செல்லாத நோட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 991 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமுக்கப்பட்ட நியாய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்யும் சம்பவமொன்றை அடிப்படையாக

வைத்துக் கதையொன்றைப் பின்னவேண்டு மென்று முனைந்த சமயத்தில் ஞாபகமறதிக்குப் பேர் பெற்ற என் நண்பர் நாடிமுத்து வந்து சேர்ந்தார்.

“ஓகோ! நாராயணசாமி வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இங்கேவந்து விட்டேனா?” என்று தமதுஞாபக மறதித் திறமையை வந்ததும் வராததுமாகப் புலப்படுத்திவிட்டு, “ஓய்! உம்மிடம் நான்கு மாதத்திற்கு முன்பு கைமாற்றாக வாங்கிய ஐந்து வெள்ளியைத் திருப்பித்தர மறந்தே போய்விட்டேன். இந்தாரும்.” என்று தமது சட்டைப் பைக்குள் கைவிட்டு, ஐந்து வெள்ளி நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார் நாடிமுத்து.

எப்பொழுது இவருக்கு ஐந்து வெள்ளி கொடுத் தோம் என்பது எனக்கு ஞாபகமில்லை. நாடிமுத்துவின் நண்பனல்லவா நான்? என்றாலும் வலியவரும் “லட்சுமியை” வேண்டாமென்று மறுக்கவும் மனம் வரவில்லை. வாங்கிக்கொள்ளவும் மனச்சாட்சி இடந்தரவில்லை. இந்த மனக் குழப்பத்தில் நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் போனதும் தெரியவில்லை. வேறு வழியின்றி வெள்ளியை என் மணிபர்சுக்குள் வைத்துக்கொண்டேன்.

பிறகு, கதை எழுத முனைந்தேன். ஒன்றும் ஓட வில்லை. சிந்தித்துச் சிந்தித்துத் தலையும் வலிக்கத் தொடங்கிவிட்டது; கடற்கரைவரை போய் வந்தால் தான் தலைவலி தீரும்போல் தோன்றியது. உடனே புறப்பட்டுவிட்டேன்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், வழக்கம்போல் கண்டக்டர், “டிக்கெட் எங்கே வெட்டவேண்டு” மென்று கேட்டு, காசு கேட்டார். என் துர்அதிர்ஷ்டம் என் நண்பர் நாடிமுத்து கொடுத்த ஐந்து வெள்ளி நோட்டைத் தவிர வேறு ஓர் ஐந்து காசுகூட இல்லை.

அதற்கென்ன, நோட்டை மாற்றினால் போகிறது என்று நோட்டைக் கொடுத்து இருபது காசு டிக்கெட் வெட்டச் சொன்னேன். கண்டக்டர் நோட்டை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். சடாரென்று அவர் முகம் மாறுபட்டது.

“என்ன ஐயா இது? செல்லாத நோட்டைக் கொடுக்கிறீர்! இது செல்லாது. வேறு சில்லறை இருந்தால் கொடும்.” என்று கடுமையாகக் கூறிவிட்டுத் திருப்பித் தந்தார் அந்த நோட்டை.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. வாங்கிப் பார்த்தேன். நீர் எழுத்து இல்லாத செல்லாத நோட்டு! அத்துடன் அதன் பின் பக்கத்தில் சிவப்பு மையால் “இது என் காதற்பரிசு” என்று யாரோ கோமளம் என்ற பெண் கையெழுத்தும் போட்டிருந்தாள்! விழித்தேன். இதை என் பக்கத்திலிருந்த சில சக பிரயாணிகள் வேடிக்கையாகக் கவனித்தார்களேயன்றி ஒருவராவது எனக்காக இரக்கப்பட்டு ஒரு இருபது காசு கொடுக்க முன்வந்தாரில்லை. என்னை ஓர் ஏமாற்றுக்காரனென்றோ கருமியென்றோ அவர்கள் தீர்மானித்திருக்கலாம். தலையிறக்கத்துடன் பஸ்ஸிலிருந்து இறங்கிவிட்டேன். என்கூடவே ஓர் இளம் பெண்ணும் இறங்கினாள்.

கடற்கரைப் பயணம் இவ்வாறு தோல்வியுற்றதால் வீட்டுக்கே திரும்பிச்செல்ல எத்தனித்தேன். அப்போது தான் அந்தப்பெண் என் அருகில் வந்து, “ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்.” என்றாள்.

ஓர் இளம் பெண் வலிய என்னுடன் பேசியது என் ஆயுட்காலத்திலேயே இதுதான் முதல் தடவை. வாயெல்லாம் பல்லாக விழித்த கண் விழித்தபடி அவளையே நோக்கிச் சிலையானேன்.

காலேஜில் உயர்தரக் கல்வி பயிலும் மாணவிபோல் காணப்பட்டாள். வயது இருபதுக்குமேலிருக்காது. பே ழகியென்று கூற முடியாவிட்டாலும் அறிவின் களை சொட்டிற்று. குறும்புக்காரி என்பதை அவள் கண்கள் சொல்லின.

ஆனால் கருமமே கண்ணான அப்பெண், “ஐயா! சற்று முன்பு நீங்கள் பஸ்ஸில் இருபதுகாசு சில்லறையில்லாமல் அவமானப்பட்டது என் மனத்தை மிகவும் வருத்துகிறது. ஆனால் ஓர் இளம்பெண் முன்பின் அறியாத ஓர் ஆடவருக்குக் காசு கொடுத்து உதவினால், ஐயத்தில் ஊறிய இப்பொல்லாத உலகம் நம்மிருவருள்ளும் விபரீத உறவைக் கற்பிக்கும். இதற்கு அஞ்சியே நான் வாளாவிருந்…” என்று கூறுவதற்குள் நான் இடைமறித்து, “அது பற்றி என்ன? நான் புறப்படும்போதே முன் ஜாக்ரதையாக என் மணிப்பர்ஸைப் பார்த்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாதது என் தவறு” என்றேன்.

“உண்மையில் நீங்கள் அந்த ஐந்து வெள்ளி நோட்டைக்கூடச் சரியாகப் பார்க்கவில்லையென்பதை அறிந்து கொண்டேன்…” என்று கூறியவள், சிறிது தயக்கத்துடன், “ஐயா! அந்தச் செல்லாத நோட்டு என்னுடையது. தயவுசெய்து அதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.” என்று கெஞ்சினாள்.

இப்போது நான் அவளைப்பற்றிய கற்பனை உலகிலிருந்து முற்றாக விழித்துக்கொண்டுவிட்டேன்.

“அந்த நோட்டு உங்களுடையது என்பதற்கு ஆதாரம்?” என்று ஒரு வினாவை வீசினேன்.

“நல்லது. நான் ஆதாரம் தந்தால் கொடுத்து விடுவீர்கள் அல்லவா?” என்று பதிலுக்கு அவள் புதிரொன்றை வீசினாள்.

இவள் எங்கே சொல்லப்போகிறாள் என்ற துணிவில், “சரி” யென்று தலையசைத்தேன்.

“இந்த வார்த்தை உறுதியாக இருக்கட்டும்.” என்று ஞாபகப்படுத்திவிட்டு, “இது தங்களுக்கு நாடிமுத்து என் வரால் கொடுக்கப்பட்டது. இதில், “இது என் காதற் பரிசு” என்று எழுதி, “கோமளம்” என்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது. போதுமா?” என்றாள் அந்தக் கைகாரி.

எதிர்பாராத இந்தத் திடீர்த்தாக்குதல் என்னை ஊமையாக்கிற்று. சுதாரித்துக்கொண்டு, “ஓகோ! நீங்கள்தான் அந்தக் கோமளமோ? உங்கள் காதலர்தான் நாடிமுத்துவோ?” என்று கேட்கும்போது, அவ்வனிதையின் முகம் குங்குமம்போல் சிவந்ததைக் கண்டேன்.

அதை ரசித்துக்கொண்டே, “ஆமாம். என் நண்பர் நாடிமுத்து திரும்ப இந்த நோட்டைக் கேட்டால் நான் என்ன பதில் கூறுவது?” என்று அவளையே யோசனை கேட்டேன்.

“ஐயா! சற்றுமுன்பு அந்த நோட்டை எனக்குத் தருவதாக வாக்களித்துவிட்டு, இப்போது தங்கள் வாக்குறுதியினின்றும் பிறழ்வது தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு அழகல்ல. நாடிமுத்து பெரிய ஞாபகமறதிக்காரர். இந்த நோட்டைச் சரியாகப் பார்க்காமலேயே கொடுத்திருக்கிறார். நீங்களும் அதைப் பார்க்கவில்லை. உங்களிடம் இதைக் கொடுத்ததைக்கூட இந்நேரம் அவர் மறந்திருப்பார். மேலும், என்னிடம் இந்த நோட்டு வருவதால் அவர் மகிழ்ச்சியடைவாரே தவிர உங்களை ஒரு போதும் கோபித்துக்கொள்ளமாட்டார். என்னை நம்புங்கள்.” என்றாள் அவள்.

நான் எப்போதே அவளை நம்பிவிட்டேன். மேலும் கேள்விக்கணை தொடுப்பது அநாகரீகம் என்ற தீர்மானத்துடன் மறுபேச்சின்றி அந்த நோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். “தாங்கள். தாங்கள்” என்று மரியாதையுடன் அழைத்தாலும், “பெரியவர்” என்று நாசூக்காக கூறி என் வயோதிகத்தை நினைவூட்டியது எனக்கு என்னவோபோல் இருந்தது.

***

இந்தச் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, நாடிமுத்து எனதில்லம் வந்தார். எப்போதும் உற்சாகமும் சுறுசுறுப்பும் கலகலவென்று உரையாடும் சுபாவமும் படைத்த அவர் இந்தத் தடவை எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்டார்.

“ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? உடல்நலமில்லையா?” என்று விசாரித்தேன்.

அதற்கு அவர் நீண்ட பெருமூச்சுவிட்டு, “உடம்புக்கு என்னவந்தது? அதற்கு ஒரு கேடும் இல்லை. ஆனால் மன அமைதிதான் போய்விட்டது.” என்றார்.

“அப்படிப்பட்ட கவலை உங்களுக்கு என்ன ஏற்பட்டு விட்டது? நானாவது குடும்பத் தொல்லைகள் உள்ளவன். நீங்களோ இன்னும் திருமணமாகாத பிரமச்சாரி. உங்களுக்கு நேரும் கவலைகளெல்லாம் பெரும்பாலும் ஆசா பங்கமாகவே இருக்கும்.”

“காதலும் கவலையும் இரட்டைப்பிறவிகள் போலும். இதுவும் ஒரு காதல் சம்பந்தமான கவலை தான்.” என்று மீண்டும் பெருமூச்சுவிட்டுத் தொடர்ந் தார் நண்பர். இனி அவரை நிறுத்துவதென்பது எவரா லும் இயலாத காரியம். எனவே நான் மௌனமாகக் கேட்கலானேன். அவர் கூறலானார்:-

“நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் எனக்கு முதன் முதலில் அறிமுகமானவர் நண்பர் சுப்பராயலுதான். அதேபோல் பின்னர் எனக்குக் கிடைத்த நண்பர்களில் முதலிடத்தைப் பெறக்கூடியவரும் அவர்தான். நீர் இதைக்கேட்டு ஆயாசப்படவேண்டாம். ஒளிவு மறைவின்றிப் பேசுகிறேன். உடல் இரண்டாயினும் உயிரொன்றாகப் பழகினோம். அவருடைய ஒரே தங்கை கோமளத்தை எனக்கு மணமுடித்துவைத்து தமது குடும்பத்தில் ஒருவனாக என்னையும் ஆக்கிவிடவேண்டுமென்று துடியாய்த் துடித்தார் சுப்பராயலு. கோமளமும் என்மீது உள்ளன்பு கொண்டிருப்பதைப் பல வகைகளில் புலப்படுத்தினாள்.

“ஒருநாள் ஐந்து வெள்ளி செல்லாத நோட்டொன்றைத் தன் கைப்பையினின்றும் எடுத்து, அதில், “இது எனது காதற் பரிசு” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.

இது எனக்கு ஏமாற்றமாகத்தான் தோன்றியது. கேலியாக, “கோமளம்! காதல் பரிசாக எனக்குக் கொடுக்க உனக்கு இந்தச் செல்லாத நோட்டுத்தானா கிடைத்தது?” என்று வருத்தத்துடன் கேட்டேன்.”

“உலகத்தார்க்கு இது செல்லாத நோட்டுதான். ஆனால் எனக்கு இது விலைமதிப்பற்றது. அதனால்தான் இதை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்.” என்று பெருமையுடன் பதிலளித்தாள் என் காதலி.

“அப்படி என்ன விசேஷம் இதில் அடங்கியிருக்கிறது?” என்று அவளை விசாரித்தேன்.

“சரி! அந்தக் கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.” என்று ஆரம்பித்தாள் கோமளம்:-

“இந்தச் செல்லாத நோட்டு எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்தது. யார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் கெட்ட மனம் மட்டும், “உன்னை யாரோ ஏமாற்றிவிட்டார்கள். அதேபோல் நீ யாரையாவது ஏமாற்றினால் என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தது. ‘ஐயோ! இது பாவம். நீ ஏமாறியதற்காக ஒரு பாவமுமறியாத மற்றொருவரை ஏமாற்றுவது நியாயமா? அப்படிச் செய்யாதே. என்று நல்ல மனம் இடித்துக் கூறிற்று. “அதற்கென்று நீ வீணாக நஷ்டப்பட வேண்டுமா? ஏமாற்றுதல் இல்லாவிட்டால் இவ்வுலக வாழ்க் கையே இல்லை. எங்கும் எதிலும் இது நீக்கமற நிறைந் திருக்கிறது. யோசிக்காதே. துணிந்து செய்.” என்று முடுக்கிவிட்டது கெட்ட மனம். முடிவில் நான் அந்தப் பேய்மனத்திற்கே இரையானேன்.

“இரு கண்களும் சரியாகத் தெரியாத ஒரு சீனக் கடைக்காரரிடம் இந்த நோட்டைக்கொடுத்து, சாக்லேட் 25 காசுக்கு வாங்கிக் கொண்டு, பாக்கி நாலு வெள்ளி 75 காசு பெற்றுக்கொண்டேன். அது செல்லாத நோட்டு என்பதை அவர் எங்கே கண்டுபிடித்துவிடுவாரோ என்ற அச்சத்துடன் கடைக்காரர் கொடுத்த பாக்கித் தொகையை என் கைப்பைக்குள் போட்டுக்கொண்டு விரைந்தேன். பிறகு சில கடைகளில் ஏறி இறங்கினேன். வீட்டிற்குத் திரும்பும்போதுதான் கைப்பையை எங்கேயோ விட்டுவிட்டது தெரிந்தது. பதறிப்போய் பல இடங்களில் தேடினேன். பை அகப்படவேயில்லை. அந்தப் அந்தப் பையில் பத்து வெள்ளி நோட்டுகள் இரண்டும் சில்லறையும் இருந்தன. அதிர்ஷ்டமாக வந்த நான்கு வெள்ளி எழுபத்தைந்து காசு கையிருப்பில் இருந்த வெள்ளியையும் அடித்துக்கொண்டு போய்விட்டது!

“இப்போதுதான் எனக்கு அறிவு வந்தது. அநியாயமாக ஒருவரை ஏமாற்றியதால்தான் நமக்கு இந்தப் பெரும் நஷ்டம் வந்தது என்று தீர்மானித்தேன். அதற் கப் பிராயச்சித்தமாக அந்தச் செல்லாத நோட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அந்தக் கடைக்காரர் நஷ்டப்பட்ட ஐந்துவெள்ளியையும் அவரிடமேகொடுத்து விடவேண்டும் என்று என் உள் மனம் இடித்துக்கூறியது.

“உடனே வீட்டிற்குச் சென்று, பத்து வெள்ளியுடன் அந்தக் கடைக்காரரிடமே சென்று, மீண்டும் 25 காசுக் குச் சாக்லெட் வாங்கிக்கொண்டு பத்து வெள்ளியைக் கொடுத்தேன். என் அதிர்ஷ்டம் கடைக்காரச்சீனர் நான் கொடுத்த அதே ஐந்து வெள்ளி செல்லாத நோட்டையும் பாக்கி சில்லறையையும் கொடுத்தார். அவரிடம் மேலும் 25 காசு கொடுத்துவிட்டு, ஞாபகமறதியுடன் வருவதுபோல் வந்துவிட்டேன். இப்போது அவருக்கும் எனக்கும் இருந்த பற்று வரவு தீர்ந்து, கணக்கு நேராகி விட்டது.

“அதிலிருந்து இந்தச் செல்லாத நோட்டை விலை மதிப்பற்ற பொருளாக மதிக்கிறேன். ஏனெனில் இது என் மனத்தை மாற்றிய அமுத சஞ்சீவியல்லவா?” என்று என்னிடம் கொடுத்தாள் கோமளம். அந்த நோட்டை நான் எங்கேயோ தொலைத்துவிட்டேன், ஐயா!” என்று அழாத குறையாகச் சொன்னார் நண்பர் நாடிமுத்து.

“ஐயா! உம் நோட்டு எங்கும் போகவில்லை. அதை உமக்கு யார் கொடுத்தார்களோ அவர்களிடமே அது மீண்டும் போய்ச் சேர்ந்திருக்கிறது. கவலைப்படவேண்டாம் ” என்று நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினேன்.

மறுநாள் அவரிடம் ஐந்து வெள்ளி கடன் கேட்டேன். உடனே எடுத்துக் கொடுத்தார் நண்பர். அந்த நோட்டு என்னைத் திகைக்க வைத்தது. ஏன்? அதே செல்லாத நோட்டுதான்! என் நண்பரின் ஞாபகமறதியை என்ன வென்று சொல்ல?

– 1955, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *