன்று முதல் அபரஞ்சி அரசரின் உடைமை. உயிரின் மீது ஆசை இருந்தால் உடனேயே போய்விடு” என்றான் ஒரு சேவகன். 

“எனக்கு இப்போதெல்லாம் உயிரின் மீது ஆசை இல்லை: அபரஞ்சியின் மீதுதான்” என்று உறுதியாகச் சொன்னான் நவகோடி. 

”அபரஞ்சியும் கிடைக்க மாட்டாள்; நீயும் இருக்க மாட்டாய்!” என்று, வேல் கம்பை பூமியில் தட்டியபடி சிரித்தான் ஒரு சேவகன். 

உள்ளிருந்தபடி சாளரத்தின் வழியாக இதை ரசித்தாள் சிங்காரவடிவு. 

“இவனோடு வாதிடுவதில் பயனில்லை. அந்தக் குதிரையிலேயே கட்டி அவனது இல்லத்தில் விட்டு வா!” என்று ஒரு சேவகன் இன்னொரு சேவகனுக்குக் கட்டளை இட்டான். 

அவன் நவகோடியை அப்படியே ஒரு குண்டுக் கட்டாகக் கட்டி குதிரையின் மீது ஏற்றிய போது மாடத்துச் சாளரம் வழியாக கவனித்த அபரஞ்சி, மயங்கிய நிலையில் கூச்சலிட்டாள். 

யார் அவளது சத்தத்தை மதித்தார்கள்? 

கொக்கு கொத்தும் போது மீன் சத்தம் போடுகிறதா? அப்படிச் சத்தம் போட்டாலும் தாய் மீன் வந்து காப்பாற்றப் போகிறதா? 

பெண்மை பிறருக்குப் பயன்படும் பொருளாகவே கருதப்பட்ட காலத்தில், பெண்ணின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பேது? 

மகளை தாயே விலை பேசும்போது நல்ல விலை கிடைத்தால் மகள் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? 

அபரஞ்சியின் சின்னம்மையும், மற்றும் மூன்று தோழியரும் அவளைத் தூக்கி நிறுத்திக் குளிப்பாட்டினார்கள். 

ஜீவனற்ற சடலம் போல் சம்மதித்தாள் அபரஞ்சி. 

அவர்களே சேலை கட்டிவிட்டார்கள். கச்சு கட்டி விட்டார்கள். அலங்காரமும் செய்து வைத்தார்கள். 

ஒரு சவத்துக்கான கடைசிச் சடங்கு போலவே தான் அந்தக் காட்சி தோன்றிற்று. 

இவ்வளவுக் கிடையிலும் உள்ளத்துக்குள்ளேயே ஒரு சபதம் ஏற்றாள் அபரஞ்சி. 

என்ன ஆயினும் சரி. அரசருக்கும் சம்மதிப்பதில்லை என்பதே அது. 


ரதம் வந்திருந்தது. கூடவே ஒரு பல்லக்கும் வந்திருந்தது. ‘எதில் வர ஆசையோ அதிலேயே வரலாம்’ என்றாராம் மன்னவர். 

“பல்லக்குத்தான் நல்லது. ஏனென்றால் கடைசிப் பயணம் அதில்தானே நடைபெறப் போகிறது” என்று சிரித்தாள் அபரஞ்சி. 

“தெரியுமடி உன் வேதாந்தம்! புறப்படு” என்று அதட்டினாள் தாய். 

“வராகளை வரவு வைக்க நீயும் வரவில்லையா அம்மா?” என்று தாயைப் பார்த்து கேலி செய்தாள் மகள். 

”வரவேண்டியது வீடு வந்து சேரும். அது பற்றி உனக்கென்ன கவலை?” என்றாள் தாய். 

“ஆமாம் வரவு வைப்பது உன் கணக்கில் தானே?” என்றபடி பல்லக்கில் ஏறினாள் அபரஞ்சி. 

சின்னம்மையும் தோழிகளும் ரதத்தில் ஏறிக் கொண்டார்கள். 

ரதம் சோலையைக் கடந்தபோது எங்கிருந்தோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் பாடினான். 

”நதி அழுவதின் பெயர்தான் தண்ணீர், அந்தத் தண்ணீரும் அழ விரும்பினால் என்ன செய்வது? எந்த வடிவத்தில் கண்ணீர் விடுவது? 

இறைவன் கண்ணை மூடிக்கொள்ளும் போது உனது தருமங்கள் செல்லுபடியாகாமல் போகலாம்; நீ அழுகின்ற ஓசை அவன் காதில் விழுந்தால் தானே அவன் கண்ணை விழிப்பதற்கு? 

ஒரே ஊருக்கு இரண்டு பாதைகள் இருந்தாலும் வழி காட்டுகிறவன் அழைத்துச் செல்லும் பாதையில் தானே நீ போக வேண்டி இருக்கிறது?. 

இறைவன் பல்லக்கை விட்டு இறங்கும் போதுதான் நீ பல்லக்கில் ஏறுகிறாய் என்பதை மறந்து விடாதே?” 

இந்தப் பாடல் அபரஞ்சிக்குப் பாடலாகத் தோன்ற வில்லை. அவள் பக்கத்தில் நின்று யாரோ அவளைப் பற்றியே பாடுவதாகத் தோன்றிற்று. 

நாலு பேர் சுமந்துவர அபரஞ்சியின் பல்லக்கு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தது. 

மாலை மயங்கிய நேரம். காவிரி ஆற்றுக்கு நிலவு மெருகு போட்டுக் கொண்டிருந்தது. 

கரை ஓரத்தில் ஏராளமான தீப்பந்தங்கள் தெரிந்தன.

இரவு நேரத்திலும் அங்கே குளித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். 

சரஸமாடிக் கொண்டிருந்த கணவன் மனைவியரையும் கண்டாள் அபரஞ்சி. 

‘உலகத்தில் தன்னைவிட எல்லோருமே அதிருஷ்டக்காரர்கள்’ என்பதுபோல் அவளுக்குத் தோன்றிற்று. 

மனிதர்கள் கண்ணாடி பார்க்கும் போது மற்றவர்கள் முகம் தானே சிரித்த முகமாகத் தெரிகிறது! 

காவிரியின் வட கரையில் பல்லக்குப் போயிற்று.

குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. 

தூரத்தில் அரசர் இறங்கி இருக்கும் இடம் அவள் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது. ஒரே இடத்தில் குவியலாகத் தீப்பந்தங்கள் தெரிந்தன. சுற்றிலும் கண்ணாடி போடப்பட்ட அகல் விளக்குகளும் தெரிந்தன. 

அதுவே தனது பலிபீடம் என்பதை உணர்ந்தவள் போலவே அவள் போய்க் கொண்டிருந்தாள். 

‘அரசரை எப்படிச் சமாளிப்பது? முடியவில்லை என்றால் என்ன செய்வது?’ இவையே அவள் முன்பிருந்த கேள்விகள். 

‘அரசர் எப்போதும் வாளோடுதானே இருப்பார். தன்னைத் தீண்டினால் ஒரு குத்தீட்டியினால் தன்னை மாய்த்துக் கொள்வது’ என்று முடிவு கட்டினாள் அபரஞ்சி.

புதிய வேகம் எப்போதும் அசுரவேகமாகத்தான் இருக்கும். தளர்ச்சியுறும் போதுதான் தத்துவ ஞானம் பிறக்கும். நன்றாகச் சிந்தித்து முடிந்த பிறகு ஒரு நிர்மலமான மனோபாலம் தோன்றும். 

அந்த மனோபாவம் இப்பொழுது அவளை ஆட் கொண்டது. 

கூடாரத்தை நெருங்க நெருங்க அவன் தன் அலங்காரத்தைக் கலைத்துவிட்டுக் கொண்டாள். நெற்றியில் இருந்த சாந்துப் பொட்டை அழித்தாள். ஒரு விதவையைப் போல தன்னை உருமாற்றிக் கொண்டாள். 

பல்லக்கு இறக்கப்பட்டது. 

ஓவியங்கள் வரையப் பெற்ற ஒரு கூடாரத்திற்குள் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். ஒரு ஆசனத்தில் அவள் உட்கார வைக்கப்பட்டாள். 

தனது முடிவு காலம் நெருங்கி விட்டதாகவே எண்ணத் தலைப்பட்டாள். 

நவகோடியோடு வாழ்ந்த காலங்களை நினைவு படுத்திக் கொண்டாள். 

சமயபுரம் கோவிலுக்குச் சென்றது. அங்கே திரு அரங்கத்தில் நடனமாடியது. உறந்தையில் இருந்த துர்க்கை கோவிலில் ஒரு நூறு தேங்காய்கள் உடைத்தது, காலா காலங்களுக்குத் தங்களை கணவன் மனைவியராக வைத்திருக்கும்படி வேண்டியது; நவகோடியோடு அனுபவித்த அந்த இரவுகள் – அந்த உறவுகள்- 

அவள் சிந்தனையைக் கலைத்தது. திரையை விலக்கிக்கொண்டு வந்த இளவரசனின் வருகை. 

அழைத்தாகச் சொல்லப்பட்டதோ மன்னவர் பெயர், அங்கிருந்ததோ இளவரசர். அதிலும் நிதானமற்ற நிலை.

நவகோடியை ஒரு நாளும் அவள் அந்த வடிவத்தில் கண்டதில்லையே? 

இளவரசன் நிதானமற்றவனாக இருந்தாலும், முரட்டுத் தனம் அவனிடம் இல்லை. நாக்குத் தடுமாறியதே. தவிர, மரியாதையாகத்தான் இருந்தது. 

“ஏதோ சோழ நாட்டிலேயே நீ தான் பேரழகி என்கிறார்கள். பார்க்கலாமே என்றுதான் அழைத்தேன். இல்லையென்றால் ஒரு தாசிப் பெண்ணை சேவகர்கள் அறியும்படி கூடாரத்திற்குள் அழைத்திருக்க மாட்டேன். அரண்மனையில் ஆயிரம் அடைக்கலப் பெண்கள் இருக்கிறார்கள். இதென்ன அபூர்வ அழகு என்று பார்க்கவே அழைத்தேன். நீ நன்றாகத்தான் இருக்கிறாய்! என்னைச் சந்தித்ததில், உனக்குத்தான் நல்லகாலம்! என்னைத் தொடுவது அந்தக் காளத்திநாதனைத் தொடுவது போல!” என்று தள்ளாடினான் இளவரசன். 

”இளவரசே! உயிர்களுக்கெல்லாம் தந்தையே! இங்கே உங்கள் மகளாகவே நான் வந்திருக்கிறேன். மனைவியாக அல்ல. குலம் காக்கும் சோழ வம்சத்தில் தோன்றிய நீங்கள் எனது குணம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் கூப்பிட்டதும் வந்து விட்டேன். நான் தாசி மகள் தான். ஆனால் நேசித்தவனைத் தவிர வேறு ஒருவனை நினைத்தும் பார்க்காதவள். யாசித்தோ விரட்டியோ யாரும் என் காதலைப் பெறமுடியவில்லையே என்பதை, உறந்தை நகர் நன்றாக அறியும், கோழியூர் காக்கும் கோவே! தங்களை நான் மறுத்தேனில்லை; வெறுத்தே னில்லை. என் வாழ்க்கையின் நோக்கங்களையே கூறினேன். என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள்” என்றாள் அபரஞ்சி. 

இளவரசன் ஓங்கிச் சிரித்துவிட்டான்.

“நான் உன்னை விரும்புவது விரும்பாதது இருக்கட்டும். ஆனால் ஒரு தாசிப் பெண் எவ்வளவு அழகாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாய்? பேசி மயக்குவதில் தாசி குடும்பங்களில் உள்ள சக்தியை இப்போதுதான் பார்க்கிறேன். அப்படித்தான் நீ யாரை நேசிக்கிறாய்?” என்று கேட்டான் இளவரசன். 

நம்பிக்கை வரப் பெற்றவளாக முழு விவரங்களையும் சொல்லிவிட்டாள் அபரஞ்சி. 

“ஓகோ! அவனா..! அந்த நவகோடி என்னை விட அழகன் என்று இன்னொரு பெண் கூட என்னிடம் சொல்லி விட்டாள். அவனது அழகையும் நான் பார்த்தாக வேண்டும். சோழ நாட்டில் என்னைவிட ஒரு அறிவாளியோ அழகனோ இருந்தால் அவனை நான் சந்திக்காமல் இருக்கலாமா?..” என்று கை திட்டிக் காவலரை அழைத்தான், இளவரசன். 

“நவமணி வணிகன் நவகோடியை உரிய மரியாதையோடு அழைத்து வாருங்கள்”என்று கட்டளையிட்டான்.

‘உரிய மரியாதை’ என்பதற்கு அவனிடம் வேறொரு அர்த்தம் உண்டு. 

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *