பொன்னாடை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 8,540 
 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் செய்தித்தாளை எடுத்து ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடினேன். என் வயதையொத்த வாலிபர்களெல்லாம் ‘இன்றைய சினிமா” பகுதிக்குள் நுழைந்து, ‘என்ன படத்திற்குப் போகலாம்?…எந்தத் தியேட்டருக்குப் போகலாம்?‘ என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நான் மட்டும் ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடுவதற்கு முதல் காரணம் என் இலக்கிய ஆர்வம்.

இது சம்பந்தமான ஒரு உண்மையை இப்போதே சொல்லி விடுகிறேன். நான் ஒரு படைப்பாளியோ…சிந்தனாவாதியோ…எழுத்தாளனோ…கவிஞனோ..அல்ல!…ஒரு ரசிகன்…வெறும்..சாதாரண ரசிகன்….அவ்வளவுதான்.

அதனால்தான் ஞாயிற்றுக் கிழமைகளில் நகரில் எங்காவது, ஏதாவது இலக்கிய நிகழ்ச்சி நடக்கிறதா என்பதைத் தேடிப்பிடித்து தவறாது சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் இன்று என் புரோக்ராம் ‘தாமஸ் கிளப்‘பில் நடைபெறும் ‘வசந்த வனம் கவி மன்றம்‘ நடத்தும் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம். பத்து மணி நிகழ்விற்கு 9.50க்கே சென்று விட்டேன்.

சொற்ப ஆட்களே குழுமியிருக்க எனக்குள் வழக்கமாக வரும் எரிச்சல் வந்தது. ‘ஹூம்….இலக்கியக் கூட்டம்னா காத தூரம் ஓடுவானுக…இதுவே ஒரு கவர்ச்சி நடிகையோட டான்ஸூன்னு போட்டிருக்கட்டும்….நேத்திக்கு ராத்திரியே வந்து துண்டு போட்டு எடம் பிடிச்சு உட்கார்ந்திருப்பானுக!”

சரியாகப் பத்தரை மணிக்குக் கூட்டம் துவங்கியது. முதல் நிகழ்ச்சியாகக் கருத்தரங்கம். பேசியவர்களில் முக்கால்வாசிப் பேர் மூத்த தலைமுறையினர். அனுபவஸ்தர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களையே சுவை படப் பேசி, அதன் மூலம் ஒரு நல்ல கருத்தைப் பதிவு செய்து விட்டுச் சென்றனர்.

அடுத்துத் துவங்கியது கவியரங்கம். கல்லூரி மாணவர்களும்… இளம் வயதினருமே அதிகமாக வந்து கவிதை வாசித்து விட்டுச் சென்றனர். காதல் கவிதைகளே அதிகமாய் இடம் பெற்றிருக்க, ஒன்றிரண்டு சமுதாயச் சாடல் கவிதைகளும், அரிதாய்ச் சில நவீன கவிதைகளும் வந்து போயின.

இறுதியில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் மூத்த அறிஞர்கள் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தப் பட, மற்றவர்களுக்குப் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

அப்போது, மேடையின் இடது புறம் ‘கச…கச‘வெனச் சப்தம் வர, எட்டிப் பார்த்தேன். கருத்தரங்கில் பேசிய ஒரு பெரியவர் தனக்குப் பொன்னாடை போர்த்தப் படாததற்காய்க் கத்திக் கொண்டிருந்தார்.

‘அதென்ன…அந்த மூன்று பேர்களுக்கு மட்டும் பொன்னாடை…ஏன் நாங்கெல்லாம் பேசவில்லையா?…நாங்கெல்லாம் தமிழறிஞர்களில்லையா?”

‘ப்ச்…அய்யா…விடுங்க அய்யா…ஒரு பொன்னாடைக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணனுமா?’ யாரோ ஒரு ஒல்லி இளைஞன் அந்தப் பெரியவரைச் சமாதானம் செய்ய முயல,

‘ம்ஹூம்…நான் ஒத்துக்கவே மாட்டேன்…எனக்குப் பொன்னாடை போர்த்தியே ஆகணும்…” கறாராய்ப் பேசிய அந்த மூத்தவரைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது எனக்கு,

‘ச்சை….என்ன பெரிய மனுசன் இவன்?…பொன்னாடை இல்லாமலா இருக்கும் இவன் வீட்டுல?…எத்தனை விழாக்களுக்குப் போயிருப்பான். எத்தனைப் பொன்னாடைகள் வாங்கியிருப்பான்… அப்படியும் இவனோட தரித்திரம் தீரலையோ?”

நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரோ ஒருவரை அனுப்பி, ஞாயிற்றுக் கிழமை நாளிலும் திறந்திருக்கும் ஒரு கடையைக் கண்டு பிடித்து, பொன்னாடையை வாங்கிக் கொண்டு வந்து அந்த மனுசனுக்குப்?…போர்த்தி விட்டனர்.

அது போர்த்தப்படும் போது கை தட்டியவர்களில் பலர் எரிச்சலில்தான் தட்டியிருப்பர். ‘இவனெல்லாம் தமிழறிஞராம்…த்தூ…பொறம் போக்கு”

நிகழ்ச்சி முடியும் போது மதியம் மூன்றாகி விட்டது. இனிமே பஸ் பிடித்து வீட்டிற்குப் போய்ச் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிடும், அது வரை பசி தாங்க முடியாதென்பதால் என் பட்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரியான ஒரு மெஸ்ஸைத் தேடி நடந்தேன்.

‘கலைவாணி மெஸ்” என்ற மட்கிப் போன போர்டு கண்ணில் பட, ‘கரெக்ட்…இதுதான் நம்ம ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்….”

உள்ளே நுழைந்து சாப்பாடு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த போதுதான் கவனித்தேன். பொன்னாடைக்கு மல்லுக் கட்டிய அந்தத் தமிழறிஞர் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மடியில் அந்தப் பொன்னாடை மடித்து வைக்கப்பட்டிருந்தது.

மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன். ‘ஹூம்…இப்படியும் சில ஜென்மங்கள்”

உணவருந்தி முடித்ததும் வெளியே வந்து, பக்கத்துப் பெட்டிக் கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். என்னைப் போலவே பலர் அங்கு நின்று புகைத்துக் கொண்டிருந்தனர். அந்தப் புகை ஆசாமிகள் அனைவரின் பார்வையும் ஒரே திசையில் வெறித்துக் கிடக்க,

‘அப்படி என்னத்தை இப்படி வெறிச்சுப் பார்த்துட்டிருக்கானுக?’ யோசனையுடன் நானும் என் பார்வையை அந்த இலக்கை நோக்கிச் செலுத்தி….மாபெரும் அதிர்வு வாங்கினேன்.

அங்கே!…

ஒரு இள வயது பைத்தியக்காரி பட்டன்கள் தொலைந்து போன தன் மேலாடை மறைக்க வேண்டியவற்றை மறைக்காமல் அங்கொரு கண்காட்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பதைச் சிறிதும் அறியாதவளாய், குப்பைத் தொட்டி நாயுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

நான் என் சக சிகரெட் உறிஞ்சிகளை மீண்டுமொரு முறை உற்றுப் பார்த்தேன். வேக வேகமாக உறிஞ்சி…வேக வேகமாக புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

‘அடப் பாவிகளா… இப்படித் துளிக்கூட விவஸ்தையில்லாமப் பார்த்துட்டிருக்கீங்களே… நீங்களும் தாய் மார்பில் பாலருந்திய ஜென்மங்கள்தானே?” உள்ளுக்குள் திட்டித் தீர்த்தபடியே அந்தப் பைத்தியக்காரியை நான் திரும்பிப் பார்த்த போது….!

பொன்னாடைக்காகப் போராட்டம் நடத்தி என் மாபெரும் வெறுப்பைச் சம்பாதித்திருந்த அந்தத் தமிழறிஞர் தன் கையிலிருந்த அந்தப் பொன்னாடையைப் பைத்தியக்காரிக்குப் போர்த்தி விட்டு, ‘த பாரு… இதை எடுக்கக் கூடாது… இது உனக்குத்தான்… பத்திரமா வெச்சுக்க… என்ன?…வெச்சுக்குவியா?”

அது சிரித்தபடியே பளபளப்பாள அந்தப் பொன்னாடையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ரசித்து விட்டு, ‘ஹைய்யா… எனக்குப் புதுத் துணி வாங்கியாச்சு” என்றவாறு அதை இறுகப் பிடித்துக் கொண்டது.

மெலிதாய்ப் புன்னகைத்தவாறே அந்தத் தமிழறிஞர் நடை போட அந்தப் புன்னகை ஒரு தெய்வீகப் புன்னகையாகவும், அந்த நடை ஒரு ராஜ நடையாகவும் தெரிந்தது எனக்கு.

Print Friendly, PDF & Email

1 thought on “பொன்னாடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *