கொய்யாக்கனி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 6,100 
 
 

அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி.

அந்த மஞ்சுளாதான், வீட்டின் பக்கவாட்டில் காலியாக உள்ள இடத்தில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அவள் வளர்த்து வரும் மரங்களில் கொய்ய மரமும் ஒன்று. மரம் வளர்ந்து கொய்யா காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்கும்.

அவ்வளவு பராமரிப்பு செய்ததால் கை மேல் பலன் அவளுக்கு கிடைத் த்து. பூரித்து போவாள். அவ்வப்போது ஜன்னல் வழியாக கொய்யாமரத்தை கவனித்து கொள்வதில் அலாதி பிரியம் காட்டுவதைக் கண்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அதிசயமாய் பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட மஞ்சுளாவை….அந்த தெருவில் வசிப்பவர்கள் வசைபாடவும் செய்தார்கள்.

“அப்படி என்னதான் செய்கிறாள்” ? மஞ்சுளா.

நன்றாகத்தான் கொய்யாமரத்தை பராமரிக்கிறாள். நல்ல வசதி, பணத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் அவள் செய்யும் காரியம்தான் முகத்தை சுளிக்க வைக்கிறது.

கொய்யாமரத்தை சாதாரண நாட்களில் பராமரிப்பதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் பூக்கள் பூத்து, அதில் காய்கள் பெருகி, கனியும் போதுதான்…..மஞ்சுளாவின் சுயரூபம் வெளிப்படும்.

ஒரு கொய்யா காயோ அல்லது பழமோ பக்கத்து வீட்டில் விழுந்து விட்டால் கூச்சப்படாமல், அவர்களுக்கு குரல் கொடுத்து அதை கேட்டு வாங்கி கொள்வாள். கொய்யாக்காய்களை விற்றும் காசாக்கி விடுவாள்.

அவ்வளுவு திறமைசாலியான அவளுக்கு சோதனைக் காலம் வந்த து.

திடிரென்று உடல்நலக் குறைவினால்…. படுக்கையில் வீழ்ந்தாள். வசதியாய் இருப்பதால் பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தார்கள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

அவள் உடம்பில் பெரிதாய் குறையொன்றுமில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால், அவளால் சாப்பிட முடியவில்லை. ஒரு வாய் சாப்பிட்டாலே குமட்டலும், வாந்தியும் வந்துவிடும்.காரணம் புரியாமல் டாக்டர்கள் தவித்தனர்.

மருத்துவமனையில் சேர்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டன. ஆனால் குமட்டலும், வாந்தியும் குறைந்த பாடில்லை. மஞ்சுளாவின் பக்கத்து அறையில் ஒரு பெரியவரை சேர்த்திருந்தனர்.

அவரைப் பார்க்க அவரது பேரப்பிள்ளைகள் வருவார்கள். அவர்களை மடியில் அமரவைத்து கதைகளை சொல்லி மகிழ்வார். பேரப்பிள்ளைகளும் சந்தோஷமாக கேட்டு மகிழ்வார்கள். சில நேரங்களில் அவரிடம் கேள்வியும் கேட்பார்கள்.

அப்படித்தான் அன்றும் ஒரு பேரனிடம் கதை சொல்லும்போது….“ தாத்தா…தாத்தா…. நீங்க இங்கே வந்துட்டீங்க, நம்ம வீட்டுல இருக்கிற மரங்களை யாருமே பராமரிக்கிறதில்லே. ஆதனால மாங்கா மரத்திலேயும், கொய்யா மரத்திலேயும் காய்களே காய்க்கலே, காய்கள் காய்த்திருந்தா…. கிளிகளும்…..அணில்களும் அதைத்தின்று மகிழும். சில நேரங்களில் பாதிக்காய்களை கீழே போட்டுவிடும். அதை நாங்கள் எடுத்து சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாய் இருக்கும் தாத்தா” என்றான்.

“தாத்தாவிற்கு உச்சி குளிர்ந்த்து. அப்படியே பேரனை மடியில் உட்கார வைத்து முத்தமிட்டு, மரங்களை வளர்க்கிறது, நம்ம சுயநலத்துக்கு மட்டும் இருக்க கூடாது…. மரங்கள் நமக்கு இயற்கையான காற்றையும், பசுமையான உணர்வையும் தருகிறது. அத்தோடில்லாமல், கிளிகளும், அணில்களும் சாப்பிட்ட மிச்சம்தான் நாம சாப்பிடணும். அப்பத்தான்……. பக்கவாட்டுல இன்னொரு மரம் வளர்வதற்கு உதவியாய் இருக்கும். அதற்கு பசியைப் போக்கின மாதிரியும் இருக்கும்.” ஆறறிவுள்ள மனிதர்களாகிய நாம் ஐந்தறிவுள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சாப்பிட வழிவகை செய்யணும்” என்று சொன்னார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளா…….. தன் வீட்டுக்கார ர் வந்தவுடன், “ஏங்க, அந்த கொய்யா மரத்துல காய்க்கிற காய்களை அணில்களும், கிளிகளும் தின்னாம இருக்க பாலிதின் கவர் போட்டு மூடிக்கட்டி வைத்திருந்தேன். அதை பிரித்து விடுங்கள்” என்று சொன்னாள்.

அதைக் கேட்டவுடன் மஞ்சுளாவை அதிசயமாய் பார்த்தான். வீட்டுக்கு போனவுடன் கொய்யாமரத்தில்…… பாலிதீன் கவர்களை பிரித்து போட்டு விட்டான். இப்போது, அணில்களும், கிளிகளும் வந்து கனிகளை கடித்து தின்று மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.

ஒரு வாரத்திற்கு பின்…… மருத்துவமனையில் “மஞ்சுளா…… இப்போது சாப்பிட்டாள். ஆனால், குமட்டலும், வாந்தியும் வரவில்லை. அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது. டாக்டர்களும் “யு ஆர் ஆல்ரைட்” என்று வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்கள்.

மறுநாளிலிருந்து, கொய்யாமரத்தில், அணில்களும், கிளிகளும் கொய்யாக்கனிகளை கடித்து கீழே போட்டு விளையாடிக் கொண்டிருப்பதை ரசிப்பதே அவளுக்கு பொழுது போக்கு ஆகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *