காற்சட்டையும் வேட்டியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 18 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீ! இவ்வளவு நேரமாகியும் பஸ் வரவில்லையே. அரசாங்கம் தேசிய மயமாக்கியபின்பு பஸ் பிரயாணம் மிகவும் சீரழிந்து விட்டது. அவசியமாகப் போகவேண்டுமென்று வந்தும் ஒரு மணித்தியாலம் வீணே தாமதிக்க வேண்டியதாயிற்று. நண்பர்கள் என்னை எதிர்பார்த்து ஏசியிருப்பார்கள். நான் வரவில்லையென்று நம்பிக்கொண்டு காரியத்தைக் தொடங்கி விட்டார்களோ? 

அல்லது என்னைக் காத்துக் காத்து இன்னும் இருப்பார்களோ? ஓன்றும் செய்ய முடியவில்லையே! வீடு திரும்பவும் மனமில்லை. அங்கே போகவும் முடியவில்லை. என்று கவலையுடன் சிந்தித்தபடி வீதி ஓரத்திலே எலும்புருக்கி மரத்தின் நிழலிலே நின்றார் காற்சட்டையணிந்த பிரயாணி ஒருவர். 

சனிக்கிழமைகளிலே எட்டுப் பத்துப்பேர் சேர்ந்து மாலை 4மணி தொடக்கம் பொழுது போக்குவதற்காகக் களியாட்டுக்கள் நடத்தி வருகிற உத்தியோகத்தர் திருக்கூட்டத்திலே, தம்மை மறந்து இந்தத் தரணியை மறந்து ஒரே இன்ப வெள்ளத்திலே மூழ்கிக் கிடக்கவேண்டிய இவர் 5 மணியாகியும் பஸ் கிடைக்க வில்லையே என்று தத்தளித்தார்! 

பெரிய புகையிரத நிலையங்களில் அபாயத்தை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்குகளைப் போல அந்த எலும்புருக்கி மரத்திலே செந்நிறப்பூக்கள் பெருந்தொகையாக மலர்ந்திருந்தன. அவைகளும் அவருடைய பிரயாணத்திற்குத் தாமதக் குறிப்புக் காட்டுவதுபோல் அபாய அறிவிப்பு செய்கின்றனவோ? அவரின் கண்கள் மேற்கு நோக்கி நோக்கி அலுத்துவிட்டன. 

இந்த எலும்புருக்கி மரத்திற்கு 200 யார் தூரத்திலே தெருவோரத்திலே வேறொரு மரம் முக்கும் மொழியும் வளைவும் பொருக்கும் கொண்ட அந்தப் பூவரசு மரத்திலே ரண்டொரு கிளைகள் பசுமையாக இருந்தன. மற்றவை கருகிக் காய்ந்து விட்டன. மலட்டுத் தன்மை பொருந்திய சில குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் வாடலாய் நோஞ்ச லாய் இருப்பதுபோல் பூவரசின் பச்சைக் கிளைகளிலேயும் சிற்சில இலைகள் அங்குமிங்கும் கிடக்கின்றன. 

ஆழ்ந்த சிந்தனையுடன் வேகமாக நடந்து வந்த ஒரு கிழவனார் அது ஒரு மரம் என்ற காரணத்தினால் நிழலும் இருக்கும் என்று நம்பி அதன்கீழே வந்து நின்றார். நிழலுண்டா என்று ஆராய்வதற்கு எங்கேயோ ஒடிக்கொண்டிருந்த அவரது சிந்தனைவேகம் இடங்கொடுக்கவில்லை. அந்த மரத்திற்கும் அவருக்கும் ஏறத்தாழ ஒரே வயதுதான் இருக்கும். முழந்தாளின் கீழே சிறிது இறங்கிய நாலுமுழ வேட்டி. அது அவிழ்ந்து விழுந்து விடுமோ என்று பயந்து அரையைச் சுற்றி இறுக்கியதுபோன்ற சால்வைக்கட்டு. நாலு ஐந்து மாசங்கள் “சவுளக்கத்தி” படாத முகம்! எலுமிச்சங் காயளவான குடுமி. இந்தக் கோலத்துடன் அவரும் பஸ் வண்டியை எதிர்பார்த்து நிற்கிறார். கால்மணி அரைமணி முக்கால்மணி என்று காலமும் வளர்கிறது. அவருடைய மனத்துடிப்பும் வளருகிறது. 

“ஐயோ மகளே, நீ என்ன பாடுபடுகிறாயோ பிரசவ வேதனையுடன் உன் புருசன் உன்னை ஆறுமாசக் கெற்பத்தில் விட்டுச் செத்த கொடிய கவலையும் சேர்ந்து உன்னைச் சுட்டு வருத்த நீ எப்படித் துடிக்கிறாயோ? பாழாய்ப்போன பஸ் இன்னும் வரவில்லையே! இளம் வயசென்றால் ஓடி நடந்தாயினும் வந்திருப்பேனே. இந்தப் பஸ் வருமுன் அந்த நாளிலே நடந்து பழகிய என் கால்கள் இருந்தாலும் பஸ் வருமென்ற நம்பிக்கையால் நேரத்தைப் போக்கிவிட்டேனே! அல்லாமலும் கவலையான இந்த நேரத்திலே நடக்கவுங் கால்கள் தடுமாறுகின்றன. என்ன செய்யலாம்! தாமரைஇலையிலே பட்ட தண்ணீர்போல் மனம் தத்தளிக்கிறதே! செல்வச்சந்நிதி முருகா! நீதான் அந்த ஏழைக்கு உதவி!! 

தனது மகளை முதற் பிரசவத்திற்காக ஒரு வைத்தியசாலை யிலே விட்ட இம்முதியவர் அப்பெண்ணுக்கு அவசியமான விசேஷமருந்து ஒன்று பட்டணத்திலே வாங்குவதற்கு 25 ரூபா தேவையென்று டாக்டர் சொல்லியபடியால் தம் வீட்டிற்கு வந்தார். அயலிலுள்ளவர்களிடம் கடனாகப் பணங் கேட்டு அலைந்தார். கிடைக்கவில்லை! கடைசியாகத் தமது கடுக்கண் கள் இரண்டை யும் கழற்றி அடகு வைத்துவிட்டுக் காசை வேட்டித் தலைப்பிலே முடிந்து இடுப்பிலே சொருகிக் கொண்டு வேகமாக வந்து பஸ்ஸைக் காத்து நிற்கிறார். 

தூரத்திலே ஒரு பஸ் வருகிற குறி தோன்றிற்று. மகள் சுகமாகப் பிள்ளை பெற்று விட்டதுபோன்ற ஒரு பூரிப்பு! கால் மைல் தூரத்திலே பஸ் வந்துவிட்டது. காசு முடிச்சை ஒரு கையால் இறுக்கிப் பிடித்தபடி, அப்போது தொடக்கம் மற்றக்கையால் பஸ்ஸை நிறுத்துஞ் “சைகையை” யைக் காட்டத் தொடங்கி விட்டார்! பிரயாணிகள் நெருங்கி நிறைந்த அந்தப் பழைய வஸ்வண்டி, நிதி நெருக்கடி நிறைந்த அரசாங்கத்தைப் போல இயங்கிக் கொண்டு வந்தது! 

10-12 யாருக்குள்ளே பஸ் வந்துவிட்டது. கிழவனார் ஓரத்திலிருந்து 3-4 அடி முன்னேறித் தாவிப் போய்க் கைமுழுவதையும் நீட்டித்தடுத்தார். என்ன ஆச்சரியம்! பஸ் நிறுத்தப்படவில்லை. இடமில்லை என்ற கருத்திலே கண்டக்டர் கையை அசைத்துக் காட்டினார். கிழவனார்க்கு இடி விழுந்தது போலிருந்தது! 

அடுத்து எலும்புருக்கி மரத்தின் கீழே நின்ற காற்சட்டைக்காரன் கைதட்டித் தடுத்தான். “நெருக்கடி யானாலும் ஐயாவை ஒரு மாதிரிப் போட்டுக்கொண்டு வா? என்று சாரதி கூறினான். அவரும் உள்ளே நுழைந்தார்! இந்த அநியாயத்தைக் கண்டதும் கிழவனுக்குண்டான கோபமும் ஆத்திரமும் கடல்போலப் பொங்கி எழுந்தன. ஏதோ எல்லாம்எண்ணி எண்ணித் துடித்தார். கடவுளே வெளி வேஷத்தை மதிக்கும் இந்த உலகத்திலே ஏழைகளுக்கு இடமில்லையோ என்று பெருமூச்சு விட்டார்! செய்வதின்னதென்றே அவருக்குத் தெரியவில்லை. மகளின் வேதனைக் குரல் காதில் கேட்பது போன்ற ஒரு பிரமை. அவரைக் கௌவிப் பிடிக்கின்றது! சந்நிதி முருகா என்று கூறிய படி ஒரு விதக் கிறுதியடைந்து நிலத்திலே குந்தி விட்டார்! 

சற்று நேரத்தினுள்ளே ஒரு மோட்டார்க் கார் தூரத்திலே வேகமாக ஓடி வந்தது. கிழவனார் வீதியின் நடுவில் போய்க் கும்பிட்ட கையுடன் நின்று அதைத் தடுத்தார். கிளீச் என்ற சத்தத்துடன் கார் நின்றது. சாரதி கிழவனை விசாரித்தான். முதியவர் கண்ணீர் சொரிந்தபடி தடுமாறிய சொற்களால் விஷயத்தை வெளியிட விரும்பினார். தேகம் நடுங்கிற்று! சாரதிக்கு அவருடைய நிலைமை விளங்கி விட்டது. பெரியவரே ஏறு என்றான். மாண்டவன் மீண்டதுபோன்ற மகிழ்ச்சியுடன் கிழவனார் உள்ளே ஏறி ஒடுங்கி யபடியே ஆசனத்திலிருந்தார். முருகா என்று வாய் முணுமுணுத்தது. சாரதியை பாராட்டிப் பேச எண்ணினார். அவருடைய வறண்ட நாக்கு பேச இடந்தர வில்லை. மனமெல்லாம் மகளிடமும் சந்நிதிகோவிலிலும் மாறிமாறிச் செல்கின்றன. வைத்தியசாலையின் வாசல் சமீபிக்கின்றது. காசுமுடிச்சை அவிழ்த்தபடி தம்பிக்கு எவ்வளவு என்று அடிக்குரலால் கேட்டார் கிழவனார். கார் நின்றது. ஒன்றும் வேண்டாம் மகளைப் போய்ப் பாரப்பா என்று சாரதி சொல்லி இறக்கிவிட்டுப் பறந்தார். கிழவனார் காதை மகளிருக்கும் அறைப்பக்கம் திருப்பி மூச்சையும் கொஞ்சம் அடக்கியபடி நடக்கிறார். கால்கள் பின்னித் தடுமாறுகின்றன. எண்ணக் குவியல் நெஞ்சில் நிரம்புகிறது. அறையைக் கிட்டுகிறார். ஆரவாரம் ஒன்றையும் அறிய முடியவில்லை. மகளைப் பராமரித்த கிழவியையும் வெளியில்காணவில்லை. உணர்வற்ற சூனிய நிலையிலே அறைக்கதவைத் திறந்தார். ஆண்பிள்ளை தொட்டிலிலே கிடக்கிறது. அப்பு வந்துவிட்டியே பேரனைப் பார் என்றாள் மகள். மாண்ட மருமகள் மீண்டதான உணர்ச்சியுடன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டு முருகா என்ற மெல்லோசை வெளியே வர நிலத்திலே சுவரோடு சாய்ந்து நெடுமூச்சு விட்டபடி இருந்தார்.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *